புகை சூழ் உலகு

Pandiyanநான் கல்லூரியில் சேர்ந்த அதே ஆண்டில் ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதைய சூழலில் புகைத்தலுக்கு எதிரான இயக்கம் இத்தனை தீவிரமாக இல்லை. பொது இடத்தில் புகைக்கத் தடை, சிகரெட் விற்பனை கட்டுப்பாடு, வயதுகட்டுப்பாடு போன்றவை இல்லை. என்னைப்போன்றே ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்கத்தொடங்கிய பலர்தான் பிறகு பெட்டி பெட்டியாக ஊதித்தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நான் உணரவில்லை. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ சிகரெட்டுகளைப் புகைப்பதில் தனி மகிழ்ச்சியும் சுதந்திரமும் இருப்பதை உணர்ந்தேன். புதிதில் சிகரெட் புகை உள்ளே போன சில வினாடிகளிளேயே சட்டென்று தோன்றும் மிதப்பை உணர முடிந்தது. அந்த கிறுகிறுப்பே பின்னர் பித்தாக மாறியது. புகையை உள்ளிழுத்து வாய் வழி விடுவதற்கும் மூக்கு வழி விடுவதற்கும் உணர்வு தளத்தில் சில வேறுபாடுகள் உள்ளன. மிகவும் தீவிரமான மனநிலையில் மட்டுமே மூக்குவழி புகை விடுவதை மனம் நாடும். கொண்டாட்டமான மனநிலைகளில் வாய்வழி புகையை மென்மையாக ஊதுவதும், புகை வட்டம் விடுவதும் நிகழும்.

தொடக்கத்தில் மென்த்ஹோல் உள்ள மென்மையான சிகரெட்தான் புகைக்கத் தொடங்கினேன்.  Sallem, Mildseven, Camel போன்ற பிராண்டுகள் அப்போது இருந்தன.  ஆயினும் வெகு சீக்கிரத்திலேயே காட்டமான சிகரெட்டுகளுக்கு மாறிவிட்டேன். இந்தோனேசிய சிகரெட்டான Gudang Garam, Suriya போன்றவை மிகக் காட்டமானவை என்பதோடு தனி மணம் பரப்பக் கூடியவை. ஒரு சிகரெட் தீர்வதற்கான காலமும் அதிகம். ஆயினும் நான் சில சமயங்களில் மட்டுமே அந்த சிகரெட்டுகளைப் புகைப்பது வழக்கம். சிகரெட்டுகளை பிராண்டு மாற்றிப் புகைப்பது ‘நல்லதல்ல’ என்ற ஒரு ‘நம்பிக்கை’ புகைப்போரிடையே இருக்கும். அப்போதும் கள்ள சிகரெட்டுகள் இருந்தன. முக்கால்வாசி இந்தோனேசிய சிகரெட்டுகள் கள்ளத்தனமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவைதான். சுங்கவரி கட்டாத சிகரெட்டுகளால் நல்ல லாபம் என்பதால் வியாபாரிகள் அவற்றையே மறைவாக விற்றனர். ஆனால் இன்றுபோல் போலி சிகரெட்டுகள் அன்று சந்தையை ஆக்கிரமிக்கவில்லை. சிகரெட் விலையின் அதிவேக உயர்வால் இன்று பலர் போலி சிகரெட்டுகளைக் குறைந்த விலைக்கு வாங்குவதைப் பார்க்க முடிகிறது.

ஆகவே, அன்று எல்லாரும் அசல் பிராண்டுகளையே வாங்கினர். நான் டன்ஹில் பிராண்டையே முடிவாகப் பின்பற்றினேன்.  (லங்காவியில் சுங்கவரி இல்லாததால் சிகரெட்டுகளின் விலை குறைவாகத்தான் இருக்கும். ஆயினும் அங்கு வாங்கும் சிகரெட்டின் சுவை சப்பென்றிருக்கும் என்பது பல நண்பர்களின் புலம்பல்.) நான் மென்மையான சிகரெட்டுகளை கைவிட்டதற்கு ஒரு ரகசியக்காரணம் இருந்தது.  அதுவும் புகைப்போரிடையே இருக்கும் இன்னொரு ‘நம்பிக்கையின்’ அடிப்படையில்தான்.  மென்த்ஹோல் உள்ள சிகரெட்களை தொடர்ந்து புகைத்தால் ஆண்மை பாதிப்பு வரும் என்ற ஒரு தகவலை யாரோ சொன்னார்கள். அந்தத்தகவலின் அறிவியல் நம்பகத்தன்மை பற்றியெல்லாம் ஆதாரம் இல்லை. ‘மென்த்ஹோல்’ சிகரெட்டுகளுக்கு ‘லேடீஸ் சிகரெட்’ என்று ஒரு பெயரும் இருப்பதால் இந்தக் கருதுகோள் உருவாகியிருக்கலாம். ஆனால் எனக்கு அந்தத் தகவல் சட்டென மனதில் ஒட்டிக் கொண்டதால் ‘ஆண்மைக்கு’ பங்கம் வராமல் இருக்கும் பொருட்டு மென்த்ஹோல் சிகரெட்களைச் சீக்கிரம் கைவிட்டேன். இருந்தும், புகைக்கும் பழக்கத்தையே மொத்தமாக கைவிடும் எண்ணம் வரவில்லை.

சிகரெட் புகைக்க மிகப் பொருத்தமான நேரம் காலை உணவுக்குப் பின்னும் இரவு படுக்கப்போகும் முன்னுமாக இருந்தது. அதிலும் காரமான உணவுக்குப்பின் புகைப்பது தனி சுகானுபவம். ஆயினும் எனக்குள் ஏதோ ஒரு பயமும் தயக்கமும் இருந்து கொண்டே இருந்தது. அது என்னைப் பற்றி நானே உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தின் விளைவாக இருக்கலாம். தற்காப்புக் கலையில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியம் பற்றிய கவனம் இருந்தது ஒரு காரணம். அல்லது வளர்ப்பினால் உண்டான தாக்கமாகவும் இருக்கலாம்.

ஆகவே ஆரம்பத்தில் வெளிப்படையாக சிகரெட் புகைப்பதில்லை. தங்கி இருந்த வாடகை வீட்டிற்குள்ளும் அறைக்குள்ளும் மட்டுமே புகைப்பது வழக்கம். முதன்மையாக, விஷயம் என் வீட்டுக்குத் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.  அடுத்தது கல்லூரி விரிவுரையாளர்கள்  எதிரே எல்லாம் சிகரெட் பிடிக்கும் அளவுக்கு அப்போது மனதைரியம் இல்லை.  ஆகவே கல்லூரி வளாகத்திலும் (பலர் கழிப்பறையில் புகைப்பது வழக்கம்) புகைத்ததில்லை.

நாங்கள் தங்கி இருந்தது கல்லூரிக்கு வெளியே வாடகை வீட்டில் என்பதால் எங்களுக்கு அதிகாரக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நான் தங்கிய வீட்டில் பாதிப்பேர் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் அவர்கள் யாரும் என்னை புகைக்கத் தூண்டவில்லை. மாறாக எனக்குள்ளேயே புகைபிடிப்பது தொடர்பான ஒரு ரகசியக் காதல் மிக நீண்ட நாட்களாக இருந்தது என்றே சொல்லலாம்.

பதின்ம வயதில் என்னைவிட மூத்தவர்கள் அல்லது பெரியவர்கள் மேல் கோபம் வந்தால், சிகரெட் புகைத்துக் கொண்டு அவர்களுக்கு முன்னே நான் நடமாடுவதாக மானசீகமான ஒரு கற்பனையில் ஈடுபட்டு என் இயலாமையை அடக்கிக் கொண்ட அனுபவம் உண்டு.

அந்த வயதில், சிகரெட் புகைப்பது என்பது சுதந்திரமான ஆண்மையின் குறியீடாக தோன்றியது. தீக்கனல் மிணுங்கும் சிகரெட்டுடன் தோன்றும் ஆண்கள் ரசனைக்குரியவர்களாகத் தோன்றினார்கள். என் அப்பா சிகரெட் புகைப்பார். அவரிடம் இருந்தே இந்த ஈர்ப்பு தோன்றியிருக்கலாம். அல்லது சிகரெட் புகைக்கும் என் அப்பாவை நேசித்த என் அம்மாவிடம் இருந்தும் எனக்கு இந்த ஈர்ப்பு வந்திருக்கலாம். Cap Tembak (Rough Rider), 555, Golden Leaf, Benson&Hadges, Dunhill, போன்ற பல சிகரெட் பிராண்டுகளுக்கு மாறியவர் அப்பா. நாங்கள் வளர்ந்த பிறகு அவர் பீடிக்கட்டுக்கு மாறினார். சிகரெட்டுக்கான செலவைக் குறைக்க அவர் கையாண்ட குறுக்குவழி அது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘உசேன் பீடி’ யைத்தான் அவர் நோயில் வீழ்ந்து படுக்கையே கதி என்றாகும் வரை புகைத்தார்.

ஆரம்பத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்கள் சிகரெட் புகைத்து நான்  பார்த்ததில்லை.  அது ஒரு குற்றமாக கருதப்பட்டது.  ஆனால் பிறகுதான் பல ஆசிரியர்கள்,  தலைமையாசிரியர் உட்பட, புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன்.  ஆனால் அவர்கள் மாணவர்கள் முன் புகைப்பதில்லை. அதோடு புகைப்பது பெரியவர்கள் விவகாரம் என்ற அச்சமும் அப்போது இருந்தது

நான் இடைநிலைப் பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியர்கள் மிக சுதந்திரமாக சிகரெட் புகைப்பார்கள். அன்று பள்ளியில் புகைபிடிக்க ஆசிரியர்களுக்குத் தடை கிடையாது போலும். (அல்லது அவர்கள் தடையை மீறினார்களா என்று தெரியவில்லை) ஆசிரியர் அறைகளிலும் கெண்டீன் அறையிலும் சிகரெட்டுடன் இருக்கும் ஆண் ஆசிரியர்கள் பலர். அவர்களில் எனக்குப் பிடித்த ஆசிரியர்களும் இருந்தனர்.

ஒரு ஆங்கில ஆசிரியர் இருந்தார். மலாய்க்காரரான அவர் வெளிநாட்டில் உயர்கல்வி கற்றவர். மிகPandiyan 2 நாகரீகமாகவும் கம்பீரமாகவும் இருப்பார். அவர் ஆசிரியர் அறையில் இருந்து புறப்பட்டு வகுப்பறைக்கு வரும் இடைவெளி நேரத்தில் ஒரு சிகரெட்டை ஊதித்தள்ளிவிட்டுதான் வகுப்புக்குள் வருவார். ஒருமுறை புகைப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றி அவரிடம் சில மாணவிகள் வாதம் செய்தனர். அவர் அதற்கு Chuck Norris போன்ற தற்காப்புக்கலை மாஸ்டர்களே சிகரெட் புகைத்து ஆரோக்கியமாகத்தானே உள்ளார்கள் என்று விளக்கம் கூறினார். எனக்கும் என் அப்பாவின் அறிமுகத்தால் ஹாலிவுட் நடிகரான Chuck Norrisசை பிடிக்கும். தற்காப்புக் கலை ஈடுபாடு முக்கிய காரணம். ஆகவே ஆசிரியரின் கருத்து எனக்கு நெருக்கமாக இருந்தது.

பதின்ம வயதில் என் எதிர்காலத்தை நான் பலவிதமாகக் கற்பனை செய்து மகிழ்வது வழக்கம்.  சுப்பர்பைக்குகளில் ஊர் சுற்றுவது, பெரிய மேடைகளில் இசை நிகழ்ச்சி படைப்பது (மைக்கல் ஜெக்சன், பிரின்ஸ் போல), தற்காப்புக்கலைப் போட்டிகளில் சாதனைப் படைப்பது போன்ற கற்பனைக் காட்சிகள் சில உதாரணங்கள். அதில் ஒன்று, சிகரெட் புகைத்தபடி நண்பர்களிடம் குறிப்பாக தோழிகளிடம் அரட்டை அடிப்பதாக வரும் கற்பனைகள் உள்ளூர குதூகலம் அளிப்பவை. படித்த நாகரீகமான பேராண்மை பொருந்திய என் கைவிரல் இடுக்கில் சிகரெட்டும் இருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கற்பிதம். சிகரெட் புகைத்தபடி நான் நின்றால் மிக நேர்த்தியாக இருப்பேன் என்பது என் ஆழ்மன நம்பிக்கை.

தமிழ்ப்படங்களில் சிகரெட்டோடு நடிப்பதில் ஆரம்பத்தில் வல்லமை காட்டியவர் சிவாஜி கணேசன்தான். ‘புதிய பறவை’ நல்ல உதாரணம்.  பல ஆங்கில இந்தி நடிகர்களின்  புகைக்கும் சாயலை அவர் தமிழ்த்திரைப்படங்களில் அறிமுகம் செய்தார். ஆனால் நான் திரைப்படம் பார்க்கத்துவங்கிய காலத்தில் அவர் மூத்த நடிகராகிவிட்டிருந்தார். எம்ஜியாரின் ‘கொள்கைகளுக்கு’ அவர் எதிரணியாக செயல்பட்டார் என்பதற்கு அவரின் புகை, மது காட்சிகள் போதுமான அடையாளங்களாகும்.

இளம் நடிகர்களில் கமலஹாசன் கவர்ந்தார். ஆனால் அவர் சிகரெட் பிடிப்பது ஈடுபாடு இல்லாமல் வெறுமனே இருக்கும். போலியாகச் செய்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரியும்.  சிவாஜி போன்ற லயம்  அவரிடம் இல்லை என்பதை பிறகு உணர்ந்து கொண்டேன். ஆனால் சிகரெட்டோடே தன் கலைப்பயணத்தை தொடங்கிய ரஜினியின் பாணிகள் எனக்கு அப்போது பிடிபடவில்லை. அவை வேடிக்கையானவை; மிரட்டலானவை; வில்லத்தனமானவை. என் நல்லபிள்ளை தோற்றத்திற்கு அது பொருந்தாது என்பதால் அவரின் சிகரெட் பாணி என்னை ஆட்கொள்ளவில்லை. அவர்களைத் தொடர்ந்து பல கதாநாயகர்கள் சிகரெட் பிடித்து நடிக்கத்தொடங்கினர்.

ஆயினும், சிகரெட் புகைப்பது கெட்டவர்களின் செயல் என்னும் தமிழ் பண்பாட்டு நன்னெறி சிந்தனை  எம்ஜியாரோடு ஒரு நிறைவுக்கு வந்திருந்தது.  நல்லவர்களும், தீவிர அறப்போராட்டவாதிகளாக, நீதியை நிலைநாட்டத் துடிப்பவர்களாக, காதல் தோல்வியை எதிர்கொள்பவர்களாக இருக்கும் பட்சத்தில்  சிகரெட் புகைக்கலாம் என்னும் புதிய பண்பாட்டு விதிமுறை தமிழ்த்திரைப்படங்களில் உருவாகி இருந்தது.  புகைப்பதும் மதுகுடிப்பதும் வில்லன்களில் அடையாளம் என்னும் கூற்றில் நம்பிக்கை இல்லாமல் இருந்த பலரையும் இந்தப் போக்கு கவர்ந்தது.

ஜெயகாந்தனின் நாவல்களை படிக்கத் தொடங்கிய பின்னர் உள்ளூர இருந்த சிகரெட் ஆசையின் மீது ஒரு மரியாதை வந்தது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் ஜெயகாந்தன் படைக்கும் நாயகர்கள் சிகரெட் பிடிக்கும் அறிவார்ந்த மனிதர்களாக இருந்தனர். நான் அவர்களால் கவரப்பட்டேன். அல்லது ஜெயகாந்தனின் இலக்கியத்தால் ஆத்மார்த்தமாக ஈர்க்கப்பட்டேன். ‘பாரிசுக்குப் போ’ சாரங்கன் சிகரெட் பிடிப்பதை மிகவும் ரசித்தேன். அறிவு விவாதங்களுக்கு மத்தியில் ஒரு சிகரெட் பிடிப்பதை தீவிரத்தின் அடையாளமாக ஏற்றுக்கொண்டேன். சிந்தனையைக் கூர்மைப்படுத்த அல்லது கவனத்தைக் குவிக்க புகைத்தல் ஒரு ஊக்கியாக இருக்கும் என்று நினைத்தேன். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற நாவல்கள் திரைப்படங்களாக வந்தபோது நாயக வேடம் ஏற்ற ஶ்ரீகாந்த் என் கண்களுக்கு ஜெயகாந்தனாகவே தெரிந்ததால் அவரின் சிகரெட் பிடிக்கும் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தது.  ஆண்மைத் தோற்றத்திற்கு சிகரெட் இன்றியமையாப் பொருளாக மனம் வரிந்துக் கொண்டது.

ஆனால் கட்டுப்பாடான குடும்பச் சூழலில் நான் சிகரெட்டை முயன்று பார்ப்பது சாத்தியமே இல்லை. பள்ளியிலும் மிக நல்ல பிள்ளையாக வாழும் சூழல்களே மிகுந்திருந்தன. தலைமை மாணவர் பொறுப்பு வேறு ஏற்றிருந்ததால் பள்ளியிலோ வெளியிலோ சிகரெட் பிடிக்கும் “குற்றச் செயல்களில்” ஈடுபட வாய்ப்பே இல்லை. ஆகவே இடைநிலை, உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் சிகரெட் புகைத்ததில்லை. ஆனால் கல்லூரிக்குச் சென்ற பின்னர் ஆழ் மனதில் புதைந்து கிடந்த ஆசை வெளிப்பட்டு புகைவிட்டுக் கிளம்பியது. மேலும் விரிவாக சிந்தித்தால் குடும்பத்தாரின் பார்வையில் இருந்தவரை எனது சிகரெட் மோகத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது என்பதே உண்மை.  குடும்பத்தை விட்டு தூரம் சென்றதும்,  நான் அனுபவிக்க விரும்பிய பல சுதந்திரங்களின் வரிசையில் முதல் வெளிப்பாடாக சிகரெட் வந்து நின்றது புரிகிறது.

அப்போது ஏழு சிகரெட் வைக்கப்பட்ட சிறிய பெட்டிகள் சந்தையில் இருந்தன. அதன் விலையும் குறைவுதான். நான் தொடக்கத்தில் பெட்டியில் இருந்து பிரிக்கப்பட்டு தகர டப்பாவில் இருக்கும் உதிரி சிகரெட்டைத்தான் வாங்கிப் புகைத்தேன். சிகரெட் வாங்கினால் நெருப்பு இலவசம். பின்னர் ரிம.1.20-க்கு ஒரு சிறிய சிகரெட் பெட்டி வாங்கினேன். அப்போது 20 சிகரெட்டுகள் அடங்கிய பெரிய பெட்டி ரிம.3.60 என்று ஞாபகம். ஏறக்குறைய 25 ஆண்டுகளில் இன்று சிகரெட்டின் விலை 480% அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய பெட்டியில் ஏழு சிகரெட்டுகள்தான் இருந்ததால் மிகக்குறைவாகவே புகைக்கவேண்டும் என்பது திட்டம். ஆனால் அந்தத் திட்டமெல்லாம் மெல்லமெல்லத் தகர்ந்து இருபது சிகரெட்டுகள் உள்ள பெரிய பெட்டியை வாங்கும் காலம் வெகு சீக்கிரத்தில் வந்தது. ஒரு வலிமிகுந்த காதல் பிரிவு சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் கூட்டியது.

பணியில் சேர்ந்த பின்னர் சிகரெட் புகைப்பது அன்றாட வழக்கம் ஆனது. காலையில் சிகரெட்டுடன் தொடங்கும் நாள் இரவில் சிகரெட்டுடனே முடிந்தது. ஆனாலும் பள்ளியில் புகைப்பது இல்லை. பிறகு, மது அருந்தத் தொடங்கியதும் புகைக்கு தனி அழகு கிடைத்தது. மது அருந்தும் நேரங்களில் சிகரெட்டின் எண்ணிக்கைக்கு கணக்கு இருக்காது. ஆனாலும் நான் தனிமையில் மது அருந்தும் பழக்கம் வைத்துக் கொள்ளவில்லை. அதற்கென்று ஒத்த நட்பு வட்டம் இருந்தது.  ஆகவே மதுப்பழக்கம்  கொண்டாட்டங்களுக்கான பட்டியலில் மட்டுமே இருந்தது.  ஆகவே அது என்னோடு ஒட்டிவரவில்லை.

திருமணமான பின்னர் எந்த மாற்றமும் இல்லை. என் மனைவி புகையை ஆதரிக்காவிட்டாலும் நான் புகைப்பதற்குத் தடை போடவில்லை. ஆனால் வீட்டுக்குள் புகைக்க கடுமையான தடை போட்டார். ஆகவே புகைப்பதை வெளியே வைத்துக்கொண்டேன். இதற்காகவே சில ‘வசதியான’ கடைகளை கண்டுபிடித்து வைத்திருந்தேன். அவ்வப்போது அந்தக் கடைகளுக்குச் சென்று ஒரு சிகரெட்டை ஊதிவிட்டு வருவது வழக்கமானாலும் சிரமமாக இருந்தது. தேவை இல்லாத அலைச்சலைத் தந்தது. இடமாற்றத்தால் நண்பர்கள் தொடர்பு தடைபட்டதால் குடிப்பதற்கான சந்தர்ப்பங்களும் இல்லாமல் ஆனது. பிறகு உயர்கல்வி படித்த காலத்திலும் புகை மிகத் தீவிரமாக புகைந்து கொண்டிருந்தது. கல்லூரிக் காலங்களில் மறைந்து புகைத்த நிலை இப்போது இல்லை. ஒவ்வொரு வகுப்பு இடைவெளியிலும் வெளியே வந்து புகைத்து விட்டு மீண்டும் வகுப்புக்குச் செல்வது வாடிக்கை. புகைக்கக் கூடாது என்று சில நேரங்களில் நினைத்தாலும் அடுத்த கணமே அந்த நினைப்பை வீசிவிட்டு சிகரெட்டை கைகள் தேடின.

ஒரு நாள், ஏழு வயதான என் மகள் நான் மறந்த நிலையில் மேசை மேல் வைத்துவிட்டு வந்த சிகரெட் பெட்டியை கண்டெடுத்து விட்டாள். அது அவளுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் கேள்விகளையும் உண்டு பண்ணியிருக்க வேண்டும். ‘புகைப்பவர்கள் நல்லவர்கள் அல்ல’ என்று பள்ளியில் அவள் அறிந்த தகவல் அவளை மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கும் என்றே நினைக்கிறேன். அவள் நேராக என்னிடம் வந்து ‘அப்பா இது யாருடையது” என்று என்னிடமே கேட்டாள். அந்த நேரத்தில் அவள் முகமும் கண்களும் பல நூறு கேள்விகளைத் தாங்கி கனத்திருந்தன. அவள் கோபமாக இருக்கிறாளா அல்லது அச்சத்தில் இருக்கிறாளா என்பதை அறிய முடியவில்லை. இப்போது யோசித்துப்பார்த்தால் நான் அவளுக்கு என்ன பதில் சொன்னேன் என்பது ஞாபகம் இல்லை. “தெரியலையே!” என்று போலியாக நடித்திருப்பேனா? ‘கீழே கிடந்தது’ என்று பொய்யாகச் சொல்லியிருப்பேனா? ஞாபகம் இல்லை. ஆனால் நிச்சயமாக ‘என்னுடையதுதான்’ என்று உண்மை உரைத்திருக்க மாட்டேன்.

ஆனால் ஏனோ அன்றுமுதல் எனது சிகரெட் ஆசை நீர்த்துப் போனது. புகைப்பதை உடனடியாக நிறுத்திக் கொண்டேன். ஆசைதான் ஒழிந்ததே தவிர பித்து நீங்கவில்லை.  புகைக்கும் பழக்கத்தை தொடங்கும் முன் ‘புகைத்தல்’ குறித்து எனக்கிருந்த அதீத கற்பனைகள் அனைத்தும் நானே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்கள் என்பதை புகையோடு வாழ்ந்த இருபது ஆண்டுகளில் நன்கு உணர்ந்திருந்தேன்.  ஆயினும் அதன் பித்து தரும் தாக்கங்கள் மன உளைச்சல் தருபவையாகும். என் அனுபவத்தில் மதுப் பித்தை விட புகைப் பித்து தீவிரமானது. புகைத்துப் பழகியவர்கள் அப்பழக்கத்தை கைவிட்டுப் பல ஆண்டுகள் ஆனாலும் அதன் பித்து மனதுக்குள் பதுங்கியே இருக்கிறது. ஒரு தனிமையில்; சோர்வில்; மன அயற்சியில், புகைத்தலுக்கான உந்துதல் சட்டென்று வெளிப்படவே செய்யும். சுயக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் அந்த உந்துதலை கடப்பது கடினம். “சரி ஒன்றுதானே!” என்று ஒரு சிகரெட்டைப் புகைத்துவிட்டால் விக்கிரமாதித்தன் முதுகில் பயணிக்கும் வேதாளம் போல, பழைய பழக்கம் உடனே சட்டென வந்து ஒட்டிக் கொள்ளும்.

மனிதனோடு மிக நீண்ட காலமாக தொடர்பில் இருக்கும் புகைத்தல்  என்பது ஒரு மாயைதான்.  ஆதிகாலம் தொட்டு மனிதன் புகைத்துக் கொண்டுதான் இருக்கிறான். நோய்கள், பணச்செலவு, போன்ற அசெளகரியங்களுக்கிடையிலும் புகைத்தலின் மீது ஏற்படும் தீவிர மோகத்துக்குக் காரணம் அது மனிதனை ரகசிய கனவுகளோடு தொடர்புபடுத்துவதே. புகைத்தல் நம் ஆழ்மனதில் நமது ரகசிய கனவுகள் சார்ந்த நம்பிக்கைகளை விதைக்கிறது. புகைப்பதன் வழி நமது கனவுகளை அடைய முடியும் என்னும் மாயையைக் கொடுக்கிறது. பலநூறு கனவுகள் துளிர்விடும் பதின்ம வயதில்தான் பலர் புகைக்கும் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். ஆயினும் ஒரு கட்டத்தில் புகைக்கும் பழக்கம் தம் கனவுகளை அடைய ஒருபோதும் உதவாது என்பதை உணர்ந்தாலும் அதன் பித்தானது தொடர்ந்து தன் அடிமையாக்கிவிடுகிறது.

இன்று பள்ளியில் கள்ளத்தனமாக சிகரெட் புகைத்து பிடிபடும் மாணவர்களைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் பேரிரைச்சலோடு புறப்பட்டுக் கொண்டிருக்கும் கனவுகளே எனக்குப் பெரிதாகத் தெரிகின்றன.  காற்றில் மிதந்து கொண்டிருக்கும் அந்தக் கனவுகளை புகையை வீசி கட்டியிழுக்க அவர்கள் முயல்வதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும் கனவுகளை அடைய உழைப்பைத் தவிர வேறு மந்திரவழிகள் இல்லை என்பதால் புகை தரும் உணர்வுகள் வெறும் தோற்ற மயக்கமே என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது நமது கடமையாகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...