இழிந்த வீடு

தாமான் பாயு குடியிருப்பின் வயதைச், சாயம் மங்கிப்போன வீட்டுக்கூரையும் சுவருமே சொல்லும். அசல் வண்ணத்தைக் கண்டறியவே  முடியாத வகையில் கூரையிலும் சுவரிலும் பலமுறை சாயம் பூசப்பட்டுப்  பல நிறங்களில் திட்டுகள் காணப்படுகின்றன.  ஒவ்வொரு வீட்டுச் சாயமும் ஒருவிதமாக இருக்கின்றன. அவையும் சீராக இல்லாமல் மங்கியும் உதிர்ந்தும் கிடந்தன. கதிரொளியும் மழையும் பட்டு வீட்டுச் சுவர்களின் சாயம் பெயர்ந்து போய் கிடந்தன. அவ்வாறே வீட்டுக்கூரைகளிலும் அங்கங்கே பல வண்ணத்திலான சாய ஒட்டுகள் மேலெழும்பியும் உரிந்தும் கிடந்தன. மழை வந்தால் ஒளிபரப்பு நின்று போகும் கட்டணத் தொலைக்காட்சியின் அலை வாங்கியும் மனம் போன போக்கில் வீட்டுக்கூரைகளில் பொருத்தப்பட்டிருந்தன.

சாலையோரங்களை அடைத்துக்கிடக்கும் வாகனங்களாலும் பொருட்களாலும் தாமான் பாயுவின்  சாலைகளும் சந்துகளும் குறுகிப் போய் கிடக்கின்றன. வீடுகளுக்குப் பின்னால் வீசப்பட்டிருக்கும் சேதமடைந்த தளவாடங்கள் தொடங்கி கோழிக் கொட்டகை வரை இருப்பதால் பின்புற பாதைகள் வாகனங்கள் நகர முடியாத வண்ணம் இருக்கின்றன. நல்ல வேளையாக இன்னும்  யாரும் ஆட்டுக்கொட்டகை கட்டவில்லை.

வீட்டுக்கு முன்புறம், சாலை விளிம்பில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் குடியிருப்பாளர்களின் பழுதடைந்த வாகனங்கள் ஏடிஸ் கொசுக்களை உற்பத்திச் செய்யும் கிடங்குகளாக ஆகியிருக்கின்றன. வீடுகளோ அலங்கோலமாகக் கிடக்கின்றன. விரிவாக்கப்பட்டும், கைவிடப்பட்டும், இற்றுப் போன மரச்சட்டங்களால் தாங்கிபிடித்தும், வீட்டு முன் கூரைகளாகத் தார்பாய்கள் போர்த்தப்பட்டும் இன்னும் பல கோலங்களில் கிடக்கின்றன.

தாமான் பாயுவின் முன்  இருக்கும் மேட்டுப் பகுதியில் ஐந்தாண்டுகளுக்கு முன் மக்கள் குடியேறத் தொடங்கிய மெடிசன் வில்லா பார்க் எனப்படும் ஆடம்பரக் குடியிருப்புப்பகுதி  மிகப் பிரமாண்டமாகவும் உறுதியாகவும் எழுந்து நிற்கிறது. வேலியிடப்பட்டிருக்கும் குடியிருப்புப் பகுதியை 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் கண்காணிக்கிறார்கள். மேற்கத்திய பாணி நவீன சாயலுடன்,  மூன்று மாடி இரட்டை வீடுகள் கம்பீரமாக நிற்கின்றன.  ஓவ்வொரு வீடும் விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் பிரம்மாண்ட தோற்றத்தைப் பெற்றுள்ளன. தூய்மையாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருக்கும் வீடுகளின் சாயமும் சீரான கடலலையைப் போல ஒரே வண்ணத்தில் அமையப்பெற்றிருக்கிறது. இரவு வேளைகளில் வீட்டு முற்றங்களிலும் வெளிப்புறத்திலும் ஒளிரும் ஆடம்பர விளக்குகள் அழகிய நட்சத்திரங்களை நினைவுப்படுத்துகின்றன.

எல்லா வீடுகளிலும் ஆட்கள் குடியேறியிருந்தாலும், அப்பகுதியில் மனித நடமாட்டத்தைப் பார்ப்பது மிக அரிது. அதனுடன் தாமான் பாயுவை ஒப்பிட்டால் ஜனநெருக்கடியும் எந்நேரமும் ஓயாத கூச்சல்களும் நிரம்பி வழிகின்றன.  மேட்டுப் பகுதி நிலத்திலோ தூய்மையும் அமைதியும் இரைந்து கிடக்கின்றன. அந்தக் கம்பீர குடியிருப்பு, கண்களுக்குப் புலப்படாத யட்சிகள் வாழும் இடம் போல இருக்கின்றது. தாமான் பாயுவிலோ அதன் குடியிருப்பாளர்கள்,  பலவகை நெருக்கடிகளில் சிக்கி உழன்று வாழும் மனிதக் கூட்டமாக இருக்கிறார்கள்.

இந்த இரு குடியிருப்புப் பகுதியையும்  தலைநகருக்குச் செல்லும் இருவழிச்சாலைதான் பிரிக்கிறது.  அச்சாலை பரபரப்பான நேரங்களில் நெரிசல் மிகுந்து காணப்படும்.

மாலேக் தன்னுடைய மோட்டார் சைக்கிளை வெளியே தள்ளிக் கொண்டு வந்தான். அவன் அன்றாடம் வேலைக்கு மோட்டார் சைக்கிளில்தான் செல்வான். ஏழாண்டு பழையதாகிவிட்ட அவனுடைய உள்நாட்டுக் காரை வீட்டின் முன்னே நிறுத்தி வைத்துள்ளான்.  அக்காரின் கடன் இன்னும் ஈராண்டுகளில் முடிந்துவிடும். அவன் ஒன்பதாண்டுகளுக்கு வங்கியில் கார் கடன் எடுத்திருந்தான்.

தாமான் பாயுவின் முன்னால் நிற்கும் பேருந்திலேறி மாலேக்கின் மனைவி தன் வேலையிடத்துக்குச் செல்கிறாள். அவனுடைய பிள்ளைகள் பள்ளி மூடுந்து ஏறி பள்ளிக்குச் செல்கின்றனர். அவனுடைய இரு குழந்தைகள் கல்லூரியில் மேற்படிப்பு பயில்கின்றனர். சில நேரங்களில் மாலேக் தன் மனைவியைப் பணியிடத்துக்கு மோட்டாரில் ஏற்றிச் செல்வான். அவன் இந்த தாமான் பாயு பழைய வீட்டில் இருபது ஆண்டுகளாகக் குடியிருக்கிறான்.  வேலைக்குச் சேர்ந்த புதிதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரிடமிருந்து வாங்கிய வீடு. இன்றளவும் வங்கிக்கான மாதாந்திர கட்டணத்தைச் செலுத்தி வருகிறான். ஏறக்குறைய இன்னும் 15 ஆண்டுகளில் அவ்வீட்டுக்கான கடனைக் கட்டி முடித்து விடுவான்.

மாத இறுதியாகிவிட்டது. சம்பளமும் வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டது. மாலேக் தன் அலுவலகத்திலேயே செலுத்த வேண்டிய  எல்லா மாதக் கட்டணங்களையும் இணையத்தில் செலுத்திவிட்டான். மீதம் இருந்தால் அவசரத்தேவைக்கு என மிச்சம் பிடித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைப்பான். ஒவ்வொரு மாதச் சம்பளத்திலும் சிறிதளவு பணம் வங்கியில் சேமிக்கப்படுவதையும் ஒரு சிறு பகுதியை அமானா சாஹாம் பூமிபுத்திராவில் சேமிக்கப்படுவதையும் இன்னொரு சிறு பகுதி தாபோங் ஹாஜி கணக்கில் சேமிக்கப்படுவதையும் மாலேக் உறுதி செய்வான். பிள்ளைகளின் மேற்கல்விக்குக் கொஞ்சம் பணமும் ஹஜ்ஜு யாத்திரை மேற்கொள்ளும் தனது எதிர்காலத்திட்டத்துக்குக் கொஞ்சம் பணமும் மட்டுமே மாலேக்கால் சேமிக்க முடிந்தது. வயதான பின்னர், மாலேக்குக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இவைதான், மாலேக்கின் சிந்தனையில் இருக்கின்றன. இந்த அடிப்படைத் தேவைகளுக்காகத்தான் வாழ்நாள் முழுவதும் காலை தொடங்கி மாலை வரை மாலேக் உழைக்கிறான்.

இன்னும் ஒரு பத்தாண்டில் ஓய்வு பெறப்போகும் மாலேக் ஏறக்குறைய முப்பாதாண்டுகள் பணியாற்றியிருக்கிறான். எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்கப்படும் பணம், சில கட்டாயங்களின்போது எடுக்கப்படுவதுண்டு.  ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு கட்டாயம் வந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும், முடிந்தளவாவது சேமிக்க முடிகிறதே என எண்ணி மாலேக் ஆசுவாசமடைவான். தன்னுடைய பணி ஓய்வின் போது கிடைக்கும் ஊக்கத் தொகையைச் சேமித்துச் சிறிது சிறிதாகப் பயன்படுத்த வேண்டும் என மாலேக் நினைத்துக் கொள்வான். வீட்டைச் சீரமைக்கவும் விருப்பமிருந்தது.  ஆனால், அதைவிட வீட்டுக் கடன் எஞ்சியிருக்குமேயானால், அதனை அடைப்பதுதான் உசிதமானது. எது எப்படியிருப்பினும் தன் மனைவியுடன் ஹஜ்ஜுக் கடமையை முதலில் முடித்துவிட முடியும் என அவன் நம்பிக்கை வைத்திருந்தான்.

வேலை முடிந்து மாலையில் தாமான் பாயுவுக்குள் நுழைய திரும்பியபோது மாலேக் செலுத்திய மோட்டார் சைக்கிள் எதிரில் மெடிசன் வில்லா பார்க்குக்கு நுழைய வந்த ஆடம்பரக் காருடன் லேசாக உரசிவிட்டது. அந்த ஆடம்பரக் காரிலிருந்து இறங்கிய காரோட்டி கீறலைப் பார்த்து  மாலேக்கையே குற்றம் சொன்னான். ஆனால் சின்ன கீறல்தான். தன்னுடைய அலுவலகத்தில் பொறுமைசாலியாகவும் நல்லவராகவும் அறியப்பட்ட மாலேக்கால் தன்னுடைய பொறுமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. மாலேக் மிகுந்த உறுதியுடன் அது தன் தவறில்லையெனச் சொன்னான். மாலேக் நெஞ்சை நிமிர்த்தி உறுதியுடன் பேசுவதைக் கண்ட ஆடம்பரக் காரோட்டி மாலேக்கை ஏளனமாகப் பார்த்தபடி தன்னுடைய காரிலேறினான். தன்னைப் போன்றவர்களைக், குப்பையைப் பார்ப்பதைப் போல காணும் காரோட்டி மீது மாலேக்குக்குக் கோபம் தலைக்கேறத் தொடங்கியது. அந்த ஆடம்பரக் கார் மெடிசன் வில்லா பார்க்குக்குள் சீறிக்கொண்டு நுழைந்தது. மாலேக் தாமான் பாயுவுக்குத் தன் மோட்டார் சைக்கிளை செலுத்தினான்.

தோனி சபித்தவாறே தன் வீட்டுக்குத் திரும்பினான். அந்த  ஆடம்பர  வீட்டின் தானியங்கி வேலிக்கதவுகள் திறந்து வழிவிட தோனி வீட்டுக்குள் நுழைந்தான். காரை வீட்டுக்குள் நிறுத்தியவுடன் கீழே இறங்கி கீறல் விழுந்த இடத்தைப் பார்த்தான்.  சிறிய கீறல் என்பதைப் பார்த்தவுடன்தான் தோனியின் மனம் ஆசுவாசமடைந்தது. ஆனாலும் அந்த அழுக்கு வீட்டிலிருந்து வந்து தன் காரில் கீறலை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளோட்டியைத் தொடர்ந்து சபித்தான்.

S. M. Zakir

நீண்ட நாட்களாகவே,  நெரிசல் மிகுந்தும் அழுக்காகவும் தோற்றமளிக்கும் அந்த வீடுகளைக் காணுந்தோறும் தோனிக்குக் கண்களை உறுத்தும். தன் வீட்டு மாடத்தில் வந்து நிற்கும் போதெல்லாம் நெருக்கியடித்துக் கொண்டு அழுக்கேறிக் கிடக்கும் அந்த வீடுகளை அவன் பார்க்க வேண்டியுள்ளது.  தனக்கு மட்டும் மந்திரச்சக்தி இருந்தால்  ஏதாவது ஒரு மந்திரம் சொல்லி அவ்வீடுகளைக் நொடியில்  காணாமற் போகச் செய்திருக்கலாம் எனத் தோனி எண்ணிக் கொள்வான். அவன் குடியிருக்கும் மெடிசன் வில்லா பார்க்கின் ஆடம்பரமும் பிரமாண்டமும் மிகுந்த தோற்றத்தையே களங்கப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் அந்த அண்டைக் குடியிருப்புப்பகுதியைக் காணுந்தோறும் தோனிக்கு நெஞ்சம் பதைத்து மூச்சடைத்து போகும்.

ஆனாலும், வீடமைப்பு நிறுவனமொன்றின் மேலாளரான தோனியால் நெரிசலும் அழுக்கும் மிகுந்த தாமான் பாயுவைக் காணாமற் போகச் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த முடிந்தது. தாமான் பாயுவை அப்புறப்படுத்திவிட்டு அங்கு ஆடம்பர அடுக்குமாடித் தொகுதியை அமைக்கும் திட்ட வரைவு ஒன்றை அமைச்சரிடம் தோனி அனுப்பியிருந்தான்.

ஆடம்பரக் குடியிருப்புப் பகுதிகளும் சொகுசு அடுக்குமாடி வீடுகளும் நவீன கட்டிடத் தொகுதிகளும் சூழ்ந்துவிட்ட பகுதியில் தாமான் பாயு மட்டும் பழைய குடியிருப்பாக எஞ்சி இருந்தது.

நகரத்தின்  மையத்தில் சீழ்பிடித்த குடியிருப்புப்பகுதியாக அது அமைந்திருந்தது. அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வளர்ச்சிப்பணிகளுக்கான தொகையைத் தோனியின் நிறுவனம் ஏற்றுக் கொண்டதால் தோனியின் திட்டத்துக்கு அமைச்சரிடமிருந்து நேர்மறையான எதிர்வினை கிடைத்திருந்தது. ஆனால், குடியிருப்பாளர்களின் நிலத்தைக் கைப்பற்றும் பணிக்கான தகுந்த காலமும் சூழலும் அமையும் வரையில் தோனியை அமைச்சர் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்த நாள், தாமான் பாயுவின் நிலத்தைக் கையகப்படுத்தி அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்கானக் கடனளிப்பு ஏற்பைப் பெறுவதற்காக வங்கித்தரப்பினரிடம் தோனி சந்திப்பு நடத்தினான். தோனியின் திட்டத்துக்கான நிதிநல்கைகுக் கொள்கையளவில் இணக்கம் கண்டாலும் அமைச்சரின் உறுதி கடிதம் அளிக்க வேண்டுமென வங்கித்தரப்புக் கேட்டுக்கொண்டது.  நிதி நல்கைக்கான முன்னேற்பை வங்கிதரப்புக் கொடுத்தால்தான் அமைச்சருக்கு நம்பிக்கை ஏற்படுத்த இயலுமென தோனி தெரிவித்தான்.

வங்கி நிர்வாகத்துடனான சந்திப்பு நன்முறையில் முடிந்தது. சந்திப்பு முடிந்து  லிப்ட்க்குச் செல்லும் வழியில் மாநிறப் பெண்ணொருத்தியைத் தோனி மோத அவள் கையிலிருந்த கோப்புகள் தவறி விழுந்தன. வங்கி அதிகாரிகளுடனான சந்திப்பில் அந்தப் பெண்ணும் இருந்தாள் என்பதைத் தோனி உணர்ந்தான். சிரித்தவாறே கீழே சிதறிக் கிடந்த கோப்புகளை எடுக்க உதவினான்.

அந்த வீடமைப்பு நிறுவனத்தின் மேலாளர் சிரித்தவாறே கீழே விழுந்து கிடந்த கோப்புகளை எடுக்க உதவிய போது தேவி மூச்சடைப்பதைப் போல உணர்ந்தாள். தான் பணிபுரியும் வங்கி நிர்வாகம் தாமான் பாயுவை கையகப்படுத்தி ஆடம்பர அடுக்குமாடியைக் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்க  உறுதியளித்தப் போது தேவியின் மனம் உண்மையிலே சலனமுற்றிருந்தது. ஆனால் அவளால் என்ன செய்ய முடியும். அவள்  கூட்டக் குறிப்புகளைத் தயார் செய்யும் ஒரு செயலாளர் மட்டும் தானே. அவள் கருத்துக்கு அங்கே மதிப்பிருக்காதே.

சிறுவயதிலிருந்து தான் வாழும் குடியிருப்புப் பகுதி இடிக்கப்பட்டால் வயது மூத்த தன் பெற்றோர்கள் எங்குச் செல்வார்கள் என்றெண்ணிய தேவியால் அழுகையை அடக்க முடியவில்லை. தங்களுக்கு நட்ட ஈடோ அல்லது மாற்று வீடோ கிடைக்குமென்றாலும் அவை தாமான் பாயுவுக்கு நிகராக முடியுமா என்றெண்ணினாள். தேவி தேநீர் மூலையில் தன்னுடைய பெற்றோர்கள், சகோதரர்களின் நினைவில் தனித்திருந்தாள். தாமான் பாயுவின் குடியிருப்பாளர்களின் முகங்களையும் மனத்தில் நிறுத்திப் பார்த்தாள்; குறிப்பாக நல்ல மனம் கொண்ட பாக்சிக் மாலேக்கை நினைத்துக் கொண்டாள். வங்கியில் ஏதேனும் அலுவல்கள் இருந்தால், தேவியின் உதவியைத்தான் பாக்சிக் மாலேக் வேண்டுவார். இவ்வங்கியில்தான் பாக்சிக் மாலேக் பணத்தைச் சேமித்திருக்கிறார். அவளுடைய அப்பாவும் அந்த வங்கியில்தான் பணத்தைச் சேமிக்கிறார். அவர்களைப் போலவே பல்லாயிரம் தாமான் பாயு குடியிருப்பாளர்கள் அந்த வங்கியில் தங்கள் பணத்தைச் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களின் பணத்தைக் கொண்டுதான் தாமான் பாயுவையும் அதன் குடியிருப்பாளர்களையும் வீழ்த்தும் வேலைக்கு வங்கி நிதிநல்கை செய்யப்படப்போகிறது. தாமான் பாயு குடியிருப்பில் வசிக்கும் ஏழை மக்களின் பணம் வங்கியில் சேமிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மெடிசன் வில்லா பார்க்கில் வசிக்கும் பணக்காரர்கள் வங்கியில் கடன் பெறுகிறார்கள். தாமான் பாயு ஏழை மக்களின் பணத்தைக்  கொண்டே அவர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கப் போகிறார்கள். இந்தச் சூழ்ச்சிமிகுந்த கட்டமைப்பே தாமான் பாயுவுக்கும் மெடிசன் வில்லா பார்க்குக்கும் இடையிலான பெரும் இடைவெளியை நிறுவியிருக்கிறது. வெண்மணிகளைப் போல தேவியின் கண்ணீர்துளிகள் சிந்தின. இந்தச் சூழ்ச்சிமிக்க கட்டமைப்பின்  முன்னர் தேவியாலோ அல்லது தாமான் பாயு குடியிருப்பு மக்களாலோ என்னதான் செய்துவிட முடியும்.

மாலேக் நீண்டு கிடந்த இரவை வெறித்துப் பார்த்தான். நட்சத்திரங்கள் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. நிலவின் வெளிச்சத்தில் தாமான் பாயு தெளிந்த தோற்றம் தந்தது. தன் வீட்டுக் கடனைக் கட்டி முடித்தவுடன் வீட்டைச்  சீரமைப்பது பற்றி மாலேக் மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். தன்னுடைய அந்திமக்காலத்தைத் தாமான் பாயுவிலேயே கழித்துவிடும் கனவுகளில் மாலேக் மூழ்கியிருந்தான். 

அமைச்சரின் கலகலப்பில் தோனியும் இணைந்துகொண்டான். அந்த ஆறு நட்சத்திரத் தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவுணவு விருந்து மிகவும் விமரிசையாக நடந்தது.  நடன நிகழ்சியுடன் கூடிய அந்த விருந்தில் நாட்டின் பிரபலமான அரசியல் தலைவர்கள் தொடங்கி கார்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் புகழ்பெற்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  தோனி அமைச்சரின் காதில் எதையோ கிசிகிசுத்தான். அமைச்சர் தோனியின் தோளில் தட்டி சிறப்பு எனப் பெருவிரலை உயர்த்திக் காட்டினார். இருவரும் சேர்ந்து மிகுந்த ஆரவாரத்துடன் சிரித்தனர்.

தேவி தன் வீட்டு ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். வீட்டுக்குள்ளிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினரின் சிரிப்பொலி வந்து கொண்டிருந்தது.  இடுப்பில் கைவைத்தவாறு வானில் தெரியும் நட்சத்திரங்களை பாக்சிக் மாலேக் பார்த்துக் கொண்டிருப்பதைத் தேவி கவனித்தாள். தன்னுடைய பெற்றோர்களிடத்திலும் அண்டை வீட்டாரிடத்திலும் தாமான் பாயுவுக்கு நேரப் போவதை எங்ஙணம் கூறுவதென்றெண்ணி தேவி விக்கித்துப் போயிருந்தாள்.

இருளின் சுழற்பாதையில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக அணைந்து மறைவதைத் தேவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

RUMAH KUMUH

மலாய் மூலம்: எஸ்.எம். ஷாகீர்/ / S.M. Zakir

தமிழில் : அரவின் குமார்

1 comment for “இழிந்த வீடு

  1. Manivannan S
    December 7, 2023 at 6:33 am

    எளியோரின் சேமிப்பு – வலியோரின் வன்மைக்கு துணை நிற்பு –
    ஏழையின் கனவுகள் – எங்கே நிறைவேறும் ?
    அவரவர் கனவுகள் – அவரவர்க்கு நியாயங் களே!.
    நிலை எண்ணி வருந்துவதை விட, அப்பெண் என்ன செய்திட இயலும்?
    அணி திரட்டி போராட்டமா?
    இழப்புக் காசை வாங்கிக் கொண்டு, வாழ்ந்த இடத்தை, மனதில் ஒரு கனவாக , வேறிடம் செல்வாளா ?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...