நோவாவின் புதிய தொடர்…

‘உடைந்த கண்ணாடியை பார்க்க கூடாது’

‘இரவானதும் நகம் வெட்ட கூடாது’

‘ஒற்றைக் காலில் நிற்க கூடாது’

‘இரவில் விசில் அடிக்க கூடாது’

‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் நடக்கக்கூடாது’

‘இரவில் உப்பை வாங்க கூடாது’

கர்ப்ப காலத்தில் கூந்தல் வெட்டக்கூடாது’

இப்படி ‘கூடாது, கூடாது. கூடாது’ என நிறைய கூடாதுகளை நாம் யாவரும் கேட்டிருக்கலாம். ஏன் கூடாது என்று கேட்டால் அதையும் கேட்க கூடாது என கட்டளை வரும். இவைகளை மூடநம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் மற்றும் சகுனம் பார்ப்பது என குறிப்பிடலாம். நானும் இவைகளை எல்லாம் கேட்டு தான் வளர்ந்தேன். என் அம்மாவிடம் பல முறை ஏன் ஏன் ஏன் என கேட்டு கேட்டு வாங்கி கட்டியதுண்டு. இவற்றை இந்திய சமுதாயத்தில் மட்டுமின்றி பிற சமுதாயத்திலும் இருப்பதை கண்டிருக்கிறேன்.

சமையலறையில் பாடினால் திருமணம் ஆகாதாம். அப்படியே ஆனாலும் வயதான கணவன்தான் கிடைப்பானாம். புகைபடம் எடுக்கும் போது ஒற்றை எண்ணில் அதாவது மூவராகவோ அல்லது ஐவராகவோ அல்லது எழுவராகவோ புகைபடம் எடுத்து கொள்ள கூடாதாம். நடுவில் உள்ளவருக்கு ஆயுள் குறைந்து விடுமாம். சமைக்கும் போது கரண்டியை பாத்திரத்தில் லொட் லொட் என தட்ட கூடாதாம். வெளியே போகும்போது பூனை குறுக்கே வந்தால் செல்லும் காரியம் உருப்படாதாம். தேய்பிறையில் கூந்தல் வெட்டக்கூடாதாம். அப்படியே வெட்டினால் வளர்பிறையில் தான் வெட்ட வேண்டுமாம். அப்போதுதான் கூந்தல் விரைவாக வளருமாம். சனிகிழமைகளில் யாரேனும் இறந்தால் அதை தொடர்ந்து இன்னொரு சாவும் நாம் கேள்விபடக்கூடுமாம். இப்படி பல கூற்றுகளை நாம் கேட்டிருக்கலாம். இவை எல்லாம் கடுகளவுதான். இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாம் எதற்காக சொல்ல பட்டன? முன்பு சொல்லப்பட்ட இவைகள் ஏன் இன்றைய காலகட்டத்தில் அழிக்கப்படவில்லை? இவையெல்லாம் நிஜமா? இல்லை குழந்தைகளுக்கு அச்சமூட்ட சொல்லப்பட்டனவா? இல்லை அதற்கும் மேலாக இவற்றுள் அறிவியல் கூறுகள் ஏதேனும் சொல்லாமல் சொல்லப்படிருக்குன்றனவா? இப்படி பட்ட கேள்விகளை ஒட்டு கடைகளிலும் எதாவது குருப் சாட்டிலும் பொதுவாகவே விமர்சிப்பது உண்டு. ஆனாலும் எழுத வேண்டும் என்ற இந்த சிந்தனைக்கு நீர் ஊற்றியது நவீன் தான். அதிலும் எனக்குள் உள்ளூர இருக்கும் அறிவியல் சிந்தனை இதற்கு உறுதுணையாக இருக்கும் என ஒரு நம்பிக்கை. பிறந்தது. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். அதற்காக எல்லா நம்பிக்கைகளும் அறிவியலை காரணமாக வைத்து உருவாக்க பட்டன எனவும் சொல்ல மாட்டேன். இருக்கிறதோ இல்லையோ ஆராய்ந்துதான் பார்த்து விடுவோமே என முடிவும் செய்து விட்டேன்.

அடுத்த மாதம் முதல் முதல் பகுதி…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...