ரிங்கிட் குறுநாவல் விமர்சனம்

index

(விமர்சனப் போட்டியில் வென்ற கட்டுரை)

பணம் என்று வரும்போது ஏழையும் பணக்காரனும் ஒன்றுதான். பணம் தேடுதல் இன்று வாழ்வின் அடிப்படை நோக்கமாக மாறிவிட்டது. இரைதேடலின் நவீன வடிவம். ஆனால் எந்த விலங்கும் தனக்கான சிறையை ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனிதன் பணம் என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் தன்னைத்தானே அதற்குள் சிறைப்படுத்திக் கொண்டுவிட்டான். தங்கத்தில் கழிவறைத்தாள் வைத்திருப்பவர் ஒருபுறம் என்றால் களிமண்ணை உணவாகக் கொள்ளும் கோடிக்கணக்கானவர்கள் மறுபுறம். உலகத்தின் முதல் பணக்காரரது ஒருவருட வருமானத்தை வைத்து உலகவறுமையை மும்முறை ஒழிக்கலாம் என்கிறார்கள். (அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை). உலகின் மிக முன்னேறிய நாடுகளிலும் கையேந்தி நிற்பவர்கள் இருக்கிறார்கள். அனைத்து மதங்களும் ஏழைக்கு உதவு, அது புண்ணியம், அதுவே சொர்க்கத்தின் பாதை என்கின்றன. எனில் ஏழ்மை ஒழிந்து விட்டால் சொர்க்கத்தின் பாதை நிரந்தரமாக அடைபட்டுவிடலாம். எனவே ஏழைகள் தேவை. பணம் என்பது ஆட்சி அதிகாரத்திலிருந்து துவங்கி அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறி நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மனிதனின் தகுதியை நிர்ணயிக்கும் சக்திகளில் மிக முக்கியமானதொன்று பணம்.

அதேசமயம், மனிதனுக்கு இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் தேவையாக இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. அவனுடைய தன்முனைப்பைத் திருப்தி செய்ய, ஏதோ ஒருவிதத்தில் தன்னை மற்றவரிடமிருந்து உயர்த்தி அல்லது வேறுபடுத்திக் காட்ட விரும்புகிறான். நிலம், நாடு, மாநிலம், மாவட்டம், வட்டாரம், ஊர், ஊரின் பகுதி, தெரு, இனம், மதம், மதத்தின் உட்பிரிவு, சாதி, சாதியின் உட்பிரிவு, மொழி, வட்டார வழக்கு, அரசியல் கட்சி, பொருளாதார நிலை, கல்வி, தொழில், தோலின் நிறம் என்று ஏதோவொரு விதத்தில் நான் உன்னைக் காட்டிலும் உயர்ந்தவன் என்றோ அல்லது நீ என்னைவிடத் தாழ்ந்தவன் என்றோ சொல்ல ஏதேனும் தேவையாக இருக்கிறது. குறைந்தபட்சம் ‘நீ வேறு-நான் வேறு’ என்றாவது சொல்ல வேண்டியிருக்கிறது. உலகம் முழுக்க இதுதான் நிலைமை. அனைவரும், அனைத்து விதங்களிலும் சமம் என்பதை அவனால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பாண்டியனின் குறுநாவலான ‘ரிங்கிட்’ இந்த இரண்டு புள்ளிகளும் இணைந்த தருணத்தைப் பற்றிப் பேசுகிறது. 2018 செப்டம்பரில் மலேசியாவின் வல்லினம் மற்றும் தமிழகத்தின் யாவரும் பதிப்பகம், இருவரும் இணைந்து இக்குறுநாவலின் முதல் பதிப்பை வெளியிட்டனர். வல்லினம் நடத்திய குறுநாவல் போட்டியில் வென்ற படைப்பு. இதுவரையிலும் அபுனைவுகள் (Non-fiction) மட்டுமே எழுதிவந்த அ.பாண்டியனின் முதல் புனைவெழுத்து (Fiction) இது.

* * *

1967ஆம் வருடம் மலேசிய அரசாங்கம் மலாயா டாலருக்குப் பதிலாக ரிங்கிட்டை அறிமுகப்படுத்தவிருந்த சமயம். டாலரிலிருந்து ரிங்கிட்டின் மதிப்பு 15 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வியாபாரிகள் மத்தியில் பதட்டத்தை உருவாக்குகிறது. சோஷலிஸ்ட்டுகள் இதுசார்ந்து கடையடைப்பைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும்போது பினாங்கில் மலாய் – சீன மக்களிடையே கலவரம் உருவாகி உயிர்ச்சேதம் விளைந்தது. இவை அனைவரும் அறிந்த ஒன்றே. பாண்டியன் இக்கலவரத்தின் அடிப்படைகளைக் கருவாகக் கொண்டு ரிங்கிட் குறுநாவலை அமைத்துள்ளார்.

இக்குறுநாவலின் குறிப்பிடத்தக்க அம்சம், அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலையை வெளிப்படுத்த முனைகிறது என்பதே. மலாய்க்காரர்களுக்கு இது தமது சொந்தநிலம் என்ற எண்ணம், சீனர்கள் வந்தேறிகள் என்ற காழ்ப்பு. அவ்வெறுப்பே இக்கலவரத்திற்கு ஆதாரம். பணம் மாறுவது, மதிப்புக் குறைவது என்பது அது வெளிப்படக் காரணமாக இருக்கிறது.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதாகக் காட்டப்படும் சம்பவம். காட்டில் சந்திக்கும் சீனர்களான கம்யூனிஸ்ட்டுகளிடம் டாவூட் கூறுகிறார், ‘இது எங்கள் நாடு, இதை எப்படிப் பாதுகாத்துக் கொள்வதென்று எங்களுக்குத் தெரியும், எங்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்காதே’. சுதந்திரம் பெற்ற பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு கடையை மூடச்சொல்லும் சீனர்களிடம் அனுவார் சொல்வது, ‘இது எங்க இடம், நீ யார் கேட்க?’.  பழக்கடைக்காரர் அனுவாரிடம் சொல்கிறார், ’வரட்டும், இந்த வந்தேறிகளை ஒரு கை பார்க்கலாம்’. சீனர்களுக்கும் இம்மண்ணிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் இங்கே குடியேறியவர்கள் என்பதால் இங்கே அவர்களுக்கு உரிமை இல்லை என்ற எண்ணம் முதல் காரணம். இரண்டாவது மதம் சார்ந்தது என்றும் கூறலாம். பிரார்த்தனை செய்யாத சீன ஃபாத்திமாவைப் பார்த்து அவளது அம்மா கூறுகிறாள், ‘கடவுளை நம்பாமல் கமூனிஸ் ஆகப்போறியா? எவனோ கமூனிஸ் பெற்றுப் போட்டவள்தானே நீ?’. ஃபாத்திமா, ‘கமூனிஸ்’ என்ற சொல்லை ‘இப்லிஸ்’ எனும் சாத்தானோடு தொடர்புபடுத்திப் புரிந்துகொள்கிறாள். முஸ்லிம்களின் ‘இறைவனை மறுக்கக் கூடாது’ என்ற ஆதாரமான கொள்கைக்கு எதிரான போக்கினை கம்யூனிஸ்ட்டுகள் / சோஷலிஸ்ட்டுகள் கொண்டிருப்பதால் ஏற்படும் மனவிலக்கம்.  தவிர அவர்கள் கைக்கொள்ளும் வன்முறை வழியும் காரணமாக இருக்கலாம்.

எனவே வெறுப்பு சமூகத்திற்குள்ளாக ஏற்கெனவே புரையோடிக் கிடக்கிறது. மலாய் இன மக்களுக்கு  சீனர்களது செயல்பாடுகள் மீது இருக்கும் சந்தேகம் இரண்டு இடங்களில் காட்டப்படுகிறது. கம்பத்திற்குள் வருவது கம்யூனிஸ்டுகளாக இருக்குமோ என மக்கள் தற்காத்துக் கொள்ளத் தயாராகின்றனர். மற்றோர் இடத்தில் கடையடைப்புக்கான நோட்டீஸ் கொடுக்கும் சோஷலிஸ்ட் கட்சி சார்ந்த சீனர்களை மலாய் இன மக்கள் சந்தேகத்துடன் பார்த்தனர் என்று சொல்லப்படுகிறது. கடையடைப்பு அனைவரின் நன்மைக்கானது என்று மீண்டும் மீண்டும் சீனர்கள் வலியுறுத்தினாலும் அவர்களுக்கு அதில் நம்பிக்கையில்லை. இந்தச் சந்தேகம் அவர்கள்மீது இருக்கும் வெறுப்பின் வெளிப்பாடுதான்.

அதேசமயம் சோஷலிஸ்ட் தலைவரைப் பார்க்க வந்த இரண்டு மலாய்க்காரர்கள் – அவர்கள் எதிர்க்கட்சியினராக இருக்கலாம் அல்லது ஆளுங்கட்சிக்கு எதிரான வேறு ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் – சோஷலிஸ்ட்டுகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுவது, ‘இதை எங்கள் மக்களுக்குப் புரியவைப்பது கடினமானது, இருந்தாலும் முயற்சி செய்வோம்.’ எனவே ஒரு சாரார் அல்லது மிகக் குறைந்த சதவிகிதத்தினர் சீனர்களுடன் / சோஷலிஸ்ட்டுகளுடன் உடன்பாடு கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அது மலாய் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் துங்குவின் மீதான எதிர் அரசியலாக இருக்கக்கூடும். அதுவே அவர்களது பேச்சிலும் வெளிப்படுகிறது.

தமிழர்கள் இதில் கலந்துகொள்ள விரும்பாமல் ஒதுங்கியே இருக்கிறார்கள். இதுசார்ந்த அவர்களது மனநிலை காளியப்பன் மற்றும் கதிரேசன் வாயிலாக வெளிப்படுகிறது எனலாம். ‘இது அவனுங்க பிரச்சினை, நாம ஒதுங்கி நிற்போம். பிழைக்க வந்த இடத்துல பிரச்சினை எதுக்கு?’ என்று நினைக்கிறார் காளியப்பன். அவரைப் பொறுத்தவரை இது தற்காலிகமான, பணம் சம்பாதிக்க வந்த இடம், அவர் மண் என்பது இந்தியாதான், அவர் மீண்டும் அங்கே செல்லும் என்ணத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படுகிறது. காரணம் அங்கே வீடு, காணி என ஓய்வு வாழ்க்கைக்கான அனைத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார், அவரது கால்கள் மலேசியாவில் வேரூன்றியில்லை.

சோஷலிஸ்ட் கட்சியிலிருக்கும் டாக்டர், “செட்டிகள் உள்நாட்டு விஷயத்தில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், ஆனால் பண விஷயம் என்பதால் நாம் சொல்வதைக் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது,” என்கிறார். இதுவும் தமிழர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே இங்கு இருக்கின்றனர், ஆனால் இங்குள்ள அரசியலில் அவர்களுக்கு நாட்டமில்லை என்பதை வெளிப்படுத்தும்.

கதிரேசனுக்கு மலேசியா என்பது விடுதலை மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கை தரும் நிலம். அவனால் இங்கே சுதந்திரமாக சிகரெட் புகைக்க முடிகிறது. விருப்பப்படி உடுத்த முடிகிறது. ஊரிலிருந்து வந்ததுமே அம்மா கொடுத்த பணத்தில் சில உடைகளைத் தைத்துக் கொள்கிறான். சம்பாதிப்பதில்தான் கவனம் இருக்கவேண்டும் என்ற காளியப்பனின் அறிவுரைகளைப் புறந்தள்ளுகிறான். சொந்த ஊரில் அவனால் விருப்பம்போல உடுத்தமுடியாது, காரணம் சாதியக் கட்டுப்பாடு (ஆனால் தமிழகத்தில் 60-களின் துவக்கத்திலேயே இந்நிலை மாறிவிட்டதென வயதில் மூத்த நண்பர் ஒருவர் கூறினார்). அந்த ஆசையை இங்கே தீர்த்துக்கொள்ள முடிகிறது. இங்கே அவனது உடைகள், நடவடிக்கைகள் குறித்துக் கேள்வியெழுப்புபவர்கள் இல்லை. அதோடு மலேசியாவிலேயே பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறான். அவனது கற்பனை எதிர்காலத்தின் ஆதாரமே மலேசிய மண்தான். எனவே கலவரம் நிகழும்போது அவன் கவலை கொள்கிறான். ஆனால் அது தனது கனவுகள் நிறைவேறுமா என்ற சுயநலத்திலிருந்து எழுந்த கவலை மட்டுமே. அவனுக்கும் பண மதிப்புக் குறைவதோ அல்லது கலவரத்தினால் உண்டாகும் உயிர்ச்சேதங்கள் பற்றியோ பெரிய அக்கறை ஏதுமில்லை. கலவரத்தின்போது சீனக்கிழவி ஹசனால் தாக்கப்படுவதை அவன் வேடிக்கை மட்டுமே பார்க்கிறான், தடுக்கும் அல்லது அவளைக் காக்கும் எண்ணம் அவனிடம் இல்லை. அக்காலகட்டத்திலிருந்த மொத்த தமிழ்ச்சமூகத்தின் மனநிலையை கதிரேசனின் இந்தச்செயல் வாயிலாக ஆசிரியர் முன்வைக்கிறார் என்று கொள்ளலாம்.

நகரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் இப்படியென்றால் தோட்டத்தில் கூலிகளாக வேலை பார்த்துக்கொண்டிருந்த தமிழர்களின் நிலைப்பாடு கிருஷ்ணன் தண்டல் வழியாக வெளிப்படுகிறது. ‘காசு மதிப்பு குறைஞ்சா என்ன கூடுனா என்ன, தோட்ட மக்களுக்கு எல்லாம் ஒண்ணுதான்,’ என்கிறார். ஆக அவர்களுக்கும் இந்த விஷயங்களில் பெரிய ஈடுபாடு எதுவுமில்லை.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டியது முக்கியம். ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் இதில் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளாது இருந்தனர் என்ற உண்மையை எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் பாண்டியன் முன்வைக்கிறார். புனைவுச் சுதந்திரம் இருந்தும் உள்ளது உள்ளபடியே வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் எனும் சார்புகளற்ற அவரது முனைப்பு குறிப்பிடத்தகுந்தது, பாராட்டத் தகுந்தது. ஆவணப்படுத்துதலுக்கான அடிப்படைத் தகுதி அதுதான்.

நாவலில் வரும் முக்கியக் கதைமாந்தர்களான சீனர்கள் சமூக மாற்றத்தை மக்கள் புரட்சியின் மூலம் மட்டுமே உருவாக்க முடியும் எனும் சோஷலிஸச் சிந்தாந்தத்தைக் கொண்டுள்ளனர். மேலும், அந்தக் காலகட்டத்திலும் சீனர்கள் அதிகமாக வியாபாரத்தில்தான் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறியமுடிகிறது. கடையடைப்புக்கு உடன்படும் சீன வியாபாரிகளும் பணமதிப்புக் குறைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அதற்கு ஒப்புக்கொள்கின்றனர். எனில் சீனர்களுக்கு நம்முடைய மண் என்ற உணர்வைக் காட்டிலும் பொருளாதாரம் முக்கியமானதாக இருக்கிறது என்றே புரிந்து கொள்ளத் தோன்றுகிறது. அதேசமயம் ஒரு மண்ணில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர முனையும் கூட்டம் அது தன்னுடையது என்ற எண்ணம் இல்லாமல் செய்திருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. புரட்சியின் வாயிலாக நாட்டைச் சீர்திருத்தும் முனைப்பும் அதற்கு சீனர்களால் அளிக்கப்படும் ஒத்துழைப்பும் வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமா? சோஷலிஸ / கம்யூனிசச் சிந்தனை கொண்டிருந்தவர்களுக்கும் அது இல்லாத சாதாரண சீன மக்களுக்கும் ’மலேசிய மண்’ என்பது ஒன்றேதானா? அல்லது வேறுவேறா? என்ற சித்திரத்தை இந்நாவலின்வழி உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.

சீனர்கள் மலாய்க்காரர்கள் மீது கொண்டிருக்கும் அதிருப்தி பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. கடையடைப்புக்கு அவர்கள் முன்வருவார்களா என்ற கேள்வியோடு, அது கம்யூனிஸ்ட்டுகளின் திட்டம் என்று திசை திருப்பப்படலாம் என விக்டரிடம் புதிதாகச் சேர்ந்த சீன இளைஞன் கூறுகிறான். ‘மலாய்க்காரர்கள் கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர்கள், துங்குவுக்கு இது போதுமானது நம்மை அடக்க,’ என்கிறான்.

ஆனால் மலாய்க்காரர்களுக்கு இந்தியர்களின் மீது என்ன மாதிரியான எண்ணம் இருந்தது என்பது நாவலில் காட்டப்படவில்லை. காளியப்பனின் கடைக்கு சீனர்கள் முடிவெட்டிக்கொள்ள வருகிறார்கள் ஆனால் மலாய்க்காரர்கள் வருவதில்லை. என்றாலும் வெள்ளத்தோடு போய்விட்ட விசுவின் உடலைத்தேட பெருமாளின் குழுவினருக்கு மலாய்க்காரர்களும் உதவுகிறார்கள். எனவே இரண்டு சமூகத்திற்கு இடையிலான உறவென்பது தவிர்க்க இயலாமல் சார்ந்து வாழ்வதினால் உருவானது என்று வேண்டுமானால் கொள்ளமுடிகிறது, ஆனாலும் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொதிப்பான சூழ்நிலை சார்ந்து தமிழ்ச்சமூகத்தின் மீது மலாய்க்காரர்களுக்கு இருந்த கருத்து என்ன என்பதை இக்குறுநாவலின் வாயிலாக விளங்கிக்கொள்ள முடியவில்லை.

* * *

சில நுண் சித்தரிப்புகளை இக்குறுநாவலில் கவனித்தேன்.

சீன ஃபாத்திமா ஹசனால் வளர்க்கப்படுவதால் முஸ்லிமாக இருக்கிறாள், ஆனாலும் சீன ஃபாத்திமா என்ற பெயரும் அவளது தோற்றமும் அவள் வேறு என்பதை வெளிப்படுத்துவது அவளைத் தொந்தரவு செய்கிறது. அவளது (வளர்ப்பு) அம்மாவும் ‘கமூனிஸ்’ என்று அவளை ஏசுகிறார். இவற்றின் வெளிப்பாடுதான் அவள் மதத்தில் கொள்ளும் தீவிரம். தன்னை நிரூபிக்க விரும்பும் பதட்டம், நானும் உங்களில் ஒருத்திதான், வேறல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம், விலக்கப்பட்டு விடுவோமோ என்கிற அச்சம் ஆகியவற்றின் விளைவுதான் ஒன்றைத் தீவிரமாகப் பற்றுதல்.

கிட்டத்தட்ட அதே மனநிலைதான் புதிதாக கட்சிக்குள் வரும் சீன இளைஞர்களுக்கும் இருக்கிறது. தங்களை நிரூபிக்க வேண்டியுள்ளது, தங்களது அர்ப்பணிப்பை, தீவிரத்தன்மையை  அவர்கள்  மலாய்க்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். புதிதாக ஒன்றை ஏற்றுக்கொண்டவர்கள் அதில் தீவிரத்தன்மையோடு ஈடுபடுவதே இயல்பு. அதை பாண்டியன் துல்லியமாகப் பயன்படுத்தியுள்ளார்.

’உயிர் என்பது விலைமதிப்பில்லாதது’ என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற, மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிற கருத்து, ஆனால் இங்கேதான் சில்லறைக் காசுகளுக்காகக் கூட உயிர்க்கொலை நடக்கிறது எனும்போது பணத்தின் மதிப்பு – உயிரின் மதிப்பு எது பெரியது என்ற கேள்வி வருகிறது. இக்குறுநாவலில் நடக்கும் கொலைகள் இனவெறுப்பின் காரணமாக நிகழ்கின்றன என்றாலும் ஏதோ ஒருவகையில் அதில் பணம் தொடர்புடையதாக இருக்கிறது. புரையோடிக் கிடக்கின்ற வெறுப்பைத் தனித்துக்கொள்ளப் பணம் என்ற காரணி உதவுகிறது. இனவெறுப்பின் தொடக்கப்புள்ளி இவர்கள் வந்தேறிகள் என்ற எண்ணம். வந்தேறி என்ற சொல் உலக அரசியலில் முக்கியப்பங்கு வகிப்பது. இன்றைக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் சிக்கல், புலம் பெயர்ந்து வந்தவர்கள் எனும் வந்தேறிகள். அதுவே இக்குறுநாவல் தொழிற்படும் மையப்புள்ளி.

* * *

இக்குறுநாவலின் கட்டமைப்பு குறித்து; ‘நாவல்’ என்ற சொல்லுக்கு “புதிய அல்லது வழக்கத்தில் இல்லாத சுவாரசியமான வழி” என்றொரு விளக்கத்தை அகராதி அளிக்கிறது. இக்குறுநாவலின் மிகமுக்கியமான சிக்கலாக நான் கருதுவது – அதன் மொழி, தொடர்ந்து நம்மை வாசிக்க வைக்கின்ற, சுவாரசியமான, புனைவுக்கான மொழியல்ல. அபுனைவுக்கான மொழி என சில இடங்களில் தோன்றுகிறது. இரண்டாவது, கதைமாந்தர்களில் அழுத்தம் இல்லாமல் இருப்பது. நிறையபேர் வந்து போகிறார்கள், ஆனால் அவர்கள் யாருமே நம்மை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பினாங்கு நகரத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் வரும் பாண்டியன் ஏன் ஒவ்வொரு வாசிப்பிலும் நம்மைப் பாதிக்கிறான்? காரணம் அது வெறுமே புறச்சூழலை விவரிப்பதோடு நிற்பதில்லை. கதை மாந்தர்களின் அகச்சூழலையும் தொட்டுச் செல்கிறது என்பதால் நம்மால் அக்கதையின் பாத்திரங்களோடும் அவற்றின் உணர்வுகளோடும் ஒன்றமுடிகிறது. “ஓர் இலக்கியப்படைப்பு அகத்தை எந்தளவு மையம் கொண்டிருக்கிறதோ, அந்தளவு உயர்வானதாய் இருக்கும்,” என்ற பிரமிளின் கருத்து இங்கே நினைவுகொள்ளத் தக்கது.  இக்குறுநாவலில் அதுதான் குறைகிறது. புறச்சூழலைப் பேசும் கருப்பொருள் என்றாலும் அது அகத்தை மையமிட்டு இருக்கலாம். ஆனால் இது அகவுணர்வுகள் ஏதுமில்லாமல் பறவைப்பார்வையாக சூழலை விவரித்து மட்டும் செல்கிறது. ஒருவேளை ஏதேனும் மையக்கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து அதன் வாழ்க்கை வழியாக இக்கதையைச் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கதையில் சில பகுதிகள், கதாபாத்திரங்கள், சம்பவங்கள் தேவையில்லாதவை. உதாரணமாக சீன ஃபாத்திமாவின் பாட்டி மற்றும் அவரது தொழில் குறித்த வர்ணனைகள், கலவரக் காட்சிகள் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கும் சூழலில் திடீரென இது கதையோட்டத்தில் குறுக்கிடுகிறது. அவரது மொத்தக்கதையையும் ஒருவரியில் சொல்லிவிடலாம் எனும்போது இவ்வளவு விவரணைகள் தேவையில்லை. பொதுவாகவே நாவல் முழுவதும் தெருச்சூழல், தொழில்கள் குறித்த வர்ணனைகள் பல இடங்களில் வருகின்றன, அவற்றைத் தவிர்த்திருக்கலாம். ஹசானின் வேட்டை ஆர்வம், துப்பாக்கி கிடைப்பது, காட்டில் புலியைப் பார்ப்பது போன்ற சம்பவங்கள் மையக்கதையோட்டத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவை. பழங்கள் சேகரிப்பு குறித்த விவரங்கள், அனுவாரின் வாழ்க்கை, அவன் தொழில் குறித்த விவரிப்புகளும் அப்படியே, மேலும் பல கதாபாத்திரங்களுக்கு பூர்வகதை சொல்லப்படுகிறது, அது இக்குறுநாவலின் களத்திற்கு அவசியமற்றது, உதாரணமாக காளியப்பனின் கதை. அதுபோலவே கடைசிப்பகுதியில் மரணத்தறுவாயில் இருக்கும் ஹசானின் மனவோட்டங்கள். அரசியல் பேசும் நாவலில் தத்துவச் சாயல் கொள்ளும் பகுதிகள் எதற்காக? அஸ்கார்காரரான ஹசானுக்கு சீன ஃபாத்திமாவைக் குறித்த குற்ற உணர்வு இருப்பதாக வேறு எங்கும் காட்டப்படுவதில்லை, அவரது மரணத் தறுவாயில் அவர் மன்னிப்புக் கேட்பதில் மட்டுமே அது வெளிப்படுகிறது. எனவே மரணநேரத்தில் அவரது மனவோட்டங்கள் மற்றும் அனுபவங்களாக வருபவை கதையோடு ஒட்டாமல் தனியே நிற்கின்றன.

திடீரென்று அனுவார் கதைக்குள் நுழைகிறான்.  அவன் கடைபோடப்போகும் இடம் தெரிந்தவுடன் சண்டை வரும் என்பது தெரிகிறது. அனுவாரின் கதை இல்லாமலே கூட கலவரக் காட்சியைச் சொல்லிவிடலாம். எல்லாவற்றையும் விளக்கவேண்டிய கட்டாயமில்லை. வாசகன் அந்த இடைவெளியை நிரப்பிக் கொள்வான் என்று ஆசிரியர் நம்பவேண்டும்.  ஆசிரியருக்கு நிறையத் தெரிந்திருக்கலாம், அத்தனையும் ஒரே படைப்பில் வெளிப்படுத்த வேண்டுமென்பதில்லை. புனைவுக்கும் அபுனைவுக்குமான வித்தியாசம் அதுதான். அபுனைவில் நீங்கள் அனைத்து விவரங்களையும் ஒன்றுவிடாமல் அடுக்கலாம், அது அனுமதிக்கும். புனைவில் தகவல்களைவிட அதிகம் கடத்தப்படவேண்டியது உணர்வுகள்தான். அதிலும், சுருங்கச்சொல்லி சிலவற்றை வாசகன் உணர்ந்து கொள்ளும்படி விடுவது சிறப்பு. இதைத்தான் வாசக இடைவெளி என்கிறோம்.

இறுதியாக, இந்தக் குறுநாவலை இலக்கிய ரீதியாக எங்கே வைக்கலாம் என்ற மதிப்பீடு தேவையில்லை. ஏனெனில் இது ஓர் ஆவணப்படுத்தும் முயற்சி என்று மட்டுமே கொள்கிறேன். அந்தவகையில் சிற்சில பின்னடைவுகள் இருந்தாலும் பாண்டியன் தான் ஆவணப்படுத்த முயன்ற விஷயத்தை இதில் செய்து முடித்துவிட்டார். மற்றபடி அவர் தொடர்ந்து புனைவிலக்கியத்தில் ஈடுபடும் எண்ணம் கொண்டிருப்பாரெனில் அவர் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. அப்பாதையில் செல்லச்செல்ல புனைவின் மொழி அவருக்கு வசப்படும் என்று நம்புகிறேன்.

1 கருத்து for “ரிங்கிட் குறுநாவல் விமர்சனம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...