தாயே! வாழ்வு இத்தனை அற்பமானது ஏனோ?

தாராசங்கர் பந்தோபாத்யாய்

ஜெயமோகன் சாருடன் மலை வாசஸ்தலத்தில் தங்கியிருந்த போது ஒரு மாலையில் கவி நாவலைப் பற்றிச் சொன்னார். வங்க எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாய் எழுதிய முதல் நாவல் கவி. 1941ல் வெளிவந்தது. இருநூற்றைம்பது பக்கம் கொண்ட சிறிய நாவல். ஜெயமோகன் அந்நாவல் பற்றி எழுதிய ‘உமாகாளி’ கட்டுரை பற்றியும் குறிப்பிட்டார். அன்றிரவு உமாகாளி கட்டுரையைப் படித்ததும் உடனே நாவலைத் தரவிறக்கம் செய்து படித்தேன். கட்டுரையில் ஜெயமோகன் நாவலின் மைய கதாபாத்திரமான நிதாயிசரணின் காதலிகளாக வரும் மச்சி வஸந்தி என்னும் இரு கதாபாத்திரத்தை குறிப்பிடுகிறார். அவர்கள் இருவரையும் உமாகாளி என்னும் வங்க நிலத்தின் ஆழ்படிமத்துடன் சித்தரிக்கிறார். அருளும் உமையான மச்சியும், அழிக்கும் காளியான வஸந்தியும் சேர்ந்து நிதாயியைக் கவிஞனாக்குகிறார்கள். அவர் கட்டுரை இப்படி முடிகிறது, “உமை ஆத்மனை எழுப்ப முடியும், காளியே தன் வெம்மைமூலம் அவனைக் கனியச்செய்ய முடியும்” என்ற வரியில் உறைந்திருக்கும் ஆழ்படிமம் என்னை நாவல் வாசிக்கத் தூண்டியது.

நாவலின் மையக் கதாப்பாத்திரமான நிதாயிசரண் டோம் இனத்தைச் சேர்ந்தவன். டோம் இனத்தவர்கள் மன்னராட்சி காலத்தில் போர் வீரர்களாகப் பணிபுரிந்தவர்கள். வங்க நாட்டில் அரசர்களின் கீழ் பெரும் செல்வாக்குடன் இருந்தவர்கள். மன்னராட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியதும் படிப்படியாக இவர்களின் செல்வாக்குக் குறைய தொடங்கியது. போர் இல்லாது போனதால் இவர்களுக்குத் தொழிலும் இல்லாமல் ஆனது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டோம் இனத்தவர்கள் ஒரு குழுவாக மாறி திருட்டுத் தொழில் செய்யத் தொடங்கினர். ஆங்கிலேய அதிகாரிகள் இவர்களைக் குற்றப்பரம்பரை பட்டியலில் இணைத்தனர். அதன் பின் பொருளாதார நிலையிலும் சாதிய அமைப்பிலும் கீழ் நிலைக்குச் சென்றார்கள். தங்களைத் திருடர்களாகவே நிலைநிறுத்தி அதனையே தொழிலாகக் கொண்டார்கள்.

நிதாயிசரண் திருட்டுத் தொழில் செய்யும் இந்த டோம் இனத்தில் பிறந்தவன். ஆனால் இளமையிலேயே பள்ளி சென்று கல்வி கற்கத் தொடங்குகிறான். ஊரின் பெரிய பண்ணையார் தன் அன்னையின் நினைவாக ஒரு பள்ளியைத் தொடங்குகிறார். அதில் ஓராண்டு முடித்தால் உடை இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கிறார். டோம் இனத்துச் சிறுவர்கள் அனைவரும் உடைக்காகப் பள்ளியில் வந்து சேர்கின்றனர். ஆனால் ஓராண்டு முடித்து உடை கையில் கிடைத்ததும் பள்ளியிலிருந்து நின்றுவிடுகின்றனர். நிதாயிசரண் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறான். அன்றே கலைமகள் அவனைத் தேர்ந்தெடுத்துவிடுகிறாள். தொடர்ந்து பள்ளியில் கல்வி கற்கிறான்.

கல்வி அவன் வாழ்வைத் தலைகீழாக மாற்றுகிறது. முதலில் அவன் குலத் தொழிலான திருட்டிலிருந்து விலகுகிறான். அதனால் தன் குடும்பம், உறவினர், சுற்றத்தாரிடம் இருந்து முழுதும் விலகி செல்கிறான். அதனை அவன் அன்னை முதலில் கண்டிக்கிறாள். அவனை வளர்த்த மாமன் கௌர்சரணிடம் சென்று முறையிடுகிறாள். மாமன் வந்து நிதாயியைக் குலத் தொழிலான திருட்டைச் செய்யும்படி எச்சரிக்கிறான். அதை கேட்காததால் கோபம் கொண்டு அடிக்கிறான். அவன் வீட்டில் எல்லோரும் இதனைக் கோழைத்தனம், தைரியமற்றவன் என்றே பார்க்கின்றனர். நிதாயி அதற்கு உடன்படாததால் அவனை வீட்டை விட்டு வெளியேறும்படி கௌர்சரண் கூறுகிறான்.

நிதாயி மறு சிந்தனையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி ஒரு வைஷ்ணவ சாதுவிடம் காவலாளியாகப் பணியில் சேர்கிறான். அங்கே இரவில் பசுவையும், நெல்லையும் களவு போகாமல் பார்த்துக் கொள்ளும் வேலை. ஆனால் ஓர் இரவில் தூக்கமில்லாமல் விழித்த போது வைஷ்ணவ சாதுவின் அடியாட்கள் வேறு வீட்டிலிருந்து நெல்லைத் திருடி வருவது தெரிந்தது. அன்றிரவு சாதுவிடம், “நான் கவிஞன். ஒருபோதும் திருட மாட்டேன் எனச் சத்தியம் செய்து வாழ்பவன். அதனால் இனி இங்கு இருக்க மாட்டேன்” எனச் சொல்லி வெளியேறுகிறான்.

ஒரு ஆணின் வாழ்வில் பெண் எவ்வண்ணம் பொருள் கொள்கிறாள். அவள் அன்னையாக, காதலியாக, மனைவியாக, மகளாக அவள் வாழ்வில் வருகிறாள். ஆனால் நம் நிலத்தில் நாம் கலைமகளாக, நிலமகளாக, மலைமகளாக உருவகித்திருப்பது யாரை? அவர்கள் ஒரு கலைஞனின் வாழ்வில் எவ்வண்ணம் பொருள் கொள்கின்றனர்? மலையும், நதியும், கடலும் ஏன் இந்நிலத்தில் அர்த்தமேற்றப்பட்டு அமர்ந்திருக்கிறது. அவை யாவும் ஒருவனுக்கு கொடுப்பது என்ன? அப்படி யோசிக்கும் போது நிதாயியின் வாழ்வில் முதலில் கல்வியால் கலைமகள் வந்து சேர்கிறாள். ஆரலைக் கள்வனின் மனதில் மகாகாவியம் எழுந்தது எவ்விதமோ. அவ்விதமே டோம் இனத்து கள்வன் கவியாக மாறிய தருணம்.

நிதாயிக்குத் தன் நண்பன் ராஜாவின் (நிதாயி கவிஞன் என்பதால் அவன் மேல் மிகுந்த மதிப்பு கொண்டவன்) உதவியால் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் வேலையும் அங்கேயே தங்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

ஒருமுறை அவன் தங்கியுள்ள ஊரில் சண்டிதேவியின் கோவிலில் மாசி பூர்ணிமை பூஜையில் மேளா நடக்கிறது. அதில் ஊர் சார்பில் பாட ஏற்பாடாகியிருந்த பாடகரின் துணை பாடகன் காசு வாங்கிக் கொண்டு காணாமல் மறைந்து விடுகிறான். போட்டி பக்கத்து ஊர் கவிவாலாவுடன். ஊரே செய்வதறியாது நிற்கும் நேரம் நிதாயிசரண் அங்கே வந்து தான் பாடுவதாக அறிவிக்கிறான். ஊரிலுள்ளவர்கள் அவன் சாதியைச் சொல்லி ஏளனம் செய்கின்றனர். அவன் பிறப்பால் திருடன் எனக் கத்தி கூச்சலிடுகின்றனர். ஆனால் நிதாயியைக் கண்டதும் கோவில் நிர்வாகியான மஹந்துவிற்கு  நம்பிக்கை பிறக்கிறது. அவனைப் பாடும்படி கூறுகிறார். நிதாயி பாட மேடையேறியதும் ராஜாவைத் தவிர ஊரிலுள்ள அனைவரும் ஆச்சரியம் கொள்கின்றனர். நிதாயி மேடையேறி பாடுகிறான். அனைத்துப் பாடல்களும் அவன் சொந்தமாகப் புனைந்தது. ஒரே நாளில் கவியாக அறியப்படுகிறான். ராஜாவின் மச்சினியான மனைவியின் தங்கை மனதிலும் அன்றிரவே குடிக் கொள்கிறான்.

கவியான நிதாயி அதன் பின் எந்த வேலைக்கும் செல்வதில்லை என முடிவு செய்கிறான். ரயில் நிலையத்தில் ராஜா அமைத்துக் கொடுத்த இடத்தில் தங்கி கவி புனையத் தொடங்குகிறான். நாவல் இங்கிருந்து தொடங்குகிறது. நிதாயிசரண் ராஜாவின் மச்சினி, வஸந்தி என்னும் இரண்டு பெண்களின் வழியாக வாழ்வை அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளுமிடத்தில் நாவல் முடிவடைகிறது. ஒருவிதத்தில் அன்னையை இழந்து தனியாக இருக்கும் நிதாயி பிரபஞ்சத்தின் பேரன்னையைக் கண்டு கொள்ளுமிடத்தில் நாவல் முடிகிறது எனலாம்.

நிதாயி கவியாகப் பாடல் புனையத் தொடங்கிய அன்று மச்சி என்றழைக்கப்படும் திருமணமான ராஜாவின் மச்சினி அவன் மேல் பெருமதிப்பு கொள்கிறாள். அந்த மதிப்பு காதலாக மாறுகிறது. இருவரும் தங்களை அறியாமலே ஒருவர் மேல் மற்றவர் காதல் கொள்கின்றனர். தினமும் நிதாயிக்குப் பால் கொண்டு வந்து கொடுக்கும் மச்சியிடம் நிதாயி “நாளையிலிருந்து எனக்குப் பால் கொண்டு வரவேண்டாம்” எனக் கறாராகச் சொல்கிறான். மச்சி அதை கேட்டு வருத்தம் கொள்கிறாள். அவளின் வருத்தத்தைக் கண்ட நிதாயி தன்னிடம் காசில்லை என்னும் உண்மையை அவளிடம் சொல்கிறான். மச்சி அவனை ஏசுகிறாள். அவனிடம் காசு வாங்காமல் தன் சொந்த பசுவிலிருந்து பால் தருவதாக கூறுகிறாள். அவனை நிற்பந்திக்கிறாள், நிதாயியும் அதற்கு இசைகிறான்.

அவர்கள் அனைவர் முன்னும் தன் கவி புகழைக் காட்ட வெளியூருக்கு சென்று கவி பாடி திரும்பி வரும் போது புதுஜோடும், அங்கவஸ்திரமும், தலையில் சாகையுடனும் வருகிறான். அது அவனுக்குப் பரிசாக கிடைத்தது என மச்சியிடமும் பிறரிடமும் சொல்கிறான். மச்சி அந்த உடையில் அவனைக் கவியாகப் பார்த்துப் பெருமை கொள்கிறாள். ஆனால் உண்மையில் நிதாயி அவனுக்குக் கிடைத்த காசில் வாங்கியது அது. நிதாயின் நண்பன் ராஜா தன் மச்சினியின் நிறத்தைப் பற்றி கறுப்பு எனக் கேலி செய்யும் போது நிதாயி, “காலோ ஜதி மந்த தபே கேச காந்தோ கேதோ” (கறுப்பு இழுக்கென்றால் கூந்தல் நரைத்ததும் அழுவானேன்) என்று பாடுகிறான். அன்று பாடிய கவியின் முழுப்பாடலை வெளியூர் மேளாவில் பாடியதாக மச்சியிடம் கூறுகிறான். அவளுடன் மனதால் நெருங்குகிறான். அத்தனை நெருக்கத்திற்குப் பின்னும் இருவரிடமும் ஒரு இடைவெளி இருப்பது இருவருக்கும் தெரிகிறது. அது மச்சி ஏற்கனவே திருமணமானவள் என்பதால் வந்த விரிசல் என்பதை வஸந்தி அவன் வாழ்வில் வந்ததும் அறிகிறான்.

நிதாயிசரண் தங்கியிருக்கும் ரயில் நிலையத்திற்கு ஜுமுர் கோஷ்டியினர் வருகின்றனர். ஜுமுர் என்பது மேற்கு வங்கத்தின் ஒரு நடனபாணியை சேர்ந்தது. பாடலுடன் ஆபாசமாக உடலைக் குலுக்கி ஆடும் ஆட்டத்தை ஜுமுர் என்றழைக்கின்றனர். வஸந்தி அந்தக் குழுவைச் சேர்ந்தவள். அவர்களை ராஜா நிதாயியிடம் அழைத்து வருகிறான். ரயில் நிலையத்திலுள்ள அனைவரையும் ராஜா அழைத்து ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறான். அக்குழுவின் முன்னணி ஆடகியாக வஸந்தி வருகிறாள். நிதாயியின் பாட்டிற்கு முன் போட்டி போட்டு ஆடுகிறாள். கறுப்பாக இருக்கும் நிதாயியை நிறம் சொல்லி சீண்டுகிறாள். அவனைக் கேலி செய்கிறாள். பலித்துப் பேசுகிறாள். அவள் செய்யும் ஏளனம் அனைத்திற்கும் பதிலாக நிதாயி புன்னகைக்கிறான். அவள் தன்னைப் பற்றிக் குறிப்பிட்ட கருங்குயில் என்று தன்னை அறிமுகம் செய்து பாடுகிறான். அன்றிரவு வஸந்தி காய்ச்சலில் படுத்திருக்கிறாள். அவளை உடலுறவுக்காக ஊரிலுள்ள ஆடவர்கள் தேடி வருகின்றனர். நிதாயி அவள் மேல் பரிவு கொண்டு அவளைத் தன் குடிலில் ஒழித்து வைக்கிறான். வஸந்தி அந்தப் பரிவையும் ஏளனம் செய்கிறாள். மச்சி சன்னல் வழியாக வஸந்தி நிதாயியின் குடிலில் இருப்பதைப் பார்த்துவிடுகிறாள். மச்சி ரயில் தண்டவாளத்தை தாண்டி இருட்டில் சென்று மறைகிறாள். அதன் பின் மச்சி நிதாயியின் குடிலுக்குத் திரும்பி வரவில்லை.

நிதாயி மச்சியின் காதலை அன்று ராஜா அறிகிறான். அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்கும் முயற்சியில் இறங்குகிறான். நிதாயி அதனை மறுக்கிறான். ஒரு குடும்பத்தைக் கெடுத்து தான் வாழ வேண்டாம் என முடிவு செய்கிறான். வஸந்தியின் ஜுமுர் நாடோடி குழுவோடு பாடல் பாடும் கவியாகக் கிளம்பிச் செல்கின்றான். நிதாயி வஸந்தியின் குழுவுடன் புதுவாழ்வொன்றைத் தொடங்குகிறான்.

மச்சி முதல் பார்வையிலேயே நிதாயியைக் கவிஞனாக காண்கிறாள். அவனைத் தொழுது வாழ்கிறாள். அவனுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்கிறாள். அவனைக் கணமும் கவியென்றே வணங்குகிறாள். அது பார்வதி சிவனைத் தொழும் நிலை. சாபத்தால் நிலம் மீண்ட பார்வதி சிவனை நோக்கி நிதமும் தவம் புரிகிறாள். ஒவ்வொரு கணமும் தன் கணவன் வந்து தன்னை அழைத்துச் செல்ல வேண்டுகிறாள். சிவன் அவளைச் சட்டை செய்யவில்லை. கடும் விரதம் இருக்கிறாள். உண்ணாவிரதமும் பேசாவிரதமும் சேர்ந்து கடைப்பிடிக்கிறாள். சிவனின் கடைக்கண் பார்வைக் கூட அவள் மேல் விழவில்லை. அவள் உக்கிரம் கொண்டாள், ஒவ்வொரு நாளும் அவள் கோபம் கூட அவளைச் சுற்றி அனல் வேளியென மாற்றியது. உக்கிரமாக மாறி காளியானாள். காளியின் உக்கிரத்தைக் கண்டு சிவன் இறங்கி வந்தார். அவள் முன் ஊர்த்துவம் காட்டி நின்றார் என்பது ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் கதை. சாந்தினியான பார்வதிக்கு அருளப்படாதது ஏன் உக்கிர ரூபினியான காளிக்கு அருளப்பட்டது என்ற கேள்வி எழும் இடத்தில் நாவல் மேலும் விரிகிறது.

சிவன் பார்வதிக்குக் காட்டாமல் காளிக்குக் காட்டிய ஊர்த்துவ தாண்டவமே நிதாயியின் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தில் நிகழ்கிறது. வஸந்தி நிதாயியைக் கவியாகக் காண்கிறாள். அதே நேரத்தில் அவளுடைய ஏளனமும் பரிகாசமும் கூடவே இருக்கிறது. ஆனால் நிதாயி வஸந்தியின் உபாசகனாகவே இருக்கிறான். அவள் காச நோயால் அவதிபடுகிறாள். அவளை ஒவ்வொரு நாளும் அவன் பார்த்துக் கொள்கிறான். நிதாயி ஜுமுர் குழுவுடன் பாடச் செல்கிறான். எதிர் குழுவுடன் போட்டி. வஸந்தி தன்னால் இயன்ற வரை ஆபாசமாக ஆடுகிறாள். ஆனால் நிதாயி அவன் புனைந்த கவி பாடல்களை மட்டும் பாடுகிறான். அதனால் எதிர் குழு வெற்றிக் கொள்கிறது. சுற்றியிருந்த ஜனக்கூட்டமும் நிதாயி பாடிய ராதாமாதவம் பாடலைக் கேட்டு எரிச்சல் கொண்டு விலகி செல்கிறது. இரவு நிதாயி தன் குடிலுக்குத் திரும்பிய போது வஸந்தி அவனைச் சுட்டெரிக்கும் விழிகளால் பார்க்கிறாள். அவன் நிதானமாக இருப்பதைக் கண்டு அவன் மேல் கோபம் கொள்கிறாள். அவன் கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள்.

நிதாயி கோபம் கொள்கிறான். அதுவரை பருகிடாத சாராய பாட்டிலை ஒரே மூச்சில் பருகுகிறான். நேராகப் போட்டி நடக்கும் இடத்திற்கு மீண்டும் சென்று பாடத் தொடங்குகிறான். அங்கே ஜுமுர் குழுவின் பாடகனாக மாறுகிறான். அவன் அணி வெற்றி கொள்கிறது. அதுவரை யாரும் பாடியிராத ஆபாச சொற்களைப் பாடுகிறான். ஆனால் அடுத்த நாள் காலை அவன் செயலுக்காக வருத்தம் கொள்கிறான். அந்தக் குழுவையும் வஸந்தியையும் விட்டு ஓடும் எண்ணம் கொள்கிறான். ஆனால் திரும்ப வஸந்தியைப் பார்க்கும் கணம் அது முடியாது என்பதை உணர்கிறான். அதன்பின் அக்குழுவில் ஒருவனாக மாறிவிடுகிறான். வஸந்தி நிதாயியால் புரிந்துகொள்ள முடியாத பெண்ணாகவே இருக்கிறாள். அவள் மாலையில் மது அருந்துகிறாள், விரும்பும் ஆணுடன் உடலுறவு கொள்கிறாள். தன் மாலைகளைத் தனக்கு வேண்டிய வண்ணம் அமைத்துக் கொள்கிறாள். ஆனால் காலையில் எழுந்ததும் அதற்காக வருந்துகிறாள். அவள் வாயிலிருந்து தினமும் காலை ரத்தம் வருகிறது. வஸந்தி  காச நோய் முற்றி இறக்கிறாள். நிதாயி வஸந்தியின் இறப்பு வரை அவளது அத்தனை செயல்களையும் கண்ட பின்பும் அவளிடம் காதலுடன் இருக்கிறான். வஸந்தி இறந்த பின் அவளது நினைவுகளுடன் இருக்கிறான். வஸந்தி இறந்த மறுநாள் ஜுமுர் குழு புதிய ஆடல் பெண்ணைத் தேடுகிறது. குழுவின் மூத்தவளான சித்தி நிதாயியைக் கவியாகத் தொடரும் படி வேண்டுகிறாள். நிதாயி அதை மறுத்து வஸந்தியின் நினைவாக ஒரு பித்தளை வளையல் மட்டும் எடுத்துக் கொண்டு அக்குழுவிலிருந்து மீள்கிறான்.

என் வாசிப்பில் நிதாயியின் வாழ்வில் வரும் நான்கு பெண்களால் ஆனது இந்நாவல். மேலும் இரண்டு பெண்களில் முதலானவர் அவன் தாயும், மற்றவர் நாவலின் இறுதியில் அவன் காசியில் சந்திக்கும் டாகுருன் அம்மா.

நாவலின் தொடக்கத்தில் நிதாயி தன் தாயால் கைவிடப்படுகிறான். தாய் கைவிட்டதும் தாய் மாமன் கைவிடுகிறார். அவன் குழுவும் அவனைக் கைவிடுகிறது. இறுதியில் காசியில் அன்னபூரணி சன்னதியின் முன் டாகுருன் அம்மாவைக் காண்கிறான். பசியால் வாடி நிற்கும் நிதாயி அவள் கையிலிருந்து அன்னத்தை வாங்கி உண்கிறான். அவள் அவனுக்கு வாழ்வைச் சொல்லும் பேரன்னையாக அவன் முன் நிற்கிறாள். அவனுக்கு வாழ்வையும் இறப்பையும் பற்றிச் சொல்கிறாள். காசியிலிருந்து மதுரைக்கு அதன் பின் ஹரிதுவாருக்கு எனத் தேசாந்திரியாகப் பயணம் செய்ய முடிவு செய்தவன் கவியாக தன் ஊருக்குத் திரும்பவும் வருகிறான். சக்தியின் வடிவங்களை நிதாயி காணும் குறிப்பு நாவலின் தொடக்கத்திலேயே வருகிறது. நிதாயி முதலில் பாடிய தன் கிராமத்துச் சண்டிதேவி கோவில் ஐம்பத்தியொரு சக்தி பீடத்தில் ஒன்று என்ற குறிப்பு நாவலின் முதல் அத்தியாயத்திலேயே உள்ளது. அங்கு தொடங்கிய நிதாயியின் பயணம் இறுதியில் சண்டிதேவி கோவிலில் வந்து பாடுவதில் நிறைவு கொள்கிறது

கார்ல் யுங் ஒரு கட்டுரையில் இருள்-ஒளி என்று இருமையில் செயல்படும் உலகை ஒரு தனி மனிதனால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார் (அன்னை எனும் தொல்படிமம் – கார்ல்.ஜி. யுங், தமிழாக்கம் – ஜெயமோகன், சொல்புதிது இதழ்). அதில் அன்னையிலிருந்து எழும் பேரன்னைக்கு விவேகமும் அறிய முடியாத அழிவு சக்தியும் ஒருங்கே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். அதிலிருந்தே அன்னை தெய்வங்கள் உருவாவதைப் பற்றி யுங் சொல்கிறார்.

அவர் அன்னையெனும் படிநிலை ஒரு தனி மனிதனுக்குத் தன் சொந்த தாயிடமிருந்து தொடங்குகிறது என்கிறார். அந்த அன்னை விரிந்து அன்னை, சிற்றன்னை, செவிலித்தாய், மாமியார், பாட்டி என உறவு முறை தொடர்புகள் கொண்ட அன்னை உருவகம் உருவாகிறது. இரண்டாவதாக அன்னை தெய்வங்கள் வடிவிலிருந்து ஒருவன் பெற்றுக்கொள்ளும் அன்னை. மூன்றாவதாக அன்னைமை எனும் இயல்பு கொண்ட படிமங்கள் (சொர்கம், நதி, மலை, கடல், மண், காடு) என நாம் உருவகித்திருக்கும் அன்னையின் வடிவங்கள் வழி உருவாகும் படிமம். இதிலிருந்து யுங் அன்னை என்ற தொல்படிமத்துடன் தொடர்பு கொண்ட உணர்வுகளான தாய்மையின் கனிவு, இரக்கத்துடன் பெண்மையின் மாயத்தன்மையும், தருக்கம் கடந்து விரியும் உள்ளுணர்வையும், வளமும், பிறப்பு வளர்ச்சியுடன் கூடிய நன்மை பக்கங்களைக் காணும் போது அதற்கு எதிரீடாக இருக்கும் மறைந்திருக்கக் கூடிய ரகசிய தன்மையையும், புரிந்துக் கொள்ள முடியாத விழுங்கிவிடக் கூடிய அதல பாதாள இயல்புடைய, கவர்ந்திழுத்து விஷம் தந்து அழிக்கக் கூடிய தன்மையையும், விதியைப் போன்று நம்மைத் தப்பவிடாது பிடித்துக் கொள்ளக் கூடிய, பேரச்சத்தை ஊட்டக் கூடிய ஒன்றாக உருவகிக்கிறார். அதற்குச் சிறந்த தொல்படிமமாக அருளும் அழிவும் ஒருங்கே கொண்ட காளியைச் சுட்டுகிறார். கன்னிமேரி கிறிஸ்துவின் அன்னையாகவும், கிறிஸ்துவின் சிலுவையாகவும் உருவகிக்கப்படுவதைச் சுட்டுகிறார். சாங்கிய மரபில் முக்குணங்களால் ஆன ஆதி இயற்கையை இத்தொல்படிமத்தோடு சேர்க்கிறார்.

கவி நாவல் அன்னையெனும் குருதியுறவில் தொடங்கி அவளிடமிருந்து நிதாயிசரண் மச்சியின் அன்னைமைக் குணத்தைக் கண்டு, வஸந்தியின் காளி வடிவைக் கண்டு, வஸந்தியிடமிருந்து டாகுருன் அன்னையில் பேரன்னையான அன்னப்பூரணி என்னும் படிமத்தின் மூலம் இருள்-ஒளி எனும் இருமையில் செயல்படும் உலகைக் கண்டு திரும்ப தன் பழைய ரயில் நிலையத்திற்குக் கவியாக நிதாயி மீளும் இடத்தில் முடிகிறது.

இறுதியில் அருளும் அழிவும் ஒருங்கே அமைந்த காளிதேவியிடம் (சண்டிதேவி) மீண்டு வருகிறான். நிதாயி ஊருக்குத் திரும்பி வந்து ராஜாவின் அருகில் கவியாக அமர்கிறான். மச்சி பித்துப் பிடித்து இறந்ததை ராஜா நிதாயியிடம் சொல்கிறான். நிதாயி வஸந்தி, மச்சி நினைவாகச் சண்டிதேவி கோவில் முன் சென்று, “தாயே வாழ்வு, இவ்வளவு அற்பமானது ஏனோ” என வேண்டி பாடுமிடத்தில் நாவல் உச்சம் கொள்கிறது.

***

கவி – தமிழ் விக்கி

1 comment for “தாயே! வாழ்வு இத்தனை அற்பமானது ஏனோ?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...