தேவனின் நாயனம்

சீமைச் சாராயத்தின், புதிதாக இழைத்த மரச்செதுக்கின் நெடி அறையெங்கும் நிரம்பியிருந்தது.

“டே, இங்க வாடா? எங்க… அம்பி சொல்றதச் சொல்லு… அம்பி சொல்லு…இது பேரு என்ன?”

பிள்ளை, அம்பி இரண்டு பேர் மஜாவிலுமாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். பிள்ளையின் ரசிகர் ஒருவர் பாரீஸிலிருந்து தருவித்திருந்த மதுக் குப்பி நடுநாயகமாக அமர்ந்திருந்தது. அரை போதையில் தலை கவிழ்ந்திருந்த அம்பி மெதுவாகத் தலைநிமிர்த்தி “கவ்ந்யாக்” என்றான்.

“கவ்நாக்கு” என்றான் சோலை.
 
“கிக்கிக்கீ…” என்று சிரித்து உருண்டார்கள் எல்லாரும்.

“கருநாக்கு…  சீமைச் சாராயம்… குடிக்கிறியாடா?” என்றார்  பிள்ளை சிரிப்படங்கிய பின்.

“அய்யய்யோ… வேணாங்க…”

“போடா போ… ஆனா இவன் காச்சறதோட கால்ல கட்டி அடிக்கணும் இந்தக்  கருநாக்க… அம்பி, சோலை சரக்கை ஒரு தடவை சாப்பிட்டுப்பாரு, இதெல்லாம் தொட மாட்ட… வச்சிருக்கயாடா?”


சத்தம் தேவைக்கு அதிகமாக இருப்பதிலிருந்தே பிள்ளைக்கு ஏறிவிட்டிருப்பது தெரிந்த அம்பி… நிமிர்ந்து பார்த்து ஒரு போதைப் புன்னகை புரிந்தான்.

“ஊறல் போட்டுருக்குதுங்க… நாளைக்குத்தான் காச்சுவேன்”

“போடா… மயிராண்டி… இவன் காச்சி… ஊறப்போட்டு… வடிச்சு… அதை நாம குடிச்சு… பாளாப் போச்சு… நாளைக்கு வடிச்சு.… இதப் பாரு… இந்தக் கொடம் மாதிரி ஒரு கொடம் அம்பிக்குக் கொண்டு வந்து குடு… என்னலே?”

“அய்யா… நம்ம சரக்கெல்லாம் இவருக்கு எதுக்குங்க?”
 
“டே… தாயளி… எதுத்தா பேசற…” என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே அடிக்கப் பாய்ந்தார் பிள்ளை. பிள்ளையின் கோபம் தெரிந்தே நாயனத்தின் நீளத்தைவிட நாலு முழம் தள்ளியே இருக்க கற்றுக் கொண்டிருந்தான் சோலை. தடுமாறி விழப்போன பிள்ளையை அணைத்து அமரச் செய்தான் முத்துராக்கு. சோலைக்கு விழவேண்டிய குத்து அவனுக்கு விழுந்தது. பாவம், நன்றாக வலித்திருக்கும்… பிள்ளைக்கு. கர்லா கட்டை சுத்திச் சுத்தி கையிரண்டும் கால் மாதிரி ஆக்கிவைத்திருந்தான் முத்துராக்கு. ஸ்வரம் போடுவது போல காற்றில் கையை அளைந்து அம்பி அமைதிப்படுத்த முயன்றதைக் கவனிக்காமல் அவனை வண்டை வண்டையாகத் திட்டிக் கொண்டிருந்தார் பிள்ளை .  

“நாளைக்கு வரணும் ஒரு கொடம்… ஒரு கொடம்… ” என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார் பிள்ளை. 

மலைக்கோட்டை பஞ்சாமி ஏற்கனவே எச்சரித்திருந்தார். ” உழைச்ச கூலிக்குக் காசக்குடுக்க தாயளிக்கி அம்புட்டுக் கசக்கும். சம்பளத்த வாங்காட்டாக் கூடப் பரவால்லனு நாலு அடி அடிச்சிட்டுப் போனவன்லாம் இருக்காம். சம்பளத்த கேட்டு வாங்கிரு.” ஆனால் அந்த முறுக்கெல்லாம் அவரைப் போல வித்துவான்களுக்குச் சரி, முத்துராக்கு அதிகபட்சம் இரண்டாம் தவிலுக்குத்தான் லாயக்கு. ஒத்தும் ஊதுவான். வெத்திலை மடித்துக் கொடுப்பான். செலவென்று ஒன்றும் கிடையாது. வேஷ்டி, உத்திரியம் வேண்டியது கிடைக்கும். சாப்பாடு, ஜாகையெல்லாம் பிள்ளையோடுதான். அவ்வப்போது தோன்றியபோது ஏதாவது கொடுப்பார். கல்யாணத்துக்கு நிறையச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார். அந்த மிதப்பில் தேவையானபோது அடிதடியிலும் இறங்கி அவ்வப்போது விசுவாசத்தைக் காட்டிக்கொள்வான்.  

முத்துராக்கு “அண்ணே… படுத்துக்கப்போலாமா… நாளைக்குக் கச்சேரி இருக்கே…?” என்று இழுக்க… “போடா… மயிராண்டி…” என்று அவனுக்கும் திட்டு விழுந்தது.

“கச்சேரி சாயங்காலம்தான… அந்தக் கருநாக்க எடுத்து அம்பிக்கும் எனக்கும் ஊத்துடா… நீயும் குடி… சோலை நாயனத்தை எடுத்தாடா…”என்று பக்கத்திலிருந்த மிராசைப் பார்த்துக் கண்ணடித்தார் பிள்ளை.

“பெருசு வேண்டாம், சின்னத எடுத்தா… காது கிளிஞ்சிரும்.”

“யாருக்கு, சோலைக்கா, எல்லோருக்குமா? இரண்டுமே சாத்தியம்தான்” என்று நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான் முத்துராக்கு.  திடீரென்று என்ன தோன்றியதோ “டே சோலை… ரெண்டையுமே கொண்டாடா…” என்றார்  பிள்ளை. சோலை சீவாளிப்பெட்டியையும் மறக்காமல் எடுத்துவரவேண்டுமே என்றும், எடுத்துக் கொண்டு வராமல் சோலை திட்டு வாங்கிய தருணங்களையும் நினைத்துக் கொண்டான். சீவாளிப்பெட்டி சக்திவேலுவின் இலாக்கா.

சக்திவேலுவோடு சேர்ந்து முத்துராக்கும் பிள்ளை துவப்பேற்றிய – அதாவது பிள்ளை வெற்றிலை பாக்கு எச்சிலால் குளிப்பாட்டிக் காயவைத்த  – சீவாளிகளைப்  பழக்குவான். பழக்குவதென்றால் கரடு முரடான கொறுக்கைத்தட்டையின் ஒலியைச் சன்னமாக்கித் தருவது. ஒரே ஊதாக ஊதிக் கொண்டிருக்க வேண்டும். தாடை வீங்கிவிடும். ஊருக்குப் போகும்போதெல்லாம் அவனுடைய அம்மா தவறாமல் பிள்ளைக்குச் சாபம் விடுவாள் “பாழாப்போனவன் சின்னப்பயல மூஞ்சி வீங்கிப் போகத்தக்குன எப்பிடி ஆக்கி வெச்சிருக்குறான் பாருங்க… அவன் பையனா இருந்தாச் செய்வானா? நாசமாப்போக…”  இதை கேட்கும்போது நிறைவாக இருக்கும் முத்துராக்குக்கு. வீட்டை நோக்கி கண்ணை ஓட்டி “அதான் ஒண்ணயும் காணோம் இன்னும்… பத்தினி சாபம் பலிக்காமப்போகுமா?” என்பான் சோலை.


பிள்ளை அடுத்த ‘ரவுண்’டை ஒரே மூச்சில் முடித்துவிட்டுத் திரும்ப கிளாஸை நிரப்பச் சொல்லி கண்ணைக் காட்ட, முத்துராக்கு அவனைத்தான் குடிக்கச் சொல்கிறாரோ என்று நினைத்து “இல்ல வேணாங்கண்ணே…” என்பது போல கைக்காட்ட, “மயிராண்டி… எடுத்து ஊத்துறான்னாக்க…” என்றார் பிள்ளை. கவனித்துக் கொண்டிருந்த ‘கடுக்கன்’ “பிள்ளைவாள் நெறகொடம்” என்றார் சிரித்துக்கொண்டே.

அம்பியின் வேலையாள் அந்தப் பெரிய வரவேற்பறை நெடுக சாம்பிராணி தூபம் காட்டியபடியே சென்றான். அப்பா… என்ன மணம்… சாயந்திரம் நாடகக்கொட்டகையில் மணத்த அதே சாம்பிராணி…

“இன்னைக்கிருக்கு சரியான… விருந்து” என்பது போன்ற குறுஞ்சிரிப்போடு அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரு கும்பா நிறைய வாதாங்கொட்டைப்பருப்பு, தட்டு நிறைய வறுத்த கடலை, இன்னொரு தட்டில் கொட்டைப்பாக்கு, சீவல். கொழுந்து வெற்றிலை இன்னொரு தாம்பாளம் நிறைய. 

சிறிது நேரத்தில் உறையோடு நாயனங்களையும், சீவாளிப்பெட்டியையும் கொண்டு வந்து பிள்ளையின் முன் பவ்யமாகத் தரையில் வைத்துவிட்டு ஓரமாகப் போய் நின்றான் சோலை. முரட்டுப்பட்டு உறையை ‘சரட் பரட்’டென்று பிரித்து உள்ளிருந்து நாயனத்தை வெளியே எடுத்தார் பிள்ளை. திருவிழாப்பீப்பியைவிடச் சற்று பெரியதான நாயனத்தைப் பார்த்து எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வழக்கமாக வட்டமாக இருக்கும் அணைசு சதுரமாக இருந்தது.

“ கிளாரினெட்டா…?”

“திமிரி நாயனமா…?”   

“ ரெண்டும் கிடையாது. நாதஸ்வரம் திறந்த வெளியிலேயோ, பெரிய சபையிலயோதான் கேக்க சொகமா இருக்கும்.  வீட்டுக்குள்ள வாசிச்சா காதைக் கிழிச்சிரும். அனுபவிச்சுக் கேக்க முடியாது. இது வீட்டுல  சின்ன அறையில வாசிக்கறதுக்காக  நானே செஞ்சது. இதைச் செய்ய எனக்கு ஆறு மாசமாச்சு. ரொம்பக் கஷ்ட்டம்தான். செஞ்சது ஆசாரிதான். ஆனா பக்கத்துலயே இருந்து இப்பிடிச்செய், அப்பிடிச்செய்ன்னு சொல்ல வேண்டியிருந்தது. தொள கொஞ்சம் பெரிசாப்போனாலும் தூக்கித்தான் எறியணும். ஆனாலும் முயற்சி பண்ணிப் பாப்போம்னு செஞ்சிருக்கேன். தேர்ந்த ரசிகர்கலெல்லாம் இருக்கீங்க… நீங்கதான் சொல்லணும். ஆனா ஒண்ணு… எப்பிடி இருந்தாலும் உள்ளத்தச் சொல்லணும்… ”

கைக்குழந்தையைப் போல ஒருவர் கைமாற்றிப் பார்த்துப் பார்த்து மறுபடியும் பிள்ளை கையில் வந்து சேர்ந்தது குட்டி நாயனம்.      

முதலில் பெரிய நாயனத்தில் ‘உசைனி’ ராகத்தில் ஒரு பாட்டை வாசித்தார் பிள்ளை. ஊத்துக்காடு வேங்கடகவியின் “ஆடும்வரை அவர் ஆடட்டும்… ” 

“இங்கிதம் என்றாலே என்ன விலையென்று கேட்பாராடி அந்த மன்னன்” என்ற வரியைப் பிள்ளை வாசிக்கும்போது அம்பி மென்மையாகப் புன்னகைத்தான். பார்த்தவர்கள் அவன் போதையில் சிரிப்பதாக நினைத்துக் கொள்வார்கள் என்று நினைவுக்கு வந்ததும் புன்னகை இன்னும் விரிந்து மந்தஹாசமாக உறைந்துவிட்டது.   

உருக்கத்தையும், குழைவையும், சுகானுபூதியையும் நிறைத்து ஊற்றினார் பிள்ளை. எல்லோரும் அனுபவித்துக் கேட்டனர். சின்னப்பாடல்தான். “  அடடா… அதற்குள் முடித்துவிட்டாரே”  என்று இருந்தது.  

சீவாளியிலிருந்து உதடு பிரிந்ததும் எல்லோரையும் “எப்படி இருந்தது?” என்பது போல சுற்றிப்பார்த்தார்.

“அம்பி, ‘டோனல் குவாலிட்டி’ எப்பிடி ?” என்றார்.

“சங்கீதம் அவரிடம் தேனில் கரும்பாக இனிக்குதே என்சொல்ல… இன்னும்…” என்று அவர் வாசித்த பாடலிலிருந்தே பாடி, மேல் நோக்கி கையைக் காட்டி,  “சத்தம் உறுத்தலண்ணா… பொறுத்துக்கறாப்பலதான் இருந்தது… ”  என்றான் அம்பி. “நான் சத்தத்தை மட்டும்தான் கேட்டேன்?”  என்றார் பிள்ளை சிரித்துக் கொண்டே . 

“இப்போ இந்தச் சின்ன நாயனத்தில் ஒரு கஷ்டமான  தோடி வாசிக்கிறேன்” என்று சரியான சீவாளியை எடுத்துப் பொருத்திக் கொண்டார்.

“யாருக்குக் கஷ்டம்?” என்று எல்லோரையும் பார்த்துக் கண்ணடித்தான் அம்பி. எல்லோரும் சிரித்தனர். பிள்ளை கவனிக்கவில்லை .

“இதுக்குச் சீவாளி செய்யறது தனிக்கலை. நான் ரேகை பாத்துக்குடுக்குற நாணல் தட்டையை மாசக்கணக்கா காயப்போட்டு, நெல்லவிக்கும் போது வேகவைச்சு… சக்திவேலு செத்தான், என்னடாலே முத்துராக்கு?”


“சக்திவேலு மட்டுமா?”  என்று நினைத்துச் சிரித்துக் கொண்ட முத்துராக்கு. “பின்ன சும்மாவா…?” என்றான்.

பிள்ளை சின்ன நாயனம் வாசிப்பதைப் பார்த்ததும் காஞ்சீவரம் நயினாப் பிள்ளை சொன்ன அசங்கியமான ஒரு உவமானம் நினைவுக்குவர சிரிப்பு வந்துவிட்டது முத்துராக்குக்கு.   ஆனால் பிள்ளை பார்த்தால் நாயனத்தால் நடுமண்டையில் அடித்தாலும் அடித்துவிடுவார் என்பது நினைவுக்கு வர, கையால் வாயை மூடி கொட்டாவி விடுவதுபோல வாயைத் திறந்து மூடினான் முத்துராக்கு. 

பிள்ளையின் வாசிப்பைக் கேட்டு எல்லோர் முகமும் மலர்ந்து போயிருந்தது.  

“காதுக்குப் பகு சௌக்கியம். கண்ணுக்குத்தான் பழக கொஞ்சம் நாளாகும்” என்றார் வைரக் கடுக்கன்.

“திருளாப் பீப்பி மாதிரி இருக்கே. அதச் சொல்றீங்களா? அது கொஞ்ச நாள்ல பழகிரும்” என்றார் பிள்ளை.

“நெஜமாவே பக்கத்துலேந்து கேக்கறதுக்கே அவ்வளவு சொகமா இருக்குண்ணா” என்றார் ஒருவர்.

பட்டு கத்திரிச்சாப்ல…

பன்னீர் தெளிச்சாப்ல… 

“உள்ளத்தைச் சொல்லணும்னா… இன்னும் கேக்கணும் போல இருந்தது… நீங்க நிப்பாட்டினோன்ன.” என்றான் அம்பி. “என்ன ஒரு சுஸ்வரம்… மொதல்ல நீங்க இப்பிடி ஒரு நாயனம் செஞ்சத்துக்கு ஏதாவது காரணம் இருக்கணுமே? அதைச் சொல்லுங்கோ?”

பிள்ளையின் முகம் மலர்ந்தது. “சொல்லறேன்… ஒன் வீடு ஊரைவிட்டு ஒதுக்குப்புறமா இருக்கு. அதுனால பிரச்சினையில்லை. எப்பவும் வாசிக்கிற பாரி நாயனத்துல கன ராகங்கள வாசிச்சா, அதுவும் இந்த நேரங்கெட்ட நேரத்துல, ஊரானுங்க தெருவோட அடிக்க வரமாட்டானுவ…? நாங்க எந்த ஊருக்குப்போனாலும், சாதகம் பண்ணுறதுக்கு ஊரைவிட்டு ஒதுக்குப்புறமா இருக்குற தோப்பு, பழைய மண்டபம்னு தேடி அலைய வேண்டியிருக்கு. அதுக்கு ஒரு முடிவு கட்டணும்னுதான் இதைச் செஞ்சேன். பாரிநாயனத்திலிருந்த சின்னச்சின்ன கொறையெல்லாம் கூட நிவர்த்தி பண்ணியாச்சு. எனக்கும் அரை மூச்சுத்தான். ஊதிச் சாக வேண்டியதில்ல. நெனச்ச நேரத்துல,நெனச்ச எடத்துல  நீ பாடறமாதிரி, நானும் வாசிக்கலாம். அந்த வித்தியாசம் தெரியணும்னுதான் ரெண்டுலயும் வாசிச்சுக் காமிச்சேன். எப்படி? ஆனா இதைச் செய்ய நான் பட்ட பாடு… எனக்கும் ஆசாரிக்கும் சண்டை வராத நாளே கிடையாது… என்னடாலே முத்துராக்கு?

“ஐயோ… அண்ணே… கொஞ்ச நஞ்சப்பாடா பட்டீங்க?”

நியாயமாக “கொஞ்ச நஞ்சப்பாடா படுத்தினீங்க?” என்றுதான் கேட்டிருக்க வேண்டும். முதலில் வந்த ஆசாரியுடன் வாய்த்தகராறு முற்றி கைக்கலப்பாக வேண்டியது, முத்துராக்குதான் இதேபோல ஆசாரிக்கு விழவேண்டிய அடியை வாங்கிகொண்டு சமாதானப்படுத்தினான்.

 
“டே… நீ மேளக்காரனா? ஆசாரியா? னு கேலி  பண்ணுவாரு கோவிந்தசாமிப்பிள்ளை. இசைஞானம் உள்ள ஆசாரிதான் இதைச் செய்ய முடியும். ஒவ்வொரு தொள போட்டோன்னயும் ஊதிப்பாக்கணும். சரியா வரலேன்னா தூக்கித்தான் போடணும். எத்தன தூக்கிப்போட்டுருக்கேன்? என்னடாலே… முத்துராக்கு?”

“எனக்குத் தெரிஞ்சு… ஒரு பத்து இருக்கும்ணே…”  என்றான் முத்துராக்கு.

“ஒன் தல… மித்ததல்லாம்… இருபதுக்கு மேல இருக்கும்… ஆனா ஒண்ணு… இது மாதிரி இன்னும் ஒரு பத்து நாயனம் செய்யணும், அம்பி. இதுமாதிரின்னா இதேமாதிரியில்ல. வெவ்வேற மரத்துல… வெவ்வேற குழல் கனத்துல… வெவ்வேற தொள அமைப்போட… சரி… அதுபோகட்டும்… சாயங்காலம் பாடினயே காப்பி… இப்ப பாடு… ”

“இதுக்குமேல காப்பிவேறயா?”  என்று நினைத்துக் கொண்டு  ‘க்ளுக்’ என்று சிரித்தான் அம்பி.   சிறிது நேர அமைதிக்குப் பிறகு சங்கீத தேவதையின் சமிக்ஞைக்குக் காத்திருந்தது போல உத்திரத்திலிருந்து கௌளி அடித்ததும் மந்திர ஸ்தாயியில் குதுகுதுக்க ஆரம்பித்தான்.  

இதற்கு இடையில் நடக்கப்போகிற கச்சேரிக்குத் தம்புரா சுருதி போல ஒலித்த சிள்வண்டின் ‘சொய்’ இரைச்சலில், பக்கத்துப் புளியமரத்தில் இரண்டு கரிச்சான்கள் பேசிக்கொண்டிருந்தது இவர்கள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

“கவ்ந்யாக்” எங்கே சொல்லு? ”

“கவ்ந்யாக்… இதென்ன பிரமாதம்? ஒரு பிரெஞ்சு கந்தர்வன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நம்ம சோமபானத்திற்கு ஊருக்கொரு பேருண்டுன்னு தெரிஞ்சதுதானே? அது சரி… இதென்ன பெண்கள் நடமாட்டமே இல்லை. இவர்கள் இருக்குமிடத்தில் அப்படி இருக்க வாய்ப்பில்லையே…?”

“அதெல்லாம் குறைவில்லை. தாசிக்கு வண்டி போயிருக்கிறது. அம்பியின் மனைவி பிரசவிக்க தாய்வீடு போயிருக்கிறாள். பிறகென்ன கந்தர்வர்கள் இருக்குமிடம் களியாட்டம்தான். அது சரி… இன்றைக்கு மாலை நேரம் நாடகக்கொட்டகையில் அம்பி பாட்டுக் கேட்டேயில்லையா? எப்படி?”

“கந்தர்வன் பாட்டு வேறெப்படி இருக்கும்? ஆனால் எனக்கென்னவோ இவன் மனிதர்களுக்காகக் கொஞ்சம் நீர்க்கச் செய்து பாடுவதுபோல இருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய்?”

“எனக்கும் அப்பிடித் தோன்றும் சமயத்தில். ஆனால், அத்திபூத்தாற்போல சில வினிகைகள் நம்முடைய லோகத்தில் நடப்பது போல நடப்பதுண்டு. இப்போது வந்திருக்கிறானே… கருநாக்கு, கிக்கிக்கீ எனச்   சிரித்துவிட்டு  இவன் வரும்போது அப்பிடி சில நடக்கும். நீயும்தான் கேட்டிருக்கிறாயே?”

“உண்டு… உண்டு… தேவனின் கணக்குகள் தவறுவதே இல்லை.”   

“இவன் இப்படி என்றால், இவனுக்குப் பிறக்கும் குழந்தை எப்படி இருப்பானோ?”

“கந்தர்வர்களுக்குப் பிறக்காது. பிறந்தாலும் நிலைக்காது. தேவனின் கணக்குகள் தவறுவதே இல்லை.”

“இன்னொருத்தனுக்கும் கிடையாதோ?”

“கிடையாது. இத்தனைக்கும் மூணு பொண்டாட்டி. தொடுப்புகள் தனி. யாருக்குமில்லை.”

“போய்த் தொட்டுக்கும்பிட்டு வந்திருவானோ?”

“அது அப்பிடித்தான். எத்தனை கட்டினாலும் பிறக்காது.”

“வரப்போறது யாரு? சொர்ணமா?”

“ஆமாம்… கொஞ்சம் இரு… கந்தர்வன் பாட ஆரம்பித்தாயிற்று…”

எந்த லய வின்யாசமுமில்லாது மனித உருவிலிருந்து வந்த அந்தத் தேவக்குரல் காற்றை நிறைத்துக் காலத்தை நிறுத்தியது ஒரு நாழிகை நேரம். 

சாஹித்ய சாதுர்யங்களும் ஸ்வரப்பிரஸ்தாரங்களும் ராக பிடிகளும் லய கணக்குகளுமாகச் சங்கீதக் காதுகள் கொண்டோருக்கு அனுபவமான சங்கீதம் வேறு. சோலை, முத்துராக்குப் போன்றோருக்கு அனுபவமான சங்கீதம் வேறு.

மாலை வேளை நாடகக்கொட்டகையில் அடுத்த நாடகத்தில் வைப்பதற்காக  ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த பாடல்தான். பிள்ளை அப்போதுமிருந்தார். கனம் கிருஷ்ணய்யர் சாகித்யம். பாடல் ஒரு சாக்குதான். பாடலும் சங்கீதமும் இழைந்து கலந்தது. ஒரு கட்டத்தில் பாடல் மறைந்தது. சங்கீதம் மட்டுமே எங்கும் நிறைந்தது. குழைந்து,பறந்து,மிதந்தது. முடிந்தால் பிடித்துவிடலாம் போல. 

அம்பி பாடி முடித்தபோது சற்று நேரம் யாருக்கும் பேசத் தோன்றவில்லை. தூரத்தில் யாரோ இருமும் ஒலி. தெருவில் வரும் வண்டிச்சக்கரத்தின் அச்சாணி முனகும் ஒலி. திலாக்கிணற்றில் குடம் முழுகி நீர் நிறையும் ஒலி.  

ரொம்ப நேரம் பேசாமல் கரடுதட்டிப்போன பிள்ளையின் குரல் அசரீரி வாக்குப் போல ஒலித்தது.  

“நீ எத்தன மரத்தைக் குழாயாக் கடஞ்சு எத்தன தொள போட்டு எப்பிடி ஊதினாலும்… ஒரே கொழா… தொண்டைக்கொழா… ஒரே தொள… வாயோட… கடவுள் செஞ்ச ஒரு வாத்தியத்துக்கு ஈடாகுமா…? ஆகாதுன்னு காட்டிப்புட்டே  அம்பி… அட… அட… அட  சங்கதி எல்லாம் புதுசு புதுசா விழுது… எப்பிடிய்… யா? ஹ்ம்…”

 “எல்லாம் பகவானோட அனுகிரகம், உங்களை மாதிரி பெரியவாளோட ஆசீர்வாதம்”  என்று கும்பிட்டான் அம்பி.  

ஏதோ ஒரு இடத்திலாவது அனைவரையும் பரிசுத்த நிலையை அடையச் செய்திருந்தது அம்பியின் பாட்டு.

“சில எடங்கள்ல பாயசத்துல அப்பளத்தை ஒடச்சுப் போட்டு சாப்டாப்ல ஒரு நிறைவு… ”

“சில இடங்கள்ல இந்த கவ்ந்யாக் சாப்டாப்ல…”

“தப்பா நினைக்கப்டாது… சில எடங்கள்ல நல்ல சம்போகம் போல ஒரு மிதப்பு”

“அய்யா சொன்னாப்புல எல்லாம் புதுப் புது சங்கதி… அட அட அட…”

என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல 

“சில எடங்கள்ல எதுக்குன்னே தெரியாம கண்ணால கொட்டிண்டே இருந்தது… இதெல்லாம் பாதி பாட்டில் சாப்பிடப்பறமும் பாட முடியறதுன்னா…” என்று தலைக்கு மேல் கைகளைக் குவித்தார் வைரக்கடுக்கன்.  

“அல்லது அதுனாலதான் பாட முடிஞ்சதா?” என்று சந்தர்ப்பத்தை விடாமல் கலகலக்கச் செய்தார் பிள்ளை. 

‘அம்பி, அடுத்து?’ என்று அம்பியின் மஜாவில் ஒருவர் தலையாட்ட…

“பச்சிளந் தேமர்படர்ந்த கச்சிருக்கும் பூண்முலையாள்

பாடியே மாடி மீது தேடிவந்து காத்திருக்கிறாள்” என்று அம்பி தோடியில் எடுக்க “சர்த்தான்… அம்பிக்குச் சொர்ணம் ஞாபகம் வந்துட்டுது? யாரது கோபாலகிருஷ்ண பாரதியா?” என்றார் பிள்ளை. “அதே கனம் கிருஷ்ணய்யர்தான். அவர் அப்பிடியெல்லாம் எழுதமாட்டார்” என்றான் அம்பி.

கையை நீட்டினால் பிடித்துவிடலாம் போல அறையெங்கும் சங்கீதம் தொங்கி கிடந்தது.   

கச்சேரி அதோடு முடியவில்லை. சில தெலுங்குக் கிருதிகள். முத்துத்தாண்டவர், கோபாலகிருஷ்ணபாரதி என்று ஒரு சுற்று தமிழ்ப்பாடல்கள். சமீபமாகப் ‘பிளேட்’ டில் வந்து ஊரெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘எவரனி’. இடையிடையே பிள்ளையும் வாசித்தார். பிறகு பிள்ளையும், வைரக்கடுக்கனும் ஒரு ராகம் சொல்ல அதில் அமைந்த நாடகப் பாட்டுக்களாகப் பாடினான் அம்பி. மேலும் பல நாழிகை நேரம் சுகமாகக் கழிந்தது. சொட்டுக்கூட மிஞ்சாமல் சங்கீதமாகப் பெருகி அனைவர் முகத்திலும் தங்கிவிட்ட மலர்ச்சியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது அந்தக் காலி மதுக்குப்பி.

“நான் கேட்ட மிகச் சிறந்த பாட்டு” என்று அவர்கள் அனைவருமே வாழ்நாள் முழுதும் நினைவு கூறப்போகும் அந்தச் சங்கீத வினிகை முடிந்தபோது ரங்கராட்டினம் ஆடி இறங்கிய பிள்ளைகள் போல எல்லோர் முகமும் மலர்ந்திருந்தது.

“இதுவல்லவா சங்கீதம்… காதும் மனசும் ஒடம்பும் குளுந்துபோய்… எனக்கு நம்முடைய லோகத்தில் ஒரு இத்தாலியனோடு ‘ஒபேராடிக்’ பாணியில் இவன்பாடின ‘ஃப்யூஷன்’ மியூசிக் நினைவுக்கு வந்துவிட்டது” என்றது கரிச்சான்.

“இது கந்தர்வன் பாட்டு…”

“கந்தர்வனுக்காகப் பாடினதல்லவா?”

“சரியாகச் சொன்னாய்… ஒருவேளை அந்த இத்தாலியன்தான் இந்தக் கருநாக்கோ?  இன்றைக்கு அவன் பேசினதைக் கவனித்தாயா?ஆங்கிலத்தில் எப்படிப் பேசினான் பார்த்தாயா? இவன் முன்னிலையில் மட்டும்தான் இப்பிடிப் பேசுவான்… ”

“நாளைக்குச் சோலை கருநாக்கைக் கொண்டுவருவானா?” 
 
“கொண்டுவரலேன்னா யாரு நாயனத்தால அடி வாங்கறது…? கண்டிப்பா கொண்டு வருவான்… இல்லேன்னா நானே போய்க் கொண்டு வரச் சொல்லுவேன்.”


“அம்பி டிக்கெட் வாங்கறத்துல அவ்வளவு குறியா இருக்கியே?”

“பின்ன அவனோட சேத்துதானே நமக்கும் ரிட்டன் டிக்கெட் போட்டுருக்கு… நீ வரலியா…”  

“அய்யயோ… நாளை எண்ணிக்கிட்டிருக்கேன்… இன்னும்  நாலு மழை… நாலு வெயில்தான… முடியல?”

“ அய்யோ… பாவம்… வடக்கத்தி சங்கீதம் கத்துக்கொண்டு முழுசா சங்கீதத்தில எறங்கப்போறானாம்… இப்பத்தானே சொன்னான்… கேட்டயா?”

“ கேட்டேன்… கேட்டேன்… தேவனின் திட்டம் வேறாக இருக்கிறதே, என்ன செய்ய? மீதத்தை மேல வந்து பாடட்டும்… ”

“சரியாக் கெளம்பிருவான்தானே?”

பிள்ளை… அம்பி… சொர்ணம்… சோலை… கருநாக்கு…  

தேவனின் சேர்மானங்கள் தோற்பதேயில்லை.

“இதோட நாலாவது தடவைக் கத்துது கரிச்சான் குருவி” என்றான்  முத்துராக்கு.

“ஸ்வரக்கணக்குத்தான் வராதுன்னா, இதுவும் வராதா? பேஷ்… இது மூணாவது தடவ… ஏதோ கரிச்சான்குருவின்னாவது தெரிஞ்சிருக்கே? இங்க பார்றா… வெச்சிருந்த பருப்பெல்லாம் ஒரே ஆளா காலிபண்ணிருக்க…” என்று வாதாங்கொட்டைப் பருப்பு இருந்த  தட்டையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தார் பிள்ளை.

தன்னைப் பாராட்டியது போலக் கழுத்தை உள்ளிழுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டான் முத்துராக்கு.

“நம்ம பிரெண்ட்ஸ்தான். நாங்க பேசிக்கறதுண்டு… ” என்றான் அம்பி. கொஞ்ச நேரம் கழித்துதான் கரிச்சானைச் சொல்கிறான் என்று புரிந்தது பிள்ளைக்கு.


“அப்பிடியா, இப்ப என்ன சொல்லிச்சு… ” என்றார் பிள்ளை சிரித்துக் கொண்டே.

“முத்துராக்கோட கணக்கு எப்பவும் சரியா இருக்கும்” என்று சிரித்தான் அம்பி. “அப்பிடியா சொல்லிச்சு?” என்று கூர்ந்து பார்த்த பிள்ளையின் பார்வை வேறொரு தினுசாக இருந்தது அம்பிக்கு.   

“பாரு… சேர்மானம்னோண்ண ஞாபகத்துக்கு வருது… சோலை எப்பிடி வடிக்கிறான்னு ஒன் சமையக்காரன்ட்ட கேட்டுக்கச் சொல்லு  அம்பி… டேலே சோலை… “

“அய்யா… குடுத்துர்றேங்க… நாளைக்கி ஒரு குடம்… ”  என்றவாறே அறை வாசலிலிருந்து எழுந்து பணிவோடு முன்னால் வந்தான் சோலை. “அதுகுடுடா வேணாங்கல… அம்பியோட…”

அம்பியின் முகத்தில் உறைந்த திகைப்பு மறைந்து சிரிப்பு பரவ நெடுநேரமானது. 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...