அன்றைய இரவு, இரவுணவு முடித்துவிட்டு நானும் என் மனைவியும் அடுக்களையை சுத்தம் செய்து கொண்டிருந்தோம். அவள் சிங்க்கில் பாத்திரப்பண்டங்களைத் துலக்கிக்கொண்டிருந்தாள். நான் மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். மொழுகி வைத்த மேடையை எந்தத் துணியால் துடைக்க வேண்டும் என்று அவளிடம் கேட்டபோது, பால்கானியில் காயும் நீல கலர் கைப்பிடித்துணி அதை எடுத்துக்கோ என்றாள். நான் பால்கனிக்கு சென்றேன். அப்படி ஒரு துணியே இல்லை. இன்னும் சில இடங்களில் தேடிப் பார்த்தேன். என் கண்ணில் தட்டுப்படவே இல்லை. அவளிடம் இதனைச் சொன்னேன். எல்லாத்துக்கும் நானே வரணும் என்றாள் அலுத்துக்கொண்டபடி. நான் முதலில் சென்ற பால்கனிக்கே சென்றாள். அங்குக் காய்ந்து கொண்டிருந்த ஒரு துணியை கையில் தந்தாள். பார்த்தால், அது பச்சை நிறத்தில் இருந்தது. இது தான் நீ சொன்ன நீலக் கலரா என்றேன். ஆமா நீலக் கலர் தான் இது என்றாள். இது பச்சைக் கலர் என்றேன். இல்லை நீலக் கலர் தான் என்றாள். அவள் வேண்டுமென்றே விளையாடுகிறாளா? இந்த சந்தர்ப்பத்தில் அப்படி விளையாடும் அவசியம் ஏதும் இருக்கவில்லையே? அவள் கண்ணில் ஏதும் கோளாறா? அது எதுவோ என் பாட்டியின் பழைய புடவைத் துணி. என் அம்மா கிழித்து இப்படி கைப்பிடித்துணி ஆக்கிவிட்டாள். இந்த நிற பேதத்தை எப்படி புரிந்து கொள்வது? ஒரு துணி என் கண்ணுக்கு பச்சையாகவும் என் மனைவியின் கண்ணுக்கு நீலமாகவும் தெரிவதெப்படி? புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது இல்லையா?
பத்தில் ஒருவருக்கு இப்படியொரு blue-green colorblindness இருக்கும் என்பதை நான் பிறகு தேடிப் படித்துத் தெரிந்து கொண்டேன். இந்தக் குழப்பம் எங்களுக்கு எல்லா நீலத்துக்கும் – பச்சைக்கும் நிகழாது. ஆனால் அன்று அந்த பாட்டித்துணியில் நிகழ்ந்திருக்கிறது. நிகழ வேண்டுமென்று இருந்திருக்கிறது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒருவேளை என் கண்ணில் அந்தக் குறைபாடு இருக்கலாம் அல்லது அவள் கண்ணில் இருக்கலாம். சுலபமாக புறந்தள்ளக்கூடிய சிறு விஷயம் தான். இருந்தும் இதன் மூலம் எங்கள் இருவரின் உலகில் உள்ள ஒரு வரம்பு தெரியவருகிறது. இப்படியொரு நிறக்குருடு பற்றி அறியாத வரை, இந்தக் குழப்பம் வாழ்க்கை முழுக்க சந்தேகத்திற்குரிய மர்மமாகவே தான் எஞ்சும். இந்தச் சந்தேகம் புலன் உணர்வால் உருவாவது. நாம் அத்தனை நாள் நம்பியிருந்ததை தலைகீழ் ஆக்குவது. ஏதோ ஒரு அறிவியல் விளக்கம் இருப்பதால் மனம் சமாதானமடைந்து அனுசரணையாக நடந்துகொள்ள முடிகிறது.
நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் இயற்பியல் ஆசிரியர் அன்று alternating current பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். வகுப்பறைக்கு மேலே எரிந்து கொண்டிருந்த குழல் விளக்கைக் காட்டி, இதில் பாயும் AC கரண்டுக்கு frequency 50 hertz. அதாவது நொடிக்கு 50 தடவை அணைந்தணைந்து எரிகிறது அது என்றார். அவர் அத்தோடு முடித்துக்கொண்டு அடுத்ததற்கு நகர்ந்திருக்கலாம். ஆனால் எங்களிடம் அது அணைந்து அணைந்து எரிவதை உங்களால் உணர முடிகிறதா? என்று கேட்டார். எங்களுக்கு ஆச்சரியம் தான். எங்களை இங்கு அமர்த்தி எங்கள் பாடங்களை இவ்வளவு நாட்களாய் படிக்க வைக்கிற இந்த வெளிச்சம் அணைந்து அணைந்து எரிகிறது என்றால் எப்படி நம்புவது? அவர் சொன்னார், உங்கள் கண்ணுக்கு அந்த அணைதல் புலப்படுவதில்லை. அது கணத்துக்கும் குறைவான காலத்தில் நடந்தேறுவதால். உங்கள் கண் கணத்தில் இருந்துதான் எல்லாவற்றையும் துவக்குகிறது. அந்த ஒரு கணத்தையும் நூறாக்கி எரிகிறது இந்த குழல் விளக்கு. சாதாரண இந்த குழல் விளக்குக்குள் இயங்கப்பெறும் காலமும் அதன் வெளியே, இங்கே நாம் இயங்கப் பெறும் காலமும் வேறு வேறு என்றார்.
நான் திகைத்தேன். நாம் எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். உலகம் நம்மைப் பேண எப்படி எல்லாமோ வேடம் பூணிக் காட்டுகிறதே! நாம் கட்டுண்டிருக்கிறோம். வேறென்ன? அதான். மேலும் அறிவியலால் இதனை இப்படி விளக்க முடிந்ததால் சமாதானப்பட்டு கொள்ள வேண்டிய நிர்பந்தமும் வந்துவிடுகிறது.
போன மாதம் எப்போதோ அசோகமித்திரனின் ஒரு குறுங்கதையை வாசிக்க நேர்ந்தது. அதில் கதை சொல்லி தன் குழந்தைக்கு, ரி-க்-ஷா, ரி-க்-ஷா என்று சொல்லிக்கொடுப்பார். அது ரி-ஷ்-கா, ரி-ஷ்-கா என்று சொல்லிக்கொண்டிருக்கும். கடைசியில் அவரது மனைவி அவரை எதற்கோ கேட்கும் போது இவர் ரிக்ஷா என்று சொல்லப் போக, மனைவியின் காதில் ரிஷ்கா என்று விழுந்திருக்கும். இத்தனைக்கும் அவர் சரியாகத் தான் உச்சரித்திருப்பார். இப்படி ஒன்றை வைத்து குழந்தைகளின் உலகை புரிந்து கொள்வதாக அமைந்திருக்கும் கதை. ஒரு உலகம் இன்னொரு உலகத்தோடு முயங்கும் போது ஏற்படும் துணுக்குறல். பெரியவர்களின் உலகம் ஒரு குழந்தையின் உலகொடு முட்டி நிற்பது கதையாகியிருக்கும். இங்கும் அதே இருவேறு உலகங்கள்.
ரிக்ஷா ரிஷ்காவாக ஒருவர் காதில் விழ வேண்டும் என்றால் என்னவெல்லாம் சாத்தியப்பட வேண்டும்? அவர்களுக்கு இடையில் காற்று இருக்கிறது. காலம் இருக்கிறது. “க்” ஐ முந்திக்கொண்டு “ஷ்” வந்து சேர்ந்திருக்க வேண்டும் அல்லவா? காதில் வாங்குபவருக்கு, ‘ஷ்’ என்ற போது இருந்த காலம் முன்னே வந்து, ‘க்’ என்ற போது இருந்த காலம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இடையில் இருக்கும் காற்றே காலத்தை இப்படி குலைத்து போட்டுவிடுகிறது. இது ஒரு பார்வை. இந்தப் பார்வை இல்லையென்றால் கேட்பவர் வீம்புக்கென்றே பொய் சொன்னால் தான் உண்டு. வேறு சாத்தியமே இல்லை. இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். இதோ இப்போது இங்கே டைப் அடிக்கும்போது கூட ‘rickshaw’ என்பது முதலில் ‘ricskhaw’ என்று எழுதப்பட்டு திருத்தம் செய்யப்படுகிறது. என்ன செய்வது? மூளையில் அந்த வார்த்தை முதலில் உதித்தபோது இருந்த காலம் கைவிரல் இயங்கும் காலத்துடன் ஒத்திசையாமல், பிந்தி வந்து இப்படி பிசகிவிடுகிறது. மூளையில் உதிப்பதை அப்படியே கடத்தத் தவறி சரியாக தொடர்புறுத்த முடியாமல் போய்விடும் ஒரு வகை கவனப்பிசகு.
இது வரை நான் கூறியவற்றில், புலன் உணர்தலால் பிரிந்து நிற்கின்ற இரு வேறு உலகங்கள் வருகின்றன. அவ்விரு உலகங்களும் உரசும் இடத்தில் அது வரை நம்மை வழி நடத்திச் சென்ற உலகக் கூறுகள் பின் வாங்குகின்றன. அடிபட்டுப் போய்விடுகின்றன. அங்கே அவ்விடத்தில் நமக்கு ஏனோ, எதன் மூலமாகவோ ஒரு சமாதானம் தேவைப்படுகிறது. இலக்கியத்தில் இப்படி ஒரு இடைவெட்டுப் புள்ளியில் நின்று கொண்டு நம்மை சமாதானப்படுத்துபவராக யுவன் சந்திரசேகர் இருக்கிறார். அவருடைய கதை சொல்லும் முறை என்பது இத்தகைய இடைவெட்டும் புள்ளிகளில் அமைந்திருக்கும் யூகங்கள்தான் (conjectures). மொத்தமாக விளக்கிவிடவும் அதே கணம் முற்றாக விலக்கிவிடவும் முடியாத யூகங்கள் தான். இப்படியும் யூகித்து பார்க்கலாமே என்று குறுமுறுவலோடு சுட்டிக்காட்டுகிறார். வாசகனாய் இருந்து அப்படி யூகித்துப் பார்ப்பதில் உள்ளுக்குள் ஒரு ஓரத்தில் ஒரு சமாதானம் பிறக்கிறது.
‘குள்ளச்சித்தன் சரித்திரத்தில்’ ஓர் இடம். பழனியப்பன் பொன்னமராவதியில் அவரது நூலகத்தில் இருக்கிறார். அவரைத் தேடி காது கேளாத – அவருக்கு யாரென்றே தெரியாத – ஒருவன் வருகிறான். நேர்த்திக் கடனுக்காக அவர் கொடுக்கப்பட இருந்த தங்கத்தால் செய்த வேலை கோமியம் கொண்டு கழுவச் சொல்லி அவரை ஞாபகப்படுத்துகிறான். அவருக்கு அது சுத்தமாக ஞாபகமே இல்லை. கையோடு ஒரு கோமிய பாட்டிலையும் தந்துவிட்டுச் செல்கிறான். உன்னை யார் அனுப்பினார்கள் என்று வினவ, உங்களை திருவண்ணாமலையில் பார்த்தவர் தான் அனுப்பிவைத்தார் என்கிறான். பழனியப்பனுக்கு தலை சுத்தி விடுகிறது. தங்க வேலை நேர்த்திக்கடனாக கொடுக்கச் சொன்னவர் கரட்டுப்பட்டிக்காரர். ஆனால் பழனியப்பன் திருவண்ணாமலைக்காரரை பார்த்தது அதற்கு முன்னர் எப்போதோ. அப்படியிருக்க திருவண்ணாமலைகாரருக்கு இந்த வேல் விஷயம் எப்படித் தெரியும்? என்று அசருகிறார். அந்த வேலின் நதிமூலம் ரிஷிமூலம் தேடிச் சென்று அலசிப் பார்க்கிறார். இருந்தும் சமாதானமான பதில் கிட்டவில்லை. இந்தக் கால குழப்பத்தை எப்படி புரிந்துகொள்வது? எவரோ என்னை இப்படி பின் தொடர்ந்து எனக்கு இவ்வளவு நல்லது செய்கிறார்களே என்று யோசிக்கிறார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்க்கிறார். அங்கு ஒரு பருந்து சுற்றிக்கொண்டிருக்கிறது. அது ஒரு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அதாவது அந்த உயரத்தில் அதன் கண்ணுக்கு மொத்த பொன்னமராவதியுமே தெரிகின்றது. அது மொத்த பொன்னமராவதியையும் அங்கிருந்து நோட்டம் விடுகிறது. இது போலத் தான் என்னுடைய காலத்தையும் பட்டையாக மாற்றி எவரோ ஒருவர் நோட்டம் விடுகிறார், வேவு பார்க்கிறார் என்று பழனியப்பன் சமாதானபட்டுக்கொள்ளும் இடத்தில் எனக்கு புல்லரித்துவிட்டது.
இதில் ஆசிரியர் என்ன செய்கிறார்? இடத்தின், வெளியின் குணாம்சத்தை காலத்தின் மேல் போட்டுப் பார்க்கிறார். தூரத்தில் இருந்தால் பட்டையாக தெரியும் வெளியை காலத்துக்கு ஏற்றிச் சொல்கிறார். காலம் பட்டையாக நின்று செயல்படும் உலகம் ஒன்றும் இருக்கலாம் தானே என்கிறார்.
இப்படி நாம் அறிந்திருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக்கொண்டு அதன் தன்மையை அல்லது குணாம்சத்தை மாற்றி, இன்னொரு விஷயத்தின் மேல் போட்டுப்பார்க்கிறார். கலைத்துப்போடுகிறார் என்றே சொல்லலாம். (அந்த இன்னோரு விஷயமும் வெளியே இருப்பதில்லை. அதுவும் நாம் அறிந்த ஒன்றாகவே தான் இருக்கிறது)
காலமே இங்கு வா, இனி நீ வெளியின் குணத்தைக் கொண்டிருப்பாய்.
ஓசையே இங்கு வா, இனி வாசத்தின் குணத்தைக் கொண்டிருப்பாய்.
பார்வையே இங்கு வா, இனி நீ தொடுகையின் குணத்தைக் கொண்டிருப்பாய்.
இப்படி தீராத ஒரு விளையாட்டு நாவல் நெடுகிலும் விரவியிருக்கிறது. நான் “நமக்கு தெரிந்த, தெரிந்த” என்றே இதுவரையில் சொல்லிவருகிறேன் அல்லவா? அது ஏனென்றால், நமக்கு தெரிந்ததில் இருந்தே எடுத்து, அதன் அடிப்படை குணங்களை மட்டும் கலைத்துப் போட்டு மற்றொரு யதார்த்தத்தை, உலகை சமைக்கமுடிக்கிறது ஆசிரியரால். இதுவே ‘மாற்றுமெய்மை’ என்று நான் புரிந்துகொள்கிறேன்.
நாவலில் ஓரிடத்தில், திருவலஞ்சுழியின் கோயில் மணி ஒலிக்கப்படுகிறது. அப்போது அதில் இருந்து வரும் ரீங்காரம் முன்பே எப்போதோ முதன்முதலாக மணி அடிக்கப்பட்டிருந்த போது கோயிலின் மடிப்புகளில் வந்து ஒளிந்துகொண்டது, அதனை மறுபடியும் ஒலிக்கச் செய்யும் போது இப்படி எட்டிப் பார்க்கிறது என்கிறார். ஓசைக்கு ஒரு பதுங்கும் குணத்தை தந்துவிடுகிறார். அல்லது ஒரு முறை எழுந்த ஓசை காலத்தின் ஒழுக்கில் கரையாமல் அப்படியே ஸ்திதி கொண்டுவிட்டது போல ஒரு பிரமை ஏற்படுகிறது.
இன்னொரு இடத்தில் ஆத்திகத்தை, கடவுள் நம்பிக்கையை இடத்தின் குணத்துக்கு பொருத்திச் சொல்கிறார். அறையில் ஒரு நாற்காலி இருக்கிறது. நாற்காலி இருக்கும் இடத்தில் உட்கார எண்ணுகிறவனுக்கு நாற்காலியே இடைஞ்சலாகத் தெரியலாம். சிலருக்கு அந்த நாற்காலியுமே ஒரு இடம் தான் என்று கருதி அமர்ந்து பார்க்கத் தோணலாம். எப்படியும் அந்த ‘இடம்’ அமைந்துவிடுகிறது. அதுதான் நாத்திகர்களின் பிரச்சினையே என்கிறார்.
மேலும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் மனிதப் ப்ரக்ஞையைப் புகுத்திப் பார்க்கிறார். ஓரிடத்தில் ‘பறவைகள் அரசாள நேர்ந்தால் மனிதர்கள் காட்சிப் பொருளாய் சரணாலயத்தில் இருப்பார்கள்’ என்று பகடி செய்து ஒரு பாத்திர-தலைகீழாக்கத்தை (role-reversal play) நிகழ்த்துகிறார். இப்படி ஒரு பாத்திர-தலைகீழாக்கம் நிகழ்வதால் நாவலுக்கு ஒரு உள்ளிழுத்துக்கொள்ளும்தன்மை (inclusivity) பிறந்துவிடுகிறது. மனிதன் மட்டுமே இல்லை இங்கு என்று இடித்துரைத்து மற்றவையையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. நாவலின் குவிமையம் மனிதனில் இருந்து அகன்று சென்று பிற உயிர்களின் மேலும் கவிகிறது.
உதாரணமாக, நாவலில் கொட்டிக்கிடக்கும் இத்தகைய சித்தரிப்புகள்.
அவ்வளவு நேரமாக சலசலக்காமல் நின்றிருந்த அரச மரத்தின் ஒரு இலை சட்டென சலசலத்து காற்றின் இருப்பை தெரியப்படுத்துகிறது.
தன் வாயில் இருந்து வெளிவரும் எச்சிலில் தனக்கே ஒரு சிறையைக் கட்டிக்கொள்கிறது ஒரு சிலந்தி.
எவ்வளவு வேகமாகப் பறந்து சென்றாலும் கண்ட காட்சியை உரைய வைத்துவிடுகிறது இரண்டாகப் பிளந்த அந்த குருவியின் வால்.
நீளமும் அகலமும் அன்றி உயரத்தை தன் பிரக்ஞையில் கொள்ளாமலேயே ஊர்கிறது சாரைப்பாம்பு.
பேருந்தில் தன்னுடனேயே பயணித்து வந்து தனது நிறுத்தத்திலேயே கூட இறங்கி, பஸ்டாப் தள்ளுவண்டிக்கடையில் இருக்கும் பலாச்சுளையை மொய்க்கச் செல்லும் ஈக்கள்.
நெளிந்து கொண்டே கிடந்து, தன் அடிப்படை குணத்தில் இருந்து வழுவாமல், மீட்சியை தேடிக்கொண்டுவிடும் மண்புழு.
புலி, பென்குவின் இப்படி குள்ளச்சித்தரே எடுக்கும் சில அவதாரங்கள்.
மேலும் சிகப்பியின் கையில் ஏறும் எறும்பு இப்படித் தொடர்கிறது.
சிகப்பி எறும்பு மொய்க்கும் பலகாரத் தட்டை எடுத்து வரும் போது பழனியப்பனுக்கு தோன்றுகிறது. இந்த கரட்டுப்பட்டிக்காரர் சொல்வதெல்லாம் நமக்கு எப்படி புரியாதோ அதே போல தானே எறும்புகளுக்கும் சிகப்பியின் கை, இது கை என்று தெரியாது இல்லையா?
ஒரு உயர்திணைப் பொருளும் அஃறிணைப் பொருளும் ஒரே தராசில் நிறுத்தப்படுகிறது. இப்படி நிறுத்தப்படும்போது நம்மை அறியாமலேயே ஓர் ‘உயிர் மைய நோக்கு’ நம்மைச் சூழ்கிறது.
அவ்வளவு தானா? ‘உயிர் மைய நோக்கு’ என்று சொல்லி நிறுத்திக் கொண்டுவிடலாமா? இல்லை. அதுவும் குறுக்கும் பார்வை தான். உயிரில்லாத ஜடப் பொருட்களுக்கு (அ-உயிரிகளுக்கு) எதிரான அதிகாரத்தை அது ஏற்றிவைத்துவிடும். நாவலின் குவிமையம் இன்னும் விரிகிறது. நாவல், கடற்கரை மணலில் நம் காலில் மிதிபடும் ஒவ்வொரு மணல் துகளுக்கும் கழிவு நீரில் இருந்து ஆவியாகிப் பிரிந்து, கடலில் சேர்கின்ற ஒவ்வொரு நீர்த்துளிக்கும் கூட தனித்தனி சரித்திரம் உண்டு தனித்தனி சுதந்திரம் உண்டு என்று வாதாடுகிறது.
தன்னியல்பாகவே இப்படிப்பட்ட ஒரு கூட்டுப் பிரபஞ்சப் பார்வையில் பச்சாதாபம் பிறந்துவிடுகிறது. பெருங்கருணை (compassion) பெருக்கெடுக்கிறது. நாவல், இந்தப் பெருங்கருணைக்கான பாதையில் உதிரிமனிதர்களையும் விட்டுவைக்கவில்லை. கண் தெரியாதவர்கள் காது கேளாதவர்கள் போன்றவர்களையும் தன் போக்கில் இணைத்துக்கொள்கிறது. பழனியப்பன்-சிகப்பி தம்பதியினரின் திரியில் அவர்கள் ஒரு பார்வையில்லாதவரிடம் குறி கேட்பதும், ஒரு காது கேளாதவன் பழனியப்பனுக்கு கோமியம் பற்றி நினைவுபடுத்திப் போவதும் அதன் சான்று. பழனியப்பன் அந்தக் கண் தெரியாத குறிசொல்பவன் பற்றி செய்யதிடம் இப்படிக் குறிப்பிடுகிறார். அவனுக்கு கண்ணு தெரியலனாலும், அதுக்கும் சேத்து காதே கேட்டுக்குது. முன்பு சொன்னது போல பார்வையின் குணம் ஒலிக்கு ஏற்றி வைக்கப்படுகிறது. அவன் காதாலேயே உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
குள்ளச்சித்தன் சரித்திரத்தில், அதில் இடம்பெறும் கதை மாந்தர்களுக்கு பெருங்கருணை என்கிற அம்சம் குள்ளச்சித்தன் நிகழ்த்தும் அற்புதங்களால் (miracle) உணர்த்தப்படுகிறது. கால் ஊனத்தால் நடக்க கஷ்டப்படும் பெருமாளுக்கு சித்தனால் ஓட்டம் கால் கூடுகிறது. குழந்தை இல்லாத சென்னகேசவன் முதலியார் – ராமாமிர்தம்மாள் தம்பதியினருக்கு குழந்தைப் பேறு கிட்டுகிறது. அருந்தவத்துக்கு தவறாக பிறந்த குழந்தை கைமாற்றப்பட்டு அவள் மீண்டும் கன்னியாகிப் போகிறாள். மேலும், இன்னொரு இழையில் பழனியப்பன் – சிகப்பி தம்பதியினருக்கும் குழந்தைக் கலி தீர்த்துவைக்கப்படுகிறது.
இதில் அருந்தவம் – தாயாரம்மாள் சரடைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. தாயாரம்மாள் அருந்தவத்தின் வயிற்றில் தவறான முறையில் தோன்றிய கருவை நினைத்து உளம் குமைகிறாள். ஊராரின் கண்ணில் தன் பெண் பிள்ளையின் வயிற்று வீக்கம் தெரிந்துவிட்டதை எண்ணி வருத்தப்படுகிறாள். அப்போது சித்தன் அங்கே வருகிறார். அவர் பிறந்த குழந்தையை படப்பையில் வசிக்கும் முதலியார் தம்பதியினர் வீட்டுத் திண்ணையில் போட்டுவிடுகிறார். கூடவே அருந்தவத்தின் நினைப்பில் இருந்தும் அவர்கள் வாழ்கின்ற ஊர் மக்களின் நினைப்பில் இருந்தும் அருந்தவத்தின் அதற்கு முந்தைய பத்து மாத காலத்தின் நினைப்பை முற்றிலுமாக நீக்கிவிடுகிறார். குழந்தையை இடம் மாற்றிவிட்டு இப்போது காலத்தை அழித்தும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் சித்தன். ஆனால் தாயாரம்மாள் நினைப்பில் இருந்து மட்டும் அது அழியவில்லை. அதை எஞ்ச செய்துவிடுகிறார். அது ஏன் என்கிற கேள்விக்கு பிறகு பதில் தெரிகிறது. அந்த தாயாரம்மாள் அவளது முன் ஜென்மத்தில் பாடலிபுத்திரத்தில் யானைப் பாகன் ஒருவனுடன் சம்போகித்து கரு உண்டாகி, அந்தக் கருவை கலைத்திருக்கிறாள். அங்கு தங்க மறுத்த கரு இந்த ஜென்மத்தில் அவளது மகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. தாயாரம்மாளுக்கு மட்டும் அந்த நினைப்பை எஞ்ச செய்துவிடுவதில் சித்தரின் ஒரு மெல்லிய குரூரம் தலைப்படுகிறது. முன்வினைப்பயன் என்கிற சுமை அவ்வளவு எளிதாக உதறக் கூடியதில்லையா என்ற கேள்வி எழுகிறது. தன் கைமாறி சென்றுவிட்ட பின்னரும் தாயாரம்மாளுக்கு தற்செயலாக காணக் கிடைக்கும் அவள் பெயரனிடத்தில் நீங்காத அன்பு அவள் முன்வினையில் செய்த பாவத்தின் எச்சமாக திரிபடைகிறது. அது வரை அவ்வளவு சீக்கிரமாக குப்பிக்குள் அடக்க முடியாத பிரதியாக இருந்த நாவல் சட்டென திசைமாறி அந்த இடத்தில் குப்பிக்குள் அடைபட்டு விட்டதாக எண்ணம் எழுந்தது. முன்வினைப்பயனை கால வெளி மாற்றத்தால் கலைத்துப்போட்டு விடமுடியாதா? மறுபிறவி கலைத்துப் போடப்பட்டிருக்கிறதே.
மேலும் நாவலில் அந்தக் குழந்தை குள்ளச் சித்தனால் கைமாற்றப்பட்ட நாள் மாசி மகம். அந்த நாளில் தான் ஜாலியன்வாலாபாக் படுகொலையும் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒரு சிற்றூரின் சிறிய வீட்டில் பெருங்கருணையின் துணையால் நிகழும் சம்பவம் ஒன்றுக்கு ஈடாக வேறொரு உலகில் பெருங்குரூரத்தின் வெளிப்பாடாக ஒரு மிகப்பெரிய படுகொலை நிகழ்கிறது.
இது போல வாஞ்சிநாதனின் இறப்பு, காந்தியின் இறப்பு, எம்டன் குண்டு போட்டது போன்ற பொது வரலாற்றுச் சம்பவங்களும் நாவலின் போக்கில் இடம்பெறுகின்றன. முத்துச்சாமி ஓரிடத்தில் சொல்வது போல, ஆலாஸ்யம் இதெல்லாம் ஒற்றைத் தர்க்கம், ஒற்றைப் பார்வை, ஒற்றைச் சித்தாந்தத்தில் விளைவது. நமக்கு அங்கென்ன வேலை? நமக்கு அதனை விட பெரிய வேலை இருக்கிறது. யானைக்கு ஏன் இந்த குண்டூசி தேடுகிற வேலை?
மேலும் ஒரு அபாரமான இடம். ஆங்கிலத்தில் ‘wit’ என்பதற்கான சரியான உதாரணமாக அதனைச் சொல்லலாம். நீலகண்டனுடன் சில பேர் சுவாமிகளுடன் பனிமலைக்குச் செல்லும் போது சுவாமிகள் அசையாமல் கண்களை மூடி ஸ்தம்பித்து நின்றிருப்பார். ஒரு அசைவும் இருக்காது அவரிடம். உடன் வந்தவர்கள் அவரது நிழலைப் பார்ப்பார்கள். அந்த நிழல் அசையும். தோல் பாவைக் கூத்தில் தென்படும் நிழலுருவங்கள் போல வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். உடன் வந்தவர்களுக்கு ரோமாஞ்சனம் ஆகி சுவாமிகள் ஏதோ தன் சித்து விளையாட்டை காண்பிக்கிறார் என்று விழுந்து நமஸ்கரிப்பார்கள். கண் திறந்த சுவாமி எழுந்துகொண்டு “அசடுகள்” என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகச் சொல்லிச் செல்வார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹாலாஸ்சம், இந்த சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்த நீலகண்டனிடம் கேட்பார். “உங்களுடைய நிழல் எல்லாம் அப்போது எப்படி இருந்தன?” பின்னர் தான் நீலகண்டனுக்கு உரைக்கும். “அட ஆமாம். நாங்கள் அதை கவனிக்கவில்லையே. அசடுகள்” என்று ஒத்துக்கொள்வார். மேலும் ஸ்ரீ நீலகண்டன் வாமனசுவாமிகள் பற்றி எழுதிய முதல் புத்தகத்தில் வரும் குறிப்புகள் எல்லாம் பகடியின் உச்சம்.
நாவலில் மற்றொரு இடம், ஹாலாஸ்யம், மகோதரத்தால் இறந்த தன் அப்பாவை கனவில் நினைவு கூர்வது போல வரும். அங்கே அப்பா அவனிடம், வறியவனான விதுரனின் குடிசைக்கு சென்று கிருஷ்ணன் கூழ் குடித்த கதையை சொல்லிக்கொண்டிருப்பார். கூழ் ஊற்றிய இலையை பிடித்துக்கொள்ள இரண்டு கை பத்தாமல் இன்னும் நான்கு கைகள் தோன்றும்படியாகி க்ருஷ்ணன் விஸ்வரூப தரிசனம் எடுக்கவேண்டிய நிலை வந்துவிடும். பின்னர் ருக்மணியிடம் வந்து ‘விதுரன் வீட்டுல குடிச்ச கூழ் பிரமாதம்’ என்பார். அவள் அலுத்துக்கொள்வாள். ம்ம். க்கும். இப்படித் தான் போன தடவ சபரிக்கிட்ட பழம் வாங்கி சாப்பிடும் போதும் இப்படி எடுத்தேள் நீங்க என்பாள். அதுக்கு அவர் சொல்வார். அது பழம்ன்னாடி. சபரி அவளாவா சமைச்சது? என்பார். இதில் இருக்கும் ஒரு சாதாரண கணவன்-மனைவி பேசிக்கொள்ளுதல் போன்ற சித்தரிப்பில் கிருஷ்ணனின் எளியவற்கு இரங்குதலும் அப்படிப்பட்ட எவரையும் விட்டுக்கொடுக்காத அவரது தன்மையும் கூரிய அங்கதத்தால் வெளிப்பட்டு வாசகனை இலகுவாக்கி அமர வைத்துவிடுகிறது.
நாவலில் சற்று விலகி நிற்கும் திரி இது. ஒரு வெள்ளையன் முகலாயர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்த போது இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வியாபார நோக்கில் வருகிறான். அவன் பெயர் மவுண்ட் பேட்டன். அவன் இந்த நாட்டின் விசித்திரங்களைக் காண்கிறான். ஓர் இந்திய வேசியுடன் உரையாடுகிறான். முதல் நாள் உருகிப் பாடிக் கொண்டிருந்த ஓர் இந்தியப் பாடகன் மறுநாள் சிதையில் வேகுவதைக் காண்கிறான். காசிக்குச் செல்கிறான். கங்கையைக் காண்கிறான். அங்கு ஓர் பைராகியுடன் விவாதத்தில் ஈடுபடுகிறான். அவர் கொடுக்கும் உருண்டையை உண்டு தன் புனர் ஜென்மங்களை நினைவில் மீட்டுப் பார்க்கிறான். அங்கே அவன் கழுகாகப் பிறந்து கொத்திக் கொத்தி சிங்கக்கறி தின்கிறான். பின்னர் ஒரு ரஜபுத்திர இளவரசனாக பிறந்து போர்க்களத்தில் மடிகிற நினைப்பும் வருகிறது. கடைசியில் அந்த வெள்ளையன் விஷக்காய்ச்சல் வாங்கி கப்பலில் இங்கிலாந்து திரும்புகிறான். இறுதியில் கப்பலிலேயே இறந்தும் விடுகிறான். அவன் தன் இந்திய பயண அனுபவங்களை குறிப்புகளாக எழுதிவைத்திருக்கிறான். அவன் செத்த பிறகு அந்த குறிப்பேடு மட்டும் எஞ்சியிருக்கிறது. அதனை அவன் நண்பன் confessions of an english dreamer என்று புத்தகமாக வெளியிடுகிறான். பிறகு வேறெங்கோ செய்யது, பழனியப்பனிடம் இப்படி ஒரு புத்தகம் பற்றி வினவ, பழனியப்பன் தன் நூலகத்தில் இந்தப் புத்தகத்தைக் கண்டெடுக்கிறார்.
நாவலில் இடம்பெறும், பழனியப்பன் – செய்யது அவர்களின் நட்பும் பழனியப்பனின் குழந்தையின்மை குறித்து அவர்களுக்குள் நிகழும் உரையாடலும் அதில் வெளிப்படும் புரிந்துணர்வும் நம் சிந்தனையைத் தூண்டுபவை. அதில் பழனியப்பன் சொல்வான். எனக்கு சொந்தமா குழந்தை இல்லன்னா என்ன? எந்தக் குழந்தைய பாத்தாலும் தான் எம் மனசு குழைஞ்சுறுது. ஆனா செகப்பிக்கு தான் அவளோட கொழந்தைன்னு ஒன்னு வேணும்னு இருக்கு.
நாவலின் ஒரு இழை. ஹாலாஸ்யம் – மகோதரம் வந்து இறக்க நேரிட்ட அவன் தந்தை – அவனைப் பிழியும் அவரது ஞாபகங்கள் – ஹாலாஸ்யத்தின் காவல் நிலைய வேலை – அங்கே அவன் சந்திக்க நேர்ந்த ஒரு சந்தேக கேசு – பிடிப்பட்ட அந்த சந்தேக கேசுக்கும் ஏட்டு எண்ணூத்தியெட்டுக்கும் ஹாலாஸ்யத்துக்கும் இடையான உரையாடல். அந்த உரையாடலில் இருந்து தான் அதுவரை அதிகாரத்தின் பக்கம் நின்றிருந்த ஆலாஸ்யம் ஆன்மீகத்தின் பக்கம் இழுக்கப்படுகிறான். அங்கிருந்து அவன் முத்துச்சாமி – யோகீசுரர் – வாமன சுவாமிகள் – நீலகண்டன் என்று சென்று, நீலகண்டன் மூலமாக குள்ளச் சித்தரால் பலனடைந்த மூவரான முதலியார் தம்பதிகள், பெருமாள், தாயாரம்மாள் போன்றவர்களை சந்தித்து குள்ளச் சித்தன் சரித்திரக் கதையை எழுதிமுடிக்கிறான்.
நாவலின் இன்னோர் இழை – பர்மா வெங்கடேஸ்வரய்யர், அவரது நபும்சகத் துணையவனான வேம்பு – சடகோபன் அய்யங்கார் – ராமநாதன் செட்டியார் – பழனியப்பன் – சிகப்பி – சிகப்பியின் சின்னம்மாள் இவர்கள். பழனியப்பனின் தந்தையான ராமநாதன் வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார். அவரது நண்பன் – செய்யதுவின் அப்பா – முத்தலீப் வாத்தியாரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டு, பழனியப்பன் தேடிப் போய் கூப்பிடும் போது வீட்டுக்குத் திரும்ப வர மறுக்கிறார். கேட்டால் இது நாள் வரை தான் மரங்கள் வளர்த்துக் கொண்டிருந்ததாகவும், தான் வளர்த்த இந்த மரங்களுக்கு யார் தண்ணீர் ஊற்றுவார்கள்? அவற்றை விட்டு வர முடியாது என்றும் பிடிவாதமாக மறுத்துவிடுகிறார். வெங்கடேஸ்வரய்யர் – ராமநாதனின் முதலாளி – அவர் பழனியப்பனின் மேலிருந்த நன்மதிப்பில் பழனியப்பனுக்கு எழுதி வைக்கப்பட இருந்த சொத்தை சடகோபன் பரித்துக்கொண்டுவிடுகிறார். ஆனால் வெங்கடேஸ்வரய்யர் ஆசைப்பட்ட நூலகம் மட்டும் பழனியப்பனின் பொறுப்பில் இருக்கிறது. நூலகம் வைத்திருக்கும் அவனும் அந்த குள்ளச் சித்தன் சரித்திர நூலை தொடர்ந்து படிக்கிறான். கதையில் ஹாலாஸ்யம் தன் அப்பாவை நினைத்துப் பார்க்கும் இடத்தில் தன்னையும் தன் அப்பாவையும் பொருத்திப் பார்க்கிறான். எதையும் தன்னோடு தொடர்புறுத்திப் பார்த்துக்கொள்ளும் பிழையை (Association fallacy) மனதுக்குள் நிகழ்த்துகிறான். மேலும் பழனியப்பன் சிகப்பியுடன் பிள்ளை கலி தீர (சிகப்பியின் சின்னம்மாள் வைத்த செய்வினையை முறிக்க) வேண்டுதலுக்காக ஊர் ஊராக சுற்றி கரட்டுப்பட்டிக்கு வந்து குறிக்கேட்டு நேர்த்திக்கடனை இயற்றி முடிக்கிறான். சரியாக குள்ளச் சித்தன் கதையை படித்து முடிக்கும் போது சிகப்பி உண்டாகிவிடுகிறாள். இப்படி ஒன்றை ஒன்று தொட்டுத் தொட்டு விரிந்து கிடக்கிறது நாவல். முடிந்தவரை நாவலை நேர்க்கோட்டில் இழுத்துக் கோர்த்துப் பிடிக்க முயன்றிருக்கிறேன்.
நாவலைப் படித்து முடித்ததும் என்னால் சிலதை திரட்டிக்கொள்ள முடிந்தது. பிரபஞ்சத்தின் குவியத்தை மனித மையத்தில் இருந்து நகர்த்துவதன் அல்லது தளர்த்துவதன் மூலம் ஆசிரியர் “மனிதன்” என்கிற அதிகாரத்துக்கு குந்தகம் விளைவிக்கிறார். அப்படி ஒரு உடைப்பை நிகழ்த்தும் போது பேரண்டப் பெருங்கருணை தன்னியல்பாக வெளிப்படுகிறது. நாவலில் தீயவர்களே தட்டுப்படாதது ஓர் இனிய ஆச்சரியம் தான். புலன் உணர்வைக் கடந்தே (அமானுடத்தின் வழியாகவே) இத்தகைய பெருங்கருணையை நம்மால் உத்தேசிக்க முடியும் என்பதாகப்படுகிறது. அதற்காகவே பலவித மாற்று உலகங்களைப் படைத்து உலவவிடுகிறார் ஆசிரியர். தத்தம் புலன் உணர்வை வாசகனை சந்தேகிக்கச் செய்துவிட்டால் போதும் ஆசிரியருக்கு. அதுவே அவனை வழிநடத்திச் சென்றுவிடும்.
ஹாருகி முரகாமியின் “cream” என்கிற கதையில் இடம்பெறும் ஒரு ஜென் தத்துவம் இது. “ஒரு வட்டம், பல மையங்கள்”. யுவன் சந்திரசேகர் அவர்கள் வரைந்து காட்டும் வட்டத்துக்கும் பல நூறு மையங்கள். ஆம் பல நூறு மையங்கள். நான் என் வீட்டின் அருகில் இருக்கும் வெட்டவெளிக்கு சென்று கண்டு கொண்டது இது. அந்தக் திறந்த வெளியில் ஓரிடத்தில் நின்று கொண்டு சுற்றியும் முற்றியும் தெரிந்த அடிவானத்தைப் பார்த்தேன். வானம் கிண்ணம் போல என் மேல் கவிழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கிண்ணத்துக்கு மையமாக நான் இருந்தேன். தொலைவில் ஒரு புங்க மரம் நின்றிருப்பதைக் கண்டேன். அங்கு சென்றும் அண்ணாந்து பார்த்தேன். அப்போதும் நான் தான் மையம். இன்னும் சற்று தூரத்தில் ஒரு மாடு பூமியை மேய்ந்துகொண்டிருந்தது. அங்கு சென்றும் அண்ணாந்து பார்த்தேன். அப்போதும் நான் தான் மையம். வானம் அப்படித்தான் நமக்கு சமைத்துக்காட்டுகிறது. யுவனும் அப்படித்தான்.