சீ. முத்துசாமியின் ஆழம்; ஒரு வாசிப்பனுபவம்

மலேசியாவில் தோட்டப்புற வாழ்வை தீவிரத்தன்மையுடன் எழுதிக்காட்டும் எழுத்தளராக சீ. முத்துசாமி அறியப்படுகின்றார். ஆயினும்,  மக்களின் வெளிப்புற போராட்ட வாழ்க்கையைவிட அகச்சிக்கல்களை கவனப்படுத்துவதையே தனது கலையின் நோக்கமாக அவர் கொண்டிருப்பதை ‘மண்புழுக்கள்’ நாவல் தொடங்கி அறியமுடிகிறது. குச்சிக்காட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதன் வழி அவர் ஆராய்வது அவர்களின் மனச்சிக்கல்களையே என்பது என் அவதானம். தோட்டக்காடுகளின் இருளையும் அடர்ந்த வனங்களையும் மனித மனங்களின் குறியீடாக அவர் பயன்படுத்திக் கொள்கிறார். ஆகவே அவர் நாவல்களில் காலங்கள் மாறினாலும் காட்சிகள் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றன. கதாபாத்திரங்களும் ஒன்றாகவே இருக்கின்றனர். ஒரே ஆத்மா வெவ்வேறு உடல் எடுத்து வருவது போல சீ. முத்துசாமியின் படைப்புகளில் அவர்கள் உலவுகின்றனர். தோட்ட வாழ்க்கை எனும் களிமண்ணைப் பிசைந்து செய்த பொம்மைகளை அழித்து அழித்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொம்மைகளை அவர் செய்து பார்க்கிறார் என்றே தோன்றுகின்றது. அதன் அடையாளங்களை ஆழம் நாவலில் தெளிவாகவே காணமுடிகின்றது.

சீ. முத்துசாமி, ஆண் பெண் உறவுச் சிக்கல்களையும் பெண்களின் பாலியில் மீறல்களையும் தொடர்ந்து தன் புனைவுகளின் பேசுபொருளாகக் கையாள்கிறார். கதாபாத்திரங்களின் மனநோய் சிக்கல்களையும் வளர்ப்பு நாய்களின் அணுக்கத்தையும் அவரின் பல படைப்புகளில் காண முடியும்.   ஒரு காட்சியோடு கலந்த பல காட்சிகள்; ஒரே பாத்திரத்திற்குப் பல பெயர்களை இடுவது; பல கதாபாத்திரங்களுக்கு ஒரே பெயரை இடுவது, போன்ற தன்னிச்சையான உத்திகள் சீ. முத்துசாமியின் படைப்புகளைத் தனித்துக் காட்டுவன.  ஆழம் நாவலும் அவ்வம்சங்களை ஒருங்கிணைத்துக் கொண்ட ஒரு நாவலாகத்தான் அமைந்துள்ளது.

‘ஆழம்’ நாவலில் மையமாக இயங்குவது இரண்டு குடும்பங்களுக்கிடையிலான பகையும் அதன் விளைவாக மூன்று தலைமுறைகளாக தொடரும் வன்மமுமாகும். பெருமாளுக்கும் செவத்தியனுக்கும் இடையில் மூழும் பகை அவர்களின் வாரிசுகளான தொப்பளான் வேடியப்பன் இருவருக்குமிடையே தொடர்கிறது.

தொப்பளான் தண்டல் வேடியப்பனை ஒரு கொலைப் பழியில் சிக்கவைக்கிறான். இதனால் சீண்டப்பட்ட வேடியப்பன் தன் அமைதியை இழந்து, தொப்பளானை திட்டமிட்டு கொலை செய்கிறான். அந்தக் கொலைக் குற்றத்திலிருந்து தப்பிக்க மனநோயாளிபோல நடிக்கத் துவங்குகிறான். ஆனால் வேடியப்பன் மேல் சந்தேகம் கொள்ளும் தொப்பளானின் மகன்கள் ராமன் லெச்சுமணன் இரட்டையர்கள், வேடியப்பனின் மகன் மணியைக் கொலை செய்யத்திட்டமிட்டு அலைகின்றனர்.

இந்த நீண்ட பகையுணர்வுக்குக் காரணமாக சொல்லப்படுவது சாதிய உணர்வுதான்.  ஆனால் அது வழக்கமாகச் சொல்லப்படும் சாதிய ஏற்றத்தாழ்வாகத் தெரியவில்லை. சாதிய ஒடுக்குமுறை இழிவுகளும் அத்தோட்டத்தில் உள்ளன என்றாலும் பெருமாள்-செவத்தியான் பகைக்குக் காரணம் சாதிய அதிகாரப் போராட்டமாகும்.  ஒரே சமூக அந்தஸ்து கொண்ட இரண்டு சாதிகளுக்கிடையே நிகழும் அதிகாரப் போராட்டமாகவே இப்பகை அமைந்துள்ளது. இருவரில் யார் பெரியவர் என்பதே அவர்களுக்கிடையிலான ஆழமான பகைக்குக் காரணமாகின்றது. பக்கம் 96-ல் // அப்பா காலத்து ஜாதி பகை இன்னும் இங்க இருக்கு. நீ ஒசத்தியா நான் ஒசத்தியாங்கர போட்டி. இங்க இருக்குற ஒவ்வொருவனுக்குள்ளும் அது இருக்கு. அமுங்கி இருக்கு… கண்ணுக்குத் தெரியாத எரிமல அது… அத்தன ஜாதிக்காரனும் மனசுக்குள்ள தன்னோட ஜாதி பெருமைய அசபோட்டு தலய சிலுப்பி சிரிக்கிறான். அது எப்ப எதுல வெடிக்கும்னு சொல்ல முடியாது…// என்ற விவரணை சாதிய ஒடுக்குமுறைக்கானதாக அமையவில்லை. மாறாக சாதியின் வழி திரட்ட முயல்கின்ற அதிகார போராட்டமாகவே வெளிப்படுகின்றது. அதன் காரணமாகவே பெருமாள் செவத்தியான் குடும்ப பகை குச்ச்சிக்காட்டில் வாழும் மற்றவர்களைப் பாதிக்காமல் தனி இரண்டு குடும்பங்களின் சண்டையாக நீடிக்கின்றது.

நாட்டில் முக்கிய அரசியல் போராட்டங்கள் நடக்க ஒரு காலகட்ட பின்னணியில் சீ. முத்துசாமி தனது வழக்கமான தோட்டக்காட்டு மானுடசிக்கல்களை நிகழ்த்திப் பார்த்துள்ளார். படைப்பு ரீதியாகக் குழப்பங்களும் பலகீனங்களையும் கொண்டுள்ள இந்நாவல் முன்னெடுக்கும் கால கட்டம் முக்கியத்துவமிக்கது. ஆயினும் வேடியப்பனின் கட்டிலுக்குக் கீழே எப்போதும் சிறு முனகலோடு சுருண்டு கிடக்கும் ஜிம்மியைப் போல பெரும் போராட்ட காலம் ஒன்று இந்நாவலில் சுணங்கிக் கிடக்கின்றது.

தோட்டப் பாட்டாளிகளின் வாழ்க்கை வரலாற்றை  நாட்டு வரலாற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது எளிய காலக் கோடு ஒன்றை வரைந்து கொள்ள முடியும். இரண்டாம் உலகப்போருக்கு முன்பான தோட்ட மக்களின் வாழ்க்கை, ஜப்பானிய ஆட்சியின் கீழ் தோட்ட புற மக்களின் வாழ்க்கை,  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான வாழ்க்கை என மூன்று கால கட்டங்களை அடுக்கிக் கொள்ளலாம்.   

இதில் தோட்டப்பாட்டாளிகளின் வாழ்க்கையில் ‘வசந்தகாலம்’ என ஒன்று நினைவுக்கூரப்படுமாயின் அது இரண்டாம் உலகப்போருக்கு முன்பான காலமாகத்தான் இருக்கும். கடுமையான உடல் உழைப்பும் குறைந்த வசதிகளும் கொண்ட அக்காலகட்டம் தோட்டப்பாட்டாளிகளின் வாழ்வில் புதிய அனுபவங்களைத் தந்து வெளிச்சம் பாய்ச்சியது. தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய அவர்கள் முற்றிலும் மாறுபட்ட ரப்பர் தோட்ட வாழ்க்கைக்குள் தங்களைப் புகுத்திக் கொள்ளத் தொடங்கிய காலம் அது. ஆனால், உணவுக்கோ உடைக்கோ அவர்கள் அப்போது சிரமப்படவில்லை. மாறாக, சம்பள உயர்வு கேட்டு ஆங்கிலேய முதலாளிகளிடம் திராணியுடன் போராடும் மனவலிமை அவர்களுக்கு அக்காலகட்டத்தில் இருந்தது.

தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் மிக வலிமையானதாக இருந்தன. அவற்றின் முக்கிய பொறுப்புகளில் தோட்டப்பாட்டாளிகளின் பிரதிநிதிகள் இருந்தனர். தொழிலாளர்களை ஒன்றிணைத்து உரிமைப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். ஆகவே, தமிழ்நாட்டில் கடும் பஞ்சத்தின் தாக்குதலில் நிலைகுலைந்த வாழ்க்கையை மீட்டுக கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தை ரப்பர் தோட்டமும் காப்பி, கரும்பு முதலான விளைநிலங்களும் அந்த முன்னோடிகளுக்குத் தந்தன. 

ஆனால், ஜப்பானிய ஆட்சிக்காலம் என்பது, தோட்டப் பாட்டாளிகளின் வாழ்வில் மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கிய காலகட்டமாகும். உணவுப் பஞ்சம், உடைப் பஞ்சம், உயிர்ப் பலி என அக்காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கை அலைக்கழிப்புக்குள்ளானது. மரண ரயில் தண்டவாளம் கட்டும் ஜப்பானிய ராணுவத்தின் முயற்சிக்குப் பலியானோர் எண்ணிக்கை மிகப்பெரியது. அது இன்றும் மாறா வடுவாக இருக்கின்றது.

மூன்றாவதாக, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர் மீண்டும் மலாயாவுக்குத் திரும்பிய பிறகு, தோட்டத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுகள், தோட்டப்புற வாழ்க்கையில் எதிர்ப்பாரா திருப்பங்களை நிகழ்த்தின. அதில் முதன்மையானது பெரிய தோட்டங்களை ஆங்கிலேயர் உள்நாட்டு முதலாளிகளிடம் விற்றதும் அதன் விளைவாகத் தோட்ங்கள் துண்டாடப்பட்டதுமாகும். ஆங்கிலேய முதலாளிகள் தங்கள் தோட்டங்களை அவசரமாக விற்கக் காரணம் மலாயாவில் அப்போது நிலவிய அரசியல் கொந்தளிப்புகளும் கம்யூனிஸ போராளிகளின் தாக்குதலுமேயாகும். ஆங்கில துரைமார்கள் உயிரச்சத்தின் காரணமாகத் தோட்டங்களை விட்டு வெளியேறினர். அதன் பின்விளைவாகத் தோட்ட நிர்வாகம் கைமாறியதோடு சிறுதோட்டங்களாக உடைந்தன. ரப்பர் தோட்டத்துறையில் வேலை செய்து பழக்கப்பட்ட மக்கள் பலர் நகரங்களுக்கும் புறநகரங்களுக்கும் சென்றனர். இதனால், புறம்போக்கு நிலங்களில் புதிய வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

மலேசிய படைப்புகளில் இந்த மூன்று காலகட்டங்களும் நிறையவே பதிவாகியுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க நாவல்களாக அ. ரெங்கசாமியின் ‘விடியல்’ ஆர். சண்முகம் எழுதிய ‘சயாம் மரண ரயில்’  கோ. புண்ணியவான் எழுதிய ‘கையறு’, ஐ இளவழகு எழுதிய ‘இலட்சியப் பயணம்’, சை. பீர் முகமது எழுதிய ‘அக்கினி வளையங்கள்’, சீ. முத்துசாமியின் ‘மலைக்காடு’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

இரண்டாம் காலகட்ட நூல்களில் ‘சயாம் ரயில் உருவாக்கம் மையமாக இருப்பது போலவே மூன்றாம் காலகட்ட நாவல்களில் தோட்டத்துண்டாடலும் கம்யூனிச அச்சமும் மையமாக இருப்பதைக் காணமுடியும். ஆயினும் கம்யூனிசப் போராளிகளைப் பற்றிய சித்தரிப்புகள் எதிரும் புதிருமான மன நிலைகளை வெளிப்படுத்துவதையும் கவனப்படுத்தலாம். அரசு கம்யூனிஸ போராளிகளைப் பயங்கரவாதிகளாக வகைப்படுத்துவதையே அ. ரெங்கசாமியும் தன் படைப்புகளில் உறுதிபடுத்தியுள்ளார். மற்ற பல எழுத்தாளர்களும் கம்யூனிஸ்டுகளைக் கொடுரமாகவே சித்தரித்துள்ளனர். ஆயுனும், சை பீர் முகமதின் ‘அக்கினிவளையங்கள்’ கம்யூனிஸ்டு போராளிகளை ஒடுக்கப்பட்டோரின் தரப்பாகப் பேசுகின்றது. அதன் வழி புதிய தத்துவசிக்கல் ஒன்றை அவர் முன்வைக்கின்றார். சீ. முத்துசாமியின் மலைக்காடு நாவல்  கம்யூனிஸ்ட்டுகளை லட்சிய வீரர்களாகச் சித்தரிக்க முயன்றுள்ளது. ஆனால், அவரின் அடுத்த நாவலான ஆழம் அதை முற்றாக மறுத்து கம்யூனிஸ்ட்டுகளைப் பயங்கரவாதிகளாகவே நிலைநிறுத்தியுள்ளது.

‘ஆழம்’ நாவல் கம்யூனிச அச்சுறுத்தலை அரசியல் களத்தின் நுட்பங்களோடு அலசவில்லை. ஆயினும் அந்த ஆபத்தான காலகட்டம் சாமானிய மனிதர்களால் எவ்வாறு தங்கள் சுயநலத்திற்குத் திசைதிருப்பப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. மிகப்பெரிய அரசியல் நோக்கோடு நடக்கும் ஒரு வன்முறை போராட்டத்தைச் சாதுரியமாப் பயன்படுத்திக் தங்கள் எதிரிகளைப் பழிவாங்க அவர்கள் முயல்கின்றனர். தங்கள் எதிரிகளைக் கம்யூனிச உளவாளிகள் என காவல்துறையிடம் சொல்வதும், கம்யூனிஸ்டுகளின் மறைவிடங்களை ராணுவத்திடம் காட்டிக் கொடுப்பவர்கள் என கம்யூனிஸ்டுகளிடம் சொல்வதுமாக அவர்கள் தங்கள் பழிவாங்கல் நாடகத்தை நடத்திக் கொள்கின்றனர். தாங்கள் திட்டமிட்டுச் செய்யும் கொலைகளையும் கம்யூனிஸ்டுகளின் செயல் எனத் திரிக்கின்றனர். அப்பாவி மக்கள் கம்யூனிஸ்டுகளாலும் சிறப்பு பிரிவு ராணுவத்தாலும் துன்புறுத்தப்படுகின்றனர். ஜப்பானியர்களையும், ராணுவத்தையும், கம்யூனிஸ்டுகளையும் எளிதில் அடையாளம் கண்டு விலகிச்செல்வது போல இந்த கயவர்களை மக்கள் அடையாளம் காணமுடிவதில்லை.

ஆழம் நாவல் தான் எடுத்துக் கொண்ட கொந்தளிப்பான காலகட்டத்துக்கு ஞாயம் செய்யவில்லை. முள்வேலிக்குள் நடமாட்டக் காட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள் கூட்டத்தின் உணர்வுகளை இக்கதை மிக மேலோட்டமாக கடந்து செல்கின்றது. கடுமையான தடைகளும் பயங்கரவாத அச்சுறுத்தலும் சுட்டப்பட்டாலும் அவை கதையின் மையத்துக்கு வெகுதொலைவில் நின்றுவிடுகின்றது. மக்கள் எந்தத் தடையும் இன்றி இயல்பாகவே நடமாடுகின்றனர். வெளிப்பயணங்கள் செல்கின்றனர். மரத்தடியில் ‘லோட்டோ’ விளையாடுகின்றனர். இவ்வாறு, வழக்கமாக தோட்டபுறத்தில் நிகழும் வாழ்க்கையையே கதை அழுத்தமாக சித்தரிக்கின்றது. கம்யூனிச அச்சுறுத்தலை தோட்ட மக்கள் ஒரு சாக்காக பயன்படுத்தி தங்கள் சொந்த பகையை தீர்த்துக் கொள்வது போலவே, சீ. முத்துசாமி கம்யூனிச காலகட்ட பதற்றத்தை தனது கதைக்கு ஒரு பின்னணியாக பொருத்தியிருக்கிறார். ஆயினும்,  போராட்ட கால வீச்சை  என்றுமுள்ள சாதிய அதிகார மனோபாவ விமர்சனத்தோடு பிணைக்க முயன்ற எழுத்தாளரின் முயற்சி சரியாக கைகூடவில்லை. அவை நீரின் மேல் எண்ணெய் போல மிதந்து கொண்டுள்ளன.