ஆழம்: தோண்டப்படாத மணற்கேணி

சீ. முத்துசாமி

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை இடைவிடாது வரைந்து காட்டியவர். 90களுக்குப் பின்னர் அவரது மறுபிரவேசம் மலேசிய நவீன தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.

சீ. முத்துசாமியின் ஆக்கங்கள் பெரும்பாலும் மானுடத்தின் மீது கவிந்திருக்கும் கசப்பின் அவநம்பிக்கையின் வெளிபாடுகளாகவே உருபெற்றவை. இன்னொரு மனிதன் தனக்குள் ஏன் நரகத்தைப் பதுக்கி வைத்துள்ளான் எனும் கேள்விக்கு விடை தேடுபவை அவரது புனைவின் ஆதாரம். என் வாசிப்பில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சீ. முத்துசாமி தனது புனைவுகள் வழி விசாரம் செய்வது, முழுமையான நம்பிக்கையுடன் என்றுமே நெருங்க இயலாத மனிதனின் அக இருளைத்தான். அந்த இருளை அறியவே அவருக்கு ரப்பர் தோட்டம் தேவையாக உள்ளது. விரிவாக அவர் புனைவில் காட்டும் இருள் அடர்ந்த கித்தா காடுகள், கதாமாந்தர்களின் ஆழுள்ளத்தை அறிவதற்கான குறியீடுகள்தான். இலக்கியத்தில் இந்த மனநிலையும் புனைவு போதமும் எப்போதும் உள்ளவை. காலம் முழுவதும் ஒரே கேள்வியைப் பல்வேறு கோணங்களில் விசாரணைக்குட்படுத்தியும் ஒரே நிலத்து மனிதர்களின் பல்வேறு சிக்கல்களை ஆய்ந்தும் எழுதிய முன்னோடிகள் நமக்குண்டு.  தஸ்தாவெஸ்கியின் அக உலகமும் ஆதவனின் புற உலகமும் உடனடியாக மேற்கோளாகும் வலுவான உதாரணங்கள்.

‘ஆழம்’ சீ. முத்துசாமியின் மூன்றாவது நாவல். வழக்கமான அவரது அக – புற உலகங்களால் கட்டமைந்த நாவல்.

சாதிய சண்டை காரணமாகப் பெருமாள் குடும்பத்துக்கும் செவத்தியன் குடும்பத்துக்கும் நடுவில் உருவாகும் பகை ஒரு கொலைக்குக் காரணமாவதும் அது தொடர் கொலைகளுக்கு வழிவகுப்பதும்தான் நாவலின் சாரம். இந்தச் சாதி பகையைச் சுதந்திரத்துக்குப் பின்பான தோட்டப்புறச் சூழலில் சீ. முத்துசாமி உருவாக்கியுள்ளார். தோட்ட முதலாளிகள் மீது கம்யூனிஸ்டுகளின் தாக்குதல்களும் தோட்டத் துண்டாடல்களும் நிகழ்ந்து கொண்டிருந்த அழுத்தம் நிறைந்த வரலாற்றுப் பின்னணியில் இரு குடும்பங்களுக்கிடையில் கனன்று கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியும் அதன் பின்னணியில் இயங்கும் மனப் பாவனைகளையும் சீ. முத்துசாமி புனைவாக்க முயன்றுள்ளார்.

தோட்டத்தை வர்ணிப்பதும் அந்த வாழ்வை எழுதுவதும் முத்துசாமியிடம் அபாரமாக வெளிப்படும் அம்சங்கள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ரப்பர் தோட்டம் என்பது மனிதன் உருவாக்கிய நம்பிக்கையான காடு. ஆனால் எண்ணிலடங்கா ரகசியமும் இருள் பாதைகளும் உள்ளடங்கியவை. அடர் வனங்களை ஒட்டியே அவை உருவாவதால் அதன் உறுமும் உயிர்ப்பை உள்வாங்கிக் கொண்டவை. கணம் பிசகினால் காவு வாங்கக் கூடியவை. கருணையுடன் பால் சுரக்கும் மர கூட்டங்களுக்கு மத்தியில்தான் எண்ணற்ற விபத்துகளும் மரணங்களும் நிகழ்ந்துள்ளன. வன்புணர்ச்சிகளும் வன்மங்களும் நிறைந்துள்ளன. பழிவாங்கல்களும் பலியிடல்களும் மிகுந்துள்ளன. முத்துசாமியால் இந்தக் காட்டில் எளிதாக உலாவ முடியும். ரப்பர் காடு அவருக்கு வாழ்க்கையின் ஒட்டுமொத்த படிமம். தீராத வாழ்வின் சூட்சுமத்தை அறிய அவர் அதற்குள் சஞ்சரிக்க வேண்டியுள்ளது. அவரது பிற புனைவுகளைப் போலவே ‘ஆழம்’ நாவலிலும் ரப்பர் காடு உயிர்ப்புடன் எழுந்து நிற்கிறது.

சீ. முத்துசாமியின் பிற படைப்புகளில் காணக்கூடிய மற்றுமொரு அம்சம் ஆண் – பெண் இருவருக்கும் இடையிலான உறவு முரண். குறிப்பாகப் பெண்களின் உளவியல் மேல், அவர்களின் பிறழ்வுணர்ச்சியின் மேல் ஆண்களுக்கு உள்ள அந்தரங்கமான அச்சம் சீ. முத்துசாமியின் சிறுகதைகள்,  குறுநாவல்கள் போல ‘ஆழம்’ நாவலிலும் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. கங்காணியின் மனைவிக்கும் ராமலிங்கத்துக்கும் கள்ள உறவு உள்ளது. கணவனிடம் உதைப்பட்டாலும் அவன் முன்பே காதலனை இழுத்துக் கொண்டு ‘வா படுக்கப் போகலாம்’ என்கிறாள் கங்காணியின் மனைவி. செல்வராஜுவின் மனைவி முனியம்மா தண்டல் உட்பட மேலும் சிலரிடம் தன் வசதிக்காக உறவு வைத்திருந்து மர்மமான முறையில் இறக்கிறாள். காளியப்பன் மனைவி சுப்பு, கருப்பையா கங்காணியோடு உறவு வைத்திருக்கிறாள். கணவன் காளியப்பன் மென்மையானவன் என்பதால் அவள் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள். கல்யாணி என்பவள் தண்டலை நம்பி கர்ப்பமடைந்து ஆற்றில் குதித்து இறக்கிறாள். கணவனை விட்டுக் காதலனுடன் ஓடிப்போன விஜி புற்றுநோயால் இறக்கிறாள். இப்படி நாவல் முழுவதுமே வெவ்வேறு பெண்கள் கணவனுக்குத் துரோகம் இழைப்பவர்களாகவும் ஒழுக்கம் மீறுபவர்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர்.

முத்துசாமி புனைவுகளில் பெண் என்பவள் பெரும்பாலும் ஒரு கோர உயிரியாகவே வருகிறாள். சமூக கட்டிலிருந்து விடுபடும் பெண்களின் மேல் சீ. முத்துசாமிக்கு ஏற்படும் பதற்றம் அவரது பிற படைப்புகள் போல இந்த நாவலிலும் விரிவாகக் காணக்கிடைக்கிறது. இறுக்கமான குடும்ப அமைப்பில், ஆண் அனுபவிக்கும் சௌகரியங்கள் தகரும் தருணங்கள் எதுவும் இரக்கமற்றதாகவே அவரால் சித்தரிக்கப்படுகிறது. சமூகம் கட்டமைத்த வரையறைகளை மீறும் பெண்களுக்குக் கோரமான முடிவுகளே நாவலில் நிகழ்கின்றன.

சீ. முத்துசாமியின் புனைவுகளில் காணக்கூடிய மூன்றாவது பொது அம்சம் கிளை விட்டுப் பிரியும் அவரது கதைச்சொல்லல் முறை. அதை சிதறிய காட்சியமைப்பு முறை எனலாம். சிதறடிக்கப்பட்ட மக்களின் கதையைப் பேசும் ‘மண்புழுக்கள்’ நாவலில் அந்த எழுத்து நடை கூடுதலான பலம் சேர்த்தது. தர்க்கமற்ற தோட்டப் பாட்டாளிகளின் அபத்த மனநிலை அம்மொழியால் கூர்மை கொண்டது. ‘மலைக்காடு’ நாவலில் அம்மொழியே நாவலின் பலவீனத்திற்குக் காரணியாக அமைந்தது. ‘மலைக்காடு’ நாவல் முறையான கட்டமைப்பைக் கொண்டது. காணாமல்போன மூவர் கம்யூனிஸ்ட் ஆவதும் அவர்களைத் தேடிச் செல்லும் போலிஸ்காரரும் கம்யூனிஸ்ட் ஆதரவாளனாக மாறுவதுமே ‘மலைக்காடு’ நாவலின் சாரம். ஆனால் அசாதாரணமான நிகழ்வுகள் எதற்கும் அழுத்தமான காரணங்கள் இன்றி தாவித்தாவி செல்லும் மொழியால் அது தன் வலுவை இழந்தது. ‘ஆழம்’ கொலையும் துப்பறிவும் தன்மையும் கொண்ட நாவல். சீ. முத்துசாமியின் வழக்கமான சிதறல் மொழியால் அது கொண்டிருக்க வேண்டிய மர்மமும் இறுக்கமும் பலவீனமடைகின்றன. திடீர் திடீரென தோன்றி மறையும் கதாபாத்திரங்கள் நாவல் ஏற்றுள்ள உயிரோட்டத்துக்குத் துணை செய்யவில்லை.

ஆழம் நாவலின் முதன்மையான பலவீனம் அது எடுத்துக் கொண்ட சிக்கலை நேர்மையுடன் அணுகாததுதான். வேடியப்பனின் அப்பா செவந்தியன் ஒரு சாதி தகராறில்  பெருமாளைத் தாக்க அவர் முடமாகி வீட்டிலேயே முடங்குகிறார். ஒரு திருவிழா பந்தியில்  தாழ்ந்த சாதி நபர் ஒருவர் பரிமாறியதால் இந்தத் தகராறு எழுகிறது. இதைத் தொடர்ந்து அத்தோட்டத்தின் தண்டலாகும் தொப்புளான் வேடியப்பனைப் பழி தீர்க்க நினைக்கிறார். எனவே, வேலை விசயத்தில் அவருக்குப் பலவிதமான இடையூறுகள் தருகிறார். ஒரு கொலை பழியை அவர் மேல் சுமத்துகிறார். இதனால் வேடியப்பன் தொப்புளானைக் கொன்று பழி தீர்க்கிறார். தங்கள் தந்தையை வேடியப்பன்தான் கொன்றிருப்பார் எனச் சந்தேகிக்கும் தொப்புளானின் இரு புதல்வர்களான ராமனும் லட்சுமணனும் வேடியப்பன் மகன் மணியைக் கொல்லத் திட்டமிடுகின்றனர். 

இப்படிப் பரம்பரையாகத் தொடரும் பகைமைக்குக் காரணமாக இருக்கும் சாதிய வெறியும் அதன் பாகுபாடும் நாவலில் ஓரிடத்தைத் தவிர வேறு எங்குமே பேசப்படவில்லை. ஒரு கோயில் திருவிழா பந்தியில் உணவு பரிமாறுபவன் தாழ்ந்த சாதிக்காரன் எனச் சின்னக்கண்ணு என்பவன் கோவப்படுகிறான். அங்குச் சண்டை நடக்கிறது.  இதில் பெருமாள் யார் பக்கம் நின்றார்? வேடியப்பன் யார் பக்கம் பேசினார்? அவர்கள் சாதிய பின்னணி என்ன? என எதுவுமே நாவலில் பதிவாகவில்லை. சர்ச்சையை உருவாக்கிய சின்னக்கண்ணுவும் யாரென தெரியவில்லை. குறிப்பாக ஒரு தோட்டத் திருவிழா விருந்தில் நடக்கும் இந்தச் சாதி சண்டையில் இருவர் மட்டுமே பங்கெடுத்துள்ளது ஆச்சரியம். சண்டை நடக்கக் காரணியாக இருந்த சின்னக்கண்ணுகூட சர்ச்சையில் காணாமல் போய்விடுகிறார். இச்சிக்கலே முற்றி பகைமை பாராட்டும் இரு குடும்பங்களின் சிக்கலாகச் சுருங்குகிறது. அக்குடும்பங்களின் பின்னணி எதுவும் நாவலில் விவரிக்கப்படாமல் பரம்பரை பரம்பரையாக அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள் என முத்துசாமி எழுதிச் செல்வது இந்நாவலை ஒரு பொழுதுபோக்கு இலக்கியமாக மட்டுமே வாசிக்க வைக்கிறது.

நாவல் பின்புலமாகக் கொண்டுள்ள வரலாறு, கட்டுரை தன்மையிலும் அழுத்தமற்ற நிகழ்வுகளாகவும் கோர்க்கப்பட்டுள்ளதை இரண்டாவது பலவீனமாகச் சொல்லலாம். ஆழம் வரலாற்று நாவலில்லை. ஆனால் வரலாற்றுப் பின்புலத்தின் பதற்றங்கள் நாவலின் மைய அசைவுகளுடன் கோர்வை கொண்டவை. முதல் அத்தியாயத்திலேயே தோட்டம் முள்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ள காட்சி விவரிக்கப்படுகிறது. காவல்காரர்களின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. தோட்டங்களில் நுழைய நேர நிர்ணயம் கொடுக்கப்படுகிறது. தோட்ட முதலாளியான ஆங்கிலேயனின் தலைக்குக் குறி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் பதற்றம். இத்தனை அசாதாரண சூழலுக்கு மத்தியில்தான் முனியம்மா கம்யூனிஸ்டுகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வேடியப்பன் மேல் பழி விழுகிறது.  அதற்குப் பின்னர் எல்லாமே முத்துசாமி நிச்சயித்தபடி நடக்கிறது. நாவலைத் தன் வழமையான கட்டுக்குள் முத்துசாமி கொண்டு வருகிறார். புற உலகம் குறித்த எந்த கவனமும் இல்லாமல் கதாபாத்திரங்களின் வார்ப்புகள் நிகழ்கின்றன. எப்போதும் கொதிக்க வேண்டிய நிலத்தின் தகதகப்பு தணிகிறது. ஒரு மரபான ஓவியத்தின் பென்சில் கீரல்களுக்கு மேல் முத்துசாமியின் நவீன ஓவியத்தின் வண்ணத்தீற்றல்கள் அனாசயமாகப் படர்கிறது.

ஒரு நாவலில் நிர்ணயிக்கப்படும் காலமும் வெளியுமே அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பும் எழுந்துவர காரணமாக உள்ளவை. புறச்சூழலின் ஒவ்வொரு தாக்கமும் அந்நிலத்தில் வாழக்கூடிய மனிதனால் சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருப்பது. நிலத்தில் துளிர்த்துக் கனிக்கும் மரம் போலத்தான் மனிதனின் உணர்ச்சிகள். ‘ஆழம்’ நாவல் தன்னுள் கொண்டுள்ள சாதிய கலவரம், கம்யூனிஸ்ட் தாக்குதல் ஆகியவை ஒட்டுமொத்தமாக ஒரு தோட்டத்தின் சூழலைப் புரட்டிப் போடக்கூடியது. அன்றாடங்களை அசைத்துப் பார்க்கக் கூடியது.  உளவியல் ரீதியாகவே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டியது. இந்தச் சாத்தியங்கள் எதுவும் நாவலில் நிகழாததே அதில் வரும் எந்தக் கதாபாத்திரத்தின் மேலும் ஒட்டுதல் இல்லாமல் செய்கிறது. எங்கோ ஏதோ ஓரிடத்தில் எப்போதும் நடக்கும் எளிய பகை ஒன்றின் சுவடாக மட்டுமே ‘ஆழம்’ மனதில் எஞ்சுகிறது.

இந்நாவலை வாசிக்கப் பெரும் தடையாக அமைவது நாவலின் புனைவுக்தியும் தொழில்நுட்பமும். முதலில் இந்த நாவல் யாரால் சொல்லப்படுகிறது என்பதிலேயே சில பாகங்களைக் கடந்த பிறகு கேள்விகள் உருவாகின்றன. வேடியப்பனின் மகன் மணியின் பார்வையில்தான் நாவல் தொடங்குகிறது. அவன் பார்வை எல்லைக்குள்தான் நாவல் ‘தன்மையில்’ விரிகிறது. நான்காம் பாகத்தின் இடைப்பட்ட பகுதியில் நாவலாசிரியரால் சூழல் ‘படர்க்கை’யில் வர்ணிக்கப்படுகிறது. பின்னர் இன்னொரு பகுதியில் நாவல் வேடியப்பனால் சொல்லப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கதாசிரியர் பார்வைக்கு மறுபடியும் மாறுகிறது. ஒரு நாவல் பலர் மூலம் சொல்லப்படும் உத்தி என்பது புதிதல்ல. செல்வன் காசிலிங்கத்தின் ‘மிச்சமிருப்பவர்கள்’ அதற்கு நல்ல உதாரணம். ஆனால் ஒரு பாகத்தில் சொல்லப்படும் விவரணைகள் அந்தப் பாத்திரத்தின் பார்வையைத் தாண்டி வேறொருவர் பார்வைக்குள் செல்வதென்பது வாசகன் யாரை நோக்கி பயணப்பட வேண்டும் என்பதையே குழப்பமாக்குகிறது.

இரண்டாவது, பாத்திரங்களை வார்ப்பதில் உள்ள கவனமின்மை. நாவலில் பிரதான கதைச்சொல்லியாக வரும் மணி என்பவன் அவன் அப்பாவுக்கு நடப்பதையே எங்கோ யாரோ போல தூர நின்று சொல்பவனாகவே வருகிறான். நாவலின் சில பகுதிகளில் அவன் சிறுவன் போலவும் சில பகுதிகளில் இளைஞன் போலவும் மயக்க நிலை உருவாகிறது. முதலில் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கும் அவனுக்கு உணர்ச்சியென ஒன்று இருக்காதா என்றே தோன்றுகிறது. நாவலின் மைய பாத்திரமாக வரும் வேடியப்பன் குறித்த விவரணைகளும் முன்னுக்குப் பின் முரணானவை. உதாரணமாக ‘அப்பா இயல்பிலேயே கலகலப்பான மனிதர். யாருடனாவது எதையாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும்.’ எனத் தொடங்கி அப்பா வீதியில் போவோர் வருவோரை எப்படியெல்லாம் அழைத்துப் பேச்சுக் கொடுப்பார் எனப் பக்கம் 39-40இல் விவரித்துள்ள முத்துசாமி,  116ஆவது பக்கத்தில் ‘எத்தகைய உணர்ச்சியையும் கட்டுக்குள் வைத்து ஒரே சீரான குரலில் பேசும் தன்மை கொண்டவர். சந்தோச செய்தியையும் அந்த உணர்வின் வண்ணம் ஏற்றாமல் சர்வசாதாராணமாய் வெளிக்கொட்டும் தன்மை அவருடையது.’ என்கிறார். அதுபோலவே வேடியப்பன் எப்போதாவதுதான் கோபப்படுவார். அதை அவர் மனைவியே பார்ப்பது அபூர்வம். அதெல்லாம் நடக்காத காரியம் என்பதாக அவரை வடித்தவர் நிர்வாகம் தனக்கு ஏணிக்கோடு வேலைக்கு மாற்றிக் கொடுத்ததற்கு முனியம்மாதான் காரணம் என அவளிடமும் அவள் கணவிடமும் சண்டைக்குச் செல்கிறார்;  மண்ணில் புரண்டு மல்லுக்கட்டுகிறார். இதுபோலவே மணியின் தம்பி மரணம் குறித்த செய்தியும் முரணாகவே எழுதப்பட்டுள்ளது. மணியின் தம்பி மூன்று நாள் காய்ச்சலில் இறந்துபோனதால் பக்கம் 27ல் சொல்பவர் குளிப்பாட்ட வைத்த நீரில் தலைக்குப்புற விழுந்து இறந்ததாக பக்கம் 194ல் சொல்கிறார். அதுபோல அம்மா அவ்வளவு எளிதாகக் கலங்க மாட்டாள். சாதாரணமாகக் கடவுளை வேண்டுவதில்லை என ஒரு பகுதியில் கூறுபவர் பக்கம் 59இல் அப்பாவின் கனவில் நாகம் வந்ததற்காக நாகம்மா கோயிலுக்குப் பாலூற்றுகிறாள் என எழுதுகிறார்.

மூன்றாவது, ஒரே பாகத்தில் மூன்று வெவ்வேறு பொருந்தாத சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வதும் அப்படி நிகழ்வதற்கான தொடர்புகள் இல்லாததும் இதனை ஒரு முதிர்ச்சியற்ற முயற்சியாகவே காட்டுகிறது. ஒரு பாகத்தில் ஒரு சம்பவம்தான் நிகழவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. நினைவுகள் வழியாக வெவ்வேறு காலங்களுக்குச் சென்று திரும்பும் சுதந்திரம் ஆசிரியருக்கு உண்டு. ஆனால் ‘ஆழம்’ முற்றிலும் வேறு சம்பவங்கள் நிகழும் காரணமின்றி குறுக்கிடும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டது வாசிப்பு அயற்சியை ஊட்டுவது. அதோடு இறுதி பாகத்தில் திடீரென சின்னமுத்து எனும் தொப்புளானின் வைப்பாட்டி மகனை அறிமுகம் செய்வதும் முதல் பாகத்தில் காணாமல் போன காதலியைப் புற்று நோயாளியாக மீட்ட மணி அவளுக்குப் பணிவிடை செய்வதும் ‘ஆழம்’ முத்துசாமியின் வணிக இலக்கிய முயற்சியா எனும் சந்தேகத்தையே உருவாக்குகிறது.

நாவலில் மேலும் குழப்பும் அம்சம் பாத்திரங்களின் உறவு முறைகள் பற்றியது.  ‘மருது சித்தப்பாவும் அப்பாவும் சித்தப்பா பெரியப்பா வகை அண்ணன் தம்பிகள். அப்பா மூத்தவர் கண்ணனின் மகன்.’ (பக்கம் 65) உண்மையில் அப்பாவின் (வேடியப்பனின்) அப்பாவின் பெயர் செவத்தியன். அதுபோல ‘அதில்லடா மணி, இது என்னோட அப்பன் அதான்டா ஒன்னோட தாத்தா செவத்தியானோடது’ என மணியின்  மாமா ஏழுமலை சொல்கிறார். செவத்தியன் வேடியப்பன் வழியாகவே மணிக்குத் தாத்தா. மாமாவுக்குப் பக்கம் 115ல் அவர் தகப்பனாகிறார்.

இருநூறு பக்கம் கொண்ட இந்த நாவலை வாசித்து முடித்தப் பிறகு இப்புனைவு ஒரு வாசகனுக்குக் கடத்த விளைவது என்ன என்ற கேள்வியே தொக்கி நின்றது. பைத்தியமாகத் தன்னை வடித்துக் கொண்டு சட்டத்தில் இருந்து தப்பும் வேடியப்பன் தொடர்ந்து ராமன் லட்சுமணனைக் கொல்ல புறப்படுவதில் முடியும் இந்நாவல் தீராத பகை உணர்ச்சியன்றி வேறு எதை வலியுறுத்துகிறது? வன்மத்தையும் இருளையும் ஒருவனுக்குள் திணிப்பதன்றி வேறு எதற்கு முயல்கிறது?

சீ. முத்துசாமியின் கதைகூறும் முறையும் அதற்கு அவர் கைகொள்ளும் மொழியும் மிகவும் நுட்பமானது. சிக்கலாகப் பின்னப்பட்டிருக்கும் கதையைச் சிடுக்குகள் மிகுந்த மொழியில் சொல்வதே அவர் பாணி. அதை கம்பி மேல் நடப்பது எனக் கூறலாம். கொஞ்சம் சறுக்கினாலும் அல்லது பிசகினாலும் தொடர்புகள் அறுந்து எல்லாம் அந்தரத்தில் தொங்கிவிடும். ஆழம் அவ்வாறான விபத்தைச் சந்தித்துள்ளது. சீ. முத்துசாமியின் பிற படைப்புகள்போல ‘ஆழம்’ படைப்பின் தீவிர உச்சங்களைத் தொட முடியாமல் போனது பெரிய குறையாகக்கொள்ள முடியாது. ஆனால், வெகுஜன வாசகனையும் சோர்வுக்குள்ளாக்கும் வகையில் குழப்பமாக எழுதப்பட்டிருப்பது அதன் தோல்வி என்றே ஆகிறது.

*

சீ. முத்துசாமி – தமிழ் விக்கி

ம. நவீன் – தமிழ் விக்கி

1 comment for “ஆழம்: தோண்டப்படாத மணற்கேணி

  1. July 2, 2023 at 12:23 pm

    ஆழம் நாவலின் விமர்சனம் குறை நிறை இரண்டையுமே சீர்தூக்கிப் பார்த்து எழுதப்பட்டிருக்கிறது. சீ. முத்துசாமி நாவல் எழுத்தில் ரப்பர் தோட்டப் பின்னணியைக் காட்சிக்குள்ளாக்குவதில் வாசகன் ஒரு சித்திரத்தையே மனதில் படிமமாக்கிக்கொண்டு இன்புறும் கலைத் தேர்ச்சியைக் கையாள்பவர். அதே போல பாத்திரங்களின் பல்வேறு அக உணர்ச்சிகளையும் கலையாக்குவதிலும் பழுதில்லாமல் செய்பவர். அவர் எழுத்தில் தோட்டப்புறம் உயிர்பெற்று எழுந்து வருவதை அவர் எழுத்துகளில் வாசிக்க முடியும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...