அவன் மாஹ்டை சந்தித்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் சாத்தேவுக்குப் பேர்போன சிறு நகரமான காஜாங்கில் ஒன்றாகப் படித்தார்கள். ஆனால், அவர்கள் ஒரே பள்ளியில் படிக்கவில்லை. அவன் ஒரு பள்ளியில் படித்தான். மாஹ்ட் வேறு பள்ளியில் படித்தான். ஆனால், ஒவ்வொரு நாளும் பள்ளி விட்டு திரும்பும்போது பேருந்து நிலையத்தில் கட்டாயம் சந்தித்துக் கொள்வார்கள்.
அப்போது காஜாங் நகரில் இரண்டு பேருந்துகள்தான் ஓடிக் கொண்டிருந்தன. ஒன்று ஃபோ ஹாப். இன்னொன்று சம் ஓம்னிபஸ். ஃபோ ஹாப் செராஸ் பக்கமாக உள்ள இடங்களுக்குச் செல்லும். சம் ஓம்னிபஸ் தெற்காக, ரேகோ சாலையில் மாவட்டத்தின் எல்லையில் உள்ள அரசாங்க நிலத்திட்டப்பகுதி வரை சென்று திரும்பும். காஜாங் முன்பு இப்போது இருப்பதுபோல் இல்லை. இந்த நகரம் ஒற்றை கடைவீதி வரிசை உள்ள கெளபாய் நகரம் போல இருந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. அகண்ட ஜெ கே ஆர் திடலையும் அந்தத் திடலுக்குப் பின்னால் இருந்த காட்டையும் ஆறு ஒன்று பிரித்துக் கொண்டு சென்றது. அந்த ஆறு பாடாங் சாசாரை நோக்கி நகரும். பாடாங் சாசாரில்தான் துப்பாக்கி குறி சுடும் பயிற்சிகள் நடக்கும்.
இப்போது அந்த ஜே கே ஆர் திடல் இருந்த இடத்தில் ஒரு பேரங்காடி வந்துவிட்டது. ஓயாமல் ஓடிக் கொண்டிருந்த ஆறு காண்கிரிட் கால்வாயாகச் சுறுங்கிவிட்டது. வங்கி, மைடீன் பேரங்காடி, கே ஃஎப் சி கட்டிடம் ஆகியன இருக்கும் கடைவரிசை முன்பு அரசாங்க குடியிருப்பாக இருந்தது. அந்த வீடுகளைக் கடந்துதான் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார்கள். ஒருமுறை அங்குக் காலியாக இருந்த வீடு ஒன்றில் அவர்கள் குழுமியிருந்தபோது வேறு ஒரு மாணவர் குழுவுடன் ஏற்பட்ட சண்டை ஞாபகம் இருக்கிறது. முன்பு காஜாங்கில் ஆக உயரமான கட்டிடமாக, காஜாங் அரங்குக்குப் பக்கத்தில் இருக்கும் டத்தோ நாசிர் கட்டிடம்தான் இருந்தது. இப்போது அந்தக் கட்டிடம் மலேசியாவில் பிரபலமான ஹாஜி சாமூரி சாத்தே கடைக்குச் சொந்தமாகி விட்டது. சுதந்திரத்துக்கு முன்பு கம்பங்களில் காவடியாக சுமந்து செல்லப்பட்ட சாத்தே வியாபாரம், இன்று மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பெருவியாபாரமாக வளர்ந்துவிட்டது உண்மையில் வியக்கவைக்கும் வரலாறுதான்.
ஆனால், அவனும் மாஹ்டும் வியக்கவைக்கும் வரலாற்றுக்குள் வரமாட்டார்கள். அவர்கள் பேருந்து நிலையத்தில் தினமும் சந்தித்துக் கொண்டு, நாளடைவில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டவர்கள். அவனும் அக்கம் பக்கத்து நண்பர்களும் பண்டார் பாரு பாங்கிக்குச் செல்லும் சம் ஓம்னிபஸில் ஏறுவார்கள். மாஹ்டின் வீடு ரேகோ சாலையில் இருந்ததால் அவன் தெற்கே செல்லும் எந்த சம் ஓம்னிபஸ்ஸும் எடுக்கலாம். எல்லாப் பேருந்துகளும் அவன் வீட்டைக் கடந்துதான் வேறு வேறு இடங்களுக்குப் பிரியும்.
மாஹ்ட் தன் அக்காளுடன் மத்திய தர மக்கள் வாழும் ஒரு குடியிருப்பில் இருந்தான். ஆகவே மாஹ்ட் அவன் செல்லும் பேருந்திலேயே பயணம் செய்ய முடிந்தது. அவர்கள் உண்மையாகவே மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். இளமையின் துடிப்பும் துடுக்குத்தனமும் நிறைந்த காலகட்டத்தை இருவரும் ஒன்றாகவே கடந்தனர். பள்ளி வாழ்க்கை முடிந்த பிறகும் சில வருடங்கள் இருவரும் நெருக்கமாகவே இருந்தனர். ஆனால் வாழ்க்கை பயணத்தின் திசைகள் மாறியதால், இருவரின் நெருக்கமும் மெல்ல குறையத் தொடங்கியது. நாளடைவில் இருவருமே தங்கள் அன்றாடங்களில் மூழ்கிப் போயினர். திருமணம் இடைவெளியை மேலும் அகலப்படுத்தியது. குடும்பத்தை அமைப்பதிலும் பணம் தேடுவதிலும் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் ஓடியது. வாழ்க்கை மேலும் பரபரப்பாகிவிட்டதாலும் பணம் தேடுவதில் நேரம் கரைந்ததாலும் அவர்களுக்கிடையேயான நெருக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது. கடைசியில் அவர் அவருக்கான உலகங்களில் இருவரும் தொலைந்து போயினர். இருபது வருடங்கள் கடந்து விட்ட பிறகு இப்போது எப்படியோ அந்த நிகழ்ச்சி கைகூடி வந்துள்ளது. இருபது வருடங்களுக்குப் பிறகு அவன் மாஹ்ட்டைத் தேடிச் செல்ல முடிவு செய்தான்.
அவனுக்கு மாஹ்ட்டின் இப்போதைய நிலை தெரிந்தே இருந்தது. மாஹ்ட்டுக்கும் இவனைப் பற்றிய தகவல்கள் தெரிந்தே இருக்கும். இருவருக்குமே அவரவர்களின் இருப்பிடங்கள் தெரிந்திருந்தன. ஆனாலும் ஏதோ ஒரு விந்தையான காரணத்தால் இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. அதற்கான முயற்சியே எடுக்கவில்லை. “நேரமில்லை…” ஆமாம் அதுதான் இருவருமே கூறிக்கொள்ளும் காரணம். அவர்களின் ‘பரபரப்பு’ காலத்தை நிலைகுத்தி நிற்கச் செய்துவிட்டது. அது மீண்டும் இயங்க தொடங்கிய போதுதான் இருவரும் சந்திக்காமலேயே இருபது ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டது உறைத்தது.
அவன் மாஹ்ட்டைத் தொலைபேசியில் அழைத்தான். அந்த எண்ணை மாஹ்ட்டின் வேறு ஒரு நண்பன் மூலம் பெற்றிருந்தான். அழைப்பை எடுத்த மாஹ்ட் நேற்று இரவுதான் கடைசியாக பேசியது போல மிகச் சாதாரணமாகப் பேசினான். இருபது வருடங்களாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை என்கிற சாயலே அவன் பேச்சில் இல்லை. அவன் குரலும் அதிக மாற்றமில்லாமல் பழைய மாதிரியே இருந்தது.
மாஹ்ட் தன் கம்பத்தில் ஆற்றங்கரையோரம் ஒரு சிறு விடுதியும் உணவகமும் நடத்துவதை வேறு ஒரு நண்பன் வழி தெரிந்துவைத்திருந்தான். முன்பு அவன் சித்தியவானில் இருக்கும் மாஹ்ட்டின் கம்பத்திற்குச் சென்றிருக்கிறான். மாஹ்ட் வைத்திருந்த மீன்பிடி படகில், கடற்படை தளத்தைச் சுற்றிக் கொண்டு லூமூட்டுக்கும் அப்படியே பங்கோர் தீவுக்கும் சென்றுவிட முடியும்.
அவன் கம்பத்துக்கு மாஹ்டைச் சந்திக்க வருவதாகச் சொன்னதும், மாஹ்ட் குதூகலமாக வரவேற்றான். இருபது ஆண்டு இடைவெளி, ஒருநாள் இடைவெளிபோல மிகச் சுலபமாக நீங்கியது. காலம் விநோதமான வஸ்து. அதை இழுத்து நெருக்க முடிகின்றது.
இன்று அவன் மாஹ்ட்டின் கம்பத்தை நோக்கி காரோட்டிக் கொண்டிருந்தான். பிளாஸ் நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிய பயணம். பீடோர் டோல் சாவடியில் வெளியேறி சித்தியவானை நோக்கி சென்று கொண்டிருந்தான். சித்தியவான் பட்டணத்தை நெருங்கியதும் கடும் மழை பெய்யத் தொடங்கியது. அவனுக்கு இந்தப் பாதைகள் பழக்கமில்லை என்பதால் கவனமாகக் காரை நகர்த்திக் கொண்டிருந்தான். அடைமழை பார்வையை மறைத்தது. அவன் அவசர விளக்கை மினுங்க விட்டு, கவனமாகச் சென்றுக்கொண்டிருந்தான். எதிரில் இருந்த கார்களும் அவனைப் போலவே அவசர விளக்கு மினுங்க மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. அடைமழையோடு காற்றும் புயலாக வீசியது. நல்ல வேளையாக, சித்தியவான் பட்டணத்தைக் கடந்ததும் மழையின் வேகம் குறையத் தொடங்கியது. சாலையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சற்று நேரத்தில் மழை தூரலாக மாறியிருந்தது. அவன் மாஹ்ட்டை தொலைப்பேசியில் அழைத்து பாதை கேட்டான். மாஹ்ட், அதே வழியில் தொடர்ந்து வரும்படி கூறினான். அதிக தூரமிருப்பதாகச் சொன்னான். கம்பத்துக்குச் செல்லும் முச்சந்தியில் அவனுக்காகக் காத்திருப்பதாக மாஹ்ட் சொன்னான். அவன் அமைதியாகக் காரை செலுத்திக் கொண்டிருந்தான். இன்னும் ஓயாத தூரலால் சாலை ஈரமாக இருந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் ஒரு சில வாகனங்களைத் தவிர சாலை வெறிச்சோடி கிடந்தது. பின் கண்ணாடி வழி பார்த்தான். சாலையில் வாகனங்களே இல்லை.
மாஹ்ட்டின் கம்பத்துக்குச் செல்லும் சாலை ஓய்ந்து கிடந்தது. இப்போது அவன் காருக்கு முன்னும் பின்னும் கூட ஒரு வாகனமும் இல்லை. அவன் ஒருவனே அந்தச் சாலையில் பயணம் செய்வது போல தோன்றியது. சாலை குண்டு குழி இல்லாமல் செம்மையாக இருந்தது. இருந்தும் சாலை ஓய்ந்து கிடப்பது அவனுக்கே வியப்பாகத்தான் இருந்தது. ஒருவேளை மாலை நேரமாகிவிட்டதால், பட்டணத்திலிருந்து வெகுதொலைவிலிருக்கும் இந்தச் சாலையைக் கார்கள் பயன்படுத்துவது குறைந்திருக்கலாம் என அவனாக அனுமானித்துக் கொண்டான். சாலையின் இடதும் வலதும் செம்பனை மரத் தோட்டங்கள் செழித்திருந்தன. மலேசியாவின் எந்த உட்புற பகுதிகளுக்குச் சென்றாலும் எல்லா காடுகளும் அழிக்கப்பட்டு அவை செம்பனை தோட்டங்களாக மாறிவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. எங்குப் பார்த்தாலும் செம்பனைகள்தான். இன்னும் சொஞ்ச காலத்தில் நாட்டிலுள்ள எல்லா வெப்ப மண்டல காடுகளும் செம்பனைக் காடுகளாக மாறிவிடக்கூடும். ஆனால், ரப்பருக்கு உலகச் சந்தையில் இருந்த மதிப்பு குறைந்து விட்ட நிலையில் செம்பனையை விட்டால் வேறு என்னதான் வழி? பெட்ரோலுக்கு அடுத்த நிலையில் இருக்கும் மூலப்பொருளாகச் செம்பனை இருக்கலாம். அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. குழப்பமாக இருந்தது. செம்பனை மர நிழலின் இருளிலும் மழையின் குளுமையிலும் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்தவனின் சிந்தனை எந்தப் பிடிமானமும் இல்லாமல் சுழன்று கொண்டிருந்தது. அந்தச் சாலை நீண்டு கொண்டே செல்வது போல இருந்தது. ஒருவேளை வினோதமான அந்த அமைதி காரணமாக இருக்கலாம் என நினைத்தான்.
திடீரென பெரும் சத்தம் காரின் கூரையிலிருந்து எழுந்தது. ஏதோ ஒரு கனமான பொருள் உயரத்திலிருந்து காரின் கூரை மேல் விழுந்தது போல இருந்தது. அவனுக்குத் தூக்கிவாரி போட்டது. கட்டுப்பாட்டை இழந்து அலசிய காரை பெரும் சிரமப்பட்டு அவசர பிரேக் போட்டு நிறுத்தினான். நல்லவேளையாக அவன் தன் பதற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டதுடன். காரையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினான். உடனே சிக்னல் போட்டுக் கொண்டு காரை சாலையோரமாக கொண்டுபோனான். சற்றுமுன் காரின் கூரையில் விழுந்த பொருள் உருண்டு தரையில் விழுவதை உணர முடிந்தது. காரை நிறுத்தினான். அவன் பெரும் அதிர்ச்சியில் இருந்தான். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வெளியே இறங்கி காரை பரிசோதிக்கலாமா வேண்டாமா எனக் குழம்பிப் போய் அப்படியே அமர்ந்திருந்தான். கண்ணாடியின் வழி வெளியே கூர்ந்து பார்த்தான். காரின் கூரையில் விழுந்தது என்னவாக இருக்கும் என ஆராய்ந்தான். கார் கூரையின் உள்பகுதியைப் பார்த்தான். அது லேசாக அமுங்கியிருப்பதுபோல இருந்தது. காரின் மேல் ஏதோ ஒரு கனமான பொருள் விழுந்திருப்பது உறுதியானது. செம்பனை குலையாக இருக்குமா? அவன் செம்பனை மரங்களைச் சாலையின் இருமருங்கிலும் பார்த்தான். மரங்கள் மிக தொலைவில் இருந்தன. நிச்சயமாக அவை கனத்த குலைகளைக் காரின் கூரை மீது வீசியிருக்க முடியாது. மேலும் யாரும் அலக்கு போடாமல் செம்பனை குலை சொந்தமாக விழாது. மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்தான். மனிதர்களே கண்ணில் படவில்லை. இந்த மாலை வேளையில் யார்தான் குலை அறுக்கப் போகிறார்கள். மரக்கிளைகள் ஏதும் விழுந்திருக்குமோ என யோசித்தான். செம்பனை மரங்களைத் தவிர சாலை ஓரங்களில் வேறு மரங்களே இல்லாததால் அதற்கும் சாத்தியம் இல்லை எனத் தோன்றியது. அந்த அகன்ற சாலையிலிருந்து தள்ளியே செம்பனை மரங்கள் இருந்தன. எனவே மரக்கிளைகளோ அல்லது வேறு எதுவுமோ மரத்திலிருந்து சாலையில் விழுந்திருக்க வாய்ப்பே இல்லை.
இதயத் துடிப்பு கூடியது போல இருந்தது. முன் கண்ணாடியின் வழி மறுபடியும் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்தச் சிறிய கண்ணாடி பார்வையைக் கட்டுப்படுத்தியது. சூழல் வெகு அமைதியாக இருந்தது. சாலையில் ஒரு வாகனமும் ஓடவில்லை. முதிர்ந்த மாலையின் இருள்கவிழத் தொடங்கியிருந்தது. இறுதியில் காரிலிருந்து இறங்கி சோதித்து விடுவது என்று முடிவு செய்தான். படபடப்பு கூடிக் கொண்டே போனது. பீதியும் குழப்பமும் குருதியை இன்னமும் கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்தன.
அவன் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு காரிலிருந்து மெல்ல வெளியே வந்தான். ஓய்ந்துவிட்ட மழையின் ஈரம் குளிரச் செய்தது. தூரல் முற்றாக நின்றுவிட்டிருந்தது. காற்று இதமாக இருந்தது. கொதித்துக் கொண்டிருந்த குருதி சட்டென இயல்பு நிலைக்குத் திரும்பியது. அவன் நிதானத்துக்கு வந்தான். சுற்றுமுற்றும் கவனித்தான். முதலில் அவன் பார்வைக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், சற்றுமுன்னர் காரின் மேல் ஏதோ விழுந்த அந்த இடத்தை நோக்கி நடந்த போது சாலையையும் செம்பனை தோட்ட வேலியையும் பிரிக்கும் கால்வாயின் ஓரம் ஏதோ கிடப்பது தெரிந்தது.
அது நீர்வற்றி புதர் மண்டிய ஆழமற்ற கால்வாய். அங்கே ஏதோ ஒன்று அசைவற்றுக் கிடந்து பின்னர் மெல்ல நகர்வது தெரிந்தது. அவனுக்குப் பழையபடியே இதயத் துடிப்பு அதிகரித்தது. காருக்கு ஓடிவிடத்தான் முதலில் நினைத்தான். ஆனால் இப்போது மேலும் வேகமாக நகரும் அந்தப் பொருளை அருகில் சென்று அறிந்து கொள்ள அவனின் எல்லா புலன்களும் துடித்தன. அவன் அதனை அணுகினான். கிட்டத்தில் பார்க்கும் போது அது அந்தக் கால்வாயிலிருந்து வெளியே வர முயல்வது தெரிந்தது. அடுத்த கணம், அவன் அதீத அச்சத்தில் உறைந்தான்.
தெய்வமே…! அவன் கால்கள் நிலைக்குத்தி நின்றன. உடல் விறைத்துப்போனது. கண்கள் மட்டும் கால்வாயிலிருந்து பிரயத்தனப்பட்டு மேலேறிவரும் அந்தப் பொருளை வெறித்துக் கொண்டிருந்தது. இந்தப் பொருள்தான் சற்றுமுன் அவன் காரின் கூரையில் விழுந்து எகிரி அடர்ந்த புதர் மண்டிய கால்வாய்க்குள் விழுந்திருக்கிறது. அவன் அதிர்ச்சியில் உறைந்துபோய் அசையாமல் நின்றான். அந்தப் பொருள் இப்போது அவன் எதிரில் நின்றது. அவன் உதடுகள் உறைந்து கிடந்தன. அவன் கால்கள் உறைந்து கிடந்தன. அவன் உடலும் உறைந்து கிடந்தது. ஒரு அழகியப் பெண் அவன் எதிரில் கெஞ்சும் தோரணையில் நின்றுகொண்டிருந்தாள். பால் போன்ற வெண்மையில் அழகிய முகவெட்டு. அளவெடுத்துச் செய்த தேகம். அவளால் அந்தக் கால்வாயிலிருந்து ஏறி வெளியே வர முடியவில்லை. அது ஒன்றும் ஆழமான கால்வாய் இல்லை. அவன் கைகொடுத்து அவளை மேலே தூக்கிவிடலாமா வேண்டாமா எனத் தயங்கினான். அவள் அவனிடம் உதவி கேட்காமல் சுயமாக மேலே ஏறிவர முயன்று கொண்டிருந்தாள். அவன் சட்டென பனிபோல உருகிப் போனான். முன்னே நகர்ந்து அவளுக்குக் கை கொடுத்தான். அதே நேரம் புல்தரையில் கால்கள் வழுக்கிக் கொண்டு சென்ற அவள் சட்டென அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். ஆம் அந்த மென்மையான கரங்கள் அவன் கைகளைத் தீண்டின. அதுவரை அவன் உடலில் உறைந்து போயிருந்த குருதி இலகி அவனை மீண்டும் உயிர்ப்பித்தது.
வானத்திலிருந்து விழுந்த ஒருத்தி இப்போது அவன் பக்கத்தில் அமர்ந்திருக்க அவன் தன் நண்பன் மாஹ்டின் கம்பத்தை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் சிந்தனை அவனுக்கே பிடிகொடுக்காமல் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாமும் தாறுமாறாகச் சிக்கிக்கிடந்தன. முதலாவதாக அவன் தனக்கு அறிமுகமே இல்லாத பெண்ணைத் தன் நண்பனின் கம்பத்துக்கு அழைத்துச் செல்கிறான். நிச்சயமாக இன்று இரவு கம்பத்தில் நண்பனின் விடுதியில்தான் தங்க வேண்டும். அப்போது இவளும் அங்கேதான் தங்க வேண்டும். ஆனால், இந்தப் பெண்ணோடு எப்படி ஒரே அறையில் தங்குவது? இவள் வேண்டுமானால் வேறு அறையில் தங்கிக் கொள்ளலாம்தான். ஆனால் மாஹ்ட் என்ன சொல்வான்? அதைவிட தன்னுடன் ஒரே அறையில் தங்காத இவளைப் பற்றி கம்பத்து மக்கள் என்ன சொல்வார்கள்? இவள் அவனுடைய மனைவி இல்லை என்று எல்லாருக்கும் தெரிந்துவிடும். அப்படி என்றால் இவள் யார் என்று மாஹ்டிடம் சொல்வது? இது ஒன்றும் கராபியிலோ புக்கெட்டிலோ உள்ள விடுதியில்லையே. அங்கு வேண்டுமானால் யார் யாருடனும் எந்த அறையிலும் தங்கிக் கொள்ளலாம். இது கம்பத்தில் அதிலும் அந்தக் கம்பத்தில் இருக்கும் ஒரே விடுதியல்லவா? இந்தக் கம்பத்துக்கு வெளியூர்காரர்களோ சுற்றுப்பயணிகளோ வருவதில்லை. இது சுற்றுவட்டாரத்திலிருந்து மீன்பிடிக்க வருபவர்கள் மட்டுமே தங்கிச் செல்லும் ஆற்றோரம் அமைந்த சிறிய விடுதி. மற்றபடி சுற்றுவட்டார பள்ளி மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் சில நேரங்களில் பணியிடப் பயிற்சிக்காக வந்து முகாமிடுவதுண்டு. மாஹ்ட் அவனிடம் அப்படிதான் சொல்லியிருந்தான். அவன் குழம்பிப் போயிருந்தான். ஆனால், அவன் பக்கத்தில் இருக்கும் பெண் எதுவுமே நடக்காதது போல எந்தக் கவலையுமின்றி அமர்ந்தவாரே ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். அவன் எங்கு அழைத்துச் சென்றாலும் அவனுடன் செல்ல அவள் தயாராகிவிட்டிருந்தாள். அவளை எங்கும் இறக்கிவிட்டுச் செல்லவும் அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. இரவு எட்டிப் பார்க்கும் இந்த நேரத்தில் இங்குச் செம்பனை மரங்கள் மட்டும்தான் இருக்கின்றன. மனித நடமாட்டமே இல்லை. இங்கிருக்கும் ஒரே ஒரு மனித வசிப்பிடம் என்றால் அது மாஹ்ட்டின் கம்பம் மட்டும்தான். மாஹ்ட் சற்று முன்தான் கம்பத்துக்குச் செல்லும் சந்திப்பில் காத்திருப்பதாகச் சொல்லியிருந்தான்.
அவனுக்குச் சிந்தனையே ஓடவில்லை. அசடு போல காரை ஓட்டிக் கொண்டிருந்தான். ஒரு வளைவைக் கடந்ததும் தூரத்தில் வெள்ளை நிறக் காரின் பக்கமாக ஒரு ஆள் நிற்பது தெரிந்தது. ஆம் அவன் மாஹ்ட்தான். மாஹ்ட்டாகத்தான் இருப்பான். அவன் கணித்தது சரியாக இருந்தது. மாஹ்ட்டின் சிரித்த முகம் பளிச்சென தெரிந்தது. மாஹ்ட் தன் காரைத் தொடரும்படி சைகை காட்டினான். மாஹ்ட்டின் வெள்ளைக் காரை முன்னால் போகவிட்டு அவன் பின்தொடர்ந்தான். நீண்ட பயணத்துக்குப் பிறகுதான் பெரிய ஆற்று முகத்துவாரத்தில் அமைந்திருந்த மாஹ்ட்டின் கம்பத்துக்கு வந்து சேர முடிந்தது மாஹ்ட்டின் விடுதி ஆற்று முகத்துவாரத்துக்குப் பக்கத்திலேயே இருந்தது.
இரவாகிக் கொண்டிருந்தது.
ஒரே வரிசையில் கட்டப்பட்ட தன் விடுதிக்கு எதிரில் நிறுத்தப்பட்டிருந்த மாஹ்ட்டின் காருக்குப் பக்கத்திலேயே தன் காரையும் நிறுத்தினான். தன் பக்கத்தில் அமர்ந்திருந்தப் பெண்ணை ஓரக்கண்ணில் பார்த்தான். அவள் அப்போதுதான் கண்களைத் திறந்தாள். ஆனால் ஒரு வார்த்தையும் பேசாமல்தான் இருந்தாள். அவனுக்கு அவளிடம் என்ன பேசுவது எனத் தெரியவில்லை. ஒரு சொல்லும் எழவில்லை. உடனே அவன் காரிலிருந்து வெளியேறி மாஹ்ட்டைச் சந்திக்கச் சென்றான்.
“பிள்ளைகள அழைச்சுட்டு வரலையா?” மாஹ்ட் நட்பாக அணைத்தபடி கேட்டான்
“பிள்ளைகள் எல்லாரும் ஹாஸ்டல்ல இருக்காங்க,” தன் பதிலில் அவனுக்கே குழப்பம் இருந்தது.
“என் மனைவி இந்த நேரம் பாத்து அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. பரவாயில்ல… நீ உன் மனைவியை உள்ளே அழைச்சுட்டுப் போ… நான் கடை பையனிடம் சாப்பாடு கொடுத்தனுப்புகிறேன். இங்க ராவாயிட்டா சாப்பாட்டு கடைங்க இருக்காது… நீ என்னா சாப்பிடப் போற?”
“எதானாலும் பரவாயில்ல…” அவனுக்கு அந்தச் சூழல் நிம்மதியைத் தந்தது. மாஹ்ட்டின் மனைவி வீட்டில் இல்லை. இல்லையென்றால், தன்னுடன் வந்திருப்பவளை அவன் மனைவிக்கு அறிமுகம் செய்ய வேண்டிய இக்கட்டில் மாட்டியிருப்பான்.
“சரி… நீ ஓய்வு எடுத்துக்க. எனக்கு சமைக்கிற வேலை இருக்கு… கேட்டரிங் செய்யிறேன்… நாளைக்கு ஒரு விருந்திருக்கு. நான் வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன். அப்புறம் பேசலாம்.” மாஹ்ட் கொஞ்சம் பரபரப்பாக இருந்தான். “ஓ… இந்தா சாவி… நீ ஓய்வு எடுத்துக்க… உன் மனைவியும் களைப்பாதான் இருக்காங்க… பையன் சாப்பாடு கொண்டு வருவான்,” அவன் சட்டென சாவியை எடுத்துக் கொடுத்துவிட்டு குழம்பி நின்றான்.
“மறந்தே போயிட்டேன். ஒரு கட்டில் உள்ள பெரிய அறைங்க எல்லாம் முடிஞ்சி போச்சு… தனி கட்டில்கள் உள்ள டபுல் அறைங்க மட்டும்தான் இருக்கு… நீயும் மனைவியை அழைச்சுட்டு வர்ரதா சொல்லல பாரு… நீ தனியாத்தான் வருவேனு நினைச்சிருந்தேன்…” அது மற்றும் ஓர் அபூர்வ தருணமாக அவனுக்குத் தோன்றியது.
மாஹ்ட் சலாம் செய்துவிட்டு விடைபெற்றான்.
அவன் சற்றுநேரம் அப்படியே நின்றான். பிறகு கார் போனட்டைத் திறந்து தனது பயண பையை வெளியே எடுத்தான். அவள் காரிலிருந்து வெளியே வந்து எந்தக் கேள்வியும் இல்லாமல், அவனைப் பின் தொடர்ந்தாள்.
“துணிப் பை இல்லையா?” அவனே முட்டாள்தனமாக எதையோ கேட்டு வைத்தான்.
அவள் ‘இல்லை’ எனத் தலையை மட்டும் ஆட்டினாள்
அன்று இரவு மாஹ்ட் தொலைப்பேசியில் அழைத்து, வேலை இன்னும் முடியாததால் தன்னால் கதைபேச வரமுடியாது என்று வருத்தத்தோடு சொன்னான். காலையில் சந்திக்கலாம் என உறுதியாகச் சொன்னான். மாஹ்ட் கைப்பட சமைத்த சுவையான உணவுகளைப் பையன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போயிருந்தான். அவளும் மெளனமாகச் சாப்பிட்டாள். நல்ல வேளையாக அவன் சில சட்டைகளையும் டி சட்டைகளையும் கொண்டுவந்திருந்தான். டிரேக் சிலுவாரும் சில காற்சட்டைகளும் இருந்தன. தன் உடைகள் சிலவற்றை அவளிடம் கொடுத்தான். அவன் குளித்துவிட்டு அவசரமாகப் பள்ளிவாசலுக்குச் சென்றான். எதையும் யோசிக்க முடியாதவனாக அவன் இருந்தான். அவளோடு ஒரே அறையில் தங்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் அந்த விடுதியில் மற்ற எல்லா அறைகளும் நிறைந்து விட்டன. சில அறைகளில் ஆட்கள் இருந்தார்கள். சில அறைகள் தூண்டில்காரர்களின் வருகைக்குக் காத்திருந்தன. நாளை விடுமுறை என்பதால் மீன் பிடிக்க வருபவர்களில் சிலர் குடும்பத்துடன் வருவார்கள்.
மசூதியிலிருந்து திரும்பியபோது, அவள் தூங்கிவிட்டிருந்தாள். பெரும் களைப்பில் இருந்த அவனும் பக்கத்திலிருந்த கட்டிலில் உடலைச் சாய்த்தான். விளக்குகளை அணைக்காமல் பகல் போன்ற வெளிச்சத்திலேயே தூங்கினான்.
அன்று வாய்த்த அபூர்வ தருணங்களால் அவளின் வருகை மாஹ்ட் உட்பட, விடுதிவாசிகளுக்கோ கம்பத்து மக்களுக்கோ எந்தவித சந்தேகத்தையும் கொடுக்கவில்லை. மீனவத்துறைக்கு அருகிலேயே விடுதி இருந்தாலும் அந்த இடம் சூன்யமாகவும் மனித நடமாட்டம் இல்லாமலும் இருந்தது. இதுவும் ஓர் அபூர்வ தருணம் என்றுதான் அவன் நினைத்துக் கொண்டான். மறுநாள் காலையில் அவளுக்குக் காலை உணவு வாங்கி மேசையில் வைத்தான். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் மாஹ்ட்டை சந்திக்கக் கிளம்பினான். மாஹ்ட் இறாலுக்கு பொறி வைக்க அவனையும் படகில் அழைத்துச் சென்றான்.
அவன் நண்பகலில் விடுதிக்குத் திரும்பினான். மாஹ்ட்டுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்துவிட்டு அவனுடனேயே மதிய உணவைச் சாப்பிட்டான். தன் ‘மனைவி’ தனக்கு மாஹ்ட்டுடன் பேசிக்கொண்டிருக்க நேரம் கொடுத்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டான். அவளுக்கான உணவைப் பிறகு தானே அறைக்குக் கொண்டு செல்வதாகச் சொன்னான். ஆகவே அவள் அறையை விட்டு வெளியே வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டான். மாஹ்ட் பழைய கதைகளைத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்ததால் அவளைப் பற்றி அவனும் அதிகம் யோசிக்கவில்லை. அவளுக்கான உணவு எடுத்துக் கொண்டு அவன் அறைக்குத் திரும்பியபோது அறை தூய்மைபடுத்தப்பட்டு நறுமணம் வீசிக் கொண்டிருந்தது. அவள் சிங்காரித்து முடித்திருந்தாள். அவனுடைய சட்டை ஒன்றையும் காற்சட்டை ஒன்றையும் அணிந்திருந்தாள்.
நாட்கள் அப்படியே சென்றன.
இரண்டு இரவுகள் அவன் அவளுடன் ஒரே அறையில் எதுவுமே நடக்காமல் பட்டபகல் போன்ற வெளிச்சத்தில் தூங்கி எழுந்தான். அவன் மாஹ்ட்டுடன் நேரத்தைச் செலவிட்டான். அவள் அறைக்குள் தனியாக இருந்தாள். அவளுக்கான உணவு மட்டும் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்து கொண்டான். மற்ற நேரம் முழுவதும் மாஹ்ட்டுடன் தான் இருந்தான். அவன் அறைக்குத் திரும்பும்போது அவள் போர்வைக்குள் சுருண்டு தூங்கிக் கொண்டிருப்பாள். அறை தூய்மை செய்யப்பட்டு நறுமணம் வீசிக் கொண்டிருக்கும். அவனுக்குச் சுத்தமான அந்த அறையும் இதமான வாசனைகளும் பிடித்திருந்தன. ஆகவே அந்தப் பெண் மனதுக்கு இதமானவளாக மாறியிருந்தாள். அவன் முன்பு நினைத்தது போல காலம் விநோதமான வஸ்துதான். அதை இழுத்து நெருக்க முடிகின்றது. அன்று காலை அவன் புறப்பட வேண்டிய நாள். தன் மனைவி மறுநாள்தான் வீடு திரும்புவாள் என்பதை மாஹ்ட் வருத்ததுடன் சொல்லி அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டான். தன் நண்பனின் மனைவியைத் தன் மனைவியால் உபசரிக்க முடியாமல் போனதில் மாஹ்ட் அதிக கவலையில் இருந்தான். அடுத்த முறை மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வரும்படி வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தான். அதற்கு வாய்ப்பு இல்லைதான்.
பிள்ளைகளிடம் கொடுக்கச் சொல்லி கொஞ்சம் பணத்தை அவன் மாஹ்ட்டிடம் கொடுத்த பிறகு கிளம்பினான். மாஹ்ட் அந்தப் பணத்தை வேண்டாம் என மறுத்தான். ஆனால் கட்டாயப்படுத்தி பணத்தை மாஹ்ட்டின் சட்டைப் பையில் திணித்தான். மாஹ்ட் இரண்டு நாட்களுக்கான விடுதி வாடகையைக் கூட வேண்டாம் என்றுதான் மறுத்தான். ஆனால் மாஹ்ட்டிற்குத் தெரியாமல் விடுதி பணிப்பெண்ணிடம் வாடகையை அவன் செலுத்திவிட்டான்.
அதன் பிறகு அவன் அவளுடன் புறப்பட்டான். முதன் முதலில் சந்தித்தது போலவே அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அவளுடைய உடையை உடுத்திக் கொண்டிருந்தாள். அவனுடைய சட்டையையும் சிலுவாரையும் துவைத்து நேர்த்தியாக மடித்து அவன் பெட்டியில் வைத்திருந்தாள். மாஹ்ட்டின் கம்பத்திலிருந்து வெளியேறும் பாதை அவனுக்கு ஞாபகமிருந்தது. அங்கிருந்து பெரிய சாலைக்கு, வந்த வழியிலேயே செல்ல முடிந்தது. அவன் பெரிய சாலையில் சென்று கொண்டிருந்தான். ஒரு பரபரப்பான சாலைக்குச் சென்றதும் காரை வளைத்து பேருந்து நிறுத்தம் ஒன்றை ஒட்டி நிறுத்தினான். சில இளைஞர்கள் பேருந்துக்குக் காத்திருந்தனர். அவன் ஓட்டுனர் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தான். அந்தப் பெண் எதுவுமே சொல்லிக் கொள்ளாமல் காரிலிருந்து இறங்கி, பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தாள். அவன் அமைதியாகச் சில நிமிடங்கள் அவளைப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். முதல் சந்திப்பிலிருந்து இதுவரை அவள் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை. அவர்கள் பேசிக் கொள்ளவே இல்லை.
இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. முன்பு ஒருமுறை அவன் கிழக்கு மாநிலத்தில் ஒரு பயிற்சிக்குச் சென்ற போது ஒரு பெண் கடலிலிருந்து வெளிப்பட்டு அவன் காரை நிறுத்தி அவனுடன் பயணம் செய்தாள். பிறகு ஒருமுறை ஒரு கூட்டத்திற்காக சபாவுக்குச் சென்று ஐந்து நட்சத்திர விடுதி மாடத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது, மலை முகட்டிலிருந்து ஒரு பெண் பறந்து வந்து அவன் முன் விழுந்தாள். அதன் பிறகு, அண்டை நாட்டு உல்லாசத்தீவு ஒன்றில் தனியாக விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த போது, ராட்சத கடலாமை ஒன்றில் சவாரி செய்தபடி பெண் ஒருத்தி கடற்கரையில் படுத்துக் கிடந்த அவனிடம் வந்தாள்.
காரின் கூரையை எந்தப் பட்டறையில் கொடுத்து சரிசெய்யலாம் என ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே அவன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
PEREMPUAN YANG JATUH DARI LANGIT
மலாய் மூலம்: எஸ். எம். ஷாகீர்/ S.M. Zakir
தமிழில்: அ. பாண்டியன்
kathai ennamo solla varuthu.. ennannu thaan puriyala. but writing style is good. mozhi peyarppu kooda nallaa irukku.