அரசியல்வாதி

நாடு என்பதை நான் எப்போதும் ஒரு நிர்வாகியின் கீழ் இயங்கும் ரப்பர் தோட்டத்தோடு ஒப்பிட்டு யோசிக்கிறேன். ரப்பர் தோட்டங்களில்  நிர்வாகிக்கு கீழே துணை நிர்வாகி,  கிராணி, தண்டல், தோட்டத் தொழிலாளர்கள், வேலி அமைப்பவர்கள், ஓட்டுனர், குமாஸ்தா, தோட்டிகள், எடுபிடிகள் போன்றவர்களோடு  தோட்ட காவலாளியும் இருப்பார். நாட்டில்,  அரசியல்வாதிகள்தான் அந்த நிர்வாகியும் துணை நிர்வாகியும். அரசாங்க ஊழியர்களைக் கிராணியோடும் தண்டலோடும் ஒப்பிடலாம். பொதுமக்களை, தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பிற வேலைகள் செய்பவர்களின் இடத்தில் வைக்கலாம். காவல்துறையும் ராணுவமும் தோட்ட காவலாளிக்கு நிகரானவர்கள்.

நான் அரைவேக்காட்டுத்தனமாக இந்தக் கருத்தை அச்சுத்தொழிலோடு நினைவுப் பரிசுகளும் செய்து விற்கும் என் ஆருயிர் நண்பன் செளஃபியிடம் விளக்கிக் கொண்டிருக்கும்போது, அவன் தன் இடுங்கிய கண்களில் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல், அலுவலகத்துக்குப் பின்னால் சென்றான். எனக்குப் பண நெருக்கடி வரும்போதெல்லாம் நான் கையேந்தக்கூடிய ஒரே நபர் செளஃபிதான்.

செளஃபி செயற்கையான பரபரப்போடுதான் எப்போதும் என்னை எதிர்கொள்வான். தான் முக்கியமான நபரென்றும் தனக்கு நிறைய பணிகள் இருக்கின்றன என்றும் காட்டிக் கொள்வது அவன் வழக்கம். அப்போதெல்லாம் அவனது சப்பை மூக்கு விடைத்து, அவன் முகமே மூளியாகிவிட்ட பழைய ஈயச்சட்டிபோல காட்சி தரும்.  அவன் தன் குள்ளமான உருவத்தை நிமிர்த்தி அமர்ந்து கொள்ளும்போது பள்ளிவாசல் நிகழ்ச்சிக்கு நன்கொடை பெற வந்த மனிதனை எதிர்கொள்ளும் அமைச்சருக்கான பாவனை தென்படும்.

அவன் அலுவலகத்தில், அவனுக்கு எதிரில்  போடப்பட்டிருக்கும் சுழலும் நாற்காலியில், ஓர் அமைச்சரிடம் நெடுஞ்சாலை கட்டுமான குத்தகை பெற வந்திருப்பவனைப் போல நான் பணிவாக அமர்ந்து கொள்வேன். அவன்  அறையில் செளஃபியின் நாற்காலியைத் தவிர எஞ்சி இருக்கும் அந்த ஒரே நாற்காலியில் அழுத்தி அமர்ந்து கொள்வேன்.  நான் சிறுவனாக இருந்தபோது கண்டுகளித்த கோம்பேட் பட ஹெலிகப்டர் போல இரைச்சல் தரும் காற்றாடியில் சொற்பமாகக் காற்று வந்து கொண்டிருக்கும். புத்தகங்கள், கையேடுகள், தொப்பிகள், பைகள், நினைவுப்பரிசுகள் என அந்த அறை முழுவதும் வாடிக்கையாளர் சந்திப்பின்போது ஆர்டர் எடுக்கத் தேவைப்படும் பல்வேறு பொருட்களின் மாதிரிகள் கலைந்து கிடக்கும்.

செளஃபி அந்தக் கடைவீட்டின் இரண்டாவது மாடியை வாடகைக்கு எடுத்திருந்தான். பின்கட்டில் இருக்கும் குளியல் அறை வரை நீண்டு செல்லும் வருகையாளர் கூடமும் செளஃபி அலுவலகமாக மாற்றிக் கொண்ட ஓர் அறையும்  மட்டும் அதில் இருந்தன. அந்த அலுவலகத்தில் செளஃபி தனியாக இருந்தான். பணியாளர்கள் என்று எவரும் இல்லை. 

ஒரு பழைய மேசையையும் எங்கிருந்தோ கொண்டுவந்து போடப்பட்ட மரநாற்காலி ஒன்றைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் அந்தக் கூடம் காலியாகவே கிடந்தது. தென்கோடியில் குளியல் அறையும் அதற்கு நேர் எதிராக செளஃபியின் அலுவலக அறையும் இருந்தன.

நான் செளஃபியுடன் மிக நிதானமாக அவன் கவனத்தை ஈர்க்கும் வகையில் என் உரையாடலைத் தொடங்குவேன். முதலில் அவனுக்குக் கிடைத்திருக்கும் ஆர்டர்கள் பற்றி தாராளமாகப் புகழ்வேன். பிறகுதான் என் பணத் தேவை பற்றிய புலம்பலை ஆரம்பிப்பேன். இடுங்கிய கண்களையுடைய செளஃபிக்கு நான் அவனிடம் கடன் வாங்கத்தான் வந்திருக்கிறேன் என்பது நான் சொல்லாமலே தெரியும். ஆனாலும் என் உளறல்களையும்  புகழ் மொழிகளையும் என்னால் அவனுக்கு எவ்வாறெல்லாம் வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்க முடியும் என நான் கதையளப்பதையும் தலையீடில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பான். தன் முன் மன்றாடிக் கொண்டு நிற்கும்  மூட பற்றாளர்களை எதிர்கொள்ளும் மேன்மைமிகு அரசியல்வாதியின் தோரணையில், என்னைக்  கீழாக பார்க்கும் போது,  செளஃபி  விவரிக்கமுடியாத களிப்பில் ஆழ்ந்து போவதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

அவனுடைய அந்த எரிச்சல் மூட்டும் பாவனைகளைக் கண்டு எனக்குக் கடும் வெறுப்பாக இருக்கும். என்னுடைய மனக்கொதிப்பை மறைத்துக் கொண்டு,  நான் எனக்கு அறிமுகமான அரசியல்வாதிகள், மேலதிகாரிகளைப் பற்றியும் அந்தத் தொடர்புகளால் அவனுக்குக் கிடைக்கூடிய வியாபார அனுகூலங்களைப் பற்றியும் பேசி என் பெருமையை நிலைநாட்டிக் கொள்ள முயல்வேன். அவனுக்கு முழுமையாக நம்பிக்கை வரும் வகையில்  நான் முழுமூச்சாக என் கதைகளைச் சொல்வேன். என் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை பிறந்தாலும்கூட, அதைக் காட்டிக் கொள்ளாமல் ‘இதையெல்லாம் நானும் செய்யக்கூடியவன்தான் பார்த்துக் கொள்’ எனும் விதமாக முகத்தை வைத்துக் கொள்வான். என் முன்னால் தனது மதிப்பு கொஞ்சமும் சரிந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பான்.

செளஃபி என்னைச் சலிப்புடன் பார்த்துச் சிரிக்க முயல்வான். சிகரெட் புகைத்துக் கருமை படர்ந்திருந்த அவனது தடித்த உதடுகள் கோணலாக நெளியும். காப்பிக் கடையில் பலகோடி வெள்ளி திட்டங்கள் பற்றியும் அரசியல் பற்றியும் அரட்டையடித்து நேரத்தை ஓட்டும் நபர்களை கையாளும் விதமாக அவன் என்னிடம் நடந்து கொள்வான்.  நான் அவனுக்கு,  ஒரு கோப்பை தொங்காட் அலி காப்பியும் வெந்நீரும் குடித்துவிட்டு,  வெற்றுக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்கும் ஒரு வீணன்.

நான் அதற்கெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. என் கவனம் முழுவதும் அவனைக் கவர்வதிலும் வியப்படையச் செய்வதிலும் இருக்கும். இந்தக் கழுதை மெல்ல மெல்ல என் சொற்களில் சிக்கிக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும். எப்படியிருந்தாலும் அவன் என்னை நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் எனக்கு உண்மையாகவே முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டு என்று அவனுக்குத் தெரியும். குறைந்தது அந்தப் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொள்ளும் விழாக்களுக்குச் செல்லும் வாய்ப்பு அவனைவிட எனக்குத்தான் அதிகம் என்பதை அவன் தெரிந்தேயிருந்தான்.  ஆகவே,  நான் எழுந்து செல்வது போல பாவனை செய்தால் அவன் என்னைத் தடுத்து பேச்சைத் தொடர ஏதாவது வழிதேடுவான். பணத்தாசை பிடித்த அவன் என் மூலம் ஏதாவது பெரிய இடத்து வியாபார ஒப்பந்தம் பெற்றுவிட, சலிக்காது முயன்று கொண்டே இருந்தான்.

இன்று எனக்குக் கடுமையான பண நெருக்கடி. இந்தக் கழுதையைத் தவிர வேறு யாரையும் சந்திக்க எனக்கு விருப்பமில்லை. என் வருகையை ஒரு வார்த்தையும் பேசாமல் ஒரு கழுதையைப் போலத்தான் அவன்  வெறித்துப் பார்த்தான். நான் அங்கிருந்த அந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்த பின்னர் கதை பேச தொடங்கினேன். அரசியல் கதைகளின்  வழி, தூண்டிலை வீசினேன்.  அப்போதுதான், நாடு ஒரு ரப்பர் தோட்டத்துக்குச் சமமானது என்ற என் கருத்தைச் சொன்னேன். நான் பேசுவதெல்லாம் ஏற்பானவைதானா என்பதைப் பற்றிய கவலையின்றி செளஃபியின் காதுகளை என் மூளையில் சராமாறியாகத் தோன்றிய கருத்துகளால் நிறைத்துக் கொண்டிருந்தேன். எப்படியிருந்தாலும் நான் கடன் வாங்கத்தான் வந்துள்ளேன் எனத் தெரிந்திருந்த செளஃபி தான் உயர்தகுதி கொண்டவன் என்ற மிடுக்கோடு அமர்ந்திருந்தான். பின்னர்  அதே மிடுக்கோடு எழுந்து, நான் அவன் எதிரில் இருப்பதே தெரியாதது போல  பின்னால் போனான்.  அங்கே கழிப்பறையும் மண்டபம் போன்ற அகண்ட கூடமும் மட்டுமே இருப்பதால், அவன் பின்னால் என்ன செய்யப் போகிறான் என எனக்குத் தெரியவில்லை.

நான் செளஃபியிடம் நூறு வெள்ளி பெற்ற பின்னர்தான் அங்கிருந்து கிளம்பினேன்.  இன்று இரவு நடைபெறவுள்ள ஒரு தொடக்கவிழாவில் நான் சந்திக்கவிருக்கும் அரசியல்வாதியிடமிருந்து கிடைக்கப் போகும் வியாபார வாய்ப்பை செளஃபியோடு பகிர்ந்து கொள்ளப் போவாதாகச் சொல்லி அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினேன். அந்த விழாவுக்குச் செல்லத் தேவைப்படும் பணத்தைச் செளஃபி கொடுக்காவிட்டால் அந்த அரிய வணிக வாய்ப்பு கைநழுவிப் போய்விடும் எனக் கூறினேன். இறுதியில், அவன் கொடுக்கும் கடனுக்குக் கூடுதலாக இருபது வெள்ளியைக் கொடுப்பதாகச் சொன்னதும் உடனே நூறு வெள்ளியைக் கொடுத்தான். ‘வட்டி வாங்கும் நீ ஒரு யூதன்…’ நான் மனதில் சபித்துக் கொண்டேன். நான் மனதிற்குள் கறுவியது அவன் காதில் கேட்டுவிட்டது போல அவன் சட்டென என்னை நோக்கி,

“ஃபாருக், என்னை வட்டி வாங்கும் யூதன் என நினைத்துவிடாதே… அந்த இருபது வெள்ளி, இன்று உனக்குக் கிடைக்கப் போகும் வியாபார வாய்ப்புக்காக நீ எனக்கு கொடுக்கும் சிறு விருந்துக்கானது. நீயும் சற்று முன் அப்படிதானே சொன்னாய்? அதோடு, நீ எழுதப்போகும் அரசியல்வாதியைப் பற்றிய அந்த நூலை அச்சேற்றும் வாய்ப்பை மறக்காமல் என்னிடமே கொடுத்துவிடு”.

நான் ஒப்புக்குத் தலையாட்டினேன். வட்டிவாங்கும் பாவச்செயலுக்கு இந்தக் கழுதையும் அஞ்சுவது வேடிக்கையாக இருந்தது.

இன்று இரவு பிரபல விடுதி ஒன்றில் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதி ஒருவர் கலந்து கொள்ளும் நூல் அறவாரிய தொடக்கவிழாவுக்குச் செல்கிறேன். சிறப்பு விருந்தினராக என்னையும் அழைத்திருந்தனர். இதுபோன்ற விழாக்களுக்கு என்னையும் அழைப்பது வழக்கம். அரசியல் கட்டுரைகள் எழுதும் எழுத்தாளனாகவும் வாய்ப்பு கொடுக்கும் இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதும் கட்டற்ற நிருபராகவும் நான் செய்யும் பணிக்குக் கிடைக்கும் அழைப்புகள் அவை. இரண்டு மாதாந்திர இதழ்களை வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு பதிப்பகத்தில் முன்பு ஆசிரியராக நான் பணியாற்றினேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பதிப்பகம் மூடப்படும் வரை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அந்நிறுவனத்தில் வேலை செய்தேன். அதன் பின்னர் எனக்கு யாரிடமும் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்வதே பிடிக்காமல் போய்விட்டது. சுதந்திரமாக இயங்குவதில் அதிக ஆர்வமேற்பட்டது. 

ஊடகத்துறையில் நீண்டகாலம் வேலை செய்த அனுபவத்தால், ஊடகங்களில் தவப்புதல்வர்களாகவும் தேவதூதர்களாகவும் தங்களை வர்ணித்துக் கொள்ள விரும்பும் அரசியல்வாதிகள் பலருடைய  அறிமுகங்களைப் பெற்றிருந்தேன். அவை சுயநலத்துக்காகப் பசப்பும் அற்ப நட்புகள் என்றாலும்கூட, என் வயிற்றுப் பாட்டுக்கு அவை வழி அமைத்துக் கொடுத்தன. அந்தப் போலியான நட்பிலிருந்து எனக்குத் தேவையானதை உறிஞ்சிக் கொள்ள ஆரம்பித்தேன். கடந்த ஆண்டு முதலமைச்சர் தகுதியில் இருக்கும் ஒரு அரசியல்வாதியைப் பற்றிய அரசியல் புத்தகம் ஒன்று எழுத கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

அது ஒன்றும் அரசியல் சமூகவியல் அறிவுசார் நூல் அல்ல. மாறாக, அந்த அரசியல்வாதியை  மகா அலேக்சாந்தர் அளவுக்கும் சாலேஹுடின் அல் அயூபி அளவுக்கும் வெற்று மொழியில் உயர்த்திப் புகழ்பாடும் ஒரு நூல். அந்த நூலை எழுதவும் பதிப்பிக்கவும் நான் பெற்ற பணத்தால் ஒருவருடம் வேலையில்லாமலே வாழ முடிந்தது. அந்த நேரத்தில் செளஃபி என்னைத் தேடி வராமல் இருப்பானா? கழுதையைப் போல அவன் என் பின்னால் வந்தான். அந்த நூலை பதிப்பிக்கும் வேலையை அவனிடம்தான் தந்தேன். ஆனால், அவ்வளவு எளிதில் அதைக் கொடுத்துவிடவில்லை. என் விருப்பத்துக்கு அவனை அலையவிட்டு நன்றாக வதைத்த பிறகுதான் கொடுத்தேன். ஆறு மாதத்துக்கு செளஃபி தன் மிடுக்கையெல்லாம் மறைத்துக் கொண்டு என்னிடம் மிகப் பணிவாக நடந்துகொண்டான். ஆனால் அவனுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தையெல்லாம் கொடுத்து முடித்த பிறகு, சில மாதங்களில் நான் பழைய நிலைக்குத் திரும்பிய பிறகு, அவன் மீண்டும் தன் சப்பை மூக்கை விடைத்துக் கொண்டு என் முன் நிற்கத் தொடங்கினான். 

இன்று இரவு தொடக்கவிழா நடைபெறவுள்ளது. மத்திய அரசின் அமைச்சர் தகுதி பெற்ற அரசியல்வாதியொருவர் விழாவுக்குத் தலைமை தாங்குகிறார். இந்த அரசியல்வாதியை முன்பு நான் நடத்திய இதழுக்காக நேர்காணல் செய்துள்ளேன். அவரைப் பற்றி,  என் மனசாட்சிக்கு விரோதமாக  வானளாவ புகழ்ந்து ஒரு நாளிதழிலில் கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரை வெளிவந்த மறுநாளே பத்திரிகை அலுவலகத்தில் செயலாளாராக இருக்கும் என் நண்பன் அழைத்து, அமைச்சர் கட்டுரையை வாசித்து மனம் குளிர்ந்து போயிருப்பதாகவும் எல்லாருக்கும் நன்றி சொன்னதாகவும் தெரிவித்தான். நான் வீசிய இரையை அந்தக் கிழட்டு சுறா கெளவி விட்டதாகவே நான் நினைத்துக் கொண்டேன்.  அந்த அரசியல்வாதிக்கு என் பெயர் பரிச்சயமாகியிருக்கும் என்று எனக்குத் தெரியும். அந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி அவரைச் சாமர்த்தியமாக அணுகினால் என் ஒருவனின் வயிற்றுப்பாட்டுக்கு மட்டும் அல்ல, அவ்வப்போது முகத்தைச் சுழித்துக் கொண்டு கடன் கொடுக்கும் செளஃபியின் வாழ்வாதாரத்துக்கும் கொஞ்சம் உதவிட முடியும் என நினைத்தேன்.

இன்று இரவு நான் அந்த அரசியல்வாதியைச் சந்திப்பேன். விருதுண்ணும் போதுதான் அவரை நெருங்கி பேச வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டேன். அழைப்பிதழில் அது ‘பஃபேட்’ விருந்து எனப் போடப்பட்டிருந்தது. கூடவே அழைப்பிதழ் கொண்டுவருபவர்கள் மட்டுமே அந்த அரசியல்வாதியுடன் விருந்துண்ண அனுமதிக்கப்படுவார்கள் என்ற குறிப்பும் இருந்தது. அது ‘பஃபேட்’ விருந்துதானா என உறுதிபடுத்திக் கொள்ள விடுதிக்கு அழைத்து விசாரித்தேன். இனிய பெண்குரல் ‘ஆமாம்’ என்றது. அந்த அரசியல்வாதி தன் விருந்தினர்களுக்கு  ‘பஃபேட்’ விருந்துபசரிப்பு கொடுக்கவே விரும்பினாராம். வழக்கமான மேசை உபசரிப்பு விருந்து போல் இல்லாமல் இதுதான் விருந்தினர்களோடு சகஜமாக பழக உதவுமாம்.

இதுவெல்லாம், தங்களை மக்களின் நேசத்திற்குரிய அரசியல்வாதிகள் எனக் காட்டிக் கொள்ள எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் தேய்வழக்கு உத்திகள்தானே. இந்த அரசியல்வாதிகளை எப்படிக் கையாள்வது என்னும் வழிமுறை குறிப்புகளை நான் என் மூளையில் பதிவு செய்து வைத்து விட்டதால்,  இவர்களின் நடிப்பைப் பற்றியும் இவர்கள் போடும்  நாடகங்கள்  பற்றியும் எனக்குக் கொஞ்சமும் அக்கறையில்லை. அவர்களை அணுகிச் செல்வதற்கான வாய்ப்பு மட்டும்தான் எனக்கு முக்கியம். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களைப் பற்றிய அரசியல் நூல் ஒன்று எழுத விரும்புவதாகக் கூறுவேன். அதற்குத் தேவையான தரவுகளும் ஆவணங்களும் தயாராக இருப்பதாக ஒரு பொய்யை அவிழ்த்து விடுவேன். சில பகுதிகளை எழுதி முடித்துவிட்டதாகக்கூட தயங்காமல் கதைவிடுவேன். அவரின் ஆர்வம் எனக்குத் தெரியும். அந்த அரசியல்வாதி தனது  அரசியல் அடையாளமாக  முன்வைக்கும் கருத்துகள் பற்றியும் எனக்குத் தெரியும். நான் அறிந்தவற்றிலேயே மிக மலினமான கருத்துகளாக அவை இருந்த போதும், உங்களின் உயர்ந்த சிந்தனைகளைக் கோட்பாட்டு அடிப்படையிலும் நடைமுறை சார்ந்தும் அறிவார்ந்த நிலையில் தரமாக எழுதுவேன் என அவரிடம் கூறுவேன். ஓர் ஆடு கூட அவ்வகை மடத்தனமான கருத்துகளைக் கூச்சமின்றி புகழாது. ஆனால் நான், என் முகபாவனையைத் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தது போல வைத்துக் கொண்டு, அவரது கருத்துகள் இந்த உலகையே புரட்டிப் போடக் கூடியவை எனப் புகழ்வேன்.  கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சிந்தனாவாதி ரூசோவின் கருத்துகளுக்கு அவை நிகரானவை எனக் கூறுவேன்.  உலகப் போக்கை மாற்றக் கூடிய ஒரு மாபெரும் அரசியல் சித்தாந்தம் என வியப்பேன். 

தனது மெய்யான அறிவாற்றல் வெளிப்பட்ட பெருமையில் மத்தியகால தத்துவாசிரியன் போல தலைமயிர் காற்றில் அசைய நிமிர்ந்து நின்றபடி அரசியல்வாதி சுற்றிலும் இருப்பவர்களை நோட்டம் விடுவார். அபு நவாஸின் பொய்மொழிகளில் மயங்கிய கலிஃபா ஹாருன் அமினுரஷிட் போல எனது போலியான புகழ்ச்சியில் அந்த அரசியல்வாதி தன்னை மறந்து, என் சொற்களுக்குத் தலையசைத்துக் கொண்டிருக்கப் போகும் காட்சியை நினைத்துப் பார்க்கிறேன்.

வீட்டுக்கு வந்து புதிதாக வாங்கிய பாத்தேக் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். கைவேலைப்பாடுள்ள இந்தக் கிளாந்தான் பாத்தேக் சட்டையை வாங்க என் ஒரு மாத வருமானத்தை இழந்தேன். இன்று இரவு இந்தப் புத்தம் புது பாத்தேக் சட்டையில் மின்னுவேன். மினுங்குவேன். மிக இனிய மணம் பரப்பும் ஃபெராரி வகை வாசனையைத் தெளித்துக் கொண்டேன். இந்த வாசனையை மிக முக்கியமான விழாக்களுக்கு மட்டும்தான் பயன்படுத்துவேன். காரணம், இதன் விலை மிக அதிகம். கடந்த ஆண்டு மூன்றே முறைதான் இதைப் பயன்படுத்தினேன். மற்ற நாட்களில் விலை மலிவான மற்ற வாசனைகளைப் தெளித்துக் கொள்வேன். செளஃபியிடம் கடன் பெற்ற பணத்தில் இருபது வெள்ளியைச் செலவு செய்து ஒரு ஜோடி காலுரையும் விலை சற்று அதிமான கீவீ சப்பாத்து போலிஷும் வாங்கி வந்தேன். என் காலணியின் பளபளப்பு இன்றைய விருந்தினர் கண்களைக் கூசச்செய்ய வேண்டும்.

விழாவில் மற்றவர்களுடன் நானும் கலந்துகொண்டேன். எனக்கு அறிமுகமான ஊடக நண்பர்களைப் பார்த்து தலையசைத்தேன். எனக்குச் சிலர் முகமன் கூறினார்கள். நான் சிலருக்கு முகமன் கூறினேன். அவையொழுங்கு மிக்க அரசாங்க நிகழ்ச்சியான அந்த விழா எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. விருந்தினர்களுடன் சகஜமாகப் பழகும் விதமாக அந்த விழா இருக்க வேண்டும் என்பதே அந்த அரசியல்வாதியின் விருப்பம் என முன்பு பேசிய இனிய குரல் நங்கை தெரிவித்தாள். ஆனால் இரவுச் சந்தையிலோ, கம்பத்து திருமண விருந்திலோ, சுராவ்  நிகழ்ச்சியிலோ அல்லது குறைந்தபட்சம், திறந்தவெளி இலவச கலைநிகழ்ச்சிகளிலோ காணக்கூடிய சகஜ நிலையை நான் அந்த விருந்தில் காணவில்லை.

அங்கே நான் பார்த்ததெல்லாம், பிரபுக்கள் போலும் பூர்ஷுவாக்கள் போலும் ஆடம்பர உடைகளுக்குள் தங்கள் உடல்களைத் நுழைத்துக் கொண்ட மனிதர்களையும் அவையொழுக்கம் மிக்க அந்த அரசாங்க நிகழ்ச்சியை அவர்கள் அமைதியாகத் தொடர்வதையும்தான். மரியாதைக்குரிய பெரிய மனிதர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள, நடையிலும் குரலிலும் அதீத பணிவைக் காட்டும் பலர் அங்கிருந்தனர்.

பிரமுகர்கள் புடைசூழ அந்த அரசியல்வாதியை வரவேற்று அழைத்து வந்து, வெல்வெட் சோபாவில் அமர்த்தினார்கள். வரவேற்பு உரைகளிலும் நன்றியுரைகளிலும் புகழ்மழை தூவி நனைத்த பின்னர், அந்த அரசியல்வாதியைச் சிறப்புரையாற்ற அழைத்தார்கள். அவர் மேடை ஏறினார். அவர் அணிந்திருந்த பாத்தேக் சட்டையின் பளபளப்பு என் கண்களைக் கூசச்செய்தது. நான் எதிர்ப்பார்த்தது போலவே, அவர் மிகச் சிறந்தது என நம்பும் தன் கருத்துகளையே உரையாக வழங்கினார். அவர் எல்லா மேடைகளிலும் இதே கருத்துகளைத்தான் பேசுகின்றார். நிருபர்கள் அவரின்  பழைய உரைகளையே சிறு மாற்றங்களுடன் புதிய செய்தியாக்கிக் கொள்கிறார்கள். 

இதே விழாவில் நாட்டின் பெருமைக்குரிய கலை ஆளுமை ஒருவரும் சிறப்பு செய்யப்பட்டார். நான் அந்தக் கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவர் உண்மையாகவே ஆழ்ந்த சிந்தனையாளர்.  அவரின் பல படைப்புகள் உணர்வுகளையும் சிந்தனையையும் தூண்டக் கூடியவை.  இந்தக் கலைஞரை அந்த அரசியல்வாதியுடன் ஒப்பிட்டால், வானரத்தின் பக்கத்தில் நிறுத்தப்பட்ட மனிதனைப் போல இருப்பார். சிந்தனையிலும் பண்பாட்டு முதிர்ச்சியிலும் அவ்வளவு உயர்ந்தவர் இக்கலைஞர்.

நீட்டி முழங்கி அரசியல்வாதி தன் உரையை முடித்தார். அடுத்து ஆடல் பாடல் அங்கங்கள் அரங்கேறின. பொய்யர்களின் நிகழ்ச்சியில் அக்கலைநிகழ்ச்சி மட்டும்தான் எனக்குச் சற்றே ஆசுவசமாக இருந்தது.

விருந்தினர் அனைவருமே என் கண்களுக்கு நாகரீக உடைக்குள் உலவும் பொய்யர்களாகவே தெரிந்தனர். அவர்களும் சுயமதிப்பற்ற கயவர்கள்தாம். ஆனால்,  பளபளப்பான உடைகளில் பவனிவரும் சிறப்பு பிரமுகர்கள்தாம் இக்கயவர் கூட்டத்திலே முன் வரிசையில் இருப்பவர்கள். மக்கள் பணத்தைப் பல்வேறு ஊழல்களின் வழி கொள்ளையடிப்பவர்கள் இந்தச் சிறப்பு பிரமுகர்கள்தான். தங்களின் இரட்டைப் பேச்சுகளுக்கு ஒத்து ஊதும் பணிக்கு நியமிக்கப்பட்ட இவர்கள்தான் அரசியல்வாதிகளின் முதன்மை அடிவருடிகள். மேடையில் கடுமையாக எதிர்க்கும் ஒன்றையே நடைமுறையில் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் போன்ற கயவர்கள் வேறு யாரும் உண்டா என்ன? மக்கள் அரங்கில் தங்களை மிக யோக்கியவான்களாக முன்வைத்துக் கொண்டு, பின்னால் மறைமுகமாக எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம்விடக் கூடிய  கோரமுகத்தை  மறைத்துக் கொள்வது எப்படி என்பதைத்தான் தினமும் இவர்கள் யோசிக்கிறார்கள் போலும். 

நானும் அந்த கயவர் கூட்டத்தில் ஒருவன்தான். அரசியல்வாதிகள் கொள்ளையடித்ததில் மிச்சம் மீதியை உறிஞ்சிக் கொள்ள காத்திருக்கும் சிறுகயவன். இப்போது நிகழ்ச்சி முடிந்து அந்த அரசியல்வாதியோடு பிரமுகர்களும் மற்ற விருந்தினரும் பஃபேட்விருந்து நடைபெறும் இடத்திற்கு வந்தனர். நானும் அவர்களோடு விருந்து இடத்துக்கு முந்தினேன். விருந்து நடைபெறும் விலாசமான ஆடம்பரக் கூடத்தில், நீண்ட மேசைகளில் பல்வேறு வகையான உணவுகளும் பானங்களும் அடுக்கப்பட்டிருந்தன. கூட்டத்துக்குள் முண்டியடித்து உள் நுழைந்து உணவுகளையும் பானங்களையும் நோக்கி நகர்ந்தேன். பசித்த வயிற்றுடன் பெரிய மனிதத் தோரணையோடு ஒதுங்கி நிற்க நான் விரும்பவில்லை. ஆகவே, ஒரு வாரத்துக்கான உணவை வயிற்றில் கொட்டி நிரப்பப் போவது போல தட்டு நிறைய நிறைய உணவுகளை அள்ளி வைத்தேன். அதன் ஊடே அந்த அரசியல்வாதியை வளைத்துப் பிடிக்க சரியான இடத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த அரசியல்வாதியின் முன் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன். என்னை உடனே அடையாளம் கண்டுகொண்ட அவர் மிக்க மரியாதையுடன் முகமன் கூறியபடி என் தோள்களைத் தட்டிக் கொடுப்பார். மரியாதைக்குரிய பெரிய மனிதர்கள் போல் வேடமிட்டிருக்கும் இந்தக் கயவர் கூட்டத்தின் முன் அவர் என்னை அன்பாக அணைத்துக் கொள்ளவும் கூடும். நான் பொங்கிவரும் பெருமிதத்தில் மிதந்தபடி நிற்பேன். சுற்றியிருக்கும் கயவர்கள் என்னை வியந்து பார்ப்பார்கள். அவர்களும் என்னைப் பார்த்து பணிவாக புன்முறுவல் பூப்பார்கள். அவர்களின் பதவிகளையும் இருப்பையும் முடிவுசெய்யக்கூடிய முக்கியமான நபராக நான் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களின் மூளையைக் குடையும். நிச்சயமாக அவர்களில் பலர் என்னிடம் பேச முயல்வார்கள்.

நான் சுற்றும் முற்றும் அமர இடம் தேடி அலைந்தேன். நான் அங்கே இருப்பதையே யாரும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் கண்ணுக்கு நான் தென்படவே இல்லாதது போல இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவர்களை விட என் இருப்பு எவ்வளவு முக்கியமானது என அவர்கள் அறிந்துகொள்வார்கள் என நான் நினைத்துக் கொண்டேன். ஓரிடம் தேடி அமர்ந்து தட்டு நிறைய இருந்த உணவுகளை உண்ணத் தொடங்கினேன். முடிந்தவரை எல்லாவற்றையும் வயிற்றுக்குள் திணித்தேன். உண்ணமுடியாமல் மிச்சமிருந்த உணவுகளையும் தண்ணீர் குடித்து வயிற்றுக்குள் தள்ளினேன். கடைசியில் என் தட்டும் கோப்பையும் காலியாகிவிட்டன. வயிறு நிறைந்துவிட்டதன் அடையாளமாகப் பெரிய ஏப்பம் வந்தது. நாகரீக உடையில் இருந்த நடுவயது பெண் ஒருத்திக்கு என் ஏப்பம் பெரும் தொல்லையாக இருந்தது. என்னை ஏளனமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்றாள்.  நானும் அங்கிருந்து வேறு இடத்திற்கு நகர்ந்தேன். சட்டென அந்தப் புகழ்பெற்ற கலைஞனை அங்குப் பார்த்தேன். அவருடைய புகழையும் அறிவையும் இரவல் பெற அவரைச் சூழ்ந்து நின்ற கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவர் அருகில் சென்றேன். அந்த உயர் கலைஞனைச் சூழ்ந்து நிற்கும் அத்தனை காயவர்களையும் உதைத்து விரட்ட வேண்டும் எனத் தோன்றியது.

நான் அவர் எதிரில் நின்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்பது உறுதியானது. நான் அவரின் படைப்புகளுக்குத் திறனாய்வு செய்து எழுதியதைச் சிரமப்பட்டு ஞாபகப்படுத்தியதோடு அவரின் சிந்தனைகளையும் கலை நுட்பங்களையும் தொட்டுப் பேசினேன். அந்தக் கலைஞன் என் பேச்சில் மயங்கிவிட்டதாகவே தோன்றியது. நான் அவரின் படைப்புகளில் காணப்படும் நுட்பமான  குறியீடுகளின் பொருளை மேலும் விரிவாக அறிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னேன். அந்தக் கலைஞர் என் அறிவுக் கூர்மையில் வியந்துபோனர். என்னை மிக்க மரியாதையுடன் பார்த்தார். நேரத்தை வீணடிக்காமல், உடனே ஒரு மூலையைத் தேடிப் பிடித்து,  குறியீடுகள் பற்றியும் அவரின் சிந்தனைகள் பற்றியும் அளவளாவ அவரை அழைத்துவந்தேன். சற்று முன் அவரைச் சூழ்ந்திருந்த விருந்தினர்களை ஒதுக்கித் தள்ளினேன். அந்த வேடதாரிகளைவிட நான் இப்போது மிக முக்கியமான நபராக உணரத்தொடங்கினேன். அக்கலைஞரிடம் நான் என் சந்தேகங்களை மிகத்தீவிரமாக கேட்டு உரையாடினேன். எங்களைச் சூழ்ந்திருந்த விருந்தினர்கள் பல்வேறு சந்தேகங்களுடனும் குழப்பங்களுடனும் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேறு வழியின்றி நாங்கள் பேசிக் கொள்வதைத் தள்ளி நின்று தன் எஜமானனின் கட்டளைக்குக் காத்திருக்கும் மரங்கொத்தியைப் போல கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் அக்கலைஞருடன் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த அரசியல்வாதி எங்களை நோக்கி வருவதைப் பார்த்தேன். மெல்ல நடந்து வரும் அவரை நான் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இக்கலைஞரைச் சந்திக்கத்தான் அவர் வருகிறார் என்பது எனக்குத் தெரியும். வரட்டும். இக்கலைஞருக்கு சலாம் கூறும்போது இங்கே நானும் இருப்பதைப் பார்த்து அவர் வியக்கக்கூடும். இக்கலைஞருடன் பேசக்கூடிய தகுதிபெற்றவன் நான் என அவர் உணர்ந்து கொள்ளட்டும். பிறகு தன் பெரிய சரீரத்தைச் சுருக்கி எங்கள் இருவருக்கும் இடையில் பவ்யமாக அமர்ந்து கொள்ளட்டும். அப்போது, இரு முக்கியமான நபர்கள் என்னுடன் அமர்ந்திருப்பதை விருந்தினர்கள் பார்ப்பார்கள். அவர்கள் என்னை வியந்து நோக்குவர். அவர்கள் எல்லோருடைய இருப்பையும் விட என் இருப்பு விலைமதிப்பற்றது என்பதை அவர்களுக்கு உணர்த்திவிடுவேன்.

அந்த அரசியல்வாதி எங்களை நெருங்கி அந்தக் கலைஞரின் எதிரில் நின்றார். வயது முதிர்ந்த அந்தக் கலைஞர் எழ சிரமப்பட்டு அமர்ந்தவாரே அரசியல்வாதிக்கு சலாம் கூறி மிக்க மரியாதையுடன் கைகொடுத்தார்.  கலைஞரின் வயோதிகத்தை உணர்ந்த அரசியல்வாதி குனிந்து அவருக்குக் கைகொடுத்தார். கலைஞரின் கைகளுக்கு மிகுந்த பணிவுடன் முத்தமிட்டார். நான் அந்த அரசியல்வாதியின் செயல்களை அமர்ந்தவாரு பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அரசியல்வாதிக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்கவில்லை என்பது உறுதியாக தெரிந்தது. அதோடு நான் அங்கிருப்பதைப் பற்றியே அவர் சட்டைசெய்யவில்லை.

எனக்குச் சட்டென ஆவேசம் வந்தது போலானது. அந்த அரசியல்வாதியின் மடத்தனத்திற்குத் தக்க பாடம் போதிக்க வேண்டும் எனத் தோன்றியது. நானும் அவர் அங்கிருப்பதைப் பற்றி சட்டைசெய்யாமல் இருக்கவேண்டும். அவரை அலட்சியப்படுத்த வேண்டும்.  அவரைப் போன்ற ஒரு வானரத்திற்கு என்னைப் போன்ற கல்விமான்களிடையே எந்த மதிப்பும் இல்லை என அவருக்கு உணர்த்த வேண்டும். நானும் அந்தக் கலைஞரும் அவரைவிட பலமடங்கு தகுதி உயர்ந்தவர்கள் என்பதை அவருக்குக் காட்ட வேண்டும். ஒரு அரசியல்வாதியாகவும் அமைச்சராகவுமே இருந்தாலும் எங்களைப் போன்ற மேன்மையானவர்களுக்கு அவர் தூசுக்குச் சமமானவர்தான். பண்பாட்டு முதிர்ச்சி பெற்ற இவ்வுலகில், எங்களைப் போன்ற பண்பாட்டு அறிவும் உலக ஞானமும் கொண்டவர்களை அவரைப் போன்ற அரசியல்வாதிகள் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். அவர்களின் அறிவீனத்தையும் சிறுமையையும்  நினைத்து அவர்களே உள்ளம் நடுங்க எங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

அவர் சற்றே அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தது எனக்கு எல்லையில்லா பெருமையைக் கொடுத்தது. ஆனாலும் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்பதோடு அவர் கண்களில் கொஞ்சமும் மரியாதை தென்படவில்லை. அரசியல்வாதி சலாம் சொல்லி என்னை நோக்கி கைகளை நீட்டினார். ஒருவேளை அந்தக் கலைஞருக்கு மனம் கோணக்கூடாது என்பதால்  இருக்கலாம். எனக்குப் பெருமிதத்தில் மனம் விம்மியது. ‘பார். இந்தக் கிழட்டுக் கழுதை தானே முன்வந்து எனக்கு கைகொடுக்கிறது. நான் அவருக்கு கைகொடுக்க முந்தவில்லையே’.  தத்துவ அறிவோ பண்பாடோ தெரியாத  அந்த அரசியல்வாதிக்கு புத்தியில் உரைப்பது போல நேருக்கு நேராக ஒருமுறை பார்த்தேன். பிறகு, அவரின் சலாமுக்கு அலட்சியமாக மறுமொழி சொன்னேன். நான் எழுந்து நிற்கவில்லை. அந்த அரசியல்வாதி என் முன் நின்றிருக்க நான் அமர்ந்த படியே சலாம் சொல்வதை அவர் அதிர்ச்சியாகப் பார்த்தார். ஒருவேளை தன்னை வெளிப்படையாக அலட்சியப்படுத்தும் ஓர் ஆளை இதுவரை அவர் பார்த்திருக்கவில்லை போலும். அங்கிருந்தவர்களில் நான் ஒருவன் மட்டுமே அவருக்குக் கைக்கொடுக்க முந்தவில்லை. அதேபோல மிகப் பணிவாகப் பெயர் அட்டையைக் கொடுத்து, கிடைக்கூடிய வியாபார வாய்ப்புகளுக்கான பேரங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச  சந்திப்புக்குத் தேதி குறித்துக் கொள்ள முயலவில்லை.

நான் சற்றும் மரியாதை இல்லாத தோரணையில் அமர்ந்திருந்தேன். மிக அலட்சியமாக அவர் கைகளைப் பற்றி சலாம் சொல்லிவிட்டு, ‘எங்கள் உரையாடலுக்கு குறுக்கே வராமல் இங்கிருந்து விலகிப் போ’ என விரட்டும் விதமாக சோபாவில் சட்டென சாய்ந்து கொண்டேன். அந்த அரசியல்வாதி, கலைஞரிடம் விடைபெற்றுக் கொண்டு என் முகத்தைப் பார்க்காமலே அங்கிருந்து சென்றார். எனக்குள் பெருமகிழ்ச்சி கர்வத்தோடு பாய்ந்து ஓடுவதை உணர முடிந்தது. அந்த அரசியல்வாதியை முட்டாளாக்கியதில் நான் பெரிய சாதனை செய்துவிட்டது போல இருந்தது. என் சுயமரியாதையைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் அலட்சியமாக அமர்ந்திருந்த என் முன் அந்த அரசியல்வாதியைக் குனிந்து சலாம் செய்ய வைத்த என் செயலை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது.  தான் முற்றாக அலட்சியம் செய்யப்படும் செயலைப் உணர்ந்த அந்த அரசியல்வாதியின் கண்களில்  வியப்பையும் குழப்பத்தையும் பார்த்தேன். பெருமிதமும் கர்வமும் என் எல்லா சுவாச துளைகளையும் நிறைத்தன. நான், அந்த அரசியல்வாதியை ஒரு முட்டாள் கழுதையாக்கிவிட்டேன். ‘இதோ பார்த்துக் கொள்ளுங்கள் கயவர்களே,  மூன்று மணி நேரமாக நீங்கள் இங்கே தேடி கிடைக்காத சுயமரியாதையை நான் ஒரே வினாடியில் இப்போது பெற்று விட்டேன்’  என உரக்கக் கூறும் விதமாகப் பெருமிதத்தோடு அங்கிருந்த கூட்டத்தினரைப் பார்த்தேன்.

சட்டென நான் அங்கு வந்த நோக்கம் ஞாபகத்திற்கு வந்தது. அந்த அரசியல்வாதியின் முன் மண்டியிட அல்லவா நான் அங்கு வந்தேன். அவரின் சுய அரசியல் வரலாற்று நூல் எழுதும் திட்டத்தை அற்புதமாக விளக்கி,  அவரின் சம்மதத்தைப் பெற்று, நூல் பதிப்புச் செலவுக்கான பணத்தை மொத்தமாக வாங்கிவிடலாம் என்பதுதானே திட்டம். உறுதியான மரநாற்காலியில் சுயநினைவற்றவனைப் போல சரிந்து கிடந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர் கேட்ட கேள்விகூட என் மூளைக்கு எட்டவில்லை. என் முன் இருந்த பெரிய கண்ணாடியில் பார்த்தேன். ஒப்பற்ற அந்தக் கலைஞருக்குப் பக்கத்தில் ஒரு வானரம் அமர்ந்திருந்தது. நான் என் முகத்தில் கைவைத்துப் பார்த்துக் கொண்டேன். நான் உண்மையாகவே ஒரு குரங்காக மாறிவிட்டேனா என்ன? நான் குழப்பத்தில் தலையை ஆட்டிக் கொண்டேன். கலைஞரிடம் அவசரமாக விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

உணவு உண்ணும் கூடம், மாடிப்படி எனப் பல இடங்களிலும் அரசியல்வாதி கண்ணில் படுவாரா எனத் தேடினேன். அவர் எங்கும் இல்லை. சற்றுமுன் நான் எழுந்து நின்று, சற்றே உடல் வளைத்து அவருக்கு சலாம் சொல்லி என்னை நன்முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? அந்தக் கலைஞரைச் சந்திக்க வந்த அரசியல்வாதி, பக்கத்தில் அமர்ந்திருந்த எனக்கும் கைகொடுத்தாரே, அந்த நிமிடம், அற்புதமான வாய்ப்பு அல்லவா? எழுந்து நின்று அவருக்கு முகமன் கூறிய அடுத்த நொடியில் விலாங்கு மீன் போல மிக சாமர்த்தியமாக, அவரைப் பற்றிய அரசியல் நூல் ஒன்றை எழுத நான் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறேன் என்பதை நயமாகக் கூறி அவரைக் கவர்ந்து அந்நூலுக்கான அனுமதியை என்னால் பெற்றிருக முடியாதா?  

தலையில் அடித்துக் கொண்டேன். எத்தனை மடத்தனமான காரியத்தைச் செய்திருக்கிறேன் என யோசித்து மனதிற்குள் புலம்பினேன். எந்தக்  கழுதையின் மந்த புத்தி என்னை ஆட்கொண்டதோ தெரியவில்லை. ஒரு பொன்னான வாய்ப்பை அலட்சியமாக நழுவவிட்டு விட்டேன். என் முட்டாள்தனத்தையும் அபத்தத்தையும் நினைத்து நினைத்து, என்னை நானே சபித்துக் கொள்வதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. 

வரண்டு கிடக்கும் என் பாக்கேட்டை நினைத்தபடி இருளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். கடந்த மூன்று மாதங்களாகவே எனக்கு எந்த வேலையும் அமையவில்லை. இன்று இரவு கிடைத்த அந்த ஒரே வாய்ப்பையும் என் முட்டாள்தனத்தால் நாசமாக்கிவிட்டேன். செளஃபியிடம் கடனாகப் பெற்ற நூறு வெள்ளியில் நாற்பது வெள்ளிதான் மிச்சமாக இருக்கின்றது. அது இன்றைய வாடகை வண்டிச் செலவுக்கும் நாளைய காலையுணவு, மதிய உணவு ஆகியவற்றுக்கும் சரியாக இருக்கும். நாளை மாலை செளஃபியை மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கொஞ்சம் கடன் கேட்க வேண்டும். அவனிடம் என்னவென்று சொல்வது? இன்று இரவு நடந்ததை அவன் அறிந்தால், இந்த உலகில் வாழ்ந்த கழுதைகளிலேயே முழுமுட்டாள் கழுதை நான்தான் என்று கண்டபடி ஏசுவானே.

நான் என் மனதைச் சாந்தப்படுத்திக் கொள்ள முயன்றபடி நடந்துகொண்டிருந்தேன். அதற்கிடையில், நாளை செளஃபியிடம் சொல்ல வேண்டிய கதை ஒன்றை மனதில் தயார் செய்து கொண்டேன். இதோ இப்படி ஒரு கதையைத்தான் அவனிடம் நாளை சொல்ல வேண்டும்… ‘ஒரு நாடு என்பது ஒரு ரப்பர் தோட்டம் போன்றது. அரசியல்வாதிகள்தான் தோட்ட நிர்வாகிகள். மற்றவர்களும் ஏதேதோ பணிகளில் இருக்கிறார்கள்’ அது சரி… நான் யார்? அந்த ரப்பர் தோட்ட நாட்டில் நான் என்னவாக இருக்கிறேன். மரம் சீவுகிறவனா? மண் கொத்துகிறவனா? வேலி அமைக்கிறவனா? சாயம் பூசுறவனா? எடுபிடியா? எது என் இடம்? எதுவுமே எனக்கு பொருத்தமானதாக தோன்றவில்லை.

“நீ மீண்டும் மீண்டும் சீவப்படும் அந்தக் கிழட்டு ரப்பர் மரம்”. செளஃபி எங்கிருந்தோ பெருஞ்சிரிப்புடன் கத்துவது எனக்குக் கேட்கிறது. நாளை அவன் தன் சப்பை மூக்கை மேலும் விடைத்துக் கொண்டு என் எதிரில் மிடுக்காக நிற்பதைப் பார்ப்பேன். அப்போது மூளியாகிவிட்ட பழைய ஈயச்சட்டி தன் அடர்ந்த சாம்பலை அள்ளி என் முகத்தில் வீசுவது போல இருக்கும்.

AHLI POLITIK

மலாய் மூலம்: எஸ். எம். ஷாகீர் / S.M.Zakir

தமிழில் : அ. பாண்டியன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...