விடுதியின் ஜன்னலிலிருந்து எந்தவொரு காட்சியையும் பார்க்கவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த அந்த மதிலையே பார்த்துக் கொண்டிருந்தேன். மொரமொரப்பான சிமெண்ட் பூசி எழுப்பப்பட்ட சுவர் செங்கற்கள், தனித்தனி அறைகளில் அடைந்து கிடக்கும் விடுதிவாசிகளையே ஞாபகப்படுத்தியது. உறுதியான சிறைகளுக்குள் நேராக அடுக்கப்பட்ட கூண்டுகளைப் போன்ற அறையில் பிரித்து வைக்கப்பட்டுள்ள விடுதிவாசிகளைப் போலவே இருந்தது சுவர்.
நான் ஏதோ ஒரு சிறையில், 241 என்ற எண் கொண்ட கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறேன். வெள்ளை நிற படுக்கை விரிப்பில் போர்த்தப்பட்டிருந்த இரண்டு படுக்கைகளுக்கு எதிரே ஒரு நீண்ட மர மேஜை கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. என் மடிக்கணினி அனுஷ்கா சங்கரின் சித்தார் இசையை அறை முழுதும் பரப்பிக் கொண்டிருந்தது. எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று புதிதாக வாங்கிய குறுவட்டுதான் மடிக்கணினியில் சுழன்று கொண்டிருந்தது. பேரமைதி சூழ்ந்த இந்தக் குறுகலான அறையை, நளினமான ராக லயங்கள் சுழன்று நிறைத்தன. பின் அந்த மென் அதிர்வுகள் எல்லாத் திடப்பொருளின் இடைவெளிகளையும் ஊடுருவிக்கொண்டு வாகனப் புகையும் வரண்ட தூசும் அடர்ந்த காற்றில் மிதந்து சென்று, மக்கள் நெரிசல் மிக்க தார் சாலையில் நடனமாடியபடி மெல்ல தரையிறங்கின.
ஆ… என் கற்பனை கலைந்துவிட்டது. ஆனால், அனுஷ்கா சங்கரின் சித்தார், இன்னும் தன் உயிரோட்டமான அதிர்வுகளை இழக்காமல் பெருங்கூச்சலுக்கும் பேரமைதிக்கும், வேதனைக்கும் மகிழ்ச்சிக்கும், வாழ்வுக்கும் இறப்புக்கும் மத்தியில் நகர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று வாங்கிய சில நாவல்கள் என் கண்களில் பட்டன. ஜோஸ் சரமாகோ, கேப்ரியல் மார்க்வெஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே, ரவீந்திரநாத் தாகூர் என அனைவரும் அனுஷ்கா சங்கரின் சித்தார் மெல்லிசைக்கு எழுந்து வந்து நடனமாடிக் கொண்டிருந்தனர். இணைந்து ஒலித்த அனுஷ்காவின் சித்தார் இசைக்கும் நோரா ஜோன்ஸின் குரலுக்கும் நல்ல பொருத்தம் இருந்தது.
என் அறை தோழரான டாக்டர் ஷம்சுடின் ஓத்மான், இன்னும் அறைக்குத் திரும்பவில்லை. நானும் அவரின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கவில்லை. வெளியே தூசி துகள்களால் நிறைந்த சாலையில் மக்கள் கூட்டம் ஓயாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மனித இனத்திற்கு அழிவே இல்லை என்பது போல கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறார்கள். “இப்படி ஓய்வில்லாமல் அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருக்கும் இவர்கள்தான் பொருளாதார நகர்ச்சியின் மூலங்கள். தேவையையும் விநியோகத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர் நகர்ச்சி இது. இந்த நகர்ச்சிதான் சந்தையில் கோரிக்கை விநியோகம் என்ற கட்டமைப்பை முடிவு செய்கிறது,” என்று கூறியிருந்தார் எங்கள் பயணக் குழுத் தலைவர் டாக்டர் கிருஷ்ணன் மணியம்.
திநகர் வட்டாரத்தில் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் உஸ்மான் ரோட், சந்தையின் தேவையையும் விநியோகத்தையும் அறுந்துவிடாமல் தொடரச் செய்கிறது. இரவில் மட்டும் ஓய்ந்திருக்கும் அச்சாலை காலையில் மீண்டும் துய்த்தெழுந்து தன் அன்றாட கடமையை ஆற்றத் தொடங்கிவிடும். மகாலட்சுமி தெருவில் அமைந்துள்ள நாச்சியப்பா பார்க் ஹாட்டல், பரபரப்பான உஸ்மான் ரோட் சாலையிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவிலே இருந்தது. உஸ்மான் ரோட்டில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் குறைவதே இல்லை. என்னையும் என் குழுவினரையும் போன்ற சுற்றுப்பயணிகள் இருந்தாலும் திநகர் ஜவுளி கடைகள் குறிப்பாக உஸ்மான் ரோட்டில் உள்ள கடைகள் உள்ளூர் மக்களை நம்பித்தான் இயங்குகின்றன.
பிரமாண்டமான உள்ளூர் சந்தையினால், இந்த வணிகம் வெளித் தாக்கங்களைச் சார்ந்து இருக்கும் சூழலை உருவாக்கவில்லை. பரந்த உள்ளூர் தேவையை முன்வைத்த வணிகம் அவசியமாவதால் இங்கே தடையற்ற பொருளாதாரச் சுழற்சி நடைபெற முடிகின்றது. நானும் உஸ்மான் ரோட்டில் புகழ் பெற்ற சரவணா ஸ்டோரில் சில சேலைகளை வாங்கிக் கொண்டேன். இதற்குமேல் கட்டாயமாக வாங்க வேண்டிய பொருட்கள் என ஏதுமில்லை. இப்பொழுது, பரபரப்பாக இயங்கும் இத்தனை கோடி உயிர்கள் வாழும் கண்டத்தில் எனது பயணத்தை அனுபவிப்பதைத் தவிர வேறு எண்ணம் ஏதும் எனக்கில்லை.
மடிக்கணினியில் சுழன்று கொண்டிருந்த குறுவட்டை மாற்றினேன். அனுஷ்கா சங்கரின் இசையை நிறுத்திவிட்டு வேறு இசை குறுவட்டை நுழைத்தேன். ஷத்தா ஷர்மாவின் ராஸ்தே பாடல் ஒலித்தது. பாப் இசை கூறுகளுடன் கூடிய ‘ஆர்&பி’ இசை இந்த 241 கூண்டை நிரப்பியது. என்னைப் பாடலின் மெல்லிசை ஈர்த்ததா அல்லது ஷத்தா ஷர்மாவின் அழகு ஈர்த்ததா என அறிய முடியவில்லை. மும்பையிலும் அமெரிக்காவிலும் பதிவு செய்யப்பட்ட ராஸ்தே தொகுப்பின் நவீன இசைக்கூறு அதனைத் தனித்துவமாக்கியது. ஷத்தா ஷர்மாவும் இன்றைய இளையோர் போலவே, உலகத்தால் அறியப்படும் முன், தன் தொடக்கக்காலத்தில் ‘யூடியூப்பில்’பாடியிருக்கக்கூடும்.
நான் ஒருபுறம் ராஸ்தே பாடலில் மயங்கினேன். மறுபுறம் ஷத்தா ஷர்மாவின் அழகில் மயங்கினேன். சட்டென, மலேசியாவில் இருக்கும் குடும்பத்துக்குச் சேலைகளைப் பரிசுகளாக வாங்கச் சென்றபோது கண்ட ஜவுளி கடை பணிப்பெண்ணின் ஞாபகம் எழுந்தது. ஒருவேளை உஸ்மான் ரோட்டிலும் திநகர் சுற்று வட்டாரத்திலும் தென்படும் முகங்களில் ஷத்தா ஷர்மாவைக் தேடிக் கொண்டிருந்தேன் போலும். ஆனால், ஷத்தா ஷர்மா எங்கும் தென்படவில்லை. என் எண்ண அலைகளில் நான் சித்தரிக்க முயல்கின்ற முகங்கள் நாச்சியப்பா பார்க் விடுதியின் அறை சுவர்களில் முட்டி மோதிக் கொண்டிருந்தன.
திடீரென்று என்னைச் சுற்றி உயர்ந்த சுவர்கள் சூழ்ந்து, என் பார்வையை மறைத்தன. கோரைப் பற்களைத் திடீரென நீட்டிக் கொண்டு என்னைக் குதறவரும் கூண்டின் அடிவயிற்றில் நான் இருந்தேன். என் உடலைப் படுக்கையில் கிடத்தினேன். கண்களை மூடிக் கொண்டேன். இக்கூண்டில் திடீரென தோன்றிய கோரைப் பற்கள் என்னைக் குத்திக் குதற காத்திருந்தேன். ஜவுளி கடையில் நான் பார்த்த முகம் மறைந்தது. ஷத்தா ஷர்மாவின் புன்னகையும் மறைந்தது. உள்கூரைக்கும் சுவருக்கும் இடையில் பறந்து, ரெனே டெகார்ஸ்க்கு அற்புத கணிதச் சூத்திரம் ஒன்று தோன்றக் காரணமாக இருந்த ஈயைப் போன்று, இசை அறைச் சுவர்களில் மோதி மோதி சன்னமாகக் காதில் விழுந்து கொண்டிருந்தது. என் தலைக்கு மேல் கணிதத் தேற்றம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
‘ஜர்னி டூ போர்துக்கல்’ என்ற நூலில் ஜோஸ் சரமாகோ ஒரு விநோத பயணம் பற்றி எழுதியிருக்கிறார். நானும் அது போன்ற ஒரு தனித்துவமான பயணத்தையே விரும்பினேன். ஆனால், என்னுடைய இப்பயணம் சாதாரண பயணமாகிவிட்டது. கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு விமானப் பயணமும் விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்கு அழைத்து வந்தது வரை எல்லாம் வழக்கமானதாகவே நடந்து முடிந்தன. பிறகு, மெட்ராஸ் பல்கலைகழகத்தில் இலக்கிய விழா. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் சிலரைப் பற்றிய மேலோட்டமான அறிமுகம். சிறப்பான மரியாதைக்குறிய வரவேற்பும் அறிமுகமும். இந்த வரவேற்பு டாக்டர் கிருஷ்ணன் மணியமும் அவரது நண்பர் திரு. நந்தனும் இப்பயண திட்டத்தை நன்முறையில் ஒருங்கிணைத்திருந்ததால் கிடைத்திருக்கலாம். அவர்கள் இருவரும்தான் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களாக இருந்தனர். ஆனாலும் டாக்டர் சாலே பற்றியும் சொல்லியாக வேண்டும்.
இந்தப் பெரிய அளவிலான பயணத்தை ஏற்பாடு செய்து எங்களுக்கான நிறைவான வசதிகளையும் நிர்வகித்து, குறைந்த பணத்துடன் மட்டுமே நாங்கள் வந்தால் போதும் என்றளவுக்கு எங்களின் பயணத்தை அமைத்துத் தந்தார். பிறகு, நான் கிடைக்கும் இடைவேளைகளில் எனது தோழர்களான லுட்ஃபி, ஆரிஃப், ஃபிசாவையும் இணைத்துக் கொண்டு சுவையான உணவுகள் கிடைக்கும் இடத்தையும் புத்தகக் கடைகளையும் தேடிச் சென்றேன். இறுதியில் நாவிற்கு இனிமை தரும் புகாரி உணவகத்தையும் எக்ஸ்பிரஸ் அவெனியூ எதிர்புறத்தில் அமைந்துள்ள அரபிய உணவுகள் கிடைக்கும் சைத்தோன் உணவகத்தையும் கண்டடைந்தோம். எக்ஸ்பிரேஸ் அவெனியூவில் மட்டும்தான் நல்ல புத்தகக் கடைகள் இருப்பதாக நாங்கள் அறிந்ததால், பல முறை அங்குச் சென்றோம். மார்க்வெஸ், சரமாகோ, தாகூர், ஹெமிங்வே இவர்களோடு விடுதி அறையை உயிர்ப்பித்துக் கொண்டிருந்த குறுந்தகடுகளையும் அங்கிருந்துதான் அள்ளிக் கொண்டு வந்தேன். ஆரிஃப் வாங்கிய திரைப்படங்களையும் லுட்ஃபி வாங்கிய தமிழ் கவிஞர் வைரமுத்துவின் கவிதைப் புத்தகத்தையும் நான் வாங்காமல் போனது மட்டும்தான் வருத்தம். ஆனால், இந்தச் சிறுகதையை எழுத நினைத்தபோது கோலாலம்பூரில், லுட்ஃபியிடம் வைரமுத்து புத்தகத்தை இரவல் பெற்றுக் கொண்டேன்.
இணையத்தில் லுட்ஃபி பார்த்ததாகச் சொன்ன ஒரு புத்தகக் கடையைத் தேடிக் கொண்டு நள்ளிரவில் ஏதோ ஒரு கிறுக்குத்தனத்தில் அவனுடன் சேர்ந்து, நெரிசலும் பரபரப்பும் மிகுந்த பிரோட்வேயில் வேர்த்து விறுவிறுத்து அலைந்தேன். எப்படியோ இறுதியில் புத்தகங்களுடன் எழுதுபொருள்களையும் விற்கும் அந்தச் சிறிய கடையைக் கண்டுபிடித்தோம். நாங்கள் தேடிய புத்தகங்கள் அங்கு இல்லை. புத்தகங்கள் கிடைக்காவிட்டாலும் பெரும் மக்கள் கூட்டம் நடமாடும் நெரிசல் மிக்க பிராட்வே பகுதியை நான் அங்கு அறிந்து கொண்டேன். பிராட்வே, சாலையோரங்களிலும் ஐந்தடிகளிலும் வானுயர்ந்த கட்டிடங்களிலும் வாழும் பல்வேறு வாழ்க்கைகளால் நிரம்பியிருந்தது. நம்ப முடியாத அளவு மக்கள் கூட்டத்தால் அவ்விடம் நிரம்பியிருந்தது. அவ்வளவு கூட்டத்தையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு போலீஸ்காரர் கையில் தடியுடன் நின்றிருந்தார். போலீஸின் இருப்பு மனதில் ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வை உண்டாகியது. இருந்தாலும், சரமகோவின் போர்த்துகலை நோக்கிய பயணத்தைப் போல எனது பயணம் அத்தனை விசித்திரமாகவும் விநோதமாகவும் அமையவில்லை. நிச்சயமாக விசித்திரங்கள் ஏதும் இல்லை.
நான் ஒரு தனித்த அனுபவத்தைத் தரக்கூடிய வித்தியாசமான பயணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். ஒருவேளை, சரமகோவின் ‘Siege of Lisbon’ நூல் எனது பயணத்தைத் விசித்திரமாக்கக்கூடும். அந்நாவலில், ஒரு பிழைதிருத்துனர், செய்யும் சிறு மாற்றத்தால் வரலாறு மாற்றியமைக்கப்படுவது பற்றி நினைத்தேன். யாராலும் கவனிக்கப்படாத மிகச் சாதாரண பிழைத்திருத்துனர் பணியில் இருந்து அவர் வரலாற்றை மாற்றியமைக்கும் ஆற்றல் மிக்க மனிதனாக உருவெடுக்கிறார். ஆனால், அதை எப்படி இப்பயணத்தை விசித்திரமாக்குவதோடு தொடர்புப்படுத்துவது? எவ்வகையிலும் என்னால் தொடர்புப்படுத்த முடியவில்லை. ஆகவே ‘Siege of Lisbonஐ’ என் பெட்டிக்குள் எறிந்தேன். பின்னர் கோலாலம்பூருக்குத் திரும்பியவுடன், அமெரிக்காவிலிருந்து எனக்கு நல்ல புத்தகத்தை வாங்கி வந்து பரிசளித்திருந்த எழுத்தாளருக்கு ‘Siege of Lisbonஐ’ பரிசளித்துவிட்டேன்.
குறைந்தது, ஒரு சிறுகதையோ, நாவலோ அல்லது நீண்ட கவிதையோ எழுதும் அளவுக்காவது எனது பயணம் தனித்துவமானதாக இருக்க என்ன செய்யலாம் எனப் பலவாறாக யோசித்தேன். இந்த யோசனைகளின் அடுக்குக்களுக்கிடையில் எனக்கு எப்பொழுதும் புத்தகங்களை வாங்கித் தரும் ரஹிமிடியின் ஞாபகம் வந்ததும், அவனுக்காகச் சிறந்த கவ்வாலி பாடல் தொகுப்பு அடங்கிய குறுவட்டு ஒன்று வாங்கினேன். என் மனம் இன்னும் என் பயணத்தைத் தனித்துவமாக்கக்கூடிய வழிகளையே எண்ணிக் கொண்டிருந்தது. இது வரையில் எனது பயணம் எந்தவொரு தனித்த அனுபவத்தையோ விசித்திரத்தையோ தரவில்லை. ஒருவேளை, அருகில் தொழுகை செய்ய இடம் தெரியாமல் டாக்டர் ஹனாஃபியுடன் மெட்ராஸ் பல்கலைகழகத்தின் கடைசி மேல் மாடியில் இருந்த ஸ்டோர் அறையில் தொழுகியது எனது பயணத்தைத் தனித்துவமாக்கிவிடுமா? இல்லை. அந்த அனுபவம் எனது பயணத்தைத் தனித்துக்காட்டுவதற்குப் போதாது. தொழுகுவதற்கு வூடுக் நீரைக் கழிவறையிலிருந்து எடுத்துவிட்டு ஒருவருக்குப் பின் ஒருவராகச் சென்று அந்தச் சிறிய ஸ்டோரில் தொழுதோம்.
எங்களின் செயல்களைப் பல்கலைக்கழக ஊழியர்கள் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். எங்களுடன் வந்த மற்றவர்கள் விரிவுரையாளர்களின் அறையில் தொழுதனர். அந்த அறைகள்தான் தொழுகைக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், எங்கள் இருவராலும் விரிவுரையாளர் அறையைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் சுத்தமான இடமொன்று கிடைத்தால் போதுமென ஸ்டோரிலேயே தொழுதோம். நல்ல வேளையாக டாக்டர் ஹனாஃபி தொழுகைப் பாயைக் கொண்டு வந்திருந்தார். அங்குள்ளவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள் என்றாலும் அது இன்னும் என் பயணத்தைத் தனித்துவமாக்கிவிடவில்லை. அது ஒரு சாதாரண, மிகச் சாதாரண அனுபவம்தான். பிறகு, பல்கலைகழகத்தின் கூரையில் ஏறி, சென்னை நகரின் ஒரு சிறிய பகுதியைப் பார்த்தேன். அந்தக் காட்சியிலும் எந்தவொரு வித்தியாசத்தையும் நான் உணரவில்லை. ஒரு ஐந்து மாடி கட்டடத்தின் சமத்தரை கூரையிலிருந்து காணக்கூடிய வழக்கமான காட்சி. அவ்வளவுதான்.
ஷஃப்கத் அமானத் அலியின் கவ்வாலி தன்மை கொண்ட இசையும் பாடல்களும் என் காதுகளில் ஒலித்தது. மேற்கத்தியத்தின் நவீன இசையும் கவ்வாலியின் பாரம்பரிய இசையும் ஒன்றோடொன்று இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. எப்படி இந்தப் பயணத்தைத் தனித்துவப்படுத்தலாம் என்பது பற்றிய சிந்தனை என்னுள் ஓடிக் கொண்டே இருந்தது. ஆட்டோவில் சென்னையை நகர்வலமிட்டு வரும் தருணத்தில் என்னுடன் பயணித்த அழகிய ஆண் நண்பர் ஒருவரை ஆட்டோ ஓட்டனர் வசப்படுத்த முயன்றார். ஒருமுறையல்ல, பல முறை வெவ்வேறு சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் எங்களிடம் வழக்கத்திற்கு மாறான போக்குகளைக் காட்டிக் கொண்டே இருந்தனர். அவர்களின் போக்குகள் வழக்கத்திற்கு மாறாக விசித்திரமாக இருந்தாலும், என் பயணத்தைத் தனித்துவப்படுத்துவதற்கு இது போதவில்லை.
கலிங்கத்துக்கு முன்பே உருவாகி பழைமையேறிவிட்ட ஒரு கோட்டைக்கு நீண்ட பயணம் செய்தபோது வழியில் விநோதமான மலைப்பாறைகளையும் பழங்காலத்து மக்களின் வரலாற்றுத் தடங்களையும் பார்த்ததுக்கூட என் பயணத்தைத் தனித்துவமிக்கதாக மாற்றிவிடவில்லை. என் பயணம் இன்னும் தனித்துவம் அடையவில்லை. நான் படுக்கையில் உடலைக் கிடத்தி மேற்சுவரையே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை நோக்கி சுவர்களிலிருந்து வந்த கோரைப் பற்கள் ஏதும் இப்பொழுது இல்லை. அறை நிலையான கல்லாக என்னைச் சுற்றி நின்றுக் கொண்டிருந்தது. கணினியில் ஒலித்துக் கொண்டிருந்த இசை முடங்கியிருந்தது. பெரிய படுக்கையில் இரண்டு சிறிய தலையணைகளுடன் நான் படுத்திருந்தேன். வெளியே சென்று உலாவிவிட்டு வரலாம் என்று தோன்றியது. ஜவுளி கடைகளால் நிறைந்த உஸ்மான் சாலையில், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடக்கத் தோன்றியது. ஆனாலும் வெளியே செல்ல சோம்பலாக இருந்தது.
நிறைவடையாத பல வேலைகள் கணினியிலும் விரலியிலும் இருந்தன. கையெழுத்துப் பிரதியை மதிப்பிடுதல், நூல்களுக்கான முன்னுரை எழுதுதல், இதழ்களுக்கான கட்டுரை, படைப்புகளைப் பற்றிய விமர்சனம், முழுமையடையாமல் கிடக்கும் எனது படைப்புகள் எனப் பல வேலைகள், இன்னும் கிளையிலிருந்து உதிராத டுரியான் பழம் போல நிறைவடையாமல் இருந்தன. சென்னையில் இருக்கும் நாட்களில் என் எழுத்துப் பணிகளை எல்லாம் நிறைவு செய்துவிடலாம் என்று எண்ணினேன். ஆனால், மூன்று நாட்களாகிவிட்டன, இதுவரை எந்தவொரு எழுத்து வேலைகளையும் நான் தொடவே இல்லை. ஒரு விதமான சோர்வு என் மூளையிலும் உடலிலும் படர்ந்திருந்தது. எந்தவொரு வேலையையும் செய்ய மனமும் உடலும் ஒத்துழைக்கவில்லை. கணினியின் முன் அமர்வதைவிட படுக்கையில் உடலைக் கிடத்தவே என் மனம் விரும்பியது.
கிளையிலிருந்து உதிராத டுரியான் பழம் போன்ற அந்தச் சோம்பல் காற்றின் வெப்பத்தோடும் தூசி துகள்களோடும் கலந்து உஸ்மான் ரோட்டையும் திநகரிலிருக்கும் மற்ற சாலையையும் நோக்கி நகர்ந்தது. தனித் திறமையோடு ஓட்டுனர்களால் செலுத்தப்படும் ஆட்டோ ஏறியோ, அல்லது வெறும் கால்களோடோ அது நகர்ந்திருக்கக்கூடும். வாழ்க்கைகளால் நிரம்பிய சாலைகள். அவை சாலைகளில் விளைந்த விதைகள், அங்கேயே அரும்பி அங்கேயே மலர்ந்து தன் மரகதத்தைப் பரப்பி புதிய வாழ்க்கைகளை உற்பத்திச் செய்து கொண்டிருக்கிறது. இந்தச் சாலைகளில் விளையும் விதைகளின் முகங்களை வைரமுத்துவின் கவிதைகளில் முன்பு கண்டுள்ளேன்.
‘அழுதாலும் ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது
அருங்கம்புல் புத்தி சொல் அருவா கேட்காது
இடிங்கையா இடிங்க
இந்த வீட்டத் தான் இடிங்க
கூரையைப் பிரிச்செறிங்க
கொடியெல்லாம் அவுத்தெறிங்க
கண்ணாடி கடைக்குள்ள காட்டானைப் புகுந்தது போல்
முன்னாடி பின்னாடி முழுசா நொறுக்கிடுங்க’
இன்னும் பல வாழ்க்கைகள் கவிதையிலிருந்து முளைக்கின்றன. எனக்கு எல்லாவற்றையும் விளக்கிவிட விருப்பம் இல்லை. எனது சோம்பல் கடற்கரையோர சாலை வழி ஊர்ந்து சென்று பிரோட்வேயைச் அடைந்து எங்கும் முளைத்துக் கிடந்த வாழ்க்கையில் கலந்தது. சில நேரங்களில் அது அனுஷ்கா சங்கரின் இசையையும் இணைத்துக் கொண்டு தூசி பதிந்த இலைகளையும் பிளாஸ்டிக் கூரைகளையும் கடந்து வெப்பமேறிய சாலையை அடைந்தது. கோடிக்கணக்கான வாழ்க்கை கதைகளை இந்தச் சாலையில் விளையும் விதைகள் உருவாக்குகின்றன. பிறப்பு, இறப்பு மீண்டும் பிறப்பு எனச் சுழல்கிறது வாழ்க்கை. உஸ்மான் ரோட்டின் ஜவுளி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் நிகழ்த்தும் வர்த்தகச் சுழற்சியைப் போன்றதுதான் இந்தச் சாலையில் விளையும் விதைகளின் வாழ்க்கை சுழற்சியும்.
நான் இன்னும் எந்தவொரு எழுத்துப் பணியையும் என் கணினியில் தொடங்காமலிருந்தேன். பாடல்களை இசைக்க விட்டு அதன் ஆலாபனைகளில் மிதந்தபடி இந்த 241ஆம் எண் கூண்டுக்குள் உள்ள படுக்கையிலிருந்து எழாமல் கிடக்கிறேன். என் பையின் எடைகூடினாலும் பரவாயில்லை, என் எழுத்து வேலைகளை நிறைவு செய்ய முடியும் என்று எண்ணி பல கிலோமீட்டர்களைக் கடந்து சுமந்து கொண்டு வரப்பட்ட என் கணினி இப்போது பாடலை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. பல மணிநேரங்களில் சில நிமிடங்கள் மட்டுமே என் கணினி செயல்பட்டது அதுவும் பாடல் ஒலிப்பதற்கு மட்டுமே.
முற்றிலும் வீண் செயல்.
சலிப்படைந்த நான், பாடலை முடக்கிவிட்டு கணினியின் திரையையும் மூடினேன். கோரைப் பற்களை நீட்டி அச்சுறுத்திய கூண்டு எண் 241லிருந்து வெளியேறி கீழிறங்கினேன். எனது நண்பர்கள் யாருமே அங்குத் தென்படவில்லை. சாவியைக் கவுண்டரில் கொடுத்துவிட்டு விடுதியிலிருந்து வெளியேறினேன். இது நாள் வரையில் விடுதியின் கவுண்டரில் ஆண் ஊழியர்களை மட்டுமே நான் கண்டிருந்தேன். மற்ற நாடுகளிலிருப்பதைப் போல் இந்த விடுதி முகப்பிடத்தில் பெண் ஊழியர்கள் இல்லை. விடுதி முகப்பிடத்தில் ஷத்தா ஷர்மாவின் முகத்தைக் காண முடியவில்லை; உஸ்மான் ரோட்டிலும் ஷத்தா ஷர்மா தென்படவில்லை. சரி, போகட்டும். எந்த அழகும் இல்லாமலும் வாழ்க்கை இருந்து கொண்டுதானே இருக்கிறது.
நாச்சியப்பா பார்க்கிலிருந்து வெளியேறி மகாலட்சுமி தெருவின் வழியே சென்று உஸ்மான் ரோட்டை அடைந்தேன். உஸ்மான் ரோட்டில் வழக்கம் போல் கூட்டம் அலைமோதியது. போர்த்துகலை நோக்கிய பயணத்தில், சரமாகோ போல ஒரு விசித்திரமான தனித்துவமான பயணத்தைத் தொடங்க விரும்பினேன். ஒரு வேளை நானும் எல்லைகளிலிருக்கும் சிற்றூர்களுக்குச் சென்று அங்குள்ள சாமானிய மக்களின் கதைகளைக் கண்டடைந்தால் என்ன எனத் தோன்றியது. சரமாகோ, தன் சீருடையை இரவல் வாங்கிய நண்பன் செய்த கொலைப்பழியைத் தான் சுமந்து கொண்டு மரண தண்டனை ஏற்றுக்கொண்ட ஒரு சிப்பாயின் கல்லறைக் கதையை எழுதியது போல நானும் எழுத வேண்டும். தன் நண்பனுக்காக அமைதியாக இருந்து அந்தச் சிப்பாய் உயிர்விட்டான். ஆனால், இந்தச் சிப்பாயின் கதை வரலாற்று கதையாகவோ காப்பியமாகவோ மாறவில்லை. சிற்றூர் ஒன்றின் மக்களிடையே பேசப்படும் வாய்மொழிக் கதையாக மட்டுமே இருந்தது. இப்பொழுது நான் எங்கிருந்து தொடங்குவது? தவறிழைக்காத சிப்பாயின் கல்லறையைத் தேடிச் செல்லவா? அல்லது வரலாற்றில் எழுதப்படாத சாதாரண மக்களின் கதையைத் தேடிச் செல்லவா?
ஆட்டோக்கள் தெருவைக் குறுக்கும் நெடுக்குமாக கடந்து கொண்டிருந்தன. அந்த ஆட்டோக்களின் என்ஜின் ஓசையும், கை கியர்களின் கடமுட சத்தமும் வாழ்க்கையின் அசல் தாளத்தை ஒலித்துக் கொண்டிருந்தது. இவையும் கூட இந்தச் சாலையில் விளைந்த விதைகள்தான். தனக்கே உரிதான இசையை எழுப்பிக் கொண்டு தனக்கான வாழ்க்கையை விதைத்துக் கொண்டிருக்கின்றன. நான் என் நண்பர்களை மறந்து இந்தச் சாலையில் அலைமோதிய ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இடையில் குழம்பி போன மனிதனாக வீற்றிருந்தேன். கட்டிடங்களின் மீதிருந்தும் விண்வெளியிலிருந்தும் செயற்கை கோள்களிலிருந்தும் பார்க்கப்படும் என் உருவம் சிறுத்துக் கொண்டே சென்று பலகோடி மக்கள் வாழும் இந்தக் கண்டத்தில் சிறுபுள்ளியாக எஞ்சுகிறது. மக்கள் நிரம்பி வழியும் சாலையில், மக்கள் வெள்ளத்திற்கிடையில் எனது பயணம் தொடங்கியது.
சாலைகளில் ராட்சசன் போல வீற்றிருந்த பெரிய கூடோன்களின் கீழே நீண்டு கிடக்கும் கடைகளில் வியாபாரிகள் மலர் மாலைகளையும் மூடப்படாத பலகாரங்களையும் இனிப்புகளையும் என்னெதிரே நீட்டினார்கள். இன்னும் என் விநோத பயணத்தை நான் அறியவில்லை. நான் இன்னும் ஒரு அப்பாவி சிப்பாயின் கல்லறையைக் கண்டுபிடிக்கவில்லை. மாறாக ஆன்மிக ஞானியாகக் கருதப்படும் ஒரு மௌலானாவின் கல்லறையைத்தான் கண்டுபிடித்தேன். மனிதர்கள் அந்த மௌலானாவின் கல்லறையை வணங்கி, ஆசிர்வாதம் பெற்று, நேர்திக்கடன்களைச் செலுத்திக் கொண்டிருந்தனர். எனக்கு அது வெற்று இடமாக தோன்றியது. ஆற்றல் கொண்ட ஆன்மிக ஞானியாகக் கருதப்படும் அந்த மனிதரின் கல்லறையை நான் பொருட்படுத்தாமல் கடந்து சென்றேன். இது அவர்களுடைய நம்பிக்கை என்பதால் நான் அதில் தலையிடாமல் என் பயணத்தைத் தனித்துவமாக்கக்கூடிய வழியைத் தேடி நடந்தேன். அலைகளின் சன்னமான சத்தத்தோடு, கடற்கரை மணலின் கொதிப்பு, அம்பு போலவும் ஈட்டி போலவும் கத்தி போலவும் என் உடலில் இறங்கிக் கொண்டிருந்தது.
சில நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தைத் தீர்க்கும் நொங்கைச் சீவும் அரிவாள் போல வெயில் என் உடலைத் தாக்கியது. கொதி கொதிக்கும் வெயிலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கால் நடையாக நடந்தேன். ஆனால், விநோதமான எதுவும் மனதில் பதியவில்லை. எல்லா எழுத்தாளர்களும் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான விஷயங்களை எழுதத் துடிக்கும் போது நான் மட்டும் எப்படி விநோதங்களற்ற ஒரு வழக்கமான சிறுகதையை எழுதுவது?
இறுதியாக வரலாறு விட்டுச் சென்ற ஒரு பழங்காலத்து நகரின் பாறை ஒன்றின் மேல் ஓய்ந்து அமர்ந்திருந்தேன். பல தசாப்தங்களுக்கு முன் வாழ்ந்த பல்லவர்கள் விட்டுச் சென்ற கலைநுணுக்கத்தின் எச்சம். நான் இன்னும் என் பயணத்திலும் கதையிலும் எழுத்திலும் எந்தவொரு தனித்துவத்தைவும் வித்தியாசத்தையும் அடையவில்லை. எவ்வித முக்கியத்துவமும் விநோதங்களும் இல்லாத இந்தக் குறிப்புகள் சாதாரணமான ஆச்சரியங்களற்ற வரலாற்றுக் குறிப்பாக ஆகக் கூடியவை என்பதை இறுதியில் ஏற்றுக் கொண்டேன். ஆனால், அதுதானே இயல்பான வாழ்க்கை. எல்லா அசாதாரணங்களும் வாழ்க்கைப் பயணத்தில் என்றோ ஒருநாள் சாதாரணமானவையாக மாறிவிடக்கூடியவைதானே. வியப்பு என்பது பழக்கப்படாத ஒன்றை எதிர்கொள்ளும் போது மட்டுமே உணரக்கூடிய ஒன்றல்லவா? எல்லாவித இன்னல்களையும் துயரங்களையும் வலிகளையும் வாழ்க்கை அனுபவத்தில் கண்ட பின்னர் எதுதான் விநோதமாக் கூடும்? நான் என் கருத்தை மாற்றிக் கொண்டு இப்படி எழுதினேன்: இந்தச் சாதாரணமான, முக்கியமற்ற, தனித்துவமற்ற குறிப்புகள் அனைத்தும் முக்கியமான தனித்துவமான விசித்திரமான வரலாறாக மாறக்கூடியவை.
சாலைகளில் விளைந்த விதைகள் தொடர்ந்து படர்ந்து வாழ்க்கையாக உருமாறி அதன் மெல்லிசையை இசைத்துக் கொண்டே இருக்கின்றது. வெயில் மழை எனப் பாராமல் கரடு முரடான பாதைகளிலும் வாழ்க்கையை மட்டும் முன்வைத்து அவ்விதைகள் தொடர்ந்து விளைந்து கொண்டுதான் இருக்கின்றன.
BENIH YANG TUMBUH DARI JALAN
மலாய் மூலம்: எஸ்.எம்.ஷாகீர்/ S.M. Zakir
மொழியாக்கம் : ப. சாலினி