சந்தூரியின் மீட்டலும் முரண் பயணமும்

வாழும்நெறி, தத்துவம், உளவியல், எனப் பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கும் குறுங்குறிப்புகள் தினமும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் அவற்றின் ஆக்கிரமிப்பு அதிகம். சில நிமிட காணொளிகளாகவும் குரல் பதிவுகளாகவும் அவை நம் கைக்குள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரே நேரத்தில் வாழ்க்கை பற்றிய அறிவுரைகளாகவும், நமது அன்றாட வாழ்வை விமர்சித்து அதிலிருந்து கடந்துவிட அறிவுறுத்துபவையாகவும் அவை செயல்படுகின்றன

அவற்றைக் காணும் போது கணநேரத்தில் உணர்வெழுச்சியும் குற்றவுணர்வுமாகக் கலவையான உணர்வுகள் மின்னி மறைந்து செல்கின்றன. இவற்றைக் கடந்து இயல்பு வாழ்வை அந்தந்தக் கணத்தின் சரிதவறுகளுடன் அணுகுவதென்பது முதிர்ச்சியடைந்த மனநிலையின் அடையாளமாய்க் கொள்ளலாம். ஆனால், எதையாவது உபதேசித்து அதன்படி வாழச் சொல்லும் பொதுப் போக்கின் விசையிலிருந்து தப்புவதென்பது எளிதான செயலன்று. அதிலும் குறிப்பிட்ட வாழ்க்கைப் பார்வையை முன்வைக்கும் பிரச்சார கருத்துகள் வாழ்க்கையையும் மனிதர்களையும் அணுகுவதில் தடையாகக் கூடும். அறிவின் சமநிலையோடு வாழ்வை அணுகுவதும் அதற்கு நேரெதிராக அதன் போக்கிலே வாழ்வை அணுகுவதுமான இந்த இருவேறுபட்ட மனநிலைகளின் முரண்பாடுதான் சோர்பா என்ற கிரேக்கன் நாவலை வாசிக்கையில் கண்டடைந்த வாசிப்பனுபவம்.

‘zorba the greek’ நாவல் நீகாஸ் கசாந்த்சாகீஸால் (Nikos Kazantzaki) 1946 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இந்நாவல் உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதோடு திரைப்படமாகவும் நாடகமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்நாவல் தமிழில் எழுத்தாளர் கோ. கமலக்கண்ணனின் மொழிபெயர்ப்பில் ‘சோர்பா என்ற கிரேக்கன்’ என 2021 ஆம் ஆண்டு தமிழினி பதிப்பக்கத்தால் வெளியிடப்பட்டது

கசாந்த்சாக்கீஸ் தான் அறிந்திருந்த ஜியார்ஜ் சோர்பாஸ் எனும் சுரங்கப்பணியாளரின் இயல்பைத் தழுவியே அந்நாவலை எழுதியிருக்கிறார். உலக இலக்கிய வரிசையில் முக்கியமான செவ்வியல் ‘சோர்பா என்ற கிரேக்கன்’ நாவல் கருதப்படுகின்றது.

சோர்பா என்ற கிரேக்கன் நாவல் இரு வேறுபட்ட வாழ்க்கைக் கோணத்தைக் கொண்ட இருவரின் சந்திப்பிலிருந்தே தொடங்குகிறது. கிரேக்க நாட்டைச் சேர்ந்த இளைஞனொருவன் தத்துவ மெய்ஞான நூல்களைக்கற்றுத் தேர்ந்தவன். வாழ்வின் மீதான திட்டவட்டமான முன்முடிவுகளுடன் பற்றற்ற மனநிலை கொண்டவனாகவும் இருக்கின்றான். மனிதாபிமானச் சிந்தனையும் இயற்கையை அமர்ந்து ரசிக்கும் இயல்புடையவனாக இருக்கின்றான். அதனாலே உள்ளூரச் செயலின்மையின் சோர்வுடையவனாக இருக்கின்றான். அதிலிலிருந்து மீள்வதற்காக லிபியாவை ஒட்டி அமைந்திருக்கும் கீரிட் எனும் தீவில் நிலக்கரிச்சுரங்கமொன்றைக் குத்தகைக்கு எடுத்து செல்கின்றான். அந்தத் தீவுக்கான பயணத்தின்போது அலெக்ஸிஸ் சோர்பா என்பவரைச் சந்திக்கிறான்.

வாழ்க்கை முழுக்க பயணங்களும் களியாட்டங்களும் போர்களும் என வெவ்வேறு வகையான அனுபவங்களைப் பெற்றவராக சோர்பா விளங்குகிறார். அத்துடன், எதன் மீதும் பிணைப்பு கொண்டு ஆன்மாவைச் சிறைபடுத்திக் கொள்ளாதவராக சோர்பா இருக்கின்றார். தன்னுடைய உடைமையாக இசைக்கருவியான சந்தூரியை மட்டுமே உடன் எடுத்து வருகின்றார். அவருடைய இயல்புகளும் உரையாடல்களும் இளைஞனுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியமையால் அவனுடைய பயணத்தில் சோர்பாவையும் இணைத்துக் கொள்கிறான். கீரிட் தீவில் மேற்கொள்ளும் நிலக்கரிச் சுரங்கப் பணிகளுக்கு மேற்பார்வையாளராக சோர்பாவை உடனழைத்துச் செல்கின்றான். செயலின்மையால் வெம்பி போயிருக்கும் இளைஞனும் செய்கின்றசெயலில் முழுமையான ஒத்திசைவுடன் புரிந்து நிறைவெய்தும் சோர்பாவும் என இருவேறு முரண்பட்ட கதைமாந்தர்களின் இணைப்பயணமே நாவலின் பெரும்பகுதியாக அமைந்திருக்கிறது. இளைஞனின் கதைசொல்லலிலே நாவல் விரிகிறது.

இவ்விரு கதைமாந்தர் முரண்பாட்டைக் கொண்டே இந்நாவல் முன்வைக்கும் தத்துவத்தைக் கண்டடையலாம். புத்தச் சமயம், தத்துவ நூல் பயிற்சி என அறிவின் வழியை மெய்யியல் வழியாகக் கொண்ட இளைஞன் இன்னொரு புறம் உலக அழகு, காமத்தின் தவிப்பு என உந்தி எழுகின்ற உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகின்றான். சுற்றிலும் நிகழும் இயற்கை நிகழ்வுகள், மனிதர்களின் செயல்கள் என அனைத்தையும் குறித்து நீண்ட தன்னுரையாடலை நிகழ்த்திக் கொள்கின்றான். புத்தரின் போதனைகளைப் பின்பற்ற விழையும் இளைஞனின் மனத்தில் பற்றைத் துறக்க வேண்டுமென்ற எண்ணமிருக்கிறது. அந்த எண்ணத்தினால் புத்தர் குறித்து தனக்குள் எழும் உரையாடலை நூலாக எழுதுகிறான். அதை அசைத்துப் பார்க்கும் விதமாய், சோர்பாவுடனான உரையாடல்களையும் செயல்களையும் உணர்கிறான். இதற்கு முற்றிலும் நேர்மாறாக, தன்னுடைய உள்ளுணர்வை மட்டுமே நம்பி சோர்பா செயல்படுகிறார். ஒவ்வொரு மனிதன்தான் தனக்கான அவனுக்கான மகிழ்ச்சியின் ஊற்று என நம்புகிறார். சோர்பா உச்சமகிழ்ச்சியடையும் போது சந்தூரி தந்திக்கருவியைக் கொண்டு இசை மீட்டுகிறார். ஒயின் அருந்தி நடனமாடுகிறார். சோப்ரா பெண்கள் மீது தீராக்காதல் உடைய மனிதனாக இருக்கின்றார். தத்துவங்களும் அறிவும் விலக்குகின்ற பிறழ்காமம், போர் வெறி, செயல் விழைவால் புறந்தள்ளுகின்ற மானுடம் என அனைத்தையும் செய்கின்றார். புரிகின்ற செயல்களில் முழுமையும் ஒத்திசைவும் இயற்கையாக உடலில் மேலிடுகின்ற உணர்ச்சிகளுக்கு நேர்மையாக இருத்தலென மனிதர்களின் ஆதி இயல்புடையவராக இருக்கின்றார்.

இந்நாவல் எழுதப்பட்டக் காலப்பின்னணியைக் கொண்டும் நாவல் அளிக்கும் வாசிப்பனுபவத்தை விரிவாக்கிக் கொள்ள முடியும். இந்நாவல் முன்வைக்கும் கிரேக்கம் என்பது துருக்கியின் ஒட்டோமன் பேரரசின் ஒருபகுதியாக அமைந்திருந்த 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி விடுதலையடைந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலக்கட்டம். அந்தக் காலக்கட்டத்தில் சமய, இனப்பூசல்கள், நாடுகளுக்கிடையிலான போர்கள் ஆகியவை மிகுந்திருந்தன. அதே சமயம், ரஷியாவில் கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டதால் ரஷ்யாவில் வசிக்கும் கிரேக்கர்களுக்கு அபாயம் ஏற்பட்டிருந்தது.

கிரேக்கர்கள்/ மக்கள் ஆன்ம விடுதலையின் பொருட்டு சமயங்களையும் ஞானங்களையும் கண்டடைந்து வந்தனர். ஐரோப்பியர்களுக்குப் புத்தச்சமயம், கீழைத்தேசத்து ஞானங்களின் மீதான ஈர்ப்பும் உருவாகியிருந்தது. அந்நிய ஆட்சியிலிருந்து மக்கள் விடுதலை பெற்றிருந்தனர். அதைப் போல, அரசியல் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான புரட்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இருப்பினும் நாவலின் சித்திரிப்பில் மனிதன் தன்னுடைய விடுதலைக்ககாகத் உருவாக்கிய அமைப்புகள் யாவும் ஏதாவதொரு வகையில் சிறைப்படுத்த செய்யவோ அல்லது நோக்கம் வழுவியதாக மாறியிருக்கிறது. புத்தச் சமயக் கொள்கைகளில் ஈடுபாட்டுடைய கிரேக்க இளைஞன் எதையும் செய்யும் நாட்டமற்று இருக்கின்றான். ரஷியாவில் சிக்கியிருக்கும் கிரேக்கர்களை மீட்பதற்காக ரஷியா செல்லும் ஸ்டாரவ்ஸ்க்கிக்கும் கதைசொல்லிக்குமான உரையாடல்களிலும் கடிதங்களிலும் மரணம், அதற்குப் பிந்தைய வாழ்வு ஆகியவற்றின் மீதான அச்சத்தையே முதன்மையாகக் குறிப்பிடுகிறான். இந்த அச்சம் அல்லது தயக்கம் எந்தச் செயலையும் செய்யாமல் இருக்கும் செயலின்மையில் கதைசொல்லியை ஆழ்த்துகிறது. நாவலில் சித்திரிக்கப்படும் கத்தோலிக்கத் திருச்சபையில் இருக்கும் பாதிரியார்கள் பணம் திரட்டுதல், அதிகாரத்தை நிலைநாட்டுதல் ஆகியவற்றிலே ஆர்வம் கொண்டிருக்கின்றனர். கசாந்த்சாக்கீஸ் மனிதர்கள் தங்கள் நல்வாழ்வுக்காக உருவாக்கியிருக்கும் அமைப்புகளை நாவலில் பகடி செய்கின்றார். கடவுள், சொர்க்கம், நரகம் என்ற கற்பிதங்கள், திருச்சபைகள், அரசியல் அமைப்புகள், அறிவுத்தேடலில் ஈடுபாடு கொண்டவர்கள் என அனைவரையுமே சோர்பா பாத்திரம் பகடி செய்கிறது. இந்த அமைப்புகளுக்கு எதிரான தரப்பாகவே சோர்பாவை முன்னிறுத்துகிறார். எந்த அமைப்பாலும் பிணைக்கப்படாத விடுதலை பெற்ற மனிதனாக சோர்பா பாத்திரம் அமைந்திருக்கிறது. இந்நாவல் எது விடுதலை என்ற முக்கியமான விவாதத்தை முன்வைக்கிறது. அந்த விவாதத்தையே சோர்பாவின் பாத்திரச் சித்திரிப்பில் காண முடிகிறது.


நாவலில் சொல்லப்படும் சோர்பாவின் இயல்புக்கு முன்பான பரிணாமமும் சித்திரிக்கப்படுகிறது. சோர்பா தம்முடைய இளவயதில் நாட்டுப்பற்று கொண்டு பல்கேரிய கிராமத்தைத் தீயிடுகிறார். அதைப் போல மூர்க்கமான இனவெறி கொண்ட பல்கேரிய பாதிரியாரொருவரைக் கொல்கின்றார். பின்னர், ஆதரவற்று இருக்கும் பாதிரியாரின் குழந்தைகளைப் பார்த்து மூர்க்கமான நாட்டுப்பற்றை விட்டொழிக்கின்றார். அவ்வாறே, சமயத்தின் மீதான பற்று, இனப்பற்று ஆகியவற்றையும் கைவிடுகின்றார். ஆதி மனிதர்களுக்கு இருந்ததைப் போல உடல் சார்ந்த தேவைகளான உணவு, காமம் ஆகியவற்றின் மீதான பற்று மட்டுமே சோர்பாவிடம் எஞ்சுகிறது. இந்தப் பற்றைச் சோர்பாவால் இறுதி வரையிலும் விட்டொழிக்க முடியவில்லை. சோர்பா அடைந்திருக்கும் விடுதலையுணர்வையும் நாவல் கேள்வியெழுப்புகிறது. சோர்பா தன்னுடைய இளவயதில் வயது முதிர்ந்தும் தன் சிறு கூந்தலைச் சீவி தன்னழகின் மீது அக்கறைக் கொண்டிருந்த பாட்டியைக் கேலி பேசுகிறார். அதனால் மனமுடைந்து போனவள், ‘நாசமாய் போவாய்’ என்ற சாபத்தை அளிக்கின்றாள். அவளுடைய சாபம் பலித்துவிட்டதெனச் சோர்பா குறிப்பிடுகிறார். ஒருவகையில் ஒவ்வொரு கணமும் முழுமையாக வெளிப்பட்டு மகிழ்ச்சியுடன் இருக்க விழையும் சோர்பாவும் நிறைவடையதாவராக இருக்கின்றார். தன்னுடைய வாழ்நாள் இறுதி வரையில் பெண்கள் மீதான பித்து சிறிதும் குறையாதவராக இருக்கின்றார். கதைசொல்லிக்கான தன்னுடைய இறுதி கடிதத்தில், இன்னும் நிறைய செயல் புரிய வேண்டுமென்ற நிறைவின்மையை வெளிப்படுத்தியே இறக்கின்றார். சோர்பாவின் விடுதலையுணர்வும் கூட ஆழ்ந்த நிறைவின்மையால் உருவாவதே என்பதால் எது விடுதலை என்ற முடிவற்ற வினாவை நாவல் மீண்டும் எழுப்புகிறது.

இந்நாவல் முன்வைக்கும் அறிவு x ஒத்திசைவு என்ற இருமையையொட்டிய விவாதமும் முக்கியமானது. தேவாலயத்தில் தொழச்செல்லும் கைம்பெண்ணை அவளது பிறழ் ஒழுக்கத்தைக் காரணம் காட்டிக் கொல்லச் செல்கின்ற மக்களிடமிருந்து மீட்கப் போராடித் தோற்றுப் போகும் சோர்பா மிகவும் உணர்வுப்பூர்வமாக அதை எதிர்கொள்கிறார். அவளை மீட்கும் போராட்டத்தில் கடுமையாகக் காயமுற்றுத் தோல்வியுறும் போது மீசை மயிரைக் கைகளாலே பிடுங்கியெறிந்து உணவொழிகின்றார். அந்தச் சம்பவம் மனிதர்கள் மீதான இளைஞனின் நம்பிக்கையைக் குலைக்கிறது. அவனது சமநிலை தவறாத அறிவின் மீதான தாக்குதலாக அமைகிறது. இருப்பினும், சிறிது நேர உணர்வெழுச்சிக்குப் பின்னர் அந்த எண்ணத்தை மறப்பதற்காகப் பிரபஞ்ச விதியென்னும் தருக்க நியாயத்தை இளைஞனால் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. கீரிட் தீவில் சோர்பா திருமணம் புரிந்து கொள்கின்ற ஹார்டென்ஸ் சீமாட்டியின் இறப்பின் போது சோர்பா தளுதளுத்துப் போகிறார். அந்தத் தருணத்தில் ‘ நாம் அனைவரும் இதே போலத்தான் உலகை நீங்கிச் செல்ல வேண்டும்’ என்ற இயற்கை விதியைப் பேசும் இளைஞனைச் சோர்பா பகடி செய்கிறார். இளைஞனுடைய இயல்பில் அறிவென்பது பிரிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. அந்தக் கணத்தின் இயல்பான உணர்ச்சிகளை அறிவால் தருக்கப்படுத்திப் சமநிலையுடன் வெளிப்படுத்துகின்றான். ஹார்டென்ஸ் சீமாட்டியின் இறப்பை இளைஞன் நினைவுறுத்தும் போது சோர்பா // நேற்று நிகழ்ந்தவற்றைச் சிந்திப்பதை நிறுத்தியாயிற்று. நாளை என்ன நிகழப்போகிறது என்பதையும் கேட்டுக்கொள்வதை நிறுத்தி வெகுநாட்களாயிற்று. இன்று இந்தக் கணம் மட்டுமே நான் பொருட்படுத்துவது // என்கிறார். அந்தந்தச் சூழலுக்கேற்ற ஒத்திசைவு என்பதை சோர்பா கண்டடைந்த ஞானமாக முன்வைக்கிறார்.


இந்நாவலில் வெளிப்படும் இளைஞனின் பாத்திரம் அறிவுத்தேடலில் உள்ளவர்களின் மனத்தத்தளிப்பைப் பேசுகிறது. இளைஞனுடைய பாத்திரம் அறிவார்ந்த தேடல் கொண்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களின் இயல்புக்கு நெருக்கமானது. நூல்களிலிருந்தே வாழ்க்கையைக் கற்றுக்கொண்டவன் அதனால் ஏற்பட்டிருக்கும் சலிப்பைப் போக்கிக் கொள்ளவே புதிய நிலத்துக்குப் பயணமாகின்றான். அவனுக்கு நேரும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளில் சற்றே உணர்வெழுச்சி அடைந்து மீண்டும் அறிவின் பாதைக்கே திரும்புகின்றான். அவனுடைய பார்வையில் மனிதன் அடையத்தக்க உச்சமென்பது களங்கமற்ற வியப்பு என்கிறான். அந்த உச்சத்தை அடைய அறிவும் தருக்கமும் தடையாக இருப்பதை உணர்கிறான். இளைஞன் தன்னுடைய அறிவு, தருக்கம் ஆகியவற்றின் மீதான பிடிப்பைச் சோர்பாவின் கட்டற்ற வாழ்க்கையைக் கண்டு தளர்த்திக் கொள்கின்றான். கீரிட் தீவில் வாழும் அழகிய கைம்பெண்ணுடன் கூடிக் களிக்குமாறு சோர்பா இளைஞனுக்கு அறிவுரைக்கிறார். அறிவுத்தேடலால் தயங்கியிருப்பவனைப் பகடி செய்கிறார். அவனுடைய தயக்கத்தை விட்டு நள்ளிரவில் கைம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவளுடன் கூடுகின்றான். கீரிட் தீவில் துறைமுகம் அமைத்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் இருப்புப்பாதையைச் சோர்பாவின் அறிவுரையை ஏற்று நிர்மாணிக்க தொடங்குகிறார்கள். இருப்புப்பாதை வெள்ளோட்டத்தின் போது பொருட்களின் எடை தாளாமல் பாதை அழிந்து போகிறது. இந்தச் சூழலிலும் தயார் செய்யப்பட்டிருக்கும் உணவை உண்டு அடுத்தக் கணத்துக்கு சோர்பா தயாராகிறார். அவரின் செயல் இளைஞனுக்குப் பெரும் உணர்வெழுச்சி தூண்ட தனக்கு நடனமாடக் கற்பிக்குமாறு சோர்பாவிடம் கேட்கின்றான். அவர் அவனுக்கு சிம்பிக்கோ நடனத்தைக் கற்பிக்கின்றார். இவ்வாறாக, அறிவுக்கும் இயல்பாக எழுகின்ற உணர்ச்சிகளுக்குமாக இடைவிடாத சமரொன்றை நிகழ்த்துகின்றான்.

மொழிபெயர்ப்பு

கமலக்கண்ணனின் மொழிப்பெயர்ப்பு மிகவும் சரளமாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. இந்நாவலின் செவ்வியல் தன்மைக்கு வலுசேர்க்கும் வகையில் தனித்தமிழிலான சொற்கள் அமைந்த சொற்றொடர்களை அமைத்திருக்கிறார். வழக்கில் அதிகமும் புழங்காத செம்மொழிச்சொற்களை நாவலில் பயன்படுத்தியிருக்கிறார். கெளவை, ஆகூழ், சேகண்டி போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். அதைப் போல, இளைஞனின் மனவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் தத்துவச் சித்திரிப்பும் கவித்துவமான மொழியில் அமைந்திருக்கிறது. //‘சோர்பா நாமெல்லாம் சிறு புழுக்கள், மாபெரும் மரத்தின் ஓரிலையில் நெளியும் நுண்புழுக்கள், அச்சிறு இலை இப்புவி. இரவில் நீங்கள் வானில் பார்க்கும் விண்மீன்களே மற்ற இலைகள். நாம் இந்தச் சிறு இலையை நுட்பமாகவும் பதற்றமாகவும் கவனிக்கிறோம். அதை முகர்கிறோம். நமக்கு அதன் மணம் சுகந்தமாகவோ, துர்நாற்றமாகவோ தோன்றுகிறது…// இவ்வாறாகத் தத்துவ ஆழம் மிகுந்த தொடர்கள் கவித்துடத்துடனும் எளிமையாகவும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நாவல் பேசும் களம், பண்பாட்டுக்கு ஏற்ற கலைச்சொற்களையும் சிறப்பாக அளித்திருக்கிறார். கமலக்கண்ணனின் பரந்த மொழியறிவு தத்துவ வளம் மிகுந்த சொற்றொடர்களைப் பெயர்ப்பதில் மிகுந்த உதவியாக அமைந்திருக்கிறது. இளைஞன் தன்னுடைய மனவுணர்வுகளை ஒட்டிப் பேசும் நீண்ட தன்னுரையாடல்களில் அதனைக் காண முடிகிறது. மானுடர்களுடைய நோக்கத்தைப் பற்றிய தன்னுரையாடலில் மனதுக்கண் மாசிலனாதல் என்ற திருக்குறள் தொடரைப் பயன்படுத்துகிறார். மனத்தில் குற்றமில்லாதிருத்தலே மனிதர்களின் நோக்கம் எனப் பொருள்படும் மூலமொழித் தொடரைத் தமிழில் பெயர்க்கும் போது அதற்கு நிகரானத் திருக்குறளடிகளைக் கையாண்டிருப்பது பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. ஆயினும் வாசிப்பினூடே புதிய சொற்களைக்காணும் போது இடைநிறுத்தி அதன் பொருளை ஊகித்தோ அல்லது கண்டடைந்தோ வாசிப்பைத் தொடரவேண்டியிருக்கிறது. செம்மொழியிலான சொற்கள் நாவலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கதைமாந்தர்களின் சமூகநிலை, நோக்கம் ஆகியவற்றை ஊகிப்பது சிரமமாக இருந்தது.


மனிதர்கள் உருவாக்கியிருந்த சமயம், தத்துவங்கள் இவற்றுக்கெதிரான அவநம்பிக்கை உருவாகிய காலக்கட்டத்தில் சோர்பா எனும் விடுதலை பெற்ற மனிதனைத் தன்னுடைய நாவலில் கசாந்த்சாக்கீஸ் உருவாக்கியிருக்கிறார். அதற்கு நேரெதிரில் ஒர் அறிவுப்பயணியின் தத்தளிப்பையும் நாவலில் சித்திரிக்கின்றார். மனிதப் பரிணாமத்தின் மிக முக்கியமான தத்துவ வினாவை சோர்பா என்ற கிரேக்கன் மூலமாக விவாதமாக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...