புனைவுகளில் புரண்டோடும் திருப்பங்கள்

short_storiesசிறுகதை என்பது புத்திலக்கியத்தின் வடிவம். மரபிலக்கியம் சமூகத்தில் உள்ள நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் பற்றியே வலியுறுத்திக் கூறும். புத்திலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை என்பது பலவிதமான முரண்பாடுகளால் ஆனது என்று எண்ணியமையால் வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சிறுகதையின் மூலமாகச் சொல்வர்.

புத்திலக்கியத்தின் சிறுகதை ஒரு தருணத்தையே கதையாக மாற்றும் வடிவம். கதை நிகழும் சூழலிலிருந்தே கற்பனையை வளர்த்துக் கொண்டு தன் படைப்பாற்றலை ஆசிரியன் குறிப்பிட்ட கருவுக்குள் நிற்காமல் விரிவான கதைக்களத்தைச் சித்தரித்துச் செல்வான். கதையின் சாரத்தைப் பொறுத்தே அதன் தலைப்பும் அமைந்திருக்கும். வெளிப்படையாக இதுதான் கதையின் மூலம் என்று தலைப்பு விளக்காது. வெளிப்படையான தலைப்பு கற்பனைக்குத் தடையாக அமைவதால் கதையின் சாரத்தை படிமம் மூலம் சுட்டும் தலைப்புகளே சிறுகதைக்கு அமைக்கின்றனர்.

அவ்வகையில் வல்லினம் இதழில் சமீபத்தில் வெளிவந்த சில சிறுகதைகளின் தலைப்புகளும் கதையின் சாரத்தின் மூல வடிவத்தை ஒத்து உருவாகியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மண் அகல், சியர்ஸ், விலகி செல்லும் பாதை, இயல்வாகை, வலசைப்பறவைகளுக்குத் திசைகள் கிடையாது, கர்ப்பப்பை, கறைநதி, வெம்மை, கடவுளின் மலம், மற்றும் அடிதூர் போன்ற இன்னும் பல சிறுகதைகளின் தலைப்புகள் அமைந்திருக்கின்றன. தலைப்பை வாசித்தவுடனே, சித்தரிப்புக்குள் சென்று கற்பனைகளை வளர்த்துக் கொண்டு வாசகனை ஈர்த்துக் கதைக்குள் தள்ளும் வடிவமாக இருக்கின்றது.

மண் அகல் – லாவண்யா சுந்தரராஜன்

கருமகாரியம் நிகழும் தருணத்தைக் கதைக்களமாகக் கொண்டு சித்தரிப்பு நிகழ்கிறது. குத்துவிளக்கின் பிரகாசத்தில் தொடங்கி மண் அகலில் முடிந்து விடுகிற வாழ்க்கை பயணத்தைப் புனைவுகளோடு கூறும் கதை. பிறப்பு விழா, பூப்பெய்திய விழா, திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் சுடர்விடும் குத்துவிளக்கு இறப்புச் சடங்கிற்குப் பின் மண் அகலில் சுடர்விட்டுப் போய் முடிவதை உணர்ச்சிகளோடு உறைய வைக்கிறது. குத்துவிளக்கில் ஐந்து முனைகளில் சுடர் பிரகாசிப்பது போன்றுதான் உலக வாழ்க்கை. சுற்றிலும் சுற்றத்தார்களும் உறவினர்களோடு வாழ்ந்து, வாழ்க்கையில் சுகம் துக்கம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, இறுதியில் ஒற்றைச் சுடராய்த் துணையில்லாமல் முடிவதே வாழ்க்கை என்ற ஆழமான கருத்து விவரிப்புகளோடு உருவாகி இருக்கிறது.

“இந்த குத்துவிளக்கு அம்மா கல்யாணத்துக்கு எரிஞ்சது. அப்புறம் அம்மோவோடு அம்மம்மா, அதான் என் அய்யம்மா செத்தப்ப எரிஞ்சது, பின்ன அவங்க கரும காரியத்துக்கும், தேவை சடங்குக்கும், வருஷத் தெவசத்துக்கும், அதுக்கு அப்புறம் என் கல்யாணத்துல, அப்புறம் இன்னிக்கி, அம்மாவோட கல்லு காரியத்துக்கு எரியுது. இந்த குத்துவிளக்கு மாதிரிதானே அம்மாவும் எரிஞ்சிரிப்பாங்களோ?” தேவைக்காக மட்டுமே அம்மா வாழ்ந்து மறந்துவிட்டபோன சோகத்தைக் காட்டும் வரிகள் இவை. எந்தச் சுகங்களையும் அனுபவிக்காது, தன் கணவனுக்காவும் பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு அம்மாவின் நிலையும் குத்துவிளக்கு மாதிரிதான். அன்னையர் நாளுக்கு மட்டும் விருந்து சுவையாக சமைத்துப் போட்டு மகிழ்விக்கின்ற பிள்ளைகளுக்கு அவர்களின் ஒவ்வொரு நாளுக்கான சுமைகளைத் தாங்கி நிற்க நேரமில்லை. பிள்ளைகளின் பிள்ளைகளை, அதாவது பேரப்பிள்ளைகளையும் அவர்களே வளர்த்து இறக்கும் வரையிலும் நிம்மதியைத் தொலைத்து மறைந்து போகிற நிலைமைதான் தாய்மார்களின் நிலை.

இதில் சொத்துத் தகராறு வேறு. வாழும்வரை பிரிந்திருந்த வீட்டு உறவினர்கள் இறந்து விட்டப் பின்னும் பேசுகிறார்கள். “ஏன் என் பேரன் தலையில் வைச்சா என்ன, அவனும் ஒரு பவுன் மோதிரத்தைதான் போட்டுப் பாக்கட்டுமே, அதையும் மருமவனுக்கே கொடுக்கனுமா. உங்களுக்கு கல்லு பொங்க வைக்க தேவை, பாயசம் வைக்க எங்க வீட்டு அடுப்பு வேணும். அனுபவிக்க மட்டும் மருமவன், மக மட்டும் போதும்!” என நோக்கமில்லாமல் வாழும் மனிதர்கள் நிரம்பிய கதை இது.

மண் அகல், மண்ணால் உருவாகி மீண்டும் மண்ணாகி போகிற வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கிப் போகிறது.

சியர்ஸ் – ம.நவீன்

எளிமையான சிந்தரிப்பு. வாசகனுக்கான கற்பனையில் மிதக்கவிடும் அளவான போதை. கண்ணாடி குவளை மோதிக்கொள்ளும் போது சொல்லப்படும் சியர்ஸில் தொடங்குகிறது கதையின் தருணம். வாசகனை  இரவு கிளாப்பில் வைத்துக் கொண்டு வேறொரு கதைக்குள் இழுத்துப் போகும் கதாசிரியரின் திறமை வெகுவாக ஈர்க்கப்படுகிறது. இக்கதையின் திருப்பமே மேலும் வாசகனைத் தேடத் தூண்டுகிறது. மௌனத்தின் எல்லையில் பீரிட்டு அழவைத்து விட்டு, பிறகு எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல் யோசிக்கவும் வைக்கிறது. சின்ன வயதில் விட்டு வந்த தாயைத் தேடிக் கண்டடையும் ஒருவனுடைய பயணத்தில், உண்மையான தாயைத்தான் கண்டானா? அந்தத் தாயும் சரியான மகனிடம்தான் சேர்ந்தாளா? என்கிற திருப்பம்தான் கதையின் சுவாரசியமே. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றதோ அதுபோல தேடலும் வேகமாகிறது. அந்த அவசரத்தில்தான் தாம் கண்டடைய வேண்டிய உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமலேயே போகிறோம் என்ற கருத்தினை முன் வைத்திருக்கிறது சிறுகதை.

மலேசியாவின் தமிழ்த்திரைப்பட இயக்குனர்களின் நிலையை வெகுவாக எடுத்துக்காட்டி, அதன் பின்னணியில் உள்ள குற்றங்களையும், ஏற்பட்டிருக்கும் சிக்கல்களையும் கதையின் ஊடே தெளிய வைக்கிறது.

சியர்ஸ் சிறுகதையில், ready>>> take 1>>> camera rolling>>> action என்றவுடன் திரைமறைவில் இருந்து படம் தொடங்குவது போலவே கண்ணுக்குப் முன்பாக அழகான பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்தினாற்போன்று கதையின் சித்தரிப்புத் தொடங்குகிறது. இதில் கதைச்சொல்லியின் வேலையை வேறொருவர் பெற்றுக்கொண்டு கதை சொல்லத் தொடங்குகிறார். ஒரு இயக்குனரின் மூன்றாமவன் கதைச்சொல்லும் உத்தி. மிக நேர்த்தியாகவும், வேண்டிய இடத்தில் இடைமறித்து, தனக்கான வினாவுக்கும் விடைக்காணுகிற விதம் தன்னிச்சையாகவே வெளிப்படுகிறது. “மியன்மார்ல எந்த ஊருன்னே தெரியாமலா போனீங்க?  மை காட்”. எதார்த்தமான கேள்விதான் என்றாலும் கேள்விக்குள் புதிரை வைத்து விட்டார் கதாசிரியர்.

ஏமாற்றம், விரக்தி என கதைச்சொல்லி அடையும் போது ஏற்படும் மனநிலையில் “கொஞ்சம் நிறுத்தி மூர்த்தி பியரைக் குடித்தபோது அவருக்கு நன்றாகக் கதைச் சொல்ல வருகிறதென நினைத்துக்கொண்டேன்” இவ்வாறான விளக்கம், வாசகன் கதாப்பாத்திரத்தின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிற, கேட்டுக் கொண்டிருக்கிற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. Emotional அதாவது உணர்ச்சி வசப்படும் நிலையில் ஒருவனின் உடல் மொழி எவ்வாறு இருக்கும் என்பதையும் கதைக்குள் வைத்திருக்கிறார்.

“பக்கத்துல ‘மொங் தோன்’ங்கற எடுத்துல அரசாங்கம் பெரிய டேம் கட்டியிருக்காங்க” எல்லையைக் கடத்த வேறொரு நாட்டுக்குள் கதையின் சித்தரிப்பு இருக்கும் தருணத்தில், கதைக்களத்தில் என்னென்ன பொருள்கள், காட்சிநிலைகள், இயற்கை/செயற்கையான அம்சங்கள் இருந்தன என்பதைக் கண்முன் கொண்டு வந்து காட்டும்போது இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். அங்கு பேசப்பட்ட மொழியின் சாரத்தையும் கொஞ்சம் தெளித்தாற் போன்று காட்டியிருக்கலாம். அது இன்னும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இக்கதையில் தேடுதல் வேட்டை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் தேடும் சிந்தனையில் மட்டுமே மற்றவர் இருக்கிறார். அந்தச் சிந்தனையே வேண்டியவரை ஈர்க்கும் பலமுள்ளது என்கிறது LAW OF ATRACTION. இந்த நியதியெல்லாம் தள்ளிவைத்து விட்டுக் கதையை வாசித்தால் கதையின் முடிவில் மனம் உருவாக்கிக்கொள்ளும் கற்பனை முடிவுகள் நிம்மதி தரிசனமாக மலர்கிறது.

விலகிச் செல்லும் பாதை – சு.வேணுகோபால்

குறுநாவலைப் படித்துவிட்ட திருப்தி. சுருங்கக் கூறினும் நீண்டு செல்கிறது கதை. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்துக் கொண்டு விறுவிறுப்பாகக் கதையை நகர்த்திக் கொண்டுப் போகிறார் கதாசிரியர். உப்பு, காரம், புளிப்பு என உணவில் இருக்க வேண்டிய அனைத்து வகையான சுவைகளையும் ஒத்த கதைக்குள் வைத்திருக்கிறார். சாதி கட்டமைப்புகளில் வீழ்ந்து கிடக்கும் சமூகத்தின் போக்கை கதையினூடே அவிழ்த்து, கண்ணிருந்தும் குருடராய் வாழும் மனிதர்களின் குருட்டு மூளைக்குள் விளக்கேற்றும் பணிதான் இது. ஆனால் நேரடியாக கன்னத்தில் அறைந்து சொல்லாமல், இருவரின் உரையாடல்களின் வழி தெளிவாக உணர்த்திப் போகிறார். எளிமையான உரையாடல்களும், நீட்சியான கதையும், கதையின் மையத்தை நோக்கி சலிப்பை ஏற்படுத்தாமல் உணர்ச்சிகளைத் தூண்டியவாறே பயணிக்கிறது.

கந்தசாமி மற்றும் பழனிசாமி இருவருக்குமிடையே நிகழும் உரையாடல்களின் மூலம் இரு வெவ்வேறான யதார்த்த உண்மைகளின் பக்குவத்தை உணர்த்த கையாண்டிருக்கும் நுண்தகவலின் புனைவுதான் இச்சிறுகதை. கண்ணிருந்தும், புற உலக வாழ்க்கையில் குருடாய் இருக்கும் கந்தசாமி, இடையில் இழந்து விட்ட பார்வையால், தனக்கென ஒரு ஒளியை ஏற்படுத்திக் கொண்டு அதில் பயணிக்கும் பழனிசாமி, மர்ம உலகின் அகத்தைத் திறத்துப் பார்க்கிறார். அதை கந்தசாமிக்கு உணர்த்தவே வீட்டிலிருந்து, திருமண மண்டபத்துக்குப் போகும் இடைவேளையில், பழனிசாமி துருப்பிடித்திருக்கும் அவரின் உள்ளத்துப் பூட்டைத் திறக்க முயற்சிக்கிறார்.

‘பழனிசாமி ஐயா கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் இடங்களை வார்த்தைகளால் வெளிச்சமாக்கிக் கொண்டு அழைத்துப் போனார்’. உள்ளத்து மாசினை அகற்ற வேண்டுமாயின் நல்ல வார்த்தைகளால் மட்டுமே முடியும். ‘வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி கிளைகளை நீட்டி குட்டையான மரம் அடர்ந்திருக்கிறது. கொஞ்சம் சாக்கடை வாசம் வந்தது. ”கந்தசாமி காம்பௌண்ட் சுவர் தாண்டி நிக்குதே கொய்யாமரம். சரியான வம்சம். காய் சல்லை சல்லையா பிடிக்கும்.” சாக்கடை ஓரமாக இருந்தாலும், வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி நிற்கும் கொய்யாமரம் என உவமை காட்டுவது, பெற்றோரின் வளர்ப்பில் பிழையாத பிள்ளைகள் தங்கள் விருப்பத்தில் வேறு இனத்தானை மணந்தாலும் மகிழ்ச்சியாகவும் சீராகவும் வாழ்வார்கள் என்று உணர்த்துகிறது.

பேருந்தில் இரு கண்களை மூடிக்கொண்டு, கந்தசாமி மாய உலகிலிருந்து வெளிவர முயற்சிக்கிறார். ‘ஏதுமற்று இருக்கும் இருட்டில் குரல்கள் விதவிதமாக உலாவுகின்றன. குரல்கள் உருவாக்கிய உலகம், குரல்களிலிருந்து உயரம், குரல்களிலிருந்து இனிமை, இசை, மணம், நிறம், ஆசை, குரோதம், காமம், கருணை, கனவு, வெறி, பாசாங்கு, மாயம் கொண்டு உலவுகின்றன. அதுவும் இல்லாது போனால் மரணம். மரணத்தில் என்ன தெரியும்?அனைத்தும் இருட்டில் இல்லாது போகும்.கௌரவம், தத்தளிப்பு, விருப்பம், மனைவி, மக்கள், சாதி, மதம் தன்னிலிருந்து சட்டென இல்லாது போகும். அதற்கடுத்து? இல்லாத உலகம். இல்லாத உலகில் இல்லாமல் போகும் முன், இருக்குற உலகில் இந்த மனம் ஏன் இந்தப் பாடுபடுகிறது? என்றும் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டு இல்லாது போவதுதானே நேரப்போகிறது. தெரிந்தும் விட்டு வெளியேற முடிவதில்லையே. விநோத வாழ்க்கை. வாழ்க்கையின் விநோதம். வாழவாய்த்த சின்னஞ்சிறு நாட்களில் சுமைகளோடுதான் பிறக்க வேண்டிருக்கிறது. சுமைகளை இறக்கி விடுபவன் ஞானிதான்.’’ இவ்வாறு கதாசிரியரே வழியவந்து சிறுகதையின் நோக்கத்தை வாசகனுக்குத் தெளியவைத்து விட்டார்.

வாசகருக்கான இடைவெளி இல்லாமல் போய்விட்டதோ என்றுகூட நினைக்கலாம். தொடரும் சிறுகதையின் வேகம் அதையும் வாசகனுக்கு வழங்கி இருக்கிறது. ஜூலி என்கிற பாத்திரத்தின் மூலமாக அந்நிலையை உணர முடிகிறது. கந்தசாமியின் மனத்தவிப்புக்கு மருந்து கிடைத்ததா? பழனிசாமி, அவரின் அகக்கண்ணைத் திறந்தாரா? என்பதே கதையின் திருப்பமாக அமைந்திருக்கிறது.

இயல்வாகை – சுனில் கிருஷ்ணன்

கெடுபிடியான வாழ்க்கையில் எதையுமே முழுமையாக அடைய முடியாமல், சந்தேகத்தோடு வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். புதுமைகளை விரும்பாமல் பழையதையே ஏற்றுக் கொண்டு வாழப் பழகிவிட்ட முதியவர்களை விட, புதுமைக்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக் கொண்ட வயதினரே நன்கு ஆய்ந்து பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அது அவர்களைக் கவலையுற செய்வதில்லை. கோபங்கொள்ள வாய்ப்பளிப்பதில்லை. “எல்லாத்துக்கும் மேல என் உலகத்தில் ரெண்டே ரெண்டு நிறம்தான். கறுப்பு இல்லனா வெள்ளை. மத்தது எல்லாமே இந்த ரெண்டுக்கும் நடக்குற வெளையாட்டுதான். இந்த அறிவு எவ்வளவு ஆசுவாசத்த கொடுக்குது”. கண்ணில்லாத குருடனுக்கு எல்லாமே கறுப்புதான். அவனுக்கு ஏது வெள்ளை. அவனுக்கான பாதையை அவனே வகுத்துக் கொள்ளவில்லையா? கண்ணிருக்கிற பலர் இப்படிதான் இருட்டை விட்டால் வெளிச்சம் என்று தவறான புரிந்துணர்வில் யாரையும் விளங்கிக் கொள்வதே இல்லை.

வெட்டு ஒன்று துண்டு இரண்டெனவும் இருந்து விட்டால் யாருக்கும் நல்லவனாகவும் இருக்க முடியாது. அதனால் பயனொன்றும் கிடையாது. போகவிட்டுப் புறம்பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்ற ஆழமான கருத்தினைப் பதிக்கிறது சிறுகதை. பணிய வேண்டிய இடத்தில் பணிந்து போவதில் குற்றமில்லை என்ற எதார்த்த வாழ்க்கையையும் புலப்படுகிறது.

கருப்பு வெள்ளையைத் தாண்டி மஞ்சள் என்கிற குழப்பமில்லாத ஒரு தெளிவான நோக்கத்தை அடைய வேண்டும். உயர்ந்த ஒழுக்க சிந்தனைகளைத் தூண்டி நுண்ணறிவைப் புலப்படுத்திக் கொள்ள வேண்டும். கவலைகளைப் போக்கி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் மனத்தில் ஏற்படும் போராட்டங்களை கலைந்து செல்லவும் தெரிய வேண்டும். “எங்கிட்டு பாத்தாலும் வெத்து வெள்ளச்சுவரா இருக்கே உங்களுக்கு போர் அடிக்காதா”. வெறுமனே ஒன்றில் செலுத்தப்படுகிற கவனமும் சலிப்பைத்தான் ஏற்படுத்தும்.

வலசைப்பறவைகளுக்குத் திசைகள் கிடையாது – சுசித்ரா

நமக்கான திசையை அறிந்து செயல்படுவது ஒருபுறமிருக்க திசையே இல்லாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களுக்குப் புரியுமா? நோக்கமில்லாமல் வாழ்கின்றவர்களைதான் திசைகள் இல்லாதவர்கள் என்கிறார்கள். ஆனால், வலசைப்பறவைகளுக்குத் திசைகள் எப்படி இல்லாமல் போகும்? நோக்கம் இருக்கிறது. இருப்பினும் பருவம் தொட்டு அதற்கான திசையை அவைகளே முடிவு செய்து கொள்கின்றன. கிழக்கு முதுமையை நோக்கி பயணிப்பது போல மேற்கு இளமையை நோக்கியே பயணிக்கிறது என்கிற மாயைப் புரிவதில்லை. “நாம் காலத்தை நம்மை மையமாகக் கொண்டு புரிந்துகொள்கிறோம். ஆகவே நேற்று, இன்று நாளை என்று கட்டுக்கோப்பாக வரிசைப்படுத்திக் கொள்கிறோம். நேற்று உதிர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது. நாளை பிறந்து வந்து கொண்டே இருக்கிறது. மையத்தில் நாம். இங்குமில்லாமல் அங்குமில்லாமல் ஊசிமுனையில் நின்றபடி நிலை தடுமாறுகிறோம்”. இப்படிதான் நமக்கான ஒரு பாதையை அமைத்துக் கொண்டு எங்கு போவது என்றே தெரியாமல் இருக்கிறோம்.

கைமுரா (Comoro’s island) தீவில் வாழக்கூடிய கைமூரி மக்களின் திசைகள் இல்லாத வாழ்க்கையைப் பற்றிய அருமையான கதை. திசைகள் இல்லாத மக்களுக்குத் திசைகளே மொழியாக இருக்கிறது. பழங்குடி மக்களின் திசைகளற்ற வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். முடிவையே நோக்கிப் பயணிக்கிறோமே ஒழிய யாரும் இளமையை நோக்கி போவதே இல்லை என்கிற தத்துவார்த்தமான உண்மையைச் சொல்லுகிறது கதை.

கர்ப்பப்பை – அனோஜன் பாலகிருஷ்ணன்

ஒரு நாட்டை மலடாக்கும் போரும் ஒரு பெண்ணை மலடாக்கும் வாழ்க்கை போராட்டமுமாக இரு வெவ்வேறான கர்ப்பப்பை. இலங்கையில் நடந்த நிலப்பரப்பைக் கைப்பற்றும் போரில் அங்குள்ள மக்கள் தங்களையும் தங்கள் வீட்டுப் பெண்டுகளையும் காப்பாற்றிக் கொள்ள மேற்கொள்ளும் முடிவுகளுமே கதையாக இருக்கிறது. போர் என்கிற போர்வையில் நாட்டை கற்பழித்துக் கொண்டிருக்கும் நிலையும், தன் காமப் பசிக்கு அமலாவை உணவாக்க நினைக்கும் அவனுக்கும் இருக்கும் இருவேறான கையறு நிலை. கதையினூடே அலசி ஆராயும்போது இரு தரப்பினரிடையும் இருந்த, சுயநலமே மக்களை பலியாக்கி இருக்கிறது என தெளிவாக தெரிகிறது. அதுபோலவே மகளைப் போர்முனையில் இழந்துவிடக்கூடாது என ஒரு தகப்பன் அவளைக் கட்டாயத் திருமணப் பந்தத்தில் தள்ளி விடுகிறார். மறுவீட்டிக்கு வாழப்போகும் அப்பெண்ணின் கணவன் காமப்பசியில் அவளை விருப்பமின்றி புணர்கிறான். உண்டாகும் கருவினால் மாமியாரிடம் ஏச்சு வாங்குவதும், பின்னர் கருவை கலைக்க முயற்சிப்பதும், உள்நாட்டுப் போரும் ஒரே செய்தியைப் தனித்தனியே சித்தரித்துக் காட்டுகிறது.

 

கறைநதி – ப.தெய்வீகன்

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் செய்யும் தவறு வெளிப்படையானதாக இருந்து விட்டு, பின்னர் நல்லவராகி வாழும் பொழுது சுற்றத்தார் போற்றுவர்; புகழ்வர். ஆனால் நல்லவராய் காட்டிவிட்டுத் தவறு செய்து திரும்பினால் உலகம் அவனை மிகவும் ஏளனமாகவும், கரிசனமில்லாத கோபப் பார்வையை முன் வைக்கும். அப்படி, மிகவும் நெருக்கமான ஒருவர் தவறு செய்த பிறகு அவன் அவர்களுக்கு முகங்கொடுப்பதை விட, சுற்றத்தார் அவனுக்கு முகங்கொடுப்பதை மிகவும் இழிவாகக் கருதுவர். ஆத்மார்தமான உறவையும், நட்பையும் பேணுகின்றவர்களிடையே அப்படியான ஒரு குணம் இருக்கிறது. இச்சிறுகதையில் வரும் இத்தாலிய தம்பதிகளின் வாடகை வீட்டில் குறிப்பிட்ட தகுதியோடு வந்து தங்கும் கதைச்சொல்லி, எதிர்பாராத நிலையில் நடந்து முடியும் தவறுக்காகப் போலிஸில் சிக்கி வீடு திரும்பும் தருவாயில், ஆத்மார்த்தமான நட்பில் ஏற்படும் விரிசலினால் அப்படியான ஒரு பார்வைக்கும் அவன் ஆளாகிறான். அதை உணர்ந்து கொண்டு கதைச்சொல்லியும் அழுகிறது போன்று கதை முடிகிறது.

தவறு செய்யாதவர்கள் தவறு செய்தவர்களால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் தன்மையை ’கறைநதி’ உணர்த்திச் செல்கிறது. நதி ஓடிக்கொண்டிருக்கும். அதில் கறைப்படிவது கடினம். அப்படியிருந்தும் அதில் கறை படிகிறது என்றால், அது மிகவும் அசௌகரியமான சூழ்நிலையில் மாத்திரம்தான்.

இப்படியாக இன்னும் பல சிறுகதைகள் எடுத்துக்கொண்ட நோக்கத்தில் இருந்து விலகாமல், சித்தரிப்புகளின் ஊடே புத்திலக்கியத்தின் அடிவேரில் இருந்து விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்பது போல நவீன சிறுகதைகளின் வரவால் அதிகமான வாசகர்களை ஈர்த்துள்ளது எனலாம். வாசகர்களுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கிற ‘வாசகர் இடைவெளியில்’ தனக்கான பல உண்மைத்தன்மைகளை உணர்ந்து கொள்ளவும், கதைச் சொல்லும் கருத்தின் மையத்தை விளங்கிக் கொள்ளவும் உதவுகிறது. வெறும் பண்பாட்டு விழுமியங்களை மட்டுமே தாங்கி நிற்காமல் தருணங்களில் காட்சியாகிற கதையின் உயிரோட்டம் இருக்கிறது. வாசகனே வாசம் செய்யும் கதைக்களமாக மாறுகிறது.

 

1 கருத்து for “புனைவுகளில் புரண்டோடும் திருப்பங்கள்

  1. சு.செல்வகுமாரன்
    July 4, 2020 at 12:53 pm

    சிறப்பு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...