பவித்ரா தனது இடது கையை உயர்த்தி ஆங்கிலத்தில் சப்தமாகச் சொன்னாள்
“வகுப்பு முடிய இன்னும் ஐந்து நிமிஷம் தானிருக்கிறது.”
அதைக் கேட்டதும் மாணவர்கள் சிரித்தார்கள். அவளது கேலியைக் கவனிக்காமல் சிவானந்தம் மோபிடிக் நடத்திக் கொண்டிருந்தார்.
வகுப்பறையிலிருந்த மாணவர்களில் எவரும் பாடத்தைக் கேட்டதாகத் தெரியவில்லை. ஏன் இவர்கள் உலகப் புகழ் பெற்ற நாவல் ஒன்றை அறிந்து கொள்ள மறுக்கிறார்கள். ஒருவர் கையில்கூட நாவலில்லை. விலைக்கு வாங்க முடியாவிட்டாலும் நூலகத்திலிருக்கிறதே. அதை இரவல் பெற்று வரலாமே. எத்தனையோ முறை சொல்லிவிட்டார். மாணவர்கள் கேட்பதாகயில்லை.
அந்த ஆண்டு எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்க முப்பத்தியாறு மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். அதில் இருபத்தியாறு பேர் பெண்கள். ஆகவே முன்வரிசை முழுவதும் மாணவிகளே அமர்ந்திருந்தார்கள்
பேட்ரிக் கல்லூரி கிறிஸ்துவத் திருச்சபையால் நடத்தப்படுவது. அதுவும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்திவருகிறார்கள் என்பதால் மக்களிடம் அந்தக் கல்லூரிக்குத் தனி மதிப்பு இருந்தது.
சிவானந்தம் அந்தக் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து பதினாறு வருடங்களாகின்றன. அதற்கு முன்பு இரண்டு வருடங்கள் ஆந்திராவின் நெல்லூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். பிடிக்காத வேலையைத் தொடர்ந்து செய்யும்போது தோலில் தேமல் போல அலர்ஜி ஏற்படுகிறது. உடல் தனது எதிர்ப்பைக் காட்டிவிடுகிறது. அவர் தோல் நோயால் அவதிப்பட்டுச் சிகிட்சை எடுத்துக் கொண்டபோது அவரது மனைவி சுசிலா சொன்னாள்
“இந்த வேலையும் ஊரும் உங்களுக்குப் பிடிக்கவேயில்லை. வேறு வேலை தேடுங்கள். நாம மாறிப் போயிடுவோம்.”
பேட்ரிக் கல்லூரியில் அவருக்கு வேலை வாங்கி வந்தவர் பாதர் செபஸ்டியன். அவர் ஆங்கிலத் துறையின் தலைவராக இருந்தார். இங்கிலாந்தில் படித்தவர். அதோடு மெல்வில் நாவல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர். ஆகவே தன்னைப் போலவே மெல்வில் மீது பைத்தியமான சிவானந்தத்தைத் தனது துறையிலே வேலைக்கு எடுத்துக் கொண்டார்.
மோபிடிக்கை பாடம் நடத்தும் நாட்களில் சிவானந்தம் மிகவும் உற்சாகமாக உணருவார். கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே ஆசிரியர்களுக்கான குடியிருப்பு இருந்தது. அதில் ஒன்றில்தான் சிவானந்தம் குடியிருந்தார். வீட்டிலிருந்து நடந்து வரும்போது தனக்குதானே “Human madness is often times a cunning and most feline thing. When you think it fled, it may have but become transfigured into some still subtler form“. என்ற மோபிடிக்கின் வரிகளை முணுமுணுத்துக் கொண்டே வருவார்.
எத்தனையோ ஆண்டுகள் மெல்விலைப் பாடமாக நடத்தியபோதும் அவருக்குச் சலிக்கவேயில்லை.
ஆங்கில இலக்கியம் படிப்பவர்களில் பெரும்பான்மையினர் போட்டித்தேர்வுகள் எழுதி வேலைக்குப் போவதற்கோ, பிஎட் எம்எட் படித்துவிட்டு ஆசிரியர் வேலைக்குப் போவதற்கோ தான் படிக்கிறார்கள். அபூர்வமாக ஒன்றிரண்டு பேர் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் போதும் ஆர்.கே. நாராயணன் அல்லது அனிதா தேசாய் நாவல்களைத் தான் ஆய்வு செய்கிறார்கள்.
அதிலும் அவரிடம் ஆய்வு செய்ய மாணவிகளே முன்வருகிறார்கள். அந்த மாணவிகளிடம் ஹெர்மன் மெல்வில் நாவல்களைப் பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஒருவருக்குக் கூட விருப்பமில்லை. அவர்கள் விரும்பிய எழுத்தாளர்களை அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் வேலை என்பதால் விருப்பமில்லாமல் வழிகாட்டியாகச் செயல்பட வேண்டியிருந்தது.
பேட்ரிக் கல்லூரியில். பாடமாக வைக்கப்பட வேண்டிய புத்தகங்களை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள். அதற்கென ஒரு கமிட்டி இருந்தது. ஷேக்ஸ்பியரும் மில்டனும் டி.எஸ்.எலியட்டும் வேர்ட்ஸ்வொர்த்தும் எப்படி மாறாமல் எல்லா வருஷங்களிலும் பாடமாக இருக்கிறார்களோ அந்த வரிசையில் மெல்விலின் மோபிடிக்கையும் செபஸ்டியன் சேர்த்துவிட்டார்.
பாதர் செபஸ்டியனிடம் சிவப்பு கலிக்கோ பைண்ட் செய்யப்பட்ட மோபிடிக் பிரதி ஒன்றிருந்தது. பிறந்தநாளுக்கு அவரது மனைவி ரீட்டா அளித்த பரிசு என்று ஒருமுறை சொன்னார். அந்தப் புத்தகத்தைத் தான் செபஸ்டியன் வகுப்பறைக்கு எடுத்துச் செல்வார், வகுப்பறை மேஜையின் மீது வைத்துவிட்டுப் பாடம் நடத்த ஆரம்பிப்பார். ஒருமுறை கூடப் புத்தகத்தைப் புரட்டியதில்லை. அவர் மனதிலே நாவலின் அத்தனை பக்கங்களும் இருந்தன. வகுப்பை மறந்து அவர் கடலில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிடுவார்
“MEDITATION AND WATER ARE WEDDED FOR EVER” என்பதைச் சொல்லும் போது அவரது குரல் உடைந்துவிடும். எத்தனை அழகான வரி என்று தனக்குதானே சொல்லிக் கொள்வார். யாராவது அதை ஆமோதித்து உரையாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றும். ஆனால் மாணவர்கள் அதைக் கவனித்தேயிருக்க மாட்டார்கள். அந்த முகங்களில் அவரது பரவசத்தின் சுவடிருக்காது. பின்பு தலையசைத்தபடி பாடத்தைத் துவங்குவார். வகுப்பு முடிந்து தனது அறைக்குத் திரும்பும்போது கப்பலில் இரவாகிவிட்டது போல நினைத்துக் கொள்வார்.
மோபிடிக் நடத்துவது தான் அவரது வாழ்க்கையின் விதி என்பது போலவே நடந்து கொள்வார்
பாதர் செபஸ்டியன் ஓய்வு பெறும் நாளில் சிவானந்தத்தை அழைத்துச் வேடிக்கையான குரலில் சொன்னார்
“இனி நீங்கள் தான் மோபிடிக்கைத் துரத்திச் செல்ல வேண்டும்.”
“உங்களைப் போல என்னால் பாடம் நடத்த முடியாது பாதர். நீங்கள் தான் நாவலில் வரும் கேப்டன் ஆஹாப்”
“நிச்சயமாகயில்லை. நான் நாவலில் வரும் இஸ்மேல். திமிங்கல வேட்டையாடத் தெரியாத பள்ளி ஆசிரியன். ஷேக்ஸ்பியர், மில்டன், ஹோமர் ஆகிய மூன்று ஆவிகள் மெல்வில்லைப் பிடித்து ஆட்டி வைத்திருக்கின்றன. அவர்கள் மெல்வில் வழியாகப் பேசுகிறார்கள். மோபிடிக் ஒரு நாவலில்லை சிவானந்தம். அது ஒரு ஆன்மீக வழிகாட்டி. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா. அது ஒரு பரசவமான அனுபவம். சில இரவுகளில் எனது அறையில் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அதன் வெளிச்சத்தில் மோபிடிக் படித்திருக்கிறேன். அந்த வெளிச்சம் தான் மோபிடிக் படிக்க உகந்த ஒளி. அந்த அனுபவத்தை வெளியே சொன்னால் சிரிப்பார்கள். ஒரு நாவலைப் படிக்கப் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும்” என்று சொல்லி சிரித்தார் செபஸ்டியன்.
“உண்மைதான் பாதர். மோபிடிக்கை நான் ஒருமுறை கடலில் சென்று படிக்க விரும்பினேன். இதற்காகவே அந்தமானுக்குக் கப்பலில் பயணம் செய்தேன். கடல் பயணத்தில் மோபிடிக் வாசிக்கும் போது நாவல் உருமாறிவிடுகிறது”
“இந்தப் பைத்தியம்தான் நம்மை இணைத்துவைக்கிறது” என்று சொல்லி சிவானந்தம் கைகளைப் பற்றிக் கொண்டார் பாதர் செபஸ்டியன்.
இருவரும் பேச்சற்று நடந்தார்கள். நிறைய மரங்கள் அடர்ந்த வளாகமது. நிழல் அடர்ந்த பாதையில் நடப்பது என்பது கவிதையை வாசிப்பதற்கு இணையானது என்று ஒருமுறை செபஸ்டியன் தான் சொல்லியிருந்தார். அது இன்றைக்கு நினைவிற்கு வந்தது.
இரண்டு மரங்களுக்கு இடையே நடக்கும் போது செபஸ்டியன் சொன்னார்
“சிவா. மோபிடிக்கைப் பாடமாக நடத்தும் போது மாணவர்கள் மனதில் அந்தத் திமிங்கலம் நீந்த வேண்டும். உண்மையான மோபிடிக் எது என்பதை அவர்கள் உணர வேண்டும், .நாம் ஒவ்வொருவரும் ஒரு மோபிடிக்கை துரத்திக் கொண்டுதானிருக்கிறோம். அது மனிதனின் விதி, மாறாதது”
இதைச் சொல்லும் போது தேவாலயபிரசங்கத்தில் சொல்வது போன்ற குரல் அவரிடம் ஒலித்தது,
சிவானந்தம் அப்போது ஒரு மாணவன் போலவே தன்னை உணர்ந்தார். விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டினை நோக்கி செல்லும் போது செபஸ்டியன் சொன்னார்,
“ஐ லவ் மோபிடிக். மெல்வில் இஸ் கிரேட்”
அதை ஆமோதிப்பவர் போலச் சிவானந்தம் கைகளை உயர்த்தி ஆட்டினார்.
மரங்களுக்கு இடையே பாதர் செபஸ்டியன் மிக மெதுவாக நடந்து சென்றார். அதை காணும் போது சிவானந்ததிற்குத் தேசம் இழந்து போன லியர் அரசன் நினைவில் வந்து போனார்
***
எம்.ஏ. முதலாண்டின் முதற்பருவத்திற்கு மோபிடிக் நாவல் பாடமாக வைக்கபட்டிருந்தது. சிவானந்தம் வகுப்பறைக்குள் வந்தவுடன் கரும்பலகையில் ஒரு திமிங்கலத்தின் படத்தைச் சாக்பீஸால் வரைவார். அதன் அடியில் மோபிடிக் எனப் பெரிதாக எழுதும் போது கரும்பலகை கடல் போலாகி அதில் மோபிடிக் நீந்துவதைப் போல உணருவார்.
பாடமாக வைக்கபட்ட நாவல்களை மாணவர்கள் விரும்புவதில்லை. அதை படிப்பதை மோசமான தண்டனையாக நினைக்கிறார்கள். ஹென்றி ஜேம்ஸ், வர்ஜீனியாவுல்ப், டி.எஸ்.எலியட் போன்றவர்களை மாணவர்கள் வெறுக்கக் காரணம் அவர்கள் மதிப்பெண்ணிற்கான கேள்வியாக ஆனது தான்.
ஒவ்வொரு ஆண்டும் முதல்வகுப்பில் மோபிடிக்கை அறிமுகப்படுத்தும் முன்பாக அந்த நாவலை யாராவது படித்திருக்கிறார்களா எனக் கேட்பார்.
அது ஒரு சம்பிரதாயம். நிச்சயம் யாரும் படித்திருக்கமாட்டார்கள்.
ஆனால் அந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாகப் பவித்ரா என்ற மாணவி தான் மோபிடிக்கைப் படித்திருப்பதாகச் சொன்னது அவரை ஆச்சரியப்படுத்தியது.
நிச்சயம் அந்தப் பெண்ணின் அப்பா அல்லது அம்மா பேராசிரியராக இருக்கக்கூடும் என்று ஏனோ தோன்றியது.
அவளிடம் “உன் அப்பா படித்த புத்தகமா?” என்று கேட்டார் சிவானந்தம்
“இல்லை நான் வாங்கினேன். என் அப்பாவும் அம்மாவும் டாக்டர்கள். அவர்களுக்கு நாவல் படிக்க நேரமிருப்பதில்லை.” என்று அழகான ஆங்கிலத்தில் சொன்னாள் பவித்ரா.
அது கூடுதல் ஆச்சரியத்தை அளித்தது.
“மோபிடிக்கை எத்தனை நாட்களில் படித்தாய்” என்று கேட்டார் சிவானந்தம்
“822 பக்கங்கள் கொண்ட நாவலை இரண்டு வாரங்களில் படித்து முடித்துவிட்டேன். ஐஸ் ஸ்கேடிங் செல்வது போலிருந்தது. நாவலை எனக்குப் பிடித்திருந்தது.” என நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொன்னாள்
“இதற்கு முன்பு எந்த ஊரில் படித்தாய்?” என்று கேட்டார் சிவானந்தம்
“டெல்லியில். அப்பா எய்ம்ஸில் டாக்டராக வேலை செய்கிறார்” என்றாள்
டெல்லியில் பிஏ படித்துவிட்டு ஒரு பெண் எம்ஏ படிக்க அது போன்ற சிறுநகரக் கல்லூரிக்கு வந்திருக்கிறாள். இதுவரை அப்படி எவரும் வந்ததில்லை.
அவளது தோற்றத்தை ரசித்துப் பார்த்தார். காதில் பெரிய வளையம் வெள்ளை நிற பிரில்கப் சட்டை. வெளிர்நீல ஜீன்ஸ். அலைபாயும் கண்கள். தோளில் புரளும் வெல்வெட் கூந்தல். லேசாகத் தோல் உரிந்த கீழ் உதடு. இடது கையில் பேனாவை வைத்து ஆட்டிக் கொண்டிருக்கும் பழக்கம். ஆசிரியரின் கண்களைப் பார்த்து பேசும் தோரணை.
அவளைப் பார்த்தபடியே சொன்னார்
“இனி எனக்குக் கவலையில்லை. நான் பேசுவதைக் கேட்க வகுப்பில் ஒருவராவது இருப்பார்கள்”
“அப்படிக் கற்பனை செய்ய வேண்டாம். நான் வகுப்பில் தூங்கும் பழக்கம் கொண்டவள்” என்றாள் பவித்ரா.
அந்தக் குறும்பை ரசித்தபடியே அவர் கரும்பலகையில் மோபிடிக் எனப் பெரிதாக எழுதினார். பின்பு அவளிடம் கேட்டார்,
“எதனால் உனக்கு மோபிடிக்கைப் பிடித்திருக்கிறது?”
“மோபிடிக் அழகான காதல் கதை. கேப்டன் அஹாப் உண்மையில் மோபிடிக்கைக் காதலிக்கிறார். அவளால் வஞ்சிக்கபடுகிறார். அந்த நினைவுகள் அவரை அலைக்கழிக்கின்றன. அவளைத் தேடிப் போய்த் தன்னை அழித்துக் கொள்கிறார். எ டிராஜிக் லவ் ஸ்டோரி.”
அவள் பேசியதை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். இத்தனை ஆண்டு காலம் மோபிடிக்கைப் பாடமாக நடத்திய போதும் ஒருமுறை கூட இப்படி யோசித்ததில்லை.
அவள் சொல்வது உண்மை. மோபிடிக் ஒரு காதல் கதைதான்.
அவள் பேசி முடிந்தவுடன் கைத்தட்டி பாராட்டியபடி சொன்னார்,
“மோபிடிக்கின் உண்மையான வாசகி முன்னால் பாடம் நடத்த போவது சவாலானது”
அவள் வெட்கத்துடன் சிரித்தபடியே சொன்னாள்,
“பேராசிரியர்களால் உலகின் சிறந்த நாவல்களைக்கூடப் போரடிக்கும் பாடமாக மாற்றிவிட முடியும்”
அதை கேட்டு அவரும் சிரித்தார். இந்த வேடிக்கையை வகுப்பறை ரசிக்கவில்லை. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையே அறிந்திருக்கவில்லை. சதுரங்க விளையாட்டில் தனது எதிராக ஆடும் நபரைக் கூர்ந்து கவனிப்பது போல அவளைப் பார்த்தபடியே பாடம் நடத்த துவங்கினார் சிவானந்தம்.
அதன்பிறகான நாட்களில் பவித்ரா கவனிக்கிறாளா, தனது உரையை ஏற்றுக் கொள்கிறாளா என்பதையே முதன்மையாகக் கவனித்தார். அவள் உதடு சுழிப்பதை, கண்கள் சிமிட்டுவதை, கன்னத்தில் காற்றை நிரப்பி விளையாடுவதைக் கூர்ந்து அவதானித்தார். சில நாட்கள் அவள் பாதிக் கண்ணை மூடிக் கொண்டிருப்பாள். அவளை நெருங்கும் போது கவர்ந்திழுக்கும் பெர்ப்யூம் வாசனை அடிப்பதை உணர்ந்திருக்கிறார். அவள் வேண்டுமென்றே நாக்கின் நுனியை வெளியே நீட்டி ஆட்டிக் கொண்டிருப்பாள். சொற்களை நாவால் தொட முயலுகிறாளோ என்று தோன்றும்.
சில சமயம் பள்ளி மாணவி போல வகுப்பு நடக்கும் போது “தலைவலிக்கிறது. வெளியே போகலாமா” என்று கேட்பாள். அவள் கேட்கும் எதையும் சிவானந்தம் மறுப்பதில்லை.
அந்தக் கல்லூரியில் அவள் ஒருத்திதான் ராயல் என்பீல்ட் பைக்கில் வருகிறவள். அதுவும் வேகமாக ஓட்டி வருவாள். ஆங்கிலப் படங்களில் ரேஸ் ஒட்டுகிற பெண்ணை நினைவுபடுத்தினாள்.
ஒரு நாள் ஆடிட்டோரியம் அருகில் நடந்து வரும்போது எதிரே வந்த பவித்ரா கையில் இருந்த ஒரு பேப்பரைக் காட்டி சொன்னாள்,
“இது எனக்குத் தரப்படும் முப்பத்திரெண்டாவது காதல் கடிதம். நிறைய பையன்கள் என்னைக் காதலிக்கிறார்கள். என்னை விட அழகான பெண்கள் இங்கே படிக்கிறார்கள். ஆனால் எவரும் என்னைப் போல வெளிப்படையாகப் பையன்களுடன் பேசுவதில்லை. நாலு வார்த்தைப் பேசினால் போதும் உடனே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். “
“அது இயல்பு தானே” என்றார் சிவானந்தம்
“நீங்கள் ஒருவர் தான் என்னைக் காதலிப்பதாகச் சொல்லவில்லை.” என்று கேலியாகச் சொன்னாள்
“என் வயது என்னவென்று எனக்குத் தெரியும்” என்று கேலியாகச் சொன்னார்
“உண்மையில் நான் காதலிக்கும்படி ஒரு பையனும் இங்கே இல்லை. பேசாமல் உங்களைக் காதலித்துவிடலாமா என்று நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
“அதற்கு நீ என் மனைவியிடம் அனுமதி பெற வேண்டியதிருக்கும்” என்று சொல்லி அவரும் சிரித்தார்.
முந்தைய ஆண்டுகளை விடவும் அந்த வருஷம் மோபிடிக் வகுப்புகள் மிக வேகமாகச் செல்வதைப் போல உணர்ந்தார். அவளது விளையாட்டுதனங்களும் அவளது நுனி நாக்கு ஆங்கிலமும் வகுப்பு மாணவர்களிடம் வெறுப்பையும் எரிச்சலையும் உருவாக்கியிருந்தன. அதை அவள் ரசித்தாள். வேண்டுமென்றே அதை வளர்த்துவிட்டாள். ஸ்டாப் ரூமில் அவரது சக பேராசிரியர்கள் கூட அவளைப் பற்றி மோசமாகக் கமெண்ட் அடித்தார்கள்.
மாடிப்படியில் இறங்கி வரும் போது ஒருமுறை அவரிடம் கேட்டாள்
“நீங்கள் ஏன் டீசர்ட் அணிவதில்லை. ஆசிரியர்கள் அணியக்கூடாது என்று விதியிருக்கிறதா”
“ஆமாம். ஆசிரியர்கள் டீசர்ட் அணிந்து வரக்கூடாது’” என்றார்
“சிவப்பு நிற டீசர்ட் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். இளமையாகத் தெரிவீர்கள்” என்றாள்
“கல்லூரி நாட்களில் கூட நான் டீசர்ட் அணிந்ததில்லை” என்றார் சிவானந்தம்.
“உங்களை யாரும் காதலிக்கவில்லை போலும்” என்று சொல்லிவிட்டுப் படிகளில் தாவி இறங்கி ஓடினாள். அது பூனைக்குட்டி தாவிச் செல்வதைப் போலவேயிருந்தது.
ஸ்டாப் ரூமிற்குத் திரும்பிய பிறகு ஏன் அப்படிச் சொன்னாள் என்று யோசித்துக் கொண்டேயிருந்தார். வீடு திரும்பிய பின்பும் அந்த எண்ணம் மாறவில்லை. அன்று மாலை சிவானந்தம் தனது மனைவியை அழைத்துக் கொண்டு வில்லோ பிராண்ட் ஷோரூமிற்குச் சென்றார். முதன்முறையாக இரண்டு டீசர்ட் வாங்கினார். அதுவும் சிவப்பு மற்றும் நீலம். அதை வீட்டிற்கு வந்து அணிந்து பார்த்தபோது அவரது மனைவி சொன்னாள்,
“உங்களைப் பார்த்தால் காலேஜ் ஸ்டுடண்ட் போலிருக்கிறது”
அவள் இப்படிச் சொன்னதேயில்லை. அதை ரசித்தபடியே சொன்னார்,
“அப்படியாவது வயது குறைந்தால் சரி”
அதைக்கேட்டு அவளும் சிரித்தாள். அவர்களுக்குத் திருமணமாகி பதினாறு ஆண்டுகள் ஆன போதும் குழந்தைகள் இல்லை. அதை பற்றிய கவலை அவளுக்கு அதிகமிருந்தது. சிவானந்தம் அதை பெரிய குறையாக நினைக்கவில்லை. குடும்ப விழாக்களுக்குப் போகும் போது மட்டும் யாராவது இதை பற்றிப் பேசினால் எரிச்சல் அடைவார். கடவுள் கருணைகாட்டவில்லை என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வார்.
சொந்தவாழ்வின் வலிகளை, கவலைகளை இலக்கியம் மறக்க வைத்துவிடுகிறது. அதுவும் திரும்பத் திரும்ப ஒரு புத்தகத்தை வாசிக்கையில் அது மருந்தாக மாறிவிடுகிறது. அதை சிவானந்தம் முழுமையாக உணர்ந்திருந்தார்.
***
மோபிடிக் பற்றி அவ்வளவு ஆசையாக அவருடன் விவாதிக்கும் பவித்ரா பரிட்சையை மிக மோசமாக எழுதியிருந்தாள். அவசரமாகவும் கிறுக்கலாகவும் இருந்த அவளது பரிட்சை பேப்பரைத் திருத்தும் போது வேண்டுமென்றே அதிக மதிப்பெண் போட்டார்.
பரிட்சை மதிப்பெண்களை வகுப்பில் பகிரும் போது பவித்ரா கேட்டாள்
“மார்க் அள்ளி போட்டிருக்கிறீர்கள். நான் பெயிலாக விரும்பினேன்.”
“எதற்காக?” என்று கேட்டார்.
“பெயிலாவது ஒரு ஆனந்தம். படிப்பை உதறிவிட்டுப் பைக்கில் ஊர் சுற்றவே ஆசைப்படுகிறேன்.”
“உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே” என்றார் சிவானந்தம்.
“உங்களுக்குத் தான் அது பொருத்தமான வார்த்தை” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினாள். அதை மாணவர்கள் கவனித்திருக்கக் கூடும். அவள் மீது பார்வையைச் செலுத்தக்கூடாது என்று கவனமாக உணர்ந்தவர் போல மாணவர்கள் பக்கம் நடந்து போனார். அவசரமாக ஒரு மாணவனைப் பாராட்டினார்.
அன்று வகுப்பு முடிந்து திரும்பி வரும்போது பவித்ரா “என்னோடு காப்பி குடிக்க வருகிறீர்களா?” எனக் கேட்டாள்.
இதுவரை எந்த மாணவியும் அவரிடம் இப்படிக் கேட்டதில்லை. வேண்டாம் என மறுக்க நினைத்தபடியே சரியெனத் தலையசைத்தார்.
அவரே இருவருக்கும் காப்பி வாங்கி வந்தார். அவள் காப்பியைச் சுவைத்தபடியே சொன்னாள்.
“நான் ஒரு பையனை காதலிக்கிறேன். அது என் வீட்டிற்குத் தெரியும். அவனைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகத் தான் என்னை இந்தக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார்கள்”
“அப்படியா” என்று மெதுவான குரலில் கேட்டார்
“ரோஷன் டெல்லியில் இருக்கிறான். இந்தக் கல்லூரி, வகுப்பு எதையும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் திரும்பவும் டெல்லி போக விரும்புகிறேன்”
“படித்து முடித்துவிட்டுப் போகலாமே”
“என் அப்பாவைப் போலவே பேசுகிறீர்கள். ரோஷனை நான் காதலிப்பதா கூடாதா எனக் குழப்பமாக இருக்கிறது”
“உன் சொந்த வாழ்க்கையைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்”.
“அதுவும் சரி தான். நானே முடிவு செய்து கொள்கிறேன். ஒரு உண்மையைச் சொல்லட்டும்மா? எனக்குக் காப்பி பிடிக்கவே பிடிக்காது உங்களுக்காகக் குடித்தேன்.”
என்றபடியே விடைபெற்றுப் போய்விட்டாள்.
அதன்பிறகு அடிக்கடி அவள் கல்லூரிக்கு வராமல் விடுப்பு எடுத்தாள். கல்லூரி வளாகத்தில் ஒருமுறை அவள் சிகரெட் பிடித்தபடி நிற்பதைக் கண்டார். வேறு ஒரு நாள் யாரோ ஒரு பையனுடன் கைக்கோர்த்து நடந்து போவதைப் பார்த்தார். ஏனோ அது பிடிக்கவில்லை. இன்னொரு நாள் நூலகத்தின் படிக்கட்டில் அந்தப் பையன் மடியில் தலைவைத்து அவள் படுத்துகிடப்பதைக் கண்டார்.
ரோஷனைக் காதலித்த பெண் இப்படி நடந்து கொள்கிறாளே என்று அவருக்கும் குழப்பமாக இருந்தது.
***
பின்பு ஒரு ஞாயிற்றுகிழமை பவித்ரா அவர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியபடி வாசலில் நின்றிருந்தாள். அதை அவர் எதிர்பார்க்கவேயில்லை.
கதவைத் திறந்த அவரது மனைவி “யாரோ ஒரு ஸ்டுடண்ட் உங்களைப் பாக்க வந்திருக்காள்” என்று சொன்னாள்
அது பவித்ரா என்பது வியப்பாக இருந்தது.
வீட்டிலிருக்கும் போது அவர் டீசர்ட் அணிந்திருந்தார். அவள் அதை பார்த்து ரசித்தபடியே சொன்னாள்
“நான் சொன்னதற்காக டீசர்ட் போட ஆரம்பித்துவிட்டீர்களா. சூப்பர்”
அதை கேட்டதும் அவரது மனைவியின் முகம் மாறியது.
“உங்களைத் தொந்தரவு பண்ணலையே” என்று கேட்டாள்.
“அதெல்லாம் இல்லை.” என்றார்.
“உங்களது லைப்ரரியைப் பாக்கணும்னு ஆசையா இருந்துச்சி. பாக்கலாமா”
“அப்படி ஒண்ணும் பெரிய லைப்ரரி என்னிடம் இல்லை. ”
“நிச்சயம் உங்க புத்தகம் எதையும் திருட மாட்டேன்.”
“மாடியில இருக்கு வா பார்க்கலாம்” என்று அவளைத் தனது அறைக்கு அழைத்துப் போனார்.
புது வீடு கட்டும் போது மாடியில் அவருக்கான ஒரு அறையை அமைத்துக் கொண்டதோடு அதன் சுவர்களில் அழகான புத்தக அடுக்கினை வடிவமைத்திருந்தார். இரண்டு பக்கமும் நீளும் அந்தப் புத்தக அடுக்குகள் அவரது மேஜையிலும் அதை சுற்றிய மரப்பலகையிலும் நிறைய புத்தகங்கள். அவள் அவரது ஹெர்மன் மெல்வில் கலெக்சனைப் பார்வையிட்டுப் பாராட்டினாள். சில்வியா பிளாத் கவிதைகள் நூலை எடுத்துப் புரட்டினாள். அவர்களுக்காகச் சர்பத் தயாரித்துக் கொண்டு வந்திருந்த மனைவி அதை கொடுத்தபோது பவித்ரா வாங்கிக் கொண்டபடியே“நீங்க லவ் மேரேஜா” என்று கேட்டாள். “இல்லை” என்று அவரது மனைவி தலையாட்டினாள்.
“நீங்க இவர்கிட்ட படிச்சிருந்தா. நிச்சயம் இவரை லவ் பண்ணீருப்பீங்க” என்று கேலியாகச் சொன்னாள்.
அதை சிவராமனின் மனைவி ரசிக்கவில்லை. அவள் வேண்டுமென்றே கேட்டாள்
“எலுமிச்சைபழம் புளிப்பு ஜாஸ்தியா இருந்துச்சி. சர்பத் ஒகேவா”
அவர் நன்றாக இருப்பதாகத் தலையாட்டினார்.
பவித்ரா வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் கவிதைகள் நூலையும், ரேமண்ட் கார்வர் சிறுகதை புத்தகத்தையும் திருடிக் கொள்வதாகச் சொன்னாள்.
“திருட்டை அனுமதிக்கிறேன்” என்று சொல்லி சிரித்தார்.
அதை பவித்ரா ரசிக்கவில்லை. வேண்டாம் என்று அந்தப் புத்தகங்களை அங்கேயே விட்டுச் சென்றாள்.
அவள் விடைபெற்று சென்றபிறகு சிவானந்தம் மனைவி கேட்டாள்
“யார் இந்தப் பொண்ணு?”
“டாக்டர் மகள். டெல்லியில் இருந்து வந்திருக்கிறாள். சரியான லூசு”
அப்படிச் சொன்னதை ஏற்றுக் கொள்வது போல அவரது மனைவி சொன்னாள்
“ஆளும் அவ பேச்சும் சகிக்கலை”
ஆமாம் என்பது போலத் தலையாட்டினார்.
மறுநாள் வகுப்பிற்குச் சென்றபோது பவித்ராவைக் காணமுடியவில்லை. அன்று மதியம் ஒரு பையனுடன் அவள் ஸ்போர்ட்ஸ் ரூமில் முத்தமிட்டுக் கொண்டிருந்த போது பிடிபட்டதாக வகுப்பில் பேசிக் கொண்டார்.
பிரின்சிபல் சாமுவேல் அவரை அழைத்திருந்தார். பிரின்ஸ்பல் அறையில் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் பவித்ரா நின்றிருந்தாள்
“இந்தப் பொண்ணு உங்க கிளாஸ்ல எப்படி நடந்துகிடுவா” என்று கேட்டார் பிரின்ஸ்பல்.
என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. தனது உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னார்
“Notorious Girl”
“நம்ம காலேஜ் பேரை கெடுக்கிற மாதிரி காரியம் பண்ணியிருக்கா. அவளைச் சஸ்பெண்ட் பண்ணலாமானு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க” எனக் கேட்டார் முதல்வர்.
பவித்ரா குறுக்கிட்டுச் சொன்னாள்,
“கிஸ் பண்ணுறது என்னோட தனிப்பட்ட விஷயம். இதுல தலையிட யாருக்கும் உரிமை கிடையாது”
“இது காலேஜ்” என்று குரலை உயர்த்திச் சொன்னார் முதல்வர்.
“சோ வாட். என்னை விசாரிக்க உங்களுக்கு உரிமை கிடையாது. நீங்க என்ன வேணும்னாலும் முடிவு எடுத்துக் கோங்க” என வெளியேறிச் சென்றாள்.
அவள் முத்தமிட்ட பையன் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.
பிரின்ஸ்பல் அறையை விட்டு வெளியே செல்லும் போது சிவானந்தம் அருகில் வந்து சொன்னாள்
“மோபிடிக்கை பாடமாக நடத்தினால் போதாதது. அதை வாழ்க்கையில் சந்திக்கத் துணிச்சல் வேண்டும்”
அவருக்கு என்ன பதில் பேசுவது எனத் தெரியவில்லை. பவித்ராவின் தாத்தா அந்த ஊரில் பெரிய வணிகர் என்பதால் அவளை எச்சரிக்கை செய்து அனுப்பியதோடு வேறு எந்த நடவடிக்கையும் முதல்வர் எடுக்கவில்லை.
ஆனால், அதன்பிறகான நாட்களில் பவித்ரா அணிந்து வரும் உடைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனது உடலை வெளிப்படுத்தும்படியாக மெல்லிய ஆடைகள் அணிந்து வந்தாள். வகுப்பில் சூயிங்கம் மென்றாள். வேண்டுமென்றே பையன்களைப் பைக்கில் பின்னால் அழைத்துச் சுற்றினாள். அவர் இல்லாத நேரம் இரண்டு முறை அவரது வீட்டிற்குச் சென்று மனைவியோடு பேசிக் கொண்டிருந்தாள். அவளை எப்படிக் கையாளுவது எனச் சிவானந்ததிற்குப் புரியவில்லை.
ஒரு நாள் காரிடாரில் வைத்து அவரிடம் கேட்டாள்,
“உங்கள் புருவத்திற்குள் நடுவே என்றாவது கழுகு சுற்றுவது போல உணர்ந்திருக்கிறீர்களா?”
“இல்லை” எனத் தலையாட்டினார்.
“என் புருவ மத்தியில் எப்போதும் ஒரு கழுகு சுற்றிக் கொண்டிருக்கிறது. அது என்னை நிம்மதியில்லாமல் ஆக்குகிறது. எனக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் எதையும் பிடிக்கவில்லை”
“நீ மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறாய்”
“அதை தெரிந்தே செய்கிறேன். என்னை இவர்கள் அவமதிக்கிறார்கள். நான் ஒரு சராசரியில்லை.”
“இது டெல்லியில்லை”
“எல்லா ஊர்களிலும் ஒன்று போலத் தான் நடந்து கொள்கிறார்கள். இந்தப் பெருச்சாளிகளை நான் வெறுக்கிறேன்.”
பதிலை எதிர்பார்க்காமல் அவள் விலகி சென்றுவிட்டாள்.
அதன்பிறகு பவித்ரா கல்லூரிக்கு வரவில்லை.
அவள் ஆசைப்பட்டது போலப் பைக்கில் நீண்ட தூரப் பயணம் போய்விட்டாள் என்பதை அறிந்து கொண்டார். அவள் வகுப்பில் இல்லாத போதும் அவள் இருப்பது போலவே உணர்ந்தார். அவளைத் திரும்பக் காண வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் அதிகமானது,. திடீரெனத் தான் மோபிடிக் நாவலின் கதாபாத்திரம் போலாகிவிட்டதாக உணர்ந்தார். அவளை எப்படியாவது மறக்க வேண்டும் முனைந்தார். அவள் ஆழ்கடலில் நீந்தும் திமிங்கலம் போல மனதில் நீந்திக் கொண்டேயிருந்தாள்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் இரவு அவரோடு தொலைபேசியில் பேசிய பவித்ரா தான் லடாக்கில் சுற்றுவதாகச் சொன்னாள். அடுத்த ஆண்டு எங்கிருந்தோ அவருக்கு ஒரு மோபிடிக் டீசர்ட் ஒன்றை வாங்கி அனுப்பியிருந்தாள். அவரால் அவளை மறக்க முடியவேயில்லை. அவரது தோலில் தேமல் போன்ற அலர்ஜி மறுபடியும் உருவாக ஆரம்பித்தது.
அவர் கண்ட அவரது மனைவி ஆதங்கத்துடன் கேட்டாள்
“மனதில் எதையோ மறைக்கிறீர்கள்.”
அவளிடம் சிவானந்தம் சொன்னார்
“எனக்கு மோபிடிக் நடத்த பிடிக்கவேயில்லை. ஆனால் அதை நடத்த வேண்டியுள்ளது.”
“வேறு யாராவது பாடம் எடுக்கச் சொல்ல வேண்டியது தானே” என்று கேட்டாள்
“அதை தான் சொல்லியிருக்கிறேன். இனி நான் மோபிடிக் நடத்தப்போவதில்லை”
“நமக்குப் பிடிக்காத விஷயங்களை விடவும் பிடித்த விஷயங்கள் தான் அதிகம் தொந்தரவு தருகின்றன” என்று அவரது மனைவி சொன்னாள்.
எவ்வளவு அழகாகப் பேசுகிறாள் என்று வியப்போடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன்பிறகு சிவானந்தம் மோபிடிக் எடுக்கவேயில்லை.
•
நான் மோபி டிக் நாவலை வாசிக்கவில்லை. இந்தச் சிறுகதை மோபி டிக் நாவலின் கதைப் போக்கை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டாலும், இது முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்குவதாகப் புரிந்துகொள்கிறேன். நாம் ஒரு நாவலை வாசிக்கிறோம். அது பேசும் பொருளில் அதன் கவித்துவத்தில் நம்மை இழந்துவிடுகிறோம். ஆனால் வாழ்க்கையில் அதேபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும்போது அல்லது நாவலில் உள்ளது போன்று நமக்கு நேரும்போது நாம் தந்நிலை இழந்துவிடுகிறோம். தன் மாணவி பவித்ராவை எதிர்கொள்ளும்போது சிவாவின் தடுமாற்றம் தொடங்குகிறது. அவர் மோபி டிக்கை வெகுவாக நேசித்து போதித்து வந்தவர் பவித்ராவிந் மீதான மோகத்தால் மோபி டிக்கை இனி தன்னால் முன்பு போல போதிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதனாலேயே அவர் அங்கே இனியும் தன்னால் வேலை செய்ய முடியாது என்று முடிவெடுக்கிறார். பவித்ராவின் நினைவை, மோபி டிக் பாடப் போதனை தூண்டிக்கொண்டே இருக்கும் என அஞ்சுகிறார். எஸ்ராவின் கதைகளை விடாமல் வாசித்து வருகிறேன். வாசகன் அவரின் கதைவழி தன்னை இட்டு நிரப்பிக்கொள்வதற்கான வெற்றிடத்தை விட்டுச் செந்று வாசகனை கதைக்குள் ஆழமாகப் பயணம் செய்ய வைக்கிறார், இந்தக் கதையும் அந்த வகை மாதிரியைக் கொண்டுள்ளது. எஸ்ராவின் மிக சிறந்த கதைகளில் ஒன்று வகுப்பறைக்குள் ஒரு திமிங்கலம்.
அழகிய இயல்பான கதை.
என்னமோ தெரியவில்லை சிவானந்தம் கதாப்பாத்திரம் இயக்குனர்/ நடிகர் தம்பி ராமையாவை நினைவில் வரவைக்கின்றது.
-எம். பிரபு, பெந்தோங்.
??????