மஹாத்மன் சிறுகதைகள் : சுழற்சியில் இருந்து வெளியேறுதல்

scan0004பெருநகர வாழ்வு என்பது பெரும் பரபரப்பை தன் அடையாளமாக ஆக்கிக்கொண்டுள்ளது. காலை முதல் இரவுவரை நகர மக்கள் தங்கள் வாழ்கையைப் பரபரப்பாக ஆக்கிக் கொள்வதற்குப் பல காரணங்களை எப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். நகர வாழ்வில் யாரும் யாரையும் நின்று கவனிக்க நேரமிருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையைவிட வேகமாக ஓடக்கூடிய வித்தைகளை நகரமக்கள் கற்றுவைத்திருக்கிறார்கள். ஆயினும், பெருநகரங்களின் பரபரப்பு இயற்கையானதா அல்லது செயற்கையான ஏற்பாடா என்பதை நாம் அறிவதில்லை. அதேபோல் புறவயமாக பரபரப்பான தோற்றம் தரும் பெருநகரங்களின் ஓரங்களில் மெத்தனமாக இயங்கும் விளிம்புநிலை உலகம் ஒன்றையும் நாம் அறிந்திருப்பதில்லை.

கோலாலம்பூர் போன்ற பெருநகரங்களுக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் நாகரீக உடையுடன் அலைமோதிக் கொண்டிருக்கும் நகரமனிதர்களுக்கு இடையே தொடர்பே இல்லாத வகையில் சராசரிக்கும் கீழான மனித உருவங்களை அவ்வப்போது காண்கிறோம். இவர்கள் நகரப் பரபரப்புகளுக்குக் கொஞ்சமும் ஆட்படாமல் தங்களது தனித்த உலகப் போராட்டங்களில் முட்டிமோதிக் கொண்டு அலைபவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் மனப்பிறழ்வோடும் அழுக்கு மூட்டைகளாகவும் உலவும் இவர்களை விட்டு நாம் தூர விலகி நடக்கிறோம். அல்லது நம் குழந்தைகளுக்கு அச்சம் ஊட்டக் கூடிய பொருளாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நாகரீகமும் பரபரப்பும் ததும்பும் நகரங்களில் அந்த வாழ்க்கைச் சூழலோடு தொடர்பற்று வாழும் இந்த உதிரி மனிதர்கள் முன்பொருகாலத்தில் வாழ்க்கையின் கொண்டாட்டங்களை அனுபவித்திருக்கக் கூடும் என்னும் எதார்த்தம் நமக்கு வாழ்க்கையின் புதிர்கள் மிகுந்த இருண்ட பக்கங்களைத் திறந்து காட்டுகின்றது. வாழ்க்கை என்னும் பெரும் பூதம் மென்று துப்பிய சக்கைகளாக மட்டுமே இன்று நம் முன்னே உலவும் அம்மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது எது என்னும் வினா விடாமல் நம்மை துரத்துகிறது. அதன் ஊடே மனிதப்படைப்பின் நோக்கமும் வாழ்வின் அர்த்தமின்மையும் நமது நம்பிக்கைகளை அசைத்துப்பார்க்கிறது.

ஆயினும் அவர்களுக்கென்று ஒரு உள் உலகத்தை அந்த நகரங்களுக்குள் அவர்கள் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். நகரச் சாக்கடைக்குள் பொந்துகள் அமைத்து தங்கள் நகர்ச்சியைப் பொதுப்பார்வையில் இருந்து மறைத்துக் கொள்ளும் எலிகளைப் போல நகர அழகியலுக்கு முரணாகச் செயல்படும் இந்த உதிரி மனிதர்களின் சிதைந்த வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. உடல் என்ற இயந்திரத்தில் வயிறு மட்டுமே அவர்களின் வாழ்க்கையை நகர்த்தும் காரணியாகிக் கொண்டிருக்கிறது.

எந்தவிதத் திட்டமிடலும் இன்றி அலைந்து திரியும் இந்த மனிதர்களின் குரலை இலக்கியத்தின்வழி பதிவு செய்வது என்பது அபூர்வமான அனுபவமாகும். கூரிய சமூகப் பார்வையும் தத்துவநோக்கும் உள்ள ஒரு படைப்பாளிக்கு ஒழுங்கற்ற அந்த மனிதர்களின் அகவுலகமும் புறவுலகமும் புதிய புதிய பரிணாமங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். அந்த நுட்பமான சாத்தியங்களைத் தன் சிறுகதைகளில் முழுவதுமாக பயன்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் மஹாத்மன்.

மஹாத்மன் தனது பத்து சிறுகதைகளின் வழி மலேசிய தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதிய தோற்றத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள் முழுதும் படைப்பாளி தன்னிலையில் இருந்து சொல்பவை. அவரின் படைப்புப்பரப்பு முழுதும் தனிமனிதனின் அக புற உலகங்களை மட்டுமே விரித்து விரித்து பேசுகிறது. அந்தத் தனிமனிதன், கதைசொல்லியான “ரமேஷ்” (கிருஸ்துவப்  பெயர் டேனியல்) ஆக படைக்கப்பட்டுள்ளான்.

பெருநகரத்தில் பரதேசியாகச் சுற்றித்திரியும் ஒரு மனிதனின் வாழ்வின் கடந்தகால, நிகழ்கால நிகழ்வுகள் பல, துண்டு துண்டாக இடம் பெருகின்றன. ஒவ்வொரு துண்டும் ஒரு சிறுகதையாக வளர்ந்துள்ளது. படைப்பாளியே ‘ரமேஷ்’ என்ற பெயருடன் கதைசொல்லியாக தன் வாழ்க்கை அனுபவங்களை நினைவுகூர்ந்து சொல்லுவதன் வழி ஒரு தனிமனித வாழ்வில் ஊடுருவிச் சென்ற உறவுகளும் மதம் முதலான அதிகாரங்களும் செலுத்திய அத்துமீறல்கள் பதிவுசெய்யப்படுகின்றன. ஆகவே பத்து கதைகளையும் வாசித்து முடித்த நிலையில் இக்கதைகளை மூன்று குழுக்களாக தொகுத்துக் கொள்ள முடிகிறது. அவை:

  • ‘ரமேஷின்’ வாழ்க்கையின் தொடக்ககாலச் சிக்கல்களைச் சார்ந்த சிறுகதைகள்,
  • ‘ரமேஷின்’ மத்தியகாலப் போராட்டமும் அவலமும் சார்ந்த சிறுகதைகள்,
  • ‘ரமேஷின்’ இறுதிநிலை சார்ந்த சிறுகதைகள்

இக்கதைகள் ஒரு கோர்வையைத் தமக்குள் அமைத்துக் கொண்டுள்ளன. எனவே, இவை தனித் தனி சிறுகதைகள் என்ற நிலை மறைந்து ஒரு முழு வாழ்க்கையின் சிதறிய சித்தரிப்புகள் என்ற தெளிவே ஏற்படுகிறது.

மஹாத்மன் தன்னிலையிலேயே எல்லாக் கதைகளையும் எழுதியிருக்கிறார். எழுத்தாளர்களுக்கு தன்னிலை எழுத்துமுறை மிகவும்  அனுகூலமானது. காரணம் இந்த முறையில் கதையை வளைத்து நெளித்து கூட்டிச்செல்ல மிகவும் சுலபமாக இருக்கும். அதே நேரம் கதையை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் கதைக்குள் வரவும் முடியும். ஆகவே புதிரோடும் அமைதியின்றியும் அலைபாயும் மஹாத்மனின் எழுத்துக்கு இந்தக் கூறல்முறை மிகவும் பொருத்தமாக இருக்கிறது. மஹாத்மன் தன் புனைவுகளை ஒரு நினைவுக் குறிப்பு எழுதும் தோரணையிலேயே எழுதியிருக்கிறார். ஒவ்வொரு சிறுகதையையும் தன் நினைவு அடுக்குகளில் இருந்து தொகுத்து எடுத்து புனைவாக்கி இருக்கிறார்.

ஆயினும், இக்கதைகளில் துருத்திக் கொண்டு தெரியும் அலட்டல்களோ, புலம்பல்களோ இல்லை. அவை தன் நிலையை மிகவும் அடங்கிய குரலிலேயே சொல்கின்றன. வாழ்க்கையின் இக்கட்டான பகுதிகளையும் அவலங்களையும் சொல்லும்போதுகூட அடங்கிய தொனியிலேயே சொல்லிச் செல்கின்றன.

பொதுவாக மஹாத்மனின் கதைகள் வாழ்க்கையைக் கொண்டாட்டமாக காட்டும் வகையைச் சார்ந்தவை அல்ல. உயரிய நோக்கங்களையோ லட்சியங்களையோ நோக்கி ஆற்றுப்படுத்துவனவும் அல்ல. அவை வாழ்க்கையின் மையத்திலிருந்து விலகிச்செல்லும் போக்கையே கொண்டிருக்கிறன. மனித இருப்பு குறித்த வினாக்களை அவை கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருக்கின்றன. தன்னைப் படைத்தவனோடு எப்போதும் பிணக்கிக் கொண்டும் தர்க்கம் செய்துகொண்டும் இருக்கும் மனநிலை, விரிந்த தத்துவநோக்குக்கு வாசகனைக் கொண்டு செல்கிறது. அவரது பல கதைகள் இருத்தலியல் மெய்யியலோடு பொருந்திப்போகின்றன. இருத்தலியல் முன்வைக்கும் வாழ்க்கையின் அர்த்தமின்மையும் அது உண்டாக்கும் தவிப்புகளும் அவரின் கதைகளின் மையச்சிக்கலாக இருக்கிறது.

மேலும், மதம் குறித்த பிரஞ்சையும் மதம் காட்டும் கடவுள் கொள்கையும் ஒரு தனிமனித ஆழ்மனதில் எழுப்பக்கூடிய அதிர்வுகளை மஹாத்மனின் கதைகள் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கின்றன. போரினாலும் நோயினாலும் பெரும் அழிவுகளைக் கண்ட மனிதமனம் வாழ்க்கைகுறித்த நம்பிக்கையை இழந்ததன் விளைவே இருத்தலியல் தத்துவமாகவும் கோட்பாடாகவும் வெளிப்பட்டதென்பது வரலாறு. அவ்வகையில் தனிமனித வாழ்வில் அத்துமீறல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும் மதத் தீவிரப்போக்கும் கூட மனித இருப்பைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடும் என்பதை மஹாத்மனின் கதைகள் மெய்ப்பிக்கின்றன.

‘மதம் பிடித்தது’ என்னும் கதையில், உலகியல் தேவையை எதிர்பார்ப்பாக வைத்து மதம் மாறும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள் பேசப்படுகின்றன.  மனப்பிறழ்வுக்கு ஆளான தந்தையைக் கிருஸ்துவ மத வழிமுறையில் குணப்படுத்த சகோதரர்கள் முனைகின்றனர். பின்னர், கதைசொல்லி அந்த மார்க்கத்தால் கவரப்பட்டு தன்னை கிருஸ்துவ மார்க்கத்தில் முழுதுமாக இணைத்துக் கொள்ளும்போது தன் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படுகிறான். அவன் தந்தை முற்றிய மனநோயின் காரணமாக அவன் தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன பிறகு அவன் மீதான சுற்றத்தின் புறக்கணிப்பு உச்சத்தை அடைகிறது. அதன் காரணமாக அவனது மனக்குழப்பங்கள் தீவிரம் அடைந்து பிறழ்வு நிலைக்குச் செல்கிறான். அதன் பின்னர் அவன் குடும்பத்தில் இருந்து முற்றாக விலகி தனித்த வாழ்க்கை நடத்தவும் பல அவலங்களைச் சந்திக்கவும் அந்தப் புறக்கணிப்புகள் தந்த காயங்கள் முக்கிய காரணமாகின்றன.

இக்கதையோடு மிகவும் நெருக்கமானது, ‘மூன்றாவது அற்புதம்’ என்னும் மற்றொரு கதை. இக்கதை முழுக்கவும் கிருஸ்துவ மத அபிமானிகளின் ஒரு குழுவினர் காணவிரும்பும் அற்புதங்களையும் இறைகிருபையையும் சார்ந்து பூடகமான மொழியில் எழுதப்பட்டுள்ளது. மேலோட்ட வாசிப்புக்கு இக்கதை மாயக்காட்சிகள் போன்ற குழப்பத்தைத் தருகிறது. கிருஸ்துவ மதக் கோட்பாடுகளையும் இறைதத்துவங்களையும் சார்ந்த உளச்சிக்கலை நோக்கி இக்கதை எழுதப்பட்டுள்ளது.  இறைவன் மீது வைக்கும் தூய அன்புக்கு இணையாக எந்தவகை அற்புதமும் ஈடில்லை என்பதையே இறுதியில் தெளிவுபடுத்துகிறது. அற்புதங்களைத் தேடிச் செல்லுதல் இறை விரோத பாதைக்கு இட்டுச்செல்லக்கூடும் என்பதையும் சொல்கிறது. ஆனால் இக்கதை முழுக்க மதச்சார்பு சிந்தனைகளால் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு கலைவெளிப்பாடுகளை விமர்சனம் செய்வோர் அதன் கதை அம்சங்களிலோ காட்சிப் படிவங்களிலோ, ஏரணம் (லாஜிக்) இல்லை என்ற குறையைச் சுட்டிக்காட்டுவது வழக்கம். ஆனால் கலை வெளிப்பாடுகளில் ஏரணம் பார்ப்பதே தவறுதான். கலைவெளிப்பாடுகளில் வேண்டியது கலைத்தன்மையும் அழகியலும்தான். ஒரு படைப்பு வாசகனை முழுவதுமாக ஆட்கொள்ள அதன் தர்க்கவாதத்தை விட முதிர்ந்த கலைத்தன்மையே முக்கியம். நடைமுறை வாழ்வியல் சித்தரிப்பாக இருந்தாலும் மாயஉலகச் சித்தரிப்பாக இருந்தாலும் அதன் கலையமைதியே அப்படைப்பின் தரத்தை முடிவுசெய்கிறது. நான் மஹாத்மனின் சிறுகதை தொகுப்பை வாசித்த வேளையில் இக்கருத்தில் மேலும் உறுதியாகிறேன்.

அவர் கதைகளின் கலையுக்தி மிக அபாரமானது. ஆகவே எவ்வளவு வெளிப்படையான ஏரணப்பிழையையும் அவரது தேர்ந்த கலைநயம் நேர்செய்துவிடுகிறது.  உதாரணத்திற்கு ‘பிணப்பெட்டி’ என்னும் சிறுகதையைச் சொல்லலாம். அக்கதையில், ஆண்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க பொருந்தாத பிணப்பெட்டியை இருபெண்கள் சில நிமிடங்களில் சரி செய்வதாகக் கூறப்படுவது நடைமுறைக்குப் பொருந்துவதாக இல்லை. அந்த நேரத்தில் அப்பெண்களின் உடல்மொழியும் மிகவும் செயற்கையானவை. ஆனால் இக்குறைகளை, அதிகார வர்க்கத்திற்கும் செயல்பாட்டாளர்களுக்கும் இருக்கும் முரணைக் காட்டும் தேர்ந்த கலைநயத்தின் வழி நேர்செய்துவிடுகிறார்.

அடுத்தது ‘ஓ லாவே’ என்னும் சிறுகதையும் “நடந்தது என்னவென்றால்” என்ற சிறுகதையும்interview-e ஒரு நீண்ட போராட்டத்தின் இரண்டு காட்சிகளாக அமைந்துள்ளன. ஓ லாவே மிகச் சிறப்பாக அமைந்திருக்கவேண்டிய கதை. அதன் எதார்த்தமும் காட்சி விவரிப்பும் மிக அழகானவை. ஆனால் அது தன் முடிவில் வேறு ஒரு சிறுகதைக்கான கருவை புகுத்தியிருப்பதால் அதன் கட்டமைப்பு சிதைந்துள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் கொள்கையோடு உலாவரும் ஒரு நண்பனோடு, தனக்குள் எழும் குற்ற உணர்வுகளை மறைத்துக்கொண்டு வாழ்க்கை இன்பங்களைச் சுவைத்து திரியும் கதைசொல்லி, அந்த நண்பனின் குற்றங்களிலும் பங்கு கொள்ளவேண்டிய நன்றிக்குறியவனாகிறான். ஆனால் கதை முடிவில் கைவிடப்பட்ட விநாயகர் சிலை கோயிலாக மாறும் காட்சிகள் வேறு ஒரு தனி சிறுகதைக்குரியது என்பதால் இக்கதையுடன் அக்காட்சிகள் ஒட்டாமல் தனித்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, “நடந்தது என்னவென்றால்” என்னும் சிறுகதை அதிர்ச்சியான காட்சிகள் நிரம்பிய சிறுகதை. கதைசொல்லி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த சிலவருட சிறைவாச அனுபவமே இக்கதையின் மையம். சிறைவாழ்க்கையின் அவலங்களையும் இனஒதுக்கல்களையும் உள் அரசியலையும் வெளிப்படையாக பேசும் கதை இது. மற்ற கதைகளில் இருந்து இக்கதை தன் வெளிப்படையான எழுத்துநடையாலும் சாகசக் காட்சிகளாலும் தனித்து நிற்கிறது. அதேபோல் இக்கதையின் விறுவிறுப்பும் மற்ற கதைகளில் காணக் கிடைக்காததே.

‘பரதேசி நடையும் அந்த அலறலும்’, ‘கடவுள் கொல்லப் பார்த்தார்’ ஆகிய இருகதைகளும் அசலான அலைந்து திரியும் மனதின் உச்சவெளிப்பாடுகள். வாழ்க்கையின் மீதும் தன் இருப்பின் மீதும் எழும் கேள்விகளோடும் கட்டுப்படுத்த முடியாத தன் வயிற்றுப் பசியோடும் போராடும் ஒரு மனம் சிதைந்த மனிதனின் புதிரான வாழ்க்கையை இக்கதைகள் காட்டுகின்றன. கோலாலம்பூரில் நகரப் பரபரப்புகளில் இருந்து ஒதுங்கி விளிம்புநிலை மனிதர்களின் சோற்று வங்கியாகச் செயல்படும் பல அமைப்புகளை இக்கதையில் மிகுந்த வியப்போடு வாசித்தேன். அந்த அமைப்புகளின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் அவை அறத்தின் வழிநின்று சேவைபுரிபனவாக இருக்கின்றன. ஆயினும் கதைசொல்லி எந்த அமைப்போடும் தன்னை பொருத்திக் கொள்ளமுடியாமல் மனம் போன போக்கில் அலைந்து திரிவதிலேயே தன்னை அமைதிப்படுத்திக்கொள்ள முனைகிறான்.

அலைந்து திரியும் மனதின் உச்சமாக அமைந்திருப்பது ‘‘கடவுள் கொல்லப் பார்த்தார்’ என்னும் அடுத்த சிறுகதை. மஹாத்மனின் மொழி ஆறாகப் பெருகி ஓடும் கதை இது. இக்கதையில் கதைசொல்லி தன்னைப் படைத்தவனிடம் சவால் விடுகிறான். முரட்டுத்தனமான முயற்சிகளின்வழி படைத்தவனை நேரில் அழைக்கிறான். தன் உடலை வருத்திக் கொள்வதன்வழி தன் மன ஓலங்களை அடக்கப் பார்க்கிறான். காடோடும் மலையோடும், சகதியோடும் தன்னைக் கரைத்துக்கொள்ள அவன் மனம் ஏங்குகிறது. ஆனால் கதையின் இறுதிவரை கடவுள் அவன் முன் வரவில்லை. அவன் வாழ்க்கையின் சிக்கல்களுக்கு விளக்கங்களும் இல்லை. ஆயினும் அவன் ஆபத்தான நிலையில் இருந்து எதிர்பாரா விதமாக காப்பாற்றப்படுகிறான். ‘‘கடவுள் கொல்லப் பார்த்தார்” என்னும் தலைப்புக்கு முரணாக கதை முடிகிறது. கடவுள் அவனைக் காப்பாற்றிவிடுகிறார். ஆனால் காப்பாற்றுதலின் வழி என்ன சொல்லவருகிறார் என்பது புரியாமலேயே இருக்கிறது.

தொடர்ந்து வரும் “மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்” கதை மூன்று கிளைகளாக விரிந்துள்ளது. ஒவ்வொரு ‘சுருளும்’ ஒரு புனைவாகிறது. இக்கதைகள் கதைசொல்லியின் மரணத்திற்குப் பின்னர் நிகழும் பரலோக நிகழ்வுகளைக் களமாக கொண்டவை. சுருள் எனப்படுவது கதைசொல்லியின் முக்கியமான மூன்று ரகசிய அனுபவங்கள் சார்ந்தது.  இந்த ரகசியங்கள் தேவதூதனின் பதிவில் இருந்து வாசிக்கப்படுகிறது. தன் உலகவாழ்வில் தான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அந்த ரகசியங்கள் மிக விரிவாக கதைசொல்லியின் குரலிலேயே கூறப்படுகின்றது. கதை சொல்லியின் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் பாதிக்கச் செய்த அல்லது புரட்டிப் போட்ட அச்சம்பவங்கள் கதைசொல்லியின் அமைதியற்ற வாழ்க்கைக்கு காரணமாகின்றன.

நாகேந்திர ஐயாவை சாட்டையில் விளாசுவதில் இருந்தும், தன் தாயின் மீது அரிவாளை வீசும்போதும், விடுதி முதலாளியைக் கொலை செய்யும்போதும் கதைசொல்லி சட்டென அடையும் தீவிர மனநிலை அசாதாரணமானது. அந்தத் தீவிரம் கணநேரத்தில் பூதாகாரமாகிப் பின் மறைகிறது. உதாரணத்திற்கு, “மூன்றாவது சுருள்”  என்ற கதையில் கொலை செய்து பிணத்தை மறைக்கும் பதற்றத்திலும், (பிணத்தை மறைக்கும் திட்டம் நிறைவேறாவிட்டால்) ‘விடுதியை எரிப்பது என்று முடிவெடுத்திருந்தது மனம். துருப்பிடித்த தனமாய் யோசிக்கும் இம்மனதை கட்டுப்படுத்த வேண்டி வந்தது’  என்ற வரிகளின் வழி கதைசொல்லியின் மனம் அடையும் அபாயத்தின் உச்சம் தெளிவாகப் புலப்படுகிறது. அந்த மனநிலைகளைப் பற்றிப் பின்னர் வருந்தினாலும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

முடிவாக, மஹாத்மன் சிறுகதைகள் வாழ்க்கையின் மிகவும் ஒதுக்குப்புறமான பகுதிகளை முன்னிலைப்படுத்துகிறது. பெரும்பான்மை அறிந்திராத விநோத ஆனால் அதிர்வு மிக்க வாழ்க்கைச் சம்பவங்களே அவரின் புனைவுகளுக்கு அழுத்தம் சேர்க்கின்றன. அதோடு, கிருஸ்துவ மத ஈர்ப்பால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் குழப்பங்களும் முரண்களும் அதிகக் கவனம் பெறுகின்றன. அவர் தனது வாழ்க்கைத் தத்துவத்தை கிருஸ்துவ மெய்யியல் வழியேதான் அறிந்து கொள்ள முனைகிறார். ததும்பி வழியும் மனவெழுச்சிகளை இறைவன் என்ற பேராற்றலின் முன் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கொட்டிக்கொண்டே இருகிறார். பாவம் புண்ணியம் என்ற இருமைக் கொள்கைகளில் மனம் ஊசலாடும் நிலையை வெல்ல கடவுளின் இருப்பை நாடுகிறார். ஆயினும், கடல் அலை விட்டுச்செல்லும் கிளிஞ்சல்கள் போல அவர் கதைகள் இறுதியில் விட்டுச் செல்லும் படிமமானது, பொருள் புரியா வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து விடுதலை பெற முனையும் தொடர் மனப்போராட்டமேயாகும். இந்நிலை இருத்தலியல் கோட்பாட்டு அம்சங்களோடு நெருக்கமானது.  ஆகவே மாஹாத்மனின் சிறுகதைகள் தத்துவார்த்த முரணை அழகியலாக கொண்டுள்ளன என்று கூறலாம். இதன் காரணமாகவே இச்சிறுகதைகள் புதிய புதிய திறப்புகளைத் தன் வாசகனுக்கு தந்துகொண்டேயிருக்கின்றன.

1 comment for “மஹாத்மன் சிறுகதைகள் : சுழற்சியில் இருந்து வெளியேறுதல்

  1. விமலா சேகர்
    July 11, 2016 at 10:10 pm

    வல்லினத்தைத் திறந்தவுடன் முதலில் உங்கள் பெயரைத்தான் தேடுவேன். நல்ல கட்டுரைகள் எழுதும் நீங்கள் புனைவிலக்கியத்தையும் மறக்க வேண்டாம்,

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...