கரிப்புத் துளிகள் : கட்டுமானங்களுக்கு அடியில் கொதிக்கும் உப்பு

பலமுறை பினாங்கு பாலத்தைக் கடந்திருக்கிறேன். அதன் கட்டுமானமும் அழகும் பெரிதும் வசீகரிக்கக்கூடியதுதான். ஆனால் இம்முறை ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவிற்குச் செல்கையில், பினாங்கு பாலத்தைக் கடக்கும்போது இனம்புரியாததொரு படபடப்பும் சேர்ந்து கொண்டது. கடலலையில் கிருஷ்ணன், துரைசாமியின் நினைவுகளும் டானு விழுந்த ஐம்பத்தாறாவது தூணும் துரத்திக் கொண்டிருந்தன. ஓரிரு தினங்களுக்கு முன் படித்து முடித்த அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவலிலிருந்து மேலெழுந்து வந்தவர்கள்தான் அவர்கள்.

பினாங்கு பாலக்கட்டுமானத்தின் காலத்தைக் களமாகக் கொண்ட நாவலிது. இதுவரை நானறிந்திடாத புதிய களம், அதனையொட்டிய மக்களின் வாழ்வுப்பின்னல் என வடிவமைந்துள்ளது. பொதுவாக நாட்டின் வளர்ச்சிக்காகவென்று நிறுவப்படும் கட்டடங்கள், நகரங்கள், பாலங்கள் அனைத்தும் அப்போதைய பிரதமர், அமைச்சர்களின் சாதனை சொல்லும் விதமாகவே காட்டப்படும், பேசப்படும் என்பது தெரிந்ததுதான். அந்தப் பிரம்மாண்டங்களின் பின்னே உழைத்த கூலித்தொழிலாளர்களின் கண்ணீர்த்துளிகள்தான் இந்தக் கரிப்புத் துளிகள்.

துரைசாமி காணும் பயங்கரக்கனவோடு நாவல் தொடங்குகிறது. பிரம்மாண்டமான கடலாமையிடம் துரைசாமி ஏன் மண்டியிடுகிறான், அவனை யார் துரத்துகிறார்கள் என்பதையெல்லாம் நாவலின் அடுத்தடுத்த பகுதிகளில் முன்னும் பின்னுமாகக் கதை நகர்த்திச் செல்கிறது.

தோட்டத் துண்டாடலினால் பாடாங் தோட்டத்திலிருந்து டீலோ கம்பத்துக்குக் குடிபெயர்கின்றனர் கிருஷ்ணன் குடும்பத்தினர். பிறையில் பாலம் கட்டத் தொடங்கும் சமயமது. புதிய இடத்துக்கு மாறுவதை விரும்பாத மனைவியிடம் பலவற்றைக்கூறி, கூடுதலாக “ஜாலான் பாரு கோயிலு கூட கிட்டத்துலதான்” என்று நம்பிக்கையை விதைக்கிறார். இயல்பாகவே மனிதர்கள் புதிய இடத்திற்குப் போகையில் தங்களுக்குத் தெரிந்த அல்லது ஏற்கனவே அறிமுகமானவர் அங்கிருந்தால் சற்று ஆசுவாசமடைவர், கொஞ்சம் நம்பிக்கை பெறுவர். இங்கு இவர்களுக்கு ஜாலான் பாரு ஐயாதான் அந்த நம்பிக்கையாய் விளங்குகிறார். ஐயா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்றுதான் அவர்களின் வாழ்க்கை முழுதும் நம்பிக்கை தொடர்கிறது. அத்தாப்புக் குடிலிலிருந்து வெகு வேகமாக ஐயா கோயிலும் நாட்டிலேயே முக்கியமான ஒரு தலமாக வளர்ந்து நிற்கிறது.

தற்காலிக குடியிருப்பாக கண்டெய்னர் வீடுகள் அமைகிறது. தகரப்பெட்டிகளே வாழ்விடமாக மாற்றப்படுகிறது. மின்சாரம், நீர் வசதி இருக்கிறது, வாடகையில்லாததே பெரிய சலுகையாயிருக்கிறது இவர்களுக்கு. எல்லாம் பழகிவிடும்தானே. முதலில், “கொஞ்ச நாளைக்குத்தான், அப்புறம் புதிதாக கட்டவிருக்கும் குடியிருப்புகளுக்கு மாறிவிடலாம்” என்று நம்பித்தான் முதலில் குடியேறுகிறார்கள். கிருஷ்ணன் வேலையில் தன்னை நன்கு பொருத்திக் கொள்கிறார். அவருக்குப் பிள்ளைகளிடம் மிகுந்த பாசம். மதுவருந்தியபின் அப்பாசம் இன்னும் கூடுதலாகிவிடும்.

கிருஷ்ணன் சொல்லும் வெள்ளை முதலை, ஜின், ரத்தக்காவு எல்லாம் பல காலமாக நாம் கேட்டு வளர்ந்த பல கட்டடங்களின் கீழே புதைக்கப்பட்ட ரத்தக்கறையையும் ரகசியங்களையும் நினைவுக்குக் கொண்டுவருபவை. பாலம் கட்டி முடித்தபின் தன் இரு மகன்களை மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதன்பின் தன் சந்ததிகளும் அப்பாலத்தில் பயணிப்பார்கள் என்று நம்பிக்கையோடு வாழ்கிறார்.

துரைசாமி எனும் பாத்திரம் சிறு வயதில் பெரும் விபத்தொன்றிலிருந்து உயிர் பிழைத்தவன். கிரியான் ஆற்றில் மூழ்கியவனை யாரோ கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். அவனுக்கும் ஆர்ப்பரிக்கும் நீருக்குமான தொடர்பு கதையின் இறுதிவரை நீள்கிறது. நம் நாட்டின் பெருந்துயரமாகப் பதிவாகிப்போன 13 செப்டம்பர் 1972இல் கிரியான் ஆற்றில் நிகழ்ந்த படகு விபத்தை மிகக் கச்சிதமாக அ .பாண்டியன் புனைவுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

நாவல் முழுவதுமே வரும் நுண்விவரணைகளும் நாவலைத் தொய்வின்றித் தொடர வைக்கிறது. பாலக் கட்டுமான வளர்ச்சி, தனலெட்சுமி வேலை செய்யும் பொம்மைக்கார் உற்பத்தி, பனியன் ஆலை, தேவா ரொட்டிகளை அனுப்பப் பயணிக்கும் பாதைகள் என்று அனைத்துமே துல்லியமாக இருக்கின்றன. அப்போதே நகரில் சாலை விளக்குகளும் நெரிசல்களும் ஆரம்பித்துவிட்டிருந்தன. அவசரமாக எந்தக் குறுக்குச் சந்திலும் நுழைந்து விடமுடியாது. ‘நகர வளர்ச்சியென்பது குறுக்குப் பாதைகளை இல்லாமலாக்கிக் கொண்டிருப்பது தேவாவுக்குப் புரிந்தது. ஆனால் ஒற்றையடிக் குறுக்குப் பாதைகள் இல்லாத உலகம் சாமானிய மக்களின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.’ (பக்கம் 55) குறுக்குச்சந்து இல்லாது போவது பயணங்களைத் தூரமாக்கிவிடுவது மட்டுமல்ல, சாமானியர்களுக்கு எட்ட முடியாத தூரமாகிவிடும் பலவற்றைக் குறிப்பதாகவே எண்ண வைக்கிறது.

எழுபதுகளின் இறுதியும் எண்பதுகளின் தொடக்கக்கட்ட வாழ்க்கையும் அப்போதைய மாற்றங்களும் நாவலில் கச்சிதமாகப் பதிவாகியுள்ளன. பாடல் கேசட்டுகள், திரையரங்குகள் மூடுவிழா கண்டு வீடியோ கேஸட்டுகளில் படங்கள் ஆக்கிரமித்திருந்த காலமது. மலாயில் இசபெல்லா பாடலைப் பாடிய சேர்ச் இசைக்குழுவினர், சுதீர்மான், ஹிந்தி பாடல்களை அப்படியே மலாய்ப்பாடல்களாக மாற்றி பாடிப் பரவசமடைந்திருந்தது எனப் பலவும் பதிவாகியிருக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி வைத்திருப்பதற்கு அப்போதெல்லாம் லைசென்ஸ் வேண்டும் என்பது இப்போது பலருக்குத் தெரியாத தகவலாயிருக்கலாம்.

இந்நாவலில் நம் சமூகத்தின் பல்வேறு சிக்கல்கள் அப்படியே சிறுசிறு வாக்கியங்களில் விரவிக்கொண்டே செல்கிறது. குடிப்பழக்கம், பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமை, இளவயதில் வேலைக்குச் செல்லுதல், சினிமா மோகம், லாட்டரி, குண்டர் கும்பல், லாக்கப் மரணங்கள், வெளிநாட்டினர் வருகையால் நாட்டில் ஏற்பட்ட பல மாற்றங்கள், இத்தனையும் எங்கும் வலிந்து திணிக்காமல் கதையினூடே செறிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

நாவலில் வரும் வள்ளி, தனலெட்சுமியின் தாய் முதலில் வேலை செய்யும் கிளினிக்கில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்வதறிந்து குற்றவுணர்ச்சியில் கலங்குகிறாள். வேறு வேலை கிடைத்ததும் மீதச் சம்பளத்தைக்கூட வாங்காமல் உடனடியாக கிளினிக்கைவிட்டு வந்துவிடுகிறாள். இதேபோல் துரைசாமியின் மனைவி சாந்தி, தங்கள் வாழ்வில் தொடரும் துயரம் கண்டு, “என்ன பாவம் செஞ்சேனோ இப்படி ஆயிடுச்சே வாழ்க்கே… இதுங்களை அடைச்சு வச்சி இன்னும் பாவத்தைத் தேடிக்கவா…” என்று கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட பறவைகளைத் திறந்து விடுகிறாள். பாவத்துக்கு அஞ்சும் எளிய மனங்களை இது காட்டுகிறது.


தனலெட்சுமி இளைமையிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மெலிந்திருக்கிறாள். பல் எடுப்பாக இருப்பதினால் கேலிக்கு ஆளாகிறாள். அவளுக்குப் பிடித்த ஆசிரியரும் கேலி செய்ததைப் பொறுக்க முடியாமல் பள்ளியிலிருந்து விலகுகிறாள். தொழிற்சாலையில் பணிபுரியும், தன்னைப் போன்றே குறைவாகப் படித்த மலாய் பெண்களுடன் பேசி மொழியைக் கற்றுக் கொண்டபின் அவளிடம் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது. இருந்தும் அவள் விரும்பும் அன்பை அடைய இயலவில்லை. அவளின் தாயும் இதனை உணராதவளாகவே இருந்துவிடுகிறாள். தன்னைவிட அதிக வயதான, விவாகரத்தான சீன சூப்பர்வைசரரிடம் தனலெட்சுமி பழகி, கருவுருகிறாள். கருக்கலைப்பு செய்யும் கிளினிக்கில் இருப்பதையே அவமானமாகவும் குற்றமாகவும் எண்ணிய தாய்க்கு இச்செய்தி பேரிடியாக இருந்திருக்குமே…இத்தாயின் கரிப்புத் துளிகள் நம்மையும் கலங்கிடச் செய்யும்.

பினாங்கு பால நிர்மாணிப்புகளில் கிருஷ்ணன், துரைசாமி, ஐயாவுவுடன் ஜாவாவிலிருந்து வந்து இங்கு குடியேறிவிட்ட டானுவும் இருக்கிறான். தொடக்கத்திலிருந்தே இவனிடம் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி ஒளிந்திருப்பது போலவே உள்ளது. அய்யாவு தவிர மற்றவரிடம் அதிகம் பேசாதவன். நான்கு இலக்க லாட்டரியில் பணக்காரராகி, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாமென்று இருப்போரில் துரைசாமியும் ஒருவன். டானு கொடுக்கும் இலக்கம் அப்படியே ஏறிவிடும் என்று துரைசாமி ஐயாவுவுடன் தொடங்கிய பயணம், பந்தாய் கெராஞ்சுட் வரை கொண்டுவிட்டது. இங்கு நடப்பவையெல்லாம் பேரதிசயம். அகூபாராவை இன்னும் கொஞ்சம் அதிகம் உலவவிட்டிருக்கலாம் என்று தோன்றியது.

மாயப்பொன் மனதைத் தள்ளாட்டமடையச் செய்கிறது. “இது உன்னோடது இல்ல… எதுவுமே உன்னோடது இல்ல!” என்று ஆரம்பமே துரைசாமிக்கு எச்சரிக்கை தரப்படுகிறது. ஆசை படர்ந்துவிட்டபின் அதிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதா என்ன? தங்க நாணயங்களை ஜெகனிடம் ரகசியமாக வைத்திருக்கும்படி கொடுக்கிறான். முடிச்சில் இருந்தது வெறும் பத்து காசு நாணயங்களா… பிறகெப்படி போலீசாரின் விசாரணையில் தங்க நாணயங்களாயிற்று? நல்ல மர்ம முடிச்சு. துரைசாமி உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறான். ஜெகனின் மரணம், மகன் சுந்தரின் இறப்பு, மனைவியின் மனநிலை பாதிப்பு இவற்றுக்கெல்லாம் தான்தான் காரணமெனும் பெரும் குற்றவுணர்ச்சி அவனை நிம்மதியிழக்கச் செய்கிறது. முதல் அத்தியாயத்தில் கனவில், கடலிலிருந்து மீளும் துரைசாமி இறுதியில் கடலை நோக்கி நகரும்போதும் கரிப்புத் துளிகள்தான் எஞ்சுகிறது.

அ. பாண்டியனின் கரிப்புத் துளிகள் நாவல் நல்லதொரு வாசிப்பனுபவமாக இருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...