ரசவாதம்

1

கரட்டுப்பட்டியின் முதல் மூன்று குடும்பங்களில் ஒன்று ராமசாமிப் பத்தருடையது. அப்படித்தான் அப்பா சொன்னார். மற்ற இரண்டு, செல்லமுத்துப் பூசாரி குடும்பமும், காவல்கார மூக்கையா மாமாவுடையதும். ஆவலாகக் கதைகேட்கும் பிராயம் எனக்கு. ஆதாரங்களெல்லாம் கேட்கத் தெரியாது. ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படும் வரலாற்றுச் செய்திகளே நம்பத்தக்கவை அல்ல என்று சொல்கிறவர்களும் உண்டு, அல்லவா!

முதல் வாக்கியத்தை என்னிடம் சொல்லவில்லை அப்பா. அவர் அர்ச்சகராய் இருந்த சின்னஞ்சிறு பிள்ளையார்கோவில் முன்னால் பத்தடிக்குப் பத்தடி தகரக் கொட்டகை அமைத்துத் தருகிறோம் என்று வேண்டி வந்திருந்த சோழவந்தான்காரரிடம் சொன்னார். வந்தவருக்கு ஏதோ நேர்த்திக்கடனாம் – காலங்காலமாய்ப் பூசிக்கப்பட்டுத் தொன்மையேறிய பிள்ளையாருக்குக் கைங்கரியம் செய்வது என்று. பூரணமாக நரைத்த கொடுவாள் மீசை விநோதமாக அசைய,

“நம்ம வட்டாரத்திலேயே பளமையான விநாயகர் இவுருதானுங்களே.”

என்றார். அப்பா தலையாட்டி ஆமோதித்தார். பிறகு, ‘எதற்கும், அந்த மூன்று குடும்பங்களிடமும் ஒப்புதல் கேட்டுவிடுங்கள்’ என்று  சொன்னார், மீசைக்காரர் சிரித்தபடி,

                    “அவுகல்லாம் யாருங்க? நம்ப கோயிலுக்கு தர்மகர்த்தாமாருங்களா!”

என்றார். உடன்வந்திருந்த நாலைந்துபேர் சிரித்தார்கள். எனக்கு அந்தச்  சொல்லின் பொருள் கொஞ்சமும் புரியவில்லை. ஆனாலும், அப்பாவை அந்த ஆள் சீண்டுகிறார் என்று புரிந்தது. அப்பாவானால், சற்றும் முகம் மாறாமல், தானும் சிரித்துக்கொண்டே  பதில் சொன்னார்

                    “அட நீங்க வேறே. அவுங்களோட வச்சுப் பாத்தம்னா, பிள்ளையாரே இந்த ஊருக்கு வந்தேறிதாங்க!”

அப்புறம், அந்தக் குடும்பங்கள் பற்றித் தமக்குத் தெரிந்தவற்றை, கதைபோல விவரித்தார், வந்தவர்களிடம்.

அவர்கள் போனபிறகு, எனக்கு இருந்த சந்தேகங்களை அப்பாவிடம் தெளிவித்துக்கொண்டேன்; அப்பாவுக்கு, பத்தருடன் நெருக்கமான நட்பு உண்டு. அவர்கள் பரம்பரையின் ஏழாவதோ எட்டாவதோ தலைமுறை ராமசாமி அவர். பரம்பரைத் தொழிலை அறவே ஏறக்கட்டிவிட்டு, சேவாங்கோயில் சுடுகாடு தாண்டி, பொட்டமடைக்கு அருகில் எங்களுக்கு இருந்த ஒன்றேகால் ஏக்கர் வயலை அடுத்த எட்டு ஏக்கர் நிலத்தில் வெற்றிகரமாக விவசாயம் செய்து வந்த குடும்பம். என்றாலும், பத்தர் வீடு என்றே ஊருக்குள் குறிப்பிடுவார்கள். தமது நண்பர் வாயாலேயே கேட்ட குடும்ப வரலாறுதான் அப்பா சொன்ன கதைக்கு அடிப்படை.

அவர் சோழவந்தான்காரர்களிடம் சொன்னதையும் (அப்பா கதை சொல்லும்போது பேச்சு வழக்குக்கு மாறும் இடங்கள் தரும் ஆனந்தம் இப்போதுவரை இனிக்கிறது எனக்கு!) ஆத்மநண்பர் வேலுக்கோனார், தமிழாசிரியர் துரைசாமி நாயக்கர் ஆகியோருடனான உரையாடல்களில்  அவ்வப்போது  உதிர்த்தவற்றையும் ஒருவிதமாகக் கோத்து,  எனக்குள் தொகுத்து வைத்திருக்கிறவற்றைத்தான் இப்போது சொல்கிறேன்.  பல இடங்களை எனக்கே நம்ப முடியவில்லை. ஆனால், அது என் சொந்த நம்பிக்கையின்மை மட்டுமா! இந்தக் காலகட்டத்தின் பொது உணர்வுக்கும் பெரிய பங்கு இருக்கிறதுதானே…

தாது வருஷப் பஞ்சம் கேள்விப்பட்டிருப்பீர்களே. 1870களின் மத்தியில் சென்னை மாகாணத்தை வெகுவாகப் பீடித்த பஞ்சம் அது. ஜனங்கள் கொத்துக்கொத்தாக மரித்தனர். எலும்பும் தோலுமாக எஞ்சியவர்கள்,  குடும்பம் குடும்பமாக, ஜில்லா ஜில்லாவாக  சாப்பாட்டுக்கு வழி தேடி இடம் பெயர்ந்தனர்.  பத்தரின் குடும்பம் கரட்டுப்பட்டிக்கு வந்து சேர்ந்தது.

ஆனால், அப்போது கரட்டுப்பட்டி கிடையாது.  கரடு மட்டும்தான் இருந்தது. ஜனங்கள் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கி, கிராமம் உருவெடுத்த பிறகு, நிலங்களை அளக்கவும் கிஸ்தி வாங்கவுமாக வந்துசேர்ந்த ஆங்கிலேய அரசாங்கப் பிரதிநிதிகள் இந்த ஊரை   ‘கரட்டுப்பட்டி’ என்று பதிவுசெய்துகொண்டார்களாம். பத்தரின் முத்தாத்தாவுக்கு முத்தாத்தாவான ராமசாமிப் பத்தர், எவ்வளவோ கேட்டுப் பார்த்திருக்கிறார் – ‘ராமசாமிபுரம்’ என்று வைக்கச் சொல்லி. வந்த அதிகாரி,  வடக்கத்தி ஆளாம்; துபாஷியாகப் பணிபுரிய வந்து மதறாஸ் மாகாணத்தில் குடியமர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவர். நக்கலாக பதில்சொன்னாராம்:

“இப்பிடியெல்லாம் பேரு வய்க்கிறதுன்னா விளுப்புரத்துக்கு இந்தாண்ட இருக்குற அத்தனெ ஊருக்கும் மிஸ்ராபுரின்னிதான் வச்சிருக்கணும்!”

‘சரி, வேண்டாமய்யா, கரட்டு மாநகர் என்றாவது வையுங்களேன். கிராமம் இப்படியே கிராமமாகவா இருந்துவிடப் போகிறது. முல்லையாற்றுப் பாசனத்தின் செழிப்பும்,  ஆயிரமாயிரம் குடும்பங்களும் திகழும் ஊராக வளரும்போது, ‘பட்டி’ என்ற பின்னொட்டு பொருத்தமாகவா இருக்கும்’ என்று கிழவர் மன்றாடியிருக்கிறார். அருகில் நின்ற பூசாரியும், காவக்காரரும்கூடச் சேர்ந்து பேசியிருக்கிறார்கள்.

மேற்படி மிஸ்ரா கடும் பிடிவாதக்காரர் போல. இப்போது யோசித்தால், தீர்க்கதரிசியும்கூட என்று படுகிறது. கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகள் கடந்தும், நவீன யுகத்தின் சின்னங்களான தொலைக்காட்சியும், செல்பேசியும் சரளமாகப் புழங்கத் தொடங்கியும், கரட்டுப்பட்டியின் புறமும் அகமும் அப்படியேதானே இருக்கிறது! ஆனால், வெறும் வறட்டு மறுப்பு காட்டும் அதிகாரி இல்லையாம் அவர்.

உள்ளூர்க்காரர்கள் ‘முல்லையாறு’ என்று பெயர்சூட்டி அழைத்தாலும், அரசு ஆவணங்களில் ‘முல்லைக் கால்வாய்’ என்றே வழங்கப்படுகிற, வருடத்தில் ஒன்பது மாதங்கள் நீரும், மூன்று மாதங்கள் வெண்மணலும் ஓடுகிற வாய்க்காலை நோக்கி ஊர்க்காரர்களைத் தாமே நடத்திச் சென்றாராம்.

“இப்பிடித் தகிக்கிற  மணலை நம்பி, ஆயிரமாயிரம் பேர் இங்கெ வந்து குடியேறுவாங்கன்னு  நிசமாவே நம்புறீங்களாக்கும்?”

என்று கேட்டிருக்கிறார்.

பத்தர் உட்பட அத்தனைபேரும் தலைகுனிந்திருக்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகள் கழித்து என்னைத் தேடி வந்தடைந்த திருமணப் பத்திரிகையில், ‘கரட்டுமாநகர்’ என்றே அச்சாகியிருந்தது. மணமகன்,  பத்தர் வம்சத்தின் புதுத் தலைமுறை ராமசாமி.  ஆரம்பப் பள்ளியில் என் வகுப்புத்தோழன்…

பூர்விகப் பத்தரின் குடும்பம் எந்த ஊரிலிருந்து வெளியேறி வந்தது என்று தகவல் இல்லை; ஆனால், திண்டுக்கல் பக்கமிருந்து மதுரை நோக்கிப் போயிருக்கிறார்கள் என்பது உறுதி. அதிலும், இப்போது தங்கநாற்கரச் சாலை ஓடும் வாடிப்பட்டி மார்க்கத்தில் போகாமல், இந்தப் பக்கம் ஏன் வந்தார்கள் என்பதற்கு தர்க்கபூர்வமான காரணம் எதுவும் தட்டுப்படவில்லை…

முல்லையாறு வறண்டிருந்த பருவம். நெருப்புபோலக் காய்ந்த மணலில் முளைத்த புதர்க்குத்துகளுக்கிடையே, வாடிய காராமணிச் செடிகள் சிலவும் தட்டுப்பட்டனவாம். இரண்டு கைப்பிடி அளவுக்குப் பயிறு தேறியிருக்கிறது. அவித்து, ஆளுக்கொரு வாய் தின்றார்கள். உண்ட மயக்கம் தீர, தற்போதைய முனியாண்டி கோவிலின் பின்புற வளாகமாய் ஆகியிருக்கும் ஆலமரத்தடியில் படுத்திருக்கிறார்கள்… மூத்த பத்தருக்கு ஒரு கனவு வந்திருக்கிறது. குலதெய்வம் பிரத்தியட்சமாகி, 

“இனி ஒரு அடியும் எடுத்துவைக்காதே ராமசாமி. உன்னை இங்கே  கூட்டிவருவதுதான் என் திட்டம். நிரந்தரமாய் இருந்துவிடு. அமோகமாய்                     வருவாய். நானும் உன்னைவிட்டு அகல மாட்டேன்…”

என்று சொன்னாளாம். பாளம் பாளமாய் வெடித்த தரையில் முந்தானையை விரித்து, விரிசல்விட்ட பாதங்களுடன் பக்கத்தில் படுத்து உறங்கிய கர்ப்பிணி மனைவியை எழுப்பி, கனவை விவரித்தார். அந்த அம்மாள் கேட்டாளாம்:

“விடியக்காலையிலே வர்ற கனவுதானே பலிக்கும்ன்னு சொல்லுவாங்க. இப்பிடி மட்ட மத்தியானத்துலே வந்துச்சின்னா, அது பகல்கனவுதானே?”

                 “ஏத்தா, இந்த எடத்துக்கு வந்துசேந்தோன நீ என்னா சொன்னே, யாவுகமிருக்கா?”

அந்த வேணியம்மாள் யோசித்தாள். நினைவு வந்துவிட்டது. ஏகப்பட்ட விழுதுகளுக்கிடையே நிழலைப் பேணி வைத்திருந்த மரத்தடிக்குள் நுழைந்த  மாத்திரத்தில்,

“யாத்தாடீ. மொளங்கால் சீவன் செத்தே போச்சு. இன்னமே ஒரு அடி எடுத்து வக்ய முடியாது சாமி.”

என்று தான் சொன்னது ஞாபகம் வந்தவுடனே உடம்பு சிலிர்த்ததாம். ஆக, குலதெய்வ அம்மன் கனவில் வருவதற்கு முன்பாகவே, நேரில் நின்று இந்த வாக்கியத்தை உதிர்த்துவிட்டுத்தான் வியர்வையை முந்தானையால் துடைத்திருக்க வேண்டும் – என்பது பத்தர் வம்சத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

குழந்தைகள் நால்வர், கர்ப்பிணி மனைவி, முதுமையை எட்டிவிட்ட தாய் தகப்பன், துணிமணிகளும், நாலைந்து மண்பாண்டங்களும் இருந்த பிரம்புக் கூடைகள் சகிதம் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்திருந்த பத்தர், முல்லையாற்றுக் கரையின் உலர்ந்த காற்றில் மீண்டும் கண்ணயர்ந்தார். 

திடீரென்று நாய் குரைக்கும் சப்தம். அம்மையநாயக்கனூரிலிருந்து இவர்களைப் பின்தொடர்ந்து வந்த நாய் அது. மசித்த குப்பைக்கீரையையும்,  அவித்த காராமணிப் பயிறையும் பகிர்ந்துகொடுத்தபோது, நாய்க்கும் ஒரு பிடி வைத்திருக்கிறார் வேணியம்மாள்.

                    “நம்மளே இந்தப் பாடு படுறம், பாவம், வாயில்லா செம்மம் எங்கிட்டுப் போவும்?”

என்று மாமியாரிடம் சமாதானம் சொன்னாராம். ஒரு கண்ணில் பூ விழுந்து,  முழுசாகப் பார்வை பறிபோனதால் காக்காய்போலத் தலைசாய்த்துப் பார்த்த கிழவி, மறு கண்ணில் நீர் ஊற, மருமகளின் உச்சந்தலையில் கைபதித்து வாழ்த்தியிருக்கிறார்…

“அதுக்குத்தேன் நானு எப்பயுமே சொல்லுறது. வெறும் சாமி அருள் மட்டும் பத்தவே  பத்தாது அய்யிரே. மூத்தவுக ஆசீர்வாதமும் இருந்தாத்தேன் பெளைக்க முடியும்.”

என்பது பத்தர் அடிக்கடி சொல்லும் வாக்கியம்.

பெரிய அக்கா, கணவரைப் பற்றிச் சொல்லிக் கண்ணீர் விட்ட தினத்திலும், எனக்கு முன்னால் பிறந்து நாலைந்து வருடங்கள் இருந்துவிட்டு, வயிற்றில் கட்டி வந்து இறந்தவனும், முத்துராமலிங்கம் என்று பெயர் கொண்டவனுமான, நான் பார்க்கவே வாய்க்காத என் மூத்த சகோதரன் இறந்த அன்றும்,

                    “மூத்தவா ஆசீர்வாதம் நமக்கு இல்லெ போல்ருக்கே பர்வதம்…”

என்று தாம் அழுததாக அப்பா சொன்னபோது, கதைகேட்டவர்களின் கண்களும் கலங்கின…

ஆயிற்றா, நாய் சத்தம் கொடுக்கிறதே என்று விழித்துப் பார்த்தால், தரையில் ஒரே இடத்தைப் பார்த்துக் குதித்துக் குதித்துக் குரைத்துக்கொண்டிருந்ததாம் அது.  ஆஹா, முன்னங்கைப் பருமன் உள்ள கண்ணாடி விரியன்!

இதற்குள், மரத்தடியைவிட்டுச் சற்று உயரத்தில் செல்லும் வண்டிப்பாதையில், இவர்களுக்கு நேரே வந்துசேர்ந்திருந்த இன்னொரு குடும்பத்தின் ஆண்பிள்ளை, வேகமாக இறங்கி வந்தார். கையில் வீச்சரிவாள் வைத்திருந்தார். நாயைத்தாண்டி எட்டிப் பார்த்தவர், ஒரே போடு போட்டார். தலையருகே இரண்டங்குலம் துண்டிக்கப்பட்ட பாம்பின் உடல், துள்ளித்துள்ளி அடங்கியதாம்…

                    “அது யாரு சொல்லு பாப்பம்!”

என்று கேட்டார் அப்பா. நான் கவனமாகக் கேட்கிறேனா என்பதைச் சோதிக்கவா, தான் எளிமையாகத்தான் சொல்கிறோமா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவா தெரியாது – இடையிடையே நிறுத்திக் கேள்விகள் கேட்பது அப்பாவின் பாணி.

நான் கொஞ்சம் யோசித்தேன். எங்கிருந்தென்றே தெரியாமல் உதித்த பதிலை அவசரமாகச் சொன்னேன்:

                    “காவக்கார மாமாவோடெ முத்தாத்தாவா?”

ஐயோ, வேதனையின் காரணமாக எந்நேரமும் சுருங்கியே இருக்கும் அப்பாவின் முகத்தில், சட்டென்று மலர்ந்த ஆனந்தத்தை எப்படி விவரிக்க! இறுக்கிக் கட்டிக்கொண்டார். மகோதர வயிறு நசுங்கியது. மாதக்கணக்காக  நோய்ப்படுக்கையில் கிடப்பவரின் வாயிலிருந்து அசாதாரணமான நாற்றம் வீசும். பத்திருபது நாள் முள்த்தாடியின் உறுத்தல். இதையெல்லாம் தாண்டியும், அப்பா அழுத்திய முத்தம் என் கன்னத்தில் இன்றுவரை தித்திக்கத்தான் செய்கிறது…

அம்புலிமாமாவில் வரும் கதையை நேரிலேயே கேட்கிற மாதிரி இருந்தது எனக்கு. ஆனால், குறுக்கே பேசாமல் கேட்டேன். ஏனோ, இந்தக் கதை எதுவரை போகிறது என்று பார்க்கப் பெரும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால், அப்பா ஏமாற்றிவிட்டார். இதற்குப் பிறகு கதை நீளவில்லை. பத்தர் அப்பாவுக்குச் சொன்னதே அவ்வளவுதானோ என்னவோ. அல்லது,  சின்னஞ்சிறுவனுக்கும் முதன்முறையாய்ச் சந்திக்கும் அந்நியர்களுக்கும்  இவ்வளவு போதும் என்று  அப்பா நினைத்திருக்கலாம்…

வந்தவர்கள் கிளம்பிப் போனபிறகு, எனக்கு அவ்வையார் பாட்டு ஒன்று சொன்னார் அப்பா. பின்னாட்களில், மேற்படிக் கதையின் இன்னும் சில அலகுகள் கேட்கக் கிடைத்த சந்தர்ப்பங்களில்,  மேற்படிப் பாட்டும் முழுசாக நினைவுவரும்:

ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்.

இப்படித்தான், ஏதாவது நினைவுவரும்போதெல்லாம், அப்பாமீதான பிரமிப்பு இன்னும் அதிகரிக்கும். இந்தப் பாட்டை அன்றைக்குச் சொன்னதால், அப்பாவுக்கு முழுக்கதையும் தெரிந்திருக்கலாம் என்றுகூடத் தோன்றியது, ஒருமுறை…

ல்லூரிக் காலத்தில், வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவரான ரசாயனத் துறைப் பேராசிரியர் திரு.ராமலிங்கம் அறிமுகமானார். தமது துறையைவிட, தமிழ்த்துறையில் அதிக நேரம் செலவழிப்பவர். முதல் சந்திப்பிலேயே,

பூ மலர்வதும் பொழுது புலர்வதும்

மூடிக் கிடந்த மர்மம் ஒன்றைத்

திறந்து காட்டவே.

என்கிற மாதிரித் தெலுங்கு சுலோகம் ஒன்றைச் சொன்னார்.

                    “ஒங்க தாய்மொழி தெலுங்கா சார்?!”

என்று ஆச்சரியப்பட்டேன்.

“ஆமா, எர்நூறு வர்சத்துக்கு முன்னாடி, பஞ்சம் பிளைக்கிறதுக்காக, நெல்லூர்லேர்ந்து ஆற்காடுப் பக்கம் வந்து குடியேறியிருக்காங்க எங்க மூதாதெக. பொற்கொல்லர் வகையறா. ஆனா, ஆந்திராக்காரங்களுக்கு நாங்க பேசுறது தமாசா இருக்கும். அவுங்க பேசுற வேகத்துலெ எங்களுக்கு ஒரு மண்ணும் புரியாது!”

என்று சிரித்தார்…

ஒருமுறை, விளையாட்டு மைதானத்தில் பரந்திருந்த இருட்டுக்குள் அமர்ந்திருந்தோம். எங்கெங்கோ நகர்ந்த உரையாடல், இடம்பெயர்தலில் வந்து நின்றது… ஆற்காட்டிலிருந்தும் தமது முன்னோரின்  வம்சம்  குடிபெயர நேர்ந்ததை விவரிக்க ஆரம்பித்தார். இரண்டாவது முறையும் பஞ்சத்தை முன்னிட்டுத்தான். தாது வருஷப் பஞ்சம்…

                    “அது அப்பிடித்தாம்ப்பா. கலைடாஸ்கோப்லெ இருக்கிற வடிவம், ஒரே சொடக்குலெ முழுக்க வேறொண்ணா ஆயிர்ற மாதிரி, எல்லாமே மாறிப்போயிரும். ‘காலம்ங்கிறதே, கிறுக்கனுக்கு லவிச்ச ரசவித்தைதான்’னு மகாகவி வேமன்னா எளுதி வச்சிருக்காரு…”

வேமன்னாவின் ஒரு சொல்தான், மலைப்பாதையில் நிகழும் மண்சரிவுபோல, பேராசிரியருக்குள் நினைவுகளைக் கொட்டிக் கவிழ்த்திருக்க வேண்டும்.  தொடர்ந்து வரிசைகட்டிய தகவல்களின் பிரகாரம், பேராசிரியர் திரு. ராமலிங்கம், ராமசாமிப் பத்தரின் மகள் வழிப்பேரனாகிவிட்டார்! அவ்வளவுதான், அப்பா சொன்ன கதையின் விடுபட்ட கண்ணிகள் மாயம்போல சட்சட்டென்று கோத்துக்கொள்ளும் வேளை திறந்துவிட்டது!!

அதன்பிறகு, சந்திக்கும்போதெல்லாம் கரட்டுப்பட்டியைப் பற்றிப் பேசி பரஸ்பரம் சிலிர்த்துக்கொள்வோம் –  ஒரேயொரு ஆச்சரியத்தை மட்டும் இப்போதே  சொல்லிவிடுகிறேன்.

திரு. ராமலிங்கம் பின்வரும் கதையை எனக்குச் சொல்லியது ஒரு முன்னிரவு வேளையில்.  அந்த நேரத்தில், எனக்கு மிகவும் பழக்கமான அந்த மைதானம், முற்றிலும் அந்நியமான இடமாக மாறியிருந்தது. தயங்கித் தயங்கிப் பின்வாங்கிய பின்னந்திப் பொழுதின் ஓசைகள் சகலத்திலும் மர்மம் கூடியிருந்தது.

இதைவிடப் பேராச்சரியம் ஒன்று உண்டு –  பேராசிரியரிடம் கேட்டது மட்டுமல்ல – பத்தர் வம்சத்தின் கதையை அப்பாவிடம் நேரடியாகவோ,  அதன் உபரித் தகவல்களை வேறு யாரிடமாவதோ எனக்குக் கேட்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அத்தனையுமே முன்னிரவுப் பொழுதுகள்! அதன் காரணமாகவேதானோ என்னவோ, பட்டப்பகலில் நடந்ததாக நான் கேள்விப்பட்ட சம்பவங்களில்கூட, முன்னிரவின் மசமசப்பு படர்ந்திருக்கும்!

மற்றபடி, அப்பாவைப்போலவே, பேராசிரியரிடமும் ஒரு தனிப் பாணி இருந்தது. கதைத் தருணங்களை விவரிக்கும்போது, அவை பற்றிய தமது அபிப்பிராயத்தையும் சேர்த்தே சொல்வது… இன்னும் குறிப்பிட வேண்டிய விஷயம், எப்போதும் தமிழாகவே இருக்கும் பேச்சுமொழி, நுட்பமான தருணங்களில் தெலுங்குபோலவே ஒலிப்பது…

2

கைக்கடைக்காரர்களிடமிருந்து தங்கக் கட்டிகளை வாங்கிவந்து ஆபரணங்களாக்கிக் கொண்டுபோய்க் கொடுத்துக் கூலி வாங்கிக்கொள்வார் பத்தர். கூலியாகத் தங்கமே பெற்றுக்கொள்வார். அதை நகைகளாக்கி, உள்ளூர் வட்டாரத்தில் விற்பனை செய்வார்.

சொந்தமாக ஒரு ரேக்ளா வண்டி வைத்திருந்தார். மயிலக்காளையைப் பூட்டி அதிகாலையில் புறப்பட்டால், மதியச் சாப்பாட்டுக்கு இந்தப் பக்கம் மதுரையோ அந்தப் பக்கம் திருச்சியோ சென்று சேர்ந்துவிடுவார். ராத்தங்கிவிட்டு, மறுநாள் காலையில் கிளம்பி, கரட்டுப்பட்டி வந்து சேர்வார். வழித்துணையாக, காவக்காரர் வீட்டுத் தலைமகன் உடன்வருவார். வண்டித்தட்டில் விரித்த கோணிச்சாக்கின் அடியில், நன்கு தீட்டப்பட்ட வீச்சரிவாளைக் கிடத்தியிருப்பாராம். வண்டியின் திசைக்கு எதிர்த்திசையைப் பார்த்து அமர்ந்திருக்கும் கூட்டாளியும், வண்டியோட்டும் பத்தரும் ஒருசொல்கூடப் பேசிக்கொள்ள மாட்டார்கள்…

இந்த இடத்தில், இன்னொரு செய்தி. ராமசாமிப் பத்தர் பொற்கொல்லர் மட்டுமில்லை; சித்த வைத்தியமும் கற்றவர். வேறு சில வேலைகளும் செய்கிறார் என்று ஊருக்குள் பேச்சு இருந்தது – ஆனால், அதற்கெல்லாம் சான்றுகள் கிடையாது.

தகப்பனாரிடம் தொழில் கற்றவர் அவர். நகைத்தொழில் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட வித்தையை,  நல்லநாள் பார்த்துப் பாடம் ஆரம்பிப்பதற்கு முன்னால், மகனை அமர்த்திவைத்துச் சில விஷயங்கள் சொன்னார் பெரியவர். விஷயங்கள் அல்ல; நிபந்தனைகள்.

  1. எக்காரணம் கொண்டும் சொந்தத் தேவைக்கு வித்தையைப் பயன்படுத்தக்கூடாது.

2. முழுசாகக் கைவரப்பெற்ற மாத்திரத்தில்,  நாமே கடவுளுக்குச் சமம் என்கிற மாதிரித் திமிர் எழும், மனத்தில். அதற்கு இடம் கொடுக்கக்  கூடாது. ஈஸ்வரன் இருக்கிறார் என்பதும், சகல லோகங்களையும் அவர்தான் பரிபாலிக்கிறார் என்பதும் சர்வசத்தியமான உண்மைகள். நம்முடைய வம்சத்திலேயே, சில தலைமுறைகளுக்கு முன்னால், ஒரு பாட்டனுக்கு வித்யாகர்வம் தலைக்கேறிவிட்டது. அதைத் தாமே உணர்ந்த மறுகணம், குல தெய்வத்தைப் பிரார்த்தித்து, இரண்டு கைகளின் கட்டைவிரலையும் ஒரே சமயத்தில் ஊதுலைக் கணப்பில் தீய்த்துக்கொண்டுவிட்டார்… வருடம் தவறாமல்  குலதெய்வக் கோவிலுக்கு நேரில் போய், உரிய சாங்கியங்களைச் செய்வதில் குறைவைக்கக் கூடாது. பக்தி சிரத்தை குறையாமல் இருக்கும்வரைதான் இந்த மாதிரி வித்தையெல்லாம் பலிதமாகும்.

3. இப்படியொரு சமாசாரம் நமக்குத் தெரியும் என்கிற சந்தேகம்கூட மற்றவர்களுக்கு உதிக்கக்கூடாது. அதிலும், குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவே கூடாது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனால்கூட, இதை சொந்த உபயோகத்துக்காகச் செய்யக் கூடாது, என்று சொன்னேனில்லையா, குடும்பத்துக்குத் தெரியவரும் பட்சத்தில், நமக்கு மிகவும் ஆப்தமானவர்களைத்தான் முதலாவதாகக் காவு வாங்கும்.

4. ‘இவ்வளவு காலம் கழித்து ஏன் சொல்லித்தர வேண்டும்’ என்று தோன்றுகிறதல்லவா? இரண்டு காரணங்கள். ஒன்று, இதற்கு நீ  தகுதியானவன்தானா என்று, எனக்கே திருப்தியாகும்வரை காத்திருந்தேன். அடுத்தது, திருமணமாகி தான், தனது குழந்தைகள் என்று ஆனபிறகுதான், பொறுப்புணர்ச்சியும் பயமும் மிகுதிப்படும். ரகசியத்தைக் காக்காவிட்டால் இன்னின்னார் தலை உருண்டுவிடும் என்ற பீதிதானே முறையான அச்சத்தைத் தர வல்லது.

5. இதையெல்லாம்விட, போனவாரம்தான் எனக்கு உத்தரவு கிடைத்தது.

6.  இப்போதுகூட ஏன் சொல்லித்தர வேண்டும் என்கிறாயா? இதுநாள்வரை, இன்ன வியாதிக்கு இன்ன மருந்து என்று மட்டும்தானே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இனிமேல்தான் சில மருந்துகளைத் தயாரிக்கச் சொல்லித்தரப் போகிறேன். அப்போது தெரியும், எத்தனைவிதமாக இந்த                     வித்தை   உபயோகப்படக் கூடும்  என்று.

7. மருந்து தயாரிக்கும் சூட்சுமம் மாதிரியே, மூலப் பொருள் தயாரிக்கும் சூட்சுமமும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாதது. உனக்குப் பிறக்கும் மகன்களில்கூட ஒருத்தனுக்கு மட்டுமே சொல்லித்தரலாம் – இதையெல்லாம் கேட்டுக்கொள்ளும் யோக்கியதை  யாருக்கு உண்டு   என்று நினைக்கிறாயோ, அவனுக்கு மட்டும்.

8. மாயவித்தைக்காரன் உருவாக்குகிற வஸ்துக்கள் மாதிரி, மூணே முக்கால்  நாழிகை மட்டுமே நிலைத்திருப்பது அல்ல, இந்த வித்தை தரக்கூடிய பலன். நிரந்தரமானது; செல்வத்தைக் குவிக்கக்கூடியது. அதனால்தான் இத்தனை நிபந்தனைகள்.

9. ஆக, தெய்வகாரியத்துக்கும், வைத்தியகாரியத்துக்கும் மட்டுமே உபயோகப்பட வேண்டிய ரகசியம் இது. வேறு லாபங்களுக்காகச் செயல்படுத்தினால், லட்சுமி சரஸ்வதி இரண்டு பேருமே  சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிப் போய்விடுவார்கள். இன்னும் பெரிய ஆபத்தும் உண்டு – தவறாகப் பயன்படுத்த முனைந்தால், பிராணன்கூடப் போய்விடலாம். பார்த்து நடந்துகொள்.

என்று கறாரான குரலில் எடுத்துச் சொல்லி, கற்பூரம் ஏற்றிச் சத்தியம் வாங்கிய பிறகுதான், சுவடிக் கட்டைப் பிரிக்கவே செய்தார். வெறும் பார்வைக்கு வெற்றுச் சுவடியாகத் தென்பட்ட  ஓலையில், அப்பா  வாசித்துச் சொல்லச்சொல்ல வரிகள் தோன்ற ஆரம்பித்தனவாம்.

அதைவிட, அவர் வாசிக்கும்போது ஒன்றாகக் காதில் விழுந்த வரிகள், அப்பா விளக்கவிளக்க வேறு பொருள் கொண்டன. ஒவ்வொரு சொல்லும் சூட்சுமமானது; வேறொரு அர்த்தம் கொண்டது. இத்தனைக்கும், அத்தனையும் தமிழ் வார்த்தைகள்தாம்.

மூத்த பத்தர் ஆபரண வேலைகள் செய்தது மட்டுமல்ல, சுயமாகவே கற்று, பயிற்சி செய்திருந்த சித்தவைத்தியத்திலும் விற்பன்னர். அது குறித்த சுவடிகளையும் பின்னவர் பார்த்திருக்கிறார். அவற்றைவிடக் கடினமான மொழி நடையும், அர்த்தச் செறிவும் கொண்ட சுவடிகள் இவை.

ராமசாமிப் பத்தரின் முனைப்பும் உழைப்பும் சாமானிய மனிதர்களுக்குக் கொஞ்சமும் கைகூட இயலாதவை. சாதாரணமாக அவரைத் தாண்டிப் போனாலே, ரசாயன நெடி மூக்கைத் துளைக்கும் – அதாவது, மாதத்தில் இரண்டுநாள் மட்டும். நிறை அமாவாசை, அல்லது பவுர்ணமி தினங்களில் மட்டுமே செய்முறைப் பயிற்சி மேற்கொள்வார். பிற நாட்களில், பகல்பொழுதில் பொன்வேலையும், இரவுகளில் ஊர் அடங்கிய பிறகு அகல் வெளிச்சத்தில் சுவடிகளை ஆராய்வதுமாக ஈடுபட்டிருப்பார்.

அநேகமாகப் பேச்சே கிடையாது. ஆமாம் இல்லை வேண்டும் வேண்டாம் ஓஹோ ம்ஹும் என்கிற மாதிரி ஓரசைகளிலேயே உரையாடலை முடித்துவிடுவார். பிற நேரங்களில் தலையாட்டுவார், அவ்வளவுதான். ஊமைக்கோட்டானாக மாறிவிட்ட கணவனின் மனம் கோணாமல் நடந்துகொண்ட உத்தமியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நல்லவேளை, ராமசாமிப் பத்தர் தமது  ரத்தினச் சுருக்கத்தை, நகைத்தொழிலை முன்னிட்டுத் தம்மிடம் வரும்  வாடிக்கையாளர்களிடம் செயல்படுத்தவில்லை. முதன்முறையாய் வருபவர்கள்,  ‘இந்தாள் என்னா, சிரிக்கவே மாட்றான்; சரியான முசுடு போலவே!’ என்று தங்களுக்குள் வியந்தபடி போய்ச்சேர்வார்கள். அபாரமான தொழில் திறனும், கை சுத்தமும், சகாய விலையும் இருந்ததால், திரும்பத்திரும்ப இவரிடமே வரவும் செய்வார்கள்…

தகப்பனார் ஜீவியவந்தராய் இருக்கும்போதே, வித்தையின் உச்சத்தை எட்டிவிட்டார் பத்தர். அதன்பிறகு, மௌனத்தின் வீரியம் இன்னும் அதிகரித்தது. எல்லாவிதத்திலும் நிதானமான மனிதர். ஒரு தடவை, இரண்டாம் பேர் அறியாமல் குலதெய்வக் கோவிலுக்குப் போனார். ஆற்காடு அருகே இருப்பது.  அம்மன் சின்னஞ்சிறுமி.  நின்றகோலத்தில், நீங்காத புன்னகையுடன் இருப்பவள். தங்கத்தில் பாவாடையும், மேல்சட்டையும், கிரீட முகப்பும் சாத்திவிட்டுத் திரும்பினார். வயிற்றெரிச்சல், அவளும்தான் பின்னொருநாள் கைவிட்டாள்.

                “கண்ணுக்குத் தெரியாத விசை பிடரியில் கைவைத்துத் தள்ளும்போது, சாமானிய மனிதர்களால்  என்ன செய்துவிட முடியும்? தெய்வங்களேதோற்கும் இடமல்லவா அது!“

என்று பெருமூச்சு விட்டார் பேராசிரியர்…

ரண்டாம் உலகப்போரின் பின்னலைகள் ஓய்ந்திராத காலம். சகலத்துக்கும் தட்டுப்பாடு நிலவிய சூழ்நிலை. ஒரு நாள், உசிலம்பட்டியிலிருந்து ஒரு தம்பதி வந்தனர். திருமாங்கல்யத்துக்குப் பொன் உருக்க வேண்டுமாம். கைவசம் இருந்த கடைசித் துணுக்குவரை ஆபரணங்களாகச் செய்து, மதுரைக்கார முதலாளியிடம்  கொண்டு கொடுத்தாகிவிட்டது.

“சுத்தத் தங்கம் இருப்பு தீர்ந்துருச்சே அப்பேன்.  அடுத்த வாரம் வந்து புதுத் தங்கம் வாங்கிக்கிட்டுப் போ. இன்னூரு தபா வர்றமேண்டு யோசிக்காதப்பு. அதுக்குத் தனியாக் கூலி தந்துர்றேன்!”

என்று சொல்லியிருந்தார் மதுரைக்கார முதலாளி…

                “என்னாங்க இது, ஒங்களெ நம்பி மூர்த்தம் குறிச்சு, லக்கினப் பத்திரிகெ வேறெ அடிச்சிட்டம். இப்பொப் போயி இப்பிடிச் சொல்றீகளே…”

என்று அங்கலாய்த்தார் உசிலம்பட்டிக்காரர். 

                 “நம்பிப் போலாம். அண்ணன்ட்டெ இல்லேண்ற பேச்சே இருக்காதுண்டுதானே ஊரே நம்புது. இன்னம் பதினஞ்சு நாத்தானே இருக்கு மூர்த்தத்துக்கு.   இன்னமே எங்குட்டுப் போயி நிக்கிறது? ஒங்களெ மாரி ராசிக் கைய வேற எங்குட்டுப் போயித் தேட? சம்பந்தகாரவுகளெ என்னாண்டு நிமுந்து பாக்குறது ண்ணே?…”

என்ற அவர் சம்சாரத்தின் கண்களில் நீர் முட்டி நின்றது.

                    “…நீங்களே சொல்லுங்கண்ணே. ஒங்க மருமவ இல்லையா அவ. மாப்ளெ வீட்டுக்குத் தெரிஞ்சா சகுனத்தடெ அது இதுண்டு ஆவலாதி ஆயிராதா?”

மூக்கை உறிஞ்சினாள். கண்ணில் திரண்ட துளி உருண்டு இறங்கியது. மூக்குத்தி நனைந்து பளபளத்தது.  இவரிடம் வாங்கிய மூக்குத்திதான்…

இலக்கில்லாத தொலைவை வெறித்தார் பத்தர்.  வந்தவர்களின் தலைக்கு நேரே, தோளுயரத்தில்,  சுவரில் பொருத்திய மரப் பீடத்தில்  வீற்றிருந்த  குலதெய்வத்தை நோக்கிப் பார்வையைத் திருப்புகிறார், காலைப் பூசையின்போது  போட்டிருந்த மல்லிகைச்சரம் சொத்தென்று கீழே விழுந்தது. நல்ல சகுனம் என்று நினைத்துக்கொண்டார் போல, பாவம்.  தலையை ஆட்டிக்கொண்டார்.

                    “விடும்மா தங்கச்சி. ஏற்பாடு பண்ணீரலாம்.”

அது மட்டுமல்ல, திருமாங்கல்யத்தை வாங்கிக்கொள்வதற்கு முன்னால், பத்தரின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்த தம்பதி,

                    “எம்புட்டுத் தரணும்.”

என்றபோது, வேகமாகத் தலையாட்டி,

                    “சேச்சே, அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எம் மருமவளுக்காண்டி நாஞ் செஞ்ச சீருன்னு வச்சிக்கங்க.”

என்று சொல்லி மூச்சிரைத்தாராம். கடந்த சில ஆண்டுகளில் நீண்ட வாக்கியங்களாக அவர் பேசிய முதல் சந்தர்ப்பம் அது…

விருட்டென்று எழுந்தார். குலதெய்வப் பீடத்துக்கு நேர்கீழே மாட்டியிருந்த தகப்பனாரின் புகைப்படத்தை, சுவரைப் பார்த்துத் திருப்பி மாட்டினார். விறுவிறுவென்று வாசலுக்குப்  போனார். வண்டித்தட்டில், கோணிச்சாக்குக்கு அடியில் கைவிட்டு, புத்தம்புதிய இரும்புக் கடையாணியை உருவியெடுத்தார்.  தட்டுவண்டிச் சக்கரத்துக்கு மாற்றுவதற்காக முந்தின நாள் மதுரையிலிருந்து வாங்கி வந்தது. எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனார். இத்தனையும் வந்திருந்தவர்கள் கண்பார்க்க நடந்தது, முதல் தவறு…

இரண்டாவது தவறு, கடையாணியின் கூர்முனையே பொன்துண்டாகப் பத்தரின் கையில் இருக்கிறது என்று வந்தவர்கள் அறியும் விதமாக, அவர்கள் முன்பாகவே  அதை ஊதுலையில் கனன்ற கங்குகளில் இட்டு உருக்க முற்பட்டது.

“வெளித்தெரியாமல் செய்த மூன்றாவது தவறுதான் இன்னும் பெரியது என்று படுகிறது.”

என்றார் பேராசிரியர். ஆமாம், மணப்பெண்ணைத் தமது சொந்த மருமகளாக ஆத்மார்த்தமாக வரித்துக்கொண்டதுதான் ஆகப்பெரும் தவறு…

சிரித்த முகத்தில் வியப்பும் படர்ந்திருக்க, திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே போனார்கள், பெண்ணைப் பெற்றவர்கள். பார்வைக்கு மறையும் வரை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, கொல்லைப்புறம் ஓடிச் சென்று, கிணற்றிலிருந்து வாளிவாளியாக நீர் சேந்தித் தலைமுழுகினாராம் பத்தர். அவ்வளவு நேரமும், உதடுகள் மட்டும் படுவேகமாக அசைய, ஓசை வெளிப்படாமல் ஏதோ உச்சாடனம் ஓடிக்கொண்டேயிருந்ததாம்…

 தன் பிறகு நடந்தவை அனைத்துமே  பயங்கரமானவை. முன்னிரவில் பத்தருக்குக் கடும் காய்ச்சல் கண்டது. ஓயாமல் முனகத் தொடங்கினார். நள்ளிரவில் குரலெடுத்து அலறினார்.

                    “யப்பா. என்னெ மன்னிச்சுருங்க சாமீஈஈஈ…”

விடிந்தபோது, காய்ச்சல் முழுமையாக விட்டிருந்தது. ஆனால், காது கேட்கவில்லை என்றார். நாச்சிகுளத்திலிருந்து வைத்தியரைக் கூட்டிவந்தார்கள். அவர் நாடி பார்த்தார். நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தார். பத்தருடைய கண்ணிமைகளை ஒவ்வொன்றாக அகல விரித்துப் பார்த்தார். முந்தின இரவின் உறக்கமின்மை காரணமாக, விழிகள் கோவைப்பழமாகச் சிவந்திருந்தன…

“எல்லாமே சரியா இருக்கேம்மா. பயந்த கோளாறு மாதிரியில்ல தெரியிது. எதுக்கும் இந்தப் பொடியெக் கசாயம் காச்சி மூணுவேளெ  குடு.”

என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். வைத்தியக் கட்டணம் கொடுக்க முன்வந்தபோது,

                    “இல்லாத வியாதிக்கு, செய்யாத வைத்தியத்துக்கு, என்னாண்டு காசு வாங்குறது. ஒரு லோட்டா நீர்மோர் கரச்சுக் குடுத்தா.”

என்று கேட்டுவாங்கிக் குடித்துவிட்டுப் போனார்.

முதல்வேளை கொடுத்த மாத்திரத்தில், கஷாயத்தின் கடைசித் துளிவரை ஓங்கரித்து ஓங்கரித்து வாந்தியெடுத்தார் பத்தர்.

அடுத்த பதினைந்து நாட்களுக்கு இதே நடைமுறை தொடர்ந்தது. பதினாறாவது நாள், காவக்காரர் வந்தார். அவருடைய மகளை உசிலம்பட்டியில் கட்டிக்கொடுத்திருக்கிறது. மகள் வீட்டுக்குப் போயிருந்தவர், காலையில் வந்தவுடன் செய்தி கேள்விப்பட்டு, நண்பரைப் பார்க்க வந்தார்.

கோரைப்பாயில் படுத்திருந்த பத்தர் அதற்குள் அரை உடம்பாகியிருப்பதைப் பார்த்துப் பதறினார். அவருக்கு இவர் ஆறுதல் சொல்கிற மாதிரி ஆனதாம்.

அப்புறம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, அவர் ஓங்கி ஓங்கி அலறியும், இவர் கிசுகிசுத்தும் நடந்த உரையாடல்.  முந்தின நாள் உசிலம்பட்டியில் கேள்விப்பட்ட ஒரு செய்தியைச் சொன்னார், காவக்காரர் – பாதிக் கதறலும், பாதி சைகையுமாக.

ஒரு உள்ளூர்க் கலியாணம். முகூர்த்தம் முடிந்தவுடன், மாப்பிள்ளை ஊருக்கு  வண்டியேறிக் கிளம்பியிருக்கிறார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும்,  ஏகப்பட்ட பூ அலங்காரம் செய்த தனி வண்டியில். விசையாகப் பாய்ந்த வண்டி, பத்தாவது மைலில் குடைசாய்ந்துவிட்டதாம். சக்கரத்தின் கடையாணியில் பின்னந்தலை மோதி, தலத்திலேயே மணமகன் இறந்துவிட்டான்.

                    “இந்தா, இப்பிடி மல்லாந்து கிடந்துருக்கானப்பா. அப்பிடி அடிபடுறதுக்கு  வாய்ப்பே இல்லே. எந்தவாக்குலெ எப்பிடி வுளுந்தானோ. போற நேரம் வந்துருச்சுண்டா எப்பிடிவேண்ணா உசுர் போகும்போல. அந்தக் களுதையும் பாரு, எந்த நேரத்துலே களுத்துலெ வாங்குச்சோ…”

என்று உச்சுக்கொட்டினாராம்.

                    “…மாங்கலிய ராசிதேன் ண்டு ஊரே பேசுதப்பா…”

என்று முடித்தார். பத்தர் தலைகுனிந்திருந்தார். திடீரென்று ஆவேசமாக நிமிர்ந்தவர்,

                    “யாரு தப்புக்கு யாரு சாகுறது?”

என்று ஆத்திரமாகக் கேட்டார். யாருக்கோ எங்கோ நேர்ந்த துர்மரணத்துக்கு, தம்மிடம் ஏன் ஆவேசப்படுகிறார்; கேளாக் காதில் என்ன கேட்டுத் தொலைத்ததோ  என்ற குழப்பத்தோடே கிளம்பிப்போன காவக்காரர், அடுத்த ஒரு மணிநேரத்தில் மறுபடியும் பதறி, ஓடி வருகிற மாதிரி ஆனது.

ஊர்க் கிணற்றில் நீர் சேந்த மனைவி புறப்பட்டுப் போனதும், தம்முடைய தொழில் அறை உத்தரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டார் பத்தர்.

                    “குடும்பத்ல நகெத்தொளில் அத்தோடெ நின்னு போச்சு…”

பேராசிரியர் பெருமூச்சு விட்டார்.      

முன்னிரவு நன்கு முதிர்ந்திருந்தது. எப்போது இறங்கியதென்றே தெரியாத இருள், விளையாட்டு மைதானத்தைக் கறுப்புப் போர்வைபோலப் போர்த்தி மூடியிருந்தது. மைதானம் முழுக்க வெம்மை நிறைந்துவிட்ட மாதிரி உணர்ந்தேன். பொற்கொல்லர்களின் முன்னால், பீடத்தின்மேல், கங்குகள் நிரம்பிக் கனல்கிற   அகலமான ஊதுலையின் சித்திரம் எனக்குள் வந்துபோனது.

பேராசிரியர் செருமினார். இருட்டுக்குள் கோட்டுச் சித்திரம்போலத் தெரிந்த அவரது முகத்தை நோக்கி,

                    “இதெ நீங்க ஒரு கதையாவே எளுதலாம் சார்.”

என்றேன்.

                    “அட போப்பா. நான் எளுதினாத்தானா. நீ எளுது!”

என்று சிரித்தார். இதோ எழுதிவிட்டேன். ஆனால், அந்த நாளில், கல்லூரி மலரில் பத்துப் பனிரண்டு வரிக் கவிதைகள் தவிர, உருப்படியாக எதுவுமே எழுதியிராதவன் நான். பின்னாளில் எழுத்தாளனாவேன் என்று அவர் எப்படி யூகித்தார்?!…

அன்றைக்குத் தோன்றாத ஐயமொன்று, அவர் காலமான பிறகு ஒருநாள் எழுந்தது. அத்தனை நிபந்தனைகள் சுமந்த, யாருக்குமே தெரியவியலாத அந்தரங்கமான கதையை, தலைமுறைகள் தாண்டி இவ்வளவு துல்லியமாக விவரித்தாரே பேராசிரியர், இதில் அவருடைய சொந்தச் சரக்கு எவ்வளவு சேர்ந்திருக்கும்? இருக்கட்டுமே, என்னுடைய முன்னோர்கள் தொடர்பாகக்கூட, இதேவிதமான தொல்கதைகள் எத்தனையோ இருக்கின்றன. சொல்லக் கிளம்பினால், சொந்தச் சங்கதிகள் ஏதாவது ஒன்றிரண்டு சேர்ந்துவிடாதா! அதைவிட, கதையென்பதே, உண்மையும் பொய்யும் இரண்டறக் கலக்கும் மாயம் நிகழ்கிற தலம்தானே!?

3

ரட்டுப்பட்டியைவிட்டு நாங்கள் வெளியேறியது, ’70களின் ஆரம்பத்தில் – அப்பா இறந்ததுதான் காரணம். புத்தாயிரமாண்டு பிறக்கும்வரை அடிக்கடி அங்கே போய்க்கொண்டிருந்தேன். சென்னைக்குக் குடிபெயர்ந்த பிறகு, வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனாலும், மதுரைக்குப் போகும்போதெல்லாம் பேராசிரியரைச் சென்று பார்ப்பது வழக்கம். அழகப்பன் நகரில் வசித்தார் அவர். எண்பதுகளிலேயே,   நிரந்தர மதுரைவாசியானவர். 

கரட்டுப்பட்டியைப் பற்றி ஆசையாய்ப் பேசிக்கொள்வோம். இடையில் ஒருமுறை, பேச்சுவாக்கில், தங்களுக்கு அங்கே இருந்த நிலபுலன்களை மொத்தமாகக் கிரயம் செய்துவிட்டதாகச் சொன்னார். அவருடைய தாய்மாமன் கிளையொன்று கிராமத்திலேயே இருந்து விவசாயம் பார்த்துக்கொண்டிருந்ததே என்று கேட்டேன். அவர்கள் கோயம்புத்தூருக்குப் பெயர்ந்துவிட்டார்களாம்…

முனியாண்டி கோவிலின் வருடாந்தர சாமிகும்பிடு பற்றி ஊர்க்கூட்டம் நடந்திருக்கிறது. ஏதோவொரு தீர்மானத்தைப் பற்றி விவாதம். இவர்கள் வகையறாவைச் சேர்ந்தவர் எழுந்து, ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.  இளந்தாரி  ஒருவன்,

                    “வந்தேறிகல்லாம் அதைப் பத்திப் பேசக்கூடாது”

என்றானாம். அவனுடைய சகாக்கள் நாலைந்துபேர் சத்தமாகச் சிரித்திருக்கிறார்கள்.

                    “அந்த ஒரு வார்த்தெ  பத்தாதா கிஸ்ணா!”

என்று பலவீனமாகப் புன்னகைத்தார் பேராசிரியர்.


2015 -ல், எண்பத்தியோராம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து காலமானார். அதற்கு மிகச் சரியாக இரண்டு மாதம் கழித்து மதுரை போக நேர்ந்தது. பேராசிரியருடைய ஆன்மாவின் சார்பாகவும் கிராமத்தைப் பார்த்துவரலாம் என்று போனேன்.

கடந்து சென்ற அத்தனையுமே தெரியாத முகங்கள். ‘வெளியூர்க்காரன் மாதிரி இருக்கிறான்; இங்கே என்ன செய்கிறான்!’ என்ற திகைப்பு வெளீப்படையாய்த் தெரிய, ஒரு கணம் தயங்கித் தாண்டிப் போயின.

முல்லையாறும் பிள்ளையாரும் தவிர எனக்குத் தெரிந்த அம்சம் எதுவுமே அங்கே இல்லை என்பது முதல்முறையாக உறைத்தது. காற்றில் திறந்து வைத்த கற்பூரம் மாதிரிக் கரைந்துவிட்டதே கரட்டுப்பட்டி என்று ஒருவித ஆதங்கம் எழுந்தது. இல்லை இல்லை,  ஊர் இருக்கத்தான் செய்கிறது; எனக்குள் இருந்த பிம்பம்தான்  ஆவியாகித் தீர்ந்திருக்கிறது…

முல்லையாற்றுப் பாலத்தில்  நடந்தேன். கிழக்கே அடிவானத்தையொட்டிய ரயில் பாதையில், மதுரையிலிருந்து எதிர்த் திசை நோக்கிப் போகிற சரக்கு ரயில் ஊர்ந்தது. ஏகப்பட்ட பெட்டிகளோடு,  அத்தனை மந்தமாக நகர்ந்தது. முழுக்க மறையும்வரை பாலச் சுவரில் கைகளை ஊன்றி நின்றேன். ரயில் காலியான அடிவானத்தைக் காணப் பிடிக்காமல் எதிர்ப்புறம் திரும்பினேன். மேற்கு வானத்தின்  ஆரஞ்சு நிறம், தணல் பரப்பியமாதிரி ரத்தச் சிவப்பாகப் பழுத்திருந்தது.  அதில் ஓரிரு சொட்டுகள் கறுப்பும் விழுந்தமாதிரி பிரமை தட்டியது

பகல் இரவாவதும் இரவு பகலாவதும்

                    விதை செடியாவதும் செடி மரமாவதும்

                    பிறந்தோர் இறப்பதும் இறந்தோர் பிறப்பதும்

                    பிரபஞ்சத்தின் திறந்த ரகசியம்,  மகனே.

                    ஆனால், உனதும் எனதும் அற்ற ரசவித்தையை

                    நடத்துவது யார்? எதற்காக?

என்று பேராசிரியர் திரு. ராமலிங்கம் எப்போதோ ஒருமுறை  மேற்கோள் காட்டினார்.  பழங்காலத் தெலுங்குக் கவி யாரோ எழுதியது என்றார். அல்லது, வேமன்னா என்றேதான் சொன்னாரோ? எப்படியோ,   முல்லையாற்றுப் பாலத்தில் என்னோடு தாமும் நின்றன அந்த வரிகள்.  

நகர்ந்தேன்.  முனியாண்டி கோவிலின் பின்புற ஆலமரம் எண்ணற்ற விழுதுகளை ஊன்றி பிரம்மாண்டமான பச்சைக்குடையாய் நின்றிருந்தது. கூடு திரும்பிய பறவைகளின் கெச்சட்டம் பெரும் ஆர்ப்பாட்டமாய் ஒலித்தது. பெரும்பான்மையும் கிளிகள்.

திடீரென்று ஒரு கேள்வி உதித்தது. நாங்கள் வசித்த காலத்துக் கிளிகளின் கொள்ளுப் பேர, எள்ளுப் பேர வாரிசுகளாயிருக்குமோ. அத்தனையுமே உள்ளூர்க் கிளிகளா, வெளியூரிலிருந்து வந்தவையும் இருக்குமா!

மனத்தின் அடியாழத்திலிருந்து சிரிப்புப் பொங்கியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...