“யதார்த்தவாதப் புனைகதைகளுமே மாற்று மெய்ம்மைகள்தாம்!” யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளி. இன்னும் அதிகமாகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடம் சென்று சேர வேண்டிய முதன்மையான படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், குறுங்கதைகள், மொழிப்பெயர்ப்பு என இடையறாது இயங்கும் யுவன் சந்திரசேகர் அவர்கள், நவம்பர் மாதம் மலேசியாவில் நடக்கும் GTLF (ஜார்ட் டவுன் இலக்கிய விழா) நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிகிறார். அந்த நிகழ்ச்சியில் நவம்பர் 26, மாலை மணி 4க்கு அவருடனான உரையாடல் அங்கம் இடம்பெறுகிறது. மேலும், இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதும் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அவரது புனைவுலகம் குறித்து பேசுவதற்கான கூடுதல் சாத்தியங்களை இலக்கியச் சூழலில் உருவாக்கியுள்ளது. இந்த நேர்காணல் அவரை மேலும் கூடுதலாக அறிந்துகொள்ளவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி.

உங்கள் இளமைக்காலம் குறித்துக் கூறுங்கள்?

யுவன் சந்திரசேகர்: எல்லாச் சிறுவர்களின் இளமைக்காலத்தையும் போன்றதுதான் என்னுடையதும். பன்னிரண்டு வயது வரை கரட்டுப்பட்டியில் கழிந்தது. நான் பிறந்த கிராமம் அது; மதுரை மாவட்டம், சோழவந்தானிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ளது. முன்னூறு நானூறு வீடுகள் மட்டுமே கொண்ட பழமையான கிராமம்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது, என்னை எழுத்தாளன் ஆக்கிய மூன்று அம்சங்களின் தோற்றுவாய் அந்தக் கிராமத்தில்தான் நிகழ்ந்தது என்று தோன்றுகிறது. முதல் அம்சம், என் தகப்பனாரின் அகால மரணமும் அவருடைய அருகாமையைப் பறிகொடுத்த பிஞ்சு மனத்தில் படிந்த அசாத்தியத் தனிமை. இரண்டாவது, அவர் வழியாக எனக்குள் ஏற்பட்டிருந்த வாசிப்புப் பழக்கம். மூன்றாவது, இன்றுவரையிலும் என் அநேகக் கதைகளுக்குள் எழும்பி வரும் நிலப்பரப்பை வழங்கியிருப்பது கரட்டுப்பட்டியேதான்.

உபரியாக, சகாக்களோடு தெருவில் இறங்கிப் புழுதியில் விளையாட அனுமதிக்காத சரும நோய். முதற்பாதி இனிமையாகவும், இரண்டாம் பாதி துயரமும் அழுத்தமும் தனிமையும் நிரம்பியதாகவும் என் இளமைக்காலம் கழிந்தது என்று தொகுத்துக்கொள்கிறேன் இப்போது.

உங்கள் புனைவுகளை வாசிக்கும் யாருக்கும் உங்கள் அப்பாவைப் பற்றிய ஒரு சித்திரம் மனதில் எழாமல் இருந்திருக்காது. அது அவரவர் தங்கள் மனதில் உருவாக்கிக்கொண்ட உங்கள் தந்தையின் உருவம். உங்கள் தந்தையைப் பற்றி கூறுங்களேன்.

யுவன் சந்திரசேகர்: முன்பே சொன்ன மாதிரி, என் இளம் வயதிலேயே அப்பா மரணமடைந்து விட்டார். அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அவருடனான உணர்வுபூர்வமான பிணைப்பும், ஒரு கதைசொல்லியாக நான் உருவான பிறகு என்னை வாசிப்பதற்கு அவர் இல்லாமல் போனாரே என்ற ஏக்கமும் தொடரத்தான் செய்கின்றன. அவ்வளவு ஏன், புதிதாக ஒரு இசைத் தொகுப்பைக் கேட்க நேர்ந்தாலும், அவர் அருகில் இருந்தேதான் கேட்கிறேன்.

கம்பராமாயணத்தில் பெரும் பிடிப்பு உள்ளவர். அநேகமாக அத்தனை செய்யுள்களுமே மனப்பாடமாய்த் தெரிந்தவர் – பாட பேதங்களோடு! மகாபாரதத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ஏகப்பட்ட தனிப்பாடல்களை மனப்பாடமாக வைத்திருந்தார். இதுபோக, நாலடியார், பழமொழி, திரிகடுகம் என்கிற மாதிரி இடைக்கால இலக்கியத்திலும், பக்தி இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருந்தவர். பாரதிமீது அலாதியான பற்று உள்ளவர். ஏழெட்டு மொழிகள் எழுதவும் படிக்கவும் அறிந்தவர் – உருது உள்பட. அத்தனையும் அவராகவே முனைந்து கற்றவை. இத்தனைக்கும் அவருடைய கல்வித் தகுதியைச் சொன்னால் வியப்பாக இருக்கும். தமது தாய்க்குடும்பச் சூழ்நிலை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்த நேர்ந்தவர்.

கர்நாடக சங்கீதத்திலும் ஓரளவு ஹிந்துஸ்தானி இசையிலும் ஞானம் உள்ளவர். சமையல் வித்தகர் – குறிப்பாக, இனிப்பு வகைகள். ஓட்டல் தொழில் அறிந்தவர். ஆரம்பகட்டத்தில் அதையே தமது ஜீவனோபாயமாகப் பேணினார்.

யோகாசனம் உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் காலத்திய தமிழ்த் திரைப்படங்கள் மீதும்தான்! மிதவை நீச்சல் வீரர். குழந்தைகள்மீது, அதிலும் கடைக்குட்டியான என்மீது, அளவற்ற பிரியம் காட்டியவர். எல்லாவற்றுக்கும் மேல் அபாரமான கதைசொல்லி.

இன்னதென்று தெரிவதற்கு முன்பே நேர்ந்துவிட்ட அந்த இழப்பின் கனம் இப்போது புரிந்திருக்குமே. என்னுடைய பெரும்பாலான கதைகளின் இடம்பெறும் அப்பா, என் பால்ய நாட்களின் கதாநாயகனாக நிஜமாக வாழ்ந்து மறைந்தவர் அல்ல – நிஜ அப்பாவுக்கும், திடீரென்று பறிகொடுத்த என் தீன மனம் புனைந்துகொண்ட, எழுதிக் காட்டிய பிம்பத்துக்குமான இடைவெளியில் திகழ்கிறவர்.

நான் வாலிபனாகும்வரை அவர் உயிரோடிருந்திருந்தால் அதே மயக்கம் தொடர்ந்திருக்குமா என்று சொல்லத் தெரியவில்லை – என்று ஏதோ ஒரு கதையில் எழுதிவைத்திருக்கிறேன் என்று நினைவு.

மற்றபடி, மரபிலக்கியத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்த தகப்பனாருக்கு மகனாகப் பிறந்ததுகூட, நவீன எழுத்துலகில் நான் புகுந்ததற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். தகப்பனைத் தாண்டிச் செல்ல விழையாத மகன் மனம் இருக்குமா என்ன.

வங்கி ஊழியராகப் பணியாற்றியுள்ளீர்கள். கல்வியில் சிறந்த மாணவனா நீங்கள்?

யுவன் சந்திரசேகர்: வங்கிப் பணியில் சேர்வதற்கு, சிறந்த கல்விமானாய் இருப்பது அவசியமில்லை. பள்ளியிறுதி முடித்திருக்க வேண்டும். அவர்கள் நடத்தும் போட்டித்தேர்வு, நேர்முகம், மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் தேற வேண்டும். அவ்வளவுதான்.

கல்வியைப் பொறுத்தவரை, பட்டப்படிப்பில் சேரும்வரை முதல்மாணவனாகவே இருந்து வந்தேன். பதின்வயதின் இறுதிக் கட்டத்தில், படிப்பின்மீது ஆர்வம் குறைந்துவிட்டது. அப்போதைய குடும்பச்சூழ்நிலையும், அதை நான் புரிந்துகொண்ட விதமும், அதன் காரணமாக எனக்குள் நேர்ந்துவிட்ட அகநிலை மாற்றமும்தான் காரணம். இடையில் நேர்ந்துவிட்ட தீவிர இலக்கியப் பரிச்சயமும் புண்ணியம் கட்டிக்கொண்டது. முதல் முயற்சியிலேயே, மத்திய அரசுப் பணியிலும் ஆறு மாதம் கழித்து வங்கிப் பணியிலும் சேர முடிந்ததற்கு, கல்விசார்ந்த அஸ்திவாரம் பலமாய் இருந்ததும் காரணமாய் இருக்கலாம். மற்றைய காரணம், சந்தேகமேயில்லை, என் நல்லூழ்தான்!

கல்லூரியில் பாடகராக இருந்துள்ளீர்கள். இயல்பாகக் கவிஞரின் மனம் கொண்டவர் நீங்கள். அழகன் என்பதில் சந்தேகம் இல்லை. கல்லூரி வாழ்க்கை சுவாரசியமாக அமைந்ததா?

யுவன் சந்திரசேகர்: மூன்று அவதானங்களும், ஒரு கேள்வியும் கொண்ட தொகுதி இது! ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

  1. ஆமாம், கல்லூரி மேடையிலும், குளியலறையிலும், நண்பர்களுடனான கூடுகைகளிலும் – குறிப்பாக ஆனந்தமாகக் குடிக்க வாய்க்கும்போது – மிகச் சிறப்பாகப் பாடிவந்தேன். அந்த அளவில் மட்டும்தான். துவட்டி முடித்தவுடன், அல்லது கிறக்கம் கலைந்தவுடன், பாடும் தைரியம் போய்விடும். சமீப காலங்களில் குளிக்க மட்டும்தான் வாய்க்கிறது!செவ்வியல் இசையின்மீது காதல் தொற்றியபிறகு, பாடுவதில் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
  2. அப்படி நான் நினைக்கவில்லை. பாரதியார், ’கவிஞர்கள், கவிதை எழுதுகிறவர்கள்’ என்று இரண்டாகப் பிரிக்கிறார். நான் இரண்டாம் வகையைச் சேர்ந்தவன். ‘பரவாயில்லையே; நன்றாக வந்திருக்கிறதே!’ நானே என்று வியந்துகொள்ளும் விதமான கவிதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், நீண்டகாலக் கவிதைப் பரிச்சயம் என் எழுத்துமொழியை இலகுவாக்கிக் கொடுத்தது; புனைகதை எழுத வந்தபோது மிகவும் உதவிகரமாய் இருந்தது என்பதில் ஐயமில்லை.
  3. இது என்மீதான உங்கள் அபிமானத்தைக் காட்டுகிறது. எனக்குச் சொல்வதற்கு ஏதும் இல்லை; உடன்படுவதற்கும் ஏதுமில்லை. மற்றபடி, அது ஒரு உயிரியல் விளைவு; என் பங்கு என்று கோருவதற்கும் ஏதுமில்லை.
  4. ஆமாம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன். அதிகபட்ச சுதந்திரம் நிலவிய சூழல். கல்லூரிவாழ்க்கையை எல்லாவிதத்திலும் சுவாரசியமாக ஆக்கிக்கொண்டேன் – என்னுடைய பால்யம் எனக்குள் கொட்டிக்கவிழ்த்திருந்த தனிமைக்கு இடையூறு இல்லாதவண்ணம்.

நீங்கள் உங்களை ஒரு படைப்பாளியாக உணர்ந்துகொண்ட தருணம் எது?

யுவன் சந்திரசேகர்: பிறந்த நாள், வேலையில் சேர்ந்த நாள், திருமண நாள், பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ருதுவான நாள் என்கிற மாதிரி இதற்கெல்லாம் ஒரு மாதத்தையும் தேதியையும் குறிப்பிட்டுச் சொல்வதே கடினம்; இதில் ‘தருணம்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்ன! அநாவசியமாக எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்!

ஆர். சந்திரசேகரன் எவ்வாறு யுவன் ஆனார்?

யுவன் சந்திரசேகர்: பெயர்களைப் பற்றிய கேள்வி மட்டுமே என்று எனக்கு வாகாக எடுத்துக்கொள்கிறேன்.

பிரத்தியேகமான மெனக்கெடல் ஏதுமில்லை. பல் உதிர்ந்து முளைத்த மாதிரி, மீசையும் தாடியும் அரும்பிய மாதிரி, இப்போது பற்களும் முடியும் சீராக உதிர்ந்துவருவது மாதிரி, பிரக்ஞைக்கு உள்ளேயும் வெளியேயுமாகத் தன்னியல்பாக நடந்த சமாசாரம் அது. குறிப்பாகச் சொல்வதென்றால், முதல் படைப்பை எழுதி முடித்த மாத்திரத்தில், மேற்சொன்ன இரண்டாவது நபர் வெளிப்பட்டிருக்கலாம்.

ஆரம்பத்தில் விதவிதமான புனைபெயர்களில் எழுதிக்கொண்டிருந்தேன். ’யுவன்’ என்ற பெயரை எந்தப் படைப்பையொட்டிப் புனைந்துகொண்டேன் என்று நினைவில்லை. சொந்தப் பெயரில் எழுதுவதில்லை என்று உறுதியாய் இருந்திருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது, தவிர, ரத்தமும் சதையுமாக எதிரிலிருக்கும் ஆளிடமிருந்து எழுதுகிற ஆளைக் கொஞ்சம் தள்ளியே வைப்பதற்கும் புனைபெயர் உதவுகிறதல்லவா!

மற்றபடி, ‘சந்திரசேகரன்’ என்பதே புனையப்பட்ட பெயர்தானே என்று என் மூத்த நண்பர் ஒருவர் சொல்வார்.

தேவதச்சனைச் சந்திப்பதற்கு முன்னர் உங்கள் ஆளுமை உருவாக்கத்தில் பங்களித்தவர்கள் என யாரைச் சொல்லலாம்?

யுவன் சந்திரசேகர்: என் தகப்பனார், அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர்கள், அதிலும் திரு.சுதானந்தாவின் பங்கு மிகப் பெரியது, சுந்தர் காளி, ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற இளைய நண்பர்கள்… பிரம்மராஜனுடனான நட்பார்ந்த அறிமுகம்… அவர் வழியாக ராஜமார்த்தாண்டன், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்களின் நட்பு. அப்புறம், வந்தியத்தேவன், பாபு, ஜே ஜே, மெர்சோ, பிச்சோரின், ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்…

ஆனால், இவர்கள் அத்தனைபேரும் செய்ய முடியாத வேலையைச் செய்தவர் தேவதச்சன். எனது வாசிப்பு, எழுத்து, தனிப்பட்ட வாழ்வில் என் அணுகுமுறை என்று எல்லாவற்றையும் ஒருங்கமைத்தவர். அவரைச் சந்திப்பதற்கு நாலு வருடங்கள் முன்பே சுந்தர ராமசாமியிடம் சென்று சேர்ந்திருந்தேன். நான் எழுதக்கூடியவன் என்ற நம்பிக்கையை விதைத்தவரே சுராதான்.

இலக்கியவாதிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு உங்கள் வாசிப்பு அனுபவம் குறித்துக் கூறுங்கள்…

யுவன் சந்திரசேகர்: அப்போதும் இப்போதும் ஒரேவிதமான அனுபவம்தான். இலக்கில்லாமல் வாசிப்பேன். இயன்றதையும், உவப்பானதையும் மட்டுமே வாசிப்பேன். ஒரு துறை அல்லது ஒரு போக்கு சார்ந்து குவிந்த வாசிப்பு என்றுமே எனக்கு இயன்றதில்லை. ஆனால், இந்தத் தறிகெட்ட வாசிப்பிலும், அறிதலிலும் ஒருவித முறைமையை உருவாக்கியவர் தேவதச்சன். அவரும், ஆனந்தும் அறிமுகப்படுத்திய நூல்கள், கருதுகோள்கள் ஆகியவையும் இருவருடனும் இருந்து பாடம்போலக் கேட்ட வேளைகளும் நான் நிற்பதற்கு ஸ்திரமான தரையை உருவாக்கிக் கொடுத்தன.

தேவதச்சனின் அறிமுகம் எவ்வாறு அமைந்தது? அவருடனான அனுபவத்தைச் சொல்லுங்கள்?

யுவன் சந்திரசேகர்: கோவில்பட்டியில் சென்று குடியமர்ந்ததால் அவருடைய அணுக்கம் கிடைத்தது. நடைமுறை வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் எனக்குக் கிடைத்த திறப்புகள் பலவும் அவர் வழங்கியவைதாம். குறிப்பாக, மெட்டாஃபிஸிக்ஸ் என்ற தளமே அவர் இல்லாவிட்டால் எனக்கு அறிமுகமாகியிருக்காது. என்னுடைய மன அமைப்பைப் புரிந்துகொண்டு, எனக்கேற்ற விதமாகப் பாடம் நடத்திய நல்லாசிரியர் என்று அவரைச் சொல்வேன்.

ஆசிரியர் கண்டிக்கும் வேளைகளில் கடும் கோபமும், புதிதாக ஒரு சங்கதியைப் புரியவைத்துவிடும் வேளையில் அளப்பரிய அன்பும் விசுவாசமும் மாணவர்கள் மனத்தில் பொங்குவது இயல்புதானே!

சுந்தர ராமசாமியுடனான உரையாடல் உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?

யுவன் சந்திரசேகர்: அவரை நினைத்த மாத்திரத்தில் எனக்குள் உதிப்பது, அவருடைய நிதானமும் சமநிலையும். என்னிடம் அவர் காட்டிய வாஞ்சை. மிகச் சிறந்த உரையாடல்காரர். தான் பேசும் அளவைவிட அதிகமாக கேட்கவும் கூர்ந்து கவனிக்கவும் செய்வார். என் போன்ற அடுத்த தலைமுறைச் சிறுவனை சமபாவத்துடன் நடத்துவார். நான் உளறும் வேளைகளிலும் அதே வாஞ்சையுடன் கேட்டுக்கொள்வார். இவற்றோடு, நவீனத்துவ எழுத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை, அதற்குக் கொஞ்சமும் குறைவின்றி சகமனிதர்கள்மீது அவருக்கிருந்த நம்பிக்கை, மொழியின்மீதும் இலக்கிய வடிவங்கள்மீதும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த கவனம, இடையில் என்னுடைய உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டிருந்த நாட்களில் அவர் கொண்ட பதற்றம், அக்கறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்…

என் தகப்பனாருக்குப் பிறகு அவ்வளவு பரிவும் கரிசனமும் என்னிடம் காட்டிய பெரும் மனம் அது. சிறுமையே இல்லாத மனம். இன்றுவரையிலும், இலக்கிய உலகத்துடனும், நண்பர்களுடனும் நான் பேணி வரும் உறவுக்கு அடித்தளமாக இருப்பது நிச்சயம் சுந்தர ராமசாமியின் ஆளுமை என்மீது செலுத்திய மறைமுக செல்வாக்குதான்.

உங்கள் இலக்கிய வாழ்க்கை நவீன கவிதையில் இருந்து தொடங்கிய காரணம் என்ன?

யுவன் சந்திரசேகர்: அப்பா செய்யுள் காலத்து மனிதர். உடன் பிறந்தவர்கள் ஆசையாய் சினிமாப் பாட்டுக்களில் அமிழ்ந்தவர்கள். எனவே, தாளமும் ஓசைநயமும் என் ஆழ்மனத்தில் இயல்பாகவே படிந்திருக்க வேண்டும். பிரபலமான சினிமா மெட்டுகளில் பக்திப் பாடல்கள் எழுதும் ஆர்வம் என் பள்ளிப் பருவத்திலேயே இருந்தது. நல்லவேளை, நிறைய எழுதிப் பார்த்ததால், அந்த வயதிலேயே அந்த வகையாக இயற்றுவதில் சலிப்பும் ஏற்பட்டுவிட்டது.

நவீன இலக்கியப் பரிச்சயம் உருவாகும்போது நவீன கவிதைப் பரிச்சயமும் உருவாகத்தானே செய்யும். அந்த வடிவத்தில் இருந்த வெளிப்படையான தாளமின்மையும், அதன் சாய்வுமொழியும், உட்பிரதியைக் கண்டுபிடிக்க உந்துவதும், சிடுக்கான விஷயங்களையும் சிக்கனமான மொழியில் பேசுவதும் என என்னை அநேக விஷயங்கள் ஈர்த்தன. பாடல்களும் செய்யுள்களும் உரத்து ஒலிக்கும்போது, நவீனகவிதையின் இயல்பிலேயே இருந்த கிசுகிசுப்பு என்னை மிகவும் வசீகரித்தது.

எழுதி எழுதி, பிரசுரிக்காமல் வைத்திருந்த ஒரு கொத்துக் கவிதைகளை வாசித்துவிட்டு, தேவதச்சனும் சமயவேலும் கூறிய உற்சாக மொழிகள் என்னைப் பரபரவென்று மேற்கொண்டு இழுத்துச் சென்றன.

கவிதைகளில் ஒவ்வொரு சொல்லுமே குறியீடுகளாகவும் உவமைகளாகவும் வாசித்துப் பழக்கமான சூழலில் அப்படியான பொருள் ஏற்றிக் கவிதைகள் வாசிப்பதை கவிதைகளில் தேவையற்ற எடைகள் ஏற்றுவது என்பதாக உங்கள் பார்வை உள்ளது. இப்படியான வாசிப்பு எல்லா வகைக் கவிதைகளுக்கும் பொருந்துமா? பறவை என்பதை சுதந்திரம் எனப் பொருள் கொண்டால் அது கூடுதலாக அர்த்தப்படாதா? அது வாசிப்புக்கு நல்லதுதானே?

யுவன் சந்திரசேகர்: உங்களுடைய முதல் வரி குறிப்பிடும் ’பழக்க’த்தை முறிப்பதுதான் மிகப் பெரிய சவால். கவிஞன் உத்தேசிக்காததையெல்லாம், குறிப்பிட்ட கவிதையில் இல்லாதவற்றையெல்லாம், வாசகர் தான் ஆசைப்படுவதையெல்லாம், வலிந்து வரவழைத்துப் பார்க்கும் வியாதியையும் ஏற்படுத்திவிடுகிறது அல்லவா, இந்தப் பழக்கம்.

‘கவிதையில் பொருள் ஏற்றி’ வாசிப்பது அல்ல; கவிதையில் மெய்யாகவே பொதிந்திருக்கும் பொருள் என்ன என்று தேடி அறிவது இன்னும் பெரிய சவால்.

உண்மையில், கவிதைக்கு சுதந்திரமான இருப்பு உள்ளது. கவிஞரின் வரையறைகளையும் வாசிப்பவரின் போதாமைகளையும், நாளதுவரை இருவரும் சேகரித்து வைத்திருக்கும் ‘அறிவை’யுமே தாண்டிய இருப்பு. இதன் காரணமாகவே தான் எழுதப்பட்ட காலகட்டத்துக்கும், மொழிச் சூழலுக்கும், பண்பாட்டு விளிம்புகளுக்கும் அப்பால் அது பொருள் தருகிறது. தனிப்பட்ட வாசகருக்கே, இன்று பொருள்படாத கவிதை, இன்னொரு நாள் பொருள்படுகிறது. வாசகர் தனக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பவற்றை அடிப்படையாக வைத்து வாசிக்க முயலும்போது, புதிய ஒரு பாணியை, சொல்முறையை, பார்வைக் கோணத்தை முன்வைக்கும் ’புதிய’ கவிதையை எதிர்கொள்வது கடினமாகக் கூடும்.

முழுக்கத் திறந்த கவிதையானாலும் சரி, பிடிவாதமாக மௌனத்தைக் கடைப்பிடிக்கும் கவிதையானாலும் சரி, நான் மேற்கொள்ள முயலும் வாசிப்பு முறை இது. பிறருக்கும் ஒரு ஆலோசனையாகச் சொல்கிறேன். பரிசீலித்துப் பார்த்து, ஒத்துவரவில்லையென்றால் விட்டுவிடும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டே! உள்ளீடேயின்றிப் பட்டவர்த்தனமாகத் திறந்த, அல்லது கவிதையை நிகழ்த்துவதற்கு அப்பாலும் அக்கறைகள் கொண்ட கவிதைகளுக்கு இந்த வாசிப்புமுறை பெருமளவு பயன்படுவதற்கில்லைதான். அந்த வகைக் கவிதைகள்மீது எனக்கு ஈர்ப்பும் குறைவு.

மற்றபடி, அவரவர் வாசிப்பு முறை அவரவருக்கு.

தனிப்பட்ட முறையில் நான் உங்களை அணுக்கமாக உணர்ந்தது ‘பெயரற்ற யாத்ரீகன்’ தொகுப்பின் வழியாகத்தான். ஜென் கவிதைகளை நீங்கள் சென்று அடைந்தது அதன் கவித்துவ வெளிப்பாட்டினால் எனத் தொடக்கத்தில் புரிந்து வைத்திருந்தேன். இப்போது யோசிக்கும்போது நீங்கள் ஒரு ஜென் துறவியின் மனம் கொண்டவர் என்றும் தோன்றுகிறது. நான் வாசித்து அறிந்த ஜென் துறவிகளின் விளையாட்டுத் தனங்களில் வெளிப்படும் தரிசனங்களே உங்கள் புனைவுகளின் சாரம் என எளிமையாக வரையறுத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஜென் தத்துவங்கள், கவிதைகள் குறித்து உங்கள் அவதானிப்பு என்ன?

யுவன் சந்திரசேகர்: மற்ற பல விஷயங்கள் மாதிரியே, ஜென் என்ற சொல்லும், அதன் கலையம்சமும் தெரிய வந்தது தேவதச்சன் மூலமாகவே. என் இயல்பான மனநிலைக்கு அது பொருத்தமான புலமாய் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது. கோபமோ, துக்கமோ, சந்தோஷமோ அதைத் தடையின்றி முழுசாக அனுபவித்துவிட்டு உடனடியாக விலகிவிடுவது என் சுபாவமாக இருக்கிறது என்று நண்பர்களும் உறவினர்களும் சொல்வது வழக்கம். இதன் பாதக விளைவுகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு என்னோடு வாழ்க்கை நடத்தும் என் மனைவியும் குழந்தைகளும் உங்கள் அளவுக்கு இந்த மனோபாவத்தை சிலாகிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

எத்தனையோ தத்துவங்கள், மதாசாரங்கள் மனித சமூகத்தின்மீது நிகழ்ந்து சென்றிருக்கின்றன. படைப்பு மனநிலைக்கு மிகவும் அணுக்கமானது ஜென் மார்க்கமே என்பது என் எண்ணம். கூரிய அவதானம், உரக்காத குரல், உணர்வு வறட்சிபோலத் தென்படும் விட்டேற்றியான தொனி, சார்பின்மை, சக உயிர்களோடான இணக்கம், மனிதன் என்ற பாலூட்டியும் இயற்கையின் ஓர் அங்கம் மட்டுமே என்ற அறிதல், புகாரின்மை, சமூகத்தின் எந்தவொரு அம்சத்தோடும் ஒட்டுதலோ விலகலோ கொள்ளாத பார்வையாளனின் நிலைப்பாடு என, படைப்புச் செயல்பாட்டுக்கு உறுதுணையாய் இருக்கக்கூடிய பல அம்சங்களை ஜென் மார்க்கம் வைத்திருக்கிறது.

உங்களுடைய கதைகள் மாற்று மெய்மைக்கான கோணங்களை உருவாக்குகிறது. குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் ராம.பழனியப்பன் பாத்திரத்தைப்போல தருக்கத்தை மீறிய செயல்களின் முன் திகைப்பு, கேள்விகளுடனே வாசகனும் இருக்கிறான். இப்படியான புனைவுகளை எழுதும் மனநிலை எப்படி உருவானது?

யுவன் சந்திரசேகர்: மாற்று மெய்மை என்பதை மிகவும் அந்நியமான, தொலைவில் உள்ள, புனைவான சமாசாரம் என்கிற மாதிரிப் புரிந்துகொள்கிறவர்கள்தாம் அதிகம். அது ‘உருவாக்கப்படுவது’ அல்ல; ஏற்கெனவே ’இருப்பது’!

வெகு காலத்துக்கு முன்னால் ஒரு அறிவியல் நூலில் வாசித்தேன்: பூவா தலையா என்று ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, நீங்கள் ’பூ’ என்கிறீர்கள். நான் ’தலை’ கேட்கிறேன். பூ விழுகிறது. கவிழ்ந்து கிடக்கும் நாணயத்தின் அடியில் தலை விழுந்த முழுப் பிரபஞ்சம் இருக்கிறது. ஆக, பூ விழுந்த நடைமுறைப் பிரபஞ்சத்துக்கு நேர் கீழே, தலை விழுந்த மாற்றுப் பிரபஞ்சம் இருக்கிறது. அதாவது, அது ‘இப்போதே, இங்கேயே’ இருக்கிறது. முதலாவது நிஜ அனுபவத்திலும்; மற்றது யூக அனுபவத்திலும்.

ஆக, மாற்று மெய்ம்மை என்பது இயல்பான அனுபவமேதான். பார்க்கப்போனால், புனைவு என்பதே நிஜ அனுபவம் அல்லவே. ஒவ்வொரு புனைவுமே மாற்று மெய்ம்மைதான்! யதார்த்தவாதப் புனைகதைகளுமே மாற்று மெய்ம்மைகள்தாம்! அவை செய்திக் குறிப்புகளா என்ன…

Richard Bachன் Illusions என்ற நூலில், சுவரில் நுழைந்து மறுபுறம் செல்வான் ஒருவன். பௌதிகத் தர்க்கத்தில் சாத்தியமல்லாததாகத் தோன்றுகிறவற்றை மானசீகத்தில் நிகழ்த்திப் பார்க்க முடியும். அந்தப் புலத்தின் தர்க்கத்தில் அவை இயல்புநிகழ்வுகளாகவே இருக்கும். அந்த வேளையில் இப்போதைய கால-வெளி அனுபவம் கேள்விக்குரியதாக இருக்குமல்லவா!

ஆக, நான் புனைகதைகள் எழுதுகிறேன். நடைமுறைத் தர்க்கம் என்று நீங்கள் நம்பும் சட்டகத்தில் அவற்றைப் பொருத்திப் பார்த்து, திகைக்கவும் செய்கிறீர்கள்.

குழந்தைகளின் உலகம் மாற்று மெய்ம்மையின் அலகுகளால் ஆனது. மொழியின் சாதாரணத் தர்க்கங்கள் செல்லுபடியாகாது அங்கே. அந்த உலகத்தில் ஆச்சரியங்களுக்கும் விந்தைகளுக்கும் குறைவே இல்லை. ஒருவிதத்தில், கலை முயற்சிகளின் பின்புலமாக இருப்பதும் தீராக் குழந்தைமைதான்.

தவிர, பல சந்தர்ப்பங்களில், தர்க்கபூர்வமான செயல்களே திகைப்பை ஏற்படுத்தத்தானே செய்கின்றன. குறிப்பாக, சக மனிதர்கள் நாம் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் நடந்துகொள்ளும்போது!

தமிழில் நவீன இலக்கியம் உச்சமாக இருந்த ஒரு காலக்கட்டத்தில், யதார்த்த இலக்கியங்கள் எழுதப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் சித்தன், மாயம், மாற்று மெய்மை என தாங்கள் எழுதத் தொடங்கியபோது எவ்வகையான எதிர்வினைகள் எழுந்தன? அக்கதைகளை வாசித்து ஏற்கும் வாசகச் சூழல் அன்று இருந்ததா?

யுவன் சந்திரசேகர்: இப்படியெல்லாம் தோன்றுவதே, வெகுகாலம் கழித்து திரும்பிப் பார்த்து, தொகுத்துக்கொள்ளும்போதுதான். திட்டமிட்டு, இலக்கைக் குறிவைத்து எழுதப்பட்டவையாய்த் தென்படும் படைப்புகள் முதல் வாசிப்புக்கே போதாமையுணர்வைக் கொடுக்கத்தானே செய்கின்றன.

உங்களுக்கு ஒன்று தோன்றுகிறது. அதை எழுதிப் பார்க்கும் ஆவலும், அகசுதந்திரமும் இருக்கிறது. எழுதிப் பார்க்கிறீர்கள். அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை என்னுடைய முப்பதாவது நாவலையும் ’எழுதிப் பார்க்கத்தான்’ செய்வேன். எழுத்து இழுத்துப்போகும் திசையில் மறுப்பின்றி ஆட்பட்டு உடன்செல்வது தரும் இன்பம் அலாதியானது.

என் முதல் நாவல் ‘குள்ளச் சித்தன் சரித்திரம்’ வெளியான காலத்தில் பெரும் பரபரப்பு ஏதும் ஏற்பட்டதாக நினைவில்லை. ஏற்புணர்வோ, எதிர்ப்புணர்வோ கவனத்தை ஈர்க்குமளவு இருக்கவில்லை. தமிழில் வெளியாகியிருக்கும் இன்னொரு நாவல் என்ற அளவில் எல்லாரும் கடந்து சென்ற மாதிரித்தான் உணர்ந்தேன். ஆனால், சிறுகச் சிறுக அதன்மீது விழுந்த வாசக கவனமும், இன்றும்கூட யாராவது அதைப் பற்றிக் குறிப்பிடுவதும் விசித்திரமான நிறைவைத் தருகின்றன.

வாசிக்கும்போது உடனிகழ்வாக ஏற்படும் நினைவுகள், அறிதல்கள் (Associated Memory) ஒரு புனைவை கூடுதலாக அறிந்துகொள்ள தடையாக இருக்கும் என குறிப்பிடுகிறீர்கள். அப்படியான நிகழ்வு ஏற்படாத வாசிப்பு சாத்தியம்தானா?

யுவன் சந்திரசேகர்: சாத்தியமில்லைதான். ஆனால், அவற்றின் வழியே மட்டுமே வாசிப்பது சரியல்ல என்கிறேன். ஒருவேளை, குறிப்பிட்ட புனைவின் ஆதாரமான ஏதோவொன்றைத் தீண்டுவதற்கு அது தடையாகக்கூட இருந்துவிடலாமே. தன்னையே, தனக்குள் சேகரமானவற்றையே, திரும்பவும் வாசிப்பதற்கு புனைவைத்தேடி ஒருவர் ஏன் போகவேண்டும்! நீங்கள் குறிப்பிடும் நினைவுகளும் அறிதல்களும் தன்னிச்சையாக ஊறத்தான் செய்யும். அவை தனக்குத்தான் ஊறுகின்றன; புனைவின் உத்தேசமும் அதுவேதானா என்று ஒரு கணம் பரிசீலித்தால் போதும். அதுவேதான் என்றால் யார் ஆட்சேபிக்க முடியும்!

‘திறந்த மனத்துடன் வாசிப்பது’ என்பது யாரும் சொல்லக்கூடிய ஆலோசனைதான். ஒரு கருத்துருவமாக யாருக்கும் ஏற்புடையதுதான். ஆனால், ஒரு குறிப்பிட்ட படைப்பை வாசிக்கும்போது கடைப்பிடிக்கச் சொன்னால், சிடுக்கான விஷயமாகிவிடுகிறது!

அப்புறம், அசோசியேட்டட் மெமரி என்பது வாசிக்கும்போது மட்டும் செயல்படும் நடைமுறை அல்ல… மனித மனத்தில் சதா நிகழ்ந்துகொண்டே இருக்கும் சமாசாரம்தான். நடப்புலகில் நாம் கெட்டிக்காரத்தனமான தேர்வுகளை மேற்கொள்வதில்லையா என்ன!

புனைவுகளைத் தன்னிலையில் இருந்து எழுதும்போது அதில் இயல்பாக நம்பகத்தன்மை கூடிவிடுகின்றது. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. உங்கள் படைப்புளை அதிகமும் தன்னிலையில் இருந்து எழுதுகிறீர்கள். ஆகவே நீங்கள் காட்டும் மாயக் காட்சிகள்கூட வாசகனால் மறுக்க முடியாதென ஆகிவிடுகின்றன. அப்படி வாசகனுக்கு நெருக்கமாகக் காட்டத்தான் தன்னிலையைத் தேர்வு செய்கிறீர்களா?


யுவன் சந்திரசேகர்: உரைநடைக்கும் கவிதைக்குமிடையே உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம், கவிதையைப் படர்க்கையில் வாசித்தாலும், தன்னைப் பற்றியே வாசிப்பதாக வாசக மனம் உணரும். புனைகதையைப் பொறுத்தவரை, என்னதான் தன்மை ஒருமையில் எழுதப்பட்டாலும், தத்ரூபமாக விவரிக்கப்பட்டாலும், ‘நான் வாசிப்பது ஒரு கதையை; ஏற்கெனவே யாருக்கோ நடந்துமுடிந்த ஒன்றை.’ என்ற போதம் வாசகரிடம் இருந்தே தீரும். ஆக, தன்மை ஒருமையில் விவரிப்பதால் மட்டுமே நம்பகத்தன்மை கூடிவிடாது. வேறு சேர்மானங்களும் அவசியம்.

வாசகரை நெருக்கமாக உணரவைப்பதற்கு, எழுத்தில் வெளிப்படும் தொனியே ஆதாரமானது. பல படைப்புகளில், எழுத்தாளர் கண்டறிந்தவராகவும், வாசகருக்கு போதனைபோல எடுத்துரைப்பவராகவும் இருப்பது அனுபவநெருக்கத்தைக் குன்றவைப்பதையும் காணலாம். பீடத்தில் இருக்கிறவரும், தரையில் நடக்கிறவரும் ஒன்றுணர்வை அடைவது எப்படி!

அப்புறம், தகவல் பிழையோ தர்க்கப் பிழையோ இல்லாமல் இருப்பது, கதை உருவாகக் காரணமாக இருந்த கருத்தை கருத்தாகவே முன்வைக்காதிருப்பது, புனைவுக்குப் பொருத்தமற்ற கரட்டு வாக்கியங்களும் பத்திகளும் இடம்பெறாதிருப்பது, நிஜ வாழ்வின் அழுத்தமான சாயல்கொண்ட இடங்கள் பாத்திரங்கள் தருணங்கள் இடம்பெறுவது, புனைகதைக்குள் தம்மைப் பொருத்திப்பார்த்துக்கொள்ள வாசகருக்கு வாய்க்கும் இடைவெளிகள் என்று எவ்வளவோ அம்சங்கள் மேற்சொன்ன நெருக்கம் உருவாகக் காரணமாகின்றன.

மற்றபடி, கண்முன்னால் நிகழும் காட்சிகளைவிடவும் அதிகமான மாயத்தன்மை கொண்ட வேறொன்று இல்லை என்றே சொல்லலாம்.

உங்கள் பதில் புரிகிறது. ஆனாலும் இதைக் கேட்டே ஆக வேண்டும். மாய யதார்த்த வகை என உங்கள் புனைவுகளை வரையறை செய்வோர் உண்டு. அதில் உள்ள மாயங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்ததுண்டா? அப்படியான அனுபவங்கள் உங்களின் புனைவுலகுக்கு ஆதாரமாக உள்ளதா?

யுவன் சந்திரசேகர்: முன்பே பலமுறை சொன்னதுதான். இலக்கியத்தின் ஆதாரக் கருதுகோள், உண்மைகளையோ உண்மையாக நிகழ்ந்தவற்றையோ பதிவு செய்வது அல்ல. அதற்கு செய்தித்தாள் போதுமே. இலக்கியத்தின் அந்தரங்கமான விழைவு, சாத்தியங்களை எழுதிப் பார்ப்பது. மானசீகத்தில் மட்டுமே நிகழ வாய்ப்புள்ள சம்பவங்களுக்கு பருவுலகின் எல்லைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தமும் கிடையாது. ஒரு விஷயம் மாயம் என்று கருதப்படுகிறது என்றால், பொது நம்பிக்கையின்பாற்பட்ட கால-வெளி வரையறைகளை அது தாண்டிச் சென்றிருக்கிறது என்றுதானே பொருள்.

தவிர, குறளிகளுக்கு ஏதாவது தர்க்கப் பின்புலம் இருக்க முடியுமா என்ன! எழுத்தாளனின் குறளிகள் வசீகரமானவை; நடைமுறை வாழ்வின் விசித்திரம் அல்லது நகைமுரண் எதையேனும் சுட்டிக் காட்டும் வல்லமையும் கொண்டவை. தான் நிஜமென்று நம்பிவரும் ஒரு புலத்தை சந்தேகத்துக்குரியதாக வாசகரை உணரச் செய்பவை.

எனக்கு என்றில்லை, எல்லாருக்குமே ஒரேயொரு மாய அனுபவமாவது நிகழ்ந்திராமல் இருக்காது. அதாவது, நிரந்தரப்பட்டிருக்கிற தர்க்கத்துக்குள் பிடிபடாத ஒரேயொரு அனுபவமாவது! அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்குத்தான் அசாத்தியமான தீரம் தேவைப்படும்!

குறுங்கதைகள் இன்று அதிகமாக எழுதப்படுகின்றன. ஆனால், நீங்கள் குறுங்கதை என்ற முயற்சி இல்லாமலே அவ்வகைக் கதைகளை மணற்கேணியில் எழுதியிருப்பதை வாசிக்க முடிகிறது. உங்கள் பார்வையில் குறுங்கதைகளை ஓர் இலக்கிய வடிவமாக முன்வைக்க முடியுமா? அல்லது அவை வாசிக்க சோம்பல் கொள்வோருக்கான ஒரு சமரசமா?


யுவன் சந்திரசேகர்: இன்று அதிகமாக எழுதப்படுவதாலேயே இப்போதுதான் உருவான வடிவம் என்று குறுங்கதையைக் கருத வேண்டியதில்லை. பாரதி, புதுமைப்பித்தன் போன்ற ஆரம்பகால முன்னோடிகளும் சோதித்துப் பார்த்த வடிவம்தான் அது. தனிப்பாடல் திரட்டின் பல பாக்களில் அற்புதமான குறுங்கதைகள் பொதிந்திருக்கின்றன – காளமேகமும், அவ்வையும் குறிப்பான எடுத்துக்காட்டுகள்…

காலங்காலமாக இலக்கிய வடிவங்களில் உருவ மாற்றங்கள் நேர்ந்தபடிதான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட உருவத்தைத் திகட்டத் திகட்டப் பயன்படுத்தியபிறகு, வாசகர் மனத்திலும், எழுதுகிற மனத்திலும் ஒருவித சலிப்பு, மானசீகமான ஒரு கருத்தொற்றுமை உருவாவதன் விளைவாகக்கூட இம் மாற்றங்கள் இருக்கலாம். விருத்தப் பாக்களும் வெண்பாக்களும் மண்டியிருந்த மொழிச்சூழலில் நவீன வடிவமான புதுக்கவிதை வந்து சேர்ந்தது; காவியங்கள் இயற்றப்பட்ட மரபில், நாவல்கள் வந்து சேர்ந்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ‘கால வகையினான்’ ஏற்படுகிறவை இவை!

‘மணற்கேணி’யைப் பொறுத்தவரை, அது நூலாக வெளிவரும்போதே, அவை குறுங்கதைகள் என்றே முன்னிறுத்தினேன்.

இன்னதுதான் இலக்கிய வடிவம், இன்னது இலக்கிய வடிவம் இல்லை என்பதெல்லாம் மேலோட்டமான வரையறைகள். வாசகர் பொருட்படுத்தவேண்டியது ஒரு படைப்பு ‘இலக்கிய அனுபவம்’ தருகிறதா என்பதைத்தான்.

கவிதையின் வசீகரம் சற்றே மந்தமடைந்திருப்பதாய்த் தென்படும் காலகட்டத்தில், கவிதைக்கும் சிறுகதைக்கும் இடைப்பட்ட புதிய உருவமாகக் குறுங்கதைகள் வந்து சேர்வதற்கு ஒரு தர்க்க நியாயம் உண்டு.

புதிய உருவங்கள் வந்துசேரும்போது, வாசிப்பின்பம் கூடுதலாகக் கிடைக்கவும் அதன் காரணமாக வாசிப்பு இன்னமும் அதிகரிக்கவும் கூடுமே. அப்புறம், வாசிக்க சோம்பல் கொள்வோர் வாசிக்கவே மாட்டார்கள் அல்லவா!

புனைவுகளில் வரலாறோ அறிவியலோ அரசியலோ எந்த அளவு பங்கு வகிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அல்லது அவை எதுவுமே புனைவுக்கு தடைதான் என நினைக்கிறீர்களா? உங்கள் புனைவுகளில் இவற்றின் பங்களிப்பு மிகுந்த கவனத்துடன் கையாளப்படுவதால் கேட்கிறேன்.


யுவன் சந்திரசேகர்: புனைவுகளில் இன்னவெல்லாம் இடம்பெறலாம், இன்னவெல்லாம் கூடவே கூடாது என்றெல்லாம் வரையறுக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு? உங்கள் பட்டியலில் தத்துவத்தையும் மிகையுணர்ச்சியையும் விட்டுவிட்டீர்கள்! எது இடம்பெற்றாலும் அது கலை அனுபவமாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் குறைந்தபட்ச, அல்லது, அதிகபட்ச நிபந்தனை. எழுத்தாளரும் வாசகரும் தமக்குள் வெளிப்படையாக விவாதிக்காமலே அழகியல் கூறுகளை வரையறுத்துக்கொள்வதன் மூலம், கலையனுபவத்தை நிகழ்த்திக்கொள்கிறார்கள்.

இதில் இன்னொரு உள்மடிப்பும் இருக்கிறது – எது கலை அனுபவம்; கலை அனுபவம் என்றால்தான் என்ன என்பதுபோன்ற விசாரங்கள். அவரவர் உணர்ந்து அறிய வேண்டிய சமாசாரம் இது. இலக்கணம் வகுக்கிறேன் என்று யாராவது கிளம்பும்போதுதான் கலவரம் வெடித்துவிடுகிறது!

நான் கவனத்துடன் கையாள்வதாகச் சொல்கிறீர்கள்; எனக்கு மேற்சொன்ன பட்டியல் குறித்தெல்லாம் பிரக்ஞையே இல்லை என்று கொஞ்சப் பேர் சொல்கிறார்கள்!

இலக்கியம் தவிர இசை, தத்துவம், அறிவியல் ஆகியவற்றில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதை அறிவேன். இவற்றில் முன்னிரண்டையும் அறிய உங்கள் புனைவேகூட சான்றாக உள்ளது. அறிவியல் கூறுகளை ஏன் புனைவாக உருவாக்க நீங்கள் முனைந்ததில்லை?

யுவன் சந்திரசேகர்: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எந்தத் துறையிலுமே ஆழங்கால் பட்டவன் அல்ல நான். பொது மனம் அல்லது பாமர மனத்துக்கு எட்டிய அளவில் மட்டுமே இவற்றுடன் என் பரிச்சயம். ஆனால், புனைவெழுத்தில் ஈடுபடுத்துவதற்கு அந்த அளவு அறிதல் மட்டுமே போதுமானது. ஒரு கருத்துருவம் எந்தத் துறை சார்ந்ததாகத்தான் இருக்கட்டுமே – அது புரியும்போதும், புரியாமல் போகும்போதும் இலக்கியத்தில் அதற்கான ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இடைவெளிகளின் வழியாக நகர்வதும் ஒரு விதத்தில் முக்கியமான இலக்கிய செயல்பாடுதானே!

நான் அறிவியல் கற்றவன் அல்ல. எனது அறிதலுக்குள் வசப்பட்டவையாக நான் கருதுபவற்றை மட்டுமே எழுதிப் பார்க்கிறேன்.

புவி வாழ்விலும் சரி, அதற்கு அப்பாற்பட்ட தளங்களிலும் சரி, அறிவியல் கூறு இல்லாத ஒரேயொரு அம்சம்கூட இருப்பதற்கில்லை என்பதுதானே அறிவியலின் நம்பிக்கை?! ஆக, என் படைப்புகளில் தென்படுவதாக நீங்கள் கருதும் மாய அம்சங்களுமே அறிவியலின் பாற்பட்டவைதாம். குறளிகளுமே அறிவியலின் வீச்சுக்குட்பட்டவையே – அவற்றை ஆய்வதற்கு அறிவியல் ஒரு தனித் துறையையே நியமித்திருக்கிறது – உளவியல் என்று பெயரிட்டு!

நீங்கள் எழுத வந்த காலத்தில், நவீன இலக்கியம், பின்நவீன இலக்கியம் என்றெல்லாம் தெளிவான வேறுபாடுகளை எழுத்தாளர்கள் தங்கள் படைப்பில் காட்ட முயன்றார்கள். அதாவது தாங்கள் எந்த அணி எழுத்தாளர் என அடையாளப்படுத்திக் கொள்ளும் முனைப்பு அவர்களிடம் இருந்தது. நீங்கள் அப்படி ஏதும் அணியில் இணைந்தீர்களா?


யுவன் சந்திரசேகர்: அதற்கு முந்தைய காலகட்டத்தில் முற்போக்கு, பிற்போக்கு என்ற எதிர்முனைகள் இருந்தன. அப்புறம் சமூக அக்கறைகொண்டது, கலை அக்கறை கொண்டது என்ற பிரிவுகள். மரபு, நவீனம் என்கிற மாதிரியும், செவ்வியல், நவீனத்துவம் என்பது போன்றும் காலந்தோறும் மாறிவருகிற நிரந்தரப் பிளவுகளும் உண்டு. ரஞ்சக இலக்கியம், தீவிர இலக்கியம் என்ற பாகுபாடு உலகெங்கும் இருக்கிறது.

தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கிற படைப்புகளில் உயிரோட்டம் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. தமிழ்ச் சூழலில் அணி அடையாளம் பிரிப்பதெல்லாம், சிறுவர்கள் அணி பிரிந்து விளையாடுவதற்கு உத்தி பிரிக்கிற மாதிரித்தான்; பெரும்பாலும், தமக்கு உவக்காத எழுத்தாளர்களை எதிர் அணியில் சேர்த்துவிடுவார்கள்!

நான் அடையாளப்படுத்திக்கொள்வதும், இணைவதும் இருக்கட்டும், என்னைப்போன்று எழுதுகிற ஒருத்தனை மனப்பூர்வமாக எந்த அணியாவது ஏற்றுக்கொள்ளுமா என்பதும் குழப்பம்தானே!

இலக்கிய விமர்சகன், படைப்பில் எதை கருத்தில் கொள்ளவேண்டும்? படைப்பாளி விமர்சகனின் கருத்தில் எதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்?
யுவன் சந்திரசேகர்: இலக்கிய விமர்சனம், படைப்பில் என்ன ’இருக்கிறது’ என்பதைப் பார்ப்பதாக இருந்தால் உத்தமம்.

படைப்பாளியைப் பொறுத்தவரை, தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவராக இருந்தால், தமது படைப்பு குறித்து தமக்குள்ளேயே எழும் விமர்சனக் குரலை செவிமடுத்தாலே போதுமானது. அதற்குரிய கால அவகாசத்தை எடுத்துக்கொள்வதும், கறாரான மறுபரிசீலனையில் ஈடுபடுவதும், தாட்சண்யமில்லாமல் திருத்தி எழுத முற்படுவதும் மட்டுமே போதுமானது.

பிறரால் சுட்டிக்காட்டப்படும் தகவல் பிழைகள், தர்க்கப் பிழைகள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவை – அதாவது, படைப்பின் மையத்தை சேதப்படுத்தக்கூடியவையாக அவை இருக்கும் பட்சத்தில்.

இன்றையத் தமிழ் இலக்கியச் சூழலில் மாற்று மெய்மை, புனைவின் கட்டற்ற தன்மை, நேர்கோடற்ற வடிவம் போன்றவற்றால் நீங்கள் எளிதில் அடையாளம் காணப்படுகிறீர்கள். ஒருவேளை இதே பாணியில் தமிழில் எழுந்து வரும் அத்தனை புதிய படைப்பாளிகளும் எழுதத் தொடங்கினால் யுவன் சந்திரசேகர் எதன் வழியாக தனித்து அடையாளம் காணப்படுவார்?

யுவன் சந்திரசேகர்: நிறைய நிறையப் பேர் இதேவிதமாக எழுதத் தொடங்கிவிட்டால், இலக்கியச் சூழலில் பெரும் சலிப்பு மேவி, ஒட்டுமொத்த வாசகத் தரப்பு வேறு பக்கம் நகர்ந்துவிடும் வாய்ப்புண்டே! ஆனால், எத்தனைபேர் முனையும்போதும், அவரவருக்கான தனித்தன்மை என்று ஒன்றும் இருக்கத்தானே செய்யும்? அப்படியொரு தனித்துவம் இல்லாத பட்சத்தில், அந்த எழுத்தாளருக்கான கவனமும் முக்கியத்துவமும் குறைந்துவிடாதா.

ஒரு வாதத்துக்காக, நீங்கள் சொன்னவிதமாக நடந்துவிட்டால், யுவன் சந்திரசேகர் ஒரு அருங்காட்சியக உருப்படியாக மாறியிருப்பாரோ என்னவோ!

உங்கள் படைப்புகள் விமர்சகர்களால் சரியாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?


யுவன் சந்திரசேகர்: இல்லை. ஜெயமோகன், சுகுமாரன் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். சமீபகாலமாக சமூக ஊடகங்களில் ஓரிரு கருத்துகளைப் பார்க்க முடிகிறது .

பொதுவாகவே, படைப்புகள் வாசகர்களால் சரியாக முன்னெடுக்கப்பட்டால் போதாதா! என் படைப்புகளுக்கான வாசக எதிர்வினை தாராளமாகவே கிடைத்திருப்பதாகவே உணர்கிறேன். நிறைவாகவும் உணர்கிறேன்!

மொழிபெயர்ப்பிலும் பங்காற்றியுள்ளீர்கள். எதன் அடிப்படையில் ஒரு படைப்பை மொழிபெயர்ப்புக்காகத் தேர்வு செய்கிறீர்கள்?

யுவன் சந்திரசேகர்: ஜென் கவிதைகள் மொழிபெயர்ப்பும், உதிரியாகச் சில சிறுகதைகளுமே நானாக விரும்பியும் முனைந்தும் செய்தவை. பிற நூல்கள் அனைத்துமே காலச்சுவடு வெளியீடுகள். பிறமொழி நூல்களை, உரிய அனுமதி பெற்றுத் தமிழில் வெளியிடும் முன்னோடிப் பதிப்பகம் அல்லவா அது. நான் மொழிபெயர்க்க உகந்தவை என்று அவர்கள் கருதும் நூல்களை அனுப்பித் தருகிறார்கள். எனக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். ஜிம் கார்பெட்டின் எனது இந்தியா முதல், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கூட்டு விழிகள் கொண்ட மனிதன்’ வரை இதுவேதான் நியதி.

உங்களை நான் முதலில் சந்தித்தபோது நீங்கள் ஏதோ இசைக் கச்சேரியில் கலந்துகொண்ட அனுபவத்தைத்தான் பகிர்ந்துகொண்டிருந்தீர்கள். உங்களுக்கு இசை ஆர்வம் எங்கிருந்து தோன்றியது? ஏன் இசைப்பாடல்கள் எழுத முயன்றதில்லை?

யுவன் சந்திரசேகர்: இசை ஆர்வம் வேர்விட்டது என் அப்பாவிடமிருந்து. அவருடைய மரணத்துடன், சாஸ்திரீய இசை கேட்பதும் ஓய்ந்துபோனது. பின்னர் ஒரு பத்தாண்டுகள் கழித்து, எனக்கு அதிகாரியாக வந்து சேர்ந்த நண்பர் திரு.சாம்பமூர்த்தியின் வழியாக மீண்டும் எனக்குள் தொற்றியது. இன்றுவரை கேட்டு வருகிறேன்.

சந்தத்தோடு எழுதத் தெரியாது; சந்தர்ப்பங்களை முன்னிட்டு எழுதவும் தெரியாது. மாபெரும் ரசிகத் தரப்புக்கு உகந்தபடியாக எழுதத் தெரியாது. இவற்றில் ஏதாவது ஒரு அம்சம் இல்லாவிட்டாலும், இசைப்பாடல்கள் எழுத முடியாது என்றே படுகிறது. தீவிர இலக்கியம் வாசிப்பவர்களிலேயே எத்தனை சதவீதத்துக்கு என் கவிதைகளின்மீது உடன்பாடு இருக்கும் என்பதே சற்றுக் குழப்பமான சமாசாரம்தான்! முறைப்படி கவிதை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு, ஏற்கனவே சொன்ன மாதிரி, திரைப்பாடல்களின் மெட்டில், சந்தத்தில் பக்திப்பாடல்கள் எழுதிப் பார்த்திருக்கிறேன் – அதையெல்லாம் பிள்ளைக் குறும்பு என்ற வகையில்தான் சேர்க்க முடியும்!

இப்பொழுது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

யுவன் சந்திரசேகர்: எப்போதுமே ஒரு நாவல் எழுதுவதில் முனைந்திருப்பேன். இப்போதும்தான். அன்றாடம் எழுதுவது என்ற பழக்கத்துக்கு அனுசரணையான வடிவம் அது! அவ்வப்போது சிறுகதைகளும் குறுங்கதைகளும் எழுதுகிறேன். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டுக் கடைசியில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவரவிருக்கிறது. கவிதை தொடர்பான கட்டுரைகளும், உதிரி மொழிபெயர்ப்புகளும், புதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றும்கூட வெளியாகவிருக்கின்றன.

இன்னொரு ஜென் கவிதைகள் தொகுப்பு கொண்டுவரும் ஆர்வமும் இருக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். பொதுவாகவே, இந்த நாட்களில், கவிதைகளை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது…

3 comments for ““யதார்த்தவாதப் புனைகதைகளுமே மாற்று மெய்ம்மைகள்தாம்!” யுவன் சந்திரசேகர்

  1. November 1, 2023 at 8:38 pm

    பாவனைகளற்ற, உங்கள் படைப்பு மனசாட்சி சொல்லும் உண்மைகளையே பதிலாகக் கொடுத்திருக்கிறீர்கள் யுவன்.

  2. vijayalakshmi
    November 2, 2023 at 8:42 pm

    தொகுக்கப்பட்ட கேள்விகள் அற்புதம். அதனால்தான் ஜென் தத்துவம் போன்ற முத்துக்கள் சிதறியிருக்கின்றன பதில்களாக. சிறப்பு நவீன்

    ஸ்ரீவிஜி

  3. Kalyanasundaram Janardhanam
    November 26, 2023 at 3:46 pm

    அருமையான வினாக்கள் மூலம் நேர்காணல் தொகுத்த நவீனுக்கு நன்றி..திரு யுவன்சங்கரின் விரிவான பதில்கள் சிறப்பாக அமைந்தது தேனுடன் பலாச்சுளை உண்டது போல் .”படைப்பாளியைப் பொறுத்தவரை, தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவராக இருந்தால், தமது படைப்பு குறித்து தமக்குள்ளேயே எழும் விமர்சனக் குரலை செவிமடுத்தாலே போதுமானது.”

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...