எம்.யுவன் கவிதைகள்: தீராத ருசி

  • சொற்களும் அர்த்தங்களும்

கிளியென்று சொன்னால்

பறவையைக் குறிக்கலாம்

பச்சையைக் குறிக்கலாம்

மூக்கைக் குறிக்கலாம்

பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச்

சிறையைக் குறிக்கலாம்.

சமயத்தில் அது

கிளியையும் குறிக்கலாம்.

இப்படித்தான் துவங்குகிறது ‘தீராப்பகல்’ என்ற எம். யுவனின் மொத்தக் கவிதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் ‘Absolute’ என்ற சொல்லும் ‘Relative’ என்றவொரு சொல்லும் இருக்கின்றன. முன்னதற்கு ‘அறுதி’ அல்லது ‘துல்லியம்’ என்ற பொருளையும், பின்னதற்கு ‘தோராயம்’ என்ற பொருளையும் கொள்ளலாம். யுவனின் ஆரம்பகால கவிதைகளில், சொற்களிலிருந்து அதன் அறுதி அர்த்தத்தை விடுவித்து, தோராயமான அர்த்தங்களை வரவழைத்துப் பார்ப்பதன் மூலம் அச்சொல்லின் பொருளுக்கு முடிவற்ற சாத்தியக் கூறுகளை உண்டாக்கிக் காட்ட முயல்கிறார். இதன் மூலம், சொல்லையும் அதன் பொருளையும் இறுக்கமாகக் கட்டியிருக்கும் அந்த கயிறை நெகிழ்த்துப் பார்த்தும், சில சமயம் அக்கயிற்றை வெட்டிப் பார்த்தும் விளையாடி மகிழ்கிறார். அந்த மகிழ்ச்சியை வாசகனுக்கும் பரவ விடுகிறார். மேலேயுள்ள கிளி கவிதைக்கு ‘குறிப்பு’ என்ற தலைப்பையும் தருகிறார். ‘குறிப்பு’ என்ற தலைப்பினூடாக இக்கவிதையை வாசிக்கும்போது அந்தத் தோராயத்தின் சாத்தியங்கள் நீண்டுகொண்டே போவதான ஒரு மயக்கத்தை வாசகனிடம் ஏற்படுத்துகிறார். இதன் மூலம், தோராயங்களைத் தேடிப் போவது மட்டுமல்லாமல், தோராயங்களையே புதியவகைத் துல்லியங்களாக மாற்றியும் விடுகிறார்.

Relative ≠ Absolute என்ற பொதுவான புரிதலை Relative = Absolute என்று மாற்றியமைத்து விடுகிறார். யுவனுக்கு முன்னும் நவீன கவிஞர்கள் இதை முயன்று பார்த்திருப்பினும் யுவனின் கவிதைகளிலேயே இதன் பூரணத்துவம் பொலிகிறது எனலாம். தோராயமே துல்லியமாகிவிட்டால், அதன் பின் துல்லியம் என்பது என்னவாகும் என்ற வாசகனின் அச்சத்துக்கும் அவர் பதிலளிக்கிறார். ‘தோராயம்தான் இனி துல்லியம்’ என்பதே அவரது பதில்.

அதன் அடுத்த கட்டமாக, அந்தத் தோராயமும் மாறியபடியேதான் இருக்கும் என்பதையும் தன் கவிதைகள் மூலம் காட்டுகிறார் யுவன். சொல்லின் அர்த்தத்தை அதனிடம் இருந்து விடுவிப்பது மட்டும் அவரது நோக்கமல்ல, சொல்லையும் அதன் அர்த்தங்களையும் புரிந்து கொள்ளும் முயற்சியில் ‘காலம்’ என்ற ஒன்றையும் உள்ளே கொண்டு வருகிறார் யுவன். காலம் என்ற வஸ்து உள்ளே வந்ததும், சொல்லுக்கான பொருள் முற்றிலுமான வேறு ஒரு பரிமாணத்துக்குச் சென்று விடுகிறது. இதைப் புரிந்துகொள்வதற்கு யுவனின் மற்றொரு கவிதையையும் பார்க்கலாம்.

உருமாற்றம்

கொக்கின் பெயர் கொக்கு

என்றறிந்த போது

வயது மூன்றோ நாலோ.

கொக்கென்றால் வெண்மையென

பின்னால் கற்றேன்.

அழகு என பறத்தல் என

விடுதலையென போக்கின் கதியில்

தெரிந்து கொண்டது.

வேலையோ வெய்யிலோ

வார்த்தையோ வன்முறையோ

உறுத்தும்போது கொக்கு

மிருதுவென உணர்ந்தது.

அவரவர் வழியில் வளர்கிறோம்

கொக்கு அடுத்து என்ன

ஆகும் எனும் மர்மம்

உடன் தொடர

முதல் கவிதையில், கிளி என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்களை அளிக்க முயன்ற யுவன், உருமாற்றம் என்ற இந்தக் கவிதையில், கொக்கு என்பதன் அர்த்தத்தை மேலும் தளர்த்தி, முடிவிலியை நோக்கி நகர்த்துகிறார். ஆம், கிளி கவிதையில் காலம் இடம்பெறவில்லை. ‘உருமாற்றம்’ என்ற இந்தக் கவிதையில் காலம் உள்ளே வந்துவிடுகிறது. காலம் உள்ளே வந்தபின் காலத்தின் போக்கில் பொருட்களுக்கான அர்த்தங்களும் மாறத் துவங்குகின்றன. அதன்பின் அர்த்தம் என்பது முடிவிலியை நோக்கித்தானே செல்ல முடியும். இவ்வகை அர்த்த உருவாக்கங்களுக்கு முடிவென்பதே இல்லைதானே. எனில், எம்.யுவனின் கவிதைகள் வெறும் சொல் விளையாட்டுகள்தானா என்றால் அதுவும் இல்லை. கவிதை என்பதை பிரபஞ்ச விளையாட்டு (Cosmic Game) என்ற நிலை நோக்கி நகர்த்துகிறார் யுவன். அர்த்த உருவாக்கங்களில் இருந்து காலத்தையும் வெளியையும் நோக்கி நகர்கிறார்.

  • காலமும் வெளியும்

சொற்களுக்கான அர்த்தங்களில் இருந்து அவற்றை விடுவித்தல் போலவே, காலத்தையும் வெளியையும் கூட அதனதன் அர்த்தச் சிறைகளில் இருந்து வெளியேற்ற முடியும் என்பதைத் தனது அடுத்த கட்ட கவிதைகள் மூலம் காட்டினார் யுவன்.

நீட்சி

பார்த்துக் கொண்டிருந்த

கண்ணாடி கைதவறி

விழுந்து உடைந்து

நொறுங்கின போது

பார்த்துக் கொண்டிருந்தேன்

கைதவறி

விழுந்து

உடைந்து

நொறுங்கின

கண்ணாடியை

இந்தக் கவிதையில், காலம் என்பதை அதன் குறைந்தபட்ச அலகின் மூலமாக அணுகுகிறார். காலம் என்பதை ஒரு வஸ்து போலவும், அதனை கவிதை என்ற நுண்ணோக்கி மூலமாகப் பார்த்து அதன் உள்ளடுக்குகளை ஆராய முடியும் என்பது போன்றதான தோற்றத்தையும் தன் கவிதை மூலம் ஏற்படுத்துகிறார் யுவன். கையில் இருந்து கண்ணாடி தவறிய நொடி/அது விழுந்த நொடி/உடைந்த நொடி/நொறுங்கிய நொடி என்று காலத்தின் குறைந்தபட்ச அலகான வினாடியைச் (அதற்கும் குறைந்தபட்ச அலகு உண்டென்றாலும் கவிதையைப் புரிந்துகொள்வதற்காக வினாடியில் நிறுத்துகிறேன்) சொல்லில் சிறைப்படுத்தும் முயற்சியை இக்கவிதையில் வெளிப்படுத்துகிறார். இதை வாசிக்கும்போது, கவிஞர் ஆனந்தின் புகழ்பெற்ற கவிதையும் நினைவுக்கு வருகிறது.

சற்றைக்கு முன்

ஜன்னல் சட்டமிட்ட வானில்

பறந்து கொண்டிருந்த

பறவை

எங்கே?

அது

சற்றைக்கு முன்

பறந்து கொண்டிருக்கிறது

இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பிணைத்துப் பார்த்து, அந்தக் கூட்டணியில் இருந்து மீண்டும் நிகழ்காலத்தை மட்டுமே அல்லது இறந்த காலத்தை மட்டுமேயாகப் பிரித்துப் பார்க்க முயலும் முயற்சியின் விளைவே இத்தகைய கவிதைகள் எனலாம். ‘நீட்சி’ என்று இந்தக் கவிதைக்குத் தலைப்பு போடப்பட்டிருப்பதன் மூலம், இந்தக் கவிதையில் காட்டப்படும் நீட்சி என்பது இறந்த காலத்தின் நீட்சியா அல்லது நிகழ்காலத்தின் நீட்சியா என்ற மெல்லிய மயக்கத்தைக் கவிதைக்கு அளித்திருக்கிறார் யுவன். இதே மயக்கத்தைத் தரும் யுவனின் இன்னொரு கவிதை இது.

இருந்த காலமெல்லாம்

இறந்த காலம்

என்பார் தமிழய்யா.

அவரும் ஒருநாள்

இறந்து போனார்.

இருக்கும்போதே இறக்கும்

கணமொன்றில்

நீர்ப்பிறவி முடிந்து

உருவிழந்த திவலை

ஆவியாய்க் கிளம்பியதை

என்னவென்று சொல்ல,

இறந்த கணமா,

பிறந்த கணமா?

அதே சமயம், வாசகனை இந்த மயக்கத்திலேயே ஆழ்த்தி வைக்கும் நோக்கமும் அவருக்கில்லை. சட்டென, காலம் என்பதை அதன் நேர் அர்த்தத்திலும் இந்தக் கவிதையில் காட்டியிருக்கிறார். ‘இன்று’ என்பது வெறும் ‘இன்று’தான். வேறெந்த மயக்கத்துக்கும் ஆட்பட்டு விடாதீர்கள் என்று வாசகனை எச்சரிக்கவும் செய்கிறார். ‘நாளை மற்றுமொரு நாளே’ என்று ஜி.நாகராஜன் சொன்னதைப் போல ‘இன்றும் மற்றுமொரு இன்றுதான்’ என்று யுவன் இக்கவிதை மூலம் காட்டி விடுகிறார்.

இன்று

இன்றுதான் அந்த

இன்னொரு நாள்.

இன்றுகளின் இலைகள் உதிர்ந்து

ஆரம்பம் இன்னொரு நாள்களின்

சகாப்தம்.

பெட்டிகள் திறக்கின்றன.

சீறிப் படமுயர்த்தும் பாம்புகள்.

படிக்க வேண்டிய வரிகள்.

கேட்டாக வேண்டிய ஸ்வரங்கள்

கொடுத்தாக வேண்டிய முத்தம்.

தபால்கள் வரிகள் தரிசனங்கள்.

ஒத்திவைத்த கடன்களின் உயிர்ப்பு.

இன்றின் குரல்வளை நெரிபட

இன்னொரு நாளின் போர்க்குரல்.

எனக்குப் பயமாய் இருக்கிறது

இன்னொரு நாட்களின் நதியில்

இன்னொரு துளியாய்

ஆகும் இது

எனினும்.

இந்நாள் என்பது பொன்னாள் இல்லை. நாட்களின் நீண்ட வரிசையில் மற்றுமொரு நாளே என்ற யதார்த்த போதத்துடன் யுவன் எழுதிய மற்றொரு கவிதை இது.

டிசம்பர் செவ்வாய்

இந்நாள் பொன்னாள் ஆகும்

அறிகுறி எதுவும் இல்லை இதுவரை.

தலைவர் எவரும் சாகவில்லை

தெய்வகுமாரன் பிறந்ததைச் சுட்டும்

விண்மீன் எதுவும் தென்படவில்லை.

அரிசி விளைச்சலை அதிகப்படுத்த

ராக்கெட் புறப்படும் தகவலும் இல்லை.

இன்றும்

என்றும் போல்

சமுத்திரம் மற்றும்

தெருக்கோடிக் குட்டையில்

சூக்குமத் தாரைகள் கிளம்பி

வானோக்கி உயர்ந்திருக்கும்.

பெயரிடப்படாத குட்டி நட்சத்திரம்

இடம் பெயர்ந்திருக்கலாம் ஒருவேளை.

லட்சக் கணக்கில் மண்புழுக்கள்

மண்ணைத் துளைத்து மீண்டிருக்கும்

எழுதப்படாத

மனித குல வரலாற்றில்

இடப்பட்ட காற்புள்ளியாய்

நடக்கிறேன்

டீக்கடை நோக்கி.

ஆனால், வெறும் யதார்த்த போதம் கவித்துவமாக மலர்வது அவர் இரவின் வீழ்ச்சியை வர்ணிக்கும் இக்கவிதையில்தான்.

என் ஜன்னல் வழி

வெளியேறுகிறது இரவு

ஒவ்வொரு காலாய் யோசித்து

எடுத்து வைக்கும்

ஆயிரங்கால் பூச்சியென

இறங்கிப் போவதை

பரக்கப் பரக்கப் பார்த்துக்கொண்டிருந்தேன்

என்னவொரு நிதானம்

என்னவொரு பரிவின்மை

என்னவொரு பாராமுகம்

இத்தனைக்கும்

நாங்கள் இருவரும் சேர்ந்துதான்

பூமியின் வயதில் ஒருநாளை

கூட்டுகிறோம்.

கடைசிக் கால் தாண்டுவதைத்

தெரிவிக்கும் பறவையொலியில்

இளஞ்சாம்பல் நிறம். சரசரவென

வண்ணங்களை வடிவங்களை

மீட்டுல்கொள்கிறது யாவும்.

என்னைப்போலவே புரண்டு படுக்கிறது

பொழுது.

எதுவும் புதிதில்லை

அன்றாடம் நடப்பதுதான்என்றாலும்

ஒவ்வொரு நாள் கடக்கும்போதும்

நான் அந்திமத்தை நோக்கி

ஓர் அடி வைக்கிறேன்

பூமியோ

குன்றா இளமைக்குத்

திரும்பி விடுகிறது.

இரவை ‘ஆயிரங்கால் பூச்சி’ யாக அறிய நேர்கிறபோதும், ‘என்னைப் போலவே புரண்டு படுக்கிறது பொழுது’ என்ற வரியை வாசிக்கும்போதும், வாசகனுக்குள் தீராத மயக்கத்தின் அலைகள் உருவாகின்றன. உண்மைதான். ‘புரண்டு படுக்கும் பொழுது’ என்ற படிமத்தை வாசித்துக் கடக்கவே இயலவில்லை. கவிதையின் இறுதியில் ஒரு சிறுகதைக்கான திருப்பத்தையும் வைக்கிறார் யுவன். ஒரு இரவு முடிவடைகையில் மனிதன் அந்திமத்தை நோக்கி நகர்வதும், பூமி தன்னுடைய குன்றா இளமைக்குத் திரும்புவதையும் கவித்துவ தரிசனமாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாகக் காட்சியளிக்கிறது’ என்ற நகுலனின் கவிதை வரி ஒன்றுண்டு. இந்த வரிக்கு எடுத்துக்காட்டாக எதையாவது சொல்ல வேண்டுமென்றால், புராதன நகரங்களின் இன்றைய வடிவத்தைச் சொல்லலாம். எம்.யுவனின் காலம் குறித்த பார்வையும், வெளி குறித்த பார்வையும் ஒன்று கலக்கும் கவிதை என ‘ஹம்பி’ என்ற இந்தக் கவிதையைச் சொல்லலாம். அவரது கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.

ஹம்பி

அழிக்கப்பட்ட பெருநகரின் வீதிகளில்

ஆவிபோல அலைகிறேன்.

ஆந்தையின் கனவில்

புலரும்

இரவில் நிரம்பிய வெளிச்சமென

துலக்கமாய்க் கிடக்கிறது யாவும்.

திரும்பும் திக்கெல்லாம்

கல்பூத்த கட்டாந்தரை.

பிடிப்பு இன்றி

வீழும் அறிகுறியின்றி

தன்மேல் நடந்து சென்ற

யுகங்களின் தடயமின்றி

பாறைமேல் அமர்ந்த பாறைகள்.

விதானமும் நொறுங்கிய

கடைவீதியில்

காட்சிக்கு நின்றிருந்த தூண்கள்.

படிக்கட்டு சிதைந்த கலையரங்கில்

நிசப்தத்தின் பாடலுக்கு

வெறுமை அபிநயிக்கிறது.

அரசியர் நீராட அமைந்த

தடாகத்தின் வெற்றுத் தரையில்

புற்குச்சங்களில் பூச்சி தேடி

தவளைக்குஞ்சு தத்திச் செல்கிறது

அரைகுறையாய் நிற்கும்

கற்சிலையின் காதருகில்

ஒயிலாய்ப் படிந்திருக்கும் ஓணான்

என்றைக்குரிய ரகசியத்தை உரைக்கிறது?

நொறுங்கிய நகரத்தின்

நொறுங்காத உயிரோட்டமாய்

பாறைகள் மற்றும்

சகாப்தங்களுக்கிடையில்

ஊர்ந்து நகர்கிறாள்

துங்கபத்திரை.

அதோ, நீராடி

திரும்பி நின்று

உடைமாற்றும் பேரிளம்பெண்

தன்னுணர்வின்றிக் காட்டும்

ஒற்றை முலை வீசும் வசீகரம்

எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?

இக்கவிதையைப் படிமங்களின் தொகை எனலாம். ‘ஆந்தையின் கனவில் புலரும் இரவு’, ‘சிதைந்த கலையரங்கில் நிசப்தத்தின் பாடலுக்கு அபிநயிக்கும் வெறுமை’, ‘கற்சிலையின் காதில் ரகசியமுரைக்கும் ஓநாய்’, ‘சகாப்தங்கிடையில் ஊர்ந்து நகரும் துங்கபத்திரை’ என படிமங்கள் வரிசை கட்டி நகர்கின்றன இக்கவிதையில். அனைத்தும் ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கவிதைகள். காலத்தின் கண்ணோட்டத்தில் இடம் என்பதுதான் என்ன? என்ற கேள்வி மூலம் இக்கவிதையை அணுகலாம். அல்லது இடத்தின் கண்ணோட்டத்தில் காலத்தின் பெறுமதிதான் என்ன? என்ற கேள்வியின் மூலமும் இக்கவிதையை அணுகலாம். அல்லது காலமும் இடமும் ஒன்றையொன்று சார்ந்திராமல் போனால் நிகழும் சாதகம் அல்லது பாதகத்தின் அர்த்தம்தான் என்ன என்ற கோணம் மூலமும் இக்கவிதையை அணுகலாம். பாதகம் என்பது சிதிலங்களின் தொகை. சாதகம் என்பது கால மயக்கத்தை மீறியும் வெளித்தெரியும் ஒற்றை முலையின் வசீகரம். கவிதை உச்சம் பெறுவது அந்த ஒற்றை முலையின் வசீகரம் கால மயக்கத்தை வென்று விடுவதனால் அல்லவா? ஒற்றை முலையின் ரௌத்திரம் ஒரு நகரத்தை அழித்த கதையை அறிந்தவர்கள் நாம். ஆனால், இங்கே ஒற்றை முலையின் வசீகரம் நூற்றாண்டு மயக்கத்தை மீறியும் வசீகரிக்கிறது.

இந்தக் கவிதையின் நவீன கால மாற்றாக ‘நவீன வாழ்க்கைக்கு என் சித்தப்பாவின் பங்களிப்பு’ என்ற கவிதையை முன்வைக்கலாம். இறந்த காலம் என்று நாம் நம்பும் காலத்துப் பிரதிநிதி நவீன வாழ்க்கைக்குள் வந்துவிட்டால் என்ன ஆவார் என்ற சித்திரத்தை இக்கவிதையில் காணலாம்.

I

ஆறு கழுவிப் போகும்

ஊர் அது.

வைக்கோல் கூரைகள்.

பருவங்களின் மாற்றம்

வயல்வெளிகளில் பூவரச மரங்களில்

தலைமுறைகளின் இழப்பு

எலும்புகள் இடறும்

புழுதி செறிந்த மயானக்

கரையில் தெரியவரும் சிற்றூர்.

வெட்டவெளி நார்க்

கட்டிலில் மைல்கள் தள்ளி

காற்று சுமந்து வரும்

கிட்டப்பாவின் குரல்.

ஜாதிக்கொரு சாமி நின்று

பாலித்த ஊர்.

II

ஈஸிசேரில் படுக்கக்

கற்றுக்கொண்டார் சித்தப்பா.

கடிகாரமாய் நண்பனாய்

சாப்பாடாய் டி.வி.யை

உபாஸிக்கக் கற்றார்.

அலமாரிக் கதவு மைக்கேல் ஜாக்சன்

ஆணா பெண்ணா கேட்

டறிந்துகொண்டார் பேரனிடம்.

பாலியெஸ்டர் கோமணம்

கொடியில் துவளும்

மத்தியானத்தில் கடைசிமூச்சு

விட்டார்.

III

தனிச்சிதை மறந்து

ஆதுரம் பொங்கும்

நாவிதன் வெட்டியான்

அழுகை துறந்து

துஷ்டி கழுவிவிட

காத்து நிற்கும்

ஆறு மறந்து

பட்டணக்கரையில்

தகரக் கொட்டடியில்

எரிந்தார் சித்தப்பா.

ஹம்பி கவிதையில் இறந்த காலத்தின் பிரதிநிதியான ஒரு இடத்தை நிகழ்காலத்தில் பொருத்திப் பார்க்க முனைந்த கவிஞர், இந்தக் கவிதையில் நவீன காலத்திலேயே இறந்த காலத்தவர் என்று நம்பப்படும் சித்தப்பாவைப் பொருத்திப் பார்க்க முனைவதன் மூலம், முதல் கவிதை தோற்றுவித்த மயக்கத்தைத் தெளிய வைக்கிறார். அழகு மிளிர சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்த ஹம்பிக்கும் இன்றைய சிதைந்த ஹம்பிக்கும் இடையில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் இருக்கக் கூடுமானால், இன்றைய ஒற்றை நவீன வாழ்க்கைகுள்ளேயே இரண்டு விதமான காலங்கள் உருவாகிவிட்ட முரணை என்னவென்று சொல்வது?

அதே போல, நிகழ்காலத்து யதார்த்தத்தின் மீதும் ஒரு மயக்கத்தைப் படர விடுகிறார் யுவன் ‘பிற்பகல் தூக்கம்’ என்ற இந்தக் கவிதையில்.

உறக்கத்தின் மின் அலைகள்

என் அங்கங்களைப்

போர்த்தி மூடும்போது

அறையின் சுவர்கள் பிரித்

தெடுக்கப்படுகின்றன.

ஜன்னல் கட்டையில்

சிட் சிட் டென வாலடித்த அணில்

வெளிறிக்கிடக்கும் விண்மீனின்

அருகில் சென்று அமர்கிறது.

கட்டிலோடு சேர்த்து

உருவப்படுகிறது அறையின் தரை.

உருவுவதற்கு உடைவாளும்

காட்டுவதற்கு மறு கன்னமும்

அவசியப்படாத இருள்வெளியின்

யாத்ரீகனாகிறேன்.

முழங்கால்ச்சிப்பியின் பத்திரம்

வலியுறுத்தின கட்டில் முனைக்கும்

அந்தகார வெளிக்குமாக

இழுத்துக் கட்டப்பட்ட

சருமத்தின்மேல் இடையறாது

பட்டுப்பட்டு விலகுகிறது மின்

விசிறிக் காற்று

சாதாரண மதியத் தூக்கத்தை, ‘கட்டில் முனைக்கும் அந்தகார வெளிக்குமாக இழுத்துக் கட்டப்பட்ட சருமம்’ என்ற படிமம் மூலம், மதியத் தூக்கக் கனவு போன்றதொரு பிரமையை நம்மில் ஏற்படுத்துவிடுகிறார் யுவன். ஜன்னல் கட்டையில் இருக்கும் அணில் விண்மீனின் அருகில் சென்று அமரும் மயக்கத்தை மதியத் தூக்கத்தினால்தானே அளிக்க இயலும்.

  • எளிமையின் அழகு

எம்.யுவனின் கவிதைகள் வாசகரை உடனடியாகக் கவர்வது, அதன் எளிமையின் அழகினால்தான் எனலாம். மிரட்டக்கூடிய சொற்சேர்க்கைகளோ, சொற்பிரயோகங்களோ, மொழித் திருகல்களோ இல்லாமல், தனது தூய எளிமையினாலேயே தன்னைத் தக்கவைத்துக்கொண்டும், தகவமைத்துக்கொண்டும் வரும் கவிதைகள் இவருடையவை. அதன் எளிமையின் மூலம் அவர் சுட்டுவது மற்றுமொரு எளிய விஷயத்தை அல்ல என்பதே முக்கியமான வேறுபாடு.

முட்டை ஓட்டின் விரிசல் வழி

நீளும் பிஞ்சு அலகுக்கு

முதல் உணவாய்க் கிடைக்கும்

ஒரு துளி ஆகாயம்

இக்கவிதை மிக எளிமையானது. ஆனால், பிஞ்சு அலகுக்கு முதல் உணவாகக் கிடைப்பது சாதாரணமான உணவல்ல. ஒரு துளி ஆகாயம். ஒரு துளி ஆகாயம் உள்ளே வந்துவிட்டபின் இது கவிதையாகி விடுகிறது. அதே சமயம், தனக்கு மிகவும் பழக்கபட்ட அர்த்த தலைகீழாக்கத்தையும் இதேபோன்ற எளிமையான வரிகளின் மூலம் யுவனால் செய்துகாட்ட முடிகிறது. வானமும் கடலும் தங்கள் அர்த்தங்களை இடமாற்றிக் கொண்ட அதிசயத்தை அடுத்த கவிதையில் காணலாம்.

சமுத்திரமாய் விரிந்திருக்கிறது வானம்

வான் போலப் பரந்திருக்கிறது கடல்

இதன் சாயலில் அது

அதன் சாயையில் இது

சாயல் இல்லை நிஜம்

என்று நம்பும் ஒரு கணத்தில்

மீன்கள் பறக்கின்றன

வல்லூறுகள் நீருள் துழைகின்றன

ஆகாயத்தின் நிலைப்பரப்பில்

வெள்ளலைகள் புரண்டு மறிகின்றன

சமுத்திரமும் வானமும் ஒன்றையொன்று பிரதிபலித்துக் கொள்ளும் ஆடிகள் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி, ஒரு கணத்தில், மீன்களை பறக்கவைத்து, வல்லூறுகளை நீருக்குள் நீந்த விட்டிருக்கிறார் கவிஞர். ‘ஆகாயத்தின் நிலைப்பரப்பில் வெள்ளலைகள் புரண்டு மறிகின்றன’ என்பதை வாசிக்கையில் மனம் சிறிது அஞ்சத்தான் செய்கிறது. இதே அச்சத்தோடு அவரது அடுத்த சில வரிகளை வாசிக்கும்போது மனம் அதனையுமறியாமல் ஆமோதிக்கிறது.

என் உணர்கொம்புகள் அதிக

நீளமில்லை

ஓரங்குலம்தான்.

பூமிப் பந்தின் விட்டத்துக்கு வெளியே

ஓரங்குலம்

சில கவிதைகளில் கவிஞரது முடிவுகளை வெளிப்படையாகவே அறிவித்திருப்பது கவிதைக்கு பலவீனமாக முடியுமோ என்ற ஒரு எண்ணமும் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்த அழகிய கவிதையில், மனிதனின் உயிர் மாத்திரம் உடம்புக்கு அப்பால் என்ற முடிவை கவிதைக்குள்ளேயே அறிவித்திருப்பது, கவிதையை ஒருவகையில் கீழிறக்குகிறது என்றே கருதத் தோன்றுகிறது. அதே சமயம், சொல்லிய விதத்தில் அழகிய கவிதையாகவும் மலர்ந்து நிற்கிறது.

தாத்தாவின் உயிர்

வெற்றிலை சீவலில் இருந்தது. அவர்

சொன்ன கதையின் மந்திரவாதி உயிர்

ஏழு கடல் ஏழு மலை தாண்டிப் பறக்கும்

கிளியின் உடம்பில். பாட்டியின் உயிர்

தங்க நகைகளில். தாய்வழித்

தாத்தாவுக்குத் தாசிகள் மீது. தாய்வழிப்

பாட்டிக்கு சுலோகங்கள் மீது. எனக்கு

கொஞ்ச நாள் சிகரெட்டில். அப்புறம்

புத்தகங்களில். என் மகனுக்குக்

கிரிக்கெட்டில். மகளுக்கு அலைபேசியில்.

மனைவிக்கு எங்களை ஆளாக்குவதில்.

ஊரில் உள்ள உயிர்களெல்லாம்

உடம்புக்குள். மனித உயிர் மாத்திரம்

உடம்புக்கு அப்பால்.

இதே போல எழுதப்பட்ட இன்னொரு கவிதையையும் சுட்டலாம்.

வண்ணம்

பிரிகையின் நிறங்கள்

புள்ளி பதித்த

வெள்ளைச் சிறகுடன்

ஜன்னலில் இருந்தது

அந்தப் பூச்சி.

பாறையை இளக்கி

நீளும் தளிரென

விரல்கள் நீள

ரேஷனில் ஜீனி

இன்னைக்கி’ என்று கூவிப்

பறந்தது பூச்சி.

இக்கவிதையில், வெள்ளைச் சிறகுடன் உள்ள ஒரு பூச்சியை முழுவதுமாக ரசிக்க முடியாமல், கவிஞனுக்குள் உள்ள லௌகீகவாதி வெளிவந்துவிடுகிறான். உடனே, வெள்ளைப் பூச்சி, ரேஷன் ஜீனியை நினைவுபடுத்தி விடுகிறது. இப்படித்தான் இருக்கிறது நடுத்தர வர்க்கத்து மனிதனின் அன்றாடம் என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது இக்கவிதை. இக்கவிதையில், கவிஞன் எந்த முடிவையும் நேரடியாகச் சொல்லவில்லை, ஆனாலும், அதன் அர்த்தம் வாசகனுக்குள் சென்று சேர்ந்து விடுகிறது.

எம்.யுவனின் கவிதைகள் வாழ்க்கையையும் மனிதர்களையும் விளையாட்டாகப் பார்க்கத் துவங்கி, மெல்ல மெல்ல மனிதர்களின் துயரங்களையும் சிக்கல்களையும் தீவிரமாகவே ஆராயத் துவங்கி, பிறகு அதனையும் தன்னுடைய விளையாட்டின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டு நகரத் துவங்குகிறது. ஒரு கோணத்தில் பார்க்கையில், எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியுமா என்று பார்க்கிறது, துல்லியத்துக்கு முயலும்தோறும் இலக்கை விட்டு நகர்ந்து கொண்டேயிருக்கும் கவிதைகள், துல்லியத்தன்மையைக் கைவிட்டு மனம் போன போக்கில் வார்த்தைகளைப் பின் தொடரச் செய்கையில், இலக்கை அநாயசமாக தைத்து விடுகின்றன. அவரது ஆரம்ப காலக் கவிதைகளிலுள்ள ஒருவித கச்சிதத் தன்மையைக் கைவிட்டு அவரது பிற்காலக் கவிதைகள் மேலும் பெரிய விஷயங்களை நோக்கி நகர்வதை நான் இவ்விதமாகவே உள்வாங்கிக் கொள்கிறேன். ஜெயமோகனின் வெண்முரசு வரிசை நாவல்களில் ஒன்றான கிராதம் நாவலில், அர்ச்சுனன் திசைத் தேவர்களையெல்லாம் வென்று பல்வேறு ஆயுதங்களைப் பரிசாக வென்று வருவான், இறுதியில் சிவனிடம் இருந்து பாசுபதம் பெறுவது மட்டுமே எஞ்சியிருக்கிறது. வேடனாக வந்து அர்ச்சுனனை வெல்லும் சிவபெருமான், அர்ச்சுனன் கையில் ஒரு கூழாங்கல்லைக் கொடுப்பார். ஆம். கூழாங்கல்தான் பாசுபதம். பாசுபதம் என்றதுமே பெரிதாக ஒன்றைத்தானே மனித மனம் எதிர்பார்க்கிறது. ஆனால், தெய்வங்கள் கேட்கின்றன, ஒரு கூழாங்கல் ஏன் பாசுபதமாகக் கூடாது?’

எம். யுவனின் கவிதைகளையும் அவ்வகைக் கூழாங்கற்கள் என்றே சொல்வேன். அவை நாம் நினைப்பது போலச் சாதாரணமானவையல்ல. ஈசன் மூலமாக அர்ச்சுனனின் உள்ளங்கைக்குள் பொதியப்பெற்ற கூழாங்கல். அந்தக் கூழாங்கல்லின் குளிர்ச்சியும், இனிமையும், கதகதப்பும், என்றும் இருக்கும். மலைகளுக்குக் கூட அழிவுண்டு. கூழாங்கற்களுக்கு அழிவென்பதேயில்லைதானே.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...