சிவானந்தமும் சிங்கப்பூர் இலக்கியமும்

சிங்கப்பூரில் தமிழில் தொடர்ந்து அசராது எழுதுவதற்கான உயிராற்றலைக் கண்டடைந்துள்ள மிகச் சிலரில் சிவானந்தம் நீலகண்டமும் ஒருவர். எழுதப்படும் படைப்புகளை ஒட்டி விரிவான உரையாடல்கள் வாசக சூழலில் எழாவிட்டாலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக வாரம் தவறாமல் எழுதி வருபவர். சிங்கப்பூருக்கு அப்பாலும் பரந்த தமிழ் எழுத்துலகில் அறிமுகங்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர். பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்கள் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் ஆசிரியர் குழுவில் பங்களிப்பவர் என பரவலாக அறியப்பட்டவர்.

பொறியாளாராக 2006இல் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தவர் சிவானந்தம். சைவ சமய இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றிருந்த  தாத்தாவின் தாக்கத்தினால் சிறுவயதிலேயே வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தவருக்கு சிங்கப்பூர் நூலகங்கள் பெருந்தீனி போட்டன. 2011இல் அறிமுகமான  ஜெயமோகனின் எழுத்துகள் அவரைத் தீவிர இலக்கியத்துக்குள் இழுத்துச் சென்றது. 2015ல் வாசகர் வட்டம், தொடர்ந்து சிராங்கூன் டைம்ஸ் என்று அவரது பங்களிப்பு வளர்ந்தது.

புதியதொரு சூழலில் ஒன்றிப்போகவும் தன்னை இணைத்துக்கொள்ளவும் விரும்புவர்கள் அதன் அகச் செயல்பாடுகளை அறிந்துகொள்வார்கள். அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, ஊடகங்களும் புனைவுகளும். வாசிப்பு வழியாக சிங்கப்பூரை அறியவும் புரிந்துகொள்ளவும் தொடங்கிய சிவானந்தம், தன் வாசிப்பைப் பகிர எழுதத் தொடங்கினார்.

முகநூல் பதிவுகளாகத் தொடங்கி, வலைப் பக்க கட்டுரைகளாகவும் சிராங்கூன் டைம்ஸ் நேர்காணல்கள், செய்திகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் என்று அவரது வாசிப்பும் எழுத்தும் வளர்ந்து வருகின்றன.

வாசிப்பது, எழுதுவதுடன் இலக்கிய முயற்சிகளிலும் பங்களித்து வருபவர் சிவானந்தம். சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் புனைவல்லாத பிரிவுக்குத் தலைமை நீதிபதியாக (2022) பணியாற்றியுள்ளார். அருண் மகிழ்நன் தலைமையில் உருவாகிவரும், 2025இல் வெளியீடு காணவுள்ள, சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியக் குழுவில் தன்னார்வல உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

வரலாறு, இலக்கியம், ஆளுமைகள், சமூகம், தொழில்நுட்பம், நடப்பு விவகாரம் முதலிய துறைகள் குறித்து முக்கியமாக, சிங்கப்பூர் தொடர்பாக அதிகம் எழுதும் சிவானந்தம்  இதுவரை மூன்று கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

கரையும் தார்மீக எல்லைகள் (அகநாழிகை, 2019), சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும் (காலச்சுவடு, 2019), மிக்காபெரிசம் (யாவரும், 2022) ஆகிய மூன்று தொகுப்புகளிலும் அவர் வாசகர்களுக்குக் கடத்தும் அனுபவம், சிந்தனை ஊடாக அவரது படிநிலை வளர்ச்சியையும் காணமுடிகிறது.

முதல் நூலான கரையும் தார்மீக எல்லைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 22 கட்டுரைகளில் பெரும்பாலானவை அவரது பகிர்தல்கள். காந்தி சொல்லவரும் தார்மீக நெறிகள், சாதி ஒழிப்பு குறித்த அம்பேத்கரின் கருத்து, வர்கீஸ் சூரியன், பெர்னாட் பேட், அசோகமித்திரன், லீ குவான் இயூ, கோ.சாரங்கபாணி முதலியவர்கள் குறித்த கட்டுரைகளில் அவர்கள் பற்றியும் அவர்களது கருத்துகளையும், நூல்கள், நேர்காணல்கள், மற்றவர்களது விமர்சனங்கள் போன்ற தரவுகளைக்கொண்டு தொகுத்துள்ளார்.

இவற்றில் பெரும்பாலான கட்டுரைகளை ஒரு நூல், ஒரு கருத்து என ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். பேராசிரியர் வாஞ்சிநாதன் பற்றிய நினைவுகள், யூமா வாசுகி – தமது வாசிப்பு என்று அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். நூல் அறிமுகங்கள், இருமுனைய ஒளியுமிழி (எல்இடி) பற்றிய கட்டுரை, அறிவும் படைப்பாக்கமும் பற்றிய கட்டுரைகளும் அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

‘கரையும் தார்மீக எல்லைகள்’ நூல் மு.கு.ராமச்சந்திரா புத்தகப் பரிசைப் பெற்றது.

அடுத்த நூலான ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்’ தொகுப்பில் சிங்கப்பூரில் வெளிவந்த சிங்கை நேசன் இதழ் குறித்தும், இங்கு எழுதப்பட்டுள்ள கதைகளின் பேசுபொருள்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவுகளில் ‘ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலம்,’  சிங்கப் பூர்த் தமிழ்ப் புனைவுகளில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள், சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவு: பாலியல் ஒழுக்க விழுமியங்களும் மீறல்களும், சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவு: தொன்மங்களின் தொடர்ச்சி, சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவுகளில்

குற்றமும் தண்டனையும் முதலிய அந்தக் கட்டுரைகளுக்காக அவர் காட்டியிருக்கும் முனைப்பு சாதாரணமானதல்ல. 2,000க்கும் அதிகமான சிங்கப்பூர் கதைகளைப் படித்து அவற்றை வகை பிரிப்பது பெரும் உழைப்பைக் கோரக்கூடியது.   

வரலாறு, சமூக ஆய்வுகளில் ஆழமான நாட்டம் கொண்டிருக்கும் சிவானந்தத்தின் ’19ஆம் நூற்றாண்டு  சிங்கப்பூரில் சிங்கைநேசன் காட்டும் தமிழர் வாழ்வியல்’ என்ற கட்டுரை அவரது உழைப்புக்கு மற்றொருமொரு சான்று.

இக்கட்டுரையில், சிங்கப்பூரில் 1887 ஜூன் முதல் 1890 ஜூன் வரையில் மூன்றாண்டுகள் வெளிவந்த தமிழ் வார இதழான சிங்கைநேசனின் வெளிவந்த செய்திகள் ஊடாக, அன்றைய சிங்கப்பூர் வாழ்வியலைக் காட்ட அவர் முனைந்துள்ளார். 

அந்தச் செய்திகளில் சொல்லப்பட்ட தகவல்களைத்  திரட்டி,  பெரி பெரி நோய் தாக்கம், தெருநாய் தொல்லை, அத்தாப்பு வீடுகள், மாட்டு வண்டி, செம்மண் சாலைகள், கிணறுகள், புலி தாக்குதல், மணி காட்டும் பீரங்கி குண்டு என்று அன்றைய சிங்கப்பூர் வாழ்க்கையைத் தொகுத்துள்ளார். 19ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூர் எப்படி இருந்திருக்கும் என்ன சாப்பிட்டார்கள், எப்படிப் பேசினார்கள், எப்படிப் பயணம் செய்திருப்பார்கள், விலைவாசி என்ன, சம்பளம் என்ன, நாணயம் என்ன முதலிய விவரங்களை அறிய உதவும் கட்டுரை அது.

‘மிக்காபெரிசம்’ நூலின் தலைப்புக் கட்டுரை, சொற்களில் அவருக்குள்ள ஈடுபாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு. மிக்காபெரிசம் என்ற சொல்லை விளக்கி, சிங்கப்பூரின் சட்டத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய பிரபலமான ஒரு நீண்ட வழக்கின் விவரங்களை எளிமையாகவும் சுவாரயஸ்மாகவும் சொல்லக்கூடியது அந்தக் கட்டுரை, பொது வாசிப்புக்கேற்றது.

சிங்கப்பூரில் சொல்லாக்கத்தின் தேவை, அதன் சாத்தியப்பாடுகள் பற்றிய ‘சொல்லாக்க விதைகளில் துளிர்க்கும் சொல்லாடல்கள்’ கட்டுரையில் அது குறித்த உரையாடல் நடைபெற வேண்டும்  எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மீநுண்மி, மின்னிலக்க நச்சகற்று, குறைவாக்கம் என்று பல தமிழ்ச் சொற்களைக் கட்டுரைகளில் பயன்படுத்துவதன் மூலம் அவற்றைப் புழக்கத்துக்கும் கொண்டு வரும் முயற்சியும் செய்கிறார்.

சிங்கப்பூரில் நடைபெறும் முக்கிய கலை, இலக்கிய நிகழ்வுகளையும், பாலபாஸ்கரன், டாக்டர் அ.வீரமணி, லியனா தம்பையா, அ.பழனியப்பன், சுபாஷ் ஆனந்தன் முதலிய ஏதோ ஒருவகையில் அல்லது துறையில் அறியப்பட்ட தமிழர்களையும் உடனுக்குடன் ஆவணப்படுத்தி விடுபவர் சிவானந்தம். அதேபோல் வாசுகி கைலாசம், லாவண்யா கதிரவேலு, சுரேஷ்குமார் முத்துக்குமரன், அனூஜ் ஜெயின் போன்ற இளம் தலைமுறை கல்வியாளர்களையும் நேர்கண்டு அறிமுகப்படுத்துகிறார்.

மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுவரும் சிவானந்தம், சிங்கப்பூர் இந்திய மரபுடைமை நிலையமும் கொள்கை ஆய்வுக்கழகமும் இணைந்து வெளியிட்ட ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ தொகுப்பின் மொழிபெயர்ப்பில் பங்களித்துள்ளார்.

தான் வாசித்தவற்றை வாழ்க்கை அனுபவங்களோடும் தனது சிந்தனையோடும் இணைத்து அதைத் தொகுத்து வழங்குவது சிவானந்திற்குக் கைவைந்துள்ளது. அப்படிச் சில கருத்துகளை முன்வைக்கும்போது வலுவான விவாதங்களை முன்னெடுத்தாலும் பல தகவல்களும் விஷயங்களும் வாசகர்களைச்  சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்  எளிமையைக் கைக்கொள்கிறார். அப்படிச் சில நேரங்களில் எளிமையின் வெளிச்சத்தில் படிமங்களும் ஆழங்களும் மறைந்துவிடவும் செய்கின்றன.  

‘ஆக்குச் செய்யறிவும் அசல் மெய்யறிவும்: கவிதையளவே தூரம்’ என்ற கட்டுரையில் பல கோணங்களில் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு தலைப்பை, லேசாகத் தொட்டுச் சென்று விடுகிறார். (Artificial intelligence என்பதற்கு செய்யறவு என்பது சிவானந்தத்தின் மொழி பெயர்ப்பு. அதேபோல்  ChatGPT ஐ ஆக்குச் செய்யறிவுப் பொறி என்கிறார்.)

சிவானந்தம் கறாரான விமர்சகரோ, தீவிரமான கருத்தாங்கங்களை முன்வைப்பவரோ அல்லர். தங்கள் தொன்மை மிகுந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இச்சிறிய நாட்டின் வரலாறும் முயற்சிகளும் விரைந்த வளர்ச்சியும் இடம்பெயரும் எவருக்கும் ஏற்படுத்தும் வியப்பு சிவானந்தத்தையும் ஆட்கொண்டிருப்பது இயல்பானது. அதனாலான விதந்தேற்றல்களை ஆங்காங்கே அவர் எழுத்துகளில் காணலாம். ஆனால் அவை அபத்தமான போற்றிப்பாடல்களல்ல.

தனக்கான தேர்வுகள், பார்வைகளுடன் சிங்கப்பூர் எழுத்துகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நல்ல வாசகர் சிவானந்தம். எழுதுபவருக்குப் பெரும் ஊக்கமாக இருப்பது வாசகர்கள். கருத்துகள் பரிமாறப்படும்போது தொடர்ந்து எழுதும் உற்சாகம் கிடைக்கிறது. வாசகர்களே எழுத்தாளர்களுக்கு அடையாளம் பெற்றுத் தருகிறார்கள்.

பொதுவாக புனைவெழுத்தாளர் பெரும் கவனத்தை கட்டுரையாளர்கள் பெறுவதில்லை என்றாலும் தமிழ்ச் சூழலில் அதிகம் விற்கப்படுவது கட்டுரை நூல்களாகவே உள்ளன.

சவுக்கு சங்கரின் நூல்கள், சிலைத் திருடன் போன்ற புனைவுத்தன்மைமிக்க கட்டுரை நூல்கள்,  நிதி விவகாரங்கள், தன்முனைப்பு, தொழில்முனைப்பு, சமயம், பண்பாடு, இலக்கியம் தொடர்பான எழுத்துகளுக்கு எப்போதுமே வரவேற்புள்ளது. தொ.பரமசிவன், அ.கா.பெருமாள், பக்தவத்சல பாரதி முதலிய துறைசார் அறிஞர்களின் எழுத்துகளுக்கு எப்போதுமே தேவையிருக்கிறது. ஞானி, அ.மார்க்ஸ் என பத்தி எழுத்தால் ஆயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர்கள் உள்ளனர்.

புனைவெழுத்து தனிமனித சிந்தனையில் ஆறஅமர மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனில், கட்டுரை உடனடி சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருகிறது. மனித எண்ணப்போக்குகளை வழிப்படுத்துவதிலும் அறிவுத் தேடலை வளர்ப்பதிலும் கட்டுரையாளர் முக்கியப் பங்கை வகிக்கிறார். புனைவெழுத்து கவனம் பெறவும் வளரவும் கட்டுரையாளர்கள் தேவையாக உள்ளனர். ஒரு சமூகத்தின் புத்தாக்க சிந்தனைக்கும் படைப்பூக்கத்திற்கும் புனைவுகளும் கட்டுரைகளும்  மிக  முக்கியம். ஆனால், கட்டுரையாளருக்கு பொறுப்பு அதிகம். தகவல்களும் செய்திகளும், முன்வைக்கும் கருத்துகளும் சரியானதாக இருக்கவேண்டிய உள்ளது. நேர்மறைச் சிந்தனைகளை உருவாக்கும் நோக்கம் தேவைப்படுகிறது. வாசகர்களைப் பெற்ற கட்டுரையாளராகத் தொடர்ந்து இயங்குவதற்கு படிப்பறிவு, அனுபவ அறிவு, சிந்தனை அறிவு மூன்றையும் ஒன்றிணைத்த தொகுப்பறிவு அவசியமாகிறது.

செயல்தன்மை அதிகம் கொண்ட கட்டுரை எழுத  அளவுவீடுகளும் தரவுகளும் கோட்பாடுகளும் முக்கியம்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் சிவானந்தம் செலுத்தும் உழைப்பு கடுமையானது. நாளிதழ்கள், புதினங்கள், செய்திகள் மட்டுமின்றி சமூக நிகழ்வுகள் தொடர்பாகவும் பரவலான பல  தகவல்களைத் தேடித் தொகுக்கிறார். அதேநேரத்தில், தகவல்களை அறியத் தருவது மட்டுமே தம் பொறுப்பு என்று நினைக்கிறோரோ என அவர் கட்டுரைகளை வாசிக்கும்போது சில வேளைகளில் எண்ணத் தோன்றும். அதையும் தாண்டி கட்டுரையாளாருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கவே செய்கிறது. ஒரு தகவல் அல்லது கருத்தாக்கம் வழி தனக்கு கிடைத்த பார்வையை பகிர்ந்துகொள்ளும்போதே வாசகருடனான உரையாடல் தொடங்குகிறது. சார்புநிலையில் எடுப்பதென்பது வேறு, ஒரு கருத்தை முன்வைத்தை விவாதிப்பது என்பது வேறு.

‘சிங்கப்பூருக்கு வந்த சித்தார்த்தன்’ கட்டுரைபோல வரலாற்றுத் துணுக்குகளை தகவல் நிறைந்த வாசிப்பாக பல கட்டுரைகளில் தந்துள்ளார் சிவானந்தம். இத்தகைய கட்டுரைகள் வாசிக்கும் தருணங்களுடன் கரைந்துவிடக் கூடியவை.

சிங்கப்பூரில் தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். நாடும் மக்களும் சிந்தனையும் வளர வளர  அடுத்த கட்டத்துக்குச்  செல்ல வேண்டியுள்ளது. தொகுப்பது, ஆவணப்படுத்துவதுடன்  அது உரையாடல்களும் தேவைப்படுகின்றன.

வாசிப்பில் அல்லது ஆய்வில் ஒன்றைக் கண்டடைந்து அதை மைய விவாதமாக எடுத்துச் செல்லும்போதே, பல காலத்துக்கு கட்டுரைகள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன; ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புதிய சட்டகங்களைப் பயன்படுத்தி புதிய சிந்தனைகளை வெளிக்கொணரும் என்பதை அறிந்தவர் சிவானந்தம். அந்த இலக்கை நோக்கி அவர் பயணிக்கும்போது சிங்கப்பூர் தமிழ்க் கட்டுரை இலக்கியம்  தனிக் கவனம் பெறும்.

1 comment for “சிவானந்தமும் சிங்கப்பூர் இலக்கியமும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...