மனிதனுக்குத் தனிச்சொத்துகள் மீது ஆர்வம் எழுந்தபோது, அது பேராசையாக வளர்ந்து லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் எதையும் செய்யலாம் எனும் நிலை எழுந்தது. இயற்கை வளங்கள் அப்படித்தான் தனி மனிதர்களின் உடமைகளாகப்பட்டு சுரண்டப்பட்டன.
சுயத் தேவை, பேராசை, பொருளாதாரம், அதிகாரம் போன்றவற்றை நிலைநாட்டிக்கொள்ளவதற்காக அழிக்கப்பட்டு வருகின்ற இயற்கை வளங்களோடு எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நந்தைச் சுவடுகளாக தத்தம் தடயங்களை பதித்துக்கொண்டேதான் வருகின்றன. அவ்வாறு இயற்கையோடு பிணைந்துள்ள வரலாற்று தடயங்களில் ஒன்றான பினாங்கு பாலம் கட்டப்பட்டக் காலக்கட்டத்தில் இயற்கைக்கும் மனிதக் குலத்திற்கும் இடையில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல்தான் அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’.
வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மலேசியாவில் பல நாவல்கள் வெளிவந்திருந்தாலும் நகரமயமாதலின் விளைவாக உண்டாகின்ற நிகழ்வுகளையும் போராட்டங்களையும் பின்னணியாகக் கொண்டு ‘கரிப்புத் துளிகள்’ நாவலை அணுகலாம்.
அகூபாராவின் சீற்றத்தோடு தொடங்கும் நாவல் துரைசாமியின் அகப்பிறழ்வுகளின் வழி மெல்ல தன் களத்தை விரித்தெடுத்துச் செல்கின்றது. பாடாங் தோட்டத்திலிருந்து கம்போங் டீலோவுக்குப் புலப்பெயர்ந்து பின்னர் பினாங்கு பாலக் கட்டுமானத்திற்குப் பிறகு அங்கிருந்து கண்டெய்னர் வீடுகளில் தங்கும் மக்களின் வாழ்வியலை முன்னும் பின்னுமாகச் சொல்லி கதை நகர்கின்றது. பாடாங் தோட்டத்திலிருந்து கம்போங் டீலோவுக்குப் புலப்பெயரும் கிருஷ்ணன், துரைசாமி போன்றோர் பினாங்கு பாலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகின்றனர். பாலக் கட்டுமானத் தொழிலில் டானு, ஐயாவு என்பவர்களின் நட்பை இவர்கள் பெறுகின்றனர். கிருஷ்ணனைக் காட்டிலும் துரைசாமி ஐயாவுவிடமும் டானுவிடமும் நெருங்கி பழகுகின்றான்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த டானு மாந்திரிகத்தில் தேர்ந்தவனாக விளங்குகிறான். டானுவின் ஆற்றலின் மூலம் துரைசாமிக்கும் ஐயாவுவுக்கும் கடலாமைகளின் ராணியாகத் திகழும் அகூபாராவைக் கண்டு வணங்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. துரைசாமியும் ஐயாவுவும் தங்களின் சுயநலத்திற்காகவும் பேராசைக்காகவும் அகூபாராவின் ஆசியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதன் விளைவாக நேரும் இழப்புகளையும் அகப்போராட்டங்களையும் காட்சிப்படுத்தியே ஒட்டுமொத்த நாவலும் விரிகின்றது.
இயற்கையை அழித்து எழுப்பப்படும் எத்தனையோ கட்டுமானங்களுக்குப் பின்னணியில் எவ்வளவோ இழப்புகள் நிகழ்ந்துள்ளன. இக்கதையிலும் பினாங்கின் வளர்ச்சியோடு கம்போங் டீலோ மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களும் அழிவுகளும் நிகழ்கின்றது. இயற்கை தன் ஆற்றலின் மூலம் நன்மைகளை அளித்தாலும் தன் அழிவுக்கு ஈடாக கம்போங் டீலோவில் உள்ளவர்களின் வாழ்க்கையிலும் துரைசாமி, சாந்தி, பாக்கியம், வள்ளி, டானு, ஐயாவு, ஜகன் போன்றவர்களின் வாழ்க்கையிலும் அழிவுகளை ஏற்படுத்தி தனக்கான நீதியை நிலைநாட்டிக் கொள்கின்றது. இவ்வாறு நடைமுறை வாழ்க்கையில் கண்களுக்கு அகப்படாத இயற்கையின் எதிர்வினையை அகூபாரா எனும் தொன்மத்தின் வழி கதையில் நாவலாசிரியர் காட்டியுள்ளது நாவலின் சிறப்பாக அமைகின்றது.
அகூபாரா எனும் தொன்மம் இந்து புராணங்களில் அறியப்பட்டாலும் அதனை உலக ஆமை அல்லது காஸ்மிக் ஆமை என்று பொதுவாக அழைக்கலாம். அகூபாரா ஆமை என்பது உலகத்தைத் தன் ஓட்டில் தாங்கி ஆதரிக்கும் மாபெரும் ஆமையைப் பற்றியத் தொன்மம். விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாக விளங்கும் கூர்ம அவதாரத்துடனும் அகூபாரா தொன்மத்தை ஒத்திபார்க்கலாம். தன்னை வெளிக்காட்டாமல் உலகையே தாங்கும் அகூபாராவின் ஆசியைத் தன் சுயநலத்திற்காகவும் பேராசைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் துரைசாமி தான் இயற்கைக்கு எதிராக செய்தவற்றை உணர்ந்து வாழ்க்கையின் வேரிலிருந்து வெளியேறி தன்னை முழுவதுமாக அகூபாராவிடம் ஒப்படைக்கும் தருணம் கதை தன் உச்சத்தை அடைகின்றது. அகூபாரா எனும் தொன்மம் அல்லது நம்பிக்கையில் உள்ள உண்மையை அலசிப்பார்த்து அதன் குறித்த கேள்விகளைத் துரைசாமி மூலம் வாசகனிடத்தில் எழுப்பி அதன் வழியாகவே நாவலின் தரிசனம் சேர்க்கப்பட்டுள்ளது.
கலைசார்ந்த கூறுகளின் அடிப்படையில் ‘கரிப்புத் துளிகள்’ நாவலின் சிறப்பாக அமைவது நாவலில் கையாளப்பட்டுள்ள சித்தரிப்புகள்தான். நுண் தகவல்கள் வழியாகவும் காட்சி சித்தரிப்புகளின் வழியாகவும் ஒரு நம்பகமான உணர்வுநிலையை இந்நாவல் உருவாக்கியுள்ளது. கம்போங் டீலோவில் சதுப்பு நிலத்தில் எழுப்பப்பட்ட வீடுகள், கண்டெனர் வீடுகளின் அமைப்பு, மிதவை படகில் பயணிக்கும் சூழல், பினாங்கு பாலம் கட்டப்பட்டத்தின் முறைகள், தொழிற்சாலைகளில் பொம்பை கார்களின் உருவாக்கப்படும் முறை, அகூபாராவை டானு வரவழைத்த காட்சி என ஒவ்வொரு சித்தரிப்பும் வாசகனிடத்தில் நம்பகத்தன்மையையும் மெய்நிகர் உணர்வையும் உண்டாக்கியது. காட்டாக, டானு அகூபாராவை வரவழைப்பதற்கு முன் அவன் தன்னிடமிருந்த கருவியின் மூலம் ஓசை எழுப்பி அகூபாராவை வரவழைத்த முறையும் பினாங்கு பாலம் கட்டுமானத்தில் கடலுக்கு அடியில் நிலைநாட்டப்பட்ட கான்கிரிட் முதல் அப்பாலம் எழுப்பப்பட்ட காட்சிகளில் உள்ள நுண்தகவல்களும் வாசகனிடத்தில் மெய்நிகர் அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கரிப்புத் துளிகள்’ நாவல் மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாக மாறுவதற்கு நாவலாசிரியர் கையாண்ட காட்சி சித்தரிப்பும் அக்காட்சி சித்தரிப்பில் உள்ள நுண்தகவல்களும் உறுதுணையாகவே அமைந்துள்ளன.
அடுத்ததாக, பினாங்கு பாலத்தின் கட்டுமானத்தையும் அந்தக் கட்டுமானத் தொழிலைச் செய்யும் துரைசாமி, கிருஷ்ணன், டானு போன்ற கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், அதே நிலத்தில் வாழும் மற்ற இனத்தவர்களையும் மற்ற கம்பத்து மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் உதிரியாகக் கொண்டு கதை அமைந்துள்ளது நாவலின் சிறப்பாக அமைகின்றது. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இந்தியர்களின் நிலையையும் கம்பத்தில் வசிக்கும் இந்திய இளைஞர்களிடையே நிலவும் சமூகச் சீர்கேடுகளையும் தொழிற்சாலைகளில் உள்ள சீனர்களின் முதலாளித்துவமும் இந்தோனேசியாவைச் சார்ந்த டானுவின் மூலம் இந்தோனேசியாவின் சடங்குகளைப் பற்றிய கூறுகளும் சிறையில் நிகழும் மரணங்களைக் குறித்தும் கதை போக்கில் கூறப்பட்டது நாவலின் சிறப்பாக அமைகின்றது. பினாங்கு எனும் பல்லினத்தவர்கள் வாழும் நிலத்தில் தமிழர்களைப் பற்றி மட்டும் கூறாமல் மற்ற இனத்தவர்களின் வாழ்க்கையையும் உதிரியாகக் கூறியது கதையின் நம்பகத்தன்மைக்கும் உறுதுணையாக அமைகின்றது.
மேலும், ‘கரிப்புத் துளிகள்’ நாவலில் வருகின்ற கதாப்பாத்திரங்களின் பாத்திர வார்ப்பெடுப்பு சில இடங்களில் எனக்குப் பலவீனமாகத் தோன்றியது. துரைசாமி, கிருஷ்ணன், பாக்கியம், சாந்தி, வள்ளி, ஜகன், தனலட்சுமி போன்ற கதாப்பாத்திரங்களின் சித்தரிப்புகளும் அவர்களின் அகப்போராட்டாங்களும் கதையின் போக்கில் வாசகனால் உணர்ந்துகொள்ளும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில கதாப்பாத்திரங்களின் அகப்போராட்டங்கள் ஒவ்வொரு முறையும் கூறியதே கூறுவதைப் போலவும் தொடர்ந்து புலம்பலாக அவர்களிடமிருந்து வெளிவரும்போதும் அது வாசகர்களிடையே அலுப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றது. காட்டாக, துரைசாமி எதிர்நோக்கும் அகப்போராட்டம் கதையின் ஆரம்ப நிலைகளிலே உணர்ந்திட முடிகின்றது. இருந்தபோதிலும், துரைசாமியின் அகச்சிக்கலைத் தொடர்ந்து ஒரே முறையில் அழுத்தம் தந்து கூறியது சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தியது. அதே போல, சாந்தியின் கதாப்பாத்திரமும் ஒரு குழந்தையை இழந்த தாயின் உணர்வையும் அந்தத் தாயின் போராட்டத்தையும் உணர்த்த கூறியதே கூறியது போல் அமைந்திருந்தது. சில கதாப்பாத்திரங்கள் கதைக்கு வலுவைச் சேர்ப்பதாக அமையவில்லை. தேவா எனும் கதாப்பாத்திரம் கதையின் தொடக்கத்தில் முக்கியமாகப் பாத்திரமாகக் காட்டப்பட்டிருந்தாலும் கதையின் போக்கில் அக்கதாப்பாத்திரம் அதன் வலுவை இழந்ததைப் போல் அமைந்திருந்தது.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் சுயநலத்திற்கும் இடையில் நிகழும் போராட்டங்களைக் காட்டியுள்ளது ‘கரிப்புத் துளிகள்’ நாவல். நாவலை வாசித்து முடித்த பின், வாசித்ததை மீட்டெடுக்கும்பொழுது கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள நகரமயமாதலும் இயற்கைக்கு எதிராகச் செயல்படுபவர்களின் அகப்போராட்டங்களுக்கு மத்தியிலும் அதனை அகூபாரா எனும் தொன்மத்தின் மூலம் விவரித்துக் காட்டிய காட்சிகளும் வாசிப்பவரின் மனதில் படர்கின்றது. குறிப்பாக, துரைசாமி தன் குற்றவுணர்வால் இயற்கையிடமே சரணடையும் தருணம் வாழ்க்கையின் மெய்மையை உணர்த்தி நாவல் உணர்வுப்பூர்வமாக வாசகனுக்கு நெருக்கமாகின்றது.