“கடவுளாக வாழ்வது சுலபம்!” சனிரா

அண்மையில் மேற்கொண்ட நேபாளப் பயணத்தில் சனிரா பஜ்ராச்சார்யா (chanira bajracharya) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனிரா முன்னாள் குமாரி தேவி. ஏப்ரல் 2001இல் பதான் தர்பார் சதுக்கத்தின் வாழும் தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போது அவருக்குப் பத்து வயது. 2011ல் தன் பதினைந்து வயதில் பருவமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் எளிய பெண்ணாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து வருகிறார். அவருக்குத் தற்போது 27 வயது. காத்மண்டு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சனிரா, வங்கியில் நிதி பகுப்பாய்வு அதிகாரியாகப் பணிபுரிகிறார். சனிரா ஒரு நாட்டியத் தாரகை. ஷர்யா நிருத்தியா (charya Nirtya) எனும் நடனத்தை ஆடக்கூடியவர்.

முன்னாள் குமாரிகள் பலர் நேபாளில் இருந்தபோதும் நாங்கள் சனிராவைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இருந்தது. இன்று முன்னாள் குமாரிகளில் கல்வி கற்றுச் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய பெண்ணாக அவர் திகழ்கிறார். மேலும் நேபாளத்தின் துர்வரலாற்றின் பின்னணியில் சனிராவின் கண்ணீர்த் துளிகளும் பிணைந்துள்ளது.

பதான் தர்பார் சதுக்கத்தின் அருகில்தான் சனிராவின் இல்லம் இருந்தது. அவரிடமிருந்து அழைப்பு வந்தபோது அவர் இல்லம் தேடிச் சென்றோம். சனிரா எங்களைத் தனது பிரத்தியேக அறைக்கு அழைத்துச் சென்றார்.  அறை முழுவதும் அவர் குமாரியாக வாழ்ந்தபோது பிடிக்கப்பட்ட படங்கள் மாட்டப்பட்டிருந்தன. இயல்பாக எங்கள் உரையாடல் தொடங்கியது.

குமாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பற்றி இணையத்தின் வழி நாங்கள் அறிந்திருக்கிறோம். அதே வழிமுறைகளைத்தான் இன்னமும் கையாளுகிறார்களா? உங்களைத் தேர்ந்தெடுத்த அனுபவத்தின் அடிப்படையில் கூறுங்கள்.

சனிரா: குமாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைகளைப் பற்றி இணையத்திலும் நாளிதழ்களிலும் நிறைய தவறான தகவல்கள் வருகின்றன. ஒரு சிறுமியை இருட்டு அறையில் பூட்டி வைத்தல், மிருகங்களைப் பலிகொடுத்து அதே அறையில் சிறுமியைத் தங்க வைத்தல், பயங்கரமான முகமூடிகளை அணிந்துகொண்டு சிறுமியின் முன் ஆடுதல் இது போன்ற தகவல்கள் எல்லாம் பொய்யானவை. பொதுவாகக் குமாரிகளைத் தேர்ந்தெடுப்பது எங்களின் நேபாள பாரம்பரிய முறைப்படிதான் நடக்கும். முதல் மாதவிடாய் வரும் வரைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரி, வாழும் தெய்வமாகக் கருதப்படுவாள். 150 குடும்பங்கள் அடங்கிய எங்கள் பத்ராசாரியார் இனக்குழுவில்  பிறக்கும் பெண் குழந்தைகள் மட்டும்தான் வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். 2 வயதிலிருந்து 7 வயது வரையில் இருக்கும் பெண் குழந்தைகள், வாழும் கடவுளாவதற்கு விண்ணப்பிக்கலாம். எண்கணித நிபுணர், தலேஜு கோயில் தலைமை புரோகிதர், எங்கள் இனக் குழுத் தலைவர், அரசாங்க அதிகாரி, முன்னாள் குமாரிகள், முன்னாள் குமாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக வாழும் குமாரியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

குமாரிகளைத் தேர்தெடுக்கும் முறைகளில் முக்கிய மூன்று அம்சங்கள் உள்ளன. முதலில் தலைமை புரோகிதர் குமாரி தேவிக்காக விண்ணப்பித்த சிறுமிகளை ஒரு வரிசையில் நிற்க வைப்பார். புரோகிதர் பிரத்தியேக மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்குவார். மந்திர ஜபம் சுமார் பத்து நிமிடத்திற்கு நீடிக்கும். இந்த மந்திரங்களை ஜபிக்கும்போது, தலேஜு பவானியால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுமியின் உடலுள் ஆக்கிரமிப்பாள். சில அறிகுறிகளைக் கொண்டு ஒரு சிறுமியின் உடலில் தலேஜூ பவானியின் நுழைவைப் புரோகிதர் புரிந்து கொள்வார். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுமி, மந்திர ஜபம் ஒலிக்கையில், தலேஜு பவானியின் கை முத்திரைகளைப் பிடிக்கத் தொடங்குவாள். சில சிறுமிகள் தலேஜு பவானி போல நிற்பர். சிலர் முகத்தில் பிரகாசம் வீசத் தொடங்கியிருக்கும். கண்களில் ஒளியைக் காணலாம். உடலின் வெப்பநிலை அதிகரித்திருக்கும். இத்தகைய கூறுகளை வைத்துத்தான் புரோகிதர் முதல் மூன்று சிறுமிகளைத் தேர்ந்தெடுப்பார். இதற்குப் பிறகு இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும். இந்தச் சுற்றைத் தலேஜு கோயிலின் தலைமை புரோகிதரின் மனைவியால் நடத்தப்படும். அவர் ஒவ்வொரு சிறுமியாக அறைக்குள் அழைத்துச் சென்று, உடைகளை அகற்றி, உடல் அம்சங்களைச் சோதிப்பார். உடல் அங்கத்தில் எந்த ஒரு காயமோ, தழும்பலோ இருக்கக்கூடாது என்பது விதிமுறை. அப்படி ஏதேனும் காயங்கள் இருப்பின் அந்தச் சிறுமி தகுதியற்றவராகக் கருதப்படுவார்.

வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவளுக்குச் சிங்கம் போன்ற மார்பு, மான் போன்ற தொடைகள், மாடு போன்ற கண் இமைகள் என உடல் அமைப்பு இருக்க வேண்டும் என்று நீங்கள் இணையத்தில் படித்திருக்கலாம். அப்படி ஒருத்தி இருந்தால் அவள் மனித ரூபத்தில் இருக்கமாட்டாள். இவை எல்லாம் ஒரு அக்காலத்து கற்பனையான உடல் அமைப்புகள்.  புரோகிதரும் அவரின் மனைவியும் அவர்கள் வரையறையில் நெருக்கமான உடல் அம்சம் பொருந்தி வரும் சிறுமியைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுமிக்குச் சில சம்பிரதாயங்களைப் பின்பற்றி சில சடங்கு முறைகளைச் செய்வார்கள். அப்படிச் செய்யப்பட்ட சிறுமிதான் அடுத்த சில வருடங்களுக்குத் தலேஜு பவானியின் பிரதிநிதியாகவும் வாழும் கடவுளாகவும் மாறுகிறாள்.

இறுதியாக, புதிய குமாரியைத் தலேஜு பாவனி ஆலயத்திற்கு அழைத்துச் சென்று சில சிறப்பு பூஜைகளைச் செய்வார்கள். பிறகு, புதிய குமாரியை வரவேற்க சில பாரம்பரியச் சடங்குகளும் பல நிகழ்வுகளும் நடைபெறும்.

குமாரியாக சனிரா

நேபாளத்தில் மொத்தம் 12 குமாரிகள் இருக்கின்றார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளோம். அந்த வரிசையில் காத்மண்டுவில் இருக்கும் குமாரியின் நிலை உயர்வானதா?

சனிரா: ஆமாம் உயர்வானதுதான். ஆனால் 12 குமாரிகளும் ஒரே கடவுளின் பிரதிநிதிகளே. குமாரி தேவி கலாச்சாரம் முதலில் பக்தாபூர் (bhakthapur) எனும் நகரில்தான் ஆரம்பித்தது. ஆனால் காத்மண்டுவின் குமாரிக்குப் பிரித்தியேக திருவிழா, அவளுக்கென பிரித்தியேக அரண்மனை, அரசாங்க சந்தா, புதிய அரசாங்க அதிகாரிகள் குமாரியின் உத்தரவுக்குப் பின் பதவியேற்பது, எனப் பல முன்னுரிமைகள் வழங்கப்படுவதால் காத்மண்டு குமாரியே ‘ராயல் குமாரி’ என அழைக்கப்படுகிறாள். அவளே முதன்மையானவளும்கூட. ஆனால் விதிமுறைகள் அனைத்துக் குமாரிகளுக்கும் ஒன்றுதான்.

32 அம்சங்களில் குமாரியின் ஜாதக அமைப்பு முதன்மையானது. அது என்ன ஜாதகம்? அந்த ஜாதகத்திற்கும் மன்னரின் ஜாதகத்திற்கும் தொடர்புகள் இருக்குமா?

சனிரா: கண்டிப்பாக. குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்படும் சிறுமியின் ஜாதகம் சிறப்பானதாக இருக்க வேண்டும். அவளின் ஜாதகம் ஆட்சி புரியும் மன்னனைவிட சிறப்பானதாக இருத்தல் அவசியம். நாட்டிற்கு நன்மை தரும் ஜாதகமாக அமையவும் வேண்டும். அப்படிச் சிறப்பான ஜாதகம் இருந்தால் மட்டுமே அவளால் மன்னனை ஆசிர்வதிக்க முடியும். குமாரிகளின் ஜாதகத்தைக் கணிக்க தேசிய பண்டிட் வருவார்.

நீங்கள் குமாரியாக இருந்தபோது, உங்களுடைய பெற்றோருக்கு உங்களைச் சந்திக்கும் உரிமை இருந்ததா?

சனிரா: காத்மண்டுவில் இருக்கும் ராயல் குமாரிக்குத் தன்னுடைய பெற்றொரைச் சந்திக்கும் உரிமையும் உடன் இருப்பதற்கு வசதியும் வாய்ப்பும் இல்லை. ராயல் குமாரியைப் பார்த்துக்கொள்ள அரண்மனையில் பிரிதியேக ஆட்கள் உள்ளனர். ஆனால் பதான் (Patan) அப்படியல்ல. பதான் குமாரி தன்னுடைய பெற்றோருடன் வீட்டிலேயே இருக்க அனுமதியுண்டு. மகள் கடவுளாக வீட்டினுள் வலம் வருவாள். ஆனால், 2014 முதல் பதான் குமாரிகளுக்கு அரண்மனை வழங்கப்பட்டது. பதான் குமாரி அரண்மனையில் தன்னுடைய பெற்றொருடன், அவர்களின் அரவணைப்பில் இருக்கலாம். நான் அவ்வாறு வளர்ந்தவள்தான்.

நீங்கள் குமாரியாக இருந்தபோது, உங்களின் அன்றாட வாழ்வியல் எவ்வாறு அமைந்தது எனக் கூறுங்கள்

சனிரா: தினமும் காலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். தினமும் எனக்குப் புனிதக் குளியல் (holy bath) செய்யப்படும். குளியலுக்குப் பிறகு, என்னுடைய அம்மா குமாரிகளுக்கே உரித்தான நெற்றியிலிடும் கலாச்சார அடையாளங்கள் பூசுவார். அதன் பிறகு, என் அப்பா எனக்குச் சிறப்பு பூஜை செய்வார். சுமார் 20 நிமிட பூஜை அது. பூஜையின் போது எனக்கு, பூ, பழங்கள், பலகாரங்கள் எனச் சில படையல்கள் இடப்படும். அதன் பிறகு, சில பக்தர்கள் என்னிடம் வந்து ஆசி பெறுவர். புதிய பணியைத் தொடங்குபவர், தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர் எனப் பலர் வந்து என்னை வணங்கிச் செல்வர். பெரும்பாலும் காலைப் பொழுதுகளில் நிறைய பக்தர்கள் வருவார்கள். காத்மண்டுவில் உள்ள ராயல் குமாரிகளைக் காண, அவரின் அறைக்குள் நுழைய முடியாது. ஆனால், பதான் குமாரிகளை அவரின் அறைக்குள் சென்று சந்திக்கலாம். ஆதலால், மதியம் 12 வரை, பக்தர்களை ஆசிர்வதிக்கும் கடமையிலேயே நேரம் கழியும். அதன் பிறகு எனக்கு 2 அல்லது 3 மணி நேரம் வகுப்புகள் இருக்கும். பெரும்பாலான மாலை வேளைகளில் நான் ஓய்வாகத்தான் இருப்பேன். என்னுடைய தம்பிகளுடன் விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது என எனக்குப் பிடித்தவற்றை நான் செய்வேன். அதன் பிறகு, இரவில் எனக்கு ஆரத்தி எடுக்கப்படும். ஆரத்தி முடிந்தவுடன் குமாரி ஹர் (Kumari Ghar) மூடப்படும்.  

நீங்கள் குமாரியாக இருந்தபோது, என்னென்ன வகுப்பு அல்லது பயிற்சிகளில் ஈடுபட்டீர்கள்?

சனிரா: பொதுவாகக் குமாரிகள் கல்வி கற்க அல்லது மற்ற வகுப்புகளுக்குப் போக அனுமதியில்லை. வாழும் கடவுளாக உயர்ந்த நிலைக்குச் சென்ற பிறகு அவளைவிட அறிவில் உயர்ந்த ஒருவர் பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாதெனும் மரபு உண்டு. மேலும் யாருக்கும் இல்லாத சிறப்பு அம்சங்கள் இருக்கும் ஒருவளுக்கு, அரசனைவிட உயர்வானவளுக்குப் பாடம் சொல்லித்தர யாருக்கும் தைரியம் இல்லையென சொல்லலாம். ஆகையால் கல்வி கற்றல் ஒரு பெரிய சிக்கலாகவே அனைத்துக் குமாரிகளுக்கும் இருந்தது. ஆனால், என் அம்மா தனித்துவமிக்கவர். என் அம்மா குமாரி தேவியின் கலாசாரத்தை மதிப்பவர். அதனைப் பாதுகாக்கும் முக்கியமான பணியிலும் இருக்கிறார். அவர் நான் குமாரியாக இருப்பதில் அதிக பூரிப்பிலும் இருந்தார். அதேசமயம் என்னுடைய குமாரி தவணை நிறைவடைந்ததும், என்னுடைய எதிர்காலத்தை நினைத்து கவலையும் அடைந்தார். கல்வி அறிவு இல்லாமல் இந்த உலகை எப்படிச் சமாளிப்பேன் என நிறைய குழப்பங்கள் அவரிடம் இருந்தன.

நான் குமாரியாக ஆனதும், என் அம்மா சுமார் மூன்று மாதங்களுக்கு நிறைய பள்ளிகளுக்குச் சென்று, ஆசிரியர்களைச் சந்தித்து எனக்குக் கல்வி போதனை வழங்கும்படி பல ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தார். அதிர்ஷ்டவசமாக ஓர் ஆசிரியர் அரண்மனைக்கு வந்து, எனக்குப் பாடம் போதிக்க ஒப்புக்கொண்டார். பள்ளியில் படிக்கும் அனைத்துப் பாடத்தையும் அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். நேபாளில் அரசாங்க சோதனை எழுதிய முதல் குமாரி தேவி நான்தான். இந்தச் செய்தி அனைவராலும் அப்போது பேசப்பட்டது. நாளிதழில்கூட தலைப்புச் செய்தியாக வந்தது. என்னுடைய செயல் மற்ற குமாரிகளுக்கு ஒரு விழிப்புணர்வாக இருந்தது. அத்துடன், எனக்குக் கல்வி உதவித்தொகை கொடுக்க ஏராளமான கல்வியாளர்களும் கல்விக்கூடங்களும் முன்வந்தன.

முன்புபோல் இல்லாமல், இப்பொழுதுள்ள குமாரிகளுக்கு நிறைய வாய்ப்பு வழங்கப்படுகிறது. கல்வியைத் தவிர நடனம், இசை, விளையாட்டு என அவர்கள் விரும்பும் துறையில் பயிலும் வசதி உள்ளது.

நீங்கள் குமாரியாக இருந்தபோது, உங்கள் ஆசிரியர் எப்படி உங்களுக்குப் பாடம் போதித்தார்? அவர் உங்களைத் திட்டியிருக்கிறாரா?

சனிரா: எல்லாரும் குருவை வணங்கி, கல்வியைக் கற்றுக்கொள்வர். ஆனால் எனக்குப் போதித்த ஆசிரியர், என்னை வணங்கிய பிறகு, எனக்குப் பாடம் போதித்தார். (சிரிக்கிறார்) நான் என்ன தவறு செய்தாலும் என்னைத் திட்டும் உரிமை அவருக்கு இல்லை. என் பெற்றோர் உட்பட யாரும் என்னைத் திட்டவோ என்மேல் கோப்படவோ முடியாது. குமாரி தேவி அனைவருக்கும் கடவுள். அரசருக்கும்கூட. எனவே என்  அம்மா மறைமுகமாக என் சகோதரர்களைத் திட்டுவார். அவர்களைத் திட்டி தவற்றைப் புரிய வைப்பதன் வழி எனக்கு என் தவற்றை உணர்த்துவார். “என்ன செய்வது… நீ கடவுளாகிவிட்டதால் உன்னைத் திட்டவும் முடியாது,” என அவர் புலம்பியதை இப்போது நினைத்தால் சிரிப்பு வரும் (சிரிக்கிறார்).

நீங்கள் குமாரியாக இருந்தபோது எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டீர்கள்?

சனிரா: குமாரிகள் கோழி, இறைச்சி சாப்பிடக்கூடாது. முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகளை உண்ண அனுமதியுண்டு. குமாரி தேவிக்குப் பாரம்பரிய மதுபானம் படையலில் வைக்கப்படும். குமாரிகள் கண்டிப்பாக அந்தப் பானத்தை அருந்த வேண்டும் என்பது விதிமுறை.

குழந்தைப் பருவத்தைத் தொலைத்துவிட்டோம் என்ற கவலை உள்ளதா? குமாரி தேவியாக இருந்ததற்கு எப்பொழுதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

சனிரா: இல்லவே இல்லை. யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை மிக ஆழமாகப் புரிந்து கொண்டதால், நான் எதையும் இழக்கவில்லை எனக் கருதுகிறேன். நான் 5 வயதிலிருந்து 15 வயதுவரை, சுமார் 10 ஆண்டுகளாக வாழும் கடவுளாக இருந்திருக்கிறேன். மக்கள் என் காலில் விழுந்து, கடவுளாக வணங்கி இருக்கிறார்கள். பிறகு, சாதாரணப் பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறேன். இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு. இரண்டு வாழ்க்கையும் நிறையப் படிப்பினையையும் நிறைய அனுபவங்களையும் கொடுத்துள்ளது. ஒரு கடவுளாக, பிறரின் பிரச்சினைகளைப் பொறுமையாகக் கேட்க, அவர்களை அன்புடன் ஆசிர்வதிக்கக் கற்றுக் கொண்டேன். கிட்டத்தட்ட 11 வருடங்கள் சாதாரண பெண்ணாக ஆகியும் மக்கள் இன்னமும் என்னிடம் வந்து ஆசி பெறுகிறார்கள். மேலும் உங்களைப் போல உலகமெங்கிருந்தும் பல்வேறு மக்கள் என்னைச் சந்தித்து, என்னுடைய அனுபவங்களைக் கேட்கிறார்கள். நான் எங்குச் சென்றாலும் இன்னமும் முன்னாள் குமாரி தேவிக்கான மரியாதை கிடைக்கிறது. கடவுளாக வாழ்ந்த அந்தஸ்து இன்னும் மாறவில்லை. ஆக, என் வாழ்க்கையில் நான் எதையும் தொலைக்கவில்லை, பெற்றதுதான் அதிகம்.

வாழும் கடவுளின் தவணை முடிந்த பிறகு, அரண்மனையை விட்டு வீட்டிற்குத் திரும்பும் நாளன்று உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

சனிரா: என்னுடைய அம்மா மிகச் சிறந்தவர். என்னிடம் எப்பொழுதும், இந்த வாழ்க்கை நிரந்தரம் அல்ல, நீ ஒரு நாள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என நினைவுறுத்திக் கொண்டே இருப்பார். ஆக, நான் மனதளவில் ஒரளவு தயார்நிலையில் இருந்தேன். ஆனாலும் அந்த நாள் கொடுமையாகத்தான் இருந்தது. எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்தது. கடவுளாக இல்லாமல் சாதாரணப் பெண்ணாக வாழப் போவதை எண்ணி பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது.

இனி நீங்கள் வாழும் கடவுள் இல்லை எனத் தெரிய வந்த பிறகு, உங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் எப்படி உங்களை எதிர்கொண்டார்கள்?

சனிரா: சிறுவயதிலிருதே குமாரி ஹரில் இருந்ததால், நண்பர்கள் குறைவு. பொதுவாக நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் எனக்கு மரியாதை கொடுப்பார்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்கள் முதலில் சாதாரணமாகப் பேசினாலும், முன்னாள் குமாரி தேவி எனத் தெரிய வந்த பிறகு அவர்கள் பேச்சில் மரியாதை கூடிவிடும். அவர்கள் இன்று வரை என்னைக் குமாரி தேவியாகத்தான் பார்க்கிறார்கள்.

குமாரிகள் சிரிப்பு, அழுகை, வருத்தம் எனத் தங்களின் உணர்வுகளைப் பிறரிடம் காட்டக்கூடாதா? இதனால் உங்கள் இயல்பு வாழ்வில் உணர்ச்சி வெளிப்பாடு பாதிக்கப்படாதா?

சனிரா: ஆமாம், காட்டக்கூடாது என்பது விதிமுறை. ஒருவர் குமாரியின் முன் மண்டியிட்டு வணங்கும்போது, திடீரென குமாரி தேவி அழுதால், அந்தப் பக்தருக்கு மனவருத்தம் ஏற்படலாம். அவ்வாறான வெளிப்பாடுகள் அபசகுணத்தின் குறியீடாகக் கருதப்படும். சில முக அசைவுகளுக்குக்கூட குறியீடுகள் உள்ளன. ஆகையால், குமாரி தேவி, தன்னுடைய இருக்கையில் அமர்ந்து பத்தருக்கு அருளும்போது, முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டக்கூடாது. அப்படி ஏதேனும் காட்டினால், அது தேசத்தையும் அரசரையும்கூட பாதிக்கும். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் பொதுமக்களிடம்தான். என் குடும்பத்தாருடன் எல்லாவித உணர்ச்சிகளையும் வெளிகாட்டும் குழந்தைதான் நான்.

நீங்கள் குமாரியாக இருந்தபோது, நேபாள அரசாட்சியில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. அது உலக வரலாற்றில் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுவது. அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள்.

சனிரா: குமாரி தேவிகளின் முதன்மையான கடமை தேசத்தையும் அரசரையும் பாதுகாப்பதுதான். நான் குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்ட்ட மூன்றாவது நாளன்று, என்னை அறியாமலேயே தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அழுதுகொண்டிருந்தேன். அழுகை என்றால் ஓயாமல் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. உறங்கும்போதுகூட கன்னங்கள் ஈரமாகிக்கிடந்தன. என்னுடைய அம்மா குமாரியாக ஆனதால் ஏற்பட்ட இடமாற்றம் மற்றும் நண்பர்கள் இல்லாததால் அழுகிறேன் என நினைத்துக் கொண்டார். பிறகு என்னைச் சமாதானப்படுத்த பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் கொடுத்தும் என் அழுகை நிற்கவில்லை. சில கோயில் புரோகிதர்கள் வந்து என் நிலையைப் பார்த்து, இது நல்ல சகுணம் இல்லை எனச் சொல்லிச் சென்றார்கள். மூன்றாவது நாள், விடியற்காலை சுமார் 2 மணியளவில் உறக்கத்திலிருந்து எழுந்து, என்னுடைய பணி முடிந்தது என அம்மாவிடம் கூறினேன். என் அம்மா அதிர்ச்சிக்குள்ளானார். சில நிமிடங்களில், அரண்மனையில் நடந்த படுகொலைச் செய்தி என் அம்மாவை வந்தடைந்தது. உலக வரலாற்றில் அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாத படுகொலைகள் அவை. நிறைய ஆவணப்படங்கள் அது குறித்து வந்துள்ளன. 2001, ஜூன் 1ஆம் திகதி நேபாளத்தின் தலைநகரம் காத்மண்டுவில் அமைந்த நாராயணன்ஹிட்டி அரண்மனையில் இச்சம்பவம் நடந்தது. அப்போது அரசு விருந்து நடந்துகொண்டிருந்தது. இளவரசர் திபெந்திரா கடும் போதையில் விருந்தில் நுழைந்து துப்பாக்கியால் அங்கிருந்த மக்களைச் சுட்டார். திபேந்திராவின் தந்தையார் மன்னர் பிரேந்திரா, அவரின் தாய் அரசி ஐஸ்வரியா உட்பட 10 பேர் அதில் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதற்குப் பிறகு திபேந்திரா தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகிறீர்கள்?

சனிரா: நான் பிறந்தது, பத்ராசாரியா எனும் புத்த மதத்தைப் பின்பற்றும் ஓர் இனத்தில். பத்ராசாரியா குலத்தில் பிறந்திருந்தால் மட்டுமே குமாரி தேவியாக முடியும். தலேஜு பவானி இந்தியாவிலிருந்து வந்த இந்து மதக் கடவுள். குமாரி தேவிகள் தலேஜு பவானியின் பிரதிநிதிகள் என நம்பப்படுகின்றனர். ஆக, குமாரி தேவி இவ்விரு மதத்தின் கலாச்சார கலவை எனலாம். நான் புத்த மதத்தில் பிறந்து, இந்துக் கடவுளாக வாழ்ந்திருக்கிறேன். இந்த இரு மதத்தின் பெருமைகளும் சிறப்புகளையும் மிக ஆழமாக அறிவேன். ஆக, நான் இந்த இரு மதங்களையும் பின்பற்றுகிறேன்.

தலேஜு பவானி தெய்வ வழிப்பாட்டைப் பற்றிக் கூற முடியுமா?

சனிரா: தலேஜு பவானி தேவி காத்மாண்டு பள்ளத்தாக்கில் வசிக்கும் நெவாரி இந்துக்களின் முதன்மையான தெய்வம். துர்க்கையே நேபாளில் தலேஜூ பவானியாக வணங்கப்படுகிறார். குமாரி தேவி தலேஜூ பவானியின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. மல்லா வம்சத்தில் இருந்த ஜெயப்பிரகாஷ் மல்லா எனும் மன்னன் தலேஜூ தெய்வத்துடன் ரசியமாக பகடை விளையாடுவதை மன்னனின் மனைவி  கண்காணிக்கிறார். அதனை அறிந்த தலேஜூ பவானி மறைகிறாள். தன்னை மீண்டும் பார்க்க விரும்பினாலோ தான் அந்த நாட்டைப் பாதுக்காக்க வேண்டும் என விரும்பினாலோ நெவாரி சமூகத்தில் தன்னைத் தேடிக் கண்டடைய வேண்டும் என்கிறாள். தான் அச்சமூகத்தில் ஒரு சிறுமியாக அவதாரம் எடுப்பேன் என்கிறார். தலேஜூ பவானி இந்தியா நாட்டிலிருந்து வந்த கடவுளும்கூட.

தலேஜு பவானியின் உருவம் எப்படி இருக்கும்?

சனிரா: தலேஜு அழகானவள். ஏறக்குறைய மகிஷாசுரமர்த்தினிபோல இருப்பாள்.

உங்களுக்கு மற்ற குமாரிகளுடன் தொடர்புகள் உள்ளதா?

சனிரா: ஆமாம் உண்டு. எல்லா முன்னாள் குமாரிகளையும் பண்டிகை மற்றும் திருவிழாக்களுக்கு அழைப்பார்கள். அப்படிச் செல்லும்போது, மற்ற குமாரிகளைப் பார்த்துப் பேசுவதுண்டு.

நீங்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியுமா?

சனிரா: கண்டிப்பாக முடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் ஜாதகம் மிக உயர்வானதாக இருக்கும். எங்களின் ஜாதகத்திற்குப் பொருந்தும் ஆடவரைத் தேர்ந்தெடுப்பது கடினம். குமாரிகளுக்குத் திருமணமானால், அவளுடைய கணவர் இறந்துவிடுவார் எனும் கட்டுக் கதைகளும் உண்டு. முன்னாள் குமாரிகள் பலர் திருமணம் ஆகி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் உங்களுக்குத் திருமணம் ஆகி, ஒரு மகள் பிறந்தால், அவளை வாழும் கடவுள் குமாரி தேவியாக ஆவதற்கு அனுமதி கொடுப்பீர்களா?

சனிரா: கண்டிப்பாக ஆக்குவேன். ஆனால் அதற்குச் சாத்தியம் இல்லை. ஷக்யா குலத்தில் பிறக்கும் ஆண், பெண்கள் சகோதர சகோதரிகளாகக் கருதப்படுகின்றனர். எனவே எங்களில் யாருமே எங்கள் இனத்தின் எதிர்பாலரைத் திருமணம் செய்வதில்லை. ஆக, என் பெண் குழந்தை இயல்பாக வேறு  இனக் குழந்தையாகவே பிறக்கும். அவளால் குமாரி தேவியாக முடியாது. ஆண் வழி ஷக்யா குலத்தில் பிறந்த பெண் குழந்தைகள் மட்டுமே குமாரியாகத் தகுதியானவர்கள்.

நீங்கள் பயிலும் நடனத்தைப் பற்றி கூறுங்கள்.

சனிரா: குமாரியாக இருந்தபோது எனக்கு நடனம் பயில வாய்ப்புக் கிடைக்கவில்லை. குமாரி ஹரிலிருந்து திரும்பிய பிறகு, நான் விரும்பி கற்ற கலை இது. நான் ஆடும் நடனத்தின் பெயர் ஷர்யா நிர்த்யா (Charya Nirtya). நேபாளத்தின் நெவார் பெளத்த மரபுப்படி, ஷர்யா என்பது பெளத்த கலையின் ஒரு புனிதமான வடிவமாகும். அந்த வகைமையில் உருவான நடனம் இது. இது எங்களின் பாரம்பரிய நடனங்களில் ஒன்று. இந்த நடனம் எனக்கு மிகவும் நெருக்கமானது காரணம் கடவுள் போல உடுத்தி அரிதாரம் பூசி இந்த நடனத்தை ஆட வேண்டும். இப்பொழுது நான் வாழும் கடவுளாக இல்லையெனும் ஏக்கத்தை இந்த நடனத்தின் வழி தீர்த்துக் கொள்வதோடு, எங்களின் பாரம்பரியத்தையும் கடைப்பிடிக்க முடிகிறது.

வாழும் கடவுளாக இருந்தபோது, புதியதாகப் பதிவியேற்கும் அதிகாரிகள் உங்களைச் சந்தித்து, ஆசிப் பெறுவது வழக்கம். அவர்களின் மூலம் உங்களுக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் கிடைத்துள்ளதா?

சனிரா: தனிப்பட்ட சலுகைகள் கிடைத்ததில்லை. நான் கேட்டதும் இல்லை. பல்கலைக்கழகம் வரை சென்று படித்தது எல்லாம் என்னுடைய சுய முயற்சியில்தான். ஆனால், அனைத்துக் குமாரி தேவிகளுக்கும் தங்களின் தவணை முடிந்த பிறகும் அரசாங்கத்தால் ஓய்வூதியம் வழங்கப்படும். அத்தொகை மிகச் சிறிதளவாக இருந்தாலும், முன்னாள் குமாரிகளுக்கு வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. 

உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், மீண்டும் வாழும் கடவுள், குமாரி தேவியாக மாறுவீர்களா? அந்த வாழ்வை ஏற்கும் மனநிலை உண்டா?

சனிரா: கண்டிப்பாக. ஒவ்வொருநாளும் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். உலகியல் வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. பணத்திற்கும், வேலைக்கும் போராட வேண்டும். பல போராட்டங்களுக்கு நடுவில் நிறைய போலியான வாழ்க்கை முறையும் கலந்து விடுகின்றது. கடவுளாக வாழ்வது சுலபம். நாம் பாதுகாப்பான சூழலில் இருப்போம். நமது தேவைகளை மற்றவர்கள் செய்து கொடுப்பார்கள்.

கேள்வி: நேபாளத்தில் முதன்மையான இரு மதத்திலும் நிறைய பெண் தெய்வ வழிபாடுகள் உள்ளன. குமாரி தேவி, தலேஜு பவானி, தாரா தேவி, மாயா தேவி எனப் பல பெண் தெய்வ வழிபாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். இதே முக்கியத்தும் நேபாளில் வாழும் பெண்களுக்குக் கிடைக்கிறதா?

சனிரா: நேபாள் இருபாலருக்கும் சம உரிமை வழங்கும் நாடு எனக் கூறிக்கொண்டாலும் பெண்களுக்கு எதிரான அதிக வன்முறை நடக்கும் நாடுகளில் நேபாளும் ஒன்று. 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 22 சதவீதம் பேர் 15 வயதிலிருந்து ஒரு முறையாவது உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். ஆக, நேபாள் ஓர் ஆணாதிக்க நாடு எனத் தான் கூற வேண்டும். ஆனால் இது போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக இப்பொழுதுள்ள அரசாங்கம் தொடர்ந்து விழிப்புணர்வைப் பரப்பி வருகிறது. மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான தண்டணைகளை விதித்துள்ளது. இந்தச் சூழல் மாறும் என நான் ஆழமாக நம்புகிறேன். அது முதலில் தலேஜு பவானியின் பிரதிநிதியான குமாரி தேவிகளின் மூலம் நிகழும். காரணம் குமாரி தேவியின் கலாச்சாரம் ஒரு சாதாரண பெண்ணைக் கடவுளாக பாவித்து வழிபடுவதுதான். பிறகு அதே கடவுளை மீண்டும் சாதாரண பெண்ணாக்குவது. நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மன்னன் கூட அந்தப் பெண்ணை தலைவணங்குகிறார். குமாரி தேவி மட்டுமில்ல, எல்லா பெண்களும் போற்றப்படத்தக்கவர்களே. ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குள் ஒரு தெய்வத்தை வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள். சக்தி வாய்ந்தவர்கள். ஆக, அவர்கள் அனைவராலும் வணங்கப்பட வேண்டும்; மதிக்கப்பட வேண்டும். குமாரி தேவியின் கலாச்சாரம் இந்தச் சமூகத்திற்கு இதையே நேர்மறையான செய்தியாக அளிக்கிறது, அது தலேஜு பாவானியின் சித்தமாகக் கூட இருக்கலாம்.

நேர்காணல்: கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

3 comments for ““கடவுளாக வாழ்வது சுலபம்!” சனிரா

  1. Saravana Kumar
    July 19, 2023 at 4:17 pm

    அருமையான நேர்காணல் குமாரி தேவி பற்றி புதியதாக தெரிந்துக் கொண்டேன் நன்றி

  2. Prabhu Ramamoorthy
    August 2, 2023 at 3:37 am

    அருமையான உரையாடல்

  3. Indra
    September 6, 2023 at 4:03 pm

    குமாரி தேவியை பற்றி பயனுள்ள புதிய தகவல்களை வழங்கியதற்கு ஆசிரியர்க்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...