யாதனின் யாதனின் நீங்கினோர் காதை

புதிதாக வந்திருக்கும் சினிமாப் பாடல் வரிகளுக்கான தனியிடத்தை உருவாக்குவதற்காக அனுமதி பெறாமலே பள்ளிக்கூடத்தில் படித்த பாடங்களை அழித்துவிடும் தானியங்கி நினைவாற்றல் தான் என்னுடையது என்றாலும், சில ஆங்கில/தமிழ் செய்யுள்களும் பாடங்களும் எப்படியோ அந்த நினைவாற்றலுக்குத் தப்பி கொஞ்சம் மீதமிருக்கவே செய்கின்றன. அப்படி என் நினைவாற்றலில் தப்பிப் பிழைத்த செய்யுள்களுள் ஒன்று ஷேக்ஸ்பியரின் ‘As You Like It’ என்ற நாடகத்தில் Jaques என்ற கதாபாத்திரம் உரைக்கும் ‘Seven Ages’. அதற்குப் பிறகு எத்தனையோ செய்யுள்களை வாசித்தபோதும் அந்தச் செய்யுளின் கருத்துக்களை வேறு ஒரு தமிழ் சூப்பர் ஹிட் பாடல் கொண்டாடித் தீர்த்தபோதும் என் மனதில் என்னவோ ஷேக்ஸ்பியரின் ‘Seven Ages’ இடம்பெற்றுவிட்டது.

மனித வாழ்வை ஏழு பருவங்களாகப் பிரித்து அந்தந்த பருவங்களுக்கான குண நலன்களை விளக்கும் அந்தச் செய்யுளின் உலகப் புகழ் பெற்ற முதல் வரியான ‘All the world’s a stage’ என்ற வரியை விடவும் பள்ளிக்கூடத்தில் படித்த நாள் முதல் என்னை மிகவும் கவர்ந்தது அதன் மூன்றாவது வரியான ‘They have their exits and their entrances’தான். அந்த வரி சார்ந்து எப்போதும் என் மனதில் இருந்துகொண்டே இருக்கும் ஆச்சரியத்திற்கான காரணம் ‘entrances and exits’ என்பதற்குப் பதிலாக ‘exits and entrances’ என்று அமைக்கப்பட்ட அதன் வாக்கிய அமைப்புதான். உலகமே ஒரு நாடக மேடையாக இருந்தால், உள் நுழையாத ஒரு நடிகர் எப்படி வெளியேற முடியும்? பிறக்காதது இறப்பதெப்படி?

‘Sonnet’ எனும் செய்யுள் வடிவத்தின் சந்தத்திற்கும் நடிகர்களின் உச்சரிப்பிற்கும் பொருத்தமான வாக்கிய அமைப்பு ‘exits and entrances’தான் என்றாலும். அத்தனை எளிமையாக வெறும் சந்தத்திற்காக வரிகள் அமைக்கும் ஆசிரியராக ஷேக்ஸ்பியர் இருந்திருந்தால் அவருக்கும் எனக்கும் இடையில் கடந்து சென்ற ஐந்து நூற்றாண்டுகளில் அவர் எங்கேயோ தொலைந்து போயிருப்பார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. என்னளவில் ஒரு சுத்தமான பின்நவீனத்துவ வாசகனாக நானும் பிரதியும் மட்டுமே தனித்திருக்கும் ஒரு அத்துவான வெளியிலிருந்து அந்த exits and entrancesஐ காண்கையில் எதுவொன்றில் பிரவேசிப்பதென்பதும் இன்னொன்றிலிருந்து வெளியேறுவதுதான் என்று ஷேக்ஸ்பியர் உணர்ந்திருந்தாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. அல்லது ஒன்றிலிருந்து வெளியேறாமல் இன்னொன்றில் பிரவேசிக்க முடியாது என்று உணர்ந்திருந்தாரோ? அல்லது வெளியேற்றமும் பிரவேசமும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள்தான் என்று உணர்ந்திருந்தாரோ? ஷேக்ஸ்பியரே எழுந்து வந்து “அட விடப்பா ஏதோ சந்தத்துக்காக எழுதிப்புட்டேன். இதை போயி பெரிசுபடுத்திகிட்டு” என்று சொன்னாலும் அந்த வரியிலிருந்து பிறந்த இந்தக் கேள்விகள் இன்று வரை எனக்களிக்கும் கிளர்ச்சி அடங்காது என்றுதான் தோன்றுகிறது. அந்தக் கேள்விகளை வெறும் தனிக்கேள்விகளாக மட்டுமே எதிர்கொள்ளாமல் அவற்றின் ஆதாரத்தை நோக்கிச் செல்லும் அனுபவங்களாக அணுகி அறிய முற்படுகிறது எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’.

ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்தையும் விட்டு வெளியேறுவது குறித்த கனவுகளோ கற்பனைகளோ இல்லாதவர்கள் உலகிலேயே மிகச் சிலர்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக இந்திய ஆண்களின் மனதில் வெளியேற்றம் குறித்த கனவுகளுக்கான விதைகள் மரபின் ஒரு பகுதியாகவே விழுந்துவிடத்தான் செய்கிறது. அதை வளர்த்தெடுப்பதும் மக்கவைப்பதும் அவரவர் வாழ்க்கை போக்கில் அமைந்தும் விடுகிறது. அடிப்படையில் மென்பொருள் நிறுவன ஊழியராகி அமெரிக்காவில் குடியுரிமை பெறும் கனவிற்கும் துறவறம் மேற்கொள்ளும் கனவிற்கும் அடித்தளமாக இருப்பவை இரண்டு உணர்வுகள்தான். அவை, அமைந்துவிட்ட வாழ்வின் மீதான அதிருப்தி. அமைத்துக் கொள்ளக்கூடிய வாழ்வின் சாத்தியங்கள் மீதான எதிர்பார்ப்பு. ஆனால் இவ்விரண்டு வெளியேற்றங்களுக்கும் இடையில்தான் எத்தனை பாரதூரமான வேற்றுமை? அந்தப் பாரதூரமான இடைவெளியில் நிகழும் பல்வேறு வாழ்வுகளையும் வெளியேற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறப்பு, வாழ்வு, மரணம், மனம், அனுபவம், காலம் சார்ந்த அடிப்படையான கேள்விகளை எதிர்கொள்கிறது நாவல்.

எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் நாவல்களைக் குறித்து எழுத முற்படும் எவரும் சந்திக்கும் முதல் சவாலென்பது அந்த நாவல்களுக்கான கதைச் சுருக்கத்தை எழுதுவதுதான். தன் அத்தனை சாத்தியங்களையும் அவற்றை அணுகுவதற்கான அத்தனை வழிகளையும் வாசகனின் முன் திறந்து வைத்திருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புகள் மையமற்றவை. எனவே எந்த முனையிலிருந்தும் அணுகப்படக்கூடியவை. அவற்றை எந்தவொரு விதமாகச் சுருக்கிச் சொல்வதென்பதும் பிற சாத்தியங்களை மறுப்பதாகிவிடும். உதாரணமாக வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் பிறப்பு, வாழ்வு, மரணம், மனம், அனுபவம், காலம் சார்ந்த கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டு அமைந்துவிட்ட வாழ்விலிருந்து வெளியேற முயற்சிக்கும் உதிரி மனிதர்களின் கதைகளை வேதமூர்த்தி எனும் மகானின் வாழ்வின் வழியே இணைப்பதே எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’ என்று எழுத முற்படும்பொழுதே வேதமூர்த்தி எனும் மகானின் வாழ்வை அவரால் கடைத்தேற்றப்பட்ட மனிதர்களின் அனுபவங்களின் வழியே தொகுத்து முன்வைப்பதே நாவலின் கதைச் சுருக்கம் என்றும் எழுதத்தோன்றுகிறது.

முன்னதில் வெளியேறுபவர்கள் மையத்திலும் வேதமூர்த்தி சுவாமிகள் விளிம்பிலும் இருக்க பின்னதில் அதற்கு நேரெதிரான கதையாடல் உருவாகிவிடுகிறது. இவ்விரு கதையாடல்களுக்கு அப்பாலும் கதைச்சொல்லியான சந்தானத்தை மையமாகக் கொண்ட கதையாடல், இச்சா மிருத்யு எனும் சித்தியின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாடல் என நாவல் கிளை பரப்பி விரிந்துகொண்டே இருக்கிறது. இப்படியான பன்முகத்தன்மை என்பது நாவலெனும் கலைவடிவத்தின் அடிப்படைத் தன்மைகளில் ஒன்று என்றாலும் பெரும்பாலும் ஆசிரியரின் குரல்/சார்பு சார்ந்து நாவலின் மைய இழையை வாசகர்கள் பற்றிவிட முடியும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் சில நாவல்களிலேயேகூட அப்படியான சிறு சாத்தியம் உண்டு. ஆனால் ‘வெளியேற்றம்’ நாவலின் மைய இழையோ ஒவ்வொரு வாசிப்பிலும் என் கைகளை விட்டு நழுவிக்கொண்டே இருக்கிறது. இந்த முறை என் வாசிப்பின் வசதிக்காக ‘தன்னிலிருந்து வெளியேறுதல்’ எனும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாடலை நான் மையமாக எடுத்துக்கொண்டேன் என்று மட்டுமே இப்போது சொல்ல முடிகிறது.

‘தன்னிலிருந்து வெளியேறுதல்’ போன்ற கனத்த சொற்களை ஒரு படைப்பின் மீது பிரயோகிக்கையில் அதீத கவனத்தோடுதான் பிரயோகிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் தத்துவார்த்த அறிதல் இன்றி இத்தகையச் சொற்களைப் பயண்படுத்துகையில் படைப்பில் இல்லாத கனத்தை நாம் அதன்மீது வலிந்து ஏற்றுவதும். படைப்பில் ஏற்கனவே இருக்கும் கனத்தை நம் அலட்சியப் பிரயோகத்தால் குறைப்பதுமான இரு விதமான பிழைகள் நிகழ்ந்துவிடக்கூடும். ஆனால் வெளியேற்றம் நாவலைப் பொருத்த வரையில் அச்சொற்களை மிகுந்த சுவாதீனமாகவே ஒருவர் பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அது முன்வைக்கும் தத்துவார்த்த பார்வை என்பது கோட்பாடுகளின் கெடுபிடியின்றி தன்னியல்பில் வெளிப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. அச்சொற்களின் மரபார்ந்த பொருளும் அதன்மீதான எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் தனித்துவமான கண்டடைதல்களும் அத்தனை இயல்பாக ஒன்றோடு ஒன்று முயங்கியே நாவலில் வெளிப்படுகின்றன. அவை ஆசிரியரால் அறுதியாக வரையறுக்கப்பட்டுக் கதாபாத்திரங்களிடம் திணிக்கப்படாமல், கதாபாத்திரங்களின் அனுபவங்களாலேயே வரையறுக்கப்படுகின்றன. அதன் விளைவாக அந்தக் கனத்த சொற்கள் கதாபாத்திரங்களின் வாழ்வில் அவர்கள் கண்டடையும் யதார்த்தங்களாகவே வெளிப்படுகின்றன. எனவே வெவ்வேறு விதமான ‘தன்னிலிருந்து வெளியேறுதல்’கள் அவற்றின் பல்வேறு முகங்களோடும் குணங்களோடும் நாவலில் வெளிப்படுகையில் வாசகன் அவற்றோடு தன்னைப் பொருத்திப் பார்த்து அச்சொற்களைத் தனக்கான பிரத்தியேகமான அனுபவங்களாக்கிக் கொள்ளமுடிகிறது. உதாரணமாகத் தன் மனத்தின் கட்டுகளைக் கடந்து வெளியேறும் சிவராமன், பால்பாண்டி போன்றவர்களும் தன் உடலின் கட்டுகளை மீறி வெளியேறும் குற்றாலலிங்கம், ராமலிங்கம், ஹரிஹரசுப்ரமணியம் போன்றவர்களும் தன் சூழலின் கட்டுகளிலிருந்து வெளியேறும் ஜய்ராம், கோவர்தனம் போன்றவர்களும் தன் அறிவிலிருந்து வெளியேறும் வைத்தியரும் அவரவர்கான ‘தன்னிலிருந்து வெளியேறுதல்’களை அவரவர் வழியில் கண்டடைகிறார்கள். அவற்றில் வேதமூர்த்தி எனும் கதாபாத்திரத்தின் பங்களிப்பன்றி யாதொரு ஒப்புமையும் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவரவருக்கான வெளியேற்றங்களைக் கண்டடைகையில் அவ்வெளியேற்றங்கள் எவையும் தனித்தவை அல்ல என்பதையும் வெளியேறுதலென்பது திரும்புதலற்றது, முழுமையானது என்பதையும் கண்டடைகிறார்கள். உதாரணமாகத் தன் உடலின் கட்டுகளில் இருந்து வெளியேறும் ராமலிங்கம் அவை வெறும் உடல் சார்ந்த கட்டுகள் அல்ல அவற்றை கடக்க அவன் மனதையும் கடக்க வேண்டும் என்பதை உணர்கிறான். அதனை விட்டு வெளியேறிய பின்பே உண்மையான விடுதலையை உணர்கிறான். தன் சமூகத்தின் கட்டுகளைக் கடக்க நினைக்கும் ஜய்ராம் தன்னையே கடந்து செல்வது மட்டுமே முழுமையானது என்று உணர்கிறான்.  இவ்வாறு வெளியேற்றம் குறித்த நாவலின் சித்திரங்கள் அனைத்துமே எளிய கோட்பாடுகளுக்கும் மரபார்ந்த சடங்குகளுக்கும் அப்பால் சென்று வாசகனிடம் அனுபவப்பூர்வமாக நிகழ்கிறது. உண்மையில் நாவலின் அறிவார்ந்த வெளியேற்றங்களை விடவும் பூடகமான வெளியேற்றங்களே என்னை அதிகமும் கவர்ந்தன. கோவர்த்தனத்தின் வெளியேற்றத்தை விடவும் தன் வத்சலா மண்ணியின் மரணத்திற்கும் மகன் வத்சனின் மரணத்திற்கும் இடையில் சிவராமனுக்கு நிகழும் வெளியேற்றமே பூடகமானது. அதனினும் பூடகமானவையும் நாவலில் இருக்கவே செய்கின்றன.

இவை அனைத்திற்கும் ஆதாரமாக அல்லது யதேச்சையான பங்கேற்பாளராக இருக்கும் வேதமூர்த்தியைப் பின்தொடர்ந்து செல்லும் நாவலின் பிரதானமான பலம் என்பது அக்கதாபாத்திரத்தின் வடிவமைப்புதான். மொத்த நாவலிலும் நிறைந்திருப்பது ஒரு வேதமூர்த்திதானா அல்லது வெவ்வேறு வேதமூர்த்திகளா எனும் கேள்வியை நாவல் தன் மையமற்ற வடிவத்தின் வழியே உருவாக்க முயன்றாலும் அவ்வடிவத்தையும் மீறி அவர் ஒரு கதாபாத்திரமாக இருப்பதற்கான நியாயங்களையும் அது வழங்கவே செய்கிறது. வைரத்தின் அத்தனை முகங்களும் தனியே மின்னினாலும் வைரம் ஒன்றுதானே? குழந்தைபோல சிரிக்கக் கூடியவராக ஒரு அத்தியாயத்திலும் சிரித்தே அறியாதவராக மறு அத்தியாயத்திலும் வேதமூர்த்தியின் கதாபாத்திர அமைப்பில் நாவல் உருவாக்கும் முறன்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து பெரும் முழுமையாகவே நிலைகொள்கிறன. தன் மரணத்தைச் சுயமாகத் தீர்மானிக்கும் சித்தியைப் பெரும் வேதமூர்த்தியின் பயணம் தன்னிலிருந்து வெளியேறுதல் எனும் நாவலின் இழையின் நேரடி வெளிப்பாடாக இருக்கிறது. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குள் பிரவேசிப்பது போன்ற எளிமையுடன் வாழ்விலிருந்து மரணத்திற்குப் பிரவேசிக்க முடியுமானால் மரணத்திலிருந்து வாழ்விற்கும் அத்தனை எளிதாகத்தான் பிரவேசித்து வந்திருக்கிறோமோ? இந்த வாழ்வை ஒரு நீண்ட பேருந்து பயணத்தின் இடைநிற்றல் அளவுக்கே சாதாரணமாகக் கடக்க முயற்சிக்கும் வேதமூர்த்தி அந்த இடைநிற்றலில் தொட்டுச் செல்லும் வாழ்க்கைகளும் விட்டுச் செல்லும் தாக்கங்களும் நாவலின் இறுதியில் அவர் மரணமின்மை எனும் வேறு ஒரு சித்தியையும் அடைந்துவிட்டதாகவே கருத இடமளிக்கின்றன. உணர்வுச்சங்களைத் தொடர்ந்து ரத்து செய்யும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகருமே சில மகத்தான உச்சங்களை வேதமூர்த்தி அடைய அனுமதிப்பது அந்தக் கதாபாத்திரத்தின் தாக்கத்திற்கான சாட்சியாகிறது. அல்லது அதுவே வேதமூர்த்தி சுவாமிகளின் ஆகப்பெரிய லீலையோ?

தன் தந்தையின் ஆதிக்கம் நிறைந்த வாழ்வை விட்டு (பூர்வாசிரமம்) தன் குருவின் துணையோடு இருபது வயதில் வெளியேறும் வேதமூர்த்தி தன் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் அத்தனை மனிதர்களுக்கும் தாயும் தந்தையுமாகிறார். உண்மையில் ஒட்டுமொத்த நாவலையும் தந்தைகளுக்கும் தனையர்களுக்குமான உறவு சார்ந்ததாக வாசிக்க முடியும் என்றே தோன்றுகிறது. நாவலில் வேதமூர்த்தியால் தங்கள் வாழ்விலிருந்து வெளியேறும் அத்தனை கதைமாந்தர்களும் தந்தையர்களால் கைவிடப்பட்டவர்களாகவோ தந்தையர்களின் பாசத்திற்கு ஏங்குபவர்களாகவோ இருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை எத்தனை தாயன்பு கொண்டு நிரப்ப முயன்றபோதும் அது நிரம்புவதில்லை. அந்தத் தாயன்பும் இல்லாமல் போகும் தருணங்களில் அவர்கள் தேடியலைந்த தந்தையின் அரவணைப்பை வேதமூர்த்தியில் கண்டடைகிறார்கள். தந்தைகளுக்கும் மகன்களுக்குமான உறவைப் போலவே அவர்களது உறவுகளும் முரண்களாலும் மோதல்களாலும் அரவணைப்புகளாலும் ஆற்றுப்படுத்தல்களாலும் நிறைந்திருக்கிறது. வேதமூர்த்தியை விட சில வருடங்களே இளையவரான ஜய்ராமுக்கும் வேதமூர்த்திக்குமான உறவு உலகமெங்கும் தந்தையர்க்கும் மூத்த மகன்களுக்கும் இடையிலானது போலவே தீர்க்க முடியாத பிணக்குகளும் அளவு கடந்த அன்பும் ஒன்றாகக் கலந்தே இருக்கிறது. அதே நேரத்தில் கடைசி சிஷியரான ஹரிஹரசுப்ரமணியத்திற்கும் வேதமூர்த்திக்கும் இடையிலான உறவு பல வருடங்கள் கழித்து பிறந்த கடைக்குட்டிகளுக்கும் தந்தையர்க்கும் இடையிலான வாஞ்சையான உறவேதான். இந்த உறவை மிகக் கச்சிதமாக புரிந்துக்கொண்டவர் வளர்ந்த குழந்தையாக வாழும் மன்னாதிதான்.

கனமான பேசுபொருள் என்பது குறையாத வாசிப்பின்பத்திற்கான மாற்று அல்ல என்பதை எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புகளை வாசிக்கும் எந்தவொரு வாசகனும் அறிந்திருப்பான். மொழியும், வடிவமும் அனுபவமுமென ஒரு முழுமையான வாசிப்பின்பத்தை அளிக்கக்கூடியவை அவரது படைப்புகள். வெளியேற்றம் நாவல் அதன் உச்சம். ஆங்கிலத்தில் easter eggs என்று சொல்லக்கூடிய நாவலெங்கும் பொதிந்து வைக்கப்பட்ட சிறு தகவல்களில் தொடங்கி பூடகமாகச் செயல்படும் உட்பிரதிகள் (subtexts) வரை கண்டடைய விரும்பும் ஒருவனுக்கு தீராத வாசிப்பின்பத்தைத் தரக்கூடிய நாவல் வெளியேற்றம். நாவலின் களங்களில் உருவாக்கப்படும் சில எழுத்தாளர்களின் சாயல்கள் easter eggs என்றால் நாவலில் பெண்கள் அடையும் பூடகமான ஆனால் மகத்தான வெளியேற்றங்கள் ஒரு உட்பிரதி. Easter eggsக்கும் உட்பிரதிகளுக்கும் இடையில் இருப்பது ஒரே வேற்றுமைதான். முந்தையதைக் கண்டடைகையில் வாசிப்பின்பம் மட்டுமே கிடைக்க, பிந்தையதிலோ அவ்வாசிப்பின்பம் இன்னொரு தரிசனமாக மாறுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் வேதமூர்த்தி அடைய முற்படும் சித்தி இரண்டு பக்கங்கள் மட்டுமே வரும் அவர் மனைவிக்கு வேறு விதத்தில் ஏற்கனவே சித்தித்திருக்கிறது என்பதைக் கண்டடைகையில் அதன் வாசிப்பின்பம் ஒரு தரிசனத்தை வாசகனுக்கு அளிக்கிறது. மேலும் வட்டார வழக்குகளின் சரியான பயன்பாடு உரையாடல்களெங்கும் விரவியிருக்கும் நகைச்சுவை எனச் சொல்லித்தீராத வாசிப்பின்பத்தை அளிக்கிறது வெளியேற்றம்.

நல்ல எழுத்து என்பது ஒரு நல்ல எழுத்தாளனால் உருவாக்கப்படலாம். ஆனால் மகத்தான எழுத்து என்பது எழுத்தாளனையும் மீறி நிகழ்வதுதான் என்ற நம்பிக்கையுடையவன் நான். அதிலும் ஒரு மகத்தான எழுத்தாளரின் மகத்தான எழுத்து என்பது அவர் உத்தேசித்த தளங்களுக்கும் அப்பால் தன்னிச்சையாகப் பயணிக்கக்கூடியது. அவ்வாறு பயணித்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் மகத்தான படைப்புகளுள் ஒன்று வெளியேற்றம். என்னளவில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் தலை சிறந்த படைப்பென்பது வெளியேற்றம்தான். எழுத்தாளர் வண்ணதாசனின் ‘வேறு வேறு அணில்கள்’ என்ற சிறுகதையின் முடிவில் இப்படி ஒரு வரி வரும் ‘சற்றுமுன்பு சரசரவென்று இறங்கி ஓடியதும் இப்போது மேலே ஏறிப்போவதும் ஒரே அணில்தானா வெவ்வேறா என்று தெரியவில்லை. ஒன்று என்று தீர்மானிக்கத்தான் விருப்பமாக இருந்தது’. எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் நாவலை வாசிக்கும் எந்தவொரு வாசகனுக்கும் மனதில் வரக்கூடிய மிகக் கச்சிதமான வரியாக இதைக்கொள்ள முடியும். ஒரே ஒரு திருத்தம்தான். ஆயுள் காப்பீட்டு விற்பனை பிரதிநிதி சந்தானமும் காசியிலிருந்து வீடு திரும்பும் சந்தானமும் ஒன்று இல்லை. அவனைப் பின்தொடர்ந்து சென்ற வாசகனும் இல்லை. இல்லவே இல்லை.       

2 comments for “யாதனின் யாதனின் நீங்கினோர் காதை

  1. November 4, 2023 at 1:30 am

    ஆஹா…ஷேக்ஸ்பியரிலிருந்து வெளியேறி, வண்ணதாசனுக்குள் நுழைந்து முடிகிறது. இடையில் யுவனின் நீண்ட வெளியேற்றம். நல்ல கட்டுரை.

  2. Prabakaran
    November 4, 2023 at 2:44 pm

    Well written article

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...