தனியனின் பெருவெளி

புராதனக் கோயில் விமானத்தில்
பன்னெடுங்காலமாய் ஒட்டிக்
குந்தி வெளிறிய புறா
ஏனென்றே தெரியாமல்
பறந்து செல்ல முனைந்தது.
எண்ணற்ற மின்னல்களை
இடிகளை பொழியும் தாரைகளை
ஓயாமல் உரசும் காலத்தை
தாண்டிவந்தபோது இல்லாத
அவசரம் இன்று ஏனோ.
கணக்கற்ற
தூதுப் புறாக்கள்
பந்தயப் புறாக்கள்
காதல் புறாக்கள்
பறந்து கடந்த வானம்
மேகத் துணுக்கும் இன்றி
வெறிச்சிட்டு இருந்ததுவோ
கோபுரத்தை நீங்காது
அழுத்தி வைத்த விசையேதான்
மண்ணை நோக்கி
ஈர்த்ததுவோ,
கீழ் நோக்கி உடல்
இழுபடும் அதே வேகத்தில்
உயரத் துடித்த ஆன்மாவின்
உந்துதலோ
காலங்காலமாய் ஒடுங்கி
விரிய மறுத்த இறக்கைகளை
மீறி
மேல்நோக்கி எழும்பி
அல்லாடி அல்லாடி
மெல்ல மெல்ல இறங்கியது
மிகச் சில கணங்கள்
தவித்ததுபோல் தயங்கியபின்
தரையில் மோதித்
திப்பிகளானது
சுதைப் புறா.
ஒற்றைச் சாட்சியாய்
நின்றிருந்தேன் –
கட்டற்றுத் திறந்திருந்த
கோவில் திடலில்
மட்டற்று நான் நிரம்புவதை
தீனமாய் உணர்ந்தவாறு.

ஓலைச்சுவடி என்ற இணைய இதழில் 15 நவம்பர் 2021 வெளியான யுவனின் இந்தக் கவிதை தரையை நோக்கி விழுந்து சிதறும் ஒரு சுதைப் புறாவைப் பற்றியது.

இக்கவிதையின் ஒவ்வொரு சொல்லும் புறா கீழ்நோக்கி விழும் சமயத்தில் மேல் நோக்கிப் பறக்கும் விசையைக் காட்டுகிறது. காலத்தை முன்னோக்கி செலுத்தி, விசையில் கீழே இழுத்து, நிறுத்திவைத்து, தன் இருப்பைத் திடல் முழுதும் விரித்தெடுக்கிறது.

காலம் அற்ற ஒரு பெருவழியில்தான் ‘’பறக்கும்” அனுபவம் கிடைக்கிறது. இந்த அனுபவத்தைக் கவிதை மட்டுமே கொடுக்க முடியும்.

தொடர்புடைய தொடர்பற்ற மன அடுக்குகளின் வெளியில் கவிதை பிரவேசிக்கும்போது, தாமரை இலைதோறும் தொட்டும் தொடாமலும் தத்திப் பறக்கும் தட்டான் பூச்சிபோல கவிதை பறக்கத் தொடங்குகிறது.

பறத்தல் என்பது இங்கே விண்ணை நோக்கிய பறத்தல் அல்ல.
எம் யுவனின் மொழியில் சொல்வதென்றால், ஒரு வகையில் அது விண்ணை நோக்கிப் பறப்பதும்தான். உள்ளுக்குள்ளே, மேலே மேலே பறப்பது.

அகம், புறம், நீதி , பக்தி, காப்பியம், காவியம், நாடகம், வாழ்த்து, புரட்சி, விடுதலை, மறுமலர்ச்சி, என புறவயமாக ஓங்கி ஒலித்த கவிதையின் குரல், தனது நாற்காலியை அகவயமாக திருப்பி உள்முகமாக, மெதுவாக, சில சமயங்களில் மௌனமாக்கூட ஒலிக்க தொடங்கியதே நவீன கவிதை.

நவீன கவிதையை இந்தக் குரலை மென்மையாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் மனதுக்குள் கொண்டு செல்கிறார் யுவன்.

சுருள்
ஞாபகத்தின் நிலவறையில்
சிதறிக் கிடக்கும்
தானிய மணிகள்
உனதுமல்ல
எனதுமல்ல.
தனதுமற்ற
தானியத்தைக் கொறித்து
நகரும் பறவையின்
நிழல்
படர்கிறது ஆகாயத்தில்.
ஆகாயம்
கருவை மூடிய உறைக்கும்
இறுகிய ஓட்டுக்குமான
இடைவெளியில்
சுருண்டு கிடக்கிறது.

சம்பவத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் சிறுகதை என்பதுபோல, சம்பவத்தின் சாட்சியே நவீன கவிதை என கூறவும் முடியும். அது காலத்தில் பின்னோக்கியோ, முன்னோக்கியோ கூடச் செயல்படலாம் ஆனால் அது நிகழ்காலத்தின் இருப்பை உணர்த்தத் தவறியதில்லை.

அந்தச் சதுக்கத்தில்
….
இதோ,
தலை இருந்த இடத்தில்
துளை யிருக்க
தண்டவாளத்தருகில்
கிடக்கும் உடலைப் பார்த்தபடி
ஏதும் செய்ய இயலாதவர்களைச்
சுமந்து போய்ப்
போய் வருகின்றன
மின்சார ரயில்கள்.

கவிதை ஒருவரது அனுபவங்களை கோர்த்துக் காட்டும். ஒரு வாசிப்பில் இருந்து மற்றொரு வாசிப்புக்கு இட்டுச் செல்லும். யுவனின் பல கவிதைகள் அத்தகையவை.

தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே
தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்
தொலைந்ததின் ரூபம்
நிறம் மனம் எதுவும்
ஞாபகமில்லை.
மழையில் நனைந்த பறவையின்
ஈரச் சீரகாய் உதறித் துடிக்கும்
மனதுக்கு
தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை
எனக்கோ பயமாகயிருக்கிறது
தேடியது கிடைத்த பின்னும்
கிடைத்தது அறியாமல்
தேடித் தொலைப்பேனோ என்று

இந்தக் கவிதையை வாசிக்கும் நகுலனின் பல கவிதைகள் நினைவுக்கு வரும்.

அதேபோல், நொறுங்கல்-II என்ற எம் யுவனின் கவிதையை வாசிக்கையில் தேவ தேவனின் கூழாங்கல் கவிதை வாசிக்க வேண்டும். இரண்டும் வாசிப்பும் சேர்ந்து வாழ்வின் அனுபவத்தை தடவிப் பார்க்கும் புதியதொரு அனுபவத்தைத் தரும்.

பொதுவாக ஒரு கவிதையில் இருந்து மற்றக் கவிதைகளுக்குச் செல்ல முடிவும் அவற்றில் வாழ்வின் அனுபவங்களைத் தொகுத்து ரசிக்க முடிவதும் ஒரு கவிதை தரும் சிறந்த அனுபவம் எனலாம்.

கவிதை உருவாக்கும் நினைவெழுச்சிகள் அந்தப் பேசுபொருளுடன்.
தொடர்புள்ள சிந்தனைகள் எல்லாமே கவிதையை அணுகுவதற்கான நுட்பமான வழிகளை உருவாக்குகின்றன

யுவனுக்கு தனித்த குரல் உண்டு, ஆனால் யுவனின் கவிதைகளில் யுவன் மட்டுமே அல்ல அவரின் கவிதைகள் எப்போதும் சாட்சியாக நிற்கின்றன, கையறு நிலையோ அவ நம்பிக்கையோ முன்வைக்கவில்லை. எம் யுவன், வாசகர்களை நோக்கிக் கடத்தும் கவிதைகள், அனுபவத்தின் வழியாகவும், நுண்ணுணர்வின் வழியாகவும். ஒலிப்பவை.

இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் தனிமை என்பது எப்படி ஒரு சிறு விடுபடலையும் ஏகாந்தத்தையும் அளிக்கிறது என்பதையும் யுவன் காட்சிப்படுத்துகிறார்.

தனிமை- இந்த முறை ஆட்டுக் குட்டிகளோடு
அடையாளமற்றவனாய்
நடக்கிறேன்.

கனத்த தூறலை
எதிர்வரும் மனிதர்களை
அலட்சியம் செய்து
கடக்கின்றனர்
இறுக்க முகங்களுடன்.

விகாரமாய் விழுந்து கிடக்கும்
அரக்கியின் தொடையென
நீண்டு பரந்த தெருவில்
மழைக்குச் சுவரண்டன
ஆட்டுக் குட்டிகளுடன்
தனியனாய்.

எம். யுவனின் கவிதைகளில் தொடர்ந்து ஒரு சிறுவனை நாம் பார்க்க முடிகிறது. அவன் ரயில் பூச்சியியல் தொடங்கி உலகம் முழுவதையும் உயித்து அறிந்து விடமுயல்கிறான். கதைசொல்லிகளின் கதைகளில் இருந்து எழுந்து வரும் இந்தச் சிறுவன் எல்லாக் காலகட்டக் கவிதைகளிலும் சிறுவனாகவே இருக்கிறான். ஒரு சிறுவனுக்குத்தீனியிட்டு வளர்ப்பது அவ்வளவு சுலபமான காரியம்

எம். யுவனின் கவிதைகள் பெரும்பாலும் கால தேச வருத்தமானமற்றது, அரசியலற்றது, குறிப்பிட்ட நிலமற்றது, இந்தத் தன்மைகளே இவரின் கவிதைகளுக்கு வலு சேர்க்கிறது. ருசிகரம் என்ற கவிதையில் கன்னிவெடி என்ற ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட நிலத்தை காட்டுவதாக தோன்றினாலும் இது அன்றாடத்தின் அலைகழிப்பை சொல்லும் கவிதையாகவே பார்க்கிறேன்.

ருசிகரம்

யாரோ
யாரையோ குறிவைத்துப்
புதைத்த கண்ணி
வெடிகளின் பிராந்தியத்தில்
தத்தித் தத்தி
உயிர் தெறிக்க ஓடுவதன்றி
பிறிதொன்றும் அறிந்திலேன்
நிழல்பட்டுச் சிதறியவை
உடல்பட்டும் வெடிக்காதி
ருந்தவை உள்ளுணர்வால்
தெரிந்தவை உற்றவரைக்
கொன்றவை
மரணத்தில் பதிந்து
வாழ்வுக்கு மீளும் வலது
கால் குதிரைச் சதையின்
வில்லைக் கருமச்சம் என்
அங்க அடையாளமெனப்
பள்ளிச் சான்றிதழில்
பாஸ்போட்டில்.
பயம் தின்று பசியடங்காது
ஓடுதலே நானானேன்
நான் நிற்க எதிர்த்
திசையில்
தான் விரையும் தரையில்
உருண்டோடி வருகின்றன
மரங்கள் எரிமலைகள்
பனிப்பாறைகள் மற்றும்
கிழமைகள்
பருவம் தோறும் உருமாறும்
மரங்களின்
கிளைதாவிக் கிளைதாவி
தன்னுயிர் பாலிக்கும்
குரங்குதிர்க்கும்
பழம்தான்
என்ன ருசி!

எம் யுவனின் கவிதைகள் அனுபவத்தில் இணைத்துக் கொள்ள ஏதுவானது, காட்சிக்கு எளியோன் என்று ஒரு வாக்கியம் உண்டு, அது போல எளிய சொற்களையும் எளிய காட்சிகளையும் கொண்டது. வாமனாய் வந்து விஸ்வரூபம் கொண்ட உலகளந்தானை போல் சிடுக்கற்ற சின்னஞ்சிறிய சொற்கள், தடையற்று உருண்டோம் காட்சி விஸ்தரிப்புகள் கொண்டது. பொதுத் தன்மைகள் நிறைந்த இவரது கவிதைகள் புலம் பெயர்ந்து வாழும் இளைய தலைமுறைக்கு ஏற்றது. குறிப்பு, உருமாற்றம் இந்த இரண்டு கவிதைகள் இடம்பெறாத கவிதை பயிலரங்குகளே இல்லை என்று சொல்லலாம். நுட்பமனங்கொண்ட, செவ்வியல் படைப்புகளை ஆங்கிலத்தில் படிக்கும் இளையோருக் சொல்லில் எளிய இந்த கவிதைகள் தன்னால் சரளமாக வாசிக்க முடியும், கவிதைகளை அறிய முடியும் என்ற தன்னம்பிக்கையை அளிக்கின்றன.

நடக்க நடக்க திறக்கிறது
பாதை அங்கங்கே
சிந்தி கிடக்கும் அளவில்
சிறிதும் பெரியதுமான சொற்கள்
பாதத் தோலில் கீறிவிடாமல்
பதவாகமாக நடக்கிறேன்.
கல்லுக்குக் கல் என்று
யாரோ சூட்டிய பெயரால்
குறிப்பிடுவதற்கு
சிலசமயங்களில் வசதியாக
பலசமயங்களில் கூச்சமாக
இருக்கிறது.
நடக்க நடக்கத்தான் திறக்கிறது
பாதை
ஆனால்,
எனக்கு முன்னால் பல்லாயிரம் காதம்
எனக்கு அப்பால் முடிவற்று
பாதை நீள்வதாகச் சொல்கிறார்கள்.
அது வெறும் அனுமானம்தான்
வெறும்
அனுமானம்.

இந்த கவிதைக்கு வேறு வேறு தலைப்புகளை கொடுத்துக் கொடுத்துப் பார்க்கும்போது கவிதை குறித்த புரிதல் விரிந்துகொண்டே செல்லும்.

ஓடிவரும் பனிப்பாறை போல எல்லாவற்றையும் மிச்சமின்றி தனதாக்கி உருமாறுவதே இவரின் தனித்த பாணி எனலாம்.

மாறுதல்

குடுவைக்குள் நீந்தின மீனைப்
பார்த்த
போது
நெடுநதுயில் நீங்கி
இறங்கி வந்தவன்
குடுவைக்குள் நீந்தும்
மீனானேன்
மீன் உண்ட புழுவாகி
உட்புகுந்த
போது
மைதானமென விரிந்த
மீன் உள்
பசுந்தரையில்
சேணமின்றித் திரியும்
குதிரையாகி
புல் நசுங்க ஓடி
புல்லைப் புசித்து
போது
புல்லானேன்
காய்களுக்குப் பதிலாக்க
கட்டடங்கள் நகரும்
விநோத சதுரங்கத்தில்
நகராத காயாக
உணர்வுற்ற
போது
சமுத்திரத்தின்
எதிர்க் கரையில்
நின்ற வாறி
ருந்தது நான்
ஏறி வந்த
கப்பல்.

நிலையாமை போதித்த நாலடியாரில் தொடங்கி எத்தனையோ கவிஞர்களை நாம் கண்டுவிட்டோம் ஈராயிரம் ஆண்டுகள் கைமாறி வந்த பந்தம் எம் யுவன் கைக்கு வந்தது. இந்தக் கவிதைப் பெருவெளியில் யுவன் காட்டும் துண்டு வானம், இதோ இதோ என முடிவிலியான வானத்தை நோக்கி கூட்டிச் செல்பவை.

இப்போது பறவை

தூங்கும்போதா
விழித்திருக்கும் போதுதானா
தெரியவில்லை.
விலாவுக்கொன்றாய் முளைத்துவிட்டன
இரண்டு சிறகுகள்.
பிறவிப் பறவை இல்லை நான்
என்பதால்
பறப்பதற்கு முதலில் பயமாய் இருந்தது.
பின்பு விசித்திரமாகி,
பழகியும் விட்டது.
கருநிற முட்டைகளாய் மனித்த
தலைகளைப் பார்த்தவண்ணம்
பறத்தலே வாழ்வாக ஆனது.
ஓடு சிதையாமல் முட்டைகள்
பொறிக்கும் குஞ்சுகளைப்
பார்த்தும் புசித்தும் பறக்கிறேன்.
ஒருக்களித்துப் படுக்கச் சிரமம்தான்.
ஆனாலும்.
கண் இமையின் உட்புறம் ஒட்டிய
கனவின் மிச்சத்தைக்
கழுவித்துடைக்க நீ தேடி
அலைய வெகு அனுகூலம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...