பொதுவாகவே எனக்கு தமிழ்நாட்டு நாவல்களை வாசிப்பதைக் காட்டிலும் மலேசிய நாவல்கள் வாசிப்பது மிகப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாவல்களில் காட்டப்படுகின்ற வாழ்க்கைக்கு நெருக்கமான அல்லது பழகிவிட்ட மலேசியச் சூழல்கள், மலேசிய எழுத்தாளர்களின் எளிய வாசிப்புக்கு உகந்த எழுத்து நடை, பலத்தரப்படாத வாசிப்பு நிலை, வெகுஜன இரசனையை எதிர்பார்க்கும் வாசிப்பு மனம் என எதை வேண்டுமானாலும் காரணமாகச் சொல்லலாம். இலக்கிய வாசிப்பின் உச்சம் என நான் கருதுவது வாசிக்கும் ஒவ்வொரு சொல்லும் புதியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும்; புதிய சுவையைத் தந்து கொண்டிருக்க வேண்டும். நவீனின் படைப்புகளும் அத்தகையதே. நவீனின் நாவல்களைத் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு அவர் படைப்புகள் என் பட்டறிவுக்கு எட்டாத பலவற்றை அறிமுகம் செய்கின்றன. அவற்றைத் தர்க்கம், அதைமீறுகின்ற கலை, தத்துவம் என இழையோட தருகிறது.
மலேசிய சுதந்திரத்திற்குப் பிறகு வெளிவந்த நாவல் வரிசையை ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் கவனம் பெற்ற பல நாவல்கள் குறிப்பிட்ட நிலங்களைப் பதிவு செய்யும் நோக்கத்திலேயே எழுதப்பட்டுள்ளன. குறிப்பாகத் தோட்டப்புறத்தை அதிகமாகவே பதிவு செய்துள்ளன. வரலாற்றுப் புனைவு, இலட்சியவாத எழுத்து, நவீன எழுத்து என எந்த வகை எழுத்தாக இருந்தாலும் அதில் நிலமே முதன்மை பெறுகிறது. எழுத்தாளர்கள் தங்களுக்கு மிகப் பழகிவிட்ட நிலங்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயற்சிக்கின்றனர். அவர்கள் வாழ்ந்த நிலத்தில் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட முனைகின்றனர்; வெறுமைகளையும் விரக்திகளையும் கொட்டித் தீர்க்கின்றனர். அந்த நிலத்தின் மீது தங்களுக்கு இருந்த மதிப்பீடுகளையும் முன்வைக்கின்றனர். குறிப்பாக ஒரு நிலத்தின் அரசியலை அப்பட்டமாகவோ அல்லது பூடகமாகவோ கூற முனைகின்றனர். நில அரசியலின் கட்டமைப்பையோ விளிம்பு நிலை வாழ்க்கையோ மிகப் பரவலாகவே நாவல்களில் பேசப்படுகின்றனர்.
பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்த மண்ணில் இந்தியர்கள் வாழ்ந்த நிலங்கள் பற்றிய பதிவுகள் மிக மிக அவசியம். ஏனென்றால் மலேசியாவில் எழுதப்படும் வரலாற்று நூல்களைக் காட்டிலும் இதுபோன்ற தமிழ் இலக்கியப் படைப்புகளில்தான் நம்முடைய அடையாளங்களைப் பதிவு செய்ய முடிகிறது.
நிலம் என்பது உயிர்கள் வாழும் இடம். உயிர்களின் இயக்கம் ஒரு நிலத்தின் தன்மையைச் சார்ந்தே முடிவு செய்யப்படுகிறது. ஓர் உயிரின் பிறப்புத் தொடங்கி இறக்கும் வரையில் அது கடந்து செல்லும் வாழ்க்கை செயல்பாடுகள் அனைத்தையும் வாழும் நிலம் முடிவு செய்கிறது. இது இயற்கை. ஆனால் மனிதனின் பேராசை இந்த இயற்கை தன்மையைச் செயற்கையாக்கி நிலத்தின் இயல்பை மாற்றியமைக்கிறது. அதில் நிலத்தைச் சுயநல அரசியல் கருவியாக்கி உயிர் வேட்டைகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இந்த நில அரசியலில் மனித இனம் சிக்கி தன்னுணர்வு இழந்து சுயத்தை அடிமையாக்கி வேறொன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையைத்தான் இன்று நாம் காணுகின்றோம்.
நவீனின் கடந்த மூன்று நாவல்களிலும் நிலம் முக்கிய கூறாக இடம்பெறுகிறது. நாவலின் முழுமையில் சரிசமப் பங்கு அவர் உயிர்ப்பிக்கும் களங்களுக்கும் உள்ளது. கதையைத் தாங்கிப் பிடிக்கும் அடிப்படையாக நிலங்கள் விளங்குகின்றன.
நவீனின் இந்தப் புனைவு நில அரசியல் பேசும் கருவியாகத்தான் தோன்றுகிறது. கடந்த இரண்டு நாவல்களோடு சேர்த்து இந்த நாவலும் நிலத்தின் கதையையே மையமாகப் பேசுகிறது. பேய்ச்சியில் புறம் போக்கு நிலமும் அது குறித்த வாழ்க்கை இடர்பாடுகளும் மையமாகப் பேசப்பட்டது. சிகண்டியில் பெருநகர் நிலத்தில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை அடையாளப்படுத்தப்பட்டது. தாராவில் கம்பத்து வாழ்க்கை போராட்டம் பதிவாகியிருக்கிறது. இந்த மூன்று நிலங்களின் பதிவையும் மிக நுட்பமாகவே கையாண்டு இருக்கிறார். அந்தந்தக் களங்களுக்கேற்ற கதைகளும் அது பேசும் அரசியலையும் வாசகர்களுக்கு அனுபவமாகத் தந்திருக்கிறார்.
நிலம் என்பது இயற்கை. இந்த நிலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்கள் தோன்றுகின்றன; வாழ்கின்றன; மடிகின்றன. இந்த உயிர்கள் வாழ்கின்ற நிலம் நிலையோடு இருந்தால்தான், அதைச் சார்ந்து வாழ்கின்ற உயிர்களின் வாழ்க்கையும் அதன் இயல்பில் எந்தத் திரிபும் இல்லாமல் இருக்கும். நிலம் தனியுடைமையாக்கப்படும்போது அதில் ஆதிகுடிகளாய் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வாதாரம் அடியோடு வேரறுக்கப்படுகின்றது.
‘தாரா’ கரங்கான் எனும் சிற்றூரில் சுங்கை எனும் கிராமத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. இந்த நிலம் தோட்டப்புற வாழ்க்கையிலிருந்து மீண்ட இந்தியர்களின் கம்பத்து வாழ்க்கையை முன்வைக்கிறது. தோட்டப்புறம் கட்டமைத்த வாழ்க்கை திரியும் நிலையில் கம்பம் எனும் புதிய நில அரசியலுக்குள் தங்களை நிலைப்படுத்தும் போராட்டம்தான் தாரா. இந்தப் போராட்டத்தில் சுங்கை கம்பத்தில் பெரு முதலாளிகளால் நிகழ்த்தப்படும் பொருள்முதல்வாத அரசியல் அந்தக் கம்பத்து மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்கிறது.
பிரிட்டிஷார்கள் இந்த நாட்டை விட்டு கிளம்பிய வேளையில் அவர்கள் விட்டுச் சென்ற நிலப்பகுதிகள் அங்கு அதிக காலம் வாழ்ந்த ஒரு சிலரின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியது. முறையான நிலப்பட்டா இல்லாத நிலையில் ஆக்கிரமித்த நிலப்பகுதிகளில் தங்களின் வாழ்க்கைக்கான ஆதராங்களை உருவாக்கி வாழத் தொடங்கினர். அதில் விவசாயத் தொழில்களைத் தொடங்கினர். வாழ்வதற்கான குடில்களை அமைத்துக் கொண்டனர். பாதுகாப்புக் கருதி குல தெய்வ கோவில்களையும் உருவாக்கிக் கொண்டனர். இப்படியே நிலமே தங்கள் வாழ்க்கையின் மூலாதாரமாகக் கொண்டு வாழும் சூழலில் அந்நிலங்கள் முதலாளிகளால் கையகப்படுத்தப்பட்டபோது அங்கு வாழ்ந்த மக்கள் வாழ்வாதாராத்தை இழக்கின்றனர். அடுத்த தலைமுறை செய்து வந்த விவசாயத் தொழில்களைக் கைவிட்டுக் கிடைத்த வேலைகளைச் செய்து காலம் தள்ளும் நிலை உருவாகுகிறது. குறைபாடுகளும் போதாமைகளும் ஏற்படுத்தும் அழுத்தத்தினால் வாழ்க்கை குறுக்கு வழியையும் நெறியற்ற வாழ்க்கையையும் நாடுகிறது. இதற்கிடையில் முதலாளிகளின் பேராசையினாலும் நாட்டின் தொழிற் துறை வளர்ச்சியாலும் உற்பத்தி துறைக்கு ஆள்பல தேவை அதிகமாகிறது. உள்ளூர் வாசிகளுக்கு அதிக ஊதியம் கொடுத்து அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கெல்லாம் தலையாட்டி இழப்பைச் சந்திப்பதைவிட அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைத் குறைந்த செலவில் தருவித்து வருமானத்தை அதிகப்படுத்துகிறார்கள். இதன் விளைவு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகிறது. நிலத்தை நம்பி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நிலையில்லாமல் போகிறது. வாழ்க்கை கேள்விக்குறியான தங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த அந்நிய நாட்டினர்மீது அவர்களின் கோபம் திரும்புகிறது. அது பல வழிகளில் மோதல்களைத் தூண்டி விடுகிறது. நிலம் அமைதியற்று போர்க்களமாகிறது.
ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் நிலமே வாழ்க்கையின் ஆதாராமாக விளங்குவதால் நிலத்தின் மீதுள்ள பிடிப்பு பேராசையாக வளர்கிறது. அதை அடைய பல வழிகள் கையாளப்படுகின்றன. வன்முறை, போராட்டம், போட்டி, பொறாமை என அனைத்து வகை முரண்பட்ட செயல்பாடுகளும் வழக்கமாகின்றன. ஆண்டான் அடிமைக்கான போராட்டம் தொடர்கதையாகிறது.
இந்த நாவலில் காட்டப்படும் சுங்கை கிராமத்து மக்களின் நிலையும் இதுதான். இந்த நில அரசியலில் பலியாடுகள்தான் குகன், அஞ்சலை, சனில், அந்தாரா, மாணிக்கம், பாண்டியன், சங்கரன் போன்றோர். இவர்களுடைய வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுக்கு அடித்தளமாக இருப்பது நிலம்தான்.
இந்தக் கதையில் முத்தையா பாட்டனின் விழிவழி கரங்கான் பகுதியின் தொன்மை கால நிலப் போராட்ட சிக்கல் ஒன்றும் முன்வைக்கப்படுகிறது. இக்கதையில் பூழியனின் இனக்குழுவிற்கும் ஜகூன் பூர்வக் குடியினருக்கும் ஏற்பட்ட நிலப் போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் சுங்கை மக்களின் போராட்டத்தைக் காண முடிகின்றது. காலந்தோறும் தனக்கான இருப்பையும் அடையாளத்தையும் நிறுவும் களங்களாக நிலம் இருந்துள்ளதை இந்த நாவல்வழி அறிய முடிகிறது.
அனைவருக்கும் பொதுவாக அமைக்கின்ற நிலம் உயிர்களுக்கு வாழ்வளிக்கும் தன்மை கொண்டது. ஒருபோதும் வஞ்சனை செய்யாது. மனிதனின் குரூர மனமோ நிலத்திற்காகப் பிறரின் வாழ்க்கையை அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. நிலத்திற்காக நிகழ்த்தப்படும் கீழ்மைகள் எத்துணை வகையான வன்முறை வடிவங்களைத் தனக்குள் போர்த்திக் கொள்ளும் என்பதற்கு இந்த நாவல் ஒரு நல்ல சான்று.
இந்த நாவலில் வரும் தாரா அல்லது அந்தாரா என்ற பாத்திரத்தை நிலத்தின் குறியீடாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. மனிதனின் பேராசையினால் தன்மீது நிகழ்த்துகின்ற கொடுமைகளைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டிருக்கிறது நிலம். பிரித்தாலும், எல்லைகளிட்டுத் தடுத்தாலும் நிலம் ஒருபோதும் பொய்த்ததில்லை. நல்லவர் தீயவர் என்ற பாகுபாடெ இல்லாமல் அனைத்துயிர்களுக்கும் படியளக்கிறது. இந்தப் பண்பின் வடிவம்தான் தாரா. தன்னை வஞ்சித்தவர்களுக்கும் பேரன்பையும் பெருங்கருணையையும் எல்லையற்று வழங்குகிறாள். ஒரு தருணத்தில் மனிதனின் குரூரம் எல்லைமீறும் போது நிலம் பேரன்னையின் வடிவம் கொண்டு அனைத்தையும் வாரி அனைத்துக் கொள்கிறது. மீண்டும் ஒரு புது தொடக்கத்திற்குப் புள்ளியிட்டுச் செல்கிறது. இந்த நாவலில் நிகழ்கால கதையிலும் கடந்த கால கதையிலும் நிலம் நீரின்வழி தன் குழந்தைகளை மீண்டும் தன் கருவுக்குள் அழைத்துக் கொள்கிறது. நிலத்தில் அவர்களின் பாவங்களைக் கழுவி மன்னித்துப் புதிய தொடக்கத்திற்கு விடுகிறது.
சமூகத்தின் மீது ஆழ்ந்த அவதானிப்பு உள்ள எழுத்தாளரால் மட்டுமே மிக நுணுக்கமாக இந்த அரசியலைப் புரிந்து எழுத முடியும். இயற்கையில் நிலத்தின் இயல்பு அதில் வாழும் மக்களின் இச்சைகள், அந்த இச்சைகள் ஏற்படுத்தும் பேரழிவு என்பதை மிக நேர்த்தியாக இலக்கியமாக்கியிருக்கிறார் நவீன்.
சுங்கை கம்பத்து இந்தியர்கள் மற்றும் தெலுக் கம்பத்து நேப்பாளிகள் என்ற இருவேறு இனக்குழுக்களை ஒரு நிலத்தில் மோதவிட்டு, கதையின் இறுதியில் தாரா என்ற மிகையதார்த்த புள்ளியில் இரு குழுக்களுக்குமான சமரசத்தைக் காட்டியிருப்பது இந்த நாவலின் இலக்கியத்துவத்திற்கான உச்ச சான்று என்றே கூறலாம்.
இப்படியாக ஒரு நிலத்தின் அரசியலை இந்நாவல் பேசி முடிக்கிறது என்று நிறைவு கொள்ளும் தருணத்தில் கதையில் தெய்வ கணங்களின் வெளிப்பாடு இந்த நாவலின் தரிசனத்தை நோக்கி வாசகனைத் திருப்பி விடுகிறது.
நாவலில் வருகின்ற நில காவல்தெய்வ வெளிப்பாடுகள் கதையின் மையத்தை நிறுவும் வலுவான கருவிகளாக அமைகின்றன. காந்தாரம்மன், தாரா இரண்டுமே அதை சார்ந்த மக்களின் பலி பாவங்களை ஊடறுக்கும் பேராற்றலாகச் செயல்படுகின்றன. எல்லா வினைகளுக்கும் அதற்கேற்ற எதிர்வினைகள் அமையும் என்பதை இந்தத் தெய்வ வெளிப்பாடுகளின்வழி அறிய முடிகின்றது. இது மிகப் பழகிவிட்ட கருத்தியலாக இருந்தாலும் நவீனின் கலைத்துவமான கதை சொல்லும் முறை இரசிக்க வைக்கிறது. வாசிப்பினூடே இன்னொன்றும் தோன்றியது பூழியன் – ஜகூன் இனப் பூசலுக்கும், சுங்கை கம்பம் – தெலுக் கம்பம் இனப் பிரச்சனைக்கும் தெய்வ கணங்களின் பேராற்றல் சிக்கலுக்கான முடிவை எழுதிச் செல்கிறது. இந்த மாயநிலை உத்தி இரசிக்க வைத்தாலும் சில வினாக்களை வாசகனுக்குள் எழுப்பிவிட்டே செல்கிறது. நடந்துவிட்ட வன்கொடுமைகளுக்குத் யாதார்த்த நிலை தீர்வுகளுக்கு வழியே காணாததால் எழுத்தாளர் மிகையதார்த்த்தைப் பயன்படுத்தி தீர்வுரைக்கிராறோ என்று தோன்றுகிறது.
நவீன இலக்கியத்தின் அடிப்படை பண்பே இலக்கியம் பிற அரசியலுக்குள் தன்னை இருத்திக் கொள்ளாமல் தனக்கான அரசியலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. கதைப் போக்கு ஏற்படுத்தும் நுண்ணுணர்வுகள்வழி பிற அறிவுத் துறைகள் சொல்லாத விடயங்களின் உண்மைகளை ஆராய முயலும். இந்நாவலில் தாரா சார்ந்த மிகையதார்த்த புனைவு மனித அறிவுக்கு எட்டாத பேராற்றலைப் பேச முயல்கிறதோ என்ற வினாவும் எழுகிறது? இதுதான் தாரா உருவாக்கிக் கொள்ளும் தனக்கான இலக்கிய அரசியலா?
நவீன் நாவல்களில் ஓர்மை விரவத் தொடங்கியிருப்பதாக உணர்கிறேன். பேய்ச்சி, சிகண்டி, தாரா ஆகிய மூன்று நாவல்களிலும் நிலம், பேரன்பு, மனித குரூரங்களை உடைத்தெரியும் பேராற்றல் தொடர்ந்து இடம்பெறுகிறது. பேய்ச்சி நாவலில் தோட்டப்புறமும் புறம்போக்குப் பகுதியும் முதன்மைக் கதைக் களங்களாக அமைந்து கதையை வழிநடத்திச் செல்கிறது. அதில் பேய்ச்சி பேரன்பின் வடிவமாகத் தோன்றுகிறாள். சிகண்டியில் பெருநகரின் இருள் பகுதி வாழ்க்கை அச்சமூட்டுகிறது. இந்த நாவலில் சிகண்டி பேரன்பின் வடிவமாகத் தோன்றுகிறாள். தாராவில் கம்பத்து வாழ்க்கையின் கலவரங்கள் கவனப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தாரா பேரன்பின் வடிவமாக வருகிறாள். அதே வேளை மூன்று நிலங்களிலும் மனிதர்கள் தங்களை வாழும் நிலத்தோடு இருத்திக் கொள்ளும் போராட்டமே மையமாகப் பேசப்பட்டுள்ளது. இந்த ஓர்மைக்குள் காணப்படுகின்ற தனித்துவம் மூன்று நாவல்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. வாசிப்பில் சலிப்புத் தோன்றவில்லை. இருப்பினும் இத்தகைய எழுத்துகளை மட்டுமே எழுதுபவர் நவீன் என்ற அடையாளத்திற்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது.
தாரா வாசிப்பில் எந்தச் சோர்வையும் ஏற்படுத்தாத மொழிநடை நாவலின் மிகப் பெரிய பலம். சொற்கள்வழி பல காட்சிகள் கண்முன் நிஜமாக நிற்கின்றன. குறிப்பாக இட விவரிப்புகளில் நவீன் நம்மை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று காட்டுவதுபோல் தோன்றுகிறது. கிச்சி – அந்தாரா நீலத்தாமரையைச் தேடிச் செல்லும் பயணம் நவீன் மொழி ஆளுமைக்கான உரைக்கல்.
இருப்பினும் கடந்த இரண்டு நாவல்களிலும் திரண்டிருந்த கட்டற்ற மொழிநடை இந்த நாவலில் கட்டப்பட்டிருக்கிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக நாவலில் வாழ்ந்த கரங்கான் மக்களின் பேச்சுமொழி கட்டுப்படுத்தப்பட்டே ஒலிக்கிறது. அந்த மனிதர்களின் இயல்பான பேச்சுத் தன்மை இல்லாமல் மிகக் கவனமாகப் பேசப்படுகிறது. இது வாசகனை கரங்கான் பகுதி மக்களோடு நெருங்க விடவில்லை.
நாவலின் முக்கியத் திறப்புக்கு அடிப்படையாக அமைந்த பூழியன் – ஜகூன் இனக்குழுக்களுக்கிடையே நிகழும் போராட்டம் மிக அவசரமாக நாவலில் நுழைந்து வெளியேறுவதுபோல் தோன்றுகிறது. முத்தையா பாட்டன் விழிவழி நகரும் இக்கதை தொடக்கத்தில் நாவலில் புதிராக அமைந்து வாசகனை அதற்கான விடை தேடலுக்கு ஆற்றுவிக்கிறது. அந்த நிலத்தின் சாப வரலாற்றை முன்வைத்து கதையின் இறுதியில் தாரா, காந்தாரம்மன் பேராற்றலின் ஒருங்கிணைவில் பலி பாவங்களுக்கான விளைவு உணர்த்தப்படுகிறது. இவ்விரு கதைகளும் மிக நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டிருந்தாலும் வாசிக்கும்போது எனக்குள் ஒரு போதாமையை ஏற்படுகிறது. மேலும்,நாவலில் சமகாலத்தில் நிகழ்கின்ற கதையின் சாயலை அப்படியே ஒத்திருக்கிறது பூழியன் – ஜகூன் கதை. நிலத்திற்கான போராட்டத்தில் அங்கும் ஒரு பெண் வஞ்சிக்கப்பட்டு நிலம் சாபக் காடாகிறது. அதே சாயலில் இங்கும் இரண்டு பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். நிலம் மீண்டும் சாபக் காடாகி பேரழிவு காண்கிறது. இந்தச் சாயல் வாசிப்பில் சிறு தொய்வை ஏற்படுத்திச் செல்கிறது.
தாரா தனக்கான அரசியலை நிறுவிக் கொண்ட தரமான படைப்பு.