திரையில் அசையும் காட்சிகள்

நேற்று மீண்டும் கியுசேப்பே தோர்னதோவின் ‘சினிமா பாரடைசோ’ படத்தை ஓடவிட்டு அதில் வரும் டோடோவுக்கும் அல்ப்ரெடோவுக்குமிடையிலான தனித்துவமான உறவைப் பார்த்தேன். கனவுகள் மிகுந்த தன் கைக்கெட்டாத பால்யத்தை நினைத்துக் கொள்ளும் வளர்ந்த ஆணின் நினைவேக்கக் கதை. அத்தகைய நினைவேக்கம் எல்லாருக்கும் உண்டு. எனக்கும் கூட அம்மாதிரியான நினைவேக்கம் உண்டு.

பால்யத்தில் தங்களுக்கு எட்டாத வாழ்வைப் பெற பலர் ஏங்குவதுண்டு. ஆனால் டோட்டோவைப் போலவே, எனக்கும் எதை நினைத்து ஏங்குகிறோம் என்றோ ஏங்கியதில் எது கிடைக்காமல் போனது என்பது குறித்தோ தெரியவில்லை.

எதுவெல்லாம் நம்மைக் காயப்படுத்தியதோ அவற்றையே நம் நினைவேக்கத்துக்கான காரணமாக ஆக்கிக் கொண்டுவிடலாம். உண்மையில் அப்படி எந்தச் சம்பவமே இல்லாமல் போனாலும் கூட எந்தச் சிக்கலும் இல்லை. இதற்கும் டோட்டோவைத்தான் உதாரணம் காட்ட வேண்டும். டோட்டோவின் காதல் தோல்வியே அவன் கிராமத்திலிருந்து வெளியேறி அல்பிரேடோவை விட்டுச் செல்வதற்கான காரணமாகச் சித்திரிக்கப்படுகின்றது. ஆனாலும், அதுதான் உண்மையான காரணமென்று சொல்லிவிடமுடியாது. தன்னிலிருந்து தப்பித்து ஓடிவிட வேண்டுமென்கிற மனக்குரல் அவனுக்குள் எழுந்ததே அவன் சென்றதற்கான உண்மையான காரணம்.

நானும் சிறிய கிராமமொன்றில்தான் பிறந்தேன். நவீன உலக வசதிகள் எட்டாத, ஆங்கிலேயர்களின் ரப்பர் தோட்டங்களை ஒட்டியப் புறநகர் பகுதி அது. அங்கிருந்த மக்கள் ஆங்கிலேயர்களின் தோட்டங்களில் நாள் சம்பளத்துக்கு வேலை பார்த்தனர்.

பாட்டி இருந்தார். அவர்தான் என்னை வளர்த்து ஆளாக்கியவர். எனக்குத் தெரிந்த வரையில், பாட்டி மற்றவர்களைப் போல வேலை செய்ததில்லை. அவருக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றினால்தான் வேலைக்குச் செல்வார். இல்லையென்றால், வீட்டில் இருப்பார்; அல்லது ஆற்றுக்குச் சென்று மீன் பிடிப்பார்; அல்லது வீட்டுக்குப் பின்புறத்தில் கொல்லை போடுவார். தாத்தா விட்டுச் சென்றிருந்த பூர்வீக வீடும் நிலமும் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருந்ததால் மற்றவர்களைப் போல வேலைக்குச் சென்றுதான் வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்ய வேண்டுமென்கிற கட்டாயம் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.

டோட்டோவைக் காட்டிலும் இன்னும் தனிமையான சூழலில் நான் வளர்ந்தேன். டோட்டோவைப் போல எனக்கும் ஒரு அல்பிரேடோ இருந்தார். ஆமாம். என் பாட்டியின் ஒன்றுவிட்ட இளைய சகோதரர். அவரின் சரியான உறவு முறையை ஆராயாமல் சொல்வதாக இருந்தால் உறவு வகையில் எனக்கு சின்ன தாத்தா முறை. அவரை பாக் டா என்று தான் அழைப்பேன். ஏன் அவரை அப்படி அழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இன்றளவும் அவரின் உண்மைப்பெயர் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. அத்தனை சிறப்பானவரா பாக் டா? இல்லை.

அவர் அல்பிரேடோவைப் போல திரைப்படச் சுருள்களை ஓடவிடக்கூடியவரோ அல்லது பாதிரிகளால் ஆட்சேபிக்கப்படுகின்ற சல்லாபக் காட்சிகளைக் கத்தரிக்கூடியவரோ அல்ல. ஆனால், எங்கள் நாட்டில் முதலாளித்துவப் பொருளாதாரம் நுழைந்த பின்னர் கம்பங்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைப் படக்காட்சிகளாக எனக்குள் சுழல விட்ட சாதாரண மனிதர்.

‘’எனக்கு கம்பத்தைப் பற்றிய கதைகளே வேண்டாம். ரொம்பவும் மலாய் தன்மையாக இருக்கிறது. நாம் புதிய சமூகத்தை உருவாக்கும் கொள்கை கொண்ட கதைகளைக் காட்ட வேண்டும். சமூகத்தின் எல்லா முகங்களையும் காட்டும் கதைகளாக இருக்க வேண்டும். நாட்டை வெறும் செத்துப் போன நினைவுகளையும்… ரோமான்டிசமும் கொண்ட மலாய் கம்பமாக உருவகப்படுத்தாமல் நவீன உலகத் தோற்றம் கொண்டதாகக் காட்ட வேண்டும்,” என என் கதையை நிராகரித்தார் அந்த இளம் தயாரிப்பாளர். அவர்தான் நாட்டின் மிகப்பெரிய படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப்போகும் அந்தப் படத்தின் உள்ளடக்கத்தை முடிவுச் செய்யப் போகிறவர்.

“கம்பத்து வாழ்க்கைத்தானே நாட்டு உருவாக்கத்துக்கான அடித்தளம்… மையம்… எல்லாவற்றையும் ஆதி ஒழுங்கிலிருந்து பார்ப்போம்,’’ அவருடையக் கருத்தை மறுத்தேன்.

“சந்தையில் இருக்கும் ரசனையை நீ கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நுகர்வு வாழ்வுக்கும், நடைமுறை வாழ்வுக்கும் ஒத்துபோகாத இலட்சியவாத கருத்துகளைப் பற்றிக் கொண்டு வாழ முடியாது,” வெளிநாட்டில் திரைப்பட மேற்கல்வியை முடித்த இளம் தயாரிப்பாளர் தன்னுடைய அறிவாற்றலைப் பெரிதாக எண்ணியிருக்கக்கூடும்.

“ஒரு திரைப்படமென்பது வாக்குமூலத்தைப் போன்றது. அசலைப் பிரதிபலிப்பது.” என்றேன். நான் யாருடைய அறிவாற்றலுடனும் மோத விரும்பவில்லை.

“நான் வெளிநாட்டில் திரைப்படக் கல்வி கற்றவன். நீ ஐந்தடியிலிருந்து கற்றுக் கொண்ட திரைப்படம் குறித்த புரிதலை வைத்துக் கொண்டு எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்,” என என் பின்னணியைக் கேலிச் செய்வதைப் போலப் பேசினான்.

“நான் திரைப்படத்தைப் பற்றி கற்கவில்லை. படத்துக்குள் பயணம் செய்தேன்.” என ஹாலிவுட்டின் கிறுக்கனான தராண்டினோ சொன்னதைக் குறிப்பிட்டேன்.

அந்தத் தயாரிப்பாளர் என்னை வெறித்துப் பார்த்தான். அவன் ஒன்றையும் புரிந்துகொள்ளவில்லை. தலைநிறைய வெற்றுப் பெருமிதங்களையும் நிலையில்லாத ஆணவத்தையும் சுமந்துகொண்டிருக்கிறான். மூளையில்லாத அவன் ஒருவேளை குழப்பத்தில் ஆழந்தும் போயிருக்கலாம்.

பாக் டா மிக அரிதாகத்தான் பேசுவார். அப்படிப் பேசினாலும் பேசுகின்ற சொற்கூட்டம் சரியான ஒழுங்கில்லாமல் இருப்பதால் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும். அவருடைய பேச்சு தொண்டைக்குள்ளேயே அமுங்கி ஒலிக்கும். ஆனாலும், பாக் டா என்னுடன் மிக நல்ல முறையில் நடந்து கொள்வார். பாக் டா சொல்வதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவனாக இருந்தேன். அவருடைய பேச்சு முற்றிலும் கம்பத்தையும் அதைச் சுற்றிலும் இருக்கும் காடு, ஆறு ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த அனுபவத் தொகுப்பாகவே இருக்கும். ஆகவே, பாக் டாவின் குரல்வளைக்குள் ஒலிக்கும் ஒலிக்கூட்டங்களின் பொருளைக் கண்டறிவது எனக்குக் கடினமாக இருந்ததில்லை. உண்மையில் மொழியைப் புரிந்து கொள்வதென்பது பேசுகின்றவரின் மூளையில் இருக்கும் சூழலைப் புரிந்து கொள்வதே ஆகும்.

பாக் டா வீட்டில் பல விநோத பொருட்களைச் சேகரித்து வைத்திருந்தார். கரு மஞ்சள், வெள்ளை இஞ்சி, லாராக் சாலா குச்சிகள், தாஸ் கட்டை, ராஜா கட்டை எனத் தொடங்கி வரையாட்டுக் கொம்பு, புலிப்பல், ஆண் முதலையின் பிறப்புறுப்பு, தாட்டான் குரங்கின் பல், யானை நகம், செந்திரவாசே பறவையின் இறகு என விலங்குகளின் உறுப்புகளோடு விநோத கற்களான சிவப்பு மாணிக்கம், முதலைக் கல், பாம்பு கல், எம்புன் கல், செராய் கல் இன்னும் பெயர் மறந்த எத்தனையோ கற்கள் ஆகியவற்றை வைத்திருந்தார். பாக் டா அரிய எண்ணெய் வகைகளான வரையாட்டு எண்ணெய், செனுவாய் எண்ணெய் ஆகியவற்றோடு, மிகுந்த அச்சமூட்டும் மனித சடலத்தின் எண்ணெய்யையும் வைத்திருந்தார். அந்த எண்ணெய் கொலை செய்யப்பட்டு இறந்தவர்களின் சடலத்தைப் புதன்கிழமை நள்ளிரவில் தோண்டியெடுத்து, சடலத்தின் தாடைப்பகுதியைக் கருகவைத்து பெறப்படுவதாக கூறுவார்கள்.

தன்னிடம் இருந்த ஒவ்வொரு விநோத பொருள்கள் பற்றியும் பாக் டாவிடம் ஏரளமான கதைகள் இருந்தன. பாக் டாவின் ஒவ்வொரு கதையும் என்னுடைய தலையில் ஓட்டப்படுகின்ற திரைப்பட காட்சிகளாகவே மாறின. ஆமாம், பாக் டாவும் கதைகளைத் திரையில் ஓட்டிக் காட்டும் அல்பிரேடோதான். என்ன… பாக் டாவின் படச்சுருளும் திரையும் அவரின் கதையுலகத்தை உருவாக்கித் தந்த விசித்திரமான நிகழ்வுகளாலும் பொருட்களாலும் ஆனது என்பதுதான் வேறுபாடு.

ஆனால், என்னைப் பொறுத்தளவில், பாக் டாவின் கதையுலகம் என்பது மிகச் சிறந்ததாகவும் என்னை மகிழ்விக்கக்கூடியதாகவும் இருந்தது. பாக் டாவுக்கு இம்மாதிரியான மாய நிகழ்வுகளைப் பற்றியச் சிறப்பான அனுபவங்கள் இருந்தன. பாக் டா பொய் சொல்கிறார் எனச் சொல்வது எனக்குக் கடினமாக இருந்தது. காரணம் அவருக்குப் பொய் சொல்லத் தெரியாது. கம்பத்து வாசியான பாக் டா கம்பங்களில் உவமையாகச் சொல்லப்படும் வளைந்து கொடுக்கத் தெரியாத நிலைப்படி போன்ற நேர்மையான மனிதர். பொய் சொல்கின்றவரும் இல்லை.

பாக் டா ஒருமுறை இரவில் உசேனுடன் சேர்ந்து டிராக் வாகனத்தில் சென்றதைக் கதையாகச் சொன்னார். இரவு நேரத்தில் புலியைப் போல தெளிவான பார்வை கொண்ட பாக் டாவின் கண்களில் டிராக் வாகனம் வரையாட்டை மோதியது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. உசேன் பயத்தால் டிராக்கிலிருந்து கீழிறங்கவில்லையாம். பாக் டா டிராக்கிலிருந்து கீழிறங்கி வெட்டரிவாள் கொண்டு வாகனம் மோதிய வரையாட்டை அறுப்பதற்குச் சென்றிருக்கிறார். உசேன் டிராக்கால் வரையாட்டை மோதியதையும் அதன் முன் பின் சக்கரங்கள் மானை நசுக்கியதையும் பாக் டா துல்லியமாகப் பார்த்தாராம். பாக் டா வரையாட்டை நெருங்கியதும் சுருண்டு கிடந்த வரையாடு சிவந்த கண்கள் ஒளிவீச எழுந்திருக்கிறது. பாக் டா ஓட வில்லை. இறுதியில், வரையாடுதான் ஓடியிருக்கிறது. பாக் டா சென்ற சாலை காட்டில் வெட்டுமரங்களை ஏற்றும் லாரிகளைத் தவிர பிறர் சென்றிராத சாலையாம். சாலையிலிருந்து பல மைல் தூரம் விலகிய பகுதியது. அங்குத்தான் பாக் டா காட்டுப் பன்றி, புலி, யானை, கரடி போன்றவற்றைப் பார்த்திருக்கிறார். பாக் டா வெட்டுமரங்களை வெட்டும் நிறுவனமொன்றில் வேலை செய்தார். காட்டு மரங்களை வெட்டும் பெரும் வாகனங்களை வனாந்திரத்தில் தன்னந்தனியனாகப் பாதுகாத்து கொண்டிருந்த போதிலும் தான் அஞ்சியதில்லை என பாக் டா கூறினார்.

எஸ். எம். ஷாகீர்

பாக் டா நிறைய கதைகளைச் சொல்லியிருக்கிறார். மரக்கிளையில் வெறி பிடித்து ஆடிய மோகினி, தென்னைமரத் தண்டளவு இருந்த பாம்பு, சம்புக்கோழிகளைத் துரத்தி வந்து வலையில் மோதிய கறுப்பு மனிதன், நடுக்காட்டில் ஒலித்த சிறுவனின் அழுகுரல், நெருப்பு போல சுடர்விட்டு எரிந்த வரையாட்டின் கண்கள், கொட்டகையைச் சுற்றிலும் உறுமிக் கொண்டு திரிந்த புலி, நள்ளிரவில் வெட்டுமர லாரியைக் கவிழ்த்த மதம் பிடித்த யானை, காட்டுப் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு, காட்டுப்பன்றிகள் கூட்டத்தால் துரத்தப்பட்டது, மரத்தின் வேர்பகுதியில் நகங்கள் பதிகின்ற வரையில் முதலையுடன் சண்டையிட்ட புலி, கண் முன்னால் உலாவிய காட்டேரி போன்ற பாக் டாவின் கதைகளைக் காட்சியாக்கிக் காட்டும் திரையாக நானே இருந்திருக்கிறேன்.

“எனக்கு இப்படியான மாய மந்திரக் கதைகள் வேண்டாம்,” என அந்த இளம் வயது தயாரிப்பாளர் முடிவாகச் சொன்னான்.

“இல்லை. இது மாய மந்திரக்கதை இல்லை,” அவனை நேராகப் பார்த்தேன்.

“நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் Exorcist, Nang Nak, Ju-on அல்லது குறைந்தபட்சம் Jangan Pandang Belakang அந்த மாதிரியான பேய் கதைகளைத் தயாரிக்கலாம்,” எனத் திரைப்படத்தைக் கொண்டு பணம் பண்ணும் வித்தையை அந்த இளம் தயாரிப்பாளன் எனக்கு கற்றுத்தர முயன்றான்.

“நான் பேய்களைப் பார்க்கவில்லை, ஆனால், பண்பாட்டைப் பார்க்கிறேன்… பண்பாட்டுச் செறிவால் உருவாகியிருக்கும் மாய யதார்த்தச் சூழலைப் பார்க்கிறேன்,” என்றேன்.

“நீ ஆவணப்படம் எடுக்க விரும்புகிறாயா? அப்படியென்றால் நீ வேறு தயாரிப்பாளரைத் தேடிக் கொள்வதுதான் சரியாக இருக்கும்,” என்றான் இளம் தயாரிப்பாளன்.

“ஆவணப்படம் இல்லை. திரைப்படம் தான்… கதைப்படம். மனிதர்களைப் பற்றிய படம். திரைப்படங்களும் மனிதர்களைத் தான் பிரதிபலிக்கின்றன இல்லையா?” அவன் எதிரில் அமர்ந்து நாற்காலியில் சுழன்றவாறே சொன்னேன்.

“இங்குப்பார். நான் உன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ள விரும்பவில்லை. நீ என்னை விடவும் வயதில் மூத்தவன். ஆனால், உன் படத்தைப் பற்றி பேசி, என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நீ வேறு தயாரிப்பாளரைத் தேடிக் கொள்,” என முற்றமுடிவாக இளம் தயாரிப்பாளன் சொன்னான்.

என் மனம் வருத்தமடையவில்லை. அவன் உண்மையிலே நல்ல மனம் கொண்டவன் என்பதையும் பணிபுரிய மிகவும் எளிதானவன் என்பதையும் அறிந்தே இருந்தேன். இருந்தாலும், அவன் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதுதான் சிக்கல். அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் படத்தை ஒட்டிய சிக்கலைத் தீர்க்கும் குழப்பம் தான் அது. அவன் தயாரிக்கும் படத்தைப் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படமாக ஆக்கும் குழப்பம். படத்தால் நட்டம் ஏற்படக்கூடாது என்பதால் ஏற்பட்ட குழப்பம். பட நடிகர்கள், படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் மீதான குழப்பம். இப்பொழுதுதான் தொடங்கியிருக்கும் இல்லற வாழ்வு மீதான குழப்பம். வங்கியில் நிலுவையில் இருக்கும் கழுத்தை நெரிக்கும் கடன் மீதான குழப்பம். அவன் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்லும் உலகத்தின் மீதான குழப்பம்.

“திரைக்கதைத் தேர்வுக்கான ஏற்பைப் பெற்றுவிட்டேன்…” அந்த இளம் தயாரிப்பாளன் வியப்பு மேலிடப் பார்த்தான். அவனுடைய குழப்பம் இன்னுமே மேலோங்கியிருக்கும்.

பாக் டாவின் மனைவி பாக் டாவுக்காக ஞீர் குட்டி ஒன்று காத்திருப்பதாகச் சொன்னாள். அதாவது புலி உருவத்தில் நடமாடும் வனக்காவலைத்தான் கம்பத்து மக்கள் அப்படிச் சொல்வார்கள். பாக் டாவுடனான திருமணத்தில் ஒரே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த மாக் டா சொன்னாள், பாக் டாவிடம் ஏழு ஞீர் குட்டிகள் இருக்கிறதாம்.

பேய்கள், பிசாசுகள் என்றால் மாக் டாவுக்குப் பயம். ஆனால், பாக் டா எப்பொழுதும் அவர் விருப்பத்துக்குத்தான் செய்வார். அவர்களின் ஆண் மகனான சுவும் என்னை விட வயதில் மூத்தவனாக இருந்த போதிலும் பாக் டாவைப் போலவே என்னுடன் நன்கு பழகினான். சமயங்களில் பாக் டா வளர்க்கும் ஞீர் குட்டிகள் தங்கள் வாலைத் தரையில் தேய்த்தவாறே செல்லுகின்ற தோற்றத்தைத் தன்னிடம் வெளிக்காட்டியதாக மாக் டா குறிப்பிட்டிருக்கிறாள். அவை அப்படி செய்கிறதென்றால், பாக் டா அவற்றிற்கு உணவளிக்க மறந்திருக்கிறார் எனப் பொருள். அதன் உணவு என்ன எனக் கேட்டேன். “அரிசிப் பொரி சாப்பிடும்,” என மாக் டா சொன்னாள். “உங்களுக்குப் பயமில்லையா மாக் டா?” எனக் கேட்டேன். “நானும், இதையெல்லாம் தலைமுழுகித் தொலையுங்கள் என எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அவர்தான் விடாபிடியாக இருக்கிறார்,” என்றார். மாக் டாவும் அவ்வளவு தீவிரமாக ஏசியிருக்க மாட்டாள். அந்த ஏழும் குட்டிகள், உடல் பெருத்த தாய் ஒரு சப்பாணிபோல சாய்ந்து நடக்கும்.

இவைத்தான் பாக் டாவின் கதை. நான் உண்மையில் பாக் டாவும் மாக் டாவும் சொல்லும் கதைகளில் வரும் பேயையோ, பிசாசையோ, விநோதமான விலங்குகளையோ நேரில் பார்த்தது இல்லை. ஆனால், பாக் டாவின் வசமிருந்த எல்லா விநோதமான பொருட்களையும் பார்த்திருக்கிறேன். அவற்றை பாக் டாவை போலவும் கம்பத்து மக்களைப் போலவும் வாழும் மக்களின் பண்பாட்டுச் சூழலின் சின்னங்கள் என்பதற்கு மேல் பொருள் கொண்டதில்லை.

ஆம். அவை, இதுநாள் வரையில் ஆழ் படிமமாகச் சேர்ந்திருக்கும் உருவெளித் தோற்றங்கள். பேய்கள், பிசாசுகள், ஆற்றல்கள் எல்லாமே பாக் டாவைச் சுற்றிலும் இருக்கும் சூழலிலிருந்து அவரின் ஆழுள்ளத்து நினைவுகளில் சேர்ந்திருக்கும் முப்பரிமாண வடிவங்கள். கம்பத்தைச் சுற்றிலும் இருக்கும் காடு, குன்று, மலை, ஆறு ஆகிய இயற்கைப் பருப்பொருட்களே பாக் டாவுடன் உரையாடி இந்த நினைவுகளையும் அவருடைய சொற்களையும் சிந்தனையையும் உருவாக்கியிருக்கின்றன. அவையே பாக் டா, மாக் டா மற்றும் கம்பத்து மக்களின் மனதில் திரண்டிருக்கும் சமூக மதிப்பீடாக மாறியிருக்கிறது. இயற்கையே இந்தச் சமூக மதிப்பீட்டு முறையை அவர்களுக்குள் உருவாக்கியிருக்கிறது. அதுதான் இயற்கையை மதிக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. இயற்கையின் மர்ம ஆற்றலை உணரவும் இயற்கையாற்றலின் தோற்றத்தை உணரவும் தீமையைச் செய்வதிலிருந்து விலக்கும் வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ளவும் இயற்கைச் சூழலை நாசம் செய்வதிலிருந்து அவர்களையும் சமூகத்தினரையும் விலக்கவும் செய்திருக்கிறது. அவ்வாறு செய்யப்படும் நாசச் செயல்களுக்கு ஈடாக பிரபஞ்சம் தக்க எதிர்வினையைத் தருமென்றும் உணர்ந்திருந்தனர்.

அதைத் தனித்துவமான பண்பாட்டுச் சூழல் எனலாம். அதனை மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இருந்த நெருக்கமான தொடர்பால் தன்னிச்சையாகப் பிரபஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சமூக மதிப்பீடு எனலாம்.

வெகு காலத்துக்கு முன்னரே, தொல் பழங்காலத்துக்கு முன்னரே அல்லது வரலாற்றுக் காலத்துக்கு முன்னரே இந்நெறிமுறை உருவாகியிருக்கலாம்.

இருப்பினும் முதலாளித்துவ அலையின் வழி ஆங்கிலேயர் போன்ற நவீன அந்நிய சக்திகள் கொண்டு வந்த புதிய மதிப்பீடுகளில் உருவான ரப்பர் தோட்டம், ரயில் போக்குவரத்து, நாணய முறை, ஊதிய முறை போன்ற வாழ்க்கை முறையால் இயற்கையுடனான பிணைப்பு அழியத் தொடங்கியது.

மனிதன் தன்னை வளப்படுத்திக் கொள்ள இயற்கையை ஆக்கிரமித்து அழிக்கத் தொடங்கியதும் மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையில் இருந்த நெருங்கிய தொடர்பு அறுந்துபோனது.

இத்துணை ஆண்டு காலமாக உருவாகி வந்திருந்த தனித்துவமான சமூக நெறிமுறைகள் அழிவின் அபாயத்தைச் சந்தித்தன. மலாய் சமூகத்தின் தனித்துவமான சமூக நெறிமுறையைக் காக்கும் கடைசி வேர்த்தொகைகளில் பாக் டாவும் ஒருவர். அவருக்குப் பிறகு, அப்பொறுப்பு பாக் டாவின் மகன் சு விடம் சென்றது. ஆனால், காற்பந்து விளையாடுவதில் ஆர்வமுள்ளவனாகவும், லேவிஸ் வகை ஜீன்ஸைத் தேடி வாங்கி அணியக்கூடியவனாகவும், அடிடாஸ் ரகக் காலணி வாங்க சிங்கப்பூருக்கு ஒடிச்சென்று வேலை செய்கின்றவனாகவும் சு இருந்தபடியால், பாக் டா கையளித்த அந்த நெறிமுறைகளின் வேர் பிடுங்கப்பட்டு கிடக்கிறது.

“நான் இப்பொழுதுதான் உன் படத்தைப் பார்த்தேன், இதை விட முற்றிலும் மாறுபட்ட பேய் படத்தை நம்மால் தயாரிக்க முடியும். இந்தப் பரிசோதனை முயற்சியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என எனக்கு தெரியவில்லை என்ற போதிலும் இதனை முயன்று பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.” என அந்த இளம் தயாரிப்பாளன் பாதி குழப்பமும் பாதி நம்பிக்கையும் கூடிய முகத்தோற்றத்துடன் வந்து சொன்னான்.

“இல்லை. இது பேய் படம் இல்லை.” அவனுடைய குழப்பத்தைத் தீர்க்க முயன்றேன்.

“எனக்கு சரியாகப் புரியவில்லை, ஒரு கம்பத்தைப் பற்றியும் விநோதமான கிழவனைப் பற்றியும் தன்னைச் சுற்றிலும் உள்ள வாழ்க்கை முறையில் இருக்கும் மர்மத்தைத் கண்டுபிடிக்க முயலும் சிறுவனைப் பற்றிய படமென்கிறாய்… பேய்படமில்லாமல் என்ன படம் இது?” அந்தத் தயாரிப்பாளனுக்கு இன்னுமே குழப்பம் அதிகரித்தது.

“இது வாழ்க்கையின் ஆழ்ந்த பிரமைகளைப் பற்றிய படம்’’

“இந்தப் படத்தால் அதிகமான ரசிகர்களை ஈர்க்க முடியும் என நீ எண்ணுகிறாயா? பாக் ஆபிஸில் முன்னணியில் நிற்க முடியுமா?” அந்த இளம் தயாரிப்பாளன் மிக மென்மையாக என்னிடம் கேட்டான்.

“படத்துக்கு ரசிகர்கள் தேவையா?” நான் திரும்ப கேட்டேன்.

அவன் வெறித்தவாறு இருந்தான்.

“படத்துக்கு ரசிகர்கள் தேவையில்லை. படமென்பது விவசாயச் சமூகங்களில் இருந்த நெறிமுறைகளால் உருவான பேய் உருவகங்களைப் போல நவீன வாழ்வு முறை உருவாக்கியிருக்கும் கருத்துருவாக்கங்களால் ஆன மாயத்தோற்றங்களின் தொகுப்புதான். அந்தப் புனைவு வெளிக்குள் நுழையும் மனிதர்களாகவே நவீன சமூகத்தினரைக் காண முடியும். அவர்கள் ரசிகர்கள் அல்ல. புனைவு வெளிக்குள் சஞ்சரிக்கும் பங்கேற்பாளர்கள் எனலாம்.”

அந்த இளம் தயாரிப்பாளன் இன்னும் கூடுதல் குழப்பத்துடன் காணப்பட்டான்.

திரைப்படமென்பது நமது தற்போதைய வாழ்க்கை மதிப்பீடுகளின் ஒரு பகுதி. ஆதாயம் ஈட்டுவதையே திரைப்படங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பதால் அவை ஆதாயம் தேடிக் கொடுக்கின்றன. ஏனென்றால், இன்றைய வாழ்க்கை மதிப்பீடு என்பது பொருளை மையமாகக் கொண்டது, பிரபஞ்சத்தை மையமாகக் கொண்டதன்று. நாம் கெலிகா கற்களையும், புலிப்பல்லையும், காவல் தேவதைகளையும் படத்துக்கான கட்டணமாகப் பெறப் போவதில்லை. நாம் பார்வையாளர்களிடமிருந்து பணத்தைத்தான் பெறப் போகிறோம். ஏனென்றால், அதுதான் இக்காலத்தில் நம்முடைய மதிப்பீடு.”

பார்வையாளர்கள் எக்ஸ் என்று மட்டுமே அறியப்பட்ட ஓர் ஆண், எம் என்று அறியப்பட்ட இன்னொரு ஆணுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். எக்ஸ் என்று அறியப்பட்ட அந்த ஆண் ஒரு திரைப்பட இயக்குநராகவும் எம் என்று அறியப்பட்ட இன்னொரு ஆண் காலாவதியாகிவிட்ட அந்த இயக்குநரின் படங்களைத் தயாரிக்க மறுக்கும் ஒரு படத் தயாரிப்பாளராகவும் இருக்கூடும். எக்ஸ் எனும் அந்த ஆடவன் வீட்டுக்குச் சென்று, அன்றிரவு பலி பூசையுடன் துர்தேவதையை வணங்குகிறான்.

எம்மின் படுக்கையறையில் சன்னல் கதவு மெல்ல திறந்து கொண்டு, ஏதோ ஒன்று அறைக்குள் நுழைந்து, கட்டிலை நோக்கிப் படர்ந்து செல்கின்றது. எம் விழித்துக் கொள்கிறான். அதிர்ச்சியில் அவன் விழிபிதுங்கி நிற்கிறான். எந்த அலறலும் அவனிடமிருந்து கிளம்பவில்லை. எம் கட்டிலில் செயலற்று இறுகி அமர்ந்திருக்கிறான். திறந்து கிடக்கும் சன்னலின் வழி காற்று மெல்ல வீசிக் கொண்டிருக்கிறது.

பாக்: ஆடவர்களுக்கான பொது அழைப்புச் சொல்
மாக்: பெண்களுக்கான பொது அழைப்புச் சொல்
லங்சுயீர்: மோகினி வகையைச் சேர்ந்த பேய்
கறுப்பு மனிதன் / ஓராங் ஹித்தாம்: பேய் வகைகளில் ஒன்று
ஞீர்: சாத்தான் வகைகளில் ஒன்று

GAMBAR-GAMBAR YANG BERGERAK DI WAYANG
மலாய் மூலம் : எஸ். எம். ஷாகீர் / S.M. Zakir
தமிழில் : அரவின் குமார்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...