ம.நவீனுடைய ‘தாரா’ நாவலை வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இந்த உணர்வுதான்.
‘தாரா ஓர் அறச்சீற்றம்’
நாவலில் வரும் பழங்குடிகளின் தலைவனின் கூற்றான,
“தலைவனிடம் அறம் இல்லாததில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப் பெண்களின் கண்களைப் பார்க்கிறேன். அதில் நீதியில்லை”.
இதுவே இந்நாவலின் அடிநாதமாக இருந்து நாவலை இயங்கச் செய்கிறது.
குகனின் கொலையை மையம்படுத்தி கதை தொடங்கி, அதன்பின் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகள் எனக் கதைப்பின்னல் வாசகர்களைத் தன்னுடனேயே இருப்பில் வைத்துக்கொள்கிறது. கதைப்பின்னல்களின் கூறுகளில் ஒன்றான இழுவிசை (Tension) கதைப்போக்குச் சிதறாமல் கொண்டு செல்வதாகும். அத்தன்மை வாசகர்களின் நாட்டத்தை (Curiosity) தொடர்ந்து நிலைநிறுத்தி வாசிக்க வைக்கும். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உண்டாக்கும். எதிர்நிலை (Suspense) என்பது சிக்கலைக் குறிக்கும். கதைச் சம்பவங்களை அமைக்கும்போது முரண்பாட்டை உண்டாக்கி அதனை உச்சநிலைக்குக் கொண்டு செல்வதாகும். கதையில் சிக்கல் இல்லாமல் எந்த நாவலையும் பின்ன இயலாது. நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் ஒன்றுக்கொன்று மேற்கொள்ளும் போராட்டங்களை வளர்த்துச் செல்வது சிக்கலாகும். சிக்கலைத் தொடர்ந்து வளர்த்து அதனை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வெளிப்படுத்தாமல் இருப்பது எதிர்நிலையாகும். அதேவேளையில், முரண்பாடுகளை ஆங்காங்கே கதாபாத்திரங்களின் சொல்லாடல் மூலம் உணர்த்திச் செல்வது குறிப்பு முரணாகும் (Irony). கதைப்பின்னலின் கூறுகளின் ஒன்றான இதுவும் நாவலின் முழுமைத்துவத்துக்கு முக்கியமானது. மேற்கூறப்பட்ட அனைத்தையும் தாராவில் மிக இயல்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் அறிந்திராத ஒரு நிலப்பரப்பையும் அதன் தன்மையையும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் அதற்கான காரணகாரியங்களையும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்டு அமைத்துள்ளார் நாவலாசிரியர். பல்வேறு சமூக அடுக்குகளின் நிலையான்மைகளையும் நம்பிக்கைகளையும் அச்சமூகம் சார்ந்த பிற விஷயங்களையும் மிகவும் அணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
ம.நவீன் அந்த நிலப்பரப்பை (சுங்கை கம்பம், தெலுக் கம்பம், கரங்கான்) மிகவும் உற்றுக் கவனித்திருப்பதால்தான் தகவல்களைச் சரியாகப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் படைப்பாளன் ஒரு படைப்பை உருவாக்குவற்கு முன்னர், அந்த மக்களுடன் இணைய வேண்டும். அப்பொழுதுதான் அவர்களைப் பற்றித் தெளிவாக எழுத முடியும். அந்த வாய்ப்பு நாவலாசிரியருக்கு மிகவும் நெருக்கமாகவே நடந்திருக்கிறது. அதனால்தான் அவரால் சமூக உறவுகளில் மனிதன் பின்னப்பட்டிருப்பதைப்போலவே தன் நாவலிலும் பாத்திரங்கள் சமூக உறவுடையவனாய் அமைக்க முடிந்திருக்கிறது. நவீன் கதாபாத்திரங்களோடு ஒன்றி, பாத்திரத்தின் உடலுக்குள் உயிர்போலப் புகுந்துகொண்டு அவற்றை இயக்கியிருக்கிறார். அதனால்தான் அஞ்சலை, கிச்சி, முத்தையா பாட்டன், அந்தரா, சனில் போன்ற கதாபாத்திரங்களின் முழுத்தன்மையை உண்டாக்க முடிந்திருக்கிறது.
அடுத்து இந்நாவலில் வரும் தாரா.
ஏற்கனவே வல்லினத்தில் ‘பச்சை நாயகி’ என்ற ஒரு கட்டுரையை வாசித்துள்ளேன். அப்போது அதில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் மேலோட்டமாகக் கடந்து போனேன். ஆனால், தாரா நாவலை வாசித்தபின் மீண்டும் வல்லினப் பக்கத்திற்குச் சென்று அக்கட்டுரையை நிதானமாக வாசித்தேன். அதை எழுதியவர் கோகிலவாணி. நாவலின் வரும் தாராவின் ஷர்யா நிர்த்யா நடனம், திரிபங்கி தொடர்பான பல செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. புத்தர் பிறந்த இடமான லும்பினி மற்றும் அங்குள்ள பௌத்த மடாலயங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. பச்சை தாரா புத்தரின் பெண் உருவம் எனக் கருதப்படுபவர். இவர் 21 தாராக்களில் முதன்மையானவர். நாவலில் வரும் அந்தரா அந்தத் தாராவின் தரிசனத்திற்காக நீல நிறத் தாமரையை எடுக்கப்போகும் வேளையில் பல விபரீதங்கள் நடந்துவிடுகின்றன.
நாவலில் அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு நோப்பாளிகளின்மேல் ஏற்படும் பகைமை, வன்மம் போன்றவையும் சமூக அடுக்குகளின் கீழ்நிலை மேல்நிலை என்ற வெறுப்பும் அவமதிப்பும் தொடர்ந்து கொண்டிருப்பது யதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது. இது நாவலின் அன்றைய சூழல் என்றாலும் நம் சமூக அளவில் இன்றளவும் தொடரும் அவலமாகவே இருக்கிறது.
குலதெய்வம் கந்தாரம்மன் நாவலின் மிகவும் குறிப்பிடத்தக்க குறியீட்டு கதாபாத்திரமாகும். எதையும் செய்யாமல் அமைதியாக இருக்கும் அந்த அம்மன், ஆதியிலும் கதையின் உச்சக்கட்டத்திலும் நிகழ்த்திய பேரழிவு நம் சமூகத்திற்கு ஓர் அபாய எச்சரிக்கையாவே இருக்கிறது. அறத்திலிருந்து நழுவும் எவரும் எந்தச் சமூகமும் இயற்கையிடமிருந்து தப்பிக்க முடியாது. அந்த அம்மனின் சீற்றம். ஓர் அறச்சீற்றம்.