சுழி

வெளியே நல்ல வெயில். ரேஷன் கடையில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்துவிட்டார்கள். சாமான்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தேன். வீட்டு வாசலில் இருந்து பார்த்தபோது வீட்டின் பிரதான கதவு திறந்தே கிடந்தது. ஸ்கேன் எடுக்கச் சென்றிருந்த தாயும் மகளும் வந்துவிட்டார்கள். வாசல் கதவை அப்படியே திறந்து போட்டுவிட்டு உள்ளே ஏதோ ஒரு அறையில் இருக்கிறார்கள் போல. வாசலில் போகிறவன் வருகிறவன் எவனாவது உள்ளே நுழைந்துவிட்டால் என்ன செய்வது? எத்தனை முறை இவர்களிடம் சொல்லியாகிவிட்டது? இரண்டு பேருக்குமே இப்படித் திறந்து கிடக்கிறதே என்று உரைத்திருக்காது. நான் சொல்வது எதையும் அவர்கள் கேட்டுக்கொள்ளப் போவதில்லை. அப்படியே தான் இருக்கப் போகிறார்கள். நான் உள்ளே நுழைந்தபோது கூடத்தில் அவர்கள் இல்லை. உள்ளறையில் அவர்களின் பேச்சுக்குரல் கேட்டது.

நான் சாமான்களைக் கீழே வைத்துவிட்டுக் கூடத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர்கள் பேச்சைக் கவனித்தபடி இருந்தேன். அப்படியே ஒரு பத்து நிமிடம் சென்றது. இன்னும் அவர்களுக்கு ஒருவன் வீட்டுக்குள் நுழைந்தது பற்றி தெரியவே இல்லை. நான் சற்று வியர்வை அடங்கியவுடன் எழுந்து சென்று கைகால் முகம் எல்லாவற்றையும் கழுவிக் கொண்டு மீண்டும் வந்து கூடத்தில் ஃபேனை போட்டுக் கொண்டு அமர்ந்தேன். அப்போது தான் அவர்களின் கவனம் கலைந்தது.

“அம்மா, அப்பா வந்துட்டாரு போலருக்கு” என்றாள் மகள்.

அம்மாக்காரி வெளியே வந்து என்னைப் பார்த்தாள்.

“இப்போ தான் வர்றீங்களா?”

“ஆமா. அவளுக்கு எப்படியிருக்காம் இப்போ? எல்லாம் நார்மல் தானே”

அதற்குள்ளே மகளும் எழுந்து வந்து விட்டாள்.
“ஸ்கேன் எடுத்துருக்குப்பா. எல்லாம் நார்மல் தான்னு ரேடியாலஜிஸ்ட் சொல்லியிருக்காரு. நாளானிக்கு டாக்டர்கிட்ட போய் கன்சல்ட் பண்ணனும்”

நான் “ம்ம்ம். நல்லது” என்று தலையசைத்தேன். நான் வேறெதுவும் அவர்களைக் கேட்கவில்லை. நான் வாங்கி வைத்திருந்த பைகளைப் திறந்து பார்த்தபடி “கோதுமை அஞ்சு கிலோ தான் போட்டானா?” என்றாள் மனைவி.

நான் “ஆமாம்” என்றேன்.


என் மகளுக்கும் பெண் குழந்தை தான் பிறக்கும். நிச்சயமாகச் சொல்லிவிடுவேன். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் காரணமாகத் தான். அதாவது, நான் ஒரு கோழிப்பண்ணையில் இருந்து பெண் எடுத்திருக்கிறேன். என் மனைவியின் குடும்பத்தை ஒருமுறை என் சகலப்பாடி ஒருவன் “கோழிப்பண்ணை” என்று தான் குறிப்பிட்டான். அன்றிலிருந்து எனக்கும் அந்த வார்த்தைத் தொத்திக் கொண்டுவிட்டது.

எனக்குத் திருமணமான புதிதில் நான் என் மனைவி வீட்டுக் குடும்ப சுபகாரியங்களுக்கும் இல்லத்திருமணங்களுக்கும் வெறும் அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு வருவதோடு சரி. பெரிதாக என்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டேன். ஆனால் அன்று ஒரு திருமணத்தில் என் மனைவி உண்டாகியிருந்ததன் காரணத்தினால், நானே கற்பனை பண்ணி எடுத்துக்கொண்ட ஒரு சலுகையில், ‘மாப்பிள்ளை தோரணை’ என்று கருதிக் கொண்டு கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொண்டு பங்கெடுத்திருந்தேன். திருமணம் முடிந்து மத்தியானப் பந்தியும் முடிந்திருந்தது. பந்தியை விட்டு எழுந்து கொண்டதும் நாங்கள், என் மனைவி குடும்பத்து ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட மாப்பிள்ளைகள் எல்லாம் ஒன்று கூடி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் அந்தச் சகலப்பாடி என்னிடம் பேச்சுக் கொடுத்தான்.

“என்ன சகலை? முன்னலாம் ஆளையே கையிலபிடிக்க முடியாது. இன்னிக்கு என்னடான்னா ரெண்டு நாளும் முழுசா கூடவே இருந்து வரிஞ்சு கட்டிக்கிட்டு கல்யாணத்த நடத்தி கொடுத்துருக்கீங்க” என்றான்.

“நடத்திகொடுத்துட வேண்டியது தானே” என்றேன் நான், சிரித்தபடி.

“அது சரி”

“ஆமாம். பொறக்க போற பொண்ணுக்கு என்ன பேரு யோசிச்சு வச்சிருக்கீங்க”

“ஆணா பொண்ணான்னு தெரியறதுக்கு முன்னாடியே எப்படி யோசிக்கிறதாம்”

“பட்சி என்ன சொல்லுது? உங்களுக்கு என்ன வேணும்ணு தோணுது?”

“எனக்கு ஆம்பள புள்ள தான் வேணும்”

சகலப்பாடி சிரித்தான்.

“அது மட்டும் இங்க நடக்காது பாத்துக்குங்க. வீணா மனப்பால் குடிக்காதீங்க”

“என்னங்க சொல்றீங்க?”

“இதோ இங்கேயே நாங்க ரெண்டு பேரும் அப்படி மனப்பால் குடிச்சு தான் ஏமாந்து போயிருக்கோம்”

“நீங்க பொண்ணு எடுத்திருக்கறது ஒரு கோழிப்பண்ணையிலேந்து. அதை மறந்துடாதீங்க. அங்கேந்து வர்றது எல்லாம் கோழியா தான் இருக்கும். சேவலா இருக்காது பாத்துக்குங்க. எனக்கு பொறந்தது ஒரு பொண்ணு. இதோ நம்ம சகலைக்கும் ரெண்டும் பொண்ணுங்க. உங்களுக்கும் பொண்ணு தான் பொறக்கும் பாருங்க”

“என்னங்க ஜோசியக்காரன் மாதிரி இப்படி அடிச்சு சொல்றீங்க”

“இன்னிக்கு கல்யாணம் ஆச்சுதே அந்த பொண்ண வீல் சேர்ல இருந்தபடி ஒரு வயசான பாட்டி ஆசிர்வாதம் பண்ணினாங்க கவனிச்சீங்களா? எப்படி இன்னும் திடகாத்திரமா இருக்காங்க பாருங்க. அந்தப் பாட்டியோட வீட்டுக்காரர் 70 வயசுலயே அவுட்டு. ஆனா இந்த பாட்டிக்கு இப்போ 92 வயசு. இன்னும் ஓடிட்டிருக்கு. அந்த பாட்டியோட தங்கச்சீங்க அவங்களோட பொண்ணுங்கன்னு எல்லாரும் வந்திருந்தாங்க பாருங்க. அக்கா-தங்கச்சி எல்லார் மூஞ்சும் அசப்புல ஒரே வார்ப்பா இருக்கும். என்ன கலர் மட்டும் கொஞ்சம் கூட கொறச்சு இருக்கும். மத்த தாத்தாக்களாமும் இப்போ அவுட்டு. நாளைக்கு ஒங்க பொண்டாட்டி எம் பொண்டாட்டி முகமெல்லாமும் கூட வயசானா அந்த பாட்டிங்க மொகங்க மாதிரி ஆகிப்போயிடும். இந்த வீட்டு பொம்பளைங்களுக்கு நாடி கெட்டி. ஏதோ ஒன்னு வழி வழியா ஓடுது. மொத்த ஊருக்கும் கோழி சப்ளை இங்கிருந்து தான். வதவதன்னு ஒரே பொண்ணுங்க கூட்டமா இருக்கும். எங்கயாவது ஒரு மூலையில கிள்ளிப் போட்ட மாதிரி அண்ணன்னுனோ மாமன்னுனோ எவனாவது தென்படுவான் அவ்ளோ தான். இவ்ளோ நாள் இதை கவனிச்சது இல்லையா நீங்க?”

அவ்வளவு நாளாக அப்படி ஒரு ஒற்றுமை இருப்பதை உண்மையிலேயே ஊகிக்கவில்லை. மனைவியைத் திருமணத்துக்குப் பெண் பார்க்க வந்திருந்தபோதும் கூட வீட்டார் நல்ல குடும்பமா என்று பார்த்தோமே ஒழிய இப்படி ஒரு இழையை யோசித்துப் பார்க்கவில்லை.

என் பொண்டாட்டி வயிற்றைத் தள்ளிக்கொண்டு எங்கள் அருகே வந்தாள். அவள் எங்களைக் கண்டு, “என்ன சகலைகள் மாநாடா?” என்றாள்.

“ஆமா மஞ்சு. உன் வீட்டுக்காரர இப்போ தான நீ கண்ணுல காட்டிருக்க. அதான் வேப்பிலை அடிச்சுட்டிருக்கோம்”

“ம்ம் சரியத்தான்”

“என்னங்க நம்ம ரூம் சாவியைக் கொஞ்சம் குடுங்க. புடவை மாத்திட்டு வரணும்”

நான் எதையோ யோசித்தபடியே பாக்கெட்டில் கைவிட்டுச் சாவியை அவளிடம் எடுத்துக் கொடுத்தேன். கடைசியில் என் சகலப்பாடி சொன்னது போலவே தான் நடந்தது. பெண் குழந்தை தான் பிறந்தது எனக்கும்.

ஆரம்பத்தில் எல்லாம் சீக்கிரமே பிள்ளை வேண்டும் என்றிருந்தது. அதுவும் ஆண் வாரிசாக இருக்க வேண்டும் என்றிருந்தது. அதுவும் இல்லாமல் ஆகிவிட்டதென்றவுடன் பிறந்திருக்கும் பெண் குழந்தையில் என் ஜாடையைத் தேடும் படி ஆகிவிட்டது. என் மகளிடம் அவள் பிறந்ததிலிருந்து மூன்று வயது வரை ஜாடை சரியாகப் பதியாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. அவளது நான்காவது வயதில் இருந்து சரியாகத் துலங்கி வரத் துவங்கியது. சொல்லி வைத்தது போல அவளது அம்மாவின் ஜாடை தான் அவளுக்கும். அதே நிறம். அதே காது. அதே மூக்கு. அதே முழி. இதிலும் நான் ஓரங்கட்டப்பட்டிருக்கிறேன்.

என் மகளுக்கு வயதாக வயதாக அந்தத் துலக்கம் இன்னும் கூடி வந்தது. கருகருவென்றிருக்கும் குட்டை முடிக் கூந்தலில், ஓரமாக மறைந்திருக்கும் தெற்றுப்பல்லில், இன்னும் ஏன் உயரத்திலும் கூட அவள் அம்மா தான்.

திருமணம் முடிந்து சென்றுவிட்ட பின்னர் எப்போதோ ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருந்தாள். என் மனைவி எங்கோ வெளியே சென்றிருந்தாள். புடவை கட்டிக் கொண்டு நின்றிருந்தவளை நான் பின் பக்கத்தில் இருந்து பார்த்துவிட்டு, “என்ன மஞ்சு, அதுக்குள்ள திரும்பி வந்துட்ட?” என்றேன். அவள் திரும்பிப் பார்த்து, “அப்பா, நான் அம்மா இல்லப்பா” என்றாள். எதற்கோ கோயில் விசேஷத்துக்காக அவளை இவள் வரச் சொல்லியிருக்கிறாள்.

என் மகளின் நடை உடை பாவனை அனைத்திலும் அச்சு பிசகாமல் கோழிப்பண்ணையின் ஆதிக்கம் தான். என் மகள் புருவம் உயர்த்தி ஒரு பக்கமாகத் தலை சாய்த்து அமைதியாக யோசித்தபடி இருந்ததைப் பலமுறை கவனித்திருக்கிறேன். அதிலும் அவள் அம்மாவைத் தான் கொண்டிருக்கிறாள். நான் வேண்டுமென்றே விளையாட்டாய் அதை போன்று நடித்துப் பார்ப்பேன். சரியாய் வராது. ஒரு வேளை அவர்களின் உருவ அமைப்புக்கும் மனப்பாங்கிற்கும் அப்படி அமர்ந்து சிந்தித்தால் தான் வசதிப்பட்டு வரும் போல.

இன்னும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். என் மனைவிக்கு இன்று வரைக்கும் – அவள் ஏழு கழுதை வயதை அடைந்துவிட்ட பிறகும் – எதையும் சிந்தாமல் சாப்பிடத் தெரியாது. காராபூந்தி போன்ற சில விஷயங்களைத் தந்தால் அவள் உண்டு முடித்ததும் தரையில் சில மணிகள் சிதறிக் கிடக்கும். அவளிடம் பல முறை சொல்லியாகிவிட்டது. ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு கதை தான். நான் சொல்வது அவளுக்கு ஏறவில்லை. இல்லை என் மொழியும் தொனியும் அவளுக்கு வேறு மாதிரி ஒலிக்கிறதோ என்னவோ. சரி நான் சொல்லித் தான் உரைப்பதில்லை. நடக்கும்போது காலில் பட்டு நறநறக்குமே அதுவும் கூடவா உரைக்காது. அப்படியே அமர்ந்திருப்பாள். அவளுடன் என் மகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டுவிடுவாள். அவளைப் பார்த்து இவளும் கெடுகிறாளா? இல்லை இயல்பாகவே இப்படிச் சிந்தி சாப்பிடுவது தான் அவர்களுக்குத் தோதுப்பட்டு வருகிறதா தெரியவில்லை. சோபாவில் அமர்ந்து கொண்டு எதையேனும் கொறித்தபடி இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள். கொறித்ததெல்லாம் கீழே சிந்திக் கிடக்கும். மறுநாள் கூட்டும்போது நான் தான் அதை அள்ள வேண்டியது வரும். எழுந்தெழுந்து அதை தாண்டி தாண்டி சென்று நடந்து கொண்டிருப்பார்களே ஒழிய காலில் கிடந்து மிதிபடுவது அவர்கள் இருவருக்குமே உரைப்பதில்லை. எனக்கு மட்டும் தான் காலில் மிதிபடுகின்ற காராபூந்தி நறநறக்குமா அவர்களுக்குப் பூ மிதிப்பது போல இருக்குமா என்று சந்தேகம் வந்துவிடும். சோதித்துப் பார்த்துக் கொள்வேன்.

சரி நடை உடை பாவனை தான் இல்லையென்று ஆகிவிட்டது குறைந்தபட்சம் சிந்தனை முறையிலாவது என் மகள் என்னைக் கொண்டிருக்கிறாளா என்று யோசித்துப் பார்த்ததுண்டு. ஒருமுறை அவள் பெரியவளாகிய பின் கல்லூரிக்கோ எங்கோ சென்றுவிட்டு திரும்பும்போது சென்னை சென்ட்ரலில் இறங்கி இருந்தாள். கையில் ஒரு பெரிய கனமான பெட்டியை வைத்திருந்தாள். அவள் புக் செய்திருந்த இருக்கையோ ரயிலின் கடைசி கம்பார்ட்மெண்ட்டில் எங்கேயோ இருந்தது. அவளை அழைக்கச் செல்ல எனக்குச் சற்று தாமதமாகிவிட்டது. அவளே மெயின் லாஞ்சுக்கு வந்துவிட்டாள். சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனின் அந்த மூலையில் இருந்து இந்த மூலைக்கு கையில் இருக்கும் பெட்டியை லொங்கு லொங்கு என்று தூக்கியபடி மூச்சிரைக்க வந்து என்னைக் கண்டு கொண்டு பேச்சுக் கொடுத்தாள்.

“என்னடி இப்படி இளைக்குது உனக்கு. பொறுமையா வரவேண்டியது தானே. ரொம்ப பின்னாடியே இறங்கிட்டியா?” என்றேன். பிறகு தான் அவள் கையில் வைத்திருந்த பெட்டியைப் பார்த்தேன். எனக்குச் சட்டென ஆத்திரம் வந்தது. அது பெட்டியே இல்லை. ட்ராலி. பிளாட்ஃபாரத்தில் தரதரவென்று இழுத்துக் கொண்டே வரலாம் அதை. ஆனால் அவள் மாங்கு மாங்கென தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாள். மஞ்சுவும் இப்படித்தான் செய்வாள். அவர்களுக்கு ஏன் இந்தச் சுரணை இருப்பதில்லை? “காற்றுக்கா பெற்றிருக்கிறாள் என் மனைவி இவளை?” பேசாமல் என் சுரணைக்கு இன்னோர் பிள்ளையைப் பெற்றுக் கொண்டிருந்திருக்கலாமோ என்று சில சமயங்களில் தோன்றிப் போய்விடும்.

நான் முடிந்தவரை என் மனைவியுடன் போராடுவதை நிறுத்தியிருந்தேன். அவளை இனி திருத்த முடியாது. ஆனால் என் மகளிடம் முயன்று பார்த்தேன். ஏதாவதுதொன்றை என்னிடம் இருந்து அவளுக்குக் கடத்திவிட முடியாதா என்று முயல்வேன். ஒருமுறை அவள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு காலேஜுக்குச் சேர இருந்தாள். அவள் வெளியே சென்று இளங்கலை அறிவியல் படிப்புகளுக்கான அப்ளிகேஷன் ஃபார்ம்களை வாங்கி வந்தாள். நான் இன்ஜினியரிங் காலேஜ் அப்ளிகேஷன்களை வாங்கி வைத்திருந்தேன். அவளுக்கு அதில் உடன்பாடில்லை. “இனிமே இஞ்சினியரிங்குதான் ஸ்கோப் ஜாஸ்திம்மா. ஈஸியா வேலையும் கிடைக்கும்” என்று சொல்லிப் பார்த்தேன் அவளிடம். அவள் கேட்பதாக இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

“அப்படி என்ன பிடிவாதம் உனக்கு. நான் சொல்றத கொஞ்சம் கேட்டுக்க கூடாதா? அப்படியே உங்க அம்மா மாதிரி தான் நீயும். நான் சொல்றது எதுவுமே உரைக்காதில்ல உங்களுக்கு” என்றேன்.

அவ்வளவு நாட்களாக எனக்குள் இருந்ததை இந்த விஷயத்தோடு முடிச்சிட்டு என்னை அறியாமலேயே பெரிதுபடுத்தினேன்.

“என் மகளுன்னு நான் என்ன உரிமை எடுத்துக்க முடியுது உன்கிட்ட. என்னோட எந்தப் பங்கு உன்கிட்ட இருக்கு. நீ எதுலயாச்சும் எப்பயாச்சும் என்ன மாதிரி நடந்திருக்கியா? அல்லது நான் சொல்றத தான் கேட்டிருக்கியா? என்னோட எந்த சாறும் உன்கிட்ட இறங்கலன்னா நான் யாரு அப்போ? பேருக்கும் இனிஷியலுக்கும் தேவைப்படற ஒரு அப்பா அவ்ளோ தானா?”

அவள், “நீங்க ஏம்பா அப்படிலாம் ஓன் பண்ணிக்கணுமுன்னு நினைக்கிறீங்க. அப்படியிருக்கணும்னு அவசியமில்லையே? உங்களை என்கிட்ட திணிக்க பாக்கறீங்க. என்னோட ஓன் வில்லுல என்னை போகவிடுங்க ப்ளீஸ்” என்று கேட்டுவிட்டு நகர்ந்து சென்றுவிட்டாள்.

என்னது என்னை அவளிடம் திணிக்கிறேனா? அன்று நான் சரியாக உறங்கவில்லை. கோழிப்பண்ணையிடம் என்னை முழுதாகக் காவு கொடுக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். என்னை மொத்தமாக உறிஞ்சிவிட்டார்கள். என்னில் இருந்து இனி எதுவும் எஞ்சப் போவதில்லை. என்னிடம் இருந்து எதையும் அவள் கொண்டு போகப் போவதில்லை. என் மனைவிக்கும் அவள் குடும்பத்துக்கும் அவர்கள் குடிவழியைத் தொடரச் செய்ய, நிலைகொள்ளச் செய்ய என்னைப் போன்ற ஆண்களைப் பயன்படுத்திக் கொண்டு பலிகடா ஆக்குகிறார்கள். நான் அவர்கள் கால் வைத்து நடை பயிலும் தடம் மட்டுமே. பாதை மட்டுமே. ஊடகம் மட்டுமே. அவர்கள் சென்று சேரும்போது அவர்கள் கழற்றி வைக்கும் செருப்பிற்கு அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நடை பாதையின் பொருக்கு மணலாகக் கூட நான் எஞ்ச போவதில்லை. என் மகளைப் பொறுத்த வரை நான் வெறும் காற்று தான். வெறும் பூஜ்ஜியம் தான். நான் என் கண் முன்னாடியே தொலைந்து கொண்டிருக்கிறேன். நானெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சுழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

என் மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்திருந்தோம். தரகர் நல்ல வரன், நல்ல இடம் என்று சொல்லிக் கொண்டு வந்தார். மகளுக்கும் மனைவிக்கும் அந்த வரன் பிடித்திருந்தது. உடனேயே ஒத்துக் கொண்டார்கள். எனக்கும் பெரிதாகப் புகாரில்லை. நிச்சயத் தாம்பூலம் முடிந்து திருமணத்துக்கு மூன்று மாத இடைவெளி. அப்போதெல்லாம் அவள் அவளது பின்னாளைய கணவனுடன் ஃபோனிலேயே காலம் கழித்துக் கொண்டிருப்பாள். அன்று அவள் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள். எதற்காகவோ அவள் பக்கமாக நான் சென்றபோது என் காதில் அந்தப் பேச்சுக்குரல் விழுந்தது. “ஸீ நான் அப்படியே எங்கம்மா மாதிரி” என்று எதற்கோ சொல்லி குலுங்கிச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் அவள். “அப்படி சொல்லிக்கிறதுல அப்படி ஒரு பெருமை அவள் முகத்துல வந்து அடையுது இல்ல” என்று நான் அவளைப் பார்த்துக் கொண்டே நின்று நினைத்துக் கொண்டேன். சரியான பீத்தப் பெருமை.

ஒருமுறை என் மகளுக்குத் திருமணம் முடிந்து தலை தீபாவளிக்குச் சீர்வரிசை வைக்க நானும் என் மனைவியும் என் மகள் வீட்டுக்குச் சென்றிருந்தோம். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவர்கள் வீட்டு ஹாலில் அடுக்கி வைத்துவிட்டுப் புறப்படத் தயாரானோம். சம்பந்தியம்மா எங்களை அங்கேயே சாப்பிட்டுப்போகும்படி சொன்னார். சாப்பிட்டோம். என் மகள் தான் சமைத்திருந்ததாகச் சொன்னார். என் வீட்டில் என் மகள் சமைத்து நான் சாப்பிட்டதில்லை. அவள் அம்மா அருகே வெறுமனே நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவளாய்த் தான் இருப்பாள். சாப்பிட்டு எழுந்து கொண்டோம். என் வீட்டில் சாப்பிடுவது போலவே தான் இருந்தது சுவை. பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டோம். அடுத்த தீபாவளிக்கு இங்க கிருஷ்ணர் தவழணும் என்று சொல்லி எங்களை வழியனுப்பி வைத்தார் சம்பந்தியம்மா. நான் மந்தகாசமாகப் புன்னகைத்துவிட்டு வந்தேன். திரும்பும்போது வழியில் ஆட்டோவில் மனைவி என்னிடம் கேட்டாள்.

“இன்னிக்கு நம்ம பொண்ணு சமச்சது எப்படி இருந்தது உங்களுக்கு?”

“வாடிக்கையா நீ சமைக்கிற மாதிரியே தான் இருந்தது. நம்ம வீட்ல சாப்புடறா மாதிரியே இருந்தது” என்றேன்.

“எனக்கும் அப்படி தான் இருந்தது. ஆனா சாப்பிட்ட தட்டை அலம்பி சமையல் ரூமுக்குள்ள வைக்க போன போது சம்பந்தியம்மா என்னை கூப்பிட்டு உங்கப் பொண்ணு நல்லா சமைக்கிறா… ஆனா உப்பு கணக்கு தான் கொஞ்சம் தெரியமாட்டேங்குது. கம்மியா போயிடுதுங்கறாங்க. உங்களுக்கு உப்பு சரியா தானே இருந்தது?”

நான் “ஆமாம்” என்றேன்.

பிறகு தான் எனக்கு உரைத்தது. நான் என் மனைவியைத் திருமணம் செய்து அழைத்துக் கொண்டு வந்த புதிதில் சில வருடங்களுக்கு அவள் சமையலை உண்டுவிட்டு “கொஞ்சம் உப்பு போடு. பத்த மாட்டேங்குது, இன்னும் கொஞ்சம் போடு” என்று பல முறை சொல்லி வந்திருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பிறகு இப்படிச் சாப்பிட்டு சாப்பிட்டு எனக்குமே பழகிவிட்டது போல. என் நாக்கின் சுவை அரும்புகளை மழுங்கடித்திருக்கிறார்கள் இவர்கள். நான் அவர்களை மாற்ற முண்டியடித்தால் அவர்கள் என் சுரணையுணர்வைச் சத்தமில்லாமல் மழுங்கடித்திருக்கிறார்களே என்று ஒருகணம் தோன்றியது. என்னை அறியாமலே நிகழ்ந்திருக்கிறது இது. நானாகவே என்னை அதில் ஒப்புக் கொடுத்துவிட்டேன் போலிருக்கிறது.

இன்று என் மகள் தன் தலை பிரசவத்திற்கு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். என்ன தான் சொன்னாலும் அவளுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாகத் தான் இருக்கிறது. ஒருவேளை கணிப்பில் இருந்து தப்பிப் பிறந்துவிட்டால்? கோழிப்பண்ணையின் ஆதிக்கம் தொடர்ந்து கோலோச்சுமா? இல்லை கோல் தாழ்ந்துவிடுமா? என்னவென்று பொறுமையாக இருந்து வேடிக்கை பார்ப்போம் என்றிருந்தது. ஆனால் எண்ணியது போலவே என் மகளுக்குப் பெண் தான் பிறந்தது. மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் அதில் சந்தோஷம் தான்.

“மாமா உங்க பேத்தி அப்படியே மூக்கும் முழியுமா உங்க பொண்ணாட்டமே இருக்கா பாருங்க” என்று பிறந்த குழந்தையைக் கையில் எடுத்து என் கையில் தந்து காண்பித்தார் என் மருமகன். “இவர் வேறு விஷயம் புரியாமல்…” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன். அவரைப் பார்க்கவே எனக்குப் பாவமாக இருந்தது. பாவம் அவரையும் பலிகடா ஆக்கிவிட்டார்கள். தான் பலிகடா என்று தெரியாத வரை பலிகடாவுக்குப் பாதகம் இல்லை தான் இல்லையா?

என் பேத்திக்கு மூன்றரை வயதானபோது ஒருமுறை, என் மகள் எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு பத்து நாள் தங்கியிருந்தாள். ‘abcd’, ‘1234’ எல்லாம் பாப்பாவுக்குச் சொல்லிக் கொடுத்து எழுதப் பழக்கிக் கொண்டிருந்தோம். அடுத்த வருடம் அவளை நர்சரியில் சேர்க்க வேண்டும். நானும் பாப்பாவின் அருகே அமர்ந்து கொண்டு அவ்வப்போது அவளை வேடிக்கை பார்ப்பதுண்டு. என்ன தான் இருந்தாலும் அவள் என் பேத்தி தானே என்று நான் கொஞ்சம் தணிந்திருந்தேன். “தாத்தாக்கு ஆக்குடு” என்று தனக்கு உணவு ஊட்டும் போதெல்லாம் நான் அருகில் இருந்தால் சொல்வாள்.

அன்றைக்கு மனைவி அடுத்த தெருவில் எவர் வீட்டுக்கோ சென்றிருந்தாள். மகள் அடுப்படியில் வேலையாக இருந்தாள். பாப்பா சத்தமில்லாமல் கூடத்தில் அமர்ந்தபடி பல்பத்தை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டு ஸ்லேட்டில் சுழித்து வைத்து சுழித்து வைத்துக் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

“அப்பா அவளோட கைய புடிச்சி ஒழுங்கா எழுத சொல்லிக்கொடுப்பா. அவள கொஞ்சம் பழக்கு” என்றாள் அடுப்படியில் இருந்த மகள்.

நான் அவள் வைத்திருந்த ஸ்லேட்டை வாங்கி ஓரமாக வைத்தேன். இன்னொரு ஸ்லேட்டை எடுத்து ஈரத்துணியால் நன்றாகத் துடைத்துப் பல்பத்தைக் கொண்டு அந்த ஸ்லேட்டில் ‘a’ என்று எழுதி பாப்பாவின் முன் நீட்டினேன். அதற்குக் கீழே அவளை எழுதச் சொன்னேன். அவளும் குத்துமதிப்பான ஒரு ‘a’ வை எப்படியோ போட்டுவிட்டாள்.

“சரியா எழுதறாளா?”

“சரியாத்தான் எழுதறா”

“நல்லா பாருப்பா. எழுத்துகள எல்லாம் சரியா சுழிக்கத் தெரியுதா பாரு”

இன்னோர் முறை அவளை ‘a’ எழுதச் சொன்னேன். கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் சரியாகத் தான் எழுதியிருந்த மாதிரி இருந்தது.

அவளிடமிருந்து ஸ்லேட்டை வாங்கி இம்முறை “ஜீரோ” என்று போட்டுக் கொடுத்தேன்.

“பாப்பா இப்ப இதை எழுதுடீ தங்கம்.”

அம்முறை அவளும் எப்படியோ ஜீரோவை கொண்டு வந்துவிட்டாள். ஆனால் எதுவோ வித்தியாசமாகப் பட்டது.

“எங்க இன்னோரு வாட்டி எழுதி காமி” என்றேன். போன முறை போட்டது போலவே தான் இம்முறையும் போட்டாள். எனக்குச் சட்டென பொறி தட்டி அந்த வித்தியாசம் பிடிபட்டுவிட்டது. ஒரு கணம் வியர்த்து வழிந்து எழுந்து கொண்டு, சட்டை அணிந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு என் அறைக்கு வந்து கதவைச் சாத்திக் கொண்டேன். என் அறையின் நிலைக்கண்ணாடிக்கு எதிரே நின்று, என் இடது உள்ளங்கையை விரித்து வைத்துக் கொண்டு, வலக்கை விரலால் ஜீரோ என்று போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணாடிக்கு முன்னே அந்த ஜீரோ, இடப்பக்கமாக சுழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது, எல்லோராலும் சுழிக்கப்படுவது போல. கண்ணாடிக்குள்ளே அது வலப்பக்கமாக சுழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது, பாப்பா சுழிப்பது போல.

கண்ணாடிக்கு வெளியே நிற்பது நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் நான். கண்ணாடிக்கு உள்ளே இருப்பது ‘என் ஐந்து வயது நான்’. என் ஐந்து வயதில் இப்படிச் சுழிப்பதனாலேயே வேகமாக எதையும் எழுத முடியாமல் போய்விட வாத்தியார்களிடமும் என் அப்பாவிடமும் வாங்கிய பிரம்படியும் அந்தப் பிரம்படியால் மாறிப் போயிருந்த இந்தப் பழக்கமும் நினைவு வந்தது. நான் வெளியே வந்து, பாப்பா முதலில் வரைந்து ஓரமாகப் போட்டிருந்த ஸ்லேட்டை எடுத்துப் பார்த்தேன். அதில் இருந்த சுழல் வட்டங்களும் வலப்பக்கமாகச் சுழிக்கப்பட்டிருந்தது.

1 comment for “சுழி

  1. ஆருயிர் முத்தங்கள்
    January 3, 2024 at 10:32 pm

    நீண்ட காலமாக விவாதப்பொருளாகி வரும் இயற்கை vs ஊட்டம் (Nature vs Nurture) என்பது கதையில் இழையோடியிருக்கிறது. மரபுரிமையினைக் கதைநெடுக கோறி வரும் கதைசொல்லி விதிர்த்து நிற்பது அவரது பேத்தி சுழியத்தை வலப்புறமாகச் சுழித்ததைக் கண்டுணர்ந்தபோதுதான். அதுவரை தனது முத்திரையினைச் சல்லடை போட்டு தேடும், அதனை ஏற்ற நினைக்கும் வேட்கையில் ஓடுபவர் நொய்ம்மைக்குத் தள்ளப்பட்ட நிலையில் மாய யதார்த்தத்தனமாக ஒன்றினை கண்ணாடிமுன் உணர்கிறார். வாரிசு அச்சின் மிச்சத்தினை அகழ்ந்தெடுக்க எத்தனிப்பதாய் அதன் தோல்வியில் மீளாது சுழன்று கொண்டிருப்பதான பிம்பம் உடைபடுகிறது.

    மனைவிமார் பரம்பரையின் மரபுரிமை அவரோடிணைந்த – அவர் வெறும் வினையூக்கியாகப் பயன்பட்ட நிலையில் – அடுத்தடுத்த தலைமுறைகளில் ஓச்சியிருப்பதை (உணவுண்ணும் போது சிந்துதல், உருவ அமைப்பு, சக்கரம் இருக்கும் பெட்டியைத் தள்ளாது தூக்குதல்) அவர் மீளா சுழியொன்றில் அகப்பட்டு மறைவதான பதற்றத்தை உருவாக்கி அதன் பின் வாழ்வின் மீதான பெருங்கேள்வியொன்றினை அவர்முன் நிறுத்திவிடுகிறது.

    கதையின் தலைப்பு சுழியெனச் சொல்லும் போது அனந்தனமான சார்பில் பயணிப்பதாகத் தொனித்த அதே வேளையில் மாட்டின் சுழிவகைமைகளிலுள்ள தீச்சுழிகளில் ஒன்றைப் போல அவர் வரன்பெற்ற வீட்டாரின் ஆதிக்கம் அவரை விழுங்கியிருப்பதான, தன்னிலிருந்து எதையுமே கடத்த முடியாத கையறு நிலையும் ஏக்கமும் கௌவியிருப்பதான மனநிலையும் காட்சிப்படுத்தப்படுகிறது. அவர் தேடும் உளவியல் தேவையான (Psychological needs) கௌரவ வேண்டற்பாடும் (Esteem needs) உறவுணர்வு வேண்டற்பாடும் (Belongingness needs) எட்டாக் கனியாக ஒருவித தனிமையையும் ஏற்படுத்திச் செல்கிறது. வாசகர் மீதான ஐயப்பாடாகச் சில வாக்கியங்கள் தேவைக்கதிகமாதலால் வாசகயின்பம் ஆங்காங்கு தடைபடுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...