சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது. தாத்தா பள்ளிக்கு வந்தால் எங்கள் பள்ளியுடன் ஒட்டியுள்ள மாரியம்மன் கோயிலின் முற்றத்தில் அமர்ந்துகொள்வார். நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு மேஜிக் செய்யும்படி கெஞ்சுவோம்.

சிறிய வாய் கொண்ட குளிர்பான புட்டிக்குள் இருபது காசை நுழைப்பது, தன் விரலில் உள்ள மோதிரத்தைக் காணாமல் அடிப்பது, எங்கள் கைக்குட்டையை ஓர் அணில்பிள்ளையாக மாற்றி துள்ளத்துடிக்க வைப்பது என அவர் செய்யும் மாய வித்தைகள் ஏராளம். சில சமயம் வினோதமான உடல் முறுக்குகளையும் செய்துகாட்டுவார் தாத்தா. மூக்கை வலது கை விரலால் பிடித்துக் கொண்டு இடது கை முழங்கையை வலது கை வளையத்தில் விடுவது, வாயில் குடிக்கும் நீரைக் கண் வழியாக வழியவிடுவது, மூக்கில் நீர் உறிஞ்சுவது எனத் திகைப்படைய வைப்பார்.

மேஜிக் தாத்தா வித்தைகளில் நாங்கள் சொக்கிப் போய் கிடப்பதால் பெரும்பாலும் பள்ளி மணி அடித்தப்பிறகும் வகுப்புக்குள் நுழைவதில்லை. அப்படி ஒருமுறை அவரின் மேஜிக்கை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தபோது உடற்பயிற்சி ஆசிரியர் அங்கு நின்றுக்கொண்டிருந்த எனக்கும் என் நண்பர்களுக்கும் பிரம்பால் அடிக்கொடுத்தார். தாத்தா கோபம் கொண்டு எங்களை அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும் மாணவர்கள் கெட்டுப்போகத் தாத்தாவே காரணமாக இருப்பதாக உடற்பயிற்சி ஆசிரியர் சத்தம் போட்டார். தன் உடற்பயிற்சி பாடம் ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டதாகத் தாத்தாவை ஏசினார். தாத்தா “ஒன்னோட ஒடம்புக்கு மொதல்ல ஒழுங்கா பயிற்சி இருக்கா?” என ஆசிரியரைப் பார்த்துக் கேட்டவர், தன் காலணியைக் கலற்றி அதில் கட்டை விரல் மீது மற்ற விரல்கள் படுப்பது போல வளைத்து அப்படியே நிறுத்தினார். தாத்தாவின் கால் விரல்கள் கூடை முனைப் பின்னலைப் போல இருந்தன. அசைத்தபோது பறவை இறக்கைகள் போல தெரிந்தன.

அவரை வெறுப்புடன் பார்த்த ஆசிரியர், “இதெல்லாம் ஒரு பயிற்சியா?” எனக் கேலியாகச் சிரித்துவிட்டு எங்களை அங்கிருந்து ஓட்டிச் சென்றார். நான் தாத்தாவை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது அவர் தன் கைவிரல்களையும் சில வினாடிகளில் அவ்வாறு கூடைபோல முடைந்து என்னை நோக்கி கையசைத்து விடைகொடுத்தார்.

திறமை மிக்க, வலுவான, எண்ணற்ற உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ள தமிழ் இலக்கிய உலகில், ஓரமாக அமர்ந்து விரல்களை மடக்கிக் கொண்டிருக்கும் மேஜிக் தாத்தாவாகத்தான் யுவன் சந்திரசேகரை என்னால் உருவகிக்க முடிகிறது.

ஒரு சுவாதீனம் அற்றவன் தன்னந்தனியாக அமர்ந்து தன் உடலைத் தானே முறுக்கி ஆராய்வதைப் பார்க்கும்போது எழும் நகைப்பும், நமக்கு நன்கு அறிமுகமான வடிவத்தைக் களைத்துப்போட்டு புரியாத ஒன்றாக மாற்றுபவனின் தீவிரத்தை எதிர்கொள்ளும்போது உருவாகும் உற்சாகமும், அரட்டைகளுக்கு நடுவில் என்றுமே மறக்க முடியாத அனுபவம் ஒன்றை மனதில் பதித்துச் செல்லும் கிழவர்களின் மேல் எழும் ஆர்வமும், யாருக்கும் எதையும் நிரூபிக்கும் அவசரமற்ற சிறுவன் பொருந்தாத பல்வேறு பொருட்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும் விளையாட்டைக் காணும்போது எழும் அயற்சியையும் உருவாக்குபவை யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்.

இவ்வெண்ணம் மரபான ஒரு வாசகனிடம் உருவாக முதல் காரணம் யுவன் சந்திரசேகர் சிறுகதையின் ஒற்றைப்படையற்றத் தன்மை. வடிவத்தாலும் வெளிபாடுகளாலும் அவை பன்மைத்தன்மைக் கொண்டவை. இரண்டாவது காரணம் அகம் அந்தரங்கமாக அறிய முயல்கின்ற அசாதாரணமான மெல்லிய மர்மத் தருணங்களைச் சாதாரண அரட்டை மொழியில் அவர் சிறுகதைகள் பேச முயலும் பாங்கு. மூன்றாவது காரணம் ஞாபகங்களைக் கோர்த்தும் சிந்தனைகளைத் தாறுமாறாக அடுக்கியும் ஆழங்களைத் தேடிச்செல்லும் அவரது கதைச்சொல்லும் பாணி.

***

இலக்கிய விமர்சகர்கள் யுவன் சந்திரசேகரைக் ‘கதைச்சொல்லி’ என வரையறை செய்வதுண்டு. அவருடைய ஏற்கனவே(2003), நீர்ப்பறவைகளின் தியானம்(2009), ஏமாறும் கலை(2012), ஒற்றறிதல் (2017) ஆகியத் தொகுப்புகளை வாசித்தபோது அவர் கதைச்சொல்லிகளை உருவாக்கும் எழுத்தாளர் என்றே வரையறை செய்துக்கொள்ள விரும்புகிறேன். இங்கு ‘எழுத்தாளர்’ எனும் சொல்லை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துகிறேன். இலக்கியம் எனும் கலை வடிவத்தையும் அதன் அழகியலையும் நன்கு அறிந்த புனைவு எழுத்தாளர் என அதில் பொருள் கொள்ளலாம்.

யுவன் சந்திரசேகரின் கதை கட்டுமானத்தை அறிய ‘சுவர்ப்பேய்’ சிறந்த முன்னுதாரண கதையாக இருக்கக் கூடும்.

காசுத்துறை அதிகாரி அருணாசலத்தினால்தான் ‘சுவர்ப்பேய்’ சிறுகதையின் கதைச்சொல்லிக்கு ராஜூ வாத்தியார், முத்தாச்சி கிளவி, ராஜூ வாத்தியார் மனைவி நினைவுக்கு வருகின்றனர். மூவரும் வெவ்வேறு தருணங்களில் அவர் வாழ்வைக் கடந்தவர்கள். ஞாபக அடுக்குகளில் புதைந்து கிடக்கும் இந்த மனிதர்கள் நிகழ்த்திச் செல்லும் புதிரான தருணங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்து மேலும் பிரமாண்ட ஒற்றைப் புதிராகக் உருவாக்கி புதிர்களின் வழியாகவே நுண் உணர்வுகளைத் தொட்டுச் செல்கிறது கதை.
ராஜூ வாத்தியார் எவ்வளவு நுட்பமானவர் என விளக்கும் ஆசிரியர், அவர் சங்கப்பாடல்களை மனனமாகச் சொல்வதைக் கூடுதல் திறனாகக் குறிப்பிடுகிறார். அப்படி ஒருமுறை ஔவை எழுதியப் பாடலைப் பாடி தன் மாணவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறார் ராஜூ வாத்தியார். கரட்டுப்பட்டியில் எழுப்பப்பட்ட நிற்காதச் சுவரை நிலைநிறுத்த ஔவை அந்தப் பாடலைப் பாடியதாகச் சம்பவங்களைப் புனைகிறார். இவையெல்லாம் மாணவனான கதைச்சொல்லியின் ராஜூ வாத்தியாருடனான நேரடி அனுபவங்கள். கதைச்சொல்லி வளர்ந்தபிறகு அப்பாடல் கம்பர் பாடியது என அறிகிறார். ஆனாலும் புலவரான கம்பனைவிட பாணரான ஔவை வழியாகவே இப்பாடல் வெளிபடுவது பொறுத்தமாக இருக்கும் என அவருக்குத் தோன்றுகிறது.

கதையின் இறுதியில் இதழ் ஒன்றில் ராஜூ வாத்தியாரின் மனைவியாக இருக்கலாம் என நம்பப்படும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருத்தியின் கடிதம் கதைச்சொல்லிக்கு வாசிக்கக் கிடைக்கிறது. நேர்த்தியாக வாழும் ராஜூ வாத்தியாரின் வாழ்க்கையில் ஒரு திருடனின் நுழைவு குழப்பத்தை உருவாக்குகிறது. வீட்டுக்குத் திருட வந்தவன், தன் கணவன் எதிரிலேயே மனைவியிடம் பாலியல் வல்லுறவு கொள்கிறான். அந்த உறவு அவள் ஆழுள்ளத்தில் பல காலமாக இருந்து வந்த வெறுமையான இடம் ஒன்றை நிரப்புகிறது. அது அவளுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம். அன்பான கணவன் அவன். ஆனால் அவனால் அத்தனை காலம் அந்த வெறுமையை நிரப்ப முடிந்ததில்லை. இந்த ரகசியத்தைத் தனக்குள் பூட்டி வைக்கிறாள். ஆனால் தன் கணவனால் தொடர்ந்து சமாதானப் படுத்தப்படுவதும் கூடுதலாக அன்பு செலுத்தப்படுவதும் அவளை வதைக்கிறது. தன் கணவனைப் பிரிகிறாள்.

இந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களைக் கதைச்சொல்லி கோர்த்தெடுக்க முத்தாச்சி கிளவி காரணமாக அமைகிறாள். பெண்கள் இயல்பாகப் பெற்றுள்ள சுதந்திரத்தை அவள் வழியாகவே கதைச்சொல்லி அறிகிறான். அந்தச் சுதந்திரம் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் பாலியல் சுதந்திரம் வரை கதைச்சொல்லியின் மனதில் நீள்வது போல முத்தாச்சி கிளவியின் சாயல் கொண்ட ஔவை வழியாக ராஜூ வாத்தியார் உணர்ந்திருப்பார் என அறிகிறான். அந்த அறிதல், அந்தக் கொடும் இரவில் தன் மனைவியினுள் என்றும் நிரம்பாதப் பள்ளம் நிரம்பியதையும் புரிய வைத்திருக்கும். ஒரு பாடலில் கம்பனுக்குப் பதிலாக ஔவையைப் புகுத்தி எதனால் எது நிறைவு பெறுகிறது என உணரக்கூடிய ராஜூ வாத்தியார் யாரால் யார் தன்னை நிறைத்துக்கொள்கிறார்கள் என அறியாமலா இருப்பார்?

இந்த இடத்தில் கதை தன்னைத் திறந்துகொள்கிறது. மனைவியைச் சமாதானப்படுத்த தன் அன்பை அதிகரித்துக் கொண்டதாக நம்பப்படும் ராஜூ அது தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்வதற்காக நிகழ்த்தும் பாவனை எனும் எண்ணம் கதையின் முடிவில் எழுகிறது. திருடனும் மனைவியும் யாருக்கும் அறிவிக்காத அந்தரங்க உணர்வை தன் நுண்ணுணர்வால் அறிந்துகொண்டுள்ளார் ராஜு. அதிலிருந்து தப்பிக்கவே தன்னை மேன்மையாகத் தனக்கே நிறுவிக்கொள்கிறார். தன் வீட்டில் களைந்து கிடக்கும் எதையும் நேர் செய்வதுபோல தன் மனத்தை நேர் செய்கிறார். ஔவை பாடல் பாடி சுவரில் அலையும் பேயை நிறுத்தி நிலைக்க வைத்ததைப் போல தன்னைச் சரியவிடாமல் தன்னில் எழும் பேயையே சாந்தப்படுத்துகிறார்.

யுவன் சந்திரசேகர் புனைவுகளுக்குள் புனைவுகளை உருவாக்குபவர். மனிதனுக்கு இருக்கும் இன்னொரு மனிதனை அறிவதற்காகவே அவர் அதை தொடர்ந்து செய்கிறார். தேர்ந்த சோதிடன் விசிறும் சோழிகள் போல ஒரு சிறுகதையில் எண்ணற்ற உதிரிக்கதைகளை வாசகன் முன் பரப்புகிறார். எவ்வளவு சிதறிச் சென்றாலும் அவை சொல்லும் பிரசன்னம் ஒருவருக்கானதுதான். மனம் எனும் சிடுக்கான சிக்கலான இயந்திரத்தை, தன் களைத்துப்போட்ட கதையுக்தி வழியிலேயே சென்று அறிய முயல்கிறார் யுவன். பெருக்கெடுக்கும் நதியைப் பிரமாண்ட அணையிட்டு அறிவதைவிட அதன்போக்கில் அத்தனை திசைகளிலும் மிதந்துகொண்டே உணர்த்த விளைகிறார். அதற்கு ‘ஒற்றறிதல்’ எனும் சிறுகதை சிறந்த உதாரணம்.

கதை ரிஷிகேசத்தில் கதைச்சொல்லியான விஸ்வம் தலைமுழுகிவிட்டு வெளியே வந்து துவட்டிக்கொண்டிருக்கும்போது தொடங்குகிறது. அப்போதுதான் குஞ்சாவிடமிருந்து அழைப்பு வருகிறது. குஞ்சா இளமையில் கணவன் கொடுக்கும் துன்பம் தாங்காமல் வீட்டை விட்டு ஓடியவள். விஸ்வத்தை தம்பியாக வரித்துக் கொண்டவள். மீண்டும் கணவனைத் தேடிக் கண்டடைவதே அவள் நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தை விஸ்வத்திடம் சொல்கிறாள். அங்கிருந்து அவள் நினைவுகளைப் பிடித்துக் கொண்டு கதை பயணிக்கிறது.

குஞ்சாவின் கணவன் உலகண்ணா. பெற்றவர் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்கிறான். குஞ்சா வறுமையான குடும்பம். உலகண்ணாவின் கடுமையான சொற்களாலும் எரிந்துவிழும் இயல்பாலும் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறாள். ஒரு விஷேச தினத்தில் சுற்றம் அனைவரும் சூழ்ந்திருக்கும்போது அவளை அடித்து அவமானப்படுத்தும் முயற்சி வரை அவனது மூர்க்கம் நீள்கிறது. அவன் அடிப்பதைவிட சுற்றியிருந்த உறவினர்கள் அவளை அடியில் இருந்து பாதுகாக்க உருவாக்கும் உடல் அரண்களே அவளை அதிகமாகக் குறுக வைக்கிறது. அவன் செய்யும் சமாதான முயற்சிகள் தோல்வியடைய ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போகிறாள். எப்படியோ தன்னை அந்த உறவில் இருந்து துண்டித்துக்கொண்டு கனடா சென்று ஒரு தமிழ்க்குடும்பத்தில் சமையல்காரியாக வேலை செய்கிறாள்.

கணவனைத் தேடி முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு வந்தவள் கணவன் சிரமமான சூழலில் வாழக்கூடும் எனத் தன் மனம் உணர்வதை விஸ்வத்திடம் சொல்கிறாள். ஊர் திரும்பும் முன்னமே ஒரு துப்பறியும் நிறுவனம் மூலம் கணவனை அறிய முடியாமல் தோற்கிறாள். கனடாவில் உள்ள நாடி ஜோதிடர்களை நாடுகிறாள். இறுதியில் பதினெட்டாம்படியான் உபாசகர் ஒருவர் வழியாகத் தன் கணவன் இறந்துவிட்டான் என அறிகிறாள். அவள் அதை நம்பத் தயாராக இல்லை என்பதுபோல முதலில் சொன்னாலும் அது உண்மையாக இருக்கவே வாய்ப்பதிகம் என்பதுபோலவும் அவள் செயல்கள் அமைகின்றன.

கணவன் இறந்துவிட்டதாக முழுமையாக நம்பும் அவள் அவனுக்குக் கர்மகாரியம் செய்ய முயலும்போது உள்ளூர் ஜோதிடரால் தடுக்கப்படுகிறாள். ஒருவேளை அவன் உயிருடன் இருந்தால் பெரும்பாவமாகிவிடும் என எச்சரிப்பவர் அதற்கு மாற்று உபாயமும் சொல்கிறார். அதன்படி குஞ்சா ராமேஸ்வரம் செல்லத் திட்டமிடுகிறாள். அங்கு அவர்கள் தங்கியுள்ள வீட்டில் காகங்களிடையே நடக்கும் போராட்டங்களைப் பார்க்கும் இருவருக்கும் வெவ்வேறு எண்ணங்கள் தோன்றுகின்றன.

கதை தலைமுழுகுவதில் இருந்து தொடங்குகிறது. இறந்தவர்கள் முகங்களை நினைத்துக்கொண்டு தலைமுழுகி வரும் விஸ்வம் தலைமுழுகத் துடிக்கும் ஒரு சகோதரியை எதிர்க்கொள்வதாகக் கதையைப் புரிந்துகொள்ள முடிகிறது. கண்களில் ஏக்கத்துடனும் கணவன் மேல் பரிவுடன் வரும் குஞ்சா மனம் ஏங்குவதெல்லாம் முழுமையான விடுதலையைத்தான். முப்பத்தைந்து வருடங்கள் அவள் கனடா எனும் அந்நிய நிலத்தில் வாழ்ந்தாலும் அவள் சுமந்தவையெல்லாம் கணவன் கொடுத்த கசப்பான அனுபவங்களைத்தான். அவள் இன்னும் எவ்வளவு தூரம் ஓடினாலும் அதிலிருந்து தப்பிக்க இயலாது. அந்த அனுபவங்கள் கொடுக்கும் அச்சத்தில் இருந்து மீள முடியாது. அவள் தன் அச்சத்தைத் தலைமுழுக வேண்டும். அதற்கு கணவன் செத்தொழிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவள் அதை முழுமையாக ஏற்க வேண்டும் என்பதாகவே கதையின் இன்னொரு அடுக்கை உள்வாங்க முடிகிறது.

யுவன் சந்திரசேகர் புனைவுகளில் நான் மறுபடி மறுபடி பார்த்து வியக்கும் அம்சம் மனித மனங்களை அவர் அளந்து பார்க்கும் முயற்சிகளைத்தான். அதனை முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். என்றும் முழுமைபெறாத முயற்சிகள். இந்த முயற்சிகள் வழியாகவே அவர் தத்துவங்களைச் சென்று தொடுகிறார். மனம் தான் அணிந்துகொள்ளும் அகமூடிகளை அதிகம் தொந்தரவு செய்யாமல் ஒரு சாட்சியாகவே அதன் பாவனைகளைக் கவனப்படுத்துகிறார் யுவன். அப்படி அறியும் ஒன்றிலிருந்து என்றுமே அறிய முடியாத இன்னொரு ரகசிய அறையையும் திறந்துகாட்ட முயல்கிறார். ‘இரண்டு அறைகள் கொண்ட வீடு’ எனும் சிறுகதை அப்படியானது.

அதிகம் அறிமுகமில்லாத வடிவாம்பாள் எனும் எழுத்தாளரைக் கிருஷ்ணன் எனும் சமக்கால எழுத்தாளர் அறிவதிலிருந்து கதை தொடங்குகிறது. கிருஷ்ணன் என்பவர் யுவன்தான். அவரது பெரும்பாலான சிறுகதைகளில் கிருஷ்ணனே கதைச்சொல்லியாக வந்து தன்னிலையில் நகர்த்திச் செல்வார். அமைச்சரின் தாய்வழிப் பாட்டியான வடிவாம்பாளுக்காக நடத்தப்படும் நூற்று இருபத்து ஐந்தாம் ஆண்டு விழாவுக்குப் பார்வையாளராகச் செல்லும் கிருஷ்ணன் கொஞ்சம் பழைய புத்தகக் கடைகளில் தேடி வடிவாம்பாளை முன்னமே வாசித்து அறிகிறார். கற்பனை எழுச்சி இல்லாத எழுத்து வடிவாம்பாளுடையது. கணவனிடம் வதைப்பட்ட துன்பமும் மகன் வளர்ந்துவிட்ட பின்னர் அதிலிருந்து கிடைத்த விடுதலையும் எனச் சுயவரலாறு போன்ற தன்மையில் எழுதப்பட்ட அந்த நாவலைச் சலிப்போடு புறக்கணிக்கிறார். ஆனால் நிகழ்ச்சியில் வடிவாம்பாள் நாவலைப் பற்றி பேசிய ஒருவர் நாவலில் திருமணமாகி குழந்தை உள்ள நாயகிக்கும் உள்ளூர் பயில்வான் ஒருவருக்கும் இருந்த காதல் கதையைச் சொல்லத் தொடங்க அமைச்சர் குறுக்கிட்டு அது வடிவாம்பாள் எழுதியது இல்லை எனப் பேச்சைத் தடுக்கிறார்.

கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்னமே வாழ்ந்து இறந்த வடிவாம்பாளின் புனைவுக்குள் உள்ள சுயவரலாற்றுத் தன்மை பிடிபடுவதற்குள் அந்த நிகழ்ச்சிக்கு வந்த பாண்டிதுரையால் கிருஷ்ணன் அவன் வாழும் ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு வாழும் சின்ன சீனிச்சாமி எனும் பிரபல நாதஸ்வர வித்வானைப் பார்க்கிறார் கிருஷ்ணன். சின்ன சீனிச்சாமியின் அண்ணன் பெரிய சீனிச்சாமி மேல்தட்டுச் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்க, அந்தக் காதல் நிராகரிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவர் இறந்த பிறகு துணை நாயனக்காரராக இருந்த சின்ன சீனிச்சாமி நாதஸ்வரத்தைத் தொடுவதில்லை எனப் பாண்டிதுரையால் வரலாறு சொல்லப்படுகிறது.
இந்தக் கதையைச் சொன்ன பாண்டிதுரை அவசர வேலையாக வெளியேற அவன் அம்மாவினால் இரு சீனிச்சாமிகளின் கதையும் வேறொரு கோணத்தில் சொல்லப்படுகிறது. பெரிய சீனிச்சாமி காதலித்த அந்தப் பெண் தன் தோழியென சொல்லும் அம்மா, மகனிடம் சொல்லாத ரகசியத்தைப் புதிதாக வந்த எழுத்தாளரிடம் போட்டுடைக்கிறாள். மிகப் பிரபலமான நாதஸ்வர வித்வான்களான குருவித்துறை சகோதரர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்படுகிறது. அந்தப் பெண் திருமணமாகி கணவனை இழந்து குழந்தையுடன் இருப்பவள். முதலில் ஆசையைச் சொன்ன அண்ணன் பெரிய சீனிச்சாமி மீது அந்தப் பெண்ணுக்கும் விருப்பம் ஏற்பட்டு ஒப்புதலைச் சொல்லப் போகும்போது சிறிய சீனிச்சாமியும் தன் காதலைச் சொல்ல அந்தப் பெண் இருவர் காதலையும் மறுக்கிறாள். இதனால் மனமுடைந்த அண்ணன் தற்கொலை செய்துகொள்கிறான். கதையின் இறுதியில் அந்தப் பெண் தான்தான் என அம்மா உடைந்து ஒப்புக்கொள்கிறாள்.

அம்மா ரகசியமென காத்து வைத்த இந்தக் கதை மகனுக்கும் தெரிந்தே இருப்பதை இறுதியில் எழுத்தாளர் அறிகிறார். ஆனால் இவ்விரு கதைகள் வழியாக யுவன் வாசகனின் ஆளுள்ளம் அறியும் வேறுண்மை ஒன்றை உணர்த்த விளைகிறார். அது வடிவாம்பாள் பற்றியது. பெண் தன்னைத் தன் அந்தரங்கத்தை ஏதோ ஒரு வழியில் வெளிபடுத்திச் செல்ல முயல்வதையும் ஆண்கள் அதை இல்லை என நிரூபிக்க அத்தனை மெனக்கெடுவதும் எதனால் எனும் கேள்வியே இந்தக் கதைகளைக் கோர்க்கும் சங்கிலியாகின்றது. வடிவாம்பாளை வெறுப்புடன் விமர்சிக்கும் பாண்டிதுரையின் மனதில் தன் அம்மா குறித்து என்ன விதமான மதிப்பீடு உள்ளதென்றும் அவன் திருமணம் செய்வதில் உள்ள சங்கடங்கள் என்னவென்ற கேள்வியை வாசகனிடமே கதை விட்டுச் செல்கிறது. இரண்டு அறைகள் கொண்ட வீடுபோலவே ஒவ்வொரு உடலிலும் இருவேறு மனநிலைகள் செலுத்தும் ஆதிக்கம் வாசகனின் அகத்தைச் சீண்டிக்கொண்டே இருக்கிறது.

மேற்கண்ட மூன்று சிறுகதைகள் குறித்து உரையாடும்போது ஒரு வாசகன் அவற்றில் ஒன்றுபோலவே வெளிபடும் தற்செயல் தருணங்களை மேலதிகமாக கவனம் செலுத்துதல் இயல்பானது. இந்தத் தற்செயல்கள் என்பது நாம் திட்டமிடாமல் நிகழ்ந்தாலும் உண்மையில் அவை யாருடைய திட்டமும் இல்லாமல்தான் நிகழ்கிறதா என்பதுதான் யுவன் சிறுகதைகளில் உள்ள ஆதாரமான கேள்வி. அடுக்கடுக்காக அவர் சிறுகதைகளில் உருவாகும் நிகழ்வுகள் நமது புரிதலில் உள்ள தர்க்க ஒழுங்கில் நிகழாவிட்டாலும் அவற்றுக்கான தனித்த ஒழுங்கில் இயங்குவதை வேறொரு கணக்கில் இருந்து புரிந்துகொள்ள முயல்கிறார். அதையே அவர் மாற்றுமெய்மை (Alternate Reality) என்றும் குறிப்பிடுகிறார். சில சிறுகதைகளில் அதை அவரே ஒரு கதாபாத்திரமாகக் கூறவும் செய்கிறார்.

‘நான்காவது கனவு’ சிறுகதையில் தனது நாட்குறிப்புகளைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொகுத்து வாசிக்கும் சுந்தரேசன், இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் கொலைகள் நடைபெற்ற நாட்களிலெல்லாம் தான் வேறு மாநிலங்களில் இருப்பதை உணர்கிறார். இப்படி ஒரு விசித்திரமான பிரயாணத் திட்டத்தைத் தனக்கு வகுத்துத் தந்த கரம் மானுடக் கரமாக இருக்கச் சாத்தியமே இல்லை என்றும் சொல்கிறார். சுந்தரேசனுக்கு ஒவ்வொரு பயணமுமே வியாபாரத்துக்கானதுதான். அதை நிறுவனம்தான் முடிவு செய்கிறது. ஆனால் எவ்வித சிறப்பாம்சமும் இல்லாத இந்தப் பயணங்களைக் காலம் கடந்து வகுத்துத் தொகுத்துப் பார்த்தால் அதன் ஒட்டுமொத்தம் எளிதில் புரிந்துகொள்ள முடியாத தனிச்சிறப்புடன் அவர் கட்டுப்பாட்டில் இல்லாமல் உருவாகியிருப்பதை உணர்கிறார்.

இப்படி அன்றாடச் சாதாரணங்களில் இருந்து என்றுமுள்ள அசாதாரணங்களுக்கு நகரும் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்தான் நம்ப இயலாத மாயத் தருணங்களை இயல்பான உண்மைக்கும் இழுத்து வந்து சேர்க்கின்றன.

‘நான்காவது கனவு’ சிறுகதையில் சுந்தரேசன் அடுக்கும் அனுபவங்களின் நாட்குறிப்புகளைப் போன்றதுதான் அவன் தற்செயலாகச் சந்திக்கும் வெங்கடேச ராவ் சொல்லும் அடுக்கடுக்கான கதைகளும். வெங்கடேச ராவ் வாய்மொழிக்கதையாகச் சொல்லும் குலவரலாறு சுந்தரேசனுக்கு உண்டாக்கும் சந்தேகங்கள் போலவே வருங்காலத்தில் சுந்தரேசன் தொகுக்கப்போகும் நாட்குறிப்புகளிலும் அதை வாசிப்போருக்குச் சந்தேகத்தை உருவாக்கக் கூடியவைதான். இருவரும் செய்வது ஒரு பணியைத்தான். இரண்டு கதைத் தொகுப்புகளுமே தன்னளவில் மர்மங்களைக் கொண்டவை. ஆனால் சுந்தரேசன் சொல்வது போல ஒரு தலைமுறைக்கு அமானுஷ்யமாகத் தெரிவது இன்னொரு தலைமுறைக்கு நடைமுறையான விஷயமாக மாறக்கூடியதாகிவிடக்கூடும். அப்போது இவை ஒரு நிகழ்வாகவே எஞ்சி நிற்கும்.

‘நான்காவது கனவு’க்கு நிகரானது ‘ஏற்கனவே’ எனும் சிறுகதை. இதிலும் ஒருவன் தனக்குள் நிகழும் மர்மங்களைச் சுமந்துகொண்டு அலைகிறான். நடந்து முடிந்த எல்லாமே அவனுக்கு இதற்கு முன்னர் அனுபவித்ததாகத் தோன்றுகிறது. அதை தேஜாவு என நண்பன் வழி அறிகிறான். தற்செயலாக ஒரு பழமையான கோயில் இருக்கும் பகுதியில் இவன் சந்திக்கக் கூடிய கிழவர் ஒருவர் வருங்காலத்தை அறியக்கூடியவராக இருக்கிறார். அல்லது, தனக்கு அப்படியான சக்தி உள்ளதென்று அவர் நம்புகிறார். இருவருக்கு இடையில் நிகழும் உரையாடல் வழியாக இருவரும் ஆச்சரியங்களற்ற மையப்புள்ளியை அடைகின்றனர். இறந்தகாலத்தை முன்னமே அறிந்த இளைஞனும் எதிர்காலத்தை முன்னமே அறிந்த கிழவரும் சுழலும் மர்மப்புள்ளி ஒன்றாகி பின்னர் அது இல்லாமலும் ஆகிறது.

மனம் அடையும் பிறழ்வுகள் என்பது நோய்க்கூறு மட்டுமா? அது எதிர்கொள்ளும் மாற்று அனுபவங்களுக்கு உலகில் இடம் இல்லையா? மாறுபட்ட அனுபவங்களை உள்வாங்கும் மனமென்பது நோய்மையின் தங்கிடம்தானா? எனும் கேள்விகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகளை வாசிக்கும் எவருக்கும் உதிர்ப்பவை. ‘ஒளி விலகல்’, ‘உறங்கும் கடல்’, ‘உள்ளோசை கேட்பவர்கள்’ போன்ற சிறுகதைகள் அவற்றிற்குத் தீவிரமாகப் பதில் காண முனைபவை. விசித்திரத் தீண்டல்கள், நிலைக்குழைவுகள் உருவாக்கும் எதிர்வினைகளும் மானுட அனுபவங்கள்தான் எனச் சாந்தமாகக் கூறுபவை.

தன் சிறுகதைகளைப் போதுமான சுதந்திரத்துடன் வாசிக்க யுவன் சந்திரசேகர் அதிகமே வாய்ப்புக் கொடுத்துள்ளார். ‘தாய்மை யாதெனில்’ சிறுகதையில் வரும் ஐரீனைச் சினிமாவில் பணையம் வைக்கும் அம்மா, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனை வங்கிக்கு அழைத்துவரும் அம்மா, இரண்டு வயது குழந்தை நினைவேக்கத்துடன் இருக்கும் இளம் பெண்ணான ஜம்னா, 23 வயது மணியின் மலத்தை அலம்ப முன்வரும் அம்மா என வெவ்வேறு அம்மாக்களை அவரவர் நியாயங்களுடனும் உயிரை மகனுக்காக மாய்த்துக்கொள்ளும் தியாகங்களுடனும் தனித்தனியாக வாசித்து அறிய வாசகனுக்குப் போதுமான சாத்தியங்கள் உள்ளன. ‘தெரிந்தவர்’ கதையில் நாளிதழில் பார்க்கும் மத்திய மந்திரியின் முகம் உருவாக்கும் மூன்று கதைகளும் கொடுக்கும் அனுபவங்கள் வெவ்வேறானவை. அதுபோலவே ‘புகைவழிப் பாதை’ சிறுகதையையும் சொல்லலாம். ஆனால் ஒரு சில சிறுகதைகள் வெவ்வேறு காலத்தையும் கதைகளையும் கொண்டிருந்தாலும் அவற்றை ஒரே சரடில் இணைக்கும்போது உண்டாகும் வாசிப்பனுபவம் அக்கதைக்குள் புதிய தரிசனத்தைக் கொடுப்பவை.

‘அந்நியம்’ அப்படியான சிறுகதை.

கிருஷ்ணன், பாவா எனும் ஒரு மனப்பிறழ்வு பாதிக்கப்பட்டவனைத் தனது பன்னிரண்டாவது வயதில் காண்கிறான். வீட்டின் முன் நிற்கும் அவனை அம்மா துரத்துவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊராரால் கேலிக்கு உட்படுத்தப்பட்ட பாவா சீனியம்மாவினால் அடைக்கலம் பெறுகிறான். கள்ளுக்கடையில் குடிக்க வருபவர்களுக்குத் தோதாக உணவு சமைக்கிறாள் சீனியம்மாள். பதினாறு வயதில் திருமணமாகி பதினெட்டு வயதில் கணவனை இழந்த அவளை எந்த ஆணாலும் நெருங்க முடியாமல் இருந்தாலும் பாவாவுக்கு அவள் கொடுக்கும் அரவணைப்பால் அவர்கள் உறவு அவ்வூரில் பேசு பொருளாகிறது. அவனை மகன் என்றும் தம்பியென்றும் கூறி தன் ஒழுக்கத்தை நிலைநிறுத்த முயலும் சீனியம்மாவின் காமத்தை நேரடியாகப் பார்த்தவன் கிருஷ்ணன் மட்டும்தான். மோட்டார் ரூமில் தன்னுடன் பாவாவை முயங்க வைக்க முயன்ற சீனியம்மாள் அதில் தோற்று அவனை அடிக்கிறாள். இது நடந்து மூன்று நாட்களில் கம்மாக்கரையில் கத்தியில் கொடூரமாகக் குத்தப்பட்டு இறந்து கிடக்கிறாள்.

இச்சம்பவம் நடந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாகநாதன் எனும் மலாவி தேசத்து இலக்கிய வாசகன் கிருஷ்ணனை வந்து சந்திக்கிறார். திருட்டு சாதாரணமாக நடக்கும் தனதூர் சூழலை நாகநாதன் விளக்குகிறார். மிகச்சாதாரணமாக வீட்டுக்குள் கும்பலாக நுழைந்து உள்ளூர் திருடர்கள் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வதையும் எல்லா பொருட்களுக்கும் காப்புறுதி இருப்பதால் உரிமையாளர்கள் அதைத் தடுப்பதில்லை என்றும் சொல்கிறார். அப்படித் தடுத்தால் வரக்கூடிய விளைவுகளையும் சொல்கிறார். ஆனால் அவர் வீட்டுக்கு வந்த திருடர்களில் ஒருவன் கட்டிலுக்கு அடியில் இருந்த கைப்பெட்டியை எடுக்கவும் அதை எடுக்க வேண்டாம் என நாகநாதன் விண்ணப்பம் வைத்த அனுபவத்தைச் சொல்கிறார். அதில் கடப்பிதழ் உள்ளிட்ட முக்கிய பாரங்கள் உள்ளன என இரைஞ்சவும் திருடன் எடுத்தப் பெட்டியை மீண்டும் வைக்கிறான்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் இருக்கும் ஒரே ஒற்றுமை கிருஷ்ணனின் மனதில் நீங்காமல் இருந்த பாவாவின் முகம் நாகநாதன் சொன்ன கதையில் வரும் முகமறியா ஆப்பிரிக்கனுடன் பொருந்தியதுதான்.

துலக்கமாகத் தெரியும் இந்த ஓர் ஒற்றுமையின் வழி இரு புதிரான அனுபவங்களை மனதில் நிகழ்த்தி வாழ்வின் பொருள் தேட வைக்கிறார் யுவன் சந்திரசேகர். காலம் முழுவதும் திருடும் கரங்களுக்குப் பணம் உள்ள பெட்டியைத் தெரியும். ஆனால் திகட்டத் திகட்ட கிடைக்கும் ஒன்றில் அவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அதை அங்கேயே வைத்துவிட்டு போனதுபோல பாவாவுக்கும் சீனியம்மாளின் காமம் தண்டையாகவே இருந்திருக்க வேண்டும். அவனுக்கும் காமம் அவசியம்தான். அது மனிதனின் ஆதி குணம். இளமையில் கணவனை இழந்து தன்னை ஒரு தீப்பந்தாக மாற்றி ஊரில் கௌரவமாக நடமாடும் ஒருத்தியின் திடுக்கிடும் கட்டவிழ்ப்பு பாவா போன்ற ஒருவனை அச்சமே கொள்ளவைக்கும். அச்சம் தாக்குதலுக்குத் தூண்டும். பயந்த விலங்குகளின் தாக்குதல் எப்போதும் கொடூரமானவை.

***

மேஜிக் தாத்தாவைப் பரிகசித்த ஆசிரியரின் உள்ளுணர்வில் அவர் மீது துளியளவாவது மதிப்பு இல்லாமலா போயிருக்கும் எனப் பின்னாட்களில் நான் என்னையே கேட்டுக்கொண்டதுண்டு. உடற்பயிற்சி ஆசிரியர் செய்யும் அத்தனை பயிற்சிகளையும் அப்படியே செய்ய முடிந்த எங்களால் தாத்தாவின் ஓர் அசைவையும் மறுநிகழ்வாக்க முடிந்ததில்லை. இரண்டுமே உடல் சார்ந்தவைதான். ஆனால் ஒன்று மனித உடல் இயல்புக்கு உட்பட்டது; மற்றது உடலுக்கு அசௌகரியமானது.
அசௌகரியமான ஒன்றைச் செய்யும் மனிதர்கள் முதலில் வேடிக்கையாகப் பார்க்கப்படுகிறார்கள். பின்னர் கேலி செய்யப்படுகிறார். சில சமயம் புறக்கணிக்கப்படுகிறார்கள். இறுதியில் தாங்கள் ஏற்கனவே அறிந்த வகைமை ஒன்றுக்குள் அடக்கப்பட்டு அதன் வழியாக அவர்களைத் தங்களுக்கு சௌகரியமானவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியில் பாராட்டவும் படுகிறார்கள்.
ஆனால் விரல்களை மடக்கி வித்தைக்காட்டும் கிழவர்களுக்கு இந்த வெளிகோஷங்கள் எதற்கும் பொருள் இல்லை. அவர்கள் தன்னியல்பில் தன்னை அறிந்து வைத்துள்ளார். அதன் வழி பிரபஞ்ச ரகசியங்களையும் அறிய முயல்கிறார். யுவன் சந்திரசேகர் தன் புனைவுகள் வழி செய்வதுபோல அவர்கள் நிகழ்த்தும் கணங்களில் மட்டுமே தன்னிறைவு அடைகிறார்கள்.