காப்புறுதி VS ஆப்புறுதி

tayag-4சமீப காலமாக ஊடகங்களிலும் இணைய உலகிலும் காப்புறுதி குறித்த விளம்பரங்களை கேட்க, பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் அது தொடர்ந்து இருந்திருக்கிறதுதான் தற்போதைய அனுபவத்தால் அவ்விளம்பரங்கள் தனியாகத் தெரிகிறது போலும்.

நம்மில் பலருக்கு காப்புறுதி குறித்துத் தெரிந்திருக்கும். பலவித நிறுவனங்களில் இருந்து நாம் காப்புறுதியை வாங்கியிருப்போம். இன்னும் சொல்லப்போனால் நம் நண்பர் குழுவில் ஒருவராவது காப்புறுதி முகவராக இருப்பார். அதிகநாள் தொடர்பில் இல்லாத நண்பர் யாரும் திடீரென தொடர்புக் கொண்டு சாப்பிட அழைத்தால் இரு காரணங்கள் இருக்கும். ஒன்று அவர் எம்.எல்.எம் பிஸ்னஸ் செய்பவராக இருப்பார் அல்லது காப்புறுதி முகவராக இருப்பார் என்பது இக்கால பழமொழியாகவே ஆகிவிட்டது.

நம்மிடம் காட்டப்படும் பாரங்களில் கையெழுத்து போடுவதற்கு முன்பாக அப்பாரத்தை முழுதும் படிக்கின்றோமா எனது ‘கோல்டன் குவஸ்தியன்’

கார் வாங்கும்போது கொடுக்கும் பாரத்தையும் வங்கியில் கடன் வாங்கும்போது கொடுக்கும் பாரத்தையும் ஒருவித பரபரப்பு கருதி, குதூகலம் கருதி, நேரம் கருதி  முழுக்கப் படிப்பதில்லை. அவர்கள் சொல்லும் அல்லது நட்சத்திரக்குறி போட்டுள்ள இடத்தில் கையொப்பத்தை வைத்துவிடுகிறோம்.

ஆனால் இதே நிலை காப்புறுதி பாரத்திற்கும் ஏற்படுவதுதான் சிக்கலாகிறது. முன்னதும் சிக்கல்தான். ஆனால், அதன் விளைவின் அளவை சமாளிக்க முடியும் என்றே தோன்றுகிறது.

நாளை என்ன நடக்குமோ என்று பயம்காட்டியே நம்மிடம் கையெழுத்து வாங்கிவிடும் திறமைசாலிகளும் tayag-3உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அப்போதைய நம் சிந்தனை நமக்கு வருங்காலத்தில் ஏற்படும் எதிர்பாராத சிக்கல்களுக்கும் விபத்துகளுக்கும் கைகொடுக்கப்போவது இந்தக் காப்புறுதி என்பதுதான். ஆனால் அதன் உள்ளடக்கத்தை நாம் புரிந்துக் கொண்டோமா என்பதும் கையொப்பம் போடுவதற்கு முன்பாக எத்தனை விபரமாய் கேள்விகள் கேட்டோம் என்பது சத்தேகிக்க வைக்கிறது.

தோட்டப்புறத்தில் இருக்கும் பலரும் இதன் வழி பாதிக்கப்பட்டுள்ளதை அங்கிருந்த சமயம் என்னால் பார்க்க முடிந்தது. பட்டணத்தில் இருக்கும் நிறுவனங்களாகட்டும் பொருள் விற்பனையாளர்களாகட்டும் அவர்களின் முதல் இலக்காக இருந்தது தோட்டங்கள்தான். உடனடி பணக்காரர் திட்டம் முதல் கையடக்க மருந்து பாட்டில்கள் விற்றே கோடீஸ்வரர் ஆகலாம் என்கிற சில எம்.எல்.எம் வரை பலரும் தோட்ட மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களை நோக வைத்திருக்கிறார்கள்.

அதனாலேயே தோட்டத்தில் இருப்பவர்களும் சரி அங்கிருந்து பட்டிணத்திற்கு வந்திருப்பவர்களும் சரி, இது போன்றவற்றில் ஒருவித அச்சத்துடனேயே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக 90-களுக்கு பிறகு வெளியேறியவர்களைச் சொல்லலாம்.

மாமாவைத் தேடி அவரது பட்டிணத்து நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். வழக்கமான உபசரிப்புகள் விசாரிப்புகள் என எல்லாம் முடிந்த பின் புறப்பட எழுந்தவர் ஏதோ நினைவு வந்தவராய் மீண்டும் அமர்ந்துவிட்டார். ஏதும் மறந்துவிட்டாயா என மாமா கேட்க. அப்போதுதான் ஆரம்பித்தது வந்தவரின் விளையாட்டு.

தான் காப்புறுதி முகவராக இருப்பதாகவும் நல்ல வருமானம் வருவதாகவும் அவரது பேச்சைத் தொடர்ந்தார். மாமா தனக்கு அந்த அளவுக்கு படிப்பறிவு இல்லை என்றார். வந்தவர் விடவில்லை, ‘படிப்பு எல்லாம் எதுக்கு. அதான் உனக்கு தெரிஞ்சவங்க இங்க நிறைய பேரு இருக்காங்களே அவங்ககிட்ட இங்கிலிஷ்லயா பேசப் போற… தமிழில்தானே பேசப்போற’ என அடுக்கிக்கொண்டே போனார்.

காப்புறுதி முகவர் ஆவதற்கு முன்பாக மாமா அவரிடம் காப்புறுதி எடுத்திருக்க வேண்டும். அதோடு சுமார் நான்கு மாதங்களாவது பணம் கட்டியிருக்க வேண்டும் என்ற விதிமுறையைச் சொன்னார். ஆனால் நான்கு மாதங்கள் வரை மாமாவைக் காத்திருக்க வைக்காமல்  மாமா நான்குமாதப் பணத்தை ஒரேசமயத்தில் தருவது முடியுமென்றால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இவர் கட்ட ஆரம்பித்துவிட்டார் என்பது போல விபரங்களைத் தயார் செய்து அடுத்த மாதமே மாமாவும் முகவராகிவிட்டு சம்பாதிக்கலாம் என்றார்.

மாமாவுக்கும் அதில் சம்மதம் என்பது போல இருந்தது. அன்று அத்தை இல்லாததால் மாமாவே முடிவு எடுக்கும் கட்டாயத்தில் இருந்தார். இதுவரை அத்தை இல்லாமல் மாமா எந்த நல்ல முடிவையும் எடுத்ததில்லை என்பது மாமாவுக்கே கூட தெரியும். ஆனால் இப்போது அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் மாமா இல்லை. வந்திருந்த நண்பரின் வாகனம், ஆடை, கைபேசி, வித்தியாசமான பேனா அதோடு ‘அன்பே வா’ எம்.ஜி.ஆரின் சூட்கேஸ் என எல்லாமே அவ்விடத்தை மெருகேற்றியிருந்தது.

அதுவரை அமைதியாக இருந்த பாட்டி,  மாமாவின் கைக்கு காப்புறுதி பாரம் வந்த பின் சுதாரித்துக் கொண்டார்.

“இப்படித்தான் எங்கூட்டுக்கார்க்கு இந்தக்  கட்சிக்காரங்க காசு கட்டச் சொல்லி வந்தாங்க… அப்பதான் அவரு எக்சிடெண்ட் ஆனாலும் செத்துட்டாலும் பிள்ளைகளுக்கும் எனக்கும் காசு கிடைக்கும்னு சொன்னாங்க… அந்த குடிகார மனுசனும் கையில இருந்த காசையெல்லாம் பொரட்டி பொரட்டி அவனுங்ககிட்ட காசைக் கொடுத்துச்சி… வீட்டுல தின்ன ஒன்னுமில்லனாலும் குடிக்கவும் அவனுங்க கிட்ட காசு கொடுக்கவும் மட்டும் சரியா இருந்திச்சி… எப்படியும் தான் சாகப்போறவந்தான் அப்பறம்  காசு என் கைக்குத்தான் வரப்போகுதுன்னு சொல்லிச்சொல்tayag-2லியே செத்துப்போச்சி… சரி அதான் செத்துப்போச்சேன்னு போய் பிள்ளைங்களுக்கு காசு எப்போ கிடைக்கும்னு கேட்டா… குடிச்சி செத்தா காசு கொடுக்க மாட்டாங்களா. அடிபட்டு செத்தாதான் காசு கொடுப்பாங்களாம்னு சொல்லி கைய விரிச்சிப்புட்டானுங்க பாவிங்க….”என பாட்டி தனக்குத்தானே பேசி அழுதுக்கொண்டிருந்தார். மாமாவுக்கு என்னமோ செய்திருக்க வேண்டும். சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் தாத்தாவின் போட்டோவை ஒருமுறை பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இன்னொரு நாள் இதைப்பற்றிப் பேசலாம் அவசரமாக வெளியில் செல்லும் வேலை இருப்பதாகச் சொல்லி வந்திருந்தவரை வழியனுப்பினார். வாசல் வரை சென்ற நண்பர் பாட்டியை ஒருமுறை திரும்பிப் பார்த்தார். பாட்டி அழுத கண்ணீரைத் துடைத்துவிட்டு வெற்றிலைக்கு சுண்ணாம்பைத் தடவிக்கொண்டிருந்தார்.

சமீபத்தில் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நடுத்தர வயதுப் பெண் தனக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்ட பின் தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தார். தெரிந்தவரின் பக்கத்து கட்டில் என்பதால் அவரையே பார்த்துக் கோண்டிருந்தேன். உடலில் வலி இருக்கிறது போலும் விசாரித்து மருத்துவரை அழைக்கலாம் என்றெண்ணி அவரிடம் சென்றேன். நான் விசாரித்ததும் அவரின் அழுகை அதிகமாயிற்று. அப்போதுதான் அவரது உறவினர் ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். என்னையும் அவரது உறவினர் என்று நினைத்து, “என்னப்பா காசுக்கு ஏற்பாடு செய்துட்டிங்களா..?” என்று கேட்டார். நான் நிலைமையைச் சொன்னேன்.

பின்னர் அவர் சிலவற்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப் பெண்ணுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் தனக்கு காப்புறுதிப் பணம் இதற்குக் கிடைக்கும் என முகவர் சொன்னதால் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். மருத்துவர் பக்கம் இருந்தும் காப்புறுதி பணம் கிடைப்பதற்கு ஏற்றார் போல உதவி செய்வதாக சொல்லி அதன்படியே அறுவை சிகிச்சையை முடித்து தகுந்த விபரங்களை காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்கள்.

அங்குதான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காப்புறுதிப் பணம் கிடைக்க வாய்ப்பில்tayag-1லாமல் போனது. இரண்டு மாதங்களுக்கு முன்தான் காப்புறுதி  முகவர் அந்தப் பெண்ணை சந்திக்க வந்திருக்கிறார். தற்போது அவர் கட்டும் தவணைப் பணத்தில் இருந்து இன்னும் இருபது ரிங்கிட் சேர்த்துக் கொண்டால் மேலும் அதிக நன்மை இருப்பதாகவும் இன்றே கையொப்பம் இட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். நம்பிக்கையானவர் என்பதால் இவரும் அவர் காட்டிய இடத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார்.  மாதம் இருபது ரிங்கிட் கட்டுவது ஒன்றும் அவ்வளவு சிக்கல் இல்லைதான். ஆனால் முக்கியமான விபரத்தை அவர் கொடுக்கவில்லை. அவசர வேலை இருப்பதால் மேற்கொண்டு இன்னொரு நாள் வந்து பேசுவதாகச் சொல்லி அவர் சென்றுவிட்டார்.

சிக்கல் என்னவெனில் அவர் மேற்கொண்டு பணம் செலுத்துவது மீண்டும் புதிய காப்புறுதிக்கு சேர்வது போல. நான்கு மாதங்களுக்கு ஏற்படும் ஏதொன்றுக்கும் நிறுவனம் பணம் கொடுக்காது!. இதனைச் சொல்லாமலேயே அவர் கையொப்பாம் வாங்கியிருக்கிறார். இவரும் விபரம் அறியாமலேயே கையொப்பம் போட்டிருக்கிறார்.

ஆனாலும் அறுவை சிகிச்சை முடிந்து பணம் கட்டுவதற்கு செல்லும்போதுதான் இந்த விபரங்கள் சம்பந்தப்பட்டவர்க்குத் தெரிந்திருக்கிறது. தெரிந்தவர்களிடம் எல்லாம் நிலமையைச் சொல்லி பண உதவியை அவர்கள் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

யாரும் நம்மை ஏமாற்றுவதற்காக நாள் முழுக்க யோசனை செய்தோ திட்டம் தீட்டியோ வெற்றி பெறுவதில்லை. நமது கவனக்குறைவை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

இப்போது கூட அதுதான் நடந்திருக்கிறது. கையொப்பம் போடுவதற்கு முன் விளக்கம் பெறுகிறோமா? கையெழுத்து கேட்பவர்கள் முழு விபரம் சொல்கிறார்களா? என்பதுதான் முக்கியம்.

பலருக்கும் தகுந்த நேரத்தில் காப்புறுதிப் பணம் உதவியுள்ளது,  பலருக்கும் இக்கட்டான சூழலில் காப்புறுதிப் பணம் கைகொடுத்திருக்கிறது,  என்பது எவ்வளவு உண்மையோ அதற்கு ஈடான உண்மைதான் சரியான விபரப் பறிமாற்றம் இல்லாததால் காப்புறுதியால் ஒருவர் ஏமாற்றப்படுகிறார் என்பதும்.

1 கருத்து for “காப்புறுதி VS ஆப்புறுதி

  1. P.BALAN A/L S.PALANISAMY
    December 28, 2016 at 10:41 pm

    கையொப்பம் போடுவதற்கு முன் விளக்கம் பெறுகிறோமா? கையெழுத்து கேட்பவர்கள் முழு விபரம் சொல்கிறார்களா? என்பதுதான் முக்கியம். இந்த கோட்பாட்டினை அனைவரும் கடைப்பிடிப்பது அவசியம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...