புரியவில்லை என்பதுதான் புரிந்தது

005மகிழுந்தில் அமர்ந்தவாறு பள்ளி மாணவர்கள் நுழைவாயிலில் நுழைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தினமும் பார்ப்பதுதான். எப்போதும் பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை வகுப்பறை வாசல் வரை கொண்டு வந்து விட்டுச் செல்பவர்களும் உண்டு. பள்ளிக்குத் தனித்து வருகின்ற மாணவர்களும் உண்டு. தன் தோழன் அவன் தாய் தந்தையோடு வருவதைப் பார்க்கும்போது அவன் பார்வையில் ஓர் ஏக்கம் உண்டானபோதும் தோழனின் மகிழ்ச்சியில் பங்குக் கொண்டவனாய் அவனின் பெற்றோர்களிடத்தில் பேசியப்படியே உடன் நடந்து வருவதையும் பார்த்திருக்கிறேன். பிள்ளையை அணைத்து முத்தமிட்டு விடைபெறுகின்ற பெற்றோர்களை ஒருவித வேடிக்கையாகப் பார்த்து இரசித்து நிற்கும் மாணவர்களையும் கண்டிருக்கிறேன். இப்படிப் பல்வேறு காட்சிகளைக் காலை மகிழுந்தில் அமர்ந்தப்படி பார்த்துவிட்டுதான் மகிழுந்தைவிட்டு இறங்குவது வழக்கம்.

காலையில் இந்தப் பிள்ளைகளைப் பார்க்கின்ற தருணம்தான் மனதில் எத்தகைய துன்பம், கவலை, சோர்வு இருந்தாலும் அடுத்த நொடி மறந்து போவதை என்னால் உணர முடிகின்றது. அவர்களின் வெண்முகில் முகங்கள், எந்தக் கவலையும் கலக்கமும் அற்றுக் காணும்போது ஒருவித புத்துணர்ச்சித் தொற்றிக் கொள்கிறது. அதுவும், “வணக்கம் டீச்சர்” என்று வாய்மலர்ந்து குறுநகை செய்து நிற்க, அவர்கள் கண்களின் ஒளிப்பிரகாசத்தை நேருக்கு நேர் என் கண்கள் சந்திக்கும்போது பிள்ளைகளின் உற்சாகம் தொற்றி உள்ளமெங்கும் படர்ந்து உடலெங்கும் எடையிழக்கச் செய்து விடுகிறது. எல்லாம் மறந்து பிள்ளைகள் வழிக்காட்டலில் கைப்பிடித்து நடப்பதைப்போல் தோன்றும்.

இன்று ஏனோ அதுவும் இரசிக்கவில்லை. மன அழுத்தமும் சோர்வும் விடாது உள்ளத்தில் கழன்று கொண்டிருந்தது. மகிழுந்தை விட்டிறங்கி ஆசிரியர் அறை நுழையும்வரை எதிர்ப்பட்ட மாணவர்களின் வணக்கத்திற்கு மறுவணக்கம் கூறியபடி அவர்கள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்க விருப்பமில்லாது நடக்கத் தொடங்கினேன். ஒரு நடைப்பிணம்போல. ஆசிரியர் அறைக்குள் ஆசிரியர் பலரும் பல்வேறு அலுவல்களில் முனைந்திருந்தனர். சற்று நேரம் இருக்கையில் அமர்ந்திருந்தேன். இடது கை மணிக்கட்டில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்த்தேன். முதல் பாடம் ஆரம்பமாக இன்னும் பத்து நிமிடம் இருக்கக் கண்டேன். நான்காம் ஆண்டு அறிவியல் வகுப்பு. மூன்றாவது மாடி. நேற்று திருத்தி வைத்த புத்தகத்தோடு பாடநூலை எடுத்துக் கொண்டு வகுப்பை நோக்கி நடந்தேன். மாணவர்கள் இன்னும் சபைக்கூடல் வரிசையில் நின்றிருந்தனர். அறிவிப்புகள் சிலவற்றை சொல்லிக்கொண்டிருக்க செவி மடல் வந்தடைந்து தேய்ந்தது.

மூன்றாவது மாடி ஏறி வகுப்பறைக்கு நுழையும் முன்பே மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது. நன்கு மூச்சு உள் வாங்கியபடி மெல்ல வெளியேற்றிச் சமநிலைக்கு வருவதற்கு ஓரிரு நிமிடங்கள் சென்றன. கால் மூட்டு, முதுகுத் தண்டெங்கும் வலியால் நிறைந்திருக்க உடல் உணர்த்தியது. இருக்கையில் அமர்ந்தப்படியே, “என்னடா இது தொல்லை காலையில்!” என்கிற சிந்தனை காலைச் சூழலை மேலும் சோர்வடையச் செய்தது. மனதிற்கும் அன்றைய தினத்திற்கும் இத்தனை நெருக்கமான தொடர்பிருக்குமென எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சலிப்புத் தட்டியச் சிந்தனையையே தந்தது.

சற்று எழுந்து மூன்றாவது மாடியிலிருந்து கீழே சபைகூடலில் மாணவர்களைக் கண்டேன். சபை முடிந்து மாணவர்கள் வகுப்பறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மூன்றாவது மாடிப்படியில் மாணவர்கள் ஏறி வருவதைக் காலடி ஓசையில் உணர்த்திய அடுத்தத் தருணம் மாணவர் முகங்கள் தென்பட்டன. வரிசையாக வகுப்பறைக்குள் நுழைந்தனர். நானும் வகுப்பறைக்குள் நுழைய எத்தனிக்கும்போது இன்று சுதார்சன்  நகுலனை முதுகில் சுமந்தபடி அவனிடத்தில் பேசிக் கொண்டே வந்தான். நகுலன் அவன் காதருகே எதையோ சொல்லிக் கொண்டே வர அதற்கு சுதார்சன் பதிலளிக்க இருவரும் நகைத்தப்படி வந்தனர். அவர்களை சுற்றி நகுலனின் இதர மூன்று நண்பர்களும் அவர்கள் இருவரின் பொருள்களைக் கைப்பற்றி உடன் சேர்ந்து நடந்து வந்தனர்.

அவன் அகிலன், “சுதா… சிரமமாக இருந்தால் சொல்லுடா? நான் வகுப்புவரை நகுலனை சுமந்து வருகிறேன்?’ என்றான்.  சுதார்சன், “ இல்லடா..அகிலா. நானே சுமந்து வருகிறேன். எனக்கு எந்தச் சிரமமுமில்லை. நகுலனை ஒரு சுமையாக நான் ஒரு போதும் நினைத்துப் பார்த்தது இல்லை. அதனால் என்னவோ எனக்கு அவன் எடையாக  இருந்தது இல்லை. நான் விரும்பியே அவனை முதுகில் சுமந்து வருவதால் என்னவோ, “சிரமம்” என்று இதுவரை எனக்கு தோன்றியதில்லை.

“ம்ம்ம். அதுவும் சரிதான் சுதார்சன்… எத்தனை சுமையானாலும் அதை சுமக்கின்றவனுக்குத்தான் தெரியும் அது எத்தகைய பாரம் என்று. அதனைச் சுமக்கும் மனப்பாங்குதான் இங்கு முக்கியம் இல்லையா? எப்போது அதனை நாம் எதிர்க்க விளைகிறோமோ அப்போதுதான் அதன் சுமை வலு பெறுகிறதே தவிர அதனை விரும்பி  வழிய பெறுகின்ற போது அதன் சுமைகூட சுகமாகவே தெரிகிறது என்கிறாய். நகுலன் சுகமான சுமை என்கிறாய், சரிதானே!” என்றவன் புன்னகைத்தான்.

“ம்ம்ம்ம்…நீ சொல்வதுபோலவும் சொல்லலாம்… அகிலா என்று மூவருமாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அவர்களின் பேச்சு என் உள்ளத்தை சுட்டது. மாணவர்கள்  எத்தனை தெளிவான சிந்தையோடு இருக்கிறார்கள். பெருமையாக இருந்தது. இன்று முதல் முறையாக அவர்களின் முகம் பார்த்துக் காத்திராமல் முகமலர, “வணக்கம்” என்றேன். நால்வர் நண்பர் கூட்டணியும் ஒன்று சேர்ந்ததுபோல, “ வணக்கம் டீச்சர்” என்றனர். அதே புன்னகை மாறாது. அவர்கள் கடந்து சென்ற மறுகணமே, “என்ன பெரிய மூட்டு வலி… முதுகு வலி… இந்த மாணவர்கள் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் தன் நண்பனை முதுகில் சுமந்து மூன்றாவது மாடிவரை ஏறிவருவதைக் காட்டிலும் என் வலியெல்லாம் என்ன பெரியது! இதற்காகவா எனது இன்றைய காலைப் பொழுதைக் கசந்து போக மனதை உறுமாற்றினேன்..ச்சே” என்று என்னை நானே நொந்துகொள்ள வகுப்பறைக்குள் நுழைந்தேன்.

வகுப்புத் தொடங்கும் முன்பு வாசலில் பிரிதொரு குரல் என் கற்பித்தல் கற்றலை நிறுத்தியது.a-day-in-the-life-of-an-art-teacher-chad-brown திரும்பிப் பார்த்தேன். ஆதிவர்மன் நின்றிருந்தான். “சோரி டீச்சர்…நான் உள்ளே வரலாமா?” என்றான். “வரலாமே … வாங்க” என்றேன். “தேங்க்ஸ் டீச்சர்” என்றான். கற்றலைத் தொடர்ந்த பத்தாவது நிமிடம் ஆதி, “ டீச்சர்… கொஞ்சம் மெல்லமாகச் சொல்லுங்க… ரொம்பவும் விரைவாகச் சொன்னால் எப்படி? என்னால்தான் எதையும் உடனே புரிந்து கொள்ள முடியாதே! மீண்டும் மீண்டும் சொன்னால்தான் கொஞ்சமேனும் புரிந்து கொள்ள முடியும்,” என்றான். இதைக் கேட்டு வகுப்பில் மாணவர்கள் பலரும் சிரித்தனர். அவனும் அவர்கள் சிரிப்பதைப் பார்த்து உடன் சிரித்தானே தவிர முகம் வாடவில்லை. கவலைக் கொள்ளவில்லை. ஒரு சிறு அதட்டலில் வகுப்பு அமைதியானது. தொடர் நடவடிக்கையைச் செய்திடப் பணித்துவிட்டு ஆதிவர்மன் அருகில் வந்து நின்றேன்.

ஆதி என் முகம் பார்த்து, “டீச்சர் உங்களுக்குத்தான் என் குறை தெரியுமே.. ஐ எம் டிவ்விரன்… எப்போதும் எனக்கும் சேர்த்துதான் சொல்லிக் கொடுப்பீங்க. இன்னைக்கு மட்டும் ஏன் இத்தனை சீக்கிரமா  சொல்லிக் கொண்டே போனீங்க…! என்னால் தொடர்ந்து வரமுடியல” என்றான். ஆதி அவன் குறையைக் கூறும்போதும், “ஐ எம் டிவ்விரன்” எனும் போதும் அதில் கடுகளவும் வருத்தமில்லை. கர்வமிருந்தது. பெருமையிருந்தது.  அவனைக் கண்டு முகமலர்ந்தேன் தவிர வார்த்தை வரவில்லை.

ஆதி அருகில் அமர்ந்தேன். அவன் கைப்பற்றி, “மன்னிக்கனுப்பா… இதுமாதிரி இன்னொரு முறை நடக்காது.” என்று சொல்ல நினைத்ததை விடுத்து,  “ஒன்று உன்னிடத்தில் கேட்கவா?” என்றேன். “ம்ம்ம்ம்…” என்று தலையசைத்து ஆதி முகம் பார்த்து என் பக்கமாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். அவன் பார்வையும் புருவங்களும், என்ன என்பதைபோல் வளைந்து வினாவாகி நின்றது.  அவன் முகம் பார்த்துப் புன்னகைச் செய்தப்படி, “மற்ற மாணவர்கள் உன்னைப் பார்த்துச் சிரித்தது உனக்கு வருத்ததைத் தரவில்லையா!” என்றேன்.

முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. இயல்பாக, “அவர்கள் புரிந்து கொள்ளவில்லை” என்றான். நான், “என்ன?” என்று வியப்போடு கேட்டேன். “அதுவா டீச்சர்…, “ஐ எம் டிவ்விரன்”, என்பது எனக்குப் புரிந்தது என் நண்பர்களுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது. சோ… எதற்குக் கவலை? அதுதான் எனக்குத் தெரியுமே அவர்களுக்கு என்னைப் புரியவில்லை என்று” என்றான் தெளிவாக. அவனை ஓரிரு வினாடிகள் கண்கொட்டாதுப் பார்த்து அமர்ந்திருந்தேன். அவன் என் முகம் பார்த்தான். என்னிடத்தில் எவ்வித அசைவுமில்லை என்று கண்டவன் அவன் தொடர்ந்து பயிற்சி ஏட்டில் அவனுக்குப் புரிந்த வினாக்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கி இருந்தான்.

“ஆதி! உன்னால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது?…இப்படியெல்லாம் பேசுவதற்கு யார் கற்றுக் கொடுத்தது?” என்றேன்.

பயிற்சி ஏட்டில் பதில் எழுதிக் கொண்டிருந்தவனின் கரிகோல் சட்டென நிலைகுத்தியது. பயிற்சி ஏட்டையே உற்றுநோக்கியப்படி ஓரிரு நிமிடம் அமைதியாக இருந்தவன், “அம்மா” என்றான்.

“………….”

அவனாக தொடர்ந்து, “எங்கம்மா எப்போதும் சொல்வாங்க மனது ஒன்றை ஏற்றுக் கொள்ளும்போது நாம் வெற்றிப் பெறுகிறோம். ஏற்க மறுக்கும்போதுதான் தோற்றுப் போகிறோம் என்று.   ஒன்றை மனது ஏற்க ஏற்க அங்கு ஒன்று முழுமை பெறுதாம். மன அழுத்தம் இருக்காது. இயல்பாக இருக்க முடியுமாம். என்னை யாரும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனக்கு என் குறை என்பது ஒரு தடையாக  ஒருபோதும் இருக்கக்கூடாதாம். நான் நானாக இருக்கனும் என்று” என்று சட்டென என் முகத்தைப் பார்த்த அடுத்த கணம் தலைகுனிந்து அவன் தொடர்ந்து எழுதத் தொடங்கினான்.

இன்று காலையிலிருந்து எனது மனத்தில்  கழன்று கொண்டிருந்த ஒன்றுக்கு அவனது பதில் புதியதொரு மனத் திறப்பத்தைத் தந்தது. அவன் தலையில் கைவைத்து முடியைக் கோதியபடி அங்கிலிருந்து எழுந்து கொண்டேன்.

மாணவன் ஒருவன் எதற்காகவோ அவனின் சக நண்பர்களிடத்தில் பொழுதுபோக்குப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான். பலரும் பலவிதப் பொழுதுபோக்குகளைக் கூறிக் கொண்டே வர ஆதியின் முறை வந்தது. சற்றும் யோசிக்காது, “புதிர்” என்றான். கேள்வி கேட்ட மாணவன் அன்றி மற்றவரும் அவனின் பதிலில் குழம்பிதான் போயினர். நானும்தான். நான் தொடர்ந்து அவர்களின் பேச்சை செவிமடுக்களானேன்.

ஆதி, “ சிம்பல்… அதற்கு ஒரே ஒரு காரணம்தான். ஒரு புதிர்க் கேள்விக்கு ஒருவர் நான்கு முதல் ஐந்து நிமிடம் யோசித்து பதில் சொல்ல வேண்டும் இல்லையா? அப்படியிருக்கும்போது நானும் நீயும் ஒரு புதிர்க் கேள்விக்கு அதே ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டு பதிலளிப்போம். அப்படின்னா நீயும் நாமும் ஒரே நிலையில் இருக்க உனக்கும் எனக்கும் எந்தவொரு வித்தியாசமுமில்லை. அதே ஐந்து நிமிடம்…. ஐம் எம் நொத் டிவ்விரன். நோர்மல் பெர்சன் இல்லையா அதுதான்” என்றவன் வாய்விட்டு சிரித்தான். மற்ற மாணவர்களுக்கு அது வேடிக்கைபோல இருந்ததோ என்னவே சிலர் சிரித்தனர், பலர் புரியாததினால் அமைதியாக இருந்தனர். எனக்கு அவனின் பதில் வியப்பளித்தது.

என்னதான் செயற்கையாக வனத்தைப் பார்த்துப் பார்த்து உருவாக்கினாலும் அதன் சுயமென்பது தானே உருபெறுவதுதான் என்பதுபோல் ஆதியின் ஒவ்வொறு பதில்களும் செயல்களும் இருப்பதாகவே தோன்றியது.

காலையில் மாணவன் ஒருவன் சக மாணவனைச் சுமந்து வந்தபோது எனக்கான முதல் உள்ளத் திறப்புக் கொண்டது. அம்மாணவர்களின் முகமலர்ச்சியில் கண்ட புன்னகையைப் போல. இதோ இந்த ஆதிவர்மன் தன்னை நன்கு புரிந்து கொண்டதால் அவனது குறைபாடு அவனுக்குப் பெரியதாகத் தெரியவில்லை. ஏன்? அவனது குறை என்பது அவனுக்கு ஒன்றுமே இல்லாத ஒன்று.

மாணவர்களிடத்தில் விடைபெறும் முன்பாக வகுப்பறையை விட்டு வெளியேற, “எனது இனிய மாணவர்களே உங்கள் அனைவருக்கும் நன்றி, என்றேன். மாணவர்கள் பலரிடையே சலசலப்பு. அதனைத் தொடர்ந்து மாணவர்த் தலைவன் நன்றியுரைக்க மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டனர். “நன்றி” என்ற சொல் எத்தகைய ஆற்றலைக் கொண்டது!

ஆசிரியர் அறையை நோக்கிப் படி இறங்கிச் செல்லும் வழியெங்கும் நேற்று மனத்தில் கழன்றுக் கொண்டிருந்த அத்தனையும் விடுபட்டு இறங்கிக் கொண்டிருந்தது. தரையைக் கால் பதிக்கும் முன்பாக புதிதாய் பிறந்தாற் போல் உள்ளமும் உடலும் மெல்ல மலர்ந்தது. மனக்காட்சியில்,“அவர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் எனக்குப் புரிந்ததே” என்பது  உள்ளும் புறமும் விரிவடைந்து சென்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...