டோலிசாமி

மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் டோலி தூக்கும் தொழிலாளிகளால் மன்னரைப் போலவே மதிக்கப்பட்டார் ராமசாமி. பெயரே ராமசாமியாக அமைந்ததால் இன்னொரு சாமியை இணைத்து ‘ராமசாமி சாமி’ எனக் கூப்பிட சாமிகளின் வாய்க்கு அவ்வளவு பொறுமை இல்லை. தனியாகப் பட்டப் பெயரையும் அவருக்குச் சூட்டுவதில் எந்தச் சாமியும் மும்முறமாக இதுவரை முயன்றதில்லை. மூக்கு நீளமாக இருந்ததால் ஒருவருக்கு ‘மூக்கு சாமி’ என்ற சினைப்பெயர். கூலிமிலிருந்து வந்தவருக்கு ‘கூலிம் சாமி’ என்ற இடப்பெயர். ராமசாமிக்கு இன்னும் எந்தத் துணைப்பெயரும் வைக்கப்படவில்லை. ஆனால் அவருக்குத் தனக்கு உருவாகப்போகும் புனைப்பெயர் குறித்த அச்சம் இருந்தது.

ராமசாமி ஐய்யப்பனுக்கு விரதம் இருந்து மாலை போட்டதெல்லாம்கூட அலுவலகத்தில் அவருக்கு இருக்கும் இழிப்பெயரை நீக்கதான். முதலில் மறைமுகமாகப் பேசியவர்கள் இப்போது அவர் இருக்கும்போதே ‘புள்ள குட்டிக்காரன்’ எனக் கிண்டலாகப் பேசுகின்றனர். இந்த யாத்திரை முற்றுப் பெற்றதும் தனக்கிருக்கும் குறைப் பெயர் மாறிவிடுமென்று அவருக்குள் நம்பிக்கை இருந்தது.

டோலியின் மீது ராமசாமியின் குறைத் தீர்க்கும் மலைப் பயணம் பெரியானை வட்டத்திலிருந்து தொடங்கியது.

“டோலி… டோலி… டோலி….! எப்பா… சாமி, டோலி வருதுல்லே…?”

சாலையில் டோலி வருவதை கவனிக்காமல் மரத்தின் கிளையில் ஒரு கையில் தொங்கிக் கொண்டிருக்கும் குரங்கொன்றைப் பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தார் சாமி ஒருத்தர். டோலி வாகனத்தின் தலைவன் போட்ட சத்தத்தில் பயந்து ஒதுங்கி வழிவிட்டார். அந்தச்  சாமியின் மண்டையோடு டோலி தொழிலாளர் தலைவனின் மண்டை மோதியிருந்தால் ராமசாமி கீழே விழுந்திருக்கக் கூடும். அவ்வாறு நடக்காமல் டோலிக்காரர்கள் தங்கள் டோலியை நம்பி ஏறியவர்களைக் கவனமாகப் பாதுகாப்புடன் சுமந்து சென்றார்கள்.

கூட்டு முயற்சி, கூட்டு உழைப்பு, கூட்டு உடற்பயிற்சியெனக் குழுப்பணியைக் கற்றுக் கொள்ள ராமசாமி வேலை செய்யும் நிறுவனம் பிரபல நட்சத்திர நிபுணரை அழைத்து, விருந்து வைத்து பயிற்சி அளிக்கும். குழுவாகச் சேர்ந்து தூங்க வைக்கவே அந்தக் குழுப்பணிப் பயிற்சி இதுவரை வெற்றி அடைந்துள்ளது. இந்த டோலி தொழிலாளர்களைப் பார்த்தாலே குழுப்பணியில் பயிற்சி பெற்று விடுவோம். தனக்குக் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், தன் கீழே பயிற்சி பெற வரும் தொழிலாளர்களுக்கும் ‘டீம் வொர்க்’ குறித்து பயிற்சி அளிக்கும் போது இந்த டோலி தொழிலாளர்களை உதாரணத்திற்குக் காட்ட வேண்டும் என எண்ணிக் கொண்டார்.

“குண்டு சாமி கொஞ்சம் வேகமா நடக்குறது…”

குரல் கேட்டுக் கீழே பார்த்தார். ஒரு தமிழகச் சாமி குழு அனாதையாக நடந்து சென்ற மலேசியாவின் குண்டு சாமி ஒருவரைக் கிண்டலாகப் பேசிக் கடந்தது. அதை கிண்டல் எனச் சொல்ல முடியவில்லை. ஆனால் பட்டப்பெயர் வைப்பது சில சமயம் கிண்டல் போல தோன்றியது. ஒருவன் தன்னிடமிருக்கும் எது ஒன்றை வேண்டாம் என விலக்கி வைக்கிறானோ அதை பொறுக்கி எடுத்து புனைவதுதான் பட்டப்பெயராகி நிலைத்தது.

“பட்டப் பேர் வைச்சி சொன்னாதானே சீக்கிரமா மனசுல பதியுது!” என்று முதன் முதலாக மாலை போட வரும் கன்னி சாமிகளிடம் குருசாமி சொல்லி சிரிப்பார்.

நல்ல பெயரை முகத்துக்கு முன்னாலும், கெட்ட பெயரை முதுகுக்குப் பின்னாலும் குறிப்பிட்டுச் சக சாமிகள் கேலி பேசிக் கொள்வதை ராமசாமி பல முறை கேட்டிருக்கிறார். தனக்குக் குழந்தையில்லாதக் குறையை முதுகுக்குப் பின்னால் இந்தச் சாமிகள் யாரேனும் சொல்லியிருப்பார்களா எனச் சந்தேகம் எழுந்தது. அவருக்கு நெருக்கமான வட்டத்தில் உள்ள சில சாமிகளுக்கு மட்டுமே தான் மலையேறிவரும் காரணம் தெரியும். ஆனாலும் இங்கு எதுவும் ரகசியமாகவே பரவிவிடுமென நினைத்துக் கொண்டார்.

அப்படி ஒரு ரகசியக் குரல்தான் ஒருமுறை அவர் மனைவியின் காதுகளுக்குக் கேட்டிருந்தது.

மலடி என்று சொல்லிக்  காட்டப்பட்ட அந்த வார்த்தை  ஹெட்ஃபோன் போட்டு கேட்ட மாதிரியே அவளுக்கு ஒலித்திருந்தது.  அதனால் தான் “இனிமே  நலங்கு, வளைகாப்புன்னு எந்த மயிரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் போக மாட்டேன்” என்று அழுகையோடு அவர் முன்பாக உறுதி மொழி எடுத்துக் கொண்டாள்.

ஆரம்பத்தில் ராமசாமியும் அவரது  மனைவி எழிலரசியும் குறைப்பெயருக்கு யார் காரணமாக இருக்க வேண்டும் என்பதில் சுயநலப் போக்கைக் கடைப்பிடித்தனர். தனக்குக் குழந்தை பேறு இல்லாவிட்டாலும் பரவாவில்லை. குறைப்பெயர் தனதாகயிருக்கக் கூடாதென இருவரும் அவரவர்களுக்குள் பதற்றம் கொண்டார்கள். பின்னர் ஒருவாராக மருத்துவரைச் சந்தித்து உறுதி செய்துக்கொள்வதென முடிவானது.

மூன்று நாள் விந்தை வெளியேற்றாமல் சோதனைக்குக் கொடுக்கச் சொன்னார் மருத்துவர். மருத்துவமனையில் எல்லா வசதியும் இருப்பதாகச் சொன்ன மருத்துவர் விந்தை வீட்டிலிருந்து கொண்டு வரக்கூடாது என்றார். அடக்கப்பட்ட அந்த மூன்று நாள் பதற்றமே விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து விடுமோ எனப் பயந்தார் ராமசாமி.

இந்த மருந்தை உட்கொள்ளும் போது குரங்கை நினக்கக் கூடாதென்று சொன்னதால், ஒருவன் கண்ணுக்குக் குரங்குகளைத் தவிர வேறு எதுவும் தெரியாமல் போனக் கதைதான் ராமசாமிக்கு.

மூன்று நாளுக்குள்ளேயே வந்த ஒரு கவர்ச்சிக் கனவினால் உறக்கத்தில் விந்து வெளியானது, பின்னர் திகதிகள் தள்ளிப்போடப்பட்டது. மற்ற நாட்களில் இயல்பாக இருப்பவருக்குத் திகதியை மனதில் பதித்துக் கொண்டால் மட்டும் விந்து இரவுகளில் இயற்கையாக வெளியேறியது. கனவு காணாமல் இருக்கத் தூக்கத்தைக் கட்டுப்படுத்திப் பார்த்தார். விந்து வெளியேறாமல் இருக்க ஆயுர்வேத மருந்துகளைச் சாப்பிட்டுப் பார்த்தார். கடைசியாக விரைப்பையில் எண்ணெய் பூசிக் கொண்டால் விந்து வெளியேறாது என ஒரு நாட்டு மருந்து விற்கும் கிழவன் சொல்ல அதுவே சாத்தியமானது.  எல்லாம் உடன்பட்ட ஒரு நாளில் மருத்துவமனையில், அதற்காக ஒதுக்கப்பட்ட பிரத்யேகமான அறையில் விரைப்பு ஏற்படாமல் போனது. செயற்கை முறையில் வெளியேற்ற தூண்டுதலே வராமல் தவித்தார். வெளியில் கேட்கும் சின்னச் சின்ன மருத்துவமனை சத்தங்களெல்லாம் அவரைத் திடுக்கிடச் செய்தன. கைப்பேசியில் ஏதேதோ நீலப் படங்களைத் தேடிப் பார்த்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி வெற்றிகரமாக வெளியே வந்தபோது தங்கள் முறைக்காகக் காத்திருந்த இளைஞர்கள் சிலர் அவரை உர்ரெனப் பார்த்தனர்.  “மொறைக்காதிங்கடா! உள்ளப் போனா ஒங்களுக்கும் தான் கிழியப் போது…” என்று மனதில் ஆறுதல் அடைந்தார். 

தன் மனைவிக்கு நடந்த சோதனையைத்தான் அவரால் தாங்கிகொள்ள முடியவில்லை. கற்பப்பை பாதைகளில் அடைப்பு உள்ளதா என நடந்த சோதனையில் அவள் கதறிய கதறலில் இவர் வெளியே அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அனைத்துமே அவளுக்குச் சரியாக உள்ளது என்பதை நிரூபிக்க அவள் சில வினாடிகள் நரகத்துக்குச் சென்று வர வேண்டியிருந்தது. பிரசவ வலியைவிட, இந்தக் கற்பப்பைச் சோதனையின் வலி பெரியது என்பதை அன்றுதான் அவர் உணர்ந்தார்.

தனக்கிருக்கும் ஓரளவு வசதியால், எத்தனை வி.ஐ.பி மருத்துவர்களைப் பார்த்தாலும் இருவருக்கும்  எந்தக் குறையும் இல்லை என்றே சொன்னார்கள். தொடர்ந்து மாற்று வகை சிகிச்சையைப் பற்றி மருத்துவர் பரிந்துரைத்த போது, ராமசாமி சற்றே பின் வாங்கினார்.

அதிகாலையிலேயே உறவில் ஈடுபடுவது, ஊக்க மாத்திரைகளைப் போட்டுக்கொள்வது, சில வாரங்கள் வெளிநாட்டிலேயே தங்கிவிட்டு வருவது எனப் பல டிப்ஸுகளை டிப்ஸ் வாங்கிக் கொண்டே மருத்துவர்கள் கொடுத்தது அவரின் உள் மனதில் ஒளிந்துக் கொண்டிருந்தக் கோபத்தையே கிளப்பி விட்டது.

இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தவிர வேறு எந்த இயற்கையான சுகத்தையும் அவர்களுக்குக் கொடுத்ததில்லை. இருவருக்குமே எந்தக் குறையும் இல்லை என்று மருத்துவர் சொன்னப் பிறகு இல்லாத இச்சைகளைச் செயற்கையாக வரவழைத்துக்கொள்ள முயன்றார்கள். அதற்காகவே காம சூத்திரம் தொடர்பான திரைப்படங்கள், மற்றும்  புத்தகங்களின் உதவியை நாடினார்கள்.  இந்த முறையாவது ஒட்டியிருக்குமா என்ற எதிர்பார்ப்பிலேயே இருவரும் பல மணி நேரமாகக் கட்டிலிலேயே அசையாமல் விழித்திருந்தார்கள்.

அவர் நட்பு வட்டாரங்களிலிருந்தப் புள்ளக்குட்டிக்காரர்கள் எல்லோரும் வலிய வந்து, வழியை வரைந்து காட்டினார்கள். அப்போதெல்லாம்,  ராமசாமி தன் மனதில் முட்டை இடும் கோழிக்குதான் புட்டத்தின் வலி தெரியும் என்றே சொல்லிக் கொள்வார்.

கார் பட்டறைத் தொழிலாளியைப் போலவே நடந்து கொண்ட மருத்துவர்கள், இவரையும் ஒரு  பழுதடைந்த வாகனத்தைப் போலவே  சோதித்து, வாகன உபரி பாகங்களுக்குத் தனித் தனி விலை பட்டியல் போடுவது போலவே ஐபேட்டில் கணக்குப் போட்டார்கள். இவர் ஒவ்வொரு பிரச்சினையையும் சொல்லும் போது மருத்துவர்களும் இவரின் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்வது போலவே முகத்தை வைத்திருப்பார்கள். இதற்கு மருத்துவமே இல்லை என்பது போலவே முகப் பாவனையைப் மாற்றி பூச்சாண்டியாக அவனுக்குப் பயம் காட்டுவார்கள். பிறகு சிறு புன்னகையுடன் சூப்பர் ஹீரோவாக மாறி எல்லாவற்றையும் பணத்தால் சரி செய்ய முடியும் என்ற பாணியில் நம்பிக்கையைக் கொடுப்பார்கள்.

காலப்போக்கில் பிரிட்டிஷாரின் அதிகார தொனியிலிருந்த  ஆங்கில மருத்துவத்தில் ராமசாமி நம்பிக்கையை இழந்தார். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் கவனத்தைச் செலுத்தினார்.

மன அழுத்தம் கூடாதென்றும் பாரம்பரிய மருத்துவர்கள் எச்சரித்தார்கள். தியானம், யோகாசனம் போன்றவற்றையும் முயற்சி செய்ய சொன்னார்கள். மன அழுத்தம் குறையும் என்றார்கள்.

எல்லோரும் வழி காட்டினார்கள். அந்த வழியில் ராமசாமி மட்டுமே தனியாக நடந்தாக வேண்டும். அதுதான் அவருக்குச் சிக்கலாக அமைந்தது. பூக்குளியல் உட்பட எல்லோரும் சொன்ன பரிகாரங்கள் அனைத்தையும் செய்து விட்டார். ஐயாவிற்குக் கெடா கூட வெட்டி பலி கொடுத்தும் விட்டார்.

நண்பர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி அவை சுபமாகாதபோதுதான் அந்த நண்பர்களின் எதிரிகளாக இருந்த ஏனைய சில நண்பர்கள் வழி கேலி பேச்சுகள் உருவாயின. தங்களுக்குள் பழி தீர்த்துக்கொள்ள ராமசாமியில் துன்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.

“டேய்… ஒங்க சாமியாரு அவ்வளோ பெருசுன்னா நம்ம ராமசாமிக்குக் கொழந்தைய கொடுக்க சொல்லு”

“ராமசாமிக்குக் கொழந்தைய கொடுக்க முடியாமதானடா அவரு சாமியாராவே போனாரு”

இப்படி ஏதாவது பேசி கிண்டலடிப்பார்கள்.

இங்கேயும் தனக்குக் குழந்தையில்லாதக் குறையை வைத்து எதாவது பட்டப்பெயர் வைத்திருப்பதைத் தான் கேட்க கூடாது. இவர்கள் பல மலை ஏறியச் சாமிகள். அதிலும் தான் கன்னி சாமி என்பதால், மஞ்சத் தண்ணீர் ஊற்றி கால்களைக் கழுவி, திருநீறு பூசி, அதில் சந்தனக் குங்குமப் பொட்டு வைத்து மண்டியிட்டு விழுந்து வணங்கியவர்கள். அதனால் அவ்வாறு இயற்கையான குறையை வைத்து பட்டப்பெயர் எல்லாம் வைக்க மாட்டார்கள் என்றே ராமசாமி நம்பினார்.

டோலி நின்றதும்,  “பம்பா கணபதி வந்துட்டார் சாமி…” டோலிக்காரர் சொன்னார். அவரிடம் பணம் கொடுத்து தேங்காய் வாங்கி வரச் சொன்னார் ராமசாமி. சில்லரையாகவே எண்ணிக் கொடுத்தார். மீதப்பணத்தை ஒழுங்காகக் கொடுக்க மாட்டார்களோ என்ற பயம் இருந்தது. பம்பாவில் தேங்காய் மட்டுமே உடைக்க முடிந்தது ராமசாமியால். பம்பையில் இறங்கி குளிக்க உடல் நலம் ஒத்துழைக்கவில்லை. நாடு திரும்பியதும்  “பம்பையில் குளித்தீர்களா?” என்று மனைவி கேட்பாளே. அவளுக்கு என்ன பதில் சொல்வதுதென்று சிந்திக்கலானார். இங்கே வர கொடுப்பினை வேண்டும் என்பது போலவே பம்பாவில் குளிப்பதற்கும் ஒரு குடுப்பனை வேண்டும். அதைவிட எந்த வேண்டுதலும் இல்லாமலேயே குழந்தையைப் பெற்றவர்கள் பெரும் கொடுப்பினை உள்ளவர்கள் எனத் தனக்குள் அமைதியானார்.

டோலியை நால்வரும் தோளில் தூக்கி வைத்தவுடன், மூச்சை ஆழமாக இழுத்து வெளியேவிட்டப்படி நடக்கத் தொடங்கினார்கள். உயிரோடு இருக்கும் போதே நான்கு பேர் மேலேறி செல்வதில்  அவருக்கு உடன்பாடு இல்லைதான். இதற்கும் எதோ காரணம் இருக்கும் என்றே தனக்குள் சமாதானம் அடைந்தார்.

சட்டை மூடாமலிருந்த அவர்களின் முதுகு அரித்தாலும் சொரிந்து கொள்ள முடியாத நிலையைப்  பரிதாபமாக மேலிருந்து ராமசாமி பார்த்தார். அவர்களின் முதுகில் வழிந்தோடும் வியர்வையின் வலைந்தக் கோடுகள் விரலாகச் சொரிந்து விடுமா? அல்லது மேலும் அரிப்பை உண்டாக்குமா? தன் முதுகை டோலியில் கட்டப்பட்டிருந்த  மூங்கில் நாற்காலியில் சொரிந்து கொண்டே பொது நலத்துடன் இவர்களின் முதுகைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தார் ராமசாமி. உண்மையில் இவர்கள் செய்யும் பணிக்கு ஐந்நூறு மலேசிய ரிங்கிட் அதிகமா குறைவா எனும் சந்தேகம் வந்தது. ஐந்நூறு ரிங்கிட்டை ரூபாயில் கணக்கிட்டுப் பார்த்தால் எங்கேயோ போய் நின்றது. 

அவசரமாக உணர்ந்து, அதை அவர்களிடம் சொன்ன போது கொஞ்சம் வேகமாக நடந்து, சாலையின் ஓரமாகயிருந்தக் கழிவறையில் டோலியை நிறுத்தினார்கள். இவர்களில் யாரும் கழிவறைக்குச் செல்லாதது குறித்து ராமசாமி ஆச்சரியப்பட்டார். ‘பயணிகளைத் தூக்கிச் செல்லும் டோலிக்காரர்களின்  வயிற்றில் கட்டியிருந்தப் பையில் பணம் நிறையாமல் சிறுநீர்ப்பையும் நிறையாது போல.’ அவருள் பல்வேறு தத்துவச் சிந்தனைகள் உதயமாகின. மீண்டும் திரும்பி வந்தபோது சில டோலிக்காரர்கள் தங்கள் பயணிகளை அவசரத்துக்கு இறக்குவதையும் ஏற்றுவதையும் உடலை முறுக்கியபடி கவனித்தார்.

டோலி ஓய்வெடுக்கும் போது, அடுத்த மனித சவாரிக்காகக் காத்திருக்கும் கால இடைவெளியில் இவர்களின் மனம் எதிர்ப்பார்ப்பால் வலிக்கும். சவாரியை டோலியில் அமர்த்தி, டோலியைத் தங்களின் தோளில் ஏற்றியதும் உடல் முழுவதும் வலியெடுக்கும். மனித சவாரியைத் தங்களின் தோள் பட்டையின் மீது தூக்கி வைக்கும் கால இடைவெளி இவர்களுக்கு ஆறுதலாக இருப்பதாக ராமசாமி புரிந்து கொண்டார். இப்போது கணக்கிட்டுப்பார்த்தால் ஐந்நூறு ரிங்கிட் சற்று குறைவோ எனத் தோன்றியது. 

யாத்திரையின் தொடக்கத்தில் ராமசாமி பாறைகளின் மலையான கரிமலையை உற்சாகமாகச் சரணம் சொல்லிதான் ஏறினார்.  பலமலை சாமிகள் என்று அழைக்கப்பட்ட பல முறை சபரி மலையில் ஏறிய சாமிகளும் தளர்ந்துப் போனதால் ராமசாமிதான் கைக் கொடுத்து பாறைமலையில் ஏற்றி விட்டார். தன் குழுவில் யாராவது மலை ஏறுவதில் பின் தங்கிவிட்டால், கீழே இறங்கி அவர்களைத் தேடிக் கண்டுப்பிடித்து, கையோடு அழைத்துதான் வருவார். அதனாலேயே குருசாமி ராமசாமியின் மீது தனிப்பட்ட அக்கறைக் காட்டினார்.

ராமசாமி சொல்லும் சரணம் சக சாமிகளுக்கு உற்சாகத்தையே கொடுத்தது.  கல்லும் முள்ளும் அவர்களின் காலுக்கு மெத்தையானதற்கு ராமசாமியின் கம்பீரமானக் குரலில் ஒலித்த சரணகோசமே காரணம்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்றே கிளம்பும் முன்பு அனைத்துச் சாமிகளையும் உட்கார வைத்து சூடத் தேங்காய் உடைத்தார் குருசாமி.

அதையும் மீறி, யார் கண் பட்டதோ கரிமலை இறக்கம் ராமசாமிக்குக் கடினமாக இருந்தது.  கால்களின் நரம்புகள் இருக்கியது. தலையிலிருந்த இருமுடியும் தனது ஜோல்னா பையும் கனமானது.  கரிமலையிலிருந்து இறங்கியதும், தொண்டை வறண்டுப் போயிருந்தது. தலைச் சுற்றி மயக்கம் வருவதைப் போல உணர்ந்தார். உடனே, வானம் நோக்கி அன்னாந்து வாயில் அப்படியே கௌவி ஒரே மடக்கில் இடைவெளி இல்லாமல் கேரளகாட்டு இளநீர் குடித்தார். உடலின் உஷ்ணத்தைத் தன்னுள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தார்.  

வெகு தூரம் நடந்து வந்ததால் இரண்டு தொடைகளும் ஒன்றோடு ஒன்றாக உரசி, தோல் தேய்ந்து புண்ணாகி விட்டது. புண்ணாகிப் போன தொடைப் பகுதியில் வேர்வை நீர் பட்டதால் எரிச்சல் அதிகமானது. குழந்தையைப் பிறக்க வைப்பதற்கான உயிரணுக்களைக் கடவுள் உடலுக்குள் செலுத்து அற்புதத்தின் அறிகுறி என்றே அந்த எரிச்சலை நினைத்துக்கொண்டார்.  

குருசாமி கொடுத்த குச்சியைத் தரையில் ஊன்றிக் கொண்டே நொண்டி நடந்த ராமசாமி பெரியானை வட்டத்தில் அமைக்கப்பட்டக் கூடாரத்தை அடைந்ததும் ஓய்வு எடுத்தார்.

கடைசிப்  பாடலாக ஜேசுதாஸின் குரலில் ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டது.  கிருஸ்துவரானாலும், ஜேசுதாசைத் தவிர வேறு யார் பாடிய ஹரிவராசனமும் மனதில் நிற்கவில்லையே என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். எல்லோரும் இனி தூங்கி விடுவார்கள். தன்னைத் தேடி சக சாமிகள் வருவார்களா என்று ஏங்கினார்.

கன்னி சாமி தனியாக எங்கும் போக வேண்டாம் என்று குருசாமி பலமுறை  எச்சரித்திருந்தார். மஞ்சள் மாதா கன்னி சாமிகளைத் வேட்டையாடத் தேடிவரும் என்று பலமலைசாமிகளும் எச்சரித்திருந்தார்கள்.  தூங்கும் போது  பலமலைசாமிகளால் போடப்பட்டப் படுக்கை வட்டத்திற்குள் படுத்திருந்தது பாதுக்காப்பாக இருந்தது.

பகலில்  வெடி வெடித்ததில் மிருகங்கள்  காட்டுக்குள்ளே தூரமாக ஓடியிருக்கும். அப்போது ஓடியவைப் பயம் தீர்ந்து மீண்டும் வருமோ என்று பயந்தார். யானைகள் காலங்காலமாக வசிக்கும் பெரியானை வட்டத்தில், ராமசாமி உதவிக்குக் கூப்பிடக்கூட குரல் இல்லாமல் போய்விட்டார்.  புதரிலிருந்து லேசான அதிர்வு சத்தம் கேட்டது.  யானை குட்டி அல்லது புலியாக இருக்குமோ என ஒலிகள் எழும் இடங்களெல்லாம் கண்கள் தேடின.

“நீயா…!”

கீழே படுத்திருந்த ராமசாமியின் முகத்தில் மின் விளக்கைக் காட்டியப் படி  தலைப்பாகைக் கட்டியிருந்த வயதான சாமி கேட்டார்.  நேற்று இரவு கூடாரத்தின் ஓரத்தில் ராமசாமி தள்ளாடி நடந்து, அவசரம் தாங்காமல்  இருட்டில் சிறுநீர் கழித்தார். கூடாரத்தின் ஓரத்தில் சிறுநீர் கழித்தாலும் மணலில் ஆறாக ஓடி  இரண்டு கூடாரத்தின் நடுவில் தேங்கியது. பொது கழிவறை அதிக தூரத்தில் இல்லை.  அந்தச் சிறுநீர் குட்டையில் கால் வைத்த வேகத்தில் பொங்கி எழுந்த தலைப்பாகைக் கட்டியிருந்த சாமி கோபத்தைச் சாபமாகக் கொட்டினார்.

வாந்தி தொடங்கி,  பேதியால் பலமுறை கழிவறைக்கு ஓடியவர் தெம்பில்லாமல் வழிப் பாதையிலிருந்து சற்று தவறி கீழே சாய்ந்திருந்தார்.

தெம்பற்று இருக்கும் ராமசாமியிடமிருந்து  தகவல் வாங்கி, ஒலிப் பெருக்கி கருவியில் அறிவிப்பு கொடுத்தார் அந்தச் சாமி. “மலேசிய சாமிகள் கவனத்திற்கு…” என்று தொடங்கிய அறிவிப்பைக் கேட்டதும் குருசாமி தன் குழுவினர் சிலரை அழைத்துக் கொண்டு ராமசாமியை நோக்கி விரைந்தார்.

ராமசாமிக்கு உடனடியாகச் சிகிச்சை வழங்கப்பட்டது. ராமசாமியின் கை நரம்புப் பகுதியில் ஊசிகுத்தி பிலாஸ்டிக் குழாயின் வழியில் டிரிப்ஸைச் செலுத்தினார் மருத்துவர்.  செயற்கைப் பனிக்கட்டித் துண்டுகள் சுற்றப்பட்டிருந்த ரப்பர் பையைக் கொண்டு ராமசாமியின் உடல் முழுவதும் வைத்து வைத்து எடுத்தார். அளவுக்கு மீறிய உஷ்ணத்தைக் குறைக்க முயன்றார். உஷ்ணம் குறையவில்லை. மருத்துவர் துணி ஒன்றைச் சுருட்டி குளிர்ந்த நீரில் நனைத்து  நெற்றியில் வைத்தார். உடலின் உஷ்ணம் குறையத் தொடங்கிய பின் ராமசாமிக்குக் குளிரெடுத்து, உடல் முழுவதுமே நடுங்கியது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு குளிர் குறைய மருத்துவர், ஊசி போட்டார்.

“தைரியமா மலை ஏறனும்… மனசிலாயோ…?” ராமசாமியின் தோளில் ஒரு தட்டுத் தட்டி, அழுத்தமாகச் சொன்னார் மருத்துவர்.  மலையாள நடிகர் மம்முட்டியைப் போலவே ராமசாமிக்குத் தெரிந்த அந்த மருத்துவர், டிப்ஸாக பணம் எதையும் கேட்காமல் சேவையாகவே மருந்தோடு நம்பிக்கையையும் இலவசமாகக் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது.

தமிழும் மலையாளமும் கலந்து பேசுகிறாரா, அல்லது தூயத் தமிழில் பேசுகிறாரா  என்ற குழப்பம் ராமசாமிக்கு. அவரின் உதவியாளர் தனது கைவிரல்களை முறுக்கி, குத்துக் காட்டி ‘கில்லி’ மாதிரி மலை ஏறனும் என்றார். ராமசாமிக்கு மருத்துவர்களின் மேலிருந்த அவ நம்பிக்கை கொஞ்சமாகக் குறைய பார்த்தது.

வாந்தி, பேதி, காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றுக்காக மருத்துவரிடம் சென்றே பல வருடமாகிவிட்டது. எந்த மருத்துவரைப் பார்த்தாலும் அது, தன் குழந்தையின்மைப் பிரச்சினைக்காகதான்.

மூன்று பலமலைசாமிகளைத் துணைக்கு விட்டு மற்ற முப்பது சாமிகளோடு சரணம் சொல்லி பம்பா நதி நோக்கிப் புறப்பட்டார் குருசாமி. மருத்துவ முகாமில்,  ராமசாமி மெதுவாக எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தார். மலேசிய நாட்டைச் சேர்ந்த சாமிகள் சிலர் வந்தார்கள். அதில் ஓர் அரசியல்வாதியும் இருந்தார். அவர்களைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டு விட்டார்.  தன் நாட்டைச் சேர்ந்தவரைப் பார்த்ததால் அவர் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தார். இங்கே உள்ள உணவு தன் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றார். அவர்கள் தங்களது பைகளைத் திறந்து சைவ ‘மேகி மீ’ மற்றும் ‘100 பிலாஸையும்’ சேர்த்துக் கொடுத்தார்கள். ராமசாமியை நல்ல படியாகப் பார்த்து அனுப்புமாறு மருத்துவரிடம்  சொல்லியவுடன் குழு சரணம் போட்டுக் கொண்டே பம்பையை நோக்கி நடந்தார்கள். அவர்கள் மறையும் வரை ராமசாமியின் கண்கள் அவர்களை நோக்கியிருந்தது. வயிற்றைப் பசி கிள்ளியதை உணர்ந்த போது ‘மேகி மீயைத்’ தைரியமாகச் சாப்பிடத் தொடங்கினார்.  தன் நாட்டில் தயாரிக்கப்பட்டிருந்த உணவை உண்டு, ‘100 பிளாஸைக்’  குடித்ததும் உடலில் பழையத் தெம்பு மீண்டும் வந்ததை உணர்ந்தார்.
 

இன்னொரு பாட்டில் டிரிப்ஸ் இன்னும் முடியவில்லை. அவரின்  உற்சாகத்தைப் பார்த்த மருத்துவர் பாதி காலியானப் பாட்டிலைக் கழற்றினார். அந்தப் பிலாஸ்டிக் பாட்டிலை வெட்டினார். உள்ளே இருந்த டிரிப்ஸ் சில்வர் டம்ளருக்குள் போனது. அதை குடிக்கச் சொன்னார். கடகடவென்று முன்பு கேரளக்காட்டு இளநீரை குடித்தது போல குடித்தார். அவரிடம், மீண்டும் அந்த மருத்துவர் “தைரியமா மலை ஏறனும்…” என்றபடியே கைக்குலுக்கினார்.

சிறிது நேரம் கழித்து டோலி அவரைத் தூக்கிச் செல்ல வந்தது. ராமசாமிக்கு முதலில் எதுவும் புரியவில்லை. பலமலைச்சாமிகள்தான் விலையைப் பேசி அழைத்து வந்திருந்தனர். தொகையைக் கேட்டவுடன் தலை சுற்றியது. டோலிக்கு விலை பேரம் பேசி குறைத்திருக்கலாம். அவர்கள் அவசரத்திற்குத் தன்னைப் பலியாக்கிவிட்டதாக நினைத்தார்.

அவர்கள் யாரும் மல்யுத்த வீரர்களைப் போல உடலமைப்பைக் கொண்டிருக்கவில்லை. ராமசாமி இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். நேரில் பார்ப்பதற்கும் கேட்ட கதைகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லையே என வாயடைத்து நின்றார்.  பெரிய குருசாமியின் கட்டளை என்றே சின்ன குருசாமி, ராமசாமியைக் கட்டாயப்படுத்தி ஏற்றி விட்டார்.

”ஓ…ஓ…ஓ….” என்றதும், தோளில் சுமந்து வந்த உருளையான கட்டையில்  கட்டப்பட்டிருந்த மூங்கில் நாற்காலியைக் கீழே இறக்கி வைத்தார்கள்.

தன் இருமுடியை மடியில் வைத்தப்படி உட்கார்ந்துக் கொண்டார்.

சின்ன குருசாமியும், மூக்கு சாமியும், கூலிம் சாமியும் உற்சாகமாக ‘பாய் பாய்’ காட்ட, ராமசாமி உற்சாகமில்லாமல் கையசைத்தார்.  டோலியைக் கொண்டு வந்தவர்களில் மூவர் வயதானவர்கள். ஒருவர் இளைஞர். நால்வரும் சட்டை போட்டிருக்கவில்லை. வெளுத்த மஞ்சள் வேட்டியை முட்டி வரை தூக்கிக் கட்டிருந்தார்கள். தோளில் ஆரஞ்சு நிறத்தில் பழையத் துணியைத் தொங்க விட்டிருந்தார்கள். உருண்டை வடிவக் கட்டையின்  நான்கு எல்லைப் புறத்தையும்,  நால்வரும் சேர்ந்து பிடித்துத் தூக்கி, தோள்பட்டையில் சுமந்து நடந்தார்கள்.

டிராக்டரில் பயணிப்பதைவிட இந்த மனித வாகனத்தில் பயணிப்பது அதிகமாகவே குலுங்குவதாக உணர்ந்தார். மேட்டு பகுதி தெரிந்தது. சிறிதளவு பயமும் கொண்டிருந்தார். தான் திட்டமிட்டதைவிட கூடுதலாகச் செலவானதில் கொஞ்சம் வருத்தம் இருந்தது.

ராமசாமி இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட மூங்கில் கைப்பிடியை விடவில்லை. மலை ஏற மண்ணிலிருந்து புடைத்து வெளியேறிய மரங்களின் வேர்களே படிகளானது. நால்வரில் தலைவராக ஒருவர் பொறுப்பேற்றுத் தொழிலுக்கென உருவாக்கிய டோலி மொழிகளைப் பயன்படுத்தினர். இந்த மனித வாகனத்தைத் திடீரென்று நிற்க செய்யவும், வேகத்தைக் குறைக்கவும், கூட்டவும், தோள்பட்டையை ஒரே நேரத்தில் நால்வரும் மாற்றவும், தலையில் வைத்து நடக்கவும், ஊ..ஊ.. ஓ..ஓ.. ஒலிகளைச் சமிக்ஞை மொழிகளாகக் கொண்டிருந்தனர். 

டோலியில் ஆடிக் கொண்டிருந்த ராமசாமிக்கு எதேதோ எண்ணங்கள் தோன்றிக் கொண்டே போனது.

“ஓ…ஓ..ஓ…”  ராமசாமியை டோலியோடு அப்படியே கீழே இறக்கி இளைப்பார கடையின் முன் இறக்கினார்கள்.  டோலிக்காரர்கள், ராமசாமி சொந்த நாட்டில் விரும்பி உண்ணும் ‘பிசாங் கோரேங்’ மாதிரியான ஒன்றை வாங்கி சாப்பிட்டார்கள். கட்டன் சாயாவைக் குடித்தார்கள்.

” எந்த ஊரு சாமி… ?”

“மலேசியா சாமி…” என்றார் ராமசாமி. 

“சொந்த ஊரு எங்க சாமி…?” என்று டோலிக்காரர் கேட்டதற்கு “எங்க தாத்தாவே மலேசியாலதான் பொறந்தாரு சாமி !” என்றார். 

மற்ற டோலிக்காரர்கள் சாப்பிட்டுக் கொண்டே தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பிறகு ஒருவருக்கு ஒருவர் தோள் பட்டையைப் பிடித்து விட்டுக் கொண்டார்கள். கால்களை நீட்டி, தானே முட்டி மற்றும் தொடைகளை அமுக்கிக் கொண்டே டோலிக்காரர், கேட்டார்.

“சாமிக்கு எத்தனை கொழந்தைங்க…?”

ராமசாமியிடம், பலமுறை பலர் கேட்கப்பட்டக் கேள்வியேயானாலும், ஒவ்வொரு முறையும் மனதில் ஈட்டி அதிக ஆழமாகவே இறங்கும். அதே வலியைதான் தன்  மனைவியும் அனுபவித்திருப்பாள், என்பதை நினைத்துப் பார்த்தவருக்கு வேதனை கூடியது.

அந்த  டோலிக்கார், தங்களைக் கேரளாவில் வாழும் தமிழர்கள் என்று தொடங்கி அவர்களின் குடும்ப வரலாற்றைச் சொல்லி முடித்து விட்டார். 

“நீ கவலை  படாத சாமி… நா உன்னப்போல ரொம்ப பேற பாத்திருக்கிகேன். இங்க வந்துட்டலே, இனி ஐயன் மேல தான் உன் நம்பிக்கை இருக்கனும்…” என்றார் டோலி சாமி.

அதைக் கேட்டதும் அவர் சற்றே ஆறுதல் அடைந்தார். இவர்கள் கூட கடவுளால் அனுப்பிவைக்கப்பட்ட தூதுவர்களாக இருக்கலாம் என அவருக்கு  அப்போது தோன்றிய கணம் நெகிழ்வாக உணர்ந்தார். வாந்தி, பேதி உட்பட இதுவரை தான் அனுபவித்த அனைத்து இன்னல்களும் கடவுளின் திருவிளையாடல் என்றும் இந்த இன்னல்களால் தனது பாவம் மொத்தமும் கழிந்தது என்றும் அதை அறிவிக்க வந்தவர்கள் இந்த டோலிக்காரர்கள் என்றும் எழுந்த எண்ணங்கள் எல்லாம் அவருக்கு அடிவயிற்றிலிருந்து அழுகையை உருட்டிக்கொண்டு வந்தது.

டோலி மீண்டும் தோளில் ஏறிக் கிளம்பியது. கொஞ்ச தூரம் சென்றதும், டோலியை நிறுத்தி தோள் மாற்றினார்கள். நால்வரும், தோளில் போட்டிருந்தப் பழையத் துணியை உருட்டி சும்மாடு செய்தார்கள். தலையில் சும்மாடு வைத்து, டோலியை அதன்மேல் வைத்து,  டோலி மேல் ராமசாமியைக் கம்பீரமாக உட்கார வைத்து, தாங்கி நடந்தார்கள். 

டோலி செலுத்தப்பட்டதும், டோலிக்காரரின் குரலை மனதில் ராமசாமி மறு ஒலிபரப்புச் செய்து கேட்டார்.

தன் நான்கு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கவே, கழுதை  மாதிரி டோலி தூக்குவதாகச் சொன்னார். தொடர்ந்து எல்லோருக்கும் கடவுள் ஏதாவது ஒரு குறையை உடலோடு  வைத்துத் தைத்துத்தான் பூமிக்கு அனுப்பி விடுகிறார் என்றும் நொந்துக்  கொண்டே சொல்லியிருந்தார்.

‘அந்த நான்கு குழந்தைகளில் ஒன்றைக் கடவுள் தனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? கடவுளே! உனக்கும் கூட ஏன் இந்த ஓர வஞ்சனை?’ அவரின் மனது கடவுளிடம் எதிர்வினையாற்றியது.

உடனே ராமசாமிக்குத் தான் மதுரையில் பார்த்த எண்ணெய் வடிந்த சிறுமியின் பிஞ்சு முகம் ஞாபகத்தில் மறு வடிவம் பெற்றது.

“ஐயப்பா… ஐயப்பா… ஐயப்பா…” என்று அழுதுக் கொண்டே தன்னை மோதி தனது கருப்பு வேட்டியைப் பிடித்துக் கொண்டு “எங்க அம்மா அடிப்பாங்க ஐயப்பா… எதாச்சும் குடுங்க….” ஒரு கையை அவர் முகம் நோக்கி ஏந்தினாள். இன்னொரு கைப் பிடியில் ராமசாமியின் கருப்பு வேட்டி இருந்தது. அவளின் அம்மாவாக இருக்கக்கூடிய ஒரு பெண், முதுகில் அடித்தே அந்தச் சிறுமியை இவரிடம் தள்ளி விட்டாள். திருமணமாகி இத்தனை ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ராமசாமி, ஆங்காங்கே கிழிந்து தொங்கியச் சட்டையைப் போட்டிருந்த அந்தச் சிறுமியைத் தூக்கிக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.  இந்தச் சிறுமி தனக்குப் பிறந்திருக்கக் கூடாதா என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாசல் கோபுரத்தைப் நிமிர்ந்து பார்த்து கண் கலங்கினார்.   தன் கண் முன்னே எந்தக் குழந்தை கஷ்டப்படுவதைப் பார்த்தாலும் தனக்குப் பிறந்திருக்கக் கூடாதா என்றே அவரின் மனதில் ஒரு குரல் ஒலித்து விட்டு அடங்கும். ஆனாலும் எதாவது ஒரு அனாதை குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க ஏனோ அவர் மனம் இதுவரை இணங்கவில்லை.

அவர் மனம் இவ்வளவு இழகிப்போகுமென அவருக்கே தெரியாது. மனம் கனிந்து இனித்தது. சுற்றி உள்ள உயிர்களிடம் அன்பை மட்டுமே சொரிய நினைத்தது. எல்லாம் யாத்திரை கொடுத்த பக்குவம் என நினைத்துக் கொண்டார்.

ராமசாமி  இறங்கும் இடம் வந்ததும் டோலியை இறக்கினார்கள். டோலியின் தலைவர் கூலித் தொகையைச் சொல்லி, பணிவுடன் வணங்கினார். பின்னர் மெதுவாக டீ குடிக்க பணத்தைத் தலையைச் சொறிந்தபடி கேட்டார்.

ராமசாமி கழிப்பறை செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி மெதுவாகக் கழிப்பறையைத் தேடிச் சென்றார். ஓய்ந்து உட்கார்ந்த பல வர்ண டோலிகளையும் பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்தார். டோலிகளையும், அதை செலுத்தியவர்களையும் பார்க்கும் போது தைப்பூசத்தில் ஆடி அசந்த காவடிகளையும் அதை சுமந்தவர்களையும் பார்ப்பது போல இருந்தது. வரிசையாக, டோலிகளோடு ஒரு மனிதனைச் சுமக்க  கழுதைகளின்  உணர்வோடு நான்கு மனிதர்கள் காத்திருந்தார்கள். தங்களின் வயிற்றுக்கு வெளியே உள்ள பை, மற்றும் அதற்குள்ளே உள்ள பை இரண்டையும் ஒரே சீராக நிரப்பவே டோலி தூக்க காத்திருந்தார்கள்.

கழிவறை நோக்கி நடந்தார். மனதில் பழைய பேதி பயம் தோன்றியது. ஆனால் தான் முழுமையாகக் குணமாகிவிட்டதைக் கழிப்பறையை விட்டு வெளியேறியபோது உணர்ந்தார். தூயக் காற்று தன் வயிற்றை நிரப்பி சுடர் விடுவதாக உணர்ந்தார்.

“டோலி சாமி” என்று அவரின் பின் திசையிலிருந்து  ஒரு குரல் கேட்டது.    சற்று  தூரத்தில் அவரின் சக சாமிகள்  அவரைப் பார்த்து கையசைத்தார்கள். ஒரு நிமிடத்தில் ராமசாமிக்கு உற்சாகம் கிளர்ந்தது. ‘டோலிசாமி’ ஒரு தரம் சொல்லிப் பார்த்தார்.

“பொறுங்கள்” என்ற பாவனையில் கையசைத்துக் காட்டி அவர்களுக்கு எதிர் திசையை நோக்கினார்.  டோலித்தலைவர் தலையைச் சொறிந்தபடி நின்றுக்கொண்டிருந்தார்.

டோலி சாமிகளின் சுமை ஒன்றும் தான் சுமக்கும் சுமையைவிட அவ்வளவு பெரியதில்லை என அவருக்கு அப்போது அந்நிமிடம் தோன்றியது. ‘உலகத்தில் ஒருவனுக்குக் குழந்தை பேறு இல்லாத சுமையை விட பெரிய சுமை உண்டா?’ என நினைத்துக் கொண்டார்.

“நாங்க என்னமோ பணம் காய்க்கிற மரத்தை வளர்க்கிற நாட்டுலயிருந்து வந்ததா நினைக்காதீங்க… நாங்களும் அங்க போராடிதான் வாழ்க்கை ஓட்டிட்டி இருக்கோம்…” என்றவர் பேசிய கூலியை அதன் தலைவர் கையில் திணித்தார்.

கூட்ட நெரிசல் காரணமாக மீண்டும் “டோலி சாமி… டோலி சாமி…” என்று வேகமாகக் கத்தி ராமசாமியை அவர் நண்பர்கள் அழைத்தார்கள்.

4 comments for “டோலிசாமி

  1. Ipoh Shree
    July 1, 2023 at 2:19 pm

    ஐயப்ப பக்தரான இராமசாமியை ஒட்டியே கதை நகர்கிறது.டோலிப் பயணமும் டோனியை தோளில் சுமக்கும் அந்த டோலி தூக்கிகளின் வலியையும் தாண்டி இராமசாமியின் குழந்தை செல்வம் பற்றிய ஏக்கங்களும் மருத்துவர்களின் பணம் கறக்கும் நோக்கங்களையும் அபாரமாய் எடுத்துறைத்த கதாசிரியரின் எழுத்துப் பாங்கு அருமை.அதே நேரம் போலித் தூக்கிகளுக்கு பணத்தை இரைக்க யோசிக்கும் இராமசாயின் கருமித் தனத்தை எதார்த்தமாக சொல்லி கதையை முடித்திருக்கிறார் கதாசிரியர். இக்கதை வல்லினத்தில் வெளிவருவது வெகு மகிழ்ச்சியைத் தருகிறது.இளைய எழுத்தாளர்களுக்கு அடித்தளமிட்டு தருவதில் வல்லனம் என்றுமே சளைத்ததில்லை. தொடரட்டும் கதாசிரியரின் எழுத்துப் பணி.

  2. வரன்
    July 2, 2023 at 9:21 am

    மிக நேர்த்தியாக கதை கையாளப்பட்டுள்ளது. படிக்கும் வாசகர்களுக்கு இது கதையா இல்லை எழுத்தாளரின் சுய அனுபவமா என்று கேள்வியெழுவதையும் மறுப்பதற்கில்லை. பல சொற்கள் இதுவரை கேட்டிராத புது சொற்களாக இருக்கின்றன. மலேசியர்களின் சபரிமலை பயணம் அதனை ஒட்டி நடக்கும் இனிமையான அனுபவங்கள். குழந்தை இல்லாத குறை சுற்றத்தில் அது கொடுக்கும் வழி என்று மிக அழகாக கதை கோர்க்கப்பட்டுள்ளது. நல்ல கதை படித்த மன நிறைவை இக்கதை கொடுத்துள்ளது.

  3. July 2, 2023 at 4:32 pm

    நமது சமய நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு கதையாக இதனைப் பார்க்கிறேன்.எழுத்தாளனுக்கும் உரிமை இருக்கிறது சமூக முளைக்குள்ளிருக்கும் கசடுகளை களைத்து வெளியே எடுத்துப் போட. இதி ஊடுபாவாக இழைந்தோடும். அங்கதம் கதையைச் சுவைக்க வைக்கிறது. அங்கதத்தை உள் நுழைப்பதைக்கூடத் தன் படைப்பின் நோக்கமாகக் தெரிகிறது. எளிய வாசிப்புக்குரிய படைப்பு..

  4. M. Mahendran@M. Prabhu
    July 6, 2023 at 7:02 pm

    “டோலிசாமி” சிறுகதை( எனக்கு பெருங்கதை) 2 நாட்களில் ஓய்வு நேரத்தில் ரசித்துப் படித்தேன்.

    தம்பதியரின் குழந்தை பாக்கியம் இல்லாத பிரச்சினையை நோக்கித்தான் கதை நகரும் என்றிருந்தேன், ஆனால் கணவன் சபரிமலைக்கு தங்களது குறையை நீக்க சென்றுவிட்டார்.
    சபரி மலைக்கு மேற்கொள்ளும் பிரயாணம், கதையின் பிரதானம் … அதுவும் மனிதனை மனிதன் சுமந்து செல்லும் தொழில் செய்யும் டோலிக்காரர்களை மையமாக வைத்து கதையை நகர்த்தியது, புதுமை.

    நேரடியாக எழுத்தாளர் அங்கு சென்று வந்த அனுபவமாக இருக்குமோ …?

    கதை முடிந்தும் …முடியாமல் விட்டது … எழுத்தாளாரின் பானியாகத் தெரிகிறது.

    இந்தக் கதை ஒரு serious வகையான கதையாகினும், ஆங்காங்கே இலேசான நகைச்சுவை சுவைக்கின்றது.

    கதையை விட எழுத்து நடை மற்றும் எழுத்தாளர் கையாண்ட உத்திகள் …பிரமிப்பு.

    எம். பிரபு, பெந்தோங்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...