முனைவர் மு. இளங்கோவன் தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர். இளம் வயதிலேயே பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு, தென்மொழி போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் ஏடுகள் அறிமுகம் ஆனதால், தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆழ்ந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்வழி பன்முக ஆய்வாளராக உருமாறி நாட்டுப்புறவியல், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழிசை, மறந்துபோன தமிழறிஞர்களின் வரலாறு, ஆவணப்படம், நூல் பதிப்புத்துறை, இணையம் எனப் பல்வேறு துறைகளில் தம் பேராசிரியர் பணியினுக்கிடையே மிகத்தீவிரமாகச் செயலாற்றிவருகின்றார். ‘பொன்னி’ இதழ்களை மீட்டுத் தொகுத்தது இவர் அறிவுலகுக்கு ஆற்றிய பெரும்பணி. கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்த மு.இளங்கோவன் தற்சமயம் புதுச்சேரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சமகாலத்தின் மிக முக்கிய ஆய்வாளராகச் செயல்படும் மு.இளங்கோவன் தம் பார்வைப் பரப்பைத் தமிழகத்துக்குள் மட்டும் குறுக்கிக் கொள்ளாமல், மலேசியா, சிங்கை, இலங்கை, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா என உலகில் தமிழர்கள் வாழும் நிலங்கள்தோறும் படரச்செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். மு. இளங்கோவன் அவர்களுக்கு 2023-க்கான தமிழ் விக்கி–தூரன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 6 ஞாயிறு மாலையில் இவ்விருது விழா ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள ராஜ் மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மலேசிய ஆய்வுலகுக்கும் பெரும் பங்கினை வழங்கியுள்ள மு. இளங்கோவனுக்கு வல்லினம் தன் வாழ்த்தைப் பதிவு செய்வதுடன் இந்நேர்காணலை வெளியிடுகின்றது.
உங்களின்ஆரம்பக்கால வாழ்க்கை குறித்துக் கூறுங்கள்?
மு. இளங்கோவன்: என் பிறந்த ஊர் கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர். என் பெற்றோர் உழவை முதன்மை தொழிலாகக் கொண்டவர்கள். அப்பா, அம்மாவுக்கு எழுதப் படிக்க மட்டும் தெரியும். நான் பள்ளிக்கூடம் சென்ற வயதில் பெரும்பாலும் என் அம்மாதான் எனக்கு வீட்டுப் பாடங்களைக் கற்றுத் தருவார். என் அம்மா தாலாட்டுப் பாடல்களையும் ஒப்பாரிப் பாடல்களையும் பல மணி நேரம் மனப்பாடமாகப் பாடக்கூடியவர். விவரம் தெரிந்த வயதிலும் அவரைப் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இளம் வயதில் நிலக்கடலை ஆய்வது, கடலைப் பொறுக்குவது, ஆடு மாடு மேய்ப்பது, சாணி பொறுக்குவது, புல் அறுப்பது, மீன்பிடிப்பது, சிறுவர்களுடன் நீர்நிலைகளில் ஓரி விளையாடுவது, கிட்டிப்புல் அடிப்பது, கோலி விளையாடுவது, பந்தடிப்பது, சடுகுடு விளையாடுவது என்று பொழுதுகள் கழிந்தன. அத்தகைய காலங்களில் மக்களிடம் இருந்த வாய்மொழி வடிவங்கள் எனக்கு அறிமுகம் ஆயின.
சந்திராவர்ணம் என்ற பெயர்கொண்ட ஆயா ஒருவர் இருந்தார். அவர் ஒரு தகவல் சுரங்கம், பாடலும் கதையும் அவரிடம் அடைக்கலம் புகுந்திருந்தன. வேலையிடங்களில் அவரைச் சுற்றிப் பெருங்கூட்டமாக அமர்ந்து அவரின் கதைகளைக் கேட்போம். அவர் கதை சொல்லும்பொழுது வெயில்கொடுமையோ, மழைச்சாரலோ எங்களுக்குத் தெரிவதே இல்லை. அதுபோல் பழனியம்மா என்று ஒரு ஆயா இருந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான கட்டைக் கோலங்கள் தெரியும். பொங்கல் திருவிழாவின் பொழுது அவரின் கட்டைக்கோலங்கள் வீட்டை அழகுடையதாக்கும். அவற்றையெல்லாம் ஆவணப்படுத்த முடியாமல் போனதே என்று இப்பொழுதும் கவலைப்படுவது உண்டு. மேற்கண்ட இருவரிடம் இருந்த கலைக்கூறுகள் பல்லாயிரம் பக்கம் பதிவுச் செய்யப்படவேண்டிய தமிழர்களின் கலைத்திறன் ஆவணங்களாகும்.
இடைக்கட்டு எனும் ஊர்தான் உங்களின் இளமைக்காலத்தை வடிவமைத்தது அல்லவா? எத்தனை தலைமுறையாக அந்த ஊரில் வாழ்கிறீர்கள்?
மு. இளங்கோவன்: எங்கள் முன்னோர்கள் பெண்ணாடம் அருகில் உள்ளஈச்சங்காடு என்ற பகுதியிலிருந்து, குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு கொலையின் பொருட்டு ஏழு தலைமுறைக்கு முன்பாக இடைக்கட்டுப் பகுதிக்கு வந்ததாகவும், இங்கிருந்த காடு மேடுகளைத் திருத்தி, நிலமாக்கி வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிடுவார்கள். ஏழு தலைமுறைக்கு முன்பு என் முன்னோர் வாழ்ந்த இடத்தை நானே பின்னாளில் கண்டுபிடித்து என் உறவினர்களுக்குச் சொன்னேன். அங்குள்ள கோயில்களையும் வாய்மொழிக் கதைகளையும் ஆவணப்படுத்தி, 1997லில் தினமணி தீபாவளி மலரில் எழுதியுள்ளேன். அக்கட்டுரை வெளியானதற்குப் பிறகு பல ஊர்களில் இருந்த உறவினர்கள் குலதெய்வக் கோவிலுக்கு வந்து வழிபடும் நிலை உருவானது.
இடைக்கட்டு என்னும் என் ஊர் சற்றொப்ப நூறு குடும்பங்கள் வாழும் ஊராகும். இவ்வூர் திரௌபதை அம்மன் கோவில் தீமிதித் திருவிழாவால் புகழ்பெற்றது. பொன்னேரி என்னும் ஏரியால் வளம்கொழிக்கும் ஊர். பொன்னேரி என்பதன் பழைய பெயர் சோழகங்கம் என்பதாகும். காவிரியின் பிரிவாகிய கொள்ளிடம் ஆற்றிலிருந்து, வெள்ளாறு வரை நீண்ட நீர்நிலையை உருவாக்கி, சோழ அரசர்கள் காலத்தில் பொன்னாறாகப் பயன்படுத்தி வந்தனர். பாண்டியப் படையெடுப்புக்குப் பிறகு பொன்னாறு சிதைக்கப்பட்டு, மண்மேடு இட்டு, காடு மேடுகளாக உருமாறிப் பொன்னேரியானது. ‘வெற்றி மயமான நீர்த்தூண்’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த ஏரியைக் குறிப்பிடும்.
இராசேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்து, வெற்றி பெற்று, அவ்வெற்றியின் நினைவாக இந்தப் பொன்னேரி என்ற சோழகங்கத்தை உருவாக்கினான். சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்குள்ள கங்கைகொண்டசோழபுரம் கோவிலும் ஊரும் பிற தேசத்து அரசர்களின் கொள்ளையடிக்கும் வேட்டைக்காடாக மாறிப்போனது. கங்கைகொண்டசோழபுரத்தை ஒட்டியுள்ள ஊர்கள் உள்கோட்டை, மாளிகைமேடு, சோழன்மாதேவி, வீரசோழபுரம், வானதிரையன் குப்பன், வாணதிரையன் பட்டினம், நாயகனைப்பிரியாள், படைநிலை, தென்னவன்நல்லூர், வீரபோகம், உலகளந்தசோழன்வெளி, வானவன்மாதேவி, கடாரங்கொண்டான், ஆயுதக்களம் என்று வரலாற்றைச் சுமந்து நிற்கின்றன. இந்த ஊர்களிலெல்லாம் எங்களுக்கு உறவும் நிலபுலங்களும் உண்டு.
படையெடுப்புகளால் கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து பலதிசைக்கும் பிரிந்த மக்கள் கால ஓட்டத்தில் மீண்டும் இந்தப் பகுதிக்குத் திரும்பிக், காடுகளைத் திருத்திக் கழனியாக்கினர். குளம் உருவாக்கினர். ஊர் உருவாக்கினர். அவ்வகையில் இந்தப் பொன்னேரியை என் முன்னோர்கள் திருத்தி, வேளாண்மைக்கு உரிய நிலமாக்கினர். நூற்றுக்கணக்கான காணிகள் இந்த ஏரியின் உள்ளே நிலமாக என் முன்னோர்களுக்கு இருந்தது. ஆடு, மாடுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேயர்கள் பெரும் திட்டமிடலுக்குப் பிறகு இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகப் பொன்னேரியைத் திருத்தமான ஏரியாக உருவாக்க முனைந்தனர். கரைகள் வலுப்படுத்தப்பட்டன. படித்துறைகள், மதகுகள், கலுங்குகள் அமைக்கப்பட்டன. நீர்நிலைப் பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். அப்பொழுது எங்களின் பல நூறு காணி நிலங்களை அரசு எடுத்துக்கொண்டது. இதனால் எங்கள் குடும்பம் செல்வாக்கு இழந்தது. வறுமை குடிகொள்ளத் தொடங்கியது. 64 உத்திரங்கள் கொண்ட- தேக்குமரங்களால் இழைக்கப்பட்ட மிகப்பெரிய வீட்டின் உரிமையாளரான நாங்கள் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கத் தொடங்கினோம். இன்றும் நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த வீட்டைப் பாதுகாத்து வருகின்றோம்.
உங்கள் கல்வி வாழ்க்கை குறித்துப் பகிர்ந்துகொள்ளுங்கள்?
மு. இளங்கோவன்: என் பள்ளிப் படிப்பு உள்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் தொடங்கியது. திருவாளர் சோமசுந்தரம் ஆசிரியர் அகரம் பயிற்றுவித்து, மாணவனாகப் பள்ளியில் சேர்த்தார். ஐந்தாம் வகுப்பு வரை அங்குப் பயின்றேன். தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கவும், ஆங்கில எழுத்துகளை அறிந்துகொள்ளவும் மட்டும் ஐந்து ஆண்டுகள் ஓடின. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றேன். இங்குதான் தமிழ் அறிமுகம் ஆனது. மிகச் சிறந்த புலவர் பெருமக்கள் தமிழாசிரியர்களாக அமைந்தனர். மீன்சுருட்டி சிவகுருநாதன் ஐயா, இளையபெருமாள் நல்லூர் குஞ்சிதபாதம் ஐயா, கடாரங்கொண்டான் கணேசமூர்த்தி ஐயா, உள்கோட்டை காசிநாதன் ஐயா, பாகல்மேடு இராமலிங்கம் ஐயா உள்ளிட்ட தமிழாசிரியர்கள் என் தமிழறிவுக்கு விதை போட்டவர்கள். கணக்கு, ஆங்கிலம், அறிவியல், வரலாறு போன்ற பாடங்களை நடத்திய ஆசிரியப் பெருமக்களும் ஈடுபாட்டோடு எங்களுக்குப் பயிற்றுவித்தனர். ஓரளவு நல்ல மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றேன்.
மேல்நிலைக் கல்வி படிப்பதற்கு அருகில் உள்ள ஊரான செயங்கொண்டம் அரசுப் பள்ளியில் சேர்வதா? மீன்சுருட்டி அரசுப் பள்ளியில் சேர்வதா? என்று நீண்டவிவாதத்திற்குப் பிறகு மீன்சுருட்டி அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் அமைந்த அந்தப் படிப்பு மிகப்பெரும் சோதனைகளைக் கடக்க வேண்டிய படிப்பாக அமைந்தது. எட்டு கி.மீ. தொலைவு நடந்தே பள்ளி செல்ல வேண்டிய நிலை. வயல் வரப்புகளிலும், வசதியற்ற சாலைகளிலும் நாள்தோறும் சென்று வர வேண்டிய சூழல். மழை, புயல், வெயில் இவற்றையெல்லாம் வெற்றுக்கால்களுடன் கடந்து சென்று படித்தேன். என்னுடன் படிக்கும் மாணவர்கள் யாரேனும் இரவல் மிதிவண்டி கொடுத்தால் அவர்களையும் சேர்த்து வைத்து மிதிக்க வேண்டும். உணவு, சீருடை இல்லாமல் பெருந்துயரங்களைச் சந்தித்தேன். அறிவுப்பசியும் வயிற்றுப்பசியும் ஒன்றையொன்று என்னிடம் ஆதிக்கம் செலுத்தின. குடும்பச்சூழலும் கல்விச்சூழலும் போட்டியிட்டு, துயரம் விளைவித்ததால் மேல்நிலைத் தேர்வில் தோல்வி ஏற்பட்டது. நேரம் பார்த்துக் காத்திருந்த என் தந்தையார் நிலங்களைப் பயிர் செய்வதற்கு ஓர் ஆள் கிடைத்தான் என நினைத்து, வாய்ப்பாக ஒரு ஜோடி ஏரோட்டும் மாடு வாங்கித் தந்தார். மூன்று கல் தொலைவில் உள்ள நிலங்களுக்குச் சென்று நாளும் ஏரோட்டுவதும், விதைப்பதும், நடுவதும், அறுப்பதுமாக மூன்றாண்டுகள் என் இளமை பொழுதுகள் கழிந்தன.
ஆண்டின் பெரும்பகுதி வயல்வேலைகளில் இருந்த நான் ஓய்வு நேரங்களில் துணிக்கடை ஒன்றில் பகுதிநேரப் பணிகளில் இருந்தேன். என் இளம் அகவையிலேயே பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு, தென்மொழி ஏடுகள் அறிமுகம் ஆயின. தென்மொழி ஏடு அஞ்சலில் என் இல்ல முகவரிக்கு ஒவ்வொரு மாதமும் வரும். ஒருநாள் அஞ்சல்காரர் அப்பொழுது வெளிவந்த தென்மொழி ஏட்டினை கொடுத்துச் சென்றார். அதனைப் புரட்டிக்கொண்டிருந்த என்னைக் கண்ணுற்ற துணிக்கடை உரிமையாளரின் மருகர் வாரியங்காவல் புலவர் ந. சுந்தரேசன் ஐயா, அன்புடன் என்னை அழைத்து, வினவினார். படிக்கும் வாய்ப்பு இல்லாமல் வறுமையில் உழலும் என் நிலையை அறிந்து கவலையுற்றார். தென்மொழி படிக்கும் ஒருவன் கடைப்பணியில் எடுபிடி வேலையில் இருப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
எங்கள் ஊரின் அருகில் இருக்கும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்று தமிழ் இலக்கியம் படித்து, வேலைக்குச் செல்லலாமே என்று ஆற்றுப்படுத்தினார். அவரின் வழிகாட்டலால் கல்லூரியில் சேர்வதற்குரிய ஆர்வம் எனக்குத் துளிர்விட்டது. துணிக்கடைக்குச் செல்வதைத் தவிர்த்தேன். உழவுத்தொழில் பகுதிநேரமானது. திருப்பனந்தாள் காசித்திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியைப் பற்றி வினவிக்கொண்டு, நானும் என் தந்தையாரும் கல்லூரிக்குச் சென்று, விண்ணப்பம் ஒன்று வாங்கி நிறைவுசெய்துகொடுத்தோம். உடன் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்தது.
எப்படி இருந்தது உங்கள் கல்லூரி வாழ்க்கை?
மு. இளங்கோவன்: திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் மாணவனாக 1987ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த நான் வகுப்பில் முதல் மாணவனாகப் படித்துத் தேறினேன். கல்லூரியிலும் பிற ஊர்களிலும் நடந்த பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசு பெற்றேன். தங்கப்பதக்கம், வெள்ளிச் சுழற்கோப்பைகளைப் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமைசேர்த்தேன். பேச்சு, கவிதை, நடிப்பு என்று பல்வேறு போட்டிகள் என்னை வளர்த்தன. கல்லூரி நூலகம் என் அறிவுப்பசிக்கு அமுதசுரபியாக இருந்தது. நூலகர் திரு. சம்பத்குமார் எனக்கு வேண்டும் நூல்களை மகிழ்ச்சியுடன் கொடுத்துப் படிக்கச்சொல்வார். அரசு நூலகத்தையும் நன்கு பயன்படுத்திக்கொண்டேன். காசித்திருமடத்திலிருந்து வெளிவந்த குமரகுருபரர் என்ற இதழில் ஆன்மிகம், சொல்லாய்வுக் கட்டுரைகளை, கவிதைகளை வரைந்து பழகினேன். முனைவர் கு. சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ம.வே.பசுபதி உள்ளிட்ட அறிஞர்களிடம் பாடம் கேட்கும் பேறு அமைந்தது. இளங்கலை, முதுகலை என ஐந்தாண்டுகள் தமிழ் பயின்ற அக்கல்லூரிதான் எனக்குத் தமிழறிவையும் வெளியுலகப் பார்வையையும் தந்தது.
கல்லூரி மாணவனாக இருந்தபொழுதே மாணவராற்றுப்படை என்று மரபுப் பா நூலை எழுதி 1990 இல் வெளியிட்டேன். இந்த நூல் முயற்சியைப் பாராட்டிக் காசி மடத்தின் அதிபர் கயிலை மாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் ஐந்நூறு ரூபாயை அந்நாளில் பரிசளித்தார்கள். அந்த விழாவுக்கு இந்நாள் தருமபுரம் ஆதீனத்தின் அதிபர் தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமை தாங்கி, என் முயற்சியைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். திருப்பனந்தாள் கல்லூரியில் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் அறிமுகம் ஆனதைப்போன்று, எழுத்து, பேச்சுத்துறைகளும் வசப்பட்டன.
முதுகலைப் படிப்புக்குப் பிறகு புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் க. ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாகப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. உலகப் போக்குகளை முனைவர் க.ப. அறவாணனார் எங்களுக்குப் பயிற்றுவித்தார். முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்களின் மேற்பார்வையில் மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து பட்டம்பெற்றேன்.
முனைவர் பட்ட ஆய்வுக்குத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993இல் இணைந்து, பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1997இல் முனைவர் பட்டம் பெற்றேன். பாரதிதாசன் பல்கலைக்கழகம் என் ஆய்வு ஆர்வத்தை வளர்த்தெடுத்த கல்வி நிறுவனம் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். எனக்குப் பல்கலைக்கழகம் உதவித்தொகை நல்கி, உதவியது. பேராசிரியர் மா. இராமலிங்கம் (எழில்முதல்வன்) அவர்களின் மேற்பார்வையில் என் ஆய்வு நடந்தது. தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர்களான பெருஞ்சித்திரனார். தங்கப்பா, கோவேந்தன், உவமைக்கவிஞர் சுரதா, சுப்பு ஆறுமுகம், நாரா. நாச்சியப்பன், கடவூர் மணிமாறன், அறிவுமதி, பழநிபாரதி உள்ளிட்ட மிகப்பெரும் ஆளுமைகளுடன் பழகும் வாய்ப்பு அப்பொழுது அமைந்தது. மேலும், சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன், தமிழண்ணல், இசைமேதை வீ.ப.கா.சுந்தரம், கவியரசு முடியரசனார், அனிச்ச அடி ஆ. பழநி உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.
நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுப்பதிலும் பாடுவதிலும் இக்காலத்தில் தீவிரமாக இயங்கினேன். ஒவ்வொரு சனி, ஞாயிறு கிழமைகளிலும் ஊருக்குச் செல்லும்பொழுது களப்பணிகளில் ஈடுபட்டு, நடவுப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்களைப் பதிவு செய்து பாதுகாப்பதும், பாடிப் பயிற்சி பெறுவதும் என் பணியாக இருந்தது. என் விடுதி அறைகளில் பறையிசைக் கலைஞர்கள், பம்பை அடிப்பவர்கள், உடுக்கை அடிப்பவர்கள், நாடகக் கலைஞர்கள் என்று பல திறக் கலைஞர்கள் தங்கி, உரையாடி மகிழ்வார்கள். திருச்சிராப்பள்ளி வானொலியில் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக என் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த பேச்சுகள் அந்த நாளில் ஒலிபரப்பாகி எனக்கு நல்ல அறிமுகத்தைப் பெற்றுத் தந்தன. திருச்சி மாலைமுரசு இதழில் நாட்டுப்புறக் கலைஞர் குடந்தை குருசாமிதாஸ் குறித்த முழுப்பக்க கட்டுரை ஒன்று வெளியாகி ஆராய்ச்சி உலகில் அனைவரின் பாராட்டுக்கும் உரியதானது. பல்வேறு ஆராய்ச்சித்துறைகளில் உழைத்திருந்தாலும் இன்றும் நாட்டுப்புறப் பாடல் ஆராய்ச்சியாளன் என்ற அறிமுகமே எனக்கு அமைந்துள்ளது.
மிகச்சரியாக நீங்கள் உங்களை ஒரு ஆராய்ச்சியாளராக எப்போது அடையாளம் கண்டீர்கள்?
மு. இளங்கோவன்: திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றபொழுது ஆய்வு ஆர்வம் எனக்கு உருவாகியது. சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நூல்களைப் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்கள் வகுப்பில் பாடம் நடத்தும்பொழுது நூல் செய்திகளுடன் கூடுதலாகப் பதிப்புச் செய்திகளையும் விவரிப்பார்கள். எங்கள் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய தொல்காப்பியச் செல்வர் கு. சுந்தரமூர்த்தி ஐயாவின் வீட்டுக்குச் சில மாணவர்கள் சென்று, அவர்தம் பதிப்புப் பணிகளுக்குத் துணைநிற்பர். கு.சுந்தரமூர்த்தி ஐயா அவர்கள் தம் மேசை மீது பல்வேறு நூல்களை வைத்துக்கொண்டு, தாம் எழுத நினைக்கும் செய்திகளைக் கூறக் கூற மாணவர்கள் எழுத்தில் வடித்துத் தருவார்கள்; படியெடுப்பார்கள். அத்தகு மாணவர்களும் ஆழங்கால் பட்ட புலமையுடையவர்களாக இருப்பார்கள். அவர்களுடன் உரையாடினால் தொல்காப்பியம் சேனாவரையர் உரை, திருக்குறள் பரிமேலழகர் உரை முதலியவற்றை அவர்கள் மனப்பாடமாக ஒப்புவிப்பார்கள். அவர்களைப் பார்க்கும்பொழுது நாமும் இதுபோல் தமிழ் நூல்களை மனத்துள் தேக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படும்.
எனவே கல்லூரி முடிந்த பிறகு திருப்பனந்தாள் ஊரின் வடபகுதியில் உள்ள மன்னியாற்றங்கரையில் அமைந்துள்ள தேக்குமரங்கள் அடர்ந்த வாய்க்கால் வழியாகவே மட்டியூர் வரை நடந்துசென்று மனப்பாடப் பகுதிகளை மனத்துள் நிறுத்துவேன். கதிரவன் மறையும்வரை படித்துவிட்டு, மீண்டும் தங்கியிருந்த அறைக்குத் திரும்புவேன். இப்படி ஒவ்வொரு நாளும் சிலப்பதிகாரத்தின் பெரும்பகுதி மனத்துள் படிந்தன.
என் பேராசிரியர் சி. மனோகரன் அவர்களைச் சந்திக்க ஒருநாள் மாலை நேரத்தில் அவர் இல்லம் சென்றிருந்தேன். அப்பொழுது அவரிடம் கவிதை ஒன்று எழுதி, வாங்கிச் செல்ல அன்பர் ஒருவர் காத்திருந்தார். என் பேராசிரியர் வேறு ஒரு பணியில் இருந்ததால் கவிதை ஆர்வம் கொண்ட என்னை எழுதி வழங்குமாறு பணித்தார். காவல்துறை அதிகாரி ஒருவரை வரவேற்கும் வகையில் உடன் ஒரு வரவேற்புக் கவிதை ஒன்றை எழுதி அந்த அன்பரிடம் அளித்தேன். உடன் கவிதை கிடைத்ததில் அந்த அன்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த அன்பரும் நானும் பேராசிரியரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு, கடைத்தெருவை நோக்கித் திரும்பினோம்.
அந்த அன்பரின் பெயர் திரு. கோமான். என் கவிதையார்வம் கண்ட அவர், தம் தாத்தாவும் இதுபோல் கவிதை ஆர்வம் கொண்டவர் எனவும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் எனவும் தமிழ் படிப்பதற்காகத் தமிழ்நாட்டுக்கு வந்து, மறைமலையடிகளாரிடம் விரும்பிச் சேர்ந்தவர் என்றும் காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்றும் இந்திய விடுதலைக்குப் பலமுறை சிறை சென்றவர் என்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, காமராசர், இராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் பழகியவர் என்றும் கூறியதுடன் தம் வாழ்க்கை வரலாற்றைத் தன் வரலாறாக எழுதி வைத்துள்ளார் என்றும் திரு. கோமான் கூறினார். பின்னர்தான் தெரிந்தது கோமான் அவர்களின் தொழிற்கூடம் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் உள்ளது என்று. கோமான் அவர்கள் லேத் பட்டறை ஒன்று வைத்துத் தொழில் செய்வதற்கு நாள்தோறும் கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாளுக்கு வந்து செல்கின்றார் என்பதை அறிந்துகொண்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் கும்பகோணம் வந்தால் தம் தாத்தாவின் தன் வரலாற்றுக் கைப்படியைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
கோமானின் தாத்தாவின் பெயரும் அவரின் வரலாறும் செய்துள்ள பணிகளும் இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வராமல் செய்துவிட்டன. அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமைக்குக் காத்திருந்தேன்.
கும்பகோணத்தில் கோமான் அவர்களின் இல்லம் மிகப்பெரும் தொழிற்கூடமாகக் காட்சியளித்தது. கோமான் அவர்களின் தாத்தா பெயர் துரையனார் அடிகள் என்பதாகும். துரைசாமி பிள்ளை என்பது இயற்பெயர். ‘திருவியன் மதியம்’ என்ற நீதிநூலை எழுதியதுடன் ‘திராவிடத் தமிழர்களின் பண்டைக்கால வரலாறு’ என்னும் நூலையும் எழுதியுள்ளார். துரையனார் அடிகளுக்குத் திருச்சிற்றம்பலம், அருள்நந்தி சிவம், திருநாவலர்காந்தி என்று மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தனர். மூவருடனும் நன்கு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. துரையனார் அடிகளின் தன்வரலாற்று நூலின் கைப்படியைப் பார்வைக்குக் கொடுத்த குடும்பத்தினர், அவர்கள் நான் மிகவும் சின்னஞ்சிறு தோற்றத்தினனாக இருந்தமையாலும் நூல் படி சிதையும் என்பதாலும் படியெடுக்க வழங்கவில்லை.
தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் போராட்ட வரலாற்றின் பல செய்திகளும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் பல அரிய செய்திகளும் அந்தக் கையெழுத்துப் படியில் இருப்பதைப் படித்த நான் இந்த நூலை எப்படியும் பதிப்பிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தேன். எனினும் மாதம் ஒரு முறையாவது அந்தக் கையெழுத்துப் படியைப் பெறுவதற்குக் கும்பகோணம் செல்வதும், வெறுங்கையுடன் திரும்புவதுமாக இருந்தேன். சற்றொப்ப எட்டாண்டுகள் உழைத்து அந்த நூலினை 1995இல் பதிப்பித்து வெளியிட்டேன். தினமணி நாளிதழ் அந்த நூலின் செய்திகளை முழுப்பக்கம் வெளியிட்டு, என் முயற்சியை அந்த நாளில் ஊக்கப்படுத்தியது. என் பதிப்புப் பணியில் அந்த நூலுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. கவிஞர் அறிவுமதி அவர்களின் அறிமுகவுரை, பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களின் அணிந்துரை, ம. இலெ. தங்கப்பாவின் ஆங்கில முன்னுரை, இரா. இளங்குமரனாரின் வாழ்த்துரையுடன் அந்த நூல் வெளியுலகுக்குக் கிடைத்தது.
உங்களின் முனைவர்பட்டம் ‘பாரதிதாசன் பரம்பரை’ எனும் தலைப்பிலானது. இந்தத் தலைப்பை வந்தடையக் காரணம் என்ன?
மு. இளங்கோவன்: என் நெறியாளர் முனைவர் மா. இராமலிங்கம் (எழில்முதல்வன்) அவர்கள் பழந்தமிழ் நூல்களில் பெரும்புலமையுடையவர்கள் எனினும் தற்கால இலக்கியம் அவர்களின் ஆய்வுத்துறையாக அமைந்தது. அவரிடம் ஆய்வுசெய்யும் மாணவர்கள் புதினங்கள் குறித்த தலைப்பினைத் தேர்ந்து ஆய்வு செய்வது வழக்கமாக அந்நாளில் இருந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஓர் அறக்கட்டளை உருவாக்கி, கவிதைகள் குறித்து ஆய்வு செய்வதற்குப் பல்கலைக்கழகத்தார் நிதியுதவி வழங்கிவந்தார்கள். அவ்வாறு ஆய்வு செய்யும் ஓரிடத்துக்கு அந்த ஆண்டில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டோம். உரிய ஆய்வாளரைத் தேர்ந்தெடுக்க நேர்காணல் நடந்தது. அப்பொழுது ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய கா. செல்லப்பன் ஐயா உள்ளிட்ட அறிஞர் குழுவினர் ஆய்வு செய்வதற்குத் தகுதியுடையவனாக என்னைத் தேர்வு செய்து, ஆணை வழங்கினர். மூன்றாண்டுகள் பல்கலைக்கழகத்து விடுதியில் தங்கிப் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையால் ஆய்வுசெய்தேன்.
என் நெறியாளர் அவர்கள் கவிதை துறையில் எனக்கு இருந்த ஈடுபாடு கண்டு, ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை – விளக்கம், வரலாறு, மதிப்பீடு’ என்ற தலைப்பமைத்து ஆய்வு செய்யப் பணித்தார்கள். அரிச்சுவடி பயில்வது போல் முதலில் என் பேராசிரியர் அவர்கள் எழுதிய இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் உள்ளிட்ட நூல்களைப் படித்தேன். மேலும் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் என் நெறியாளர் பலவாண்டுகளுக்கு முன் எழுதிய சிறிய கட்டுரை ஒன்றையும் படித்தேன். எனக்கு உரிய ஆய்வுப் புலம் மெல்லத் தெரியத் தொடங்கியது.
ஆய்வு பணியை எவ்வாறு நகர்த்தினீர்கள்?
மு. இளங்கோவன்: இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை துறை மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற ஆய்வுத்துறையாக இருப்பதால் பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களை மட்டும் ஆய்வு செய்யலாம் என்று வரையறை செய்துகொண்டு ஆய்வைத் தொடங்கினேன்.
ஆய்வுக்காக முதலில் எனக்கு அறிமுகமான கவிஞர்களைக் கண்டு, ஆய்வுக்குரிய நூல்களையும் பிற தரவுகளையும் பெறலாம் என்று திட்டமிட்டு, குளித்தலையில் வாழ்ந்து வரும் முனைவர் கடவூர் மணிமாறன், கரூர் கன்னல், நண்ணியூர் நாவரசன் உள்ளிட்ட கவிஞர்களைக் கண்டு அவர்களின் கவிதை பணிகளை அறிந்தேன். அதன் பிறகு சென்னை சென்று சுரதா, கோவேந்தன், சாமி பழநியப்பன், சுப்பு ஆறுமுகம், நாரா.நாச்சியப்பன், கவிஞர் அறிவுமதி, கவிஞர் பழநி பாரதி உள்ளிட்ட கவிஞர்களைக் கண்டு உரையாடினேன்.
பொன்னி இதழ் குறித்த கவனம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
மு. இளங்கோவன்: உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் மலேசியா நாட்டிற்குச் சென்றிருந்தபொழுது, அங்கு வாழ்ந்த முருகு சுப்பிரமணியம் இல்லத்தில் பலநாள் தங்கி அருகில் உள்ள ஊர்களில் உரையாற்றியுள்ளார். முருகு சுப்பிரமணியம் அவர்கள் இளைஞராக இருந்தபொழுது, தமிழகத்தின் புதுக்கோட்டையிலிருந்து பொன்னி இதழை நடத்தியவர். அவருக்குப் பெருந்துணையாக இருந்து பொன்னி இதழ் வெளியீட்டிற்குத் துணைசெய்தவர் அரு. பெரியண்ணன் ஆவார். இருவரும் உறவினர்கள். முருகு சுப்பிரமணியன் அவர்களிடமிருந்த பொன்னி இதழ்களில் இடம்பெற்றிருந்த பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களின் 47 கவிதைகளை மட்டும் படியெடுத்து வந்து, சுரதா அவர்கள் தமிழகத்தில் சிறு நூலாக வெளியிட்டிருந்தார். அந்த நூலின் வழியாகவே பொன்னி இதழ் பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும் அறிந்துகொண்டேன். பொன்னி இதழின் அனைத்து இதழ்களையும் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தின் பெரும்பான்மையான நூலகங்களுக்குச் சென்று தேடினேன். குறைந்த இதழ்களே பார்வைக்குக் கிடைத்தன. அனைத்துத் தொகுதிகளும் கொண்ட தொகுப்பினை எங்கும் காண இயலவில்லை.
புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழகம் என்ற அமைப்பினை அண்ணல் சுப்பிரமணியனார் அவர்கள் நடத்தி, தமிழ் அறிஞர் பெருமக்களுக்குப் பேருதவிபுரிந்துவந்தார். அண்ணலாரின் பணிக்குப் பெருந்துணையாக இருந்தவர் திருக்குறள் ச. இராமதாசு ஆவார். காரைக்குடியில் வாழ்ந்த கவிஞர் முடியரசனார் அவர்களிடம் பொன்னி இதழ் குறித்து நான் உரையாடியபொழுது அண்ணன் பாரி அவர்களை அனுப்பி, புதுக்கோட்டை இராமதாசு அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்து இதழ் கிடைப்பதற்கு வழி செய்தார்.
பொன்னி இதழ்கள் கிடைத்தனவா?
மு. இளங்கோவன்: பொன்னி இதழ் முழுத்தொகுப்புகளாக எங்கும் கிடைக்கவில்லை. சில தொகுதிகள் மட்டும் நூலகங்களில் இருந்தன. பொன்னி இதழைப் புதுக்கோட்டையில் பல இடங்களில் தேடினோம். பெறமுடியவில்லை. பொன்னி இதழ் அச்சான அச்சகத்தில் திரு. முத்து என்பவர் பணிபுரிந்தார் எனவும் அவரைக் கேட்டால் பொன்னி இதழ் குறித்த விவரம் தெரியும் என்றும் இராமதாசு கூறினார். முத்து அவர்கள் அகவை முதிர்ச்சி காரணமாகப் புதுக்கோட்டையை விடுத்து, கும்பகோணத்தில் வாழும் தம் மகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாக அறிந்தேன். கும்பகோணம் சாக்கோட்டையில் இருந்த முத்து அவர்களைக் கண்டு பொன்னி இதழ் குறித்த விவரங்களைக் கேட்டேன். தம் புதுக்கோட்டை இல்லத்துச் சாவியைக் கொடுத்து, தம் சேமிப்பில் உள்ள பொன்னி இதழ்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவரிடமிருந்து பொன்னி இதழ்களை எடுத்து, என் ஆய்வை முழுமையாக்கினேன். பொன்னி இதழ் கிடைத்த விவரங்களை என் பொன்னி – பாரதிதாசன் பரம்பரை நூலின் முன்னுரையில் விரிவாகவே நீங்கள் வாசிக்கலாம்.
பொன்னி இதழ் குறித்துக் கூறுங்களேன்.
மு. இளங்கோவன்: பொன்னி 1947 பிப்ரவரி முதல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழாகும். 1954 வரை வெளிவந்துள்ளதை அறியமுடிகின்றது. பாவேந்தர் பாரதிதாசனின் பெருமையைப்- புகழை வெளியுலகுக்குப் பறைசாற்றுவதற்காக இந்த இதழ் தொடங்கப்பட்டது. திராவிட இயக்க உணர்வுடையவர்கள் இந்த இதழில் படைப்புகளை நல்கியுள்ளனர். இதன் ஆசிரியர் முருகு. சுப்பிரமணியன் ஆவார். பதிப்பாளர் அரு. பெரியண்ணன் ஆவார். பின்னாளில் பொன்னி இதழ் சென்னையிலிருந்து வெளிவந்தது. பொன்னி இதழ்ப்பணியிலிருந்து விலகி, முருகு சுப்பிரமணியன் மலேசியா, சிங்கப்பூர் சென்று அங்குப் புகழ்பெற்ற இதழாசிரியராக விளங்கினார்.
உங்களுக்குக் கிடைத்த பொன்னி இதழைப் பல்வேறு பகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டீர்கள் அல்லவா?
மு. இளங்கோவன்: பொன்னி இதழ் அனைவரின் பார்வைக்கும் பரவலாகக் கிடைக்கவில்லை என்பதால் பொன்னி இதழில் வெளியான ஆசிரியவுரைகளை மட்டும் தொகுத்துத் 2004ல் தனி நூலாக்கினேன். அதுபோல் பொன்னி பாரதிதாசன் பரம்பரையும் தனி நூலானது. பொன்னி சிறுகதைகள் அச்சுக்கு அணியமானாலும் வெளிவரவில்லை. பொன்னி விரிவாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய தரமான இலக்கிய இதழாகும். கலைஞர் மு.கருணாநிதி, அறிஞர் அண்ணா, அகிலன், கண்ணதாசன், தில்லை வில்லாளன் உள்ளிட்ட திராவிட இயக்கப் படைப்பாளிகளின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்த இதழ் இது.
தொடர்ந்து அலைந்து திரிந்து தமிழறிஞர்களைச் சந்தித்து, ஆவணப்படுத்தி வருகிறீர்கள். இந்த எண்ணம் எப்படி உதயமானது?
மு. இளங்கோவன்: கல்லூரியில் பயின்றபொழுது, தமிழக நாட்டுப்புற வாய்மொழி மரபுகளைப் பற்றி அறியும் வாய்ப்பு அமைந்தது. வாய்மொழி மரபுகளாக உள்ள பாடல்கள், பழமொழிகள், வழக்குச் சொற்கள் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதை முதலில் அறிந்தேன். அந்த வகையில் என் பகுதியில் கொலைச்சிந்து பாடும் கலைஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் அறிந்து பாதுகாக்க நினைத்தேன். அந்த வகையில் குளக்குடி சோமு, எறும்பூர் சந்நியாசிதாஸ், கும்பகோணம் குருசாமிதாஸ் உள்ளிட்ட டேப் கலைஞர்களின் வாழ்வியலை அறிந்து இதழ்களில் எழுதியுள்ளேன். இவ்வாறு எழுதுவதற்குக் களப்பணி செய்தல் வேண்டும். பல ஊர்களில் வாழ்ந்த கலைஞர்களைப் பல காலம் தொடர்புக் கொண்டு அவர்களின் பணிகளை அறிய வேண்டியிருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்களை ஆவணப்படுத்திய நான் செவ்வியல் இலக்கியத்துக்கு உழைத்த அறிஞர்களையும் ஆவணப்படுத்த முனைந்தேன்.
தமிழுக்கு உண்மையாக உழைத்தவர்களைப் பற்றிய வரலாறுகளை நூல்களில்-கட்டுரைகளில் அறியமுடியவில்லை. விளம்பர வெளிச்சம்பட்டவர்களை மட்டும் எழுத்தாளர்களாகவும் அறிஞர்களாகவும் தமிழகத்தில் கொண்டாடும் போக்கு உள்ளதை அறியமுடிந்தது. குறிப்பாக இணையம் 2006 வாக்கில் அறிமுகமானபொழுது கூகுள் வழியாகத் தேடியபொழுது தமிழறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் இல்லாமல் வெறுமைநிலை இருப்பதை உணர்ந்தேன். எனவே, தமிழுக்கு உண்மையாகப் பணியாற்றியவர்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் படித்துப் படித்து, என் வலைப்பதிவில் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் எழுதத் தொடங்கினேன்.
அந்த வகையில் அயல்நாட்டு அறிஞர்கள் தமிழுக்குப் பல்வேறு தொண்டுகள் செய்திருந்தாலும் தமிழகத்துக் கல்விப்புலத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் பெயர்கள் கூடத் தெரியாத நிலை இருப்பதைக் கவனித்து, அயலகத் தமிழறிஞர்கள் என்ற தொடரைத் தமிழோசை நாளிதழில் இருபத்தைந்து வாரம் எழுதினேன். அப்பொழுது மின்னஞ்சல் முதலியவை அறிமுகச் சூழலில்தான் இருந்தது. தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டாலும் யாரும் சொல்லமாட்டார்கள். தொடர்ந்து முயற்சி செய்து முப்பத்தொரு அயலகத் தமிழறிஞர்களை அறிமுகம் செய்தேன்.
அவர்கள் குறித்து நினைவில் இருந்து மீட்க முடியுமா?
மு. இளங்கோவன்: ஏ. கே. இராமானுஜன், ஜான் இரால்ஸ்டன் மார், பிரான்சுவா குரோ, தாமஸ் பர்ரோ, எமனோ, கமில் சுவலபில், தனிநாயகம் அடிகளார், போப், கால்டுவெல் உள்ளிட்ட அறிஞர்களைப் பற்றி எழுதி மகிழ்ந்த நான் மலேசியாவைச் சார்ந்த குறிஞ்சிக்குமரனார், திருமாலனார், முரசு நெடுமாறனார் பற்றியும் சிங்கப்பூரைச் சார்ந்த சுப. திண்ணப்பனார், ஆ.ரா. சிவகுமாரன், இலங்கையைச் சேர்ந்த அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், மௌனகுரு, ஆ. வேலுப்பிள்ளை உள்ளிட்டவர்களின் தமிழ்ப்பணிகளை எழுதிப் பொதுமக்களுக்கு இவர்களை அறிமுகம் செய்தேன். ஒவ்வொரு வாரமும் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் தமிழகத்தின் கல்வி நிறுவனங்கள் பலவற்றில் தொகுத்துப் பாதுகாக்கப்பட்டன. இவை யாவும் இணையத்தில் என் வலைப்பதிவிலும் உள்ளன.
தமிழுக்குத் தொண்டாற்றிய உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பற்றிய வரலாறு அறியாத பல பேராசிரியர்கள் அவரைப் பற்றிய பொய்யான செய்திகளை மேடைகளில் புனைந்து பேசினர். நான்தான் பெருமழைப்புலவரின் ஊரான மேலைப்பெருமழைக்குக் களப்பணிக்குச் சென்று புலவரின் வரலாற்றைத் தமிழுலகுக்கு முழுமையாகத் தொகுத்து அளித்தேன். புலவரின் குடும்பத்தில் நிலவிய வறுமையை விரட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு பத்து இலட்சம் ரூபாய் தொகை கிடைக்க என் சிறு முயற்சி உதவியது. அதுபோல் பெருமழைப்புலவரின் ஊரில் நூற்றாண்டு விழா நடத்தினோம். இதனைக் கண்ணுற்ற அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை பெருமழைப்புலவருக்கு நூற்றாண்டு விழாவினை அமெரிக்காவில் நடத்தியது.
கருப்பக்கிளார் சு. இராமசாமிப் புலவர் அவர்கள் தமிழ்ப் புலவர்கள் வரலாற்றினை முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதியாக எழுதியவர். ஆனால் அவரின் வரலாறு முழுமையாக இல்லாமல் இருப்பதை அறிந்து திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கருப்பக்கிளார் சென்று அவர்தம் குடும்பத்தாரைக் கண்டு, புலவரின் வரலாறு முழுமையாகக் கிடைக்குமாறு இணையத்தில் பதிந்துவைத்துள்ளேன்.
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ்ப்பணிகள், விபுலாநந்த அடிகளாரின் தமிழ்ப்பணிகள் யாவும் முழுமைப்படுத்தப்பட்டு, என் வலைப்பதிவில் பாதுகாக்கப்படுகின்றன.
என் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள குருகாவலப்பர்கோவில் என்ற ஊரில் கு.மா. கிருஷ்ணன் என்று திரைப்படப் பாடலாசிரியர் வாழ்ந்தார். நாகமலை அழகி போன்ற சில படங்களில் பணியாற்றினார். தமிழகத்தில் புகழ்பெற்ற பாடலாசிரியர் வரிசையில் அவரின் பணிகளும் போற்றப்பட்டிருக்க வேண்டும். பொருள்நிலையில் நலிந்து, வறுமை நிலையில் வாழ்ந்த அக்கவிஞரைப் பற்றி எம் ஊரினர்க்கே தெரியாத நிலை இருந்தது. கவிஞரின் வீட்டுக்குச் சென்று அவரின் வரலாற்றையும் என் வலைப்பக்கத்தில் பதிந்து வைத்துள்ளேன். (http://muelangovan.blogspot.com/2008/12/blog-post_23.html).
அறிஞர்களின் வரலாறு, கோவில் சிலைகள், பழந்தமிழ் நூலின் முதல்பதிப்புகள், அறிஞர்களின் புகைப்படங்கள் என்று என் ஆவணப்படுத்தும் பணி பல நிலையில் விரிவானது. மலேசியாவின் கெடா மாநிலத்திற்கு வந்து, பூஜாங் பள்ளத்தாக்கைப் பார்வையிட்டு வலைப்பதிவில் எழுதிய பிறகே சோழர்களின் தடம்தேடித் தமிழகத்திலிருந்து பலர் மலேசியா வந்து கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்கினைப் பார்வையிட்டனர்.
பெரும்பாலும் மறக்கப்பட்ட தமிழறிஞர்களை எப்படித் தேடிக் கண்டடைகிறீர்கள்? சொந்த செலவில் அப்பணியைச் செய்யும்போது சவாலாக இல்லையா?
மு. இளங்கோவன்: ஆராய்ச்சிப் பணிக்காகப் பல்வேறு நூல்களைப் படிப்பது வழக்கம். அவ்வாறு படிக்கும்பொழுது மேலதிக விவரம் வேண்டி வெவ்வேறு நூல்களைத் தேடுவதும் படிப்பதும் உண்டு. மூத்த அறிஞர்களுடன் உரையாடி விவரம் பெறுவதும் உண்டு. போதிய விவரங்கள் கிடைக்காதபொழுது நானே தேடிப் பல்வேறு விவரங்களைக் கண்டடைவது உண்டு.
பெருந்தொற்றுக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள இணையதளங்களைப் பார்வையிட்டவண்ணம் இருந்தேன். அங்குள்ள அரிய ஓலைச்சுவடிகள் குறித்த விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தொல்காப்பிய ஓலைச்சுவடி ஒன்று கண்ணில் தென்பட்டது. அந்தச் சுவடி இதுவரை தமிழ் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு உட்படாத ஓலைச்சுவடியாகும். அச்சுவடியைப் படியெடுத்து, திருநின்றவூர் பக்தவத்சல ஐயர் என்பவர் ஹென்றி ஹார்க்கினஸ் என்ற ஆங்கிலேயருக்கு அன்பளிப்பாக வழங்கிய குறிப்புச் சுவடியில் இருந்தது. இதுவரை திருநின்றவூர் பக்தவத்சல ஐயர் பற்றியோ, ஹென்றி ஹார்க்கினஸ் பற்றியோ தமிழுலகம் அறியவில்லை.
ஹென்றி ஹார்க்கினஸ் பற்றிப் படிக்க நேர்ந்தபொழுது இவர் யார்? என்று மேலதிக விவரம் தேடியபொழுது யாருக்கும் ஹார்கினஸ் பற்றித் தெரியவில்லை. இவர் ஆங்கிலேய அதிகாரி என்பதும் சென்னையில் முதன்மையான பணியில் இருந்தவர் என்பதும்,தம் கடமை முடித்து, இங்கிலாந்து திரும்பும்பொழுது இவருக்குத் தொல்காப்பியச் சுவடி வழங்கப்பட்டது என்பதும் அச்சுவடியை மறவாமால் இராயல் ஏசியாட்டிக் சொசைட்டிக்கு வழங்கினார் என்பதும் பல நூல்களைப் படித்து அறிந்தேன். இதனைக் கட்டுரையாக்கி இந்து தமிழ் நாளிதழிலும் வெளியிட்டுள்ளேன். தொல்காப்பிய ஆய்வுக்கு இங்கிலாந்தில் உள்ள இச்சுவடி பெரிதும் உதவும். இதுபோல் பல மாதங்கள் உழைத்துப் பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளேன்.
பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் தன் பணிக்காலம் முடிந்து தன் பிறந்த ஊரில் ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டு இருந்தார். முதுமை காரணமாக வெளியூர்த் தொடர்பு இல்லை. நம் மக்கள் அன்னாரின் நினைவின்றி இருந்தனர். அவரின் ஊருக்குச் சென்று தொண்ணூற்று எட்டு வயதில் வாழ்ந்துவரும் அவரைக் கண்டு உரையாடி, அவர்தம் தமிழ்ப்பணிகளை உலகுக்கு நினைவூட்டினேன் (http://muelangovan.blogspot.com/2008/08/blog-post_11.html). அதன் பிறகு அவர் பணிகள் கவனத்தில் கொள்ளப்பட்டு, இந்திய அரசின் உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அயலூர் சென்று தகவல்கள் பெறுவதற்குப் பெரும்பாலும் என் செலவில்தான் செல்லவேண்டியிருக்கும் உள்ளூர் அன்பர்கள் உணவு, உள்ளூர்ப் போக்குவரத்துப் போன்றவற்றை ஏற்பவர்களும் உண்டு. மாதத்தின் முதல் இரண்டு வாரம் என் ஆராய்ச்சிப்பணி முனைப்பாக இருக்கும். மீண்டும் அடுத்த மாதம் ஊதியம் எப்பொழுது கிடைக்கும் என்று ஆராய்ச்சியைத் தொடரக் காத்துக்கிடப்பேன்.
ஊதியத்தை நம்பி செயல்படும்போது உலகியல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படவில்லையா? எப்படிச் சமாளித்தீர்கள்?
மு. இளங்கோவன்: என் வாழ்க்கையில் சில நெறிகளை அமைத்துக்கொண்டேன். எளிமை, அன்பு, நேர்மை என்பன அவை. வ.சுப. மாணிக்கனார், துரையனார் அடிகள் ஆகியோரின் நூல்களைப் படித்து இப்பண்புகளை வளர்த்துக்கொண்டேன். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்களும் என் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரிடமிருந்தும் அன்பு, எளிமைப் பண்புகள் ஒட்டிக்கொண்டன. தேவைகளை மிகவும் குறைத்துக்கொள்வேன்.கல்லூரிப் பணியில் இணைந்தபொழுது மிதிவண்டியில்தான் சென்று வருவேன். இப்பொழுது பணியாற்றும் கல்லூரி சற்றுத் தொலைவு என்பதால் ஈருருளி ஒன்றைப் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றேன். பிள்ளைகளும் அரசு கல்லூரிகளில்தான் பயில்கின்றனர். எதிர்பார்ப்பு, தேவை என்று எதுவும் இல்லை. “மனத்துக்கண் மாசிலாத” வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆவணப்படச் செலவிலிருந்து மீண்டுவிடலாம் என்று வங்கிக்குச் சென்ற நகைகள், வாழ்நாள் காப்பீட்டுப் பத்திரங்கள் என்றாவது திரும்பிவரும் என்று நம்பிக்கை உள்ளது.
பண்ணிசை ஆய்வாளர் குடந்தை ப. சுந்தரேசனார், இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளார் ஆகியோரின் ஆவணப்படத்தை இயக்கியது பெரும்பணியாகும். அவ்வனுபவத்தைப் பற்றி விரிவாகக் கூறுங்கள்.
மு. இளங்கோவன்: திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் படித்தபொழுது, சிலப்பதிகாரத்தைப் பாடமாக நடத்திய பேராசிரியர்கள் இந்தப் பாடங்களையெல்லாம் குடந்தை ப. சுந்தரேசனார் நடத்திக்கேட்க வேண்டும் என்று பெருமூச்செறிந்து கூறுவார்கள். சிலப்பதிகாரம் பற்றிப் பேசும் பிற அறிஞர்களும் குடந்தை ப. சுந்தரேசனாரின் இசைதிறனை நினைவுப்படுத்துவார்கள். குடந்தையில் வாழ்ந்த குடந்தைக் கதிர். தமிழ்வாணன் ஐயா அவர்களின் இல்லத்தில்ப. சுந்தரேசனார் படம் மாட்டப்பெற்றிருந்ததைக் கண்ணுற்றேன். அப்பொழுது ப.சுந்தரேசனார் பற்றி வினவியபொழுது, அவரின் புலமை நலம், குடும்பநிலை பற்றி எடுத்துரைத்து, 1981ஆம் ஆண்டு ப.சு. மறைந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர்தம் நினைவுநாளை நினைவுகூர்ந்து வருவதைக் கதிர். தமிழ்வாணனார் எடுத்துரைத்தார்கள். அந்த நேரத்திலிருந்து குடந்தை ப. சுந்தரேசனாரின் குரல், பாடல், பேச்சினைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மேலிட்டது.
இலால்குடியில் வாழ்ந்த திருத்தவத்துறை சிவா (சிவப்பிரகாசம்) அவர்களிடம் ப. சுந்தரேசனாரின் பேச்சு, பாடல் ஒலிப்பேழைகளில் பாதுகாக்கப்படுகின்றன என்று அறிந்து தேடிச்சென்று வினவினேன். நான் சென்ற நாளில் சிவா வெளியூரில் இருந்ததால் என் முயற்சி பயனற்றுப் போனது. என் நண்பர் ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் ப.சு.வின் திருமுருகாற்றுப்படை, சிவபுராணம் அடங்கிய ஒலிப்பேழையொன்றைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதனைக் கேட்டப் பிறகு ப.சு.வின் குரலில் மயக்குற்றேன். தேடல்பணி தொடர்ந்தது. குடந்தை ப. சுந்தரேசனாரின் பேச்சுகளையும் பாடல்களையும் இலால்குடி, மதுரை, நெய்வேலி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், சென்னை, திருச்சிராப்பள்ளி, பூம்புகார் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வெவ்வேறு வடிவங்களில் திரட்டினேன். சற்றொப்ப முப்பது மணி நேரத்திற்கும் மேல் அவர்தம் பாடல்கள் எனக்குக் கிடைத்தன. அவ்வாறு கிடைத்தவற்றுள் முதன்மையான பாடல்களை மட்டும் ஒலித்தூய்மை செய்து ஒலிவட்டாக வெளியிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு முறை பொதிகைத் தொலைக்காட்சிக்காகப் பண்ணுருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகைத் திருக்கோவிலில்படப்பிடிப்பு முடித்துக்கொண்டு திரும்பும்பொழுது அக்குழுவில் இருந்த தொழில்நுட்பக் குழுவினரிடம் ப.சு.வின் பாடல்களை ஒலிவட்டாக வெளியிட வேண்டும் என்ற என் விருப்பத்தைச் சொன்னேன். அவர்கள் ஒலிவட்டாக வெளியிடுவதைக் காட்டிலும் ஒளிப்படமாக்கிக் காட்சிகளுடன் வெளியிடலாம் என்று கூறினர். அதன் பிறகு உரிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நாட்டிய அறிஞர்கள், இசையறிஞர்களைச் சந்தித்து என் விருப்பத்தைத் தெரிவித்தேன். படப்பிடிப்புக்கு உரிய முயற்சிகளில் ஈடுபட்டோம். சீர்காழி, கும்பகோணம், மதுரை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவையாறு, காவிரிக்கரை, திருவரங்கம், திருக்கண்ணபுரம், புதுச்சேரி, பூம்புகார் பெருமுக்கல், இலால்குடி, திருமழபாடி, கொல்லிமலை அடிவாரம், கேரளாவின் திருச்சூரை அடுத்திருக்கும் குன்னங்குளம், அதிரம்பள்ளி அருவி உள்ளிட்ட ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பணி நாள்களில் கல்லூரிப் பணியும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் படப்பிடிப்பும் பெரும்பாலும் நடக்கும். ஐம்பது மணி நேரத்திற்கும் மேலாகப் படம்பிடிக்கப்பெற்று 50 நிமிடம் மட்டும் படத்தொகுப்பிற்குப் பிறகு ப. சுந்தரேசனார் ஆவணப்படமாக உருவானது.
வில்லியனூர் வி.முனுசாமி, ஒளிப்பதிவாளர் சிவக்குமார், இசையமைப்பாளர் இராஜ்குமார் இராசமாணிக்கம், பாடகர் கலைமாமணி கா. இராசமாணிக்கம், கலைமாமணி கோபக்குமார், நாட்டியக் கலைஞர் கிருத்திகா இரவிச்சந்திரன் ஆகியோர் செய்த உதவியை என்றும் நன்றியுடன் போற்றுவேன். இந்தப் படத்தை உருவாக்குவதற்குத் தயாரிப்பாளராக உதவியவர் மலேசியாவில் வாழ்ந்துவரும் டத்தோ ஶ்ரீ பிரகதீஸ்குமார் ஆவார். இந்தப் படம் முதன்முதல் மலேசியாவில் டத்தோ ஸ்ரீ சாமிவேலு ஐயா தலைமையில் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திருக்குறள் தூதர் தருண்விஜய் எம். பி. வருகைபுரிந்தார். அதன் பிறகு சிங்கப்பூர், இந்தியா எனப் பல நாடுகளில் திரையிட்டோம்.
கனடா சென்றிருந்தபொழுது அங்கு வாழ்ந்துவரும் அண்ணன் சிவம், வேலுப்பிள்ளை அவர்களுடனும் பிற நண்பர்களுடனும் உரையாடியபொழுது, குடந்தை ப.சுந்தரேசனார் விபுலாநந்த அடிகளார்மேல் மிகுந்த அன்புடையவர் என்று குறிப்பிட்டேன். அவ்வாறு எனில் எங்கள் அடிகளார்க்கும்(விபுலாநந்தர்) ஆவணப்படம் ஒன்று எடுக்கலாமே என்று விருப்பம் தெரிவித்தார்கள். கனடாவில் தங்கியிருந்தபொழுதே விபுலாநந்த அடிகளார் படப்பிடிப்புக்கு உரிய திரைக்கதை தயாரானது. திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் இணைத் தயாரிப்பாளராக இருந்து படத்தை உருவாக்க உதவினார்.
தமிழகம் திரும்பிய நான் இலங்கை சென்று விபுலாநந்த அடிகளார் படப்பிடிப்புக்கு உரிய முயற்சிகளைச் செய்தேன். சிவம் வேலுப்பிள்ளை அவர்களும் படப்பிடிப்புக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் ஒழுங்குகளையும் கனடாவில் இருந்தபடியே செய்தார்கள். காசுபதி நடராசா என்னும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியை எனக்கு உதவுவதற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்தோம். காசுபதி ஐயா செல்வாக்கு நிறைந்தவர். அவருடன் கொழும்பில் தொடங்கிய பயணம் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள றொசல்லா, மட்டக்களப்பு, கல்முனை, காரைதீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி என நீண்டது. மூன்று முறை இலங்கை சென்று தகவல்கள் திரட்டினோம். படப்பிடிப்பு நடத்தினோம்.
ஒருமுறை படப்பிடிப்புக்கு உரிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு டிகநாதன் என்னும் அன்பர் புதுச்சேரிக்கு வருமாறு செய்தோம். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து விபுலாநந்தர் தொடர்புடைய செய்திகளை- ஆவணங்களைத் திரட்டினோம். சென்னை இராமகிருஷ்ணா மடம், சென்னைப் பல்கலைக்கழகம், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம், கோவை இராமகிருஷ்ணாமடம், நாட்றாம்பள்ளி மடம், திருப்பராய்த்துறை மடம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், திருக்கொள்ளம்புதூர் திருக்கோவில், நச்சாந்துப்பட்டி, புதுக்கோட்டை, மதுரைத் தமிழ்ச்சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் படப்பிடிப்பு நடந்தது. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் ஒருமுறை தம் துணைவியார் சிவமணி அவர்களுடன் இலங்கை-மட்டக்களப்புப் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து ஊக்கப்படுத்தினார்கள். அவர் வழங்கிய கொடை படப்பிடிப்பின் ஒரு பகுதிக்கு உதவியது. மற்ற செலவுகள் யாவும் என் ஊதியத்தை விழுங்கின. ஒளிப்பதிவு, போக்குவரவு, விமானச்சீட்டு, தங்குமிடம், மகிழுந்து வாடகை, நாட்டியக் கலைஞர்களுக்கான மதிப்பூதியம், ஒலிப்பதிவு, இசையமைப்பாளர், படத்தொகுப்புச் செலவு என விபுலாநந்த அடிகளார் படத்தின் உருவாக்கச் செலவு மிகுதியாக அமைந்தது.
அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் 01.07.2017 இல் கயானா நாட்டின் பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிட்டார். ஆவணப்படம் முழுமைப்படுத்தப்பட்டு, மலேசியாவில்தான் முதன்முதல் திரையிடப்பட்டது. மலேசியா, திருமுருகன் திருவாக்குப் பீடத்தின் அதிபர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடந்த நிகழ்வில் தான்ஸ்ரீ குமரன், முனைவர் க. திலகவதி, திரு. க. அருள்ஜோதி, முனைவர் முரசு. நெடுமாறன், விரிவுரைஞர் மன்னர்மன்னன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உதவியதை நன்றியுடன் போற்றுகின்றேன். சிங்கப்பூரிலும் விபுலாநந்த அடிகளார் படம் திரையிடப்பட்டது. என் நண்பர் ப. புருசோத்தமன் அவர்களும் கவிமாலை மா. அன்பழகன் அவர்களும் சிங்கப்பூரில் சிறப்பான அறிமுக விழாவை நடத்தினர். அதன் பிறகு இலங்கை அரசின் சார்பில் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் அமைச்சர் பெருமக்களின் முன்பாக விழா நடத்தி, என்னைப் பாராட்டிச் சிறப்பித்தனர். டென்மார்க்கு, ஆத்திரேலியா, கனடா, இலண்டன், பிரான்சு, சப்பான், அமெரிக்கா என்று பல ஊர்களில் திரையிட்டோம். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தால் என் கலையார்வம் உலகம் முழுவதும் அறிமுகம் ஆனது.
விபுலாநந்த அடிகளார் படத்தில் விபுலாந்தரின் குடும்பத்தினர், அவரை நன்கு புரிந்த அறிஞர்கள், அவருடன் பழகியவர்கள் நேர்காணல் செய்யப்பட்டிருப்பர். திருகோணமலையில் அடிகளாருடன் பணியாற்றிய காந்தி மாஸ்டர் ஐயாவை நேர்காணல் செய்து படத்தில் இணைத்திருப்போம். இப்பொழுது அவர் உயிருடன் இல்லை. விபுலாநந்த அடிகளாரின் தங்கை மகள் கண்ணம்மா அக்கவின் நேர்காணலும் படத்தில் இருக்கும். அவரும் உயிருடன் இப்பொழுது இல்லை. ஆய்வறிஞர்கு. சிவமணி ஐயா மிகச் சிறப்பாக அடிகளார் குறித்த அண்ணாமலை நகர் வாழ்க்கையை நினைவுகூர்ந்திருப்பார்கள். அவர்களும் இப்பொழுது உயிருடன் இல்லை. பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் மௌனகுரு, பெ.சு. மணி ஐயா, துணைவேந்தர் முனைவர் ஜெயசிங்கம், இலங்கைக் கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் இராமகிருஷ்ண மடத்தின் துறவியர் ஆத்மகணானந்த மகராஜ் உள்ளிட்டவர்களின் நேர்காணல் இந்தப் படத்தைத் தரமுடையதாக்கியுள்ளன.
மேற்கண்ட படங்கள் மக்கள் நடுவே சென்று சேர மக்கள் தொலைக்காட்சியில் திரையிட்டோம். மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பேராளர்களுக்கு ஈராயிரம் படிகள் ப. சுந்தரேசனார் ஆவணப்படப் படிகளை அன்பளிப்பாக அளித்தோம். ஒருவர்கூடப் பார்த்ததாகப் பின்னாளில்சொல்லவில்லை. தமிழ்நாட்டின் கல்விப்புலத்தினர் இத்தகு அறிவார்ந்த முயற்சிகளைக் கண்டுகொள்ளவில்லை என்பதை இங்குக் குறிப்பிட்டுத்தான் ஆதல் வேண்டும்.
எளிமையாக தங்கள் ஆவணப்பட பணிகளை விளக்கினாலும் அதற்குப் பின்னால் உள்ள உழைப்பை ஆழமாக உணர முடிகிறது. பதிப்புப் பணிகளிலும் தாங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள். அது குறித்துக் கூறுங்கள்?
மு. இளங்கோவன்: மரபுக் கவிதையில் நாட்டம் கொண்டிருந்த நான் மாணவராற்றுப்படை, அச்சக ஆற்றுப்படை, பனசைக்குயில் கூவுகின்றது என்ற தலைப்பில் சிறு சிறு நூல்களை எழுதி மாணவப்பருவத்தில் தொடக்கத்தில் வெளியிட்டேன். வெளியுலகத் தொடர்புகளும் விரிவான வாசிப்பு அனுபவங்களும் கிடைத்த பிறகு கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பின்னர் அவற்றை நூலாக்கும் பழக்கம் ஏற்பட்டது. பதிப்பகங்களின் தொடர்பு இல்லாமையால் நானே என் பிறந்த ஊர் முகவரியிலிருந்து நூல்களை வயல்வெளிப் பதிப்பகம் என்ற பெயரில் வெளியிட்டேன். அரசு நூலகத்துறை சில நூல்களை வாங்கி ஆதரித்தது. பின்னர் நூல் விற்பனையில் கவனம் செலுத்த முடியாததால் குறைந்த எண்ணிக்கையில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டேன். இணையத்தில் எழுதத் தொடங்கிய பிறகு நூல் அச்சிடுவது குறைந்து எப்பொழுதாவது ஒன்றிரண்டு அச்சாவது உண்டு. நண்பர்களின் நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டேன். பேராசிரியர் தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை, நீதியரசர் இல. சொ. சத்தியமூர்த்தியின் புதிய நோக்கில் புரட்சிக்கவிஞர் முதலிய நூல்கள் இவ்வகையில் அடங்கும்.
இவை தவிர உலகத் தொல்காப்பிய மன்றப் பணிகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறீர்கள். அது குறித்து கூறுங்கள். எப்படி உங்களுக்குத் தொல்காப்பியத்தில் ஆர்வம் ஏற்பட்டது என்பதிலிருந்து தொடங்கலாமா?
மு. இளங்கோவன்: தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் அமைகின்றது. இந்த நூலைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டு உழைத்த முனைவர் கு. சுந்தரமூர்த்தி போன்ற அறிஞர்களிடம் தொல்காப்பியப் பாடம் கேட்டதால் தொல்காப்பியத்தின் மேல் தனி ஈடுபாடு ஏற்பட்டது. அவர் பல ஊர்களில் பேசிய தொல்காப்பியப் பேச்சுகளை ஒலிநாடாக்கள் வழியாகக் கேட்டும் என் தொல்காப்பிய ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டேன். தொல்காப்பியம் பாடம் நடத்தும் அறிஞர்கள் ஒவ்வொருவராக இயற்கை எய்தி வருவது எனக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. எனவே மூத்த அறிஞர்களைப் பேசச் செய்து, ஆவணப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டேன். தொல்காப்பியம் பாடம் நடத்துவதற்குப் பலர் முன் வராததால் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களிலிருந்து இதனை நீக்கும் முயற்சியும் நடந்து வருகின்றது. எனவே, தொல்காப்பியத்தை வகுப்பறைகளுக்கு வெளியே மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று நினைத்து, உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பை உருவாக்க நினைத்தேன். முதற்கட்டமாகத் தொல்காப்பியத்திற்கு என்று ஒரு இணையதளம் உருவாக்கினோம். (https://tholkappiyam.org/) இதன் தொடக்க விழா 18.08.2015 மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சித் தலைவர் து. மணிகண்டன் இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்து வாழ்த்திப் பேசினார். இந்தத் தளத்தில் தொல்காப்பியம் குறித்த அரிய செய்திகள் பாதுகாக்கப்படுகின்றன. இன்னும் மேம்படுத்த வேண்டிய தளமாக இது உள்ளது. அமெரிக்காவில் வாழும் நா.க. நிதி அவர்கள் இணையதள முயற்சிக்குப் பெருந்துணையாக இருந்துவருகின்றார். தொல்காப்பிய முத்துகள் என்ற தலைப்பில் தொல்காப்பியத்தின் அரிய செய்திகளை எளிமைப்படுத்தி எழுதி, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளேன்.
உலகத்தொல்காப்பியமன்றம்பிரான்சுநாட்டுத்தலைநகர்பாரிசில் 27.09.2015 தொடங்கப்பட்டது. உலகத்தொல்காப்பியமன்றத்தின்கனடாகிளை 2016 சூன்மாதம் 4, 5 ஆகியநாள்களில் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில்தொல்காப்பியம்குறித்தகருத்தரங்குநடைபெற்றது. கனடாநாட்டில்அமைந்துள்ளஅண்ணாமலைப்பல்கலைக்கழகவளாகத்தில் (Ellesmere & Midland) இந்தநிகழ்ச்சிநடைபெற்றது. அதன் பிறகு மலேசியா, அமெரிக்கா, இலண்டன், ஜப்பான், ஆத்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிளைகளைத் தொடங்கினோம். தமிழார்வலர்கள் தொல்காப்பியம் பரப்புவதற்குக் குறைந்த அளவிலேயே முன்வந்தனர். இருப்பவர்களை வைத்துக்கொண்டு இயன்ற பணிகளைச் செய்து வருகின்றோம். தொல்காப்பியம் குறித்த காணொளிகள் உருவாக்கப்பட்டு, யுடியூபில் பதிவேற்றியுள்ளோம் (https://www.youtube.com/@muelangovan5659/videos). சற்றொப்ப ஐந்து இலக்கம் பார்வைகள் தொல்காப்பியத்திற்குக் கிடைத்துள்ளமை எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.
நாட்டுப்புற ஆய்வுகளில் தங்களின் பங்களிப்பு என்ன?
மு. இளங்கோவன்: சிற்றூர்ப்புறத்தில் நான் பிறந்து வளர்ந்ததால் அம்மக்களின் வாழ்க்கை, பழக்க வழக்கம்,பண்பாடு, ஆடல், பாடல், பொழுதுபோக்குகள், விளையாட்டு, பழமொழிகள், தொழில்கள், நம்பிக்கைகள் யாவற்றையும் நன்கு அறிவேன். மூன்றாண்டுகள் வேளாண்மை செய்த காலத்தில் மக்களிடம் இருந்த நடவுப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் எனக்கு அறிமுகம் ஆயின. உழவர்களின் வழக்குச் சொற்களைத் தொகுக்கும் பணியையும் மாணவப்பருவத்திலேயே செய்தேன். படிக்கும் காலத்தில் ஆர்வ மேலீட்டால் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுப்பதில் ஆர்வமாக உழைத்தேன். அவ்வாறு தொகுக்கப்பட்ட பல பாடல்கள் ஒலிப்பேழையில் வைத்துள்ளேன். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியபொழுது இலங்கைத் தமிழறிஞர்கள் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாகப் பேராசிரியர்கள் பாலசுகுமார், அம்மன்கிளி முருகதாசு, சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், மௌனகுரு, ஈழத்துப்பூராடனார் உள்ளிட்டோரின் தொடர்பு ஈழத்து நாட்டுப்புறப் பாடல்களை அறிந்துகொள்ள வாய்ப்பு நல்கியது. அதுபோல் சென்னையில் தங்கி மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியப் பணிகளில் ஈடுபட்ட முனைவர் முரசு நெடுமாறன் வழியாக மலேசியத் தோட்டப்புறப் பாடல்கள் குறித்த அறிமுகம் ஏற்பட்டது. தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களைப் போல் கேரளாவில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களை அறிந்துகொள்ளும் வகையில் கோழிக்கோடு, திருச்சூர் போன்ற பகுதிகளில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களைக் களப்பணியின்பொழுது தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. நாட்டுப்புறவியல் துறை மீது கொண்ட ஈடுபாட்டால் பின்லாந்து நாட்டுக்குச் சென்று அங்குள்ள நாட்டுப்புறவியல் சார்ந்த ஆவணங்களை என் சொந்த செலவில் பார்வையிட்டுத் திரும்பியுள்ளேன்.
திருச்சிராப்பள்ளி வானொலியில் நாட்டுப்புறப் பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பாகும். தமிழகத்தின் தலைசிறந்த கலைஞர்கள் வானொலியில் பாடுவர். அப்பாடல்கள் எனக்கு நாட்டுப்புறப் பாடல்களின் மீதான ஈடுபாட்டை அதிகரித்தது. நானும் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக, ‘தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புறச் சாயல்கள்’எனும் தலைப்பிலும், ‘நாட்டுப்புறப் பாடல்களில் வட்டார மணம்’என்ற தலைப்பிலும் உரையாற்றியுள்ளேன். தில்லி வானொலி, சீன வானொலி, ஹாங்காங் வானொலி, சிங்கப்பூர் வானொலி உள்ளிட்ட வானொலிகள் என் நாட்டுப்புறப் பாடல்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியுள்ளன. பொதிகை தொலைக்காட்சி நிலையத்தின் வழியாகவும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி விளக்கியுள்ளேன்.
சிங்கப்பூரில் உள்ள ‘சிம்’ பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் பாடத்தை அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பை எனக்கு நல்கியது. மேலும் நாட்டுப்புறக் கலைகள் குறித்த பாட நூல் எழுதும் வாய்ப்பையும் அப்பல்கலைக்கழகம் எனக்கு வழங்கியது.
நாட்டுப்புறப் பாடல்களை நானே நேரில் களப்பணியில் தொகுத்துள்ளமை போன்று, மூத்த ஆய்வாளர்கள் களப்பணியில் தொகுத்த பாடல்களையும் பாதுகாக்கும் நோக்கில் அவர்களிடமிருந்து ஒலிப்பேழைகளைப் பெற்று ஒலிவட்டில் பதிந்து பாதுகாத்து வருகின்றேன். அந்த வகையில் அறிஞர் ஆறு. இராமநாதன் அவர்கள் பெருந்தன்மையுடன் தம்மிடமிருந்த சில ஒலிப்பேழைகளை வழங்கியமையை நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
பெரும்பாலும் தங்கள் பணிகள் அனைத்தும் இணையத்துடன் இணைந்துள்ளது. அதன் வழியாகவே தங்கள் பணிகள் இன்று உலகம் முழுக்க அறியப்படுகின்றன. தங்களின் இணையத் தமிழ்ப்பணிகள் குறித்துக் கூறுங்கள்.
மு. இளங்கோவன்: ஆய்வுமாணவராக நான் இருந்தபொழுதே கணினி, இணையத்தின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. எனினும் 2005ஆம் ஆண்டுக்குப் பிறகே இணையத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினேன். தமிழறிஞர்களின் வரலாற்றை எழுதி உள்ளிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நான், அனைத்துப் பணிகளையும் நானே செய்துமுடிக்க இயலாது என்று உணர்ந்து, என்னைப் போல் பலரை உருவாக்க நினைத்து, இணையப் பயிலரங்குகளைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பொது மக்கள் சார்ந்த அரங்குகளில் நடத்தினேன். தமிழில் தட்டச்சிடல் தொடங்கி, மின்னஞ்சல் அனுப்புவது, இணையத்தில் உள்ள தமிழ் வளங்களைப் பயன்படுத்துவது வரை ஒரு நாள் முழுவதும் கலந்துகொள்வோர்க்குச் சலிப்பில்லாமல் இணையத்தைப் பயிற்றுவிப்பேன். அவ்வகையில் நூற்றுக்கணக்கான கல்லூரிகளில் இணையப் பயிலரங்குகள் நடந்துள்ளன. இதுபற்றிய செய்திகள் யாவும் என் வலைப்பதிவில் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அந்தமானிலும் இத்தகைய பயிலரங்குகள் நடந்துள்ளன. இதுவரை 1600-க்கும் மேற்பட்ட பதிவுகளை வலைப்பதிவில் எழுதியுள்ளேன். இதனை எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். என் வலைப்பதிவில் உள்ள செய்திகள் நம்பகத்தன்மை கொண்டவை என்பதால் இதழியல்துறை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியோடு என் செய்திகளை எடுத்துப் பயன்படுத்துவது உண்டு. எழுத்தாளர் ஜெயமோகனின் முயற்சியில் உருவான தமிழ் விக்கி இணையதளத்தில் என் கட்டுரைகள் நன்றியோடு பயன்படுத்தப்படுவதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைவது உண்டு. நான் எழுதிய இணையம் கற்போம் என்ற நூல் தமிழகத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாட நூலாக உள்ளது.
பெரும் பணிகள் செய்துள்ளீர்கள். தமிழ்ச்சூழலில் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளுக்கான அங்கீகாரம் ஏதேனும் கிடைத்துள்ளதா?
மு. இளங்கோவன்: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் என்னும் நூலுள் இடம்பெறும் பாட்டுடைத் தலைவரான நன்னன் குறித்து ஆராய்ந்து, அவர்தம் கோட்டையைக் கண்டுபிடித்து, தினமணி ஏட்டில், ‘சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை’என்று எழுதினேன். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கட்டுரை அது. மேலும் திருக்கோவிலூர் அருகில் தென்பெண்ணையாற்றில் கபிலர் குன்று இருப்பதைப் படத்துடன் கட்டுரையாக்கித் தினமணி நாளிதழில் வெளியிட்டேன். அக்கட்டுரையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இத்தகைய முயற்சிகளைக் கண்ணுற்ற அறிஞர்களின் பரிந்துரையால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி இளம் அறிஞர் என்ற விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் கையால் வழங்கிப் பாராட்டியது. மேலும் சிக்காகோ தமிழ்ச்சங்கம் தம் பொன்விழாவைக் கொண்டாடிய பொழுது என் தமிழ்ப்பணியைப் பாராட்டி விருது வழங்கிப் பாராட்டியது. தமிழ்நாட்டு அரசின் அகரமுதலித் துறை தூய தமிழ் ஊடக விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கியமைக்கு, அந்நாட்டுக்கு அழைத்துப் பாராட்டியுள்ளது. கல்லூரியில் பயின்ற பொழுது மூன்று தங்கப்பதக்கங்கள் வாங்கியுள்ளேன். அதில் ஒரு பதக்கம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் கையால் அணிவிக்கப்பெற்றது என் வாழ்வில் கிடைத்த பெரும் பேறு எனலாம். இப்பொழுது தமிழ் விக்கி– தூரன் விருது 2023 ஆம் ஆண்டு எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆகஸ்டு மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் ஈரோட்டில் நடைபெறும் பெருமைமிகு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அறிவார்ந்த வாசகர்கள் முன்பாக இந்த விருது பெற உள்ளமை என் பணிகளுக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாக உணர்கின்றேன்.
மலேசியத் தமிழ் உணர்வாளர்கள், கல்வியாளர்களுடன் நீண்ட நாள் நட்பும் அணுக்கமும் கொண்டவர் நீங்கள். உங்கள் பார்வையில் மலேசியாவில் தமிழ் அறிவியக்கப் பணிகள் எவ்வாறு உள்ளன? இங்குள்ள ஆய்வு முயற்சிகள் உங்களுக்கு நிறைவளிக்கின்றதா?
மு. இளங்கோவன்: மலேசியாவில் தமிழர்கள் கால்பதித்த நாள் முதல் தங்களால் இயன்ற அளவு மொழிக்கும் இலக்கியத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் பங்களிப்பு நல்கி வருகின்றனர். தமிழகத்திலிருந்து அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், படைப்பாளர்கள், கலைஞர்களை அழைத்து மலேசியத் தமிழர்கள் பயன்கொண்டதை வரலாறு நமக்குக் காட்டுகின்றது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, கி. வீரமணி உள்ளிட்ட அரசியல் சமூகத் தலைவர்களும் கு. அழகிரிசாமி, முருகு. சுப்பிரமணியன் உள்ளிட்ட இதழாசிரியர்களும், எம். இராசாக்கண்ணு, தனிநாயகம் அடிகளார், புலவர் அருணாசலம், பேரா. சோ. ந. கந்தசாமி, இரா. தண்டாயுதம், எம்.ஏ.நுஃமான், முனைவர் கி. கருணாகரன் உள்ளிட்ட தமிழறிஞர்களும் மலேசியாவுக்கு வருகை புரிந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் பேச்சும் படைப்பும் பணிகளும் மலேசியத் தமிழ் வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளன.
மலேசியப் பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப் பெறும் ஆய்வுகள் மலேசிய நிலைக்குத் தேவைப்படும் கருப்பொருளைக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாகக் கற்றல், கற்பித்தல், மொழிபெயர்ப்புச் சார்ந்த ஆய்வுகள் மிகுதியாக வருவதைப் பார்க்கின்றேன். மேலும் சிறுகதை, நாவல், புதுக்கவிதைகள் பற்றியும் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நவீன இலக்கிய ஆய்வுகளுக்கும் கோட்பாட்டு அடிப்படையிலான ஆய்வுகளுக்கும் முதன்மை அளித்தால் ஆய்வேடுகளின் தரம் சிறக்கும். ஆய்வாளர்கள் மலேசியத் தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்களின் கல்வி வரலாறு, இறைவழிபாடு, தெருக்கூத்து, சடங்குகள், திருமணமுறைகள், வாழ்க்கை வட்டச்சடங்குகள், தோட்டப்புறப்பாடல்கள், கோவில் வரலாறு, பழைய ஆவணங்கள், மடல்கள், புகைப்படங்கள் குறித்த ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். கல்விப்புலம் இல்லாமல் தனித்த ஆர்வத்தில் முரசு நெடுமாறன், திருச்செல்வம், சீனிநைனாமுகம்மது போன்ற அறிஞர்களின் பங்களிப்பும் எனக்கு மனநிறைவைத் தருகின்றன.
மலேசியத் தமிழிய முன்னோடி அறிஞர்கள் பற்றிய தகவல்கள் குறிப்புகளை உங்கள் அகப்பக்கத்தில் சேமித்துள்ளது மிக்க மகிழ்ச்சி தருகின்றது. மலேசியத் தமிழியக்க நண்பர்களிடம் இவ்வாறான முயற்சிகளை மலேசியாவிலேயே முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் வலியுறுத்தியதுண்டா?
மு. இளங்கோவன்: மலேசியாவில் உள்ள என் நண்பர்களிடம் வலைப்பதிவு உருவாக்கி, அன்றாட நிகழ்வுகள், நாட்டு நடப்புகள், இலக்கிய முயற்சிகளைப் பதிவு செய்யுங்கள் என்றும் அத்தகைய பதிவுகள் எழுத்து, படம், ஓவியம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவாக இருக்கலாம் என்றும் வேண்டிக்கொள்வது உண்டு. சிலாங்கூர் மாநிலம், பந்திங், கோலா லங்காட் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர் மன்றம் சார்பில் 22.05.2010 இல் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கத்தில் சற்றொப்ப முப்பது பேருக்கும் மேல் கலந்துகொண்டனர். அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். அனைவருக்கும் வலைப்பதிவு உருவாக்கும் பயிற்சியும் அளித்தேன். ஆர்வமாகக் கற்ற அவர்களில் யாரேனும் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுகின்றார்களா என்று தெரியவில்லை. முகநூல் வருகையால் வலைப்பதிவு எழுதுவோர் உலக அளவில் குறைந்துவிட்டதையும் அறிய முடிகின்றது.
தங்களின் இசைத் தமிழ்க்கலைஞர்கள் நோக்கீட்டு நூல்தமிழ் அறிவுலகில் மிகப்பெரிய கொடை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயினும் இந்நூலில் மாரியப்பன் போன்ற பல மரபு தமிழ்இசை ஆளுமைகளுடன் சமகால நவீன இசைக்கலைஞர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டுக்கு, மலேசிய எலிகேட்ஸ் குழு தலைமைப்பாடகர் டேவிட் ஆறுமுகம். அவர் மலாய் மெல்லிசைகளைப் பாடி புகழ் பெற்றவர். அவ்வகையில்‘இசைத் தமிழ்க்கலைஞர்’ என்பதை எவ்வாறு விளக்குகிறீர்கள்? இசைக் கலையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையா? அல்லது தமிழ் மரபிசைக் கலைஞர்களையா?
மு. இளங்கோவன்: ஈராயிரம் ஆண்டுக்கால இசைத்தமிழ் வரலாற்றில் செயல்பட்ட இசைத்துறையுடன் தொடர்புடையவர்களின் பட்டியல் ஏதேனும் உள்ளதா என்று தேடியபொழுது யாதொரு பட்டியலும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதை அறிந்தேன். ஆனால் கருணாமிர்தாசாகர ஆசிரியர் ஆபிரகாம் பண்டிதர் தம் நூலுள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தம் காலத்து இசைத்துறை வல்லுநர்களைக் குறித்திருந்தார். அவர் காலத்திலிருந்து நூறாண்டுகளாக இசைத்தமிழ் வளர்ச்சி பல நிலைகளில் வளர்ந்துள்ளது. ஆபிரகாம் பண்டிதர் வழியில் இசைக்கலைஞர்களைத் தொகுத்து அடுத்த தலைமுறைக்குத் தரும் பணியில் பண்டிதருக்குப் பிறகு யாரும் ஈடுபடவில்லை. எனவே, நான் இந்த முயற்சியில் ஈடுபட்டேன். இசையறிந்தவர், இசைக்கருவி இசைப்போர், இசைக்கலைக்குத் துணை நிற்போர். இசையார்வலர்கள், இசைப் புரவலர்கள் என்று இசைத்தமிழோடு தொடர்புடையவர்கள் யாவரையும் பட்டியலில் அடக்கிப்பார்க்க முனைந்துள்ளேன். மெல்லிசை, மரபிசை, பண்ணிசை என்று பிரித்துப்பார்க்காமல் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் அடுத்த கட்டப்பணிகளுக்கு அடிகோலும். இதனையே விரித்தெழுதி, ஒரு கலைக்களஞ்சியமாக்கலாம். இதுவாழ்நாள் பணியாக அமையும்.
உலகம் முழுவதும் உள்ள இசைத் தமிழ்க்கலைஞர்களைப் பட்டியலிட இந்த நூல் முனைந்துள்ளதால் விடுபாடுகள் இருக்க நிறைய வாய்ப்பு உண்டு. நூல் அச்சான ஒரு வாரத்திற்குப் பிறகு நானே இருநூறு கலைஞர்களின் பட்டியலைத் தயாரித்தேன். இன்னும் மேம்படுத்த வேண்டிய நூல் இதுவாகும். தமிழர் அல்லாத பிறர் தமிழ்ப்பாடல்களைப் பாடியிருப்பினும் அவர்களையும் இப்பட்டியலில் இடம்பெறச் செய்திருப்பேன். தமிழர் யார் என்பது மிகப்பெரிய விவாதத்திற்கு வழிவகுக்கும் வினாவாகும். புகழ்பெற்ற தமிழ்த்திரைப் படப்பாடகர்கள் பலரும் பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அகராதி, கலைக்களஞ்சியத்தில் நமக்குத் தேவையானதைத் தேடிப்பெறும் பொழுதுதான் அகராதி, கலைக்களஞ்சியத்தின் பெருமை நமக்குப் புலப்படும். அதுபோல் இந்த நோக்கீட்டு நூல் ஆய்வாளர்களுக்குப் பயன்படும். மற்றபடி இந்தநூலைப் பொழுதுபோக்காகப் படித்து மகிழ இயலாது.
தமிழ் ஆய்வுகளில் ஈடுபடவிரும்பும் இன்றைய இளைஞர்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
மு. இளங்கோவன்: தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் நடைபெறும் ஆராய்ச்சி நிலைமைகள் உவப்பானதாக இல்லை. கல்விப்புலங்களில் அறிவு, திறமைக்கு முதன்மை என்ற நிலைமைமாறி ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதுபோல் ‘பொருளுடையார் பூப்பர்’ என்ற நிலை உள்ளது. அக்காலத்தில் வேந்தர்கள் படித்தவர்களுக்குப் பொருள்களை வழங்குவார்கள் என்ற நிலையிருந்தது. இன்று பொருள் உடையவர்களே வேந்தர்களாகப் பல்கலைக்கழகங்களில் கொலுவீற்றிருக்கும் நிலையைப் பார்க்கின்றோம். பேராசிரியர்களும் அன்னவர்களாகவே உள்ளனர். இத்தகையவர்கள் ஆராய்ச்சிக்கு எந்த அளவு முக்கியத்துவம் வழங்குவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். இத்தகு நிலைகளை ஆய்வுத்துறைக்கு வருபவர்கள் நன்கு உணர்ந்துகொள்ளவேண்டும்.
அறிஞர்களால் நிரம்பி வழிந்த பெரும்புகழுடன் விளங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் த்தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்றவற்றின் தரம் எதனால் குறைந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும். எனவே சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக இல்லாமல், புதியன காணும் வேட்கையுடையவர்களாக ஆய்வாளர்கள் விளங்க வேண்டும். ஆராய்ச்சி என்பது வேலைவாய்ப்புகளுக்கு மட்டும் உரியது என்று குறுகிய வட்டத்தை ஆய்வாளர்கள் வரைந்துகொள்ளாமல் புதுப்புது ஆய்வுப்புலங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து கவனத்தைக் குவித்து உழைக்கும்பொழுது ஆராய்ச்சி வசப்படும். அரிய ஆராய்ச்சிகளால் மனித சமுதாயத்தை மேன்மையுறச் செய்யமுடியும்.
பாரதிதாசன் குறித்த தங்கள் ஆய்வும் அதை ஒட்டிப் பொன்னி இதழ் குறித்த தங்கள் தேடலும் உங்களைத் திராவிட அரசியல் சார்பாளராக அடையாளப்படுத்தும் முயற்சிகள் நடந்ததுண்டா? தங்களுக்கு அப்படி ஏதேனும் அரசியல் சார்புள்ளதா?
மு. இளங்கோவன்: பள்ளி மாணவனாக இருந்த பொழுது தனித்தமிழ் அறிஞர்களின் நூல்கள், கட்டுரைகள், இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கல்லூரிப் பருவத்தில் மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம், மு.வ. உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களைக் கற்றேன். ஆய்வு மாணவனாக வளர்ந்த பொழுது க.ப.அறவாணன், தமிழண்ணல், மு.தமிழ்க்குடிமகன், இரா. இளவரசு, பா.வளன் அரசு உள்ளிட்டவர்களின் நூல்களும் தொடர்பும் தமிழ் உணர்வை எனக்கு மேலும் வளப்படுத்தின.
தமிழ்ப்பற்று என்பது திராவிட இயக்க உணர்வாளர்களிடம் மிகுந்திருந்ததால் தமிழறிஞர்களையும் திராவிட இயக்கத்தினராக அடையாளப்படுத்துவது உண்டு. பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களைத் திராவிட இயக்கச்சார்பாளராகப் பார்ப்பது உண்டு. திராவிட இயக்கக் கொள்கைகளுக்குக் குரல் கொடுத்த சி. இலக்குவனார், கோவை இளஞ்சேரன், தமிழ் மறவர் வை.பொன்னம்பலனார் போன்ற தமிழறிஞர்கள் பலர் உண்டு.
திராவிட இயக்க ஈடுபாடு என்பது தமிழ் ஈடுபாட்டுடன் பின்னிப் பிணைந்தது. திராவிட இயக்கத்தினரின் செயல்பாடுகள் என்பவைத் தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டுக்கும் நலம் பயப்பனவாகும். எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் இவர்கள் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. மேடைகளில் நல்லதமிழ் இன்று பயன்பாட்டில் இருப்பதற்குக் காரணம் திராவிட இயக்கப் பேச்சாளர்கள் ஆவார்கள். எழுத்தில் பிறமொழிக்கலப்பு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் திராவிட இயக்க எழுத்தாளர்கள் ஆவார்கள். குடியரசு, விடுதலை, தென்னகம், முரசொலி, உண்மை, அலைஓசை, புரட்சி, நம்நாடு, முல்லை, தென்றல், கதிர், பொன்னி, கலைமன்றம், புதுவைமுரசு, மன்றம், குயில், வானம்பாடி என்று திராவிட இயக்க ஏடுகள் முந்நூற்றுக்கும் மேல் வெளிவந்து, தமிழகத்தில் மொழிவளர்ச்சிக்கும், அரசியல் எழுச்சிக்கும் துணை செய்துள்ளன.
பாரதிதாசன் படைப்புகளையும் பொன்னி இதழையும் ஓர் ஆராய்ச்சியாளனாகவே நான் அனுகியுள்ளேன். திராவிட இயக்கம் வலியுறுத்தும் சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, சமூக நீதி, அறிவியல் பார்வை, பாலினச் சமத்துவம் முதலிய கொள்கைகள் எனக்கு உடன்பாடானவையே.
நவீன இலக்கிய வாசிப்பு தங்களிடம் உள்ளதா? நவீன இலக்கிய வரிசையில் பொதுவாகவே திராவிட இலக்கியக்கங்களை இணைக்காதது குறித்து மாற்று அபிப்பிராயம் உண்டா?
மு. இளங்கோவன்: நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சமகாலப் படைப்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவேன். சிற்றிதழ்களில் வெளிவரும் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைகள், நேர்காணல்களைப் படிப்பது உண்டு. புதுமைப்பித்தன், ஜெயமோகன், எஸ். ரா, முத்துலிங்கம், வேல இராமமூர்த்தி, நாகரத்தினம் கிருஷ்ணா உள்ளிட்டவர்களின் படைப்புகளை விரும்பிப்படிப்பது உண்டு. பேராசிரியர் க. பஞ்சாங்கம் உள்ளிட்ட திறனாய்வாளர்களுடன் நேரில் உரையாடித் திறனாய்வுப் பார்வைகளையும் அண்மைக்கால இலக்கியப்போக்குகளையும் அறிவது உண்டு.
ஈழத்தின் தமிழ் நாவலியல் – ஓர் ஆய்வுக் கையேட்டு நூலினை (ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகமும் ஆய்வகமும் (இலண்டன்) 2020இல் 792 பக்கத்தில் நூலகர் என். செல்வராஜா அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்தநூலுக்கு 21 பக்கத்தில் ஓர் ஆய்வுரை வரைந்துள்ளேன். ஈழத்தில் இதுவரை வெளிவந்த பல நாவல்களைப் படித்து, மதிப்பிட்டு எழுதிய அந்த முன்னுரை பல்வேறு தலைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்பவர்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதாக இருக்கும்.
திராவிட இயக்கப்படைப்பாளர்களின் படைப்புகளையும் நவீன இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளவேண்டும். பாவேந்தர் பாரதிதாசன் தொடங்கி இன்று எழுதிக்கொண்டிருக்கும் கவிதைப்பித்தன், கடவூர் மணிமாறன் வரை கவிதைத்துறையில் இவர்களின் பங்களிப்பு மிகுதி. அதுபோல் அறிஞர் அண்ணா, கலைஞர், ஆசைத்தம்பி, திருவாரூர் தங்கராசு, ஏ.கே.வேலன், தில்லைவில்லாளன், சி.பி. சிற்றரசு, தென்னரசு, இராதாமணாளன், முரசொலிமாறன் உள்ளிட்டவர்களின் சிறுகதைகள், நாடகங்கள் யாவும் நவீன இலக்கியங்களே ஆகும். இன்றும் கனிமொழி, சுப. வீ. போன்றவர்களின் எழுத்துகளும் குறிப்பிட்ட வீரியத்துடன் வெளிப்பட்டு வருகின்றன.
மரபுக்கவிதைகள் தவிர நவீன இலக்கிய முயற்சிகளில் தாங்கள் ஈடுபட்டதுண்டா?
மு. இளங்கோவன்: ஆராய்ச்சிப்பணிகளும் கல்லூரியில் பயிற்றுவித்தலும் ஆவணப்படுத்தலும் என் பெரும்பான்மையான நேரங்களை எடுத்துக்கொள்கின்றன. எனவே நவீனப்படைப்புகளை எழுதுவதற்கு நேரம் வாய்க்கவில்லை. எதிர்காலத்தில் எழுதுவதற்கான திட்டங்கள் உள்ளன.
நேர்காணல்: ம. நவீன், அ. பாண்டியன்
பேராசிரியர் மு. இளங்கோவனின் இடையறா உழைப்பு மறக்கப்பட்ட தமிழ் மொழிக்காவலர்கலை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறது. இவ்வளவு முயற்சியையும் இதுநாள் வரை அரசோ தனியார் இயக்கங்களோ பெரிது படுத்தாதது வருத்தமளிக்கிறது. அதனை நேர்செய்கிறது விக்கி தூரன் விருது. வாழ்த்துகள் நண்பர் மு.இளங்கோவன்.
முதலில் ம.நவீனுக்கும் வல்லினம் குழுவினர்க்கும் வாழ்த்துகள் நெடிய நேர்காணலின் வழி ஒரு நல்ல அறிஞரை, ஆய்வாளரை அடையாளப்படுத்தியமைக்கு. இம்மாதிரியான மனிதர்களை காணுங்கால் பேருவகை கொள்கிறது மனது.
ஒரு தனிமனித முயற்சி எந்த அளவுக்கு பயன் பயக்கும் என்பதற்கு திரு. மு. இளங்கோவன் அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. மனிதன் தன் ஆற்றலை வெளிப்படுத்துவதில் நிலைகொள்கிறது புகழ்.
அரசாங்கம் , அறிஞர் பெருமக்கள் வழி , செய்யவேண்டியவற்றை தனித்து செய்திருக்கிறார். செய்துக்கொண்டிருக்கிறார். அதே நேரம் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர்கள் போன்றோர் இம்மாதிரியான முன்னெடுப்புக்களில் ஆர்வம் காட்டாதது தீயூழ். சோற்றுக்கலையும் வாழ்க்கையில் வாழ்வு நிறைவடைந்துவிடுகிறது போல.
முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வாழ்நாள் உழைப்பை கண்டுகொண்டு அதன் முக்கியத்துவம் கருதி அவருக்கு தூரன் விழுது வழங்கி சிறப்பிக்க இருக்கும் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் மற்றும் நண்பர்களுக்கும் மணம் பொதிந்த வாழ்த்துகள்.
முதலில் ம.நவீனுக்கும் வல்லினம் குழுவினர்க்கும் வாழ்த்துகள் நெடிய நேர்காணலின் வழி ஒரு நல்ல அறிஞரை, ஆய்வாளரை அடையாளப்படுத்தியமைக்கு. இம்மாதிரியான மனிதர்களை காணுங்கால் பேருவகை கொள்கிறது மனது.
ஒரு தனிமனித முயற்சி எந்த அளவுக்கு பயன் பயக்கும் என்பதற்கு திரு. மு. இளங்கோவன் அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. மனிதன் தன் ஆற்றலை வெளிப்படுத்துவதில் நிலைகொள்கிறது புகழ்.
அரசாங்கம் , அறிஞர் பெருமக்கள் வழி , செய்யவேண்டியவற்றை தனித்து செய்திருக்கிறார். செய்துக்கொண்டிருக்கிறார். அதே நேரம் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர்கள் போன்றோர் இம்மாதிரியான முன்னெடுப்புக்களில் ஆர்வம் காட்டாதது தீயூழ். சோற்றுக்கலையும் வாழ்க்கையில் வாழ்வு நிறைவடைந்துவிடுகிறது போல. அவர்களிடம் வாசிக்க ஆய்வுக்கட்டுரைகள்/ ஆவணங்கள் வழங்கினாலும் அவற்றை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.
முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வாழ்நாள் உழைப்பை கண்டுகொண்டு அதன் முக்கியத்துவம் கருதி அவருக்கு தூரன் விழுது வழங்கி சிறப்பிக்க இருக்கும் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் மற்றும் நண்பர்களுக்கும் மணம் பொதிந்த வாழ்த்துகள்.
துறை தோறும் தொண்டு செய்வாய் தமிழுக்கே …..எனும் பாரதிதாசன் மொழிக்கேற்ப இயங்குபவர் ….தமிழ் அன்னையின் தவப்புதல்வன் ….அன்னார் பணி சிறக்க தமிழ் த்தாய் அருள்புரிக…
மிக மகிழ்ச்சியாக உள்ளன ஐயா. உங்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது ஐயா இனிமையான சொற்களால் தாங்கள் தமிழின் சிறப்பினையும் தமிழ் அறிஞர்களின் சிறப்பினையும் தமிழ் மொழியின் சிறப்பினையும் ஓடி ஓடி உழைத்துத் தேடிய செல்வங்களை மிக அருமையாக பயன்படுத்தி உள்ளீர்கள்.படிக்கின்ற பொழுதே வறுமையும் வளமையும் கலந்து வருவதை பார்க்கிற பொழுது உண்மையில் மனம் வருந்துகிறது அருமையும் செம்மையும் மிகுந்து தெளிந்த தெளிவை தந்து உள்ளீர்கள் .அறிஞர்களின் வாழ்வியலில் கிடைக்கிற அருமை பெருமைகளை சேர்த்து ஒரு மீன்பிடி வலையைப் போல தேடிக் கண்டுபிடித்து அவற்றை அலைந்து ஒருங்கு சேர்த்தவர் நீங்கள். இந்த உயரியப் பண்பு இதுவரையில் தமிழ் அறிஞர்களின் யாரிடமும் காணப்படாத ஒன்றாகும்.
நான் பல வழிகளிலும் உதவிட விரும்புகிறேன் ஐயா.
உங்கள் தொடரட்டும்.
இனிய வாழ்த்துகள்
முனைவர் கி.பாண்டியன்.
பெரும்பணி. வாழ்த்துக்கள்