இரண்டொழிய இன்னொன்று

interஅது 1998ஆம் ஆண்டின் பிற்பகுதி. தமிழ்நாட்டில் ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப் படிப்பை முடித்திருந்தேன். பட்டப் படிப்பைத் தொடர எண்ணியிருந்தேன். ஆனால் குறைந்த கட்டணப் பிரிவில் இடம் கிடைக்காமல் போனது. தேவையான அளவைக்காட்டிலும் சுமார் இரண்டு விழுக்காடு என்னுடைய மதிப்பெண் குறைவு.

அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கும் பிரிவில் சேரலாம். ஆனால் விருப்பமில்லை. அதனாலென்ன? முதலில் வேலைக்குச் செல்வோம் பிறகு பகுதிநேர மாணவனாகக்கூடப் படித்துக்கொள்ளலாம் என்று போகிறபோக்கில் ஒருமுடிவை எடுத்தேன். தோதாக அந்தச் சமயத்தில் ஒரு பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கான அழைப்புத் தானாக வந்தது. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிறுவனம்.

சுற்றுவட்டாரப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு மதிப்பெண்களுக்குமேல் பெற்றவர்களுக்கு வருடாவருடம் நேர்காணல் அழைப்பை அனுப்புவார்களாம். அதில் தேறியவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு அங்குப் பயிற்சிப்பணி கிடைக்குமாம். நேர்காணலில் கலந்துகொள்வதற்கு சுயவிவரக் குறிப்புடன் கல்விச் சான்றிதழ்களையும் கொண்டுவருமாறு அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுயவிவரக் குறிப்புத் தயாரிக்கக் கிளம்பினேன். என்னிடம் கணினி இல்லை. கணினியில் தயாரித்து அச்செடுக்கும் முறையேகூட நாகப்பட்டினம் அருகேயிருந்த எங்கள் பகுதியில் அப்போது அவ்வளவு புழக்கமில்லை. ஆகவே ஒரு முழுவெள்ளைத் தாளில் சொந்த விவரங்கள், கல்வித்தகுதி, மதிப்பெண்கள், திட்டவேலை, சிறப்புத் திறன்கள், இன்னபிறவற்றை ஒரே பக்கத்தில் அடக்கிக் கைப்பட எழுதினேன்.

அதன் அமைப்பு இப்படி இருந்தது:

 

NAME: SIVANANTHAM

FATHER’s NAME : NEELAKDANDAN

EDUCATIONAL QUALIFICATION  : DIPLOMA IN MECHANICAL ENGINEERING

 

அதைத் தட்டச்சு செய்து வாங்குவதற்காக அருகிலிருந்த சிறுநகருக்குச் சென்றேன். ஒரு பிரதி தட்டச்சு செய்து கொண்டால் பிறகு அதைவைத்து  சல்லிசான விலையில் பல பிரதிகளை ஒளிநகல் செய்து கொள்ளலாம் என்பது திட்டம்.

தட்டச்சுப் பயிற்சிப் பள்ளியாகவும் அதோடு பிற தட்டச்சுப் பணிகள் செய்துதரக்கூடிய இடமாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த நிறுவனத்திற்குச் சென்றேன். கதர்ச்சட்டை அணிந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க ஒருவர் என்ன வேண்டும் என்றார். கையிலிருந்த தாளைக் கொடுத்தேன்.

உள்ளே எடுத்துச்சென்றவர் திரும்பிவந்து ஒரு சொல்லைக் காட்டி நான் எழுதியிருப்பது அதுதானா என்று சந்தேகம் கேட்டார். ஆம் என்றேன். என் சொந்த ஊர், குடும்பப் பின்னணி போன்றவற்றையும் விசாரித்தார். அவர்கேட்ட தகவல்களோடு நேர்காணலுக்குச் செல்ல வேண்டி அழைப்பு வந்திருப்பதையும், அதற்காகத்தான் இந்தச் சுயவிவரக் குறிப்பைத் தயாரிக்கிறேன் என்பதையும் சொன்னேன். கவனமாகக் கேட்டுக் கொண்டவர் மீண்டும் உள்ளே சென்றார். சில நிமிடங்களில் தட்டச்சுசெய்து எடுத்துக்கொண்டு வந்தார்.

கட்டணம் கொடுக்க நான் காசை எடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். மேலும் அடுத்தநாள் காலை தன்னை வந்து பார்க்குமாறும் என்னுடைய நேர்காணல் சம்பந்தமாக ஒருவரைச் சந்திக்க அழைத்துப் போவதாகவும் கூறினார். அவரது பேச்சு தட்டச்சு செய்வதைப்போலவே தடதடதடவென்ற ஒரு வேகத்துடனும் பிறகு எதிர்பாராத இடத்தில் சடார் சடாரென விழும் இடைவெளிகளுடனும் வசீகரமாக இருந்தது. ஏன் முன்பின் தெரியாத நமக்காக இவ்வளவு மெனக்கெடுகிறார் என்று யோசித்துக்கொண்டே, சரி என்பதுபோலத் தலையசைத்தேன்.

அடுத்தநாள் அவர் குறிப்பிட்ட நேரத்தில் சென்றேன். அன்றும் கதர்ச்சட்டைதான் அணிந்திருந்தார். என்னை அழைத்துக்கொண்டு நடந்தே சில தெருக்கள் தாண்டிச் சென்றார். ஒரு பெரிய வீட்டின்முன் நின்றார். நாங்கள் வந்ததைக் கவனித்துவிட்டு வீட்டுக்குள்ளிருந்து ஒருவர் வந்து வரவேற்றார். உள்ளே அமரவைத்து எங்கள் இருவருக்கும் குளிர்பானம் தந்து உபசரித்தார். பிறகு கதர்ச்சட்டையும் அவரும் சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். நான் விரைப்பாக அமர்ந்திருந்தேன்.

பிறகு கதர்ச்சட்டை என்னைக்காட்டி, “இவர் நமக்கு வேண்டிய பையன். உங்க நிறுவனத்துக்குதான் நேர்காணலுக்கு வரப்போறார். உங்களால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும்” என்றார். வீட்டிலிருந்தவரும் என்னிடம் பெயர், கல்வி குறித்த விவரங்களைக் கேட்டுவிட்டு நிச்சயம் முடிந்ததைச் செய்வதாக உறுதியளித்தார். எனக்கோ நேர்காணலில் ஏற்கனவே தேறிவிட்டதாக ஒரு மகிழ்ச்சி.

பிறகு விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்து திரும்பி நடந்துசெல்கையில் கதர்ச்சட்டைக்கு நான் நன்றி தெரிவித்தேன். அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்துத் தன்னுடைய இன்னொரு தட்டச்சுப் பயிற்சிப் பள்ளியில் வந்து சந்திக்குமாறும், வேலைக்காக ஒரு சிபாரிசுக் கடிதம் ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னார். தேதி, நேரம், அந்த இடத்திற்கு எப்படி வருவது ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டார். எனக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் சொன்னதை மனதில் குறித்துக் கொண்டபடி மெலிதாகத் தலையை மட்டும் அசைத்தேன். எல்லாம் தெய்வச்செயல்!

இரண்டு நாட்கள் கழித்து அவர் குறிப்பிட்ட இடத்திற்குக் குறித்த நேரத்தில் சென்றேன். அந்த இடத்தில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்த பல தட்டச்சு இயந்திரங்களின் ஒலியால் அப்படித் தோன்றியதா அல்லது உண்மையாகவே லேசாக நடுங்கிக் கொண்டிருந்தேனா என்பது தெரியவில்லை. சுற்றி நடப்பது எதுவும் முழுமையாகப் புலனாகாததுபோல அலசலாக இருந்தது. அவ்வளவு பதற்றம்.

கதர்ச்சட்டை உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு இவர் சாயலிலேயே ஆனால் மிகவும் வயதானவராகத் தெரிந்த ஒருவர் இருந்தார். அவரிடம் என்னைக்காட்டி ஏதோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். அந்த வயதானவரும் கதர்ச்சட்டை அணிந்திருந்தார். நடப்பது நடக்கட்டும் என்று நின்று கொண்டிருந்தேன்.

ஒரு தட்டச்சு இயந்திரத்தின் முன்னால் சென்று அமர்ந்த அந்த வயதானவர், என்னை அவருக்கு எதிரிலுள்ள இருக்கையில் அமருமாறு கைசாடை காட்டினார். நான் “பரவால்ல சார்” என்று நின்றுகொண்டேன். அவர் குறும்பான சிரிப்புடன், “நான் சொன்னா ஒனக்கு வேல குடுத்துருவானா?” என்றார். நான் பேந்தப்பேந்த விழித்தேன். அடுத்த சில நிமிடங்கள் சடசடவென தட்டச்சு செய்தார். பிறகு அந்தத்தாளை எடுத்து ஓர் கடித உறையில் போட்டு என்னிடம் கொடுத்து, “பெஸ்ட் ஆஃப் லக்” என்றார். நான் பவ்யமாக வாங்கிக்கொண்டேன்.

ஆர்வம் தாங்கமுடியாமல் வீட்டுக்குத் திரும்பும் வழியிலேயே உறைக்குள் இருந்த காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தேன். ‘தமிழக ராஜீவ் காங்கிரஸ்’ என்ற அரசியல் கட்சியின் கடிதப்பட்டியில் அந்தச் சிபாரிசுக் கடிதம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒருபக்கத்தில் ராஜீவ்காந்தி கும்பிடுவதைப் போலவும் இன்னொரு பக்கத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி கும்பிடுவதைப் போன்றும் வண்ணப்படங்கள் இருந்தன. பல சொற்கள் எனக்குப் புரியவில்லை.

தோராயமாக அக்கடிதத்தின் கருத்து இப்படி இருந்தது: ‘இந்தக் கடிதத்தைக் கொண்டுவருபவர் எனக்கு உறவினர். ஆனால் அதனாலல்ல, அவருக்குக் கற்றுக்கொள்வதிலும் நேர்மையாக உழைப்பதிலும் தணியாத ஆர்வமுண்டு என்பதால் உங்கள் நிறுவனத்தில் நான் வேலைக்காக அவரைச் சிபாரிசு செய்கிறேன். ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அதை வீணாக்கமாட்டார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உங்களால் முடிந்ததை அவசியம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி’.

என் அப்பாவிடம் சிபாரிசுக் கடிதத்தைக் காட்டினேன். அவர் சில விஷயங்களை எனக்கு விளக்கினார். இந்திய தேசியக் காங்கிரஸிலிருந்து பிரிந்து அந்த ஆண்டுதான் வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக ராஜீவ் காங்கிரஸைத் தொடங்கினார். அதன்பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சேலம் நாடாளுமன்றத் தொகுதி  உறுப்பினராக வெற்றிப் பெற்றார். அவர் இடம்பெற்ற கூட்டணிதான் மத்திய அரசை வாஜ்பேயி தலைமையில் அமைத்தது. வாழப்பாடி ராமமூர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். எனக்குச் சிபாரிசுக் கடிதம் கொடுத்தவர் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்.

எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது. நான் நேர்காணல் செல்லவிருந்த பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துறை அமைச்சரின் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கொடுக்கும் சிபாரிசுக் கடிதத்தை அந்த நிறுவன அதிகாரிகள் அலட்சியம் செய்துவிடமுடியாது. எனக்காக எவ்வளவு தூரம் யோசித்து ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் அந்த இளைய கதர்ச்சட்டை. ஆனால் அவர் ஏன் அந்த உதவியைச் செய்தார் என்ற புதிர் மட்டும் விடுபடவேயில்லை. அவரிடம் கேட்கவும் எனக்குத் துணிவில்லை.

நேர்காணல் நாள். சிபாரிசுக் கடிதத்தை மறக்காமல் எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். எத்தனை முறை மனதில் ஒத்திகை பார்த்தும் எந்தத் தருணத்தில் என்ன சொல்லி அந்தக் கடிதத்தை எடுத்துக்கொடுப்பது என்று ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை. உள்ளுக்குள் இருக்கும் அலைக்கழிவு போதாதென்று அந்தக் கடிதம்வேறு கூடுதல் படபடப்பைக் கொடுத்தது.

என் முறை வந்தது. நேர்காணல் அறைக்குள் நுழைந்தேன். மூவர் அமர்ந்திருந்தனர். அமரச் சொல்வதுபோல ஒருவர் இருக்கையைக் காட்டினார். பிறகு அவர் கையை நீட்டியதும் சான்றிதழ்களை அளித்தேன். அவர் புரட்டிப்பார்த்து வழக்கமான அறிமுகக் கேள்விகளை முடித்தார். பிறகு இன்னொருவர் நிதானமாக ஆரம்பித்தார்.

மெக்கானிக்கலா?

“ஆமாம் சார்”

எலெக்டிவ் சப்ஜெட் என்ன?

“ஆட்டோமொபைல் சார்”

“பிராஜெக்ட் வொர்க் என்ன?

“ஃபோர் வீல் ஸ்டியரிங் சிஸ்டம் சார்”

ஸ்டியரிங் சிஸ்டம்…. ம்ம்ம்லாரியில ரியர் ஆக்ஸில்ல பெரிசா உருண்டையா ஒன்னு இருக்கே அது என்னன்னு தெரியுமா?

“அது டிஃபரன்ஷியல் சார். வண்டி எந்தப்பக்கம் திரும்புனுங்கறதப் பொறுத்து அதுக்கு எதிர்ப்பக்கம் உள்ள வீல் அதிக வேகத்துல சுத்தனும். அதுக்கான மெக்கானிசம். எங்க ஃபைனல் இயர் பிராஜக்ட்ல கூட…”

(போதும் என்பதுபோல கையைக் காட்டினார்)

அந்த டிஃபரன்ஷியலுக்கு கலோக்கியலா ஒரு பேரு சொல்வாங்க தெரியுமா?

“ஊர்ல அத மண்டைன்னு சொல்லுவாங்க சார்”

அனைவரும் புன்முறுவல் பூத்தனர். இப்போது மூன்றாமவர் ஆரம்பித்தார்.

டிவி சேனல்ஸ் என்னென்ன பாப்பீங்க?

“டிடி மட்டும்தான் சார். கேபிள் டிவி இன்னும் எங்க ஊருக்கு வரல”

அப்ப பொது அறிவு கம்மியாத்தான் இருக்கும்

‘………’

ஸ்டார் டிவி தெரியுமா?

“கேள்விப்பட்டிருக்கேன் சார்”

அதுல ஸ்டார்ங்கற பேர்ல, S..T..A..R..’ அந்த நாலு எழுத்துக்கும் என்ன விரிவாக்கம்னு தெரியுமா?

“ம்ம்ம்… தெரியல சார்”

இப்போது முதலில் சான்றிதழ்களை வாங்கியவர் மீண்டும் பேசினார்.

சரி. தேர்வானால் இரண்டு வாரத்தில் வீட்டுக்குக் கடிதம் வரும். நீங்கள் போகலாம்’

அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டுக் கிட்டத்தட்ட கதவுவரை வந்து பிறகு சான்றிதழ்களை மறந்ததை உணர்ந்து திரும்பிச் சென்றேன். நான் திரும்பி வருகிறேனா என்பதைச் சோதிக்கவே அவர்கள் என்னைக் கூப்பிடாமல் அமைதியாக இருந்ததைப்போலத் தெரிந்தது. சான்றிதழை மறந்துவிட்டதாகச் சொல்லி நான் எடுத்துக்கொண்டதும் மீண்டும் அவர்கள் குழுவாக ஒரு புன்முறுவல் பூத்தனர். ச்சே… சொதப்பல்.

வெளியில் அமர்ந்திருந்த சக வேலைதேடிகள், உள்ளே கேட்கப்பட்டக் கேள்விகளைத் தெரிந்துகொள்வதற்காகச் சூழ்ந்துகொண்டனர். STAR பற்றிய கேள்வியை நான் குறிப்பிட்டதுமே அந்தக்கூட்டத்தில் ஒருவர் Satellite Television for Asian Region என்பதன் சுருக்கமே STAR என்றார். எனக்கு மனசே உடைந்துவிட்டது.

நம்மைவிட விவரமானவர்கள் ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் மோசமான மறதிக்காரன் என்பதைவேறு நேர்காணலில் நிரூபித்துவிட்டு வந்திருக்கிறோம். இவனுக்கு வேலை கொடுத்தால் வேலையில் எதையெல்லாம் மறப்பானோ என்றுதானே நினைப்பார்கள்? இந்த வேலையை மறந்துவிட… ஐயையோ… சிபாரிசு கடிதத்தைக் கொடுக்க மறந்துட்டனே! ச்சே…

டிஃபரன்ஷியல் வரைக்கும் எல்லாம் சுமூகமாகத்தானே போய்க்கொண்டிருந்தது? அடுத்த சில நிமிடங்களிலேயே ஏன் எல்லாம் இப்படித் தலைகீழாகிவிட்டது? ஒருவேளை கடிதத்தைக் கொடுத்திருந்தால் இன்னும் கேவலமாகப் போயிருக்குமோ? ‘ஒங்கள நம்பி வாங்க தம்பி, சிபாரிச நம்பி வராதீங்க’ என்று திட்டி அனுப்பியிருப்பார்களோ? மறந்ததும் நல்லதுக்கென்றே நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். வேறென்ன செய்வது? இருந்தாலும் கடவுள் இப்படி ஆசைகாட்டி அநியாய மோசம் செய்திருக்க வேண்டாம்.

ஒருவாரம் கழித்து அதே நேர்காணலில் கலந்துகொண்ட ஒரு நண்பனைச் சந்தித்தபோது தனக்குத் தேர்வாகிவிட்டதாகக் கடிதம் வந்திருப்பதாகக் கூறினான். ஆனால் திருச்சிராப்பள்ளியில் வேறு நிறுவனத்தில் நிரந்தரவேலை கிடத்துவிட்டதால் இந்த ஓராண்டுப் பயிற்சிப்பணியில் சேரப்போவதில்லை என்றும் சொன்னான். எனக்கு வெறுத்துவிட்டது. புளித்த ஏப்பக்காரனுக்குப் போதும் போதுமென்று சாப்பாடு கிடைக்கிறது. பசி ஏப்பக்காரனுக்குத் தண்ணீர்க்கூடக் கிடைக்கவில்லை. விரக்தியுடன் வீடு திரும்பினேன்.

என் மேசையின் மீது ஒரு கடிதம். இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது என்று சொல்வார்கள், எனக்கு நின்றே விட்டது. திறந்து பார்த்தால் நானும் தேர்வாகிவிட்டேன். ஓ கடவுளே! நீ ஏன் கடவுளாக இருக்கிறாய் என்பதற்கு இதைவிட வேறு நல்ல நிரூபணம் என்ன இருக்கமுடியும்? உண்மையிலேயே தலை எது கால் எது என்று புரியாத மகிழ்ச்சி. அடுத்த நொடி கதர்ச்சட்டையின் நினைவு வந்தது. மிதிவண்டியை எடுத்தேன். கப்பிக்கல்லும் கரடுமுரடுமான அந்தச் சாலையில் அன்று என் மிதிவண்டி தரையிலிருந்து ஒரு அடி மேலேயே பறந்து சென்றது.

பயிற்சிப்பணி வேலை கிடைத்துவிட்டதையும் தேர்வாகிவிட்டதற்கான கடிதம் வந்திருப்பதையும் சொல்லிக் கடிதத்தைக் காட்டினேன். “வெரிகுட்” என்று கைகுலுக்கினார். “சந்தோஷந்தான?” என்றார். “எல்லாம் நீங்க செஞ்ச ஏற்பாடுதான் சார்” என்றேன். அவர் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது. சிபாரிசுக் கடிதத்தைக் கொடுக்க மறந்துபோன விவரத்தைச் சொல்லவில்லை. அவரால் வேலை கிடைத்ததாகவே இருக்கட்டுமே. எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் பாவம்!

அந்தப் பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பயிற்சிப்பணிக்குச் சேர்ந்த பிறகு ஒன்று தெரிந்தது. கதர்ச்சட்டை முதலில் அழைத்துச்சென்று ஒருவரிடம் “இவர் நமக்கு வேண்டிய பையன்” என்று அறிமுகப்படுத்தினாரே, அந்த நபர் அங்கு ஒரு சாதாரண ஊழியர். நிச்சயம் அவர் சொல்லியதால் எனக்கு வேலை கிடைத்திருக்க வாய்ப்பில்லை. சிபாரிசு கடிதத்தையும் நான் கொடுக்க மறந்துவிட்டேன். நேர்காணலிலும் மறதிச் சொதப்பல். பிறகு ஏன் வேலை கிடைத்தது? மத்திய அரசிடம் சம்பளம் வாங்கவேண்டுமென்று விதி இருந்திருக்கிறது.

ஆனால் இந்தக் கதர்ச்சட்டை ஏன் இவ்வளவு தூரம் என் வேலைக்காகப் பாடுபட்டார்? சுயவிவரக் குறிப்பைத் தட்டச்சு செய்ததற்குக் கட்டணம்கூட வாங்கிக் கொள்ளவில்லையே ஏன்?

ஆங்.. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.

தட்டச்சு செய்ய எடுத்துச்சென்றவர் ஒரு சொல் குறித்துச் சந்தேகம் கேட்டாரென்று சொன்னேன் அல்லவா? அச்சொல் அந்தத் தாளில் வலதுபுறம் இருந்தது. அதற்கு நேராக இடதுபுறத்தில் ‘CASTE’ என்று இருந்தது. அரசு நிறுவன நேர்காணலாயிற்றே எதற்கும் இருக்கட்டும் என்று சாதியையும் அந்தச் சுயவிவரக் குறிப்பில் சேர்த்திருந்தேன்.

5 கருத்துகள் for “இரண்டொழிய இன்னொன்று

 1. Arul.B
  September 2, 2020 at 11:08 pm

  அருமையான ஓட்டம்..

 2. Kabilan
  September 5, 2020 at 8:32 pm

  அந்தப் பற்று பல ஆட்களுக்கு உண்டு. 🤣

 3. September 18, 2020 at 8:33 am

  அருமை!

 4. Babu kamaraj
  October 25, 2020 at 1:13 pm

  அந்த கதர்ச்சட்டை சாதி மதம் கடந்து பலநூறு பேர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் உதவி செய்திருப்பது திருவாரூர்க்கேத் தெரியும்.
  மேலும் இந்த கதை இருபதாண்டுகளுக்கு முன் தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் நான் எழுதிய தகுதி என்கிற சிறுகதையை அப்பட்டமாக எனக்கு நினைவூட்டியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...