அழைப்பு

அந்தி சற்று தயங்கியபடியே மயங்கிக் கொண்டிருக்கிறது. பாவமன்னிப்புப் பெற ரோமன் கத்தோலிக்கர்கள் மாதா கோவிலுக்குச் செல்லும் வெள்ளிக்கிழமையின் மாலை இது. நான் அங்குச் சென்று அதைச் செய்வது தெரிந்தால் அத்தை கோபப்படுவாள். யாருக்கும் தெரியாமல் செல்ல வேண்டும். முகம் தெரியாத ஒருவரிடம் மட்டுமே நம் பாவங்களையெல்லாம் அறிக்கையிட முடியும். ஒருவேளை எனக்கு அது விடுதலை அளிக்கலாம் என்று தோன்றியது.

நான் மெல்ல கனெக்டிகெட் ஆற்றின் கரையோரமாகவே நடந்து அங்கிருந்த ஓர் புராதனமான மாதா கோயிலுக்குச் சென்றடைந்தேன். வீட்டிற்கு அருகிலிருக்கும் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத கோயில் என்பதைத் தவிர நான் இங்கு வருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அடிக்கடி இவ்வழியாகச் செல்வதாலும், பிரம்மாண்டமான இதன் தோற்றத்தின் நிமித்தமும் இக்கோவில் எனக்கு  இயல்பாக அறிமுகமாயிருந்தது. இங்குக் கட்டப்பட்டிருந்த பெரிய ஆலய மணி வழியாகவே நாங்கள் காலத்தை உணர்ந்திருந்தோம். பிரிட்டிஷ் பாணி கோதிக் செங்கல் கட்டிடம் இது. செங்கல்லும் வெண் சுண்ணமும் தவிர நிறங்களென ஏதுமில்லாதது. பாசிகள் படிந்த இடம் மட்டும் கறுப்பாகி காய்ந்து, கடந்த காலத்தின் எண்ணத்தை அளிக்கும்.

இது கொண்டாட்டங்கள் இல்லாத தவக்காலமாதலால் கோவில் இன்னும் கலை இழந்து ஓர் இனம்புரியாத சோகத்தை ஏந்தியிருந்தது. அந்தச் சோகத்தினுள் சென்று என் சோகங்களையும் சேர்த்துப் புதைத்து விட்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தூரத்திலிருந்தே ஓரிரண்டு ஆட்கள் கோவிலிருந்து வெளிவருவதைப் பார்த்தேன். கோவிலின் துருப்பிடித்த இரும்பு கேட் வழியாக ஒற்றை ஆள் மட்டுமே நுழையும் ஒரு சிறு திறப்பு இருந்தது. அதில் நுழைந்து பாதசாரிகள் நடக்க மட்டுமே அமைக்கப்பட்டிருந்த தடத்தில் காய்ந்த புற்களை மிதித்தபடி என் கால்களைப் பார்த்தவாறு சின்ன அடிகள் எடுத்து நடந்து சென்றேன். செல்லும் பாதையைத் தவிர வேறு எதையும் கண்கள் நாடவில்லை. குழப்பமும் பாரமும் ஒன்று சேர அழுத்தியது போல ஒவ்வொரு அடியும் எடை மிகுந்து இருந்தது. திடீரென அடித்த மணி ஒலியால் திடுக்கிட்டு நிமிர்ந்து ஆலயத்தின் உச்சியைப் பார்த்தேன். எப்போதும் போல் அல்லாமல் இம்முறை மணியின் ஒலியில் சோகம் கலந்திருந்தது.

சரியாக ஆறு தடவை அடித்தது. “சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்ற வசனம் ஒலித்தது. என் கண்கள் மெல்ல பனித்தது. “இதோ வருகிறேன்” என ஏசுவிடம் மனதில் சொல்லிக் கொண்டேன்.

கோவிலுக்குள் நுழைந்து எப்போதும் நான் அமரும் முதல் இருக்கையில் முழு எடையையும் உந்தி சோர்ந்து அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலையை அண்ணார்ந்து பார்த்தேன். நிக்ஸனைப் போல தூய அப்பழுக்கற்ற முகம் என முதல் எண்ணம் வந்து தொட்டது. மெல்ல புன்னகை வந்துபோது சோகங்கள் என நான் நினைத்திருப்பவைப் புதைக்குழிக்குள் புகுந்தன. என் பாதை, என் வாழ்க்கை என நான் ஒன்றை நினைத்து ஒரு திசையில் சென்று கொண்டிருந்தபோது கிடைத்த முதல் அடியிது. நான் கணக்கிடுவதெல்லாம் அப்படியே நடக்காது என வாழ்க்கை என்னை நோக்கி ஏளனமாகப் புன்னகைத்துக் கொண்டிருக்கும் தருணத்தை முதல் முறையாகச் சந்திக்கிறேன். இதுவரை நான் தேர்வு செய்த எந்த ஒன்றையும் நிகழ்த்திக்காட்டாமல் இருந்ததில்லை. இளமை மிகப் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. அங்கிருந்து எத்தனை பெரியவர்களும் என்னை நோக்கி முடியாது என்று சொன்னதை எதிர்த்து என்னால் என் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. அம்மா அப்பாவுடன் எத்தனை வாக்குவாதங்களுக்குப் பின்னர் அமெரிக்கா வந்தேன் என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன்.

பின்னால் திரும்பி பாவமன்னிப்பு அளிப்பதற்காக ஃபாதர் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். மாலைச் சூரியன் ஃபாதர் அமர்ந்திருந்த நாற்காலியின் முன் நீண்ட கதிரைப் பரப்பியிருந்தது. ஃபாதரின் கைகள் பத்து மணிகள் கொண்ட ரோசரி கொத்துக்களை உருட்டியிருந்தது மட்டும் வெளித்தெரிந்தது. இன்று ஏனோ கறுப்பாடை அணிந்திருந்தார். எப்போதும் என்னை அச்சுறுத்தும் உடையது. ஆனால் இன்று அந்த அச்சுறுத்தல் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. ஃபாதரிடம் எல்லாவற்றையும் சொல்லி ஆறுதல் பெறலாம் என்ற எண்ணம் வந்து சேர்ந்தது. யாரிடமும் சொல்ல முடியாததை முகம் காண்பிக்காமல் சொல்ல இயலும் என்பதே தைரியத்தை வரவழைத்தது.

பாவமன்னிப்பு பெற்ற கடைசி ஆளும் சென்ற பிறகு ஃபாதர் அமர்ந்திருந்த நாற்காலியின் பக்கவாட்டில் சென்று மண்டியிட்டேன். என் முகம் தெரிய வாய்ப்பில்லாத பக்கவாட்டுச்சாளரங்களைச் சற்றுப் பார்த்தேன். மனிதர்களின் மூச்சுக் காற்றுபட்டுத் தேய்ந்த இடம் தவிர சுற்றியுள்ள இடங்களில் பளபளப்பு இன்னும் இருந்தது. என்னை மீட்டு எடுத்து தயக்கமான குரலில் “பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் ஆமென்” என்றேன்.

“பாவமன்னிப்பிற்கான ஜெபத்தைச் சொல்லுங்கள்” என ஃபாதர் சொன்னபோது சற்றே பயமாகிப் போனது. நான் ரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்தவளல்ல. எப்படி இதைச் சொல்வது என திணறிக் கொண்டிருக்கையில், ஃபாதர், “உனக்கு வலப்பக்கம் பாவமன்னிப்பு வழிமுறைக்கான புத்தகம் உள்ளது. அதிலிருக்கும் முறையைக் கடைப்பிடி” என்றார்.

நான் அதைக் கையில் எடுத்துப் பிரித்து, “ஃபாதர் நான் பாவியாய் இருக்கிறேன். நான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துகிறேன். நான் இந்த அருட்சாதனத்தைப் பெற்று வருடங்களாகின்றன” என திக்கித்திக்கி வாசித்தேன்.

”உன்னுடைய பாவங்களை அறிக்கையிடு மகளே,” என மெல்ல எனக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார். நான் சற்றுத் தடுமாறுவதைக் அவதானித்து, “இயல்பாக என்ன என்னிடம் சொல்ல வேண்டுமோ, எது உன் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறதோ அதை தடையேதுமில்லாமல் சொல்லலாம்” எனக் கனிவான குரலில் சொன்னார். எனக்கு அந்தக் கனிந்த குரலின் மேல் ஒரு நெருக்கம் வந்தது. அது என்னை மேலும் இலகுவாக்கி மனதிலுள்ளதைச் சொல்ல வைத்தது.

”ஃபாதர் மனம் சஞ்சலமாயிருக்கிறது. இங்கு வந்து நிக்ஸனை சந்தித்ததிலிருந்தே அமெரிக்கா வேறொன்றாக மாறியிருந்தது எனக்கு. ஒவ்வொரு காலையும் அவனைச் சந்திக்கவே விடிந்தது போல உற்சாகமாக எழுந்தேன். முந்தய இரவே என்ன உடை உடுத்தலாம், எந்த ரிப்பன் கட்டிக் கொள்ளலாம் எனக் கற்பனையில் தூங்கினேன். ஜெபம் செய்வது, புத்தகம் வாசிப்பது என அனைத்தையும் மறந்திருந்தேன். மனம் துள்ளிக் கொண்டே இருந்தது. காலை எழுந்து கிளம்பி அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எங்கிருந்தோ “சோஃபியா…“ என அவன் அழைக்கும்போது மனம் திடுக்கிட்டுத் துள்ளும்.” என மூச்சுவிடாமல் சொன்னேன்.

சற்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன். “ஃபாதர்… வசந்த காலத்தின் ஆரம்ப நாட்கள் அவை. யாவும் உருகிக் கொண்டிருந்தது. நானும் கூட உருகிக் கொண்டிருந்தேன். தூயக் காதல் என்று நினைத்தேன். ஒவ்வொரு நாளும் அவன் ஒரு படி அழகாகிக் கொண்டே போவது போல இருந்தான் என் கண்களுக்கு. ஒரு முறை நடந்து வந்து கொண்டிருக்கும்போது தெரியாமல் என் பெட்டிகோட்டில் உரசிவிட்டான். அந்த நாள் முழுவதும் அவன் உரசிய இடத்தைத் தொட்டுக் கொண்டிருந்தேன். நிக்ஸன் என்னைவிட உயரமானவன் ஃபாதர். ஒரு வேளை அணைத்துக் கொண்டானென்றால் அவன் இதயத் துடிப்பை நான் கேட்கலாம் என்பதை ஒவ்வொரு நாளும் கற்பனை செய்தேன். அவன் கண்கள் பச்சை நிறத்தவை. பெண்களைப் போலவே கண் இமைகள் அவனுக்கு அடர்த்தியாக இருக்கும். எனக்குக்கூட அத்தனை அடர்த்தியில்லை. அவன் கண்கள் என்னைப் பார்க்கும்போது அது என்னுள் நுழைந்து என் அடிவயிற்றின் மையப்பகுதியில் கூச்சமடைந்து மயங்கிய நிலையில் அவனைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அவன் உதடுகள் வெடித்து வெளிவந்து விடும் செர்ரி போல இளஞ்சிவப்பானவை. எத்தனை இரவுகளில் அவற்றை முத்தமிட எண்ணி அருகில் சென்று தோற்றிருக்கிறேன் தெரியுமா. அவனின் நீளமான கைகள், எப்போதும் கச்சிதமாக வெட்டப்பட்ட நகங்கள், அவன் சைக்கிள் பெல்லை அழுத்தும்போது வில் போல வளையும் கட்டைவிரல் எனச் சந்தடிகளில் எல்லாம் அவனை அணுவணுவாக நான் ரசித்தததுண்டு.”

ஃபாதர் குறுக்கிட்டு “இவையெல்லாம் பாவங்கள் இல்லையே. இவை அதற்குரிய பருவம் தான். நீ மகிழ்ந்திரு. இவ்விளையாட்டுகளையெல்லாம் ஆண்டவர் புன்சிரிப்புடன் தான் பார்த்துக் கொண்டிருப்பார். இதில் நீ வருந்துவதற்கு ஒன்றுமில்லை” எனச் சிரித்தார். ”நிக்ஸனை அப்படி நினைத்ததைத் தவிர பாவம் என நீ கருதுவது ஏதுமுண்டா” எனத் தொடர்ந்து கேட்டார்.

“ஃபாதர்… சோனியா வந்த பிறகு அவன் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அவர்கள் இருவரும் மெல்ல இயல்பாக நெருங்கி அன்பு கொள்வதைக் கண்டு மனம் முழுவதும் பொறாமை கொள்ளத் தொடங்கினேன். என்னால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. ஒரு மாதமாக ஒவ்வொரு நாளும் அவன் எனதில்லை என்பதை நினைக்கவே முடியவில்லை” என அழ ஆரம்பித்தேன்.

ஃபாதர், “உலகத்தில் உனக்கான ஆதாம் வருவதற்காகக் கடவுள் உன்னைக் காக்கலாம். நீ பொறுத்திருக்க வேண்டும்.” எனப் புன்னகைத்துக் கொண்டே சொல்வதை என்னால் உணர முடிந்தது. அவர் இதையெல்லாம் அத்தனை பிரயத்தனமாகக் கேட்காதது எனக்கு வருத்தமாக இருந்தது.

“ஃபாதர்… அவனைத் தவிர, அவன் நினைவுகளைத் தவிர என்னால் இன்னொருவனைக் கை கொள்ளவே முடியாது. நான்… ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஃபாதர் சற்று கறார் தன்மையுடன், “நிக்ஸனைத் தவிர உன் மனதை ஆட்கொண்டிருக்கும் பிரச்சனை என ஏதும் உள்ளதா? இங்கு வரக் கூடியவர்களின் பாவ மன்றாட்டுகளையெல்லாம் கேட்கும் எனக்கு இந்தப் பாவத்தின் இடம் என்ன என்பது தெரியும். இயல்பாகவே காலம் ஆற்றக்கூடிய சிறிய விஷயங்களில் மூழ்கியிருக்கிறாய். பெரிய விஷயங்கள் என உன் வாழ்வில் என்ன உள்ளது என்பதை நீ மனதை அப்பட்டமாகத் திறந்து ஆராய்ந்து கண்டடைய வேண்டும்.” என்றார்.

பெரிய விஷயங்கள் என அவர் சொன்னது எனக்குச் சற்றுத் திடுக்கிடலைத் தந்தது. எது சிறிய விஷயம் எது பெரிய விஷயம் என்று தெரியவில்லை.

“எனக்கு அவனன்றி பெரிய விஷயம் என ஒன்று இல்லை” என்றேன். அதற்குப் பின்னர் வெளிபட்ட என் அழுகையின் அழுத்தத்தை ஃபாதர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“இல்லை. நீ வேறேதோ சொல்ல நினைக்கிறாய்.” என்றார்.

அதை அவர்தான் சொன்னாரா அல்லது எனக்குள் நான் சொல்லிக் கொண்டேனா என ஒரு நிமிடம் குழப்பம் வந்தது. சாளரங்களுக்கு இடையில் கறுப்பு உடை ஒளிர்கொள்வதாய் தோன்றியது.

“எளிமையானதைக் காலத்தால் கரையக்கூடியதை மனம் பூதாகரமாக்கி பாவனை செய்வதெல்லாம் என்றுமே அழியாத வடுவொன்றின் மீது ஒப்பனை செய்துகொள்ள அல்லவா?”   

“அப்படி இல்லை ஃபாதர்… நிக்ஸன்… அவன்” நான் உளறுவது எனக்கே நம்பிக்கையின்மையைக் கொடுத்தது.

“அவசரமில்லை. உனக்கு நேரமுண்டு. அவனையே ஆழமாக நினைத்துக் கொள். அவன் வழியாக ஊடுறுவியே உனக்குள் ஒழித்து வைத்ததைக் காண முடியும்”

ஃபதர் உருவாக்கிய மௌனம் முதலில் எனக்குக் கொடுமையாக இருந்தது. ஆனால், அது நிக்ஸனின் பச்சை விழிகள் கொண்ட பெண்களின் கண்களை நினைவுறுத்தியது. இமைகள் அடர்ந்த கண்கள். கொஞ்ச நேரத்தில் அது  சிறுவனின் கண்கள் எனப் புரிந்து கொண்டேன். அவ்வெண்ணம் மின்னல் வெட்டாக குறுக்கிட்ட தருணம் எனக்கு வியர்த்தது. விரல்கள் நடுங்கின.

“ஃபாதர் வேறொன்றும் உள்ளது” என்றேன் தயங்கியபடி.

“சொல் மகளே. எதுவாகிலும் சொல். தயங்க வேண்டாம். இறைவனால் மன்னிக்கவியலாத பாவம் என ஒன்று இவ்வுலகில் இல்லை” என்றார்.

நான் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ஃபாதர்… ஒரு மாதத்திற்கு முன்னர் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என இந்தியாவிலிருந்து கடிதம் வந்தது.  தந்தை அங்கே மதப்பிரச்சாரம் செய்பவராகவும் மருத்துவ உதவிகள் செய்பவராகவும் வேலூரில் மிஷினரி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் ரோமன் கத்தோலிக்கர்கள் இல்லை. மன்னித்துவிடுங்கள் ஃபாதர் இந்தப் பாவமன்னிப்பு அருட்சாதனம் நான் செய்யக்கூடாது இருந்தும் செய்கிறேன். மன்னித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு அமைதியானேன்.

”ம்… திருச்சபையின் பெயரால் உனக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. மேலே நீ சொல்” என்றார்.

இன்னும் நம்பிக்கை வந்தது. உற்சாகமாக, ”ஃபாதர் என்னையும் அங்கே வரச்சொல்லி அழைத்த அப்பாவின் கடிதமது. அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு நிக்ஸன் பற்றிய கனவுலகத்தில் இங்கே மிதந்து கொண்டிருந்தேன். ஒரு வாரத்திற்கு முன்னர் வரை கூட இந்த என் செயல்பாடுகள் என்னை மகிழ்வித்துக் கொண்டு தான் இருந்தன. ஆனால், சோனியா வந்த பிறகு அவன் மிகவும் மாறிவிட்டான் ஃபாதர்” என்று சொல்லி முடிக்கும் போது என் குரல் உடைந்தது.

“நீ மிஷினரிப் பணிகள் செய்ய வேண்டும் எனச் சொல்ல மாட்டேன். இந்தச் சுழல் எண்ணங்களிலிருந்து தப்பிப்பதற்கேனும் நீ இந்தியா செல்லலாம். இல்லையேல் இது உன்னை பித்தாக்கிவிடும். சமயத்தில் உயிரையும் கேட்கும் சாத்தான் இது. இளமையைக் கோரமாகத் தாக்கும் மெல்லுணர்வுகள்” என்றார்.

நான் நம்பிக்கையுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “அந்த அழுக்கு நிறைந்த இந்தியாவிலுள்ள ராணிப்பேட்டைக்கு நான் செல்ல விரும்பவில்லை ஃபாதர். அழுக்கான மக்கள், அழுக்கான இடம், அழுகைக் குரல்கள், எப்போதும் யாசகம் கேட்கும் பார்வை எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால் அவை என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. கனவுகளிலும்கூட அந்த முகங்கள் என்னை விடுவதில்லை. நான் இங்கே அமெரிக்காவில் நிக்ஸனைத் திருமணம் செய்து கொண்டு அவனைப் போலவே ஓர் ஆண் குழந்தைக்குத் தாயாகி நீண்ட வாழ்க்கை வாழ்ந்து சாகும் கனவில் இந்த ஒரு வருடக் காலமாக இருந்தேன்.” என்றேன்.

”இந்த நிகழ்வுகளிலெல்லாம் பாவம் என நீ கருதுவது எதை” எனச் சற்றுக் குரலில் கடுமையோடு ஃபாதர் கேட்டது போல இருந்தது. நானும் ’எதை’ என யோசித்துப் பார்ப்பது போல் பாவனை செய்தாலும் என் அக ஆழம் அதை அறிந்திருந்தது. சொல்லிவிடலாம் என ஒன்று முட்டி நின்றது.

“ஃபாதர்… இரண்டு வருடத்திற்கு முன் ராணிப்பேட்டையில் இருக்கும்போது ஓர் நடுநிசியில் பதட்டமாகக் கதவைத் தட்டியபடி ஒரு குரல் என்னை அழைத்தது. கிறுஸ்துமஸ் மாதமாதலால் அம்மாவும் அப்பாவும் அவர்களின் நண்பர்கள் வீட்டுக்கு விருந்திற்குச் சென்றிருந்தனர். நான் கதவைத் திறந்து வெளியே பார்த்தபோது ஒரு ஆள் மேல்ச்சட்டை ஏதும் போடாமல் எலும்பு துருத்தித் தெரியும் மார்பைக் கொண்டவனாக கைகளைக் கூப்பியவாறு நின்று அழுது கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனுடைய சிறு வயது மகன் அழுது காய்ந்து வற்றிய கண்களோடு நின்றிருந்தான். அவர்கள் தமிழ் மொழியில் ஏதோ என்னை நோக்கி மன்றாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இரைஞ்சுவது எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அவர்கள் எதை வேண்டினாலும் அதை செய்ய முடியாத அளவு வயதும் படிப்பும் என்னைத் தடுத்தது.

“அது மட்டும்தானா?” அது ஃபாதரின் குரல் போல இல்லை. நான் தூய வடிவாக நின்ற ஆண்டவரை ஒரு தரம் பார்த்தேன்.

“அதற்கும் மேலாக இவைகளிலெல்லாம் எனக்கு ஈடுபாடும் இல்லை. அவர் அழுது கொண்டிருக்கும்போதே ஓடிச் சென்று நான் கதவைத் தாளிட்டுக் கொண்டேன். அப்படிச் செய்வதற்கு முன் என்னையே வெறித்திருந்த அந்தச் சிறுவனின் கண்களைப் பார்த்துவிட்டேன். அவனின் திகைப்பு என் மனதில் பதிந்துவிட்டது ஃபாதர்.”

“திகைப்பா?”

“திகைப்புதான் ஃபாதர். அந்தக் கண்களில் அச்சமில்லை. ஏமாற்றம் இல்லை. திகைப்பு மட்டும் இருந்தது. இவ்வளவுதானா நீ என்பதுபோல… இருவருடமாகத் துரத்திக் கொண்டிருக்கும் அந்தக் கண்களும் அழுகைக் குரல்களும் என்னை அவ்வபோது குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகின்றன. அங்கிருந்து அகன்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் என் வாழ்க்கையில் நடக்கும் எல்லா மோசமான தருணங்களின் போதும் அந்தக் கண்களும் அந்த முகமும் என் முன் வந்து நிற்கின்றன. அது மேலும் என் துக்கத்தை அதிகரிக்கின்றது. நிக்ஸனின் இந்த மாறுதல்களுப்பின் கூட என்னைத் துரத்துவது அந்தக்கண்களும் முகமும் தான். அவன் கண்கள் அந்தச் சிறுவனுடையவை. அவ்வளவுதான் நான் எனச் சொல்லும் கண்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை ஃபாதர்” எனக் காணாமல் போன ஆட்டுக் குட்டியின் நிராதரவான நிலையைப் போன்ற குரலில் கூறினேன். நான் மண்டியிட்டிருந்த சாளரத்தின் மேல் நெற்றியை மட்டும் முட்டியவாறு அழுதேன்.

“மகளே. முதலில் அழுகையை நிறுத்து” என்றார் ஃபாதர். கீழே குனிந்து பெட்டிக்கோட்டின் நுனியை கையில் ஏந்தி கண்களையும் மூக்கையும் துடைத்தேன்.

“அவ்வளவு தானா. சொல்லி முடித்துவிட்டாய் தானே”

”ஆமாம் ஃபாதர்”

“அப்படியானால் ஜெபத்தைச் சொல்” என அவர் சொன்னதும் ஏமாற்றமான தோரணையோடு புத்தகத்தைப் பிரித்து, “இந்தப் பாவங்களுக்காகவும் மறந்துபோன எல்லா பாவங்களுக்காகவும் என் கடந்த கால வாழ்க்கையில் செய்த அனைத்துப் பாவங்களுக்காகவும் மனம் வருந்துகிறேன். எனக்குப் பாவமன்னிப்பு அளித்தருளும்.” என்றேன்.

”இரக்கம் நிறைந்த தந்தையாகிய இறைவன், தம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிய இறைவன், பாவமன்னிப்புக்காகத் தூய ஆவியைப் பொழிந்தருளிய இறைவன், திருச்சபையின் திருப்பணி வழியாக உமக்கு மன்னிப்பும் சமாதானமும் அருள்வாராக. நானும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் உன் பாவங்களிலிருந்து உன்னை விடுவிக்கிறேன். சமாதானத்துடன் செல்.” என ஃபாதர் கூறினார். ஒவ்வொரு வரியும் மிக ஆழமாக என்னுள் இறங்கிக் கொண்டிருந்தது. அது உள்ளிருந்த மொத்த அழுகையையும் மெல்ல வெளித்தள்ளிக் கொண்டிருந்தது.

“நன்றி ஃபாதர்” எனச் சொன்னபோது, “நான் பொறுத்தல் ஆசிக்கான ஜெபத்தைச் சொல்லும்போது நீ வாய்விட்டு மனத்துயர் ஜெபத்தை மனம் உணர்ந்து சொல்” என்றார். ஃபாதர் முனங்கியவாறு ஜெபத்தை ஆரம்பித்தார். அந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் எழுந்து வருவது போல அப்போது உணர்ந்தேன். மெல்ல அழுகையை அடக்கிக் கொண்டு ”என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உன்னை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனந்திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என் மேல் இரக்கமாயிரும்.” எனச் சொல்லி முடித்தபோது சற்று என் மனதின் அலை அடங்கியிருந்தது.

ஃபாதர், “மகளே எழுந்து சென்று பலிபீடத்தின் முன் மண்டியிட்டு ’ஏசுவே என் நல்லாயனே என் பாதையைக் காணியும்’ என ஏழு முறை சொல். அப்போதும் உன் மனத்தின் பாரம் குறையவில்லையெனில் எழுபது முறை சொல். உன் மனதின் ஆழத்தைக் கவனி. அது உனக்கான வழியைக் காண்பிக்கும். அதை சிக்கென பற்றிக்கொள்” என்றார். நான் தலையை ஆட்டியபடி “ஆமென்” என்றேன். அவர் எழுந்து செல்லும் வரை அங்கேயே மண்டியிட்டு அமர்ந்திருந்தேன். அந்தியின் இருளுக்குள் அவரின் கறுப்பு அங்கி சென்று கலக்கும் வரை அவர் சென்ற பாதையையே வெறித்திருந்தேன்.

பின் எழுந்து சென்று பலிபீடத்தின் முன் மண்டியிட்டு கைகளை நெஞ்சில் குவித்துக் கொண்டேன். பலிபீடத்தின் இருபுறமும் மெலுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தது. பலிபீடத்திற்கு மேல் உள்ள உத்தரத்தைத் தவிர வேறு எங்கும் விளக்குகள் எரியவில்லை. நடுவில் அப்பங்களை வைக்கும் பேழையில் ஏசுவின் திரு இருதயம் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தது. அதன் அருகில் நான்கு காவல் சம்மனசுகளின் சிலைகள். அதற்கு மேல் சற்று நிமிர்ந்து பார்த்தால் சிலுவையில் அறையப்பட்ட ஏசு. அதற்கும் மேல் தந்தையானவர் கைகளை விரித்தபடி அவரை வானிலிருந்து அழைக்கும் புடைப்புச் செதுக்கல்கள். நான் மீண்டும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலையைக் கண்களால் தொட்டுப் பார்வையை நிறுத்திக் கொண்டேன். சோகம் தோய்ந்த முகம், ரத்தக் கரைகள், எலும்பு துருத்திய மார்புகள். என்னுள் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. வலிந்து அழ வேண்டும் போல் முக்கி முனங்கினேன். பீடத்தின் முன் மண்டியிட்டு இவ்வாறு அழுவது என்னை நல்ல பிள்ளை போல் காட்டும் என்பது குறித்த எண்ணம் வந்து முட்டித் தெறித்து விலகி ஓடுவதைப் பார்த்திருந்தேன். கோவிலில் யாருமில்லை என்ற எண்ணம் என்னை இயல்பாக்கியது.

ஃபாதர் சொன்னபடி, ”ஏசுவே என் நல்லாயனே என் பாதையைக் காணியும்” எனச் சொல்லிக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் அந்த வரிகள் என்னுள் எதிரொலித்துத் தெறித்து அழுகையையும் கேவலையும் வர வைத்தது.

தலையை வலப்பக்கம் சாய்த்து ஏசுவை ஏறிட்டு நோக்கி “எனக்கு மட்டும் நான் விரும்பியது ஏன் கிடைப்பதில்லை” எனக் கேட்டேன். அவர் முகம் மேலும் சோகமாவது போல இருந்தது. சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் அந்தத் தருணத்தை நினைத்துக் கொண்டேன். உடல் சிலிர்த்துக் கொண்டது. அவருக்கே கூட அவர் நினைத்திருந்தபடி எல்லாமும் நடந்திருக்குமா என்று நினைக்கும் போது அவர் மேல் பரிதாபம் வந்தது. அவர் பாவம் என்று தோன்றியது. எழுந்து சென்று அவரை மடியில் கிடத்தி அந்த ரத்தத்தையெல்லாம் ஒற்றி எடுக்க வேண்டும் போல இருந்தது. அவர் யாரையாவது என்னைப் போல காதலித்திருப்பாரா, கைவிடப்பட்டிருப்பாரா என்றெல்லாம் கூட யோசித்தேன். இளமையில் யாரும் அன்பு செய்யப்படாமல் தனித்தலைவதன் சுமையை வெறுமையை அறிந்திருப்பாரா என்றவாறு அவர் முகத்தை மேலும் கூர்மையாகப் பார்த்தேன். சுற்றியிருந்த இடமெல்லாம் மங்களாகிவிட ஏசுவின் முகம் மேலும் கூர்மையாகத் தெரிந்தது. ஒருவேளை நான் அழுதிருப்பதால் இருக்கலாம் எனக் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அவரைப் பார்த்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சுற்றிலும் மங்களாகிவிட ஏசுவின் முகம் மட்டும் தீர்க்கமாகத் தெரிந்தது. அம்முகம் அப்படியே கறுப்பாக மாறியது போல இருந்தது. எங்கோ பார்த்த முகமது. எவருடைய சோகமான முகமோ அது. எப்போதோ என் முன் இறைஞ்சி நின்ற முகம். பின் மண்டையில் எங்கோ விர்ரென மின்சாரம் பாய்ந்து வந்து நெற்றிப் பொட்டில் தெறித்தது போன்ற உணர்வு. அது அந்தச் சிறுவனின் முகம்.

”ஒரு மானுடனுக்கு மட்டும் அளித்து நிறைவடைந்துவிட முடியாத அன்பை அல்லவா எனக்கருளியிருக்கிறாய்.” எனப் பிரக்ஞையற்ற ஆழ்மனம் ஒன்று உள்ளே சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த ஒன்றை உணர்ந்தவள் போல “ஏசுவே” என வீரிட்டு அழுது மண்டியிட்டபடியே முகம் குப்புற விழுந்தேன்.

*

(வேலூரின் முகமாக இன்று விளங்கும் சி.எம்.ஸி மருத்துவக்குழுமத்தின் நிறுவனரும், ஸ்கடர் கல்வி சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பியவருமான அத்தை ஐடா சோஃபியா ஸ்கடருக்கு…)

1 comment for “அழைப்பு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...