மூவிலைத் தளிர்

பாடியநல்லூர் குமரப்பாவுக்கு நீரிழிவு நோயால் வலது கால் மூட்டுக்கு கீழ் அகற்றப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போதோ வலது காலில் பின் பகுதியில் எதுவோ குத்தி காயம் ஏற்பட்டிருக்கிறது. அது மூன்று மாதம் ஆகியும் ஆறவில்லை. அந்த முதல் புண்ணைச் சுற்றி மேலும் சில இடங்களிலும் புண்கள் வந்திருந்தன. அவையும் ஆறிவிடவில்லை. இப்படியே தொடர்ந்து கால் முழுதும் பரவி, புண்களில் சீழ் கட்டி, அழுகாத குறையோடு துர்நாற்றம் எடுத்திருக்கிறது. பிறகு தான் மருத்துவரைப் போய் பார்த்தார்கள். மருத்துவர், “இது நீரிழிவு நோயின் உச்சபட்ச விளைவு. இது மேலும் பரவாமல் இருப்பதற்கு ஒரே வழி மூட்டுக்கு கீழ் கணுக்கால் வரை மொத்தமாக அகற்றிவிடுவது மட்டுமே” என்றிருக்கிறார். பத்து நாட்களுக்குள் அறுவை சிகிச்சைப் பிரிவில் அவரை அனுமதித்து அகற்றிவிட்டிருக்கிறார்கள்.

அவரது துணைவியார் பாக்கியத்தம்மா தான் தனியாக இருந்து அவருக்கு எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுக்கிறாள். அவரை தனியே விட்டுவிட்டு அவள் எங்கும் செல்வது இல்லை.

தன் கால் போன இடத்தை நிறைக்கும் காற்றின் எடையை சில சமயங்களில் அவர் தன் காலாகவே கருதிவிடுவதுண்டு. அல்லது கால் அகன்ற போதிலும் அந்தக் காலின் கனம் அவரை அகலவில்லை. அந்தக் காலில் “அடி பட்டிருச்சு” என்பார். சில சமயம் “எறும்பு கடிக்குது” என்பார். சில சமயம் அதிக நேரமாக அமர்ந்திருக்கும் போது, “பாக்கியம், சித்த இந்தக் கால புடிச்சுவிடேன், வலி தாங்கல” என்று தன்னிலை மறந்து அவரே அறியாமல் அந்தக் காலை நீட்டப் போவார். கால் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ஏற்படுகின்ற வலியில்லை. அந்த வலியெல்லாம் சரியாகிவிட்டது. கால் இருப்பது போன்றே அவர் நம்பிவிடும் போது ஏற்படுவது. ஒரு வகை ஊமை வலி அல்லது வலிப்பது போன்ற பிரமை. மருத்துவர்கள், “அது அப்படித் தான் இருக்கும். வேறு உபாயம் இல்லை” என்று சொல்லிவிட்டார்கள்.

ஒற்றைக்கையில் பொருத்திக்கொண்ட வாக்கிங் ஸ்டிக்கின் துணையோடு தான் இப்போதெல்லாம் அவரால் வீட்டுக்குள்ளேயே வலம் வர முடிகிறது. அவ்வப்போது அவர், பாக்கியத்தம்மாவின் வற்புறுத்தலின் பொருட்டு, வீட்டுக்கு வெளியேயும் வந்து, காம்பவுண்டு சுவருக்குள் நடந்தபடி தன் புழங்குவெளியை இன்னும் சற்று விஸ்தரித்துப் பார்ப்பதும் உண்டு.

வீட்டின் முன் பக்கம் கார்பார்க்கிங்குடன் கூடிய வாசல். மற்ற மூன்று பக்கங்களிலும், வீட்டுக்கும் காம்பவுண்டு சுவருக்கும் மூன்று அடி இடைவெளி. அதில் தான் செம்பருத்தி, அரளி முதலிய பூச்செடிகள் நட்டு பூத்திருக்கும். ஜாதி முல்லைக் கொடியும் நித்திய மல்லியும் நெடுகச் சுற்றிப் படர்ந்திருக்கும். வெற்றிலைக் கொடிகள், மண்ணிலிருந்து கிளம்பி, சுவர்களில் ஒட்டுவேர் போட்டு ஒரு ஆள் உயரத்திற்கு இருபக்கத்திலும் ஏறியிருக்கும். உச்சிபொழுதுகளின் போது வந்து பார்த்தால் வெயில் வெளிச்சம் வழவழப்பான பசிய நிறத்து வெற்றிலைகளின் மேல் பட்டு, சுவர் நடுவே பச்சை நிறத்தில் மினுமினுத்துக் கொண்டிருக்கும். பாக்கியத்தம்மா அதனை “வெற்றிலை வெளிச்சம்” என்பார். மதியான நேரங்களில் சாப்பிட்டுவிட்டு, வீட்டு ஹாலில் இருந்து ஜன்னல் வழியாக அந்த வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே ஹால் கட்டிலில் ஒரு பக்கமாக தலை சாய்த்து உறங்கிப்போவது ஒரு வகை வழக்கம் அவர்களுக்கு.

தோட்டத்துச் செடிகளுக்கு மத்தியில் நடந்து வர ஒவ்வொரு அடிக்கும் சதுர சதுரமாக செந்நிற கற்பாளங்கள் போடப்பட்டிருந்தது. அவர் அதில் தன்னை ஊன்றி ஊன்றி நிலை நிறுத்திக் கொண்டு நடந்து வருவார். அப்படியே முக்கால் மணி நேரம் வீட்டைச் சுற்றுவார். செடிகளை நோட்டம் விடுவார். முன்பெல்லாம் அவரே தான் இச்செடிகளுக்கு நீர் இறைப்பார். சுற்றுச் சுவரில் அருகருகே நீர்க்குழாய் இணைப்புகள் இருந்தன. வெற்றிலைகளை விலக்கி விட்டுப் பார்த்தால் அவை தெரியும். அவற்றில் இருந்து நீரைப் பிடித்துப் பிடித்து அப்படி அப்படியே ஊற்றிக்கொண்டு போவார். இப்போதெல்லாம் அவரால் முடியவில்லை. பாக்கியத்தம்மாவே முழுதும் செய்துவிடுகிறாள். அவர் வெறுமனே பாக்கியத்தம்மா அங்கங்கு மாட்டி வைத்திருக்கும் குவளையை எடுத்து நீரைப் பிடித்து அச்செடிகளின் மேல் மரியாதைக்கு தெளித்துவிடுவதோடு சரி. அவரால் முடிந்ததை இன்று வரை ஏதோ அச்செடிகளுக்குச் செய்ய ஆசைப்படுகிறார் என்று பாக்கியத்தம்மா எண்ணிக்கொள்வாள். 

அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் முற்றிலும் செடிகொடிகள் தான். ஆனால் மனையின் வலப்பக்க மூலையில் மட்டும் காம்பவுண்ட் சுவர் ஓரமாக  ஒரு மரம் இருந்தது. அது வில்வ மரம். இந்த வீட்டு மனையை வாங்கிய புதிதில் சிறு கன்றாக இருந்தது அது. இவர் தான் ஒரு ஓரமாக இருந்து விட்டுப் போகட்டுமே என்று அதை களையாமல் நீருற்றி வளர்த்தார்.  அந்த மரத்தின் பெயரிலேயே அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தச் சிறு அடுக்ககம் “வில்வம் பிளாட்ஸ்” என்று வழங்கப்பட்டது. முதலில் அந்த மனை ஒரு ஒற்றை வீடாகத் தான் இருந்தது. அதில் தான் குமரப்பா குடியிருந்தார். பின்னர் தான் அவர் நடுவயதில் அது நான்கு வீடுகள் கொண்ட அடுக்ககமாக மாற்றப்பட்டிருந்தது. கீழே இவர் குடியிருக்கிறார். மேலே மூன்று வீடுகளையும் தன் பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டார். அவர்கள் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

தனி வீடாக இருந்த போதும் சரி அடுக்ககமாக மாறிய போதும் சரி அந்த வில்வ மரத்திற்கு எந்தவொரு ஊறும் வரவில்லை. அது அதன்படிக்கு மனையின் ஒரு மூலையில் வளர்ந்தது. ஆனால் தனி வீடாக இருந்த போது ஒரு மாடி உயரத்துக்கு இருந்த அந்த மரம், அடுக்ககமாக ஆக்கப்பட்டு இன்னும் ஒரு தளம் உயர்த்தப்பட்ட போது, இருமாடி உயரம் கொண்டுவிட்டிருந்தது. மனை உயர மரம் உயரும் விகிதாச்சாரம் மட்டும் மாறாமல் இருந்தது. அது குமரப்பாவுக்கு எப்போதுமே ஆச்சரியம் தரும் விஷயமாக இருந்தது. இந்த வெற்றிலைக் கொடிகள்  அம்மரத்திலும் கொக்கிப்போட்டு  ஏறத் துவங்கியிருந்தன.

ஒன்றரை ஆண்டுகளில் குமரப்பாவின் மனம், அந்த வாக்கிங் ஸ்டிக்கை அவரது கையின் நீட்சியாகவே தான் பழக்கியிருந்தது. கையில் இருந்து நீண்டு சென்று தரையைத் தொடுவது தன் இன்னொரு கால் தான் என்று ஏற்க மறுத்தது. கை என்றால் எப்போது வேண்டுமானாலும் அசைத்துக்கொள்ளலாம். நீட்டிக்கொள்ளலாம். கால் என்றால் எப்போதுமே நிலத்தில் பதித்திருக்க வேண்டுமே.

அப்படி பிடி நழுவி தவறிப்போகும் தருணங்களில் பூச்செடிகளின் கிளைகளையும் சுவற்றில் ஒட்டு போட்டு ஏறிக்கொண்டிருக்கும் வெற்றிலைக் கொடிகளையும் ராவிக்கொண்டுப் போய் ஓரமாக விழுந்துகிடப்பார். காம்பவுண்டு சுவர் பக்கமாகவோ வீட்டுச்சுவர் பக்கமாகவோ சுவரோடு சுவராக சாய்ந்துகிடப்பார். சில சமயங்களில் அவரே எழுந்து கொண்டு விடுவதுண்டு. அப்படி இயலாத போது அடி வயிற்றில் இருந்து ஒரு அபயக்குரல் எழுப்புவார். வீட்டுக்குள்ளிருந்து பாக்கியத்தம்மா ஓடி வந்து அவரை நிமிர்த்திவிடவேண்டும். பல சந்தர்ப்பங்களில், இப்படி ஒன்று நிகழ்ந்து, அவர் மனப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளச் சொல்லி உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

பிறகு எப்போதாவது பாக்கியத்தம்மா தோட்டத்தில் உலவ வரும் போது சில இடங்களில் சுவரில் ஏறிய வெற்றிலைக் கொடிகள் கீழே மண்ணில் சரிந்து கிடக்கும். சீரான இடைவெளிகளில் அக்கொடிகளின் கணுப்பகுதிகளில் சுவரோடு கொடியை ஒட்டுப்போட்டிருந்த குறுவேர்களின் மண் நிறத்தடங்கள் மட்டுமே எஞ்சி, பசிய நிற வெளிச்சம் குன்றிப் போய், சுவர் அங்கு வெளிறி நின்றிருக்கும். பாக்கியத்தம்மா வேற்று யோசனையே இல்லாமல் இந்த இடத்தில் தான் அவர் இன்று நிலை தடுமாறியிருக்கிறார் என்று புரிந்துகொள்வாள்.

மாதத்திற்கு ஒருமுறை பாக்கியத்தம்மா தன் கணவரை எங்காவது வெளியே கூட்டிச் செல்வாள். அதற்காகவே ஒரு வாடிக்கையான ஆட்டோக்காரரிடம் பேசி வைத்திருந்தாள். குமரப்பா வெளியே செல்லும்போது பேண்ட் தான் அணிந்து கொண்டு செல்வார். பாக்கியத்தம்மாவின் உதவியுடன் தான் அவரால் அதனை அணிந்துகொள்ள முடிந்தது. முதலில் உட்கார்ந்தபடிக்கே கால்களை உள்நுழைத்து போட்டுக்கொண்டுவிடுவார். பிறகு, ஊன்றி எழுந்து நின்று இடுப்பைச் சுற்றி அட்ஜஸ்ட் செய்துகொள்வார். ஒரு பக்கத்து பேண்ட் துணி தரையோடு தழைந்து காற்றில் ஆடும். பாக்கியத்தம்மா குனிந்து தன் கையால் அப்பகுதியை மடித்துவிடுவார். அப்படி பாக்கியத்தம்மா காலில்லாத அந்த  காலியிடத்தை தொடும்போது சில சமயங்களில் குறுகுறுப்பாக உணர்வார்.  சில சமயங்களில், “தொடாத வலிக்கிது” என்று அலறி அமர்ந்துவிடுவார். சில சமயங்களில்,  “மாவு மில்லுல மாவரைக்கற மிஷின் வாயில கட்டியிருக்கற துணிய புடிச்சு தழைச்சு விடற மாதிரி பாத்து பதமா மடிச்சுவிடணும்” என்று அசட்டுத்தனமாக ஏதோ ஒன்றைச் சொல்லி இளிப்பார். பாக்கியத்தம்மா அதனை கண்டுகொள்ளாமல் மேலே ஏற்றி மடித்துவிடுவார். சில சமயம் மடித்துவிட வேண்டாம் என்றும் சொல்லிவிடுவார். சொல்லிவிட்டு, வெளியே சென்று அவர் வீட்டின் முன் பக்கம் இருக்கும் கார் பார்க்கிங் பகுதியில் சென்று நின்றுகொள்வார். அங்கு எப்போதுமே காற்றோட்டம் இருக்கும். அவர் வீட்டின் அருகில் ஏரி ஒன்று இருக்கிறது. அந்த ஏரியினை தழுவி வரும் காற்று அந்த இடத்தில் எப்போதும் அடித்துக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊன்றி நின்றுகொண்டு காலில்லாத, அந்த ஒரு பக்கத்து பேண்ட் துணி காற்றில் ஆடுவதை குனிந்து அப்படியே வெகுநேரம் பார்த்துக்கொண்டு இருப்பார். பாக்கியத்தம்மா வந்து அவரை ஞாபகப்படுத்தி மீட்க வேண்டும்.

குமரப்பாவுக்கு அந்த ஊமை வலியை எப்படியாவது புரிந்து கொண்டுவிட வேண்டும் என்றிருந்தது. அப்போதெல்லாம் காலின் அந்த மொழுக்கட்டையான இடத்தை தடவிப்பார்ப்பார். சில சமயங்களில் வலி பின்னி எடுப்பதாகத் தோன்றும். எங்கிருந்து வருகிறது இந்த வலி? முன்பு கால் இருந்த போது அந்த இடத்தில் ஏற்பட்டது காலம் பிந்தி இப்போது வந்து புதிதாக வலித்துக் காட்டுகிறதா? வலியுமே காலம் தாண்டுமா? 

சில சமயங்களில் அப்பகுதியே சுரணையற்றுக் கிடப்பதாக தோன்றும். வலியே இருக்காது.  ஒருமுறை அப்படித்தான். குமரப்பாவுக்கு எப்போதும் அடுப்பில் இருந்து காய்ச்சி இறக்கிய பாலை உடனே காபி போட்டு குடித்துவிடவேண்டும். சூடு துளியும் குறைந்துவிடக்கூடாது. பாக்கியத்தம்மா அப்படி போட்டுக்கொண்டு வந்து தருவாள். அந்தக் காபி டம்ப்ளரையே தொட முடியாது. அப்படி கொதிக்கும். ஒருமுறை, அந்த டம்ப்ளரின் விளிம்பை பிடித்தபடி அவர் காலின் அந்த மொழுக்கட்டையான பகுதியில் சூடு வைத்துப் பார்த்திருக்கிறார். பாக்கியத்தம்மா “என்ன பண்றீங்க?” என்று அவரை தடுக்கப் போகும் போது, அந்த சூடு அவரை எதுவுமே செய்யவில்லை என்பதை உணர்ந்தார். “பாத்தியா, சுரணையே இல்லை இங்க” என்று பாவமாகப் பார்த்தார்.

பின்னர் மற்றொருமுறை பாக்கியத்தம்மாவிடம் நகம்வெட்டியை எடுத்துக் கொடுக்கச் சொல்லி, தானே நகம் வெட்டிக்கொண்டிருந்தார். இப்போது பதினைந்து விரல்களுக்கு வெட்டிகொண்டால் போதும். வேலை மிச்சம் என்கிற திருப்தி வேறு அவருக்கு உள்ளூர இருந்தது. சட்டென, ஏதோ தோன்றியவறாக, அந்த நகவெட்டியின் மடிந்த உள்ளடங்கிய பாகங்களை விரித்து, அதில் இருந்த கத்தி போன்றதை எடுத்து அவர் காலின் அந்த மொழுக்கட்டை முனையில் வைத்து, ஒரு இழு இழுத்துக்கொண்டார்.

கீழே தரையின் டைல்ஸில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. பாக்கியத்தம்மா தற்செயலாக அந்தப் பக்கமாக போன போது, அவர் அசராமல், வலியேதும் இல்லாமல் அப்படியே அமர்ந்துகிடந்தார்.

“என்னது இதெல்லாம்? ஏன் இப்படி பண்றீங்க” என்று பாக்கியத்தம்மா தலையில் அடித்துக்கொண்டு அவர் கையில் இருந்ததை வாங்கி கீழே போட்டார்.

“போகட்டும். போகட்டும் விடு”

“இப்போ வலியே இல்ல சுரணையே இல்ல எனக்கு,  இந்த காயத்துனால. சுத்தமா மரத்துப் போச்சு “

குமரப்பா யோசித்து யோசித்து பேசியபடி இருந்தார்.

“பாப்போம். இந்த புண்ணாவது ஆறுதா இல்ல, என்ன மொத்தமா தின்னுட்டு தான் போகுதானு”

“நானும் பாக்கறேன். பாக்கறேன். அதுவா நானான்னு”

ஆனால் அந்தக் காயம் உடனேயே ஆறிவிட்டது. பெரிதாக குழப்பத்தை விளைவிக்கவில்லை. முன்பு போல அந்த இடத்தில் வலி எதுவும் எடுக்கவில்லை. ஆனால் பாக்கியத்தம்மா முன்னெச்சரிக்கையாக, அவர் இது போன்று மீண்டும் எதுவும் செய்துகொள்ளக்கூடாதே என்று கருதி, அந்தப் பகுதியில் பஞ்சுப் பொதியை வைத்து ஒரு கட்டு கட்டிவிட்டாள்.

ஒரு மாதத்திற்கு முன்பு, குமரப்பாவுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது. குமரப்பாவின் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு பிரபல மருத்துவரிடம் பேசி இம்முடிவை எடுத்திருந்தார்கள். குமரப்பாவும் அதற்கு ஒத்துழைத்தார்.

ஆனால், புதிதாக பொருத்தப்பட்ட கால் ஒரு மாதம் வரை கூட தாங்கவில்லை. காலில் இருந்து நழுவி நழுவி வந்து கொண்டிருந்தது. குமரப்பா, மீண்டும் பழையபடி “வலிக்க ஆரம்பிச்சுடுச்சு” என்றார். “எதுவோ உள்ளயிருந்து குடையிது. குடையிது” என்றார்.  அவருக்கு எதுவோ உறுத்திக்கொண்டிருந்திருக்கிறது. கால் இழந்த துயரம் போய் புதிதாக பொருத்தப்பட்ட இந்த கருவியே அவரை மேலும் எரிச்சல் படுத்தியது. இன்னும் நாள் கடத்தியிருந்தால் அவரே பொருத்தப்பட்டதை பிடிங்கி எறிந்திருப்பார். உடனே குமரப்பாவை அழைத்துக்கொண்டு மீண்டும் மருத்துவரைக் காணச் சென்றனர். முதலில் அவர்களால் ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.  அகற்றப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார்கள். அது நன்றாக ஆறி தான் இருந்தது. புதியதாக ஏதேனும் புண்கள் வந்திருக்கிறதா என்று பார்த்தார்கள். அப்படியும் இல்லை. அந்தக் கருவி உராய்படும் இடங்களில் பார்த்தார்கள். எல்லாம் சரியாகத் தான் இருந்தது. இது ஒரு பொய் வலி தான் என்றார்கள். எதற்கும் ஒரு ரெடியோகிராபி எடுத்துப் பார்க்கலாம் என்றார்கள். பிறகு தான் தெரிந்தது. வெட்டுண்ட காலின் எலும்பு, வெட்டுப்பட்ட இடத்தையும் மீறி சற்று வளர்ந்திருந்தது. அது ஆறி வந்து கொண்டிருக்கும் அப்பகுதியின் சூழ்த்திசுக்களை இறுக்கியபடி துருத்திக்கொண்டு வளர்ந்திருந்தது.

மருத்துவர்கள் இனி இந்தக் கருவி உதவாது என்றும் கால்சியம் படிவு அதாவது எலும்பு வளர்ச்சி இன்னும் அவருக்கு தடைபடவில்லை என்றும் புதியதாக வேறொன்று வைத்தாலும் இது போல் தான் மீண்டும் ஏற்படும் என்றும் சொன்னார்கள். குமரப்பா மீண்டும் தன் வாக்கிங் ஸ்டிக்குக்கே திரும்ப வேண்டியிருந்தது. மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது குமரப்பா “மைராண்டி டாக்டர்கள்” என்று முனகிக் கொண்டு வந்தார்.

பின்னர், ஒரு அதிகாலை வேலையில் தோட்டத்துச் செடிகளை பார்த்து விட்டு நீரூற்றி வருவதற்காக பாக்கியத்தம்மா வீட்டுக்கு வெளியே சென்றிருக்கிறாள். சட்டென, எதுவோ வித்தியாசமாகத் தோன்ற,  அவள் அந்த வில்வ மரம்  மூளியாக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தாள்.  இருமாடி உயரத்துக்கு நின்றிருந்த அந்த மரத்தை எவரோ காம்பவுண்ட் சுவருக்கு அந்தப் பக்கம் இருந்தவாறே வெட்டியிருக்கிறார்கள்.  மரத்தை வெட்டிச்  சாய்த்து, மொட்டையாக்கிவிட்டு, முறிந்த மேல் பாதியை ரோட்டில் அப்படியே சரியக் கிடக்கவிட்டுச் சென்றுவிட்டார்கள் பாதகர்கள்.

சரிந்த மரத்தைக் கண்டதும் அவளுக்கு தாங்கமுடியவில்லை. அவளது அகம்பாவம் சீண்டப்பட்டது. எவர் செய்த வேலையிது என்று அவர்களைப் பற்றி உள்ளுக்குள் கறுவிக்கொண்டே, சாலை வழியை இடைமறித்துச் சாய்ந்திருந்த மரத்தை, நடைபாதையோரம் நடந்து சென்ற இரு மனிதர்களின் உதவியுடன் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஓரமாக ஒட்டி இழுத்துப் போட்டாள்.

எதிரே கண்படுபவர்களிடத்தில் எல்லாம் “என்னங்க இது இப்படி வெட்டி சாய்ச்சுட்டு போய்ட்டாங்க?” என்று கேட்டுக்கொண்டே நடந்திருக்கிறாள். அவர்களின் வீடுகளிலும் சாலை ஓரமாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்தன. ஆனால், அவர்கள் வீடுகளிலெல்லாம் சரியாக வெளிக்கிளைகளை மட்டும் வெட்டியிருக்கிறார்கள். ஆனால் இவள் வீட்டில் மட்டும் மொத்த  மரத்தையும்  சாய்த்திருக்கிறார்கள்.

அக்கம் பக்கம் விசாரித்ததில், போன வாரம் நடந்து முடிந்த நகரசபை பொதுக்கூட்டத்தில், அந்த வார்டு கவுன்சிலர் அவர்கள் வாழும் பகுதியின் சாலை ஓரங்களில் புதிய மின் இணைப்புகள் போடப்படும் என்றும் அதற்கான ஆணை வந்திருக்கிறது என்றும் அதற்கு இடைஞ்சலாக இருப்பது எல்லாம் அகற்றப்படும் என்று சொல்லியிருந்ததாகச் சொன்னார்கள்.

“உங்ககிட்டலாம் கேட்டுகிட்டு  தான் இதை பண்ணினாங்களா?”

“இல்லைம்மா. அவங்களாவே வந்து காலங்காத்தால அசந்த நேரத்துல வெட்டிட்டு போய்ருக்காங்க. வெட்டியத கூட அப்படியே போட்டுட்டு தான் போனங்க. நாங்க தான் ஓரமா இழுத்துப் போட்டோம்”

“என்னங்க இது ஒரு வார்த்தை சொல்லியிருந்தா என்ன அவங்க? இப்படி ஒரு ஆர்டர் வந்துருக்கு அப்படின்னு சொல்லி எங்கள்ட்ட கேட்டிருக்கலாமே. வெட்ட விட மாட்டோம்னா சொல்லப் போறோம்.  ஒரு பக்கமா மட்டுமாச்சும் வெட்டிக்க சொல்லியிருப்பேன். இப்ப மொத்த மரமும் போச்சு.”

“என்னங்க பண்றது?”

ஆமாம். அவர்களிடம் புலம்பி என்ன செய்வது? இவள் விடவில்லை. சேலையை இடுப்புடன் இன்னும் இழுத்து சொருகிக் கட்டிக்கொண்டு சாலையோரமாக மரங்கள் வெட்டுப்பட்டிருந்த வீடுகளையே பார்த்துக்கொண்டு நடந்தாள். ஒரு இருபது வீடு தள்ளியிருக்கும். அங்கு வைத்து ஒரு வீட்டில் இப்படி வெட்டிக்கொண்டிருந்தவர்களை கண்டுகொண்டு விட்டாள். அவர்கள் அந்த வீட்டு காம்பவுண்டின் மேல் ஏறியெல்லாம் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களிடத்தில் ஆத்திரம் தாங்கமாட்டாமல், “யார கேட்டு வெட்டுறீங்க இப்படி? கொஞ்சமாச்சும் அறிவில்ல?  வீட்டுல இருக்கறவங்கள்ட்ட கேக்கவேணாமா? இப்படி உங்க வீட்டுல நான் வந்து வெட்டிட்டு போனா விடுவீங்களா?” என்று கூப்பாடு போட்டிருக்கிறாள். இவள் போட்ட கூச்சலில் தான் அந்த வீட்டில் இருப்பவர்களே என்னவென்று பார்க்க வெளியே வந்திருக்கிறார்கள். அவர்களும் புரியாமல் முழித்திருக்கிறார்கள். பின்னர் தான் வேறொருவர் அவர்களிடத்தில் விஷயத்தை கூறியிருக்கிறார்.

வெட்டிக்கொண்டிருந்தவனில் ஒருவன் பாக்கியத்தம்மாவுடன் பொலுபொலுவென சண்டைக்கே வந்துவிட்டான். “எங்களை ஏன் ஏறுறீங்க? எதாருந்தாலும் வார்டு கவுன்சிலர் கிட்ட போய் கேளுங்க. ஆபீசுல போய் பேசுங்க. அவங்க சொன்னத தான் நாங்க செஞ்சோம்” என்றான்.

“சரி அவங்க சொன்னதை தான் செஞ்சோங்கறீங்க சரி, உள்ள இருக்கறவங்கள்ட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செஞ்சா என்ன?”

“அதெல்லாம் கூட்டத்தும்போதே எல்லாருக்கும் சொல்லியாச்சு. அங்க போய் கேளுங்க” என்று பேசியிருக்கிறான்.

கூட்டம் கூடிவிட்டது. அருகில் பைக்கில் வந்து ஒருவன் இறங்கினான். அவனுக்கு விஷயம் எப்படியோ எவர் மூலமோ தெரிந்திருந்தது. கரிய மேனி. முகத்தில் பவுடர் அப்பியிருந்தது திட்டுத் திட்டாகத் தெரிந்தது. எவனோ லோக்கல் கவுன்சிலரின் கட்சிக்காரன் தான். பாக்கியத்தம்மாவுக்கு அவனை எங்கோ பார்த்தது போல நினைவிருக்கிறது. இந்த வெட்டும் வேலையை மேற்பார்வையிட வந்தவனாம்.

“சார், இந்தம்மா எங்கள்ட்ட எகிறுது” என்றான் பாக்கியத்தம்மாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தவன் புதிதாக வந்தவனிடம்.

“என்னம்மா, இப்படி பண்றீங்க? அவங்கலாம் லெபர்ஸ். பாவம், கூலிக்கு வேலை பாக்கறவங்க. அவங்ககிட்ட போய் இப்படித் தான் எகிறுவீங்களா? அவங்கள போட்டு இப்படியா திட்டுவீங்க?”

“என்னங்க இது? அவங்க கூலிக்கு வேலை பாத்தா என்ன பாக்கலன்னா என்ன? அதுவா இப்போ பேச்சு. ஒரு வார்த்தை வீட்டு காரங்கள்ட்ட சொல்லிருக்கணும் தானே பேசிட்டு இருக்கேன்? ஏன் சொல்லலன்னு அவங்கள கேட்பீங்கன்னு பாத்தா, எங்கிட்டயே திருப்பிவிட்றீங்க?”

“அவங்களுக்கு கேட்கணும்ன்னுலாம் தெரியாதும்மா?”

“அப்படின்னா, நீங்க தான் அவங்கள அப்படி கேட்டுட்டு வெட்டுன்னு சொல்லி அனுப்பியிருக்கணும்? இல்லையா?” இவளும் பதிலுக்கு திருப்பிவிட்டிருக்கிறாள்.

“ஏன் நீங்க சொல்லி அனுப்பல. அதை சொல்லுங்க இப்போ? இந்த வேலைக்கு இன்சார்ஜூ நீங்க தானே?”

அவன் எரிச்சல் அடைந்து விட்டான்.

“தேவை இல்லாம பேசாதீங்கம்மா?”

“உங்க வீட்டுல இப்படி வந்து வெட்டினாலும் இதே மாதிரி தான் சொல்வீங்களா? ஏங்க இப்படி?”

“ஆனாலும் நீங்க நேரா போய் அவங்கள திட்டிருக்கக் கூடாது. அவங்க பாவம். உங்களுக்கு தான் விஷயம் தெரியும்ல. நீங்க எங்க ஆபீசுல வந்து பேசியிருக்கணும். மரத்துக்குலாம் பாவம் பாக்கறீங்க. மனுஷனுக்கும் பாக்கணுமில்ல”. அவன் இன்னும் அதில் இருந்து வெளிவரவில்லை. அதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

“சார் நான் மறுபடியும் சொல்றேன். நீங்க வெட்டிக்கோங்க. வேணாம்ன்னு யாரும் சொல்லப் போறதில்லை. தடுக்கப் போறதுமில்ல. ஆனா வீட்டாளுங்க கிட்ட ஒரு வார்த்தை கேக்குறதுக்கு என்ன? எங்கள பக்கத்துல வச்சுகிட்டு செஞ்சிருக்கலாம். நகராட்சி எங்க நல்லதுக்கு தானே இருக்கு. நீங்க நகராட்சி ஆளு. நீங்களே இப்படி அத்துமீறலாமா?”

“என்னம்மா அத்துமீறல்ன்னுலாம் சொல்றீங்க? இந்த முடிவு போனவாரம் கூட்டம் நடந்தப்பவே எடுத்தாச்சு. வீட்டுக்கு ஒருத்தர வர சொல்லியிருந்தோம். அப்பலாம் யாருமே வரல. இப்ப வந்து குய்யோ முய்யோன்னு அத்துமீறல்ன்னு கூச்சல்”

போனவாரம் அவளால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அப்படி ஒன்று நடக்க இறுக்கிறது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. அன்று வேறு அவள் தன் கணவரை அழைத்துக்கொண்டு வெளியே எங்கோ சென்றுவிட்டிருந்தாள். அவர்களின் மேல் வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒருவர் அக்கூட்டத்திற்குச் சென்று வந்ததாக அவளிடம் பிறகு சொல்லியிருந்தார். ஆனால் அவரும் இப்படியெல்லாம் திடுதிப்பென மரங்களை இவர்கள் வெட்டப்போவதாகச் சொல்லவில்லை. எந்த நேரம்? எந்த நாள்? எந்த திகதி? என்று எதுவுமே தெரியப் படுத்தவில்லை.

முன்பு, இவளும் குமரப்பாவுமே, வார்டு கவுன்சில் அலுவலகத்தில், அவர்கள் வீட்டின் எதிர்ப்புறம் இருந்த சாலையில், ஒரு பகுதி குண்டும் குழியுமாகி மழை நீர் நின்று, இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிறைய பேர் விழத்தெரிந்ததாக மூன்று நான்கு முறை மனு கொடுத்திருந்தார்கள். அந்தக் குழி இன்றுவரை இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அதற்கு இவர்கள் வேகம் காட்டவில்லை. ஆனால், இப்படி மரத்தை வெட்ட கோடாலியை ஓங்கிக்கொண்டு அவசர அவசரமாக கிளம்பியிருக்கிறார்கள்.

“சைடுல இருக்கறதலாம் தான் கழிச்சுவிட சொல்லியிருக்கோம். தேவைப்பட்டா தான் வெட்ட சொல்லியிருக்கோம்” என்றான் பேசிக்கொண்டிருந்தவன்.

அவளால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. முடிந்த அளவுக்கு  தன்னை இறைத்துவிட்டதாக நினைத்தாள். பிறகு, வீடிருக்கும் திசை நோக்கித் திரும்பினாள். மீண்டும் பாதை நெடுகிலும் வெட்டப்பட்டிருந்த மரங்களையும் வீடுகளையும் பார்த்துக் கொண்டே தான் நடந்தாள்.

அவள் சேலையின் தலைப்பைக் கொண்டு மேனியில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு புலம்பியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் குமரப்பா அமர்ந்தபடி இருந்தார். அவர் அப்போது தான் எழுந்திருந்தவராகத் தெரிந்தார். முகம் கழுவியிருந்தது. இருந்தும், அவரது முகத்தில் சலிப்பின் ஈயாட்டம். அந்த ஈயாட்டத்தை அவரால் தவிர்க்கவே முடிந்ததேயில்லை. என்றென்றைக்குமாக அது அவர் முகத்தில் தங்கிவிட்டதோ என்னவோ? ஆனால், அவர் உறங்கும் போது அது, அந்த ஈயாட்டம் அவர் முகத்தில் தென்படாது. கண் விழித்துவிட்டால் போதும், அந்தக் கண்ணுக்குத் தென்படாத ஈக்கள் எப்படி எங்கிருந்து வந்து மொய்க்குமோ அவர் முகத்தை!

“எங்க போயிருந்த இவ்ளோ நேரம்?”

அவரைப் பார்த்த மாத்திரத்தில் இவள், “தோட்டத்துல போய் பாருங்க, என்ன பண்ணி வச்சுருக்காங்கன்னு? பாவி பசங்க”

முதலில் அவருக்கு எதுவும் புரியவில்லை. மெதுமாக ஊன்றுக்கழியை கையில் சொருகிக் கொண்டு தோட்டத்தைப் பார்த்து விட்டு வர வெளியே சென்றார்.  பாக்கியத்தம்மாவும் கூடச் சென்றாள்.

“பாத்தீங்களா? எப்படி நம்ம வில்வ மரத்தை இப்படி மொத்தமா சாச்சுட்டு போயிருக்காங்க?”

அவர் வெறுமனே கேட்டுக்கொண்டு நின்றார்.   அவரும் பதட்டம் அடைவார் என்று தான் முதலில் பாக்கியத்தம்மா நினைத்தாள். ஆனால், வெறும் மொட்டைக் கம்பமாய் நின்றிருக்கும்  அந்த வில்வமரம் அவரிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

“ஏதோ ஈபி லைன் புதுசா போடறாங்களாம். அதனால ரோடு சைடுல இருக்கறத எல்லாம் இப்படி பண்ணியிருக்காங்க.”

“நகர சபை கூட்டத்துல எடுத்த முடிவாம்? உங்களுக்கு தெரியுமா இதப்பத்தி?”

அவர்  “தெரியாது” என்றபடி தலையசைத்தார்.

“எனக்கு தாங்க முடியல. அதான் தெரு முனையில இப்படி வெட்டிகிட்டு இருக்கறவங்கள்ட்ட நாலு வார்த்தை கேட்டுட்டு வந்தேன்”

“இதுக்கெல்லாம் இன்சார்ஜுன்னு ஒருத்தன் வந்தான், என் கூட சண்டை போட. அவன்கிட்டயும் நல்லா என் ஆத்திரம் தீர கத்திட்டு வந்தேன்”

“இந்த எடம், காலி மனையா இருந்தபோதுலேந்து இருந்த மரம்”

அவர் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. வெறுமே “சரி, சரி” என்று தலையாட்டினார்.

இரண்டு மூன்று நாட்களாக பாக்கியத்தம்மாவுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. சுவரோரம் சாய்த்துக் கிடத்திய மீதி மரத்தின் கிளைகளை வெட்டி அதில் இருந்த வில்வ இலைகளை எல்லாம் மூவிலை மூவிலையாக முள்படாமல் நறுக்கி மூங்கில்கூடைகளில் போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். மூன்று நான்கு கூடைகள் தேறியது. அதனை அக்கம்பக்கத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கும் அந்தக் கோயில் வாசலில் அர்ச்சனைக்கடை வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக கொடுத்துவிட்டு வந்தாள். மீதி இருந்த வெறும் மரத்தை எவரோ ஒரு ஆசாரியிடமோ வைத்தியரிடமோ சொல்லி வெட்டி எடுத்துக்கொண்டு போகச் சொன்னாள். வீட்டுக்கு வந்து போகிறவர்களிடம் எல்லாம் பாக்கியத்தம்மா நடந்த கதையைச் சொல்லி விசனப்பட்டுக்கொண்டிருந்தார்.  அப்போதெல்லாம் குமரப்பா அது எவர் வீட்டிலோ நடந்தது போன்று அமர்ந்துகொண்டிருப்பார்.

பின் வந்த நாட்களில் குமரப்பாவிடம் மனத்தெம்பு கூடியிருந்ததாகத் தெரிந்தது. இன்னதென்று வரையறுக்கமுடியாத ஒரு சுமை இறக்கம் அவருக்குள் நிகழ்ந்தேறிவிட்டதாக உணர்ந்தார். இது போன்றதொரு நிகழ்வை அவரது அகம் முன்பே எதிர்பார்த்திருந்தது போல அவருக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இப்போதெல்லாம் ஒன்றரை ஆண்டுகளாக அவர் முகத்தில் இழையோடிப் போயிருந்த, அந்த சலிப்பின் ஈயாட்டம் தென்படவில்லை. முகம் தெளிர்ச்சிக்கண்டிருந்தது. பாக்கியத்தம்மாவின் வற்புறுத்தல் இல்லாமல், அவராகவே அவளிடம் சொல்லிக்கொண்டு, வெளியே சென்று வீட்டைச் சுற்றி நடந்துவிட்டு வருவார். ஒவ்வொரு நாளும் சுற்றி நடந்து விட்டு, வீட்டுக்குள் நுழையும்போது இலகுவாக தெரிவார்.

பாக்கியத்தம்மா இன்னமும் புலம்பிக்கொண்டே தான் இருந்தாள். குமரப்பா இவ்விஷயத்தை பொருட்படுத்தாதது அவளுக்கு ஏன் என்று பிடி கிடைக்கவில்லை. அவர் அவராகவே முன் வந்து இது நாள் வரை வாய்வார்த்தையாகக் கூட நடந்ததைப்பற்றி வருத்தப்பட்டோ ஆதங்கப்பட்டோ எதையும் வெளிப்படுத்தவில்லை. தாங்கமாட்டாமல், ஒருமுறை அவளே அவரிடம் நேரிடையாக கேட்டுவிட்டாள்.

“எப்படி இப்படி ஆகிட்டீங்க? ஏதோ பொறத்தையான் வீட்டுல நடந்தா மாதிரி நடந்துக்கறீங்க? நீங்க பாத்துப் பாத்து தண்ணி ஊத்தி வளர்த்தது தானே? ஒருவேளை கால் இருந்திருந்தா என் கூட சேர்ந்து கத்தியிருப்பீங்களோ?”

அவர் அதனையும் கூட கண்டுகொள்ளவில்லை. அவரிடமுமே அதற்கான பதில்  இல்லை.  தன் மனத்தின்   விசித்திரக்   கோணலை உரு போட்டு அலச முடியாதவராக, உணர முடியாதவராகத் தான் அவரை அது  வைத்திருந்தது. எதுவும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை.

பிறகொருமுறை, இருவாரங்கள் கழித்து, தோட்டப்பக்கம் நடைக்காக அவர் சென்றிருக்கிறார். அந்த வில்வ மரத்தை ஏறிட்டுப் பார்த்திருக்கிறார். காலை வேளைகளில் வீட்டு வாசலில் கிடக்கும் பசுஞ்சாணியை எடுத்துக் கொண்டு வந்து பாக்கியத்தம்மா அம்மரத்தின் வெட்டப்பட்ட முனையில் அப்பி வைத்திருக்கிறாள் போல. அது வெட்டுண்ட பகுதியை மூடி காய்ந்து கிடந்தது. அந்த மொட்டை மரத்தின் பட்டையைத் தொட்டுத் தடவிப்பார்க்கும் புது வழக்கம் கடந்த இருவாரங்களாக குமரப்பாவிடம் தோன்றியிருந்தது. அன்றும் அப்படி தடவிப் பார்க்கையில், வழக்கத்திற்கு மாறாய் மரத்தின் உடம்பில் பல இடங்களில் முண்டெடுத்து இருந்ததை அவர் உணர்ந்தார். ஓரிடத்தில் சிறிதினும் சிறியதாக ஒரு மூவிலைத் தளிர் முட்டித் திறந்து வெளிவந்திருந்தது. ஒரு சிறிய செந்நிறக் கொழுந்து. ஒரு தீத்துளிர் அல்லது தீபமுனையில் எரியும் சுடர். அவர் தீப்பட்டவர் போல கைகளை விலக்கிக் கொண்டார்.

வேகவேகமாக ஊன்றுக் கழியின் துணையுடன் அவ்விடத்தை நீங்க முடிவெடுத்து, ஓர் அடி எடுத்து வைத்த போது நிலைதடுமாறப் பார்த்தார். நல்லவேளையாக சுவரைப் பிடித்துக் கொண்டுவிட்டார். ஆனாலும் ஒரு அலறல். இல்லாத காலில், முள் ஏறியது போல வலி ஊடுருவியது. கீழே குனிந்து பார்த்தபோது, எந்த முள்ளுமே இல்லை. எப்போதோ ஏற்பட்டது இப்போது வந்து வலித்துக் காண்பித்திருக்கிறது. முன்பு இது போன்று கீழே விழுந்து காய்ந்துக்  கிடந்த  ஒரு முள் தான் – அந்த வில்வ மரத்தின் முள் தான் – அவரது அகற்றப்பட்ட காலில் ஏறி காயம் ஏற்படுத்தியது.

1 comment for “மூவிலைத் தளிர்

  1. Saratha K
    March 18, 2023 at 4:34 pm

    லோகேஷ்..அற்புதமான நடை…சிறு தடங்கலும் இல்லாத தெளிவான சிந்தனை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்..ஆங்கிலக்கலப்பில்லாத .எளிதாகப்புரிந்தாலும்..தன்னுள் ஒரு கவிஞனை மறைத்து வைத்திருக்கும் தமிழ்..கதையைப்படித்து முடித்தபின் என்னையறியாமல் என் விரல்கள் என் கால் முட்டியைத் தடவின…ஏனென்று தெரியவில்லை..நானும் சர்க்கரை நோயாளி என்பதாலோ? அந்த வில்வமரம் உயிருள்ள ஒரு கதாபாத்திரம்.
    எதைச்சொல்வது ? எதை விடுவது?
    நிறைய எழுதுங்கள்..பகிருங்கள்.வாழ க வளமுடன்

    அன்புடன்

    K.Saratha ( Ur FIL Mr.Jambu ‘ s close friend)
    90474 50747
    Coimbatore.

    Pl convey Sugan my infinite loving wishes

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...