இரண்டு நாளில் வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட இருவரைப் புகைப்படம் எடுக்கலாம் எனும் திட்டத்தைக் கவின்தான் சொன்னான். கோலாலம்பூரின் மையத்தில் இருந்த மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி நிலையத்தின் முன்னிருந்த சிமெண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு மொத்த உடலையும் பரப்பி மல்லாந்து படுத்திருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், மனம் பிறழ்ந்தவர்கள் என எல்லாக் காட்சிகளுமே எங்கோ ஓரிடத்தில் பார்த்த ஒளிப்படங்களை நினைவுப்படுத்தின. எதையுமே படமெடுக்கத் தோன்றவில்லை.
வினோத் மாஸ்டரின் உரையை நினைவுபடுத்திக் கொண்டேன்.
“எதைக் காட்டப் போறோங்கற கோணந்தான் ரொம்ப முக்கியம். டிரோன் ஷாட்ல மேல இருந்து ஒன்னு படமெடுக்குறோம். அந்தக் காட்சியில் எல்லாம் ஒறஞ்சி போயி இயற்கையோட பிரம்மாண்டமே சின்னதா தெரியுற மாறி தெகப்பா இருக்குது. அது பாக்குறவங்களுக்கு தெகப்ப மட்டும் தருது. அதுல இருக்குற தெகைப்ப மட்டும் பாக்குறவனுக்குக் கொடுத்தா அதுல ஒன்னுமில்லன்னுதான் சொல்வேன். வானத்துல பறவைங்க பறந்துகிட்டே சுத்துங்க… அப்படியே நிக்காம பார்வை மாறிக்கிட்டே வரும்… அதோட பார்வைய டிரோன் ஷாட்டா மாத்துனா எப்படி இருக்கும்… ஒரு பறவையோட கண்ணுல ஒலகம் என்னவா இருக்குன்னு ஒரு படத்த எடுத்தா எப்படி இருக்கும். அதான் மாஸ்டர் பீஸ்… அப்படியொன்னு தேடணும்’’ எனத் தான் எடுத்த படங்களைக் காட்டினார்.
வேர்கள் பின்னியிருந்த ஆங்கோர் வாட் கோவிலின் படத்தைக் காட்டி “இத பாக்குறப்ப… என்ன உணர்வு வருது? எதுவா இருந்தாலும் சொல்லுங்க…” என்றார். அது ஒரு சிறுபிள்ளை விளையாட்டைப் போலத்தான் தோன்றியது. கலை நுட்பத்துடனும் பிரமாண்டமாக எழுந்திருக்கும் கட்டிடம் மனிதன் இயற்கைக்கு விட்ட சவால் என்று புரிந்து கொண்டால் அதன் மேல் படர்ந்திருக்கும் வேர்களும் மரமும் இயற்கை தன் ஆற்றலை மனிதனுக்குக் காட்டுவதாகப் புரிந்து கொள்ளலாம். இப்படியான எண்ணம்தான் எனக்குள் எழுந்தது.
புதிதாகப் படமெடுக்க வரும், கற்றுக்கொள்ளும் ஒளிப்படக்கலைஞர்களுக்கான பட்டறையில் உரை வழங்கும் வினோத் மாஸ்டரின் எல்லா புகைப்படங்களையும் முன்னரே பார்த்து இருந்தேன். அவர் படமெடுக்கும் கோணத்தைக் கொண்டே எதை உணர்த்த வருகிறார் என்பதை அனுமானிக்க முடிந்ததால் பெருமளவில் பட்டறையும் எவ்வாறு அமையப்போகிறதென்பதையும் ஊகித்திருந்தேன். கைகளைத் தூக்கிப் பதிலைச் சொன்னேன்.
“எக்ஸலண்ட்… இந்தப் பதில இன்னும் கூட வேற வகையா சொல்லலாம்” எனச் சொல்லி நான் சொன்ன பதிலை இன்னும் விரிவுபடுத்தி வேறு வகையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இதே மாதிரியான புகைப்படங்களை எடுக்கும் நுட்பங்களை விளக்கும் காணொளிகளின் விரிவுரைகளை நிறையவே பார்த்திருக்கிறேன். அதில் இருக்கும் அறிவார்ந்த பாவனை பேச்சு சலிப்பையே தரும். அதற்குப் பதிலாகப் படங்களை எடுக்கச் செய்வதன் மூலம்தான் அதனை மேம்படுத்த முடியும்.
இறுதியில் பட்டறை நடந்த பள்ளியைச் சுற்றிலும் இருக்கும் காட்சிகளைப் படமெடுக்கும் இடுபணி ஒன்றை வினோத் மாஸ்டர் தந்தார். பூக்கள், மரங்கள், இலைகள் ஆகியவற்றின் அண்மைக்கோணத்தில் எடுக்க அரைமண்டி நிலையில் உட்கார்ந்தும் முட்டிப் போட்டும் பட்டறைக்கு வந்த பங்கேற்பாளர்கள் அல்லாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் அண்ணாந்து பார்த்தவாறே நிறம் மாறியிருந்த மேகத்தைப் படம் பிடித்தனர். கவின் வெள்ளை, சிவப்பு, அடர் சிவப்பு என மூன்று நிறங்களில் இருந்த மேகங்களை இலை மறைவிலிருந்து படம் பிடித்திருந்தான்.
நான் அந்தப் பழையப் பள்ளிக் கட்டிடத்தின் சுழற்படிகளின் மேல் இருக்கும் பிளாஸ்டிக் மேற்கூரையின் மேல் மங்கலாகத் தெரிந்த ஒற்றை மேகத்தைப் பிடித்தேன். அந்தப் படத்தைப் பார்த்து மாஸ்டர், தான் பார்த்த அழகான படங்களில் ஒன்று என்றார். எனக்கு அதில் ஏதோ ஒரு குறையிருப்பதாகத்தான் பட்டது. அழகான படமென்று தெரிவதை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதில் எப்போதும் ஒரு தயக்கம் இருக்கும். அதை மெருகூட்டும் அளவு எடிட் செய்த பின்னர் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒன்றைப் பதிவிடுவேன்.
கவின் புகைப்படம் பிடிப்பதில் எனக்கிருக்கும் ஆர்வத்தை அறிவான். கல்லூரியை முடித்துவிட்டுச் சில நாளிதழ்களில் புகைப்படம் எடுக்கும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். கல்லூரியில் நான் எடுத்த கோர்ஸுக்கும் என் விருப்பத்துக்கும் தொடர்பு இல்லாமல் இருந்ததால் நிராகரிப்புகளே இருந்தன. கவினும் புகைப்படம் தொடர்புடைய சில வேலைகளைப் பரிந்துரைப்பான். எல்லாமே, சில நாட்கள் மட்டுமே நீளும் பிரி லாண்ஸ் வேலைகள். இந்த மாதிரியான வேலைகளைச் செய்யும்போது படமெடுப்பது மட்டுமின்றி அங்கிருக்கின்ற எல்லா வேலைகளும் செய்ய வேண்டி வரும். அதனாலே, அவன் சொன்ன சில வேலைகளைத் தட்டிக் கழித்திருக்கிறேன். இந்த ஓராண்டாகத்தான் ஐ.டி நிறுவனமொன்றில் தரவுகளை உள்ளிடும் பணியொன்றில் இணைந்திருந்தேன். ஆறு மாதத்தில் புதிய கார் வாங்கக் கூடிய அளவில் நல்ல சம்பளம் கிடைத்தது.
கவின் பார்க்கும் போதெல்லாம் “டேய், அப்படியே விட்டுராதடா… எதாவது ஷூட்லாம் செய்’’ என வற்புறுத்துவான்.
அவன்தான் முகநூல் பக்கத்தில் இருந்து இந்தப் பட்டறை குறித்த விவரங்களை அனுப்பி பதிவு செய்ய வற்புறுத்தினான். “டேய், புரோபேஷனல் நாலேஜ் கோன்டேக்ஸ் எல்லாமே இப்படித்தாண்ட கேய்ன் பண்ண முடியும்…” என வற்புறுத்தினான்.
அவனுக்கும் புகைப்படம் பிடிப்பதில் ஆர்வம் இருந்தது. என் மூலமாக அது தொற்றிக் கொண்டிருக்கலாம். அதுவும் ஐபோன் வாங்கிய பிறகு அவன் தீவிரம் அதிகரித்திருந்தது.
வெளியில் ஒன்றாகச் செல்லும்போது எந்தக் கட்டிடம் முன்னாலும் நின்று சில நிமிடங்கள் படம் பிடித்து அதை மறுபடியும் பார்த்து எடிட் செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் “டேய் ஒவர்ரா… எங்க பாத்தாலும் ஒங்க தொல்லத்தான்டா… படம்… வீடியோன்னு எடுத்து இன்ஸ்டால போட்டு ஆச மூட்டுறீங்க… ஒன்னுமில்லாத எடத்துலயெல்லாம் இப்ப பராக்குப் பாத்துட்டு நிக்குறானுங்க…” எனச் சொல்வேன். அதையெல்லாம் அவன் பொருட்படுத்துவதில்லை. ‘மேகக்காதலன்’ என்ற பெயரில் அந்திவானத்தையும் அதிகாலை வானத்தையும் படமெடுத்துப் போட்டுக் கவிதை எழுதி இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறான். அவனும் உடன் வருவதாகச் சொன்னதால்தான் பட்டறையில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு அமர்வின் போதும் ஆர்வமாகக் குறிப்புகள் எழுதத் தொடங்குகிறவன், இறுதியில் எதாவது படம் வரைந்து கொண்டிருப்பான். “டேய், மொத்தம் பத்து டெக்னிக் சொன்னாருலே… கடைசி ரெண்ட மிஸ் பண்ணிட்டேன்… அது என்னா?” என்பது போல கேள்விகள் கேட்பான். நான் அமைதியாக இருந்ததைப் பார்த்துவிட்டுப் பேசாமல் எதையாவது வரைய ஆரம்பித்துவிடுவான்.
நிகழ்ச்சியின் இறுதியில், “ரெண்டு நாளு எடுத்துக்குங்க… ஒரு படத்த பிடிச்சு நம்ப குருப்ல போடுங்க… அந்தப் படத்த நல்லா எடுங்க… ரெண்டு நாளைக்கப்புறம் அத எப்புடி மேம்படுத்தலாம்ன்னு பேசுவோம். உரையாடலா எடுத்துட்டுப் போறப்பத்தான் புதிய சாத்தியத்த பாக்க முடியும். நேரம் எடுத்து ஒங்க மனசுக்கு ஒக்கேன்னு தெரியிறத அனுப்புங்க. அதர் வைஸ் டோண்ட் வேஸ்ட் அவுர் டைம்,” என்றார்.
மஸ்ஜிட் ஜாமேக்கில் எதையும் படமெடுக்கத் தோன்றவில்லை. கவின் வெறுமனே ஒரு மணி நேரம் ஐபோனைக் கைப்பேசித் தாங்கியில் வைத்து டைம் லேப்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான். வெவ்வேறு மனிதர்கள் வருவது போவதாய்ச் சென்று கொண்டிருந்த காணொளியில் ஒரு மனிதர் தவறி கீழே விழுந்து நடந்து சென்றது கூட மின்னல் பாய்ச்சலைப் போலத் தெரிந்தது. அதை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், சற்று நேரத்துக்கெல்லாம் மெதுவான வயலின் இசையில் அதை ஓடவிட்டு இன்ஸ்டாவில் போட்டுத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அந்த இசையைக் கேட்கும் போது வெறுப்பாக இருந்தது.
மதியம் 2 மணியாகியப் பின்னரும், படத்துக்கான கோணத்தைக் கண்டறிய முடியாமல் தடுமாற்றமாக இருந்தது. மதிய உணவு சாப்பிட கடைக்குச் சென்றோம். முட்டையைப் பொரித்துக் கொண்டே சட்டியிலிருந்த கோழிகளைத் திருப்பிப் போட்டு “கோழிச்சாப்பாடா… பிரதர்… அஞ்சு… ரெண்டு… ஏழு வெள்ளி…” எனச் குத்துமதிப்பாக கணக்குப் பார்த்துச் சொல்லவும் பத்து வெள்ளி நீட்டினேன்.
“சில்லற இருக்கா பிரதர்…” எனக் கவினைப் பார்த்தார். வயலின் இசையை மெதுவாக ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவன் பட்டெனச் சட்டைப்பையைத் தடவி இல்லையெனச் சொல்லவும் பொரிந்து கொண்டிருந்த முட்டையைப் பிரட்டி விட்டு “ஒரு ரெண்டு நிமிசம் கழிச்சு வந்து கட்டுறிங்களா?” என்றார் கடையைக் கவனித்துக் கொள்ளும் அக்கா.
மதிய நேரமென்பதால் அருகிலிருக்கும் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் கூட்டம் அதிகமிருந்தது. கழுத்துப் பட்டை அணிந்து கொண்டு வரிசையில் நின்று நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொரியல், கூட்டு, பிரட்டல், அவியல், துவையல் வகைகளைத் தட்டில் நிரப்பிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினர். கடையில் இருந்த ஐந்து மேசைகளும் நிறைந்திருந்தது. நானும் கவினும் உணவைப் போட்டுக் கொண்டு அமர்வதற்கு இடம் தேடினோம். கடையில் பணியாற்றிய கேரளாக்காரர் கைக் கழுவும் இடத்துக்குப் பக்கத்திலே மேல் மாடியிலிருந்து குளிரூட்டி நீர் சொட்டுச் சொட்டாக வழிந்து கொண்டிருந்த குழாயருகே இரு நாற்காலிகளைக் காட்டி “இவ்விட இருக்கி” என்றார். மேலிருந்து விழும் ஈரச்சொட்டுகள் கால்களில் சொட்டுச் சொட்டாகப் பட்டுக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது. கவின் முனகியவாறே இன்ஸ்டாவில் ஓடவிட்டிருந்த பாடலை மாற்றும் முயற்சியிலிருந்தான்.
எங்களுக்கு எதிரில் சாப்பிட்டு முடித்திருந்த பெரியவர் மெதுவாக எழுந்து கைக் கழுவும் இடத்துக்குச் சென்றார். எதிரில் ஈரத்துணியிலிருந்து எழும் கெடுமணம் வீசியது. தலைதூக்கிப் பார்த்தப்போது, ஒடுங்கி போயிருந்த உடலும் வெளுத்த மேற்சட்டையும் உள்ளே பனியனும் அணிந்திருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அமர்ந்திருந்தார். மூக்கைத் தொடுமளவு வளர்ந்திருந்த மீசையைத் தடவி விட்டுக் கொண்டிருந்தவரை நானும் கவினும் தவிர்க்கவே நினைத்தோம். இந்த மாதிரியான ஆட்களைப் பேருந்திலும் ரயிலிலும் நிறையவே சந்தித்திருக்கிறேன். அருகில் இருப்பவர்களிடம் பேசுவதற்கு எந்தக் காரணமும் இருக்காது. எதிலாவது தொடங்கி பேச ஆரம்பித்து ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். கவின் சாப்பாட்டுத் தட்டுக்கருகிலே கைப்பேசியை வைத்துக் கொண்டு இடக்கையால் இன்ஸ்டாவில் குறுங்காணொளிகளை நகர்த்தத் தொடங்கியிருந்தான். நான் சோற்றுத்தட்டையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
“ஷூட்டிங்குல வெல கொறவா இருக்குற கடயிலிருந்து சாப்பாடு போடுறானுங்க… ஒரு எளவும் நல்லா இல்ல… அதான் இங்க வந்து சாப்புடுறேன்” எனத் தனக்குத்தானே பேசிக் கொள்வதைப் போல சொன்னார். கவின்தான் முதலில் தலை தூக்கிப் பார்த்து “ஷுட்டிங்கா… என்ன படம்?” என்று கேட்டான். அவனைப் பார்த்து முறைத்தேன். இன்ஸ்டாவில் கையை ஓடவிட்டவனைப் பார்த்து எதிரிலிருப்பவர் “நான் எல்லா படமும் நடிப்பேன் தம்பி… போன்ல தட்டிப் பாரு… டுவா சம்புர் சத்துன்னு ஒரு மலாய் படம் வந்துச்சுல… அதுல நடிச்சுருக்கேன்.’’ எனத் தொடங்கினார். யுடியூபில் தேடிப் பார்க்கக் கைப்பேசியை எடுத்துத் திறந்தேன். அவர் தலையிலிருந்த வட்டத்தொப்பியைச் சற்றே திருப்பி என்னைத் தடுத்து “இத கேளு… அதோட ஆடிஷனுக்கு வரிசையா 150 பேர் நிக்குறானுங்க… நான் இருப்பேன் அறுபதோ எழுபதோ… உள்ள போய்… டேய்… ஆட்ரா ராமா… ஆட்றா ராமான்னு பல்டி அடிச்சுக் காமிச்சேன்” எனக் கைகளை விசிற தூக்கியவர் பட்டென நினைவு வந்தவராய்ச் சோற்றுப் பருக்கைகளை மங்கில் தட்டிக் கொண்டார்.
“ஆடிஷன்ல இருந்த மலாய்க்கார பொம்பள… இதெல்லாம் பியாசாலா… வேற எதும் மிமிக்ரி செய்யுன்னு சொன்னா… நா ஒடனே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே… அதோடு மாத்திரமல்ல… துவான் துவான் புவான்… சயா மெந்தரி சக்காப்… புக்கான் சுந்திரி சக்காப்ன்னு பேசினேன்” எனக் கண்களை அகல விரித்து உடலை முன் நிமிர்த்திப் பேசிக் காட்டினார்.
அவர் பேசியது அப்படியே மறைந்த டத்தோஶ்ரீயைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது. கவின் மேசைக்கடியில் கைப்பேசியை வைத்துக் கொண்டு எதையோ செய்து கொண்டிருந்தான்.
“ஆடிஷன் செஞ்ச ராஸ்கல், இதுவும் நெறய பேரு செஞ்சிட்டாங்க… வேறன்னான். எனக்கு என்னமோ ஒரு பொறி… பக்கத்தில செவுரு இருந்துச்சு பாரு… கோத்தா ராயா பஸ் ஸ்டாண்ட்ல ஒருவயசானவர ஒரு தடவ பார்த்துருக்கேன். அது சட்டுன்னு நெனவுல வந்துச்சு. சின்ன ஒடம்புத்தான். தூண்ல இடிச்சுக்கிட்டு நடந்து போனாரு. அப்படியே ஒடம்பெல்லாம் ஒடுக்கிட்டு தோள்பட்டைய ஆனமட்டும் குறுக்கிக் கொண்டு செவுத்த இடிச்சுக்கிட்டே நடந்தேன் பாரு…’’ எனத் தோளை அசைத்துக் காட்டினார். கையிலிருந்த கைப்பேசியை எடுத்துக் காற்சட்டைப் பைக்குள் திணித்தேன். கவின் தலைதூக்கி அவரைப் பார்ப்பதும் கைப்பேசியில் எதையோ பார்ப்பதுமாய் இருந்தான்.
அவரது தோளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கிடையிலிருந்த இரண்டடி அகலத்தைத் தாண்டி என்னருகே நடந்து வந்து திரும்பியது போல இருந்தது. “அப்புறமாத்தான் நடிக்க சான்ஸ் கொடுத்தான். வந்த 150 பேத்துல பொறுக்கி பொறுக்கி அஞ்சு பேருக்குத்தான் வாய்ப்பு. எனக்கு மட்டும்தான் டயலாக் பேச சான்ஸு. மத்தவங்க எல்லாம் கூட்டத்துல நிக்குற எக்ஸ்ட்ராஸ்தான்… தம்பி நான் ஒன் சாப்பாட்டுக்கும் காசு கட்டுறேன்…” என்றார்.
நான் எதுவும் பேசாமலே இருக்கவே மீண்டும், “நான் கட்டுறேன்… நீ ஒன்னும் கட்ட வேணாம்” என்றார். கவின் என்னைப் பார்த்து “வேணாம்” எனக் குரல் வராமல் சொன்னான்.
“வேணாம் பரவால்ல நானே கட்டிக்கிறேன்…” என்றேன்.
ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா எனக் கேட்டார். “இல்ல… பிரண்டு” என்றேன்.
“கல்யாணம் பண்ணிட்டா அதெல்லாம் ஒன்னுமிருக்காது.”
“ரொம்ப அனுபவமோ?” கவின் கேட்டான்.
“கோத்தா ராயா ஸ்டேசன்லே ’23 ஏ’ன்னு பஸ் வரும். அதுல ஒரு பொண்ண பாத்தேன். மறுநாளே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தம்பி.” என்றார்.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
“நம்புவியா… என்ன ஜனம் சொல்ற பஸ்ஸுல… ஜெஜென்னு இருக்கும்… சார்டின் மீனு மாரி அடச்சிக்கிட்டுத்தான் போவோம். எள்ளு போட கூட எடமிருக்காது. அப்படி நெருக்கியடிச்சு வர்ரப்ப… இந்தப் புள்ள ரொம்ப நாளு என்ன பார்த்துட்டு வந்துருக்கும் போல… நானும் எளவட்டம்தானே… அவளைப் பாத்துருக்கேன். அவ்ளோ ஒன்னும் நெனவுல இல்ல. ஒரு நாள் என்னைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டதும் கொஞ்ச நேரத்துலயே ஒத்துக்கிட்டேன். கோயில்ல வச்சு தாலி கட்டுனேன். குடும்பம் நடத்துனோம்…’’ வாயில் இருந்த சோற்றை நிதானமா விழுங்கிவிட்டு வறட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து “எல்லா சும்மா தலைவரு படத்துல வர பாட்டுல நடக்குற மாதிரி மடமடன்னு நடந்துச்சு போ, கல்யாணம் காதல்’’ இப்போது இன்னும் வேகமாகச் சிரித்தார்.
“எங்கம்மா வீட்டுக்குள்ளே எங்கள சேக்கல. தனியா போயி தங்குனோம். அப்பல்லாம் தலைவரு பின்னாலே ராவும் பகலும் ஓடுனேன். படம் கிறுக்குப் புடிச்சி அலைஞ்சேன். தெனம் தெனம் சண்ட போட்டுத்தான் நாள கடத்துனோம். ஆனா என்னை நம்பி வந்தவ அவ. ஒருநாள் கூட பட்டினி போட்டதில்ல. தம்பி எதுக்கும் ஒன் நம்பரு தந்துட்டுப் போ… படத்துல நடிக்குற லட்சணம் முகத்துல தெரியுது… எதுனா வாய்ப்பு வந்தா சொல்லுவேன்ல. காசு நான் கட்டிடுறேன்… நீ ஒன்னும் காசு கட்ட வேணாம்” என்றார். இப்பொழுது கடையிலிருந்த ஆட்கள் குறைவாக இருந்தனர். கடையில் இரண்டு மூன்று மேசைகள் காலியாக இருந்தன.
கையிலிருந்த கேமரா பையைப் பார்த்ததும், “படமெல்லாம் எடுப்பீங்களா…” என்றார்.
“ஆமா” என எனக்கு முந்தி கவின் சொன்னான்.
“ஒவ் அப்டி சொல்லு… அதான் முகத்துல கலைக்குண்டான லட்சணம் தெரியுது… நீ வர்ர வேண்டிய ஆளுத்தான்… எதையெல்லாம் படமா எடுத்து வச்சிருக்க” எனக் கேட்டார்.
“அந்த அளவுக்குல்லாம் இல்ல அங்கள்… இயற்கை காட்சிகள், கட்டடம்… அப்புறம் கொஞ்சம் மாடல்ஸ்ல்லாம் போட்டோ ஷூட் செஞ்சிருக்கேன்…” என்றேன்.
“இன்ஸ்டா தெரியுமா அதுல போய் தேடிப் பாருங்க…” எனக் கவின் சொல்லி முடிப்பதற்குள்… “அதுல்லா எனக்கு என்ன தெரியும்’’ என்றார்.
“என் கையும் கேமிரா தூக்கின கைத்தான் தம்பி” சிவப்புப் பையிலிருந்த உணவுப்பொட்டலத்தை மேலேற்றிக் கையைக் காட்டினார். அவர் கையை ஒரு முறை பார்த்துக் கொண்டேன். நீண்டு எலும்பு துருத்திக் கொண்டிருந்த விரல்கள். நகங்கள் வளர்ந்து அழுக்கின் தடங்கள் தெரிந்தன.
“டத்தோஶ்ரீ இருந்தாருல்ல… அவரு பின்னாலே ஓடிப் போயி படமெடுப்பேன். கைக்குள்ள வச்சிருந்தாரு. அவருக்கு எல்லாமாவே இருந்தேன். அவரு இங்க வர்ரதா இருந்தா… அந்த முச்சந்தில கட்டையில செஞ்சு வச்சுருக்கானே போலா பந்து… அங்கன வரைக்கும் ஜனம் தெரண்டு நிக்கும். பால் குடி பிள்ளைங்க… புள்ளக்குட்டிங்க எல்லாத்தயும் கூட்டிக்கிட்டு மொத நாளு ரவ்வுலேயே வந்து நிக்கும். தேர்தல் காலக்கட்டத்துல ஒரு தடவ வந்தப்ப ஒரு பொம்பளையாளு கழுத்துல போட்டுருந்த சங்கிலிய எவனோ புடிச்சு இழுத்துட்டான். மேடையில வந்து ஒரு ஆளு என்கிட்ட சொல்றாரு… தலைவர்கிட்ட சொன்னேன். மேடைக்கு வரச் சொன்னாரு. பாக்கெட்டுல கைய விட்டு கத்தையா ஐந்நூறை எடுத்து தந்தாரு. அந்தம்மா கையில் இருந்த கொழந்த கழுத்துல இருந்த வெள்ளை மணிய கடிச்சுட்டு இருக்குது. தலைவரு காசு கொடுத்துட்டுக் கொழந்தைய கொஞ்ச கையெடுக்குறாரு… அத அப்படியே புடிச்சேன். பேப்பர்ல அந்தப் படத்த மறுநாள் போட்டான் பாரு… தேர்தல அதான் ஹைலட்டா இருந்துச்சு… தலைவர் ரெண்டாயிரம் வெள்ளி கொடுத்தாரு…”
நான் பேச்சிலிருந்து விடுபட நினைத்துப் பார்வையை வேறுபக்கம் திருப்பினேன்.
“அதெல்லாம் பழய கத… எப்பயோ கட்டி தலமுழுகிட்டேன்… அதுகப்புறம்தான் படம் கிறுக்குப் புடிச்சு நடிக்கப் போனேன். கத எழுதுவேன்… படமெடுக்க நெனச்சு நல்ல கதையா ரெடி பண்ணுனேன். மலேசியாவுல இதுவரைக்கு அப்படி ஒரு கதையில படம் வந்ததில்ல. ஒரு புண்ணியவான் நல்ல கதன்னு பாராட்டி படமெடுக்க முன்வந்தாரு. முன் பணமா பத்தாயிரம் கொடுத்தாரு, எல்லாத்தையும் ரெடி பண்ணுனப்ப கோவிட் வந்து எல்லாத்தையும் கெடுத்துச்சி. கோவிட்டுல வேல வெட்டி இல்ல. இருந்தாலும் அந்த ஆளோட காச தொடல. திரும்ப தயாரானப்ப அவருக்குப் படம் எடுக்க ஆச இல்ல. அவரு கொடுத்த காச திரும்ப அவருக்கே கொடுத்திட்டேன். ஒழைக்காத காசு நமக்கெதுக்கு?”
கவின் வேகமாகச் சிரித்தான். கைப்பேசியில் எதையோ அதிசயமாகப் பார்த்துவிட்டவனைப் போல முகத்தை வைத்திருந்தான். ஆனால் அது அவர் சொல்வதைக் கேட்டுதான் என நான் உணர்ந்திருந்தேன்.
“தம்பி, நான் கத எல்லாம் வச்சுருக்கேன். கொஞ்சம் காசு கெடச்சா எடுத்துருலாம். தலைவருகிட்ட சொல்லியிருந்தா அப்பவே படமெடுக்க காசு கெடச்சுருக்கும்… அவங்களுக்கும் நம்மள எப்படி வச்சுக்கணும்னு தெளிவா தெரியும்… அவுங்ககிட்ட நெருங்கி இதுல்லா கேட்க முடியாதபடி வச்சிருப்பாங்க… எல்லாத்தலயும் ஒரு ரவுண்டு வந்து பாத்துட்டேன்… கெடச்ச காசு வச்சு அன்னாடம் வாழ்க்கைய ஓட்டணும்ல… இந்தப் படமெடுக்கனும்ன்ற கிறுக்கு மட்டும் நிக்குது”
“ஒன் ஃபோன் நம்பர எழுதி கொடு…”
“ஒங்க பேரு என்ன?” எனக் கேட்டேன்.
“என் பேரு… அது என்னத்துக்கு சும்மா… ஸ்ரீதரன்னு வச்சுக்கேயேன்… அதான் வச்சுக்கிட்ட பேரு… சரி தம்பி… படம் வாய்ப்பிருந்தா சொல்றேன்… நம்பரு தரலியே” எனச் சொன்னதும் கவின் பொய்யான சில எண்களை ஒரு தாளில் எழுதிக் கொடுத்தான்.
எனக்குச் சலிப்பாக இருந்தது. அப்படியே பேச்சை அறுத்துக் கொண்டு பணம் செலுத்த சென்றேன்.
தட்டிலிருந்த சோற்றை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு பின்னாலே வந்து நின்றவர், “நான் கட்டுறேன் தம்பி” என்றார். அவருக்கும் சேர்த்தும் 15 வெள்ளி கட்டினேன். “ஒரு சாப்பாடு புங்குஸ் பண்ணுமா” எனச் சொன்னதும் கடைக்கார அக்கா பழகியத் தொனியில் “என்ன அங்கிள் ஒரு சைவச் சாப்பாடு… மீன் குழம்பு ஊத்தி புங்குஸ் அதுதானே வேறு எதாவது தம்பா இருக்கா” சைவச் சாப்பாடைப் பொட்டலம் கட்டிக் குவளையிலிருந்த தண்ணீரில் நடுவிரலை நனைத்து நெகிழிப்பையைத் திறந்து பொட்டலத்தைப் போட்டு அஞ்சு வெள்ளி பிரதர் என்றார். அவர் சொல்வதிலிருந்தே அடிக்கடி கடைக்கு வந்து செல்பவர்தான் எனத் தெரிந்தது. நான் பதினைந்து வெள்ளியை மீட்டுக்கொண்டு ஐம்பது ரிங்கிட்டை நீட்டவும் அதை பிடுங்கிக் கொண்டவர் “இது என்னோட கணக்கா இருக்கட்டும். அப்புறமா அம்பது வெள்ளியாவே ஒன்னோட அக்கவுண்டுல போடுறேன்… நம்பரு கொடு,” என்றார்.
கவின் என்னை எரிப்பது போல பார்த்தான். நான் அவரைத் தடுக்கவில்லை. அந்தப் பரபரப்பான சூழலில் அவரிடம் விவாதம் செய்வது என்னவோ போல இருந்தது. எல்லாரும் எங்களையே வேடிக்கைப் பார்ப்பது போன்ற உணர்வு. வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
“தம்பி… தம்பி” எனும் குரல் கொஞ்ச தூரம் பின்னால் வந்து பின்னர் காற்றில் மறைவதை உணர்ந்த பிறகுதான் நிதானமானது. வாயெல்லாம் கசந்தது.
“டேய், அந்தாளு நல்ல கத உடுது… நான் அந்த டிராமாவ இப்பத்தான் யூடியுப்ல பாத்தேன்… கூகள் பண்ணியும் பாத்தேன். அவரு நடிக்கல… எல்லாமே பொய். ஏமாந்தவனுங்களா பாத்துக் குனிய வச்சு ஏறுது… ச்சை… ” என்றான்.
நான் ஒன்றும் பேசவில்லை.
“பெரிய தர்ம வல்லலு… அம்பது வெள்ளிக்கு ஆப்பு வச்சானா” எனச் சிரித்தான்.
எனக்கு அவர் நடித்துக் காட்டிய பாத்திரங்களை வைத்தே புகைப்படமெடுத்திருக்கலாம் எனத் தோன்றியது. அவர் முகத்தில் ஒரு வசீகரம் இருந்தது. ஒருவேளை அதுதான் என்னைத் தடுத்ததா என்றும் தெரியவில்லை. ஆனால் அவரை மாடலாக மாற்றி எடுக்கும் படம் அபாரமாக வருமெனத் தோன்றியது. நடிக்கத் தெரிந்தவர். கேட்கும் கோணத்தைக் காட்டுவார்.
எல்.ஆர்.டி ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றோம். பேருந்து நிறுத்தமருகே பிறந்த சில மாதங்களே ஆன குழந்தையை மடியில் வைத்து ரொஹின்ங்யா ஆண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். வெய்யில் நனைத்த குழந்தை முகம் வாடிப் போயிருந்தது. “சை, பச்சக்குழந்தய வச்சு எப்படித்தான் இந்த மாதிரி செய்யுறானுங்களோ’’ என முனகிக்கொண்டே பையிலிருந்து ஐந்து வெள்ளியை எடுத்து அவருக்குப் போட்டான்.
உணவு இடைவேளை முடிந்து பணியாளர்கள் அவரவர் அலுவலகத்துக்குத் திரும்பி கொண்டிருந்தனர். முன்னால் அமர்ந்திருந்த முதியவர் பிளாஸ்டிக் குவளையுடன் அமர்ந்திருந்தார். அவரருகில் வெயிலின் உணக்கத்தில் படுத்திருந்த பெண் கால்வாயை நோக்கிப் பின்னால் திரும்பி படுத்திருந்தார். அவரின் மேல் போர்த்தப்பட்டிருந்த துணி விலகி புட்டமும் முதுகும் தெரிந்தது. உடல் முழுதும் அரித்து காய்ப்பேறிப் போயிருந்த புண்கள் தெரிந்தன. உடம்பில் எழுந்த மெல்லிய மூச்சு சீறலைப் போலத்தான் இருந்தது. பக்கத்திலே சிறிய வானொலி ஒன்றிலிருந்து தமிழ்ப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
எங்களைப் பார்த்ததும் குவளையை நீட்டினார். கவின் காற்சட்டைப் பையிலிருந்து இரண்டு வெள்ளியை எடுத்துப் போட்டான். பிளாஸ்டிக் குவளையின் மேல் கட்டியிருந்த நெகிழி வளையங்களை கித்தார் கம்பிகளைப் போல மீட்டிக் கொண்டிருந்தார். எப்போதோ கேட்ட பாடலை அந்த இசை ஞாபகப்படுத்தியது. ஆனால் பாடலைச் சரியாக ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. கவின் காமிராவை எடுத்து அவரைப் படமெடுத்தான். அவர் பின்னால் மஸ்ஜிட் ஜாமேக் நிலையத்தின் கீழே ஒடுகின்ற ஆற்றின் சலசலப்பு, கூரை மறைத்துக் கொண்டிருப்பதால் மெல்லிய வெளிச்சம், பரட்டைத் தலை கையில் கித்தார் குவளை ஆகியவற்றுடன் படமெடுத்தான். “டேய்…இது சரியா இருக்குமான்னு பாரு” எனக் காட்டினான். பின்னர் அவனே “இல்லடா… இன்னும் கொஞ்சம் பிரைட்னஸ் கொறச்சிருக்கலாம்… இதுலே ஒரு டார்க்னெஸ் இருக்குல்ல…” என்றான்.
“ஒக்கேத்தான் போல” என்றேன்.
வீட்டுக்கு அவரவர் பாதையில் திரும்பும்போதே கவினுக்கு அழைத்து நாளைக்கும் மீண்டும் மஸ்ஜிட் ஜாமேக் போகலாம் எனச் சொன்னேன். முதலில், எதோ வேலை இருப்பதாகச் சொன்னவனை, “டேய்… ஐம்பது வெள்ளிய வேஸ்ட் பண்ண வேணாம். நாளைக்கு அவரையே மாடலா மாத்தி படம் எடுக்குறோம்” என்றேன். “டேய், அந்தாளே நம்பி போறியா… 50 வெள்ளியோட போயிரட்டும் டா…’’ என்றான்.
மறுநாள் என்னுடைய கட்டாயத்தால் காலையிலே மஸ்ஜிட் ஜாமேக் நிலையத்துக்குச் சென்றோம்.
நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது இடப்பக்கத்துத் தூணருகே அமர்ந்திருந்த அதே முதியவர் குவளையை நீட்டினார். பக்கத்தில் அதே பெண்ணும் படுத்திருந்தார். நேற்றிருந்த ரோன்ஹிங்யா ஆணும் குழந்தையும் மட்டும் அங்கிருக்கவில்லை. கவின் கொஞ்ச நேரம் டைம் லேப்ஸில் மேம்பாலத்தில் ரயில் மாறி மாறிச் செல்வதைப் படம் பிடித்தான். அந்தக் காட்சிக்கு ஏற்ற இசையைத் தேடிக் கொண்டிருந்தான். ஒவ்வொன்றாக மாறி மாறிப் போட்டுக் கொண்டிருந்தான். ஏதோ இளையராஜா பாடலைப் போட்டு விட்டுத் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். நேற்றைக்குச் சென்ற அதே கடையில் சாப்பிடச் சென்றோம்.
அவரை எப்படியும் சந்திக்க வேண்டுமென்ற தீவிரம் என் கண்களை நாலா புறமும் அலைய விட்டது.
கடைக்காரர் “வாங்க” என்றார். அவர் முகம் எங்களுக்குக் காத்திருப்பது போல இருந்தது.
அவரிடம் ஶ்ரீதர் குறித்து விசாரிக்கலாம் எனத் தோன்றியது. ஆனால் அவர் பெயர் அதுதானா எனச் சந்தேகம் வந்தபோது தயங்கி நின்றோம். கடைக்காரர் மிளகாய் சாந்தில் மிதந்து கொண்டிருந்த கோழிகளை எடுத்து எண்ணெய் சட்டியில் போட்டார். ஓர் ஓரமாக அமர்ந்து அவருக்காகக் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். “டேய், கெளம்புவோம்டா…” என்றான் கவின். அவன் முகத்தில் கடுமை வெடித்தது.
வந்ததற்கு ஒரு நாசி கோரேங் வாங்கி இரண்டாகப் பகிர்ந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டோம். பணம் செலுத்தச் சென்றபோது சாப்பாட்டைக் கணக்கு செய்த கடைக்காரர் நான் பணம் கொடுப்பதைத் தடுத்து ஸ்ரீதர் நீங்க வந்தாக்கா அவரோட கணக்குல ஒங்க சாப்பாடு காச போட்டுக்க சொன்னாரு என நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டார்.
கவின் காதின் அருகில் தொலைப்பேசியை வைத்துக் கொண்டு வேறு ஏதோ ஒரு பாடலைத் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
*