மரயானை: எஞ்சும் படிமம்

மரயானைஇலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி. மரம் நிலைகொள்ளுதலின் குறியீடு. வேரை ஆழப்பரப்பிக் கிளை விரித்து எழும் தன்மையுடையது. யானை மெதுவான அசைவுகளை எழுப்பி நகரும் விலங்கு. மரத்தில் ஒளிந்திருக்கும் யானை என்பது நிலைகொள்தலின் உள்ளே இருக்கும் நிலைகொள்ளாமையைக் கனவு காணச் செய்து வாழ்க்கை விசாரத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் படிமத்தை மனத்தில்கொண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் எழுதியிருக்கும் நாவல்தான் மரயானை. இந்த நாவல் சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டியில் தமிழ் புதினப் பிரிவில் தகுதிப் பரிசை (மெரிட்) வென்றது.

 

சிங்கையில் வரலாற்று வண்ணங்கள்

முற்றிலும் சிங்கப்பூரையே களமாகக் கொண்டு எழுந்திருக்கும் இந்நாவலில் மிக முக்கியமான பலமாக சிங்கப்பூருக்கே உரிய வெவ்வேறு காலகட்டத்திலான வாழ்வு புனைவாக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம். சிங்கப்பூர் போன்ற நாகரீகமும் நவீனமும் மிகுந்த நகரின் ஒவ்வொரு வீதியும் கட்டிடமும் ஒன்றுபோலவே அமைந்திருப்பதாகவே பொது சித்திரம் அமைந்திருக்கிறது. ஆனால், மரயானை நாவலில் சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங், பத்தாவது மைல் பகுதியின் சித்தரிப்பின் வாயிலாக அந்நகரின் தனித்துவம் துலங்கியிருக்கிறது. புலி உலாவும் கருங்கல் குன்றுகளாக அமைந்த பகுதி மெல்ல பன்றிப் பண்ணைகளாகவும் அதன் பின் கட்டிடங்களாகவும் மாறியதை எழுத்தில் கொணர்ந்திருக்கிறார் சித்துராஜ்.

பன்றிப் பண்ணை வைத்திருந்த இந்தியப் பெண், கம்பங்களின் கால்வாய்களில் ஓடிய கப்பி மீன்கள் எனச் சிங்கப்பூரின் புவியியல் மாற்றத்தையும் காண முடிகிறது. கம்பங்களால் நிறைந்திருந்த சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் குடியமர்த்தப்பட்ட முதல் தலைமுறை மக்கள் கம்பத்தின் வாழ்வு முறையிலிருந்து வெளிப்பட கொள்ளும் சிரமங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கம்பங்களில் வளர்க்கப்பட்ட கோழிகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் திரிந்த விவரிப்பைக் குறிப்பிடலாம். எல்லாம் அழிந்து ஒன்று போலவே மாறியிருக்கும் தற்காலத்தைய அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரையில் சிங்கப்பூரின் புறச்சித்தரிப்பு நாவலில் நுண்மையாகவே வெளிப்படுகிறது. இந்தப் பரிணாம மாற்றத்தில் அந்நகர் தனித்துவம் இழந்து சிங்கப்பூரில்  நிலைகொண்டுவரும் பொருளியல் மேம்பாட்டினால் உருப்பெறும் நாகரிக வாழ்வுச் சூழலுக்குள் உள்ளிழுக்கப்பட்டதைக் காண முடிகிறது. அப்படியாகக் கட்டாயச் சூழலில் உள்ளிழுக்கப்படுபவராகவே சுகவனம் எனும் ‘மரயானை’ நாவலின் மையப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறார்.

 

பெருநகர முதுமை

சிங்கப்பூரில் பள்ளியொன்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுகவனம். அவரது தாய்,தந்தையர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். சுகவனத்தின் மனைவியான ஜெயக்கொடி சிங்கப்பூரைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் இளம்பருவத்தைக் கழித்தாலும் மனத்தால் அந்நிலப்பரப்புக்கு அந்நியராகவே சுகவனம் விளங்குகிறார். கப்பலில் ஒட்டியிருக்கும் எண்ணெய் பிசுக்கினைக் கழுவும் வேலை செய்யும் தந்தை, கல்வியறிவற்ற தாய், பள்ளிக்கல்வியைப் பாதியில் நிறுத்திய அக்கா என அடித்தட்டுக் குடும்பப் பின்னணியில் வளரும் சுகவனம் இயல்பாகத் தமக்குள் தாழ்வுணர்ச்சி கொள்கிறார். அத்தாழ்வுணர்ச்சியினைச் சுற்றிப் பாதுகாப்பு வளையமாக ஆணவத்தை ஏற்படுத்துக்கொள்கிறார். சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்து நிலத்தின் மீது ஆழமான பிடிப்புக் கொண்டிருக்கும் ஜெயக்கொடியை மணம் புரிகிறார். அவர்களுக்கு மோகன், நீலாவதி என இரு பிள்ளைகள் பிறக்கின்றனர். தமிழ் கற்றுத் தரும் மனைவியை வீண் வேலை செய்பவளாக எண்ணுகிறவராகவும் பிள்ளைகளின் மீதான கவனமில்லாதவராகவும் இருக்கிறார். குடும்பத்திற்கு எல்லாமுமாக இருக்கின்ற ஜெயக்கொடி கணவரின் வன்முறைப் போக்கினைச் சகித்துக்கொண்டு வாழ்கிறார். அப்படியான தருணத்தில் கர்ப்பப்பைப் புற்றினால் ஜெயக்கொடி இறந்துபோகிறார். தன் சேமிப்பில் இருந்த பணத்தை முழுதும் மனைவியின் சிகிச்சைக்காகப் பயன்படுத்துகிறார். பணமில்லாத சூழலில் மகன், மகள் இருவரின் தயவை நம்பி வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஜெயக்கொடியின் மேல் செலுத்திய அலட்சியம் குற்றவுணர்வாக நெருடுகிறது. அதிலிருந்து மீள சடங்காகவேனும் இராமேஸ்வரத்துக்குச் சென்று ஈமச்சடங்குகளைச் செய்ய எண்ணுகிறார். தமிழ்நாட்டுக்குச் சென்றிராதமையால் அந்நிலம் அவரை அந்நியமாக உணரச்செய்கிறது. வாழ்வும் உடன் பயணித்த மனிதர்களும் நினைவுகளாக எஞ்சிவிட்ட பின்னர் தோன்றுகின்ற அந்நியத்தன்மையாகவும் அமைகிறது. அந்த அந்நியத்தன்மை என்பது முதுமையினால் ஏற்பட்டிருக்கும் வெறுமையுணர்வு, மனைவியின் இறப்பினால் ஏற்பட்டிருக்கும் குற்றவுணர்வு ஆகியவற்றால் ஆனதாகக் கதை நகர்கிறது.

நாவலின் மையப் பாத்திரமான சுகவனத்தின் அனுபவத்திலிருந்தும் நினைவிலிருந்தும் நாவல் நகர்கிறது. சுகவனத்தின் தந்தையான ஆறுமுகத்தின் கதை தனிக் கிளைக்கதையாக அவரின் அனுபவத்திலிருந்து நகர்கிறது. ஜொகூரின் தோட்டமொன்றிலிருந்து வெளியேறி சிங்கப்பூர் வந்தடையும் வரையிலான வாழ்வு முழுவதும் ஆறுமுகத்தின் பார்வையில் நகர்கிறது. சுகவனத்தின் மனைவியான ஜெயக்கொடி குடும்பத்துக்காகச் செய்யும் தியாகங்களும் சுகவனத்தின் பார்வையாகவே அமைகின்றன. இந்தக் கதைமாந்தர்கள் வாயிலாக நாவலாசிரியர் மூன்று முக்கிய அனுபவங்களை வாசகனுக்குக் கடத்த முயன்றிருக்கிறார். முதலாவது, சுகவனத்தின் சித்தரிப்பின் வாயிலாகத் தொழில், சமூகம் போன்றவற்றில் முழுமையாக மூழ்கி முதுமையில் நினைவுகளாக மட்டுமே எஞ்சும் வாழ்வின் அபத்தம். இரண்டாவதாக குடும்பத்துக்காகத் தியாகம் செய்யும் பாத்திரமாக ஜெயக்கொடியின் அனுபவம். மூன்றாவது தோட்டம் எனும் நிலம் சூழ்ந்த வாழ்விலிருந்து தன் வேரை விடுவித்துப் பெரும் அலைவுக்குப் பின் சிங்கப்பூரில் கீழ்நிலைப் பணியாளராகும் ஆறுமுகத்தின் சித்தரிப்பும் அனுபவங்களும் என வகுத்துக்கொள்ளலாம்.

சுகவனம் பாத்திர வார்ப்பு சிறப்பாக அமைந்துள்ளது. மனைவியுடனான இல்லற வாழ்வில் சிறிதும் அன்பும் அக்கறையும் காட்டாத அவர் மனைவியின் சிகிச்சைக்குப் பணம் செலவழித்துச் சமூகத்தின் முன்னால் தன்னைக் கணவனாகக்  கட்டமைத்துக்கொள்கிறார். பள்ளியிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தனக்கு அடிபணிந்து நடக்குமாறு பார்த்துக்கொள்கிறார். ஆனால் முன்னேற்றத்தால் மாறிவரும் பெருநகர நிலச் சூழலில் முதியவரான அவர் தன் அந்திமக் காலத்தில் உணரும் வெறுமையே இந்நாவலின் மைய கரு. நவீன வாழ்வு அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் பொருளியல் தேவையை நிறைவு செய்வதற்கான வாய்ப்பாக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொருள் ஈட்டுதல் அமைந்திருக்கிறது. அத்தகைய வாய்ப்பினைப் பெற்ற பின்னரும் அகத்தில் உணரும் நிலைகொள்ளாமை சுகவனத்தின் தந்தை ஆறுமுகத்தின் வாயிலாக மற்றொரு சரடாகப் பிணைந்து செல்கிறது. இந்நாவலின் முக்கியமான பகுதியும் இதுதான். சிங்கப்பூரின் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணெய் பிசுக்கினைக் கழுவி தன் காலத்தைய மனிதர்களுக்கான கனவாக இருக்கும் வீடொன்றுக்கு உரிமையாளராகிறார். இந்த அலைவில் முற்றிலுமாகத் தன் வாழ்விலிருந்து நிலம் பறிபோனதாக உணர்கிறார். ‘நகராமல் நகர்ந்து கொண்டே இரு’ எனும் வரி ஆறுமுகத்தின் கதையில் அவருக்குத் தரிசனமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், அந்தத் தரிசனத்தை மேலெடுத்துச் செல்லும் அனுபவங்களை இந்நாவல் அளிக்கவில்லை என்பதே இப்புனைவின் அடிப்படையான பலவீனம்.

 

புனைவெனும் கலை

இவ்விரு அனுபவங்களும் ஒன்றை ஒன்று சந்தித்து முறுக்கிப் பிணைந்து, விலகிச்செல்லும் எதுவும் புனைவுக்குள் நிகழவில்லை. இரண்டும் தனித்தனியாக உள்ளன. அதனால் அவை அனுபவமாக மலராமல் வெறும் சம்பவங்களின் அடுக்காகவும் சுகவனத்தின் உளப்பதிவுகளின் சித்தரிப்பாகவும் எஞ்சியிருக்கிறது. ஜெயக்கொடியின் மரணம், பேரன் ராகேஷைப் பார்த்துக்கொள்ளுதல், பிள்ளைகளின் சுபாவம் என்றே சலிப்பான சம்பவங்களுடன் கதை நகர்கிறது. சுகவனத்தின் வெறுமையுணர்வு என்பது மாற்றமடைந்த சிங்கப்பூர் நிலமும் மனிதர்களின் நினைவுகளும் கலந்த மனப்பதிவாக முடிவதாக அமைந்திருக்கிறது. எனவே, அந்த வெறுமையுணர்வும் குற்றவுணர்ச்சியும் மனித மனத்தில் அண்டியுள்ள காழ்ப்பினையும் வன்முறையினையும் விசாரம் செய்யாமல், கதையில் உருவாகியிருக்க வேண்டிய அனுபவத்தை  உருவாக்க இயலாமல் போகிறது. நிலச் சித்தரிப்பும், சமூகப் பண்பாட்டுச் சூழல் சித்தரிப்பும் வலுவாக உள்ள இப்புனைவை சிங்கப்பூரின் வாழ்வை அறிமுகப்படுத்தும் பிரதியாக மட்டுமே சுருக்கிப் பார்க்க முடிகிறது. இப்பணியை ஒரு தரமான ஆய்வு நூல் செய்யக்கூடும் என்ற எண்ணத்துடன் தான் சம்பவங்களுக்குள் வரும் அவ்விளக்கங்களைக் கடக்க முடிகிறது.

நாவல் தத்துவத்திற்குரிய புனைவு வடிவமாகக் கருதப்படுகிறது. தத்துவம் என்பது அறக்கருத்துகளைச் சொல்வதல்ல. கதாமாந்தர்கள் வழி ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்வதும் அல்ல. ஒற்றைப்படையான கருத்தை முன்வைக்காமல் வெவ்வேறு கதைமாந்தர்களின் வார்ப்பின் வாயிலாக ஒரு விழுமியத்தை ஆராய்ந்து செல்கையில் புதிய திறப்புகள் உருவாகின்றன. சூழல்களின் முரணியக்கத்தாலும் தர்க்க ஒழுங்குமுறைகளின் வாயிலாகவும் அது தன்னைத் தத்துவமாக நிறுவிக்கொள்கிறது.

அடிப்படையில் வாழ்க்கையின் தத்துவத்தை விசாரம் செய்யும் நாடகீய தருணங்கள் இந்நாவலில் இருக்கின்றன. சுகவனத்தின் தந்தை ஆறுமுகத்தின் வழி நிலத்துடன் மனிதனுக்குள் இருக்கும் பிணைப்புப் பேசப்படுகிறது. அப்பகுதி நிலம் மீதான சிக்கலாக மட்டுமே இல்லாமல் மரபு மனமும் நவீன மனமும் சந்தித்துக் கொள்ளும் முரண்புள்ளியாகவும் விரிந்திருக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், அவை நாவலின் மையதரிசனமான சுகவனத்தின் குற்றவுணர்ச்சியையும் வெறுமையையும் சென்று தொடாமல் மிகை உணர்ச்சி எழுப்பும் தருணங்களாக நின்று போகின்றன.

இந்நாவலில் சுகவனம் சிங்கப்பூரின் மேலெழுந்து வரும் நாகரீக வாழ்வுடனும் அல்லது பெரும்போக்குடனும் பொருத்திக்கொள்ள முடியாமல் இருப்பதான சித்திரம் தொடர்ந்து வருகிறது. தொடுதிரைத் தொலைப்பேசியினைப் பயன்படுத்தாமல் இருக்கும் நிலையை எளிய உதாரணமாகக் கொள்ளலாம். முதல் தலைமுறையினரின் பிரதிநிதியாக வரும் ஆறுமுகம் தோட்டத்திலிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற துடிக்கிறார். நெருக்கடி மிகுந்த தோட்ட வாழ்விலிருந்து மேலெழும்பிச் செல்கிறார். அந்த வாழ்வின் இறுதியின் போது வெறுமையை உணர்கிறார். இயற்கையுடனான ஒத்திசைவினை அடைய, குருவிகளுக்கு உணவளிப்பது, பச்சை உடை உடுத்தல் ஆகியவற்றால் தன் அந்திமத்தை நிறைக்கிறார். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சுகவனம் நகர வாழ்வின் பணி, சமூகச் சூழலில் தன்னைச் சரியாக முன்வைத்துக் கொள்வதிலே முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். அவரும் முதுமையில் வெறுமையினால் பீடிக்கப்பட்டுக் கடந்தகால உளப்பதிவுக்குள் அமிழ்ந்து போகிறார். அதிலிருந்து வெளியேற முயற்சிகள் செய்ய இயலாதவராக இருக்கிறார். இவர்களிருவரும் இந்த வாழ்விலிருந்து திமிறிக்கொண்டே இருப்பதற்கான காரணங்களை இந்நாவல் முன்வைக்கவில்லை. ஒருவகையில் இது கேள்விகளற்ற நாவல். ஆசிரியர் இவை இப்படி இருந்தன எனச் சொல்கிறாரே தவிர அது ஏன் என்று அழுத்தமான கேள்விகளின் வழி வாழ்வில் நாலாதிசையும் அலைந்து செல்லும் சவாலை ஏற்கவில்லை.

மரயானை என்ற படிமம் உணர்த்துவதுபோல மரத்தைப் போல வாழ்வை நிலைப்படுத்தி வேரைப் பரப்பச் செய்யும் முயற்சிகளுக்கு இடையே அதிலிருந்து திமிறிக் கொண்டிருக்கும் யானையைப் போன்ற அகவெழுச்சிக்கான காரணங்கள் புலப்படாமலே நாவல் அமைகிறது. எழுந்துவரும் பெரும் நவீன வாழ்வென்னும் சூறைக்காற்றில் உடலில் ஒட்டி கொண்டிருக்கும் மெல்லிய துணியளவே எஞ்சியிருக்கும் மரபையும் கைவிடாது இருக்கும் சுகவனம் போன்ற பாத்திரத்தின் அகம் முழுமையாக முன்வைக்கப்படவில்லை.

புனைவின் அழகியல்

புனைவு கொண்டுள்ள அழகியலை அறிவது அதை உள்வாங்க கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது. அவ்வகையில் மரயானை நாவலை இயல்புவாத அழகியல் கொண்டது எனலாம். இயல்புவாத அழகியல் செய்திநடை கொண்டே தன்னை உருவாக்குகிறது. குறியீட்டுத்தன்மையும் கவித்துவ தருணங்களும் அற்றது. ‘நேரடித்தன்மை’யுடன் ஒரு வாழ்க்கையை முன்வைக்கிறது. அவ்வகையில் இந்த நாவலில் உள்ள வழமையான கதைப்போக்கும் உச்சங்களைத் தொடாத சாவகாச நடையும் அந்த அழகியலுக்குண்டானது என்றே புரிந்துகொள்கிறேன்.

சிங்கப்பூரின் வாழ்க்கை முறை, நிலவியல் மாற்றங்கள், இனச்சூழல் ஆகியமரயானை 02 தகவல்களை விவரித்து சிங்கப்பூருக்கே உரிய வாழ்க்கைச் சித்திரத்தை இந்நாவல் அளிக்கிறது. பகுத்தறிவுக்கு உட்பட்ட  அனுபவங்களை, உளவோட்டங்களை அளிக்கும் யதார்த்தமான படைப்பாக விளங்குகிறது. நாவலின் மையப் பாத்திரமான சுகவனத்தின் பார்வையில் சிங்கப்பூரின் நில, இனப் பின்னணி, வரலாறு சொல்லப்படுகிறது. சுகவனத்தைத் தவிர பிற இனப் பாத்திரங்களாக வரும் ஐஸ் விற்கும் சீனப் பெரியவர், பங்களாதேசத்துத் துப்புரவுப் பணியாளர், செபஸ்டியன் ஆகிய அனைவருமே சிங்கப்பூரின் பல்லினச்சூழலையும் பண்பாட்டுப் பின்னணியையும் வெளிப்படுத்துவதற்கான பிரதிநிதிகளாகவே அமைகின்றனர். வாசகனுக்கு முக்கிய தகவல்களை அதன் பின்புலம், முக்கியத்துவம் ஆகியவை சொல்லப்படாமல் காமிராவுக்கு உரிய நேர்த்தியோடு சொல்லிச் செல்கிறது.

ஆனால் இயல்புவாத எழுத்து கொண்டுள்ள ‘வழக்கமான’ வாழ்க்கை என்பது புனைவு பாவனைதான். இதை பூமணி அல்லது இமையம் எழுத்துகள் வழி உணரமுடியும். வழக்கமானவைகளில் ஒரு தேர்வை அவர்கள் எழுத்துக் கொண்டிருக்கும். சுகவனத்தின் உளவோட்டம் சொல்லப்படுவதைப் போல அவரின் அன்றாட நடவடிக்கைகளான காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்றவையும் விரிவாக சொல்லப்படுகிறது. இவ்வாறான மிகையான அன்றாடச் செயல்பாடுகளின் விவரிப்பு வாசிப்பில் சோர்வையே ஏற்படுத்துகிறது. நாவலின் முற்பகுதியிலும் இறுதியிலும் அமையும் பள்ளிக்கு முன்னால் ஐஸ் விற்கும் சீனப்பெரியவரின் உரையாடலும் விவரிப்பும் கதையின் மையக்கருவுக்கும் போக்குக்கும் ஒட்டாது துருத்திக்கொண்டே இருக்கிறது. இந்நாவலில் அனைத்துமே நாவலாசிரியரின் பார்வையிலிருந்து முன்வைக்கப்படுகின்றன. வாசகன் தன் கற்பனையால் சென்றடையவேண்டிய நுண்ணிய பகுதிகள் என்பது மிக குறைந்ததாகவே இருக்கிறது. நாவலைத் தர்க்க ஒழுங்குமுறைக்குள் வைத்து மட்டுமே புரிந்துகொள்ளாமல் படைப்பாளார் வெளிப்படுத்தும் நுண்தளங்களை நனவிலி மனத்தின் ஊடாக மட்டுமே அறிய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். சுகவனத்தின் வெறுமையைப் பற்றிக் குறிப்பிடும்போது ஏன் வெறுமை ஏற்படுகிறது, அதன் காரணங்கள் என்ன, ஆகிய அளவில் அதனையொட்டிய விவரிப்புகளையும் நாவலாசிரியர் முன்வைக்கிறார். இத்தகைய வெளிப்படையான கூறல்முறைக்குப் புனைவுத்தளத்தில் இடமிருப்பினும் வாசகனின் கற்பனையில் அவன் சென்றடையவேண்டிய நுண்பிரதிக்கான வாசக இடைவெளி என்பதும் அவசியமானது.

எ.கா:

1.சுகவனத்தின் மீது வெய்யிலைக் காறித் துப்பிக்கொண்டிருந்தன. முதியவர்களையும் ஊனமுற்றவர்களையும் ஏளனமாகப் பார்ப்பதுகூட வெய்யிலால் சூழப்பட்ட நகரங்கங்களின் இயல்பு.

2.வெறுமை உன்னைப் பிடித்துத் தின்னும் என்று பயமுறுத்துகிறது. வெறுமை என்பது காலியான இடமோ, பொருள்கள் இல்லாமையோ அல்ல.

3. சாவு என்பது சமநிலையைக் குலைப்பது. நாகரீகமானவர்கள் சபையில் சட்டென்று பேசக்கூடாத அசிங்கம்.

இதுபோன்ற ஏராளமான வரிகள் நாவலில் உள்ளன. ஒருவகையில் கதாசிரியரின் தலையீடே நாவல் முழுவதும் நிரம்பி வழிகிறது. தான் ஏற்படுத்த நினைக்கும் உவமை, அதன் பொருள் அத்தனையையும் நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார். இவ்விவரிப்புகளால் தன்னுடைய அனுபவமாக விரித்துக் கற்பனையில் அத்தருணத்தை ஒட்டிப் பார்த்து மேலதிகத்தளங்களைச் சென்றடைய இயலாமற் போகிறது. பள்ளியில் மற்ற ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சுகவனத்தின் உறவினை விவரிக்கும் போது பயன்படுத்தும் காட்டில் உள்ள விலங்குகளின் இயல்பு விவரிப்பு சிங்கப்பூர் நிலப் பின்னணியுடனும் அல்லது சுகவனத்தின் மனநிலையுடனும் பொருந்தி போவதாக இல்லை. சுகவனத்தின் உளநிலையைப் பிரதிபலிக்க அந்த விவரிப்பு ஏற்றதாக இருப்பினும் நாவலுடன் பொருந்தி போகும் ஒருமை இல்லாது இருக்கிறது.

 

இயல்பின் நம்பகம்

இந்நாவல் உணர்த்தும் சில படிமங்கள் முக்கியமானவை. சிங்கப்பூரின் மொத்த நிலத்தின் பரப்பளவையும் மிஞ்சி வளர்ந்து நிற்கிற கட்டிடங்களுக்கும் அதன் அன்றாடச் சூழலில் சிக்கியிருக்கும் மக்களுக்கும் இடையில் ஒட்டுமொத்த நகரமும் வெறும் கால்களில் அல்லது சட்டையில் ஒட்டியிருக்கும் மணற்பொடியாக அமைந்திருப்பதாகக் காட்டப்படும் படிமம் முக்கியமானது. சிங்கப்பூரின் சூழலோடு ஒத்துப்போகும் கோலாலம்பூர் போன்ற நகரச் சூழலில் இருப்பவர்களும் அல்லது நகரத்துக்குப் புலம்பெயர்ந்தோர் பலரும் தங்களைத் தொடர்புபடுத்தும் படிமமாக இருக்கிறது. அதைப்போன்றே நாவலில் வரும் சுகவனத்தின் தந்தையின் கதைப் பகுதியும் சாரமானதாக விளங்குகிறது. சுகவனத்தின் தந்தையான ஆறுமுகம் தன்னுடைய கதை விவரிப்பில் தான் பெற்ற உபதேசமாகக் குறிப்பிடும் நகராமல் நகர்ந்து கொண்டே இரு எனும் மனநிலையும் மிக முக்கியமானது. ஆனால், இவ்வாறாக அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தட்டுப்படுகின்ற படிமங்கள் கட்டுரைத் தன்மை அல்லது தனியான உபதேசத் தொடர்களாகவே துருத்தி நிற்கின்றன. அந்தத் தொடர்கள் குறிப்புணர்த்துதல் அல்லது படிமம் ஆகியவற்றைத் தாண்டி நேரடி போதனைகளாகவே தொனிக்கின்றன.

மரயானை நாவலின் வரும் சிங்கப்பூரைப் பற்றிய விவரணைகள் ஒட்டுமொத்த சிங்கப்பூரின் வாழ்வினைக் காலநிரல்படி மிகக் காத்திரமாகவே முன்வைக்கிறது. ஆனால், நாவலின் சூழலமைவு, பாத்திர வார்ப்பில் நம்பகமின்மையான சிலவற்றையும் சுட்டிக்காட்டவேண்டியதாகிறது.

பள்ளியொன்றின் தலைமையாசிரியராக இருந்த சுகவனம் பல அரசியல் தலைவர்கள், சமூகத்தின் உயர்நிலையில் இருக்கும் பலருடனும் தொடர்புடையவராக இருக்கக்கூடும். அதைப் போன்றே இந்தோனேசியா, ஜப்பான், தைவான் போன்ற சில நாடுகளுக்குப் பயணம் செய்த அனுபவத்தையும் கொண்டிருப்பவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்நிலையில் இராமேஸ்வரம் அல்லது தமிழ்நாடு அந்நியமானதாக இருப்பதாகவும் அதனை ஆழ்ந்தறிய புத்தகங்களையும் தகவல்களையும் சேகரிப்பதாகவும் கூறுதல் நம்பகமாக இல்லை. மேலும், சிங்கப்பூர் போன்ற நவீன வாழ்வுமுறைகள் தவிர்க்கமுடியாத நிலப்பகுதியில் தொடுதிரைத் தொலைப்பேசியை வேண்டாமென ஒதுங்கி நிற்கும் ஒருவரைக் காட்சிப்படுத்துதலும் நம்பகம் குறைந்ததாக இருக்கிறது. உயர் கல்வி கற்றுத் தவிர்க்கமுடியாத சமூகத் தொடர்புகளும் உடையவரான 64 வயது சுகவனத்தின் சித்திரிப்பு எண்பது வயது முதியவருக்கு உரியதாக இருக்கிறது.  மனைவி உள்ளளவும் வீட்டில் தேநீர் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்திராத சுகவனம், மனைவியின் இறப்புக்குப் பின் காய்கறிகளை வெட்டிக் குழம்பு வைத்து வீட்டு வேலைகளை எவ்வித சிரமமும் இன்றி செய்வது என்பதும் ஏற்புடையதாக இல்லை. குடும்பப் பொறுப்பினைக் கொஞ்சம் கூட மனைவியுடன் பகிர்ந்துகொள்ளாமல் இருந்த சுகவனம் மனைவியின் இறப்புக்குப் பின்னால் அதனைக் கையாள்வதில் சிரமத்தையும் தடுமாற்றத்தையும் எதிர்நோக்கியிருக்கக்கூடும். ஆனால், அந்தச் சிரமமும் தடுமாற்றமும் சிறிதுமின்றி வேலைகளைச் செய்வது அப்பாத்திரத்தன்மையுடன் பொருந்திப் போவதாக இல்லை. மேலும், இயல்பிலேயே தாழ்வுணர்ச்சியினால் எழுந்த சுய பெருமிதம், ஆணவப்போக்கு அத்தனையும் அகன்று வேரொருவராகச் சுகவனம் சித்தரிக்கப்படுவதும் ஏற்புடையதாக இல்லை. மேற்கூறியவைகள் ஏன் நிகழக்கூடாதா எனும் கேள்வி எழலாம். நிச்சயம் நிகழலாம். ஆனால் அதற்கான சாத்தியங்கள் நாவலிலேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பரிணாமம் மெல்ல மெல்ல நிகழ வேண்டும். அதை வாசகன் உண்மையென நம்பும் வகையில் ஆசிரியர் சூழலை உருவாக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமையே இவற்றை நம்பகமற்றதாக மாற்றுகிறது.

மரயானை நாவலின் ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தைத் திரட்டிப் பார்க்கும்போது தற்காலத்தைய நவீன வாழ்வின் நெருக்கடிகளில் அமிழ்ந்து போய் வெறுமையில் சென்று உழலும் சுகவனத்தைப் போன்றவர்களின் வாழ்வை நெருங்கி அறிய இயல்கிறது. மரத்தில் யானை மறைந்ததுபோல சூழ இருக்கும் வாழ்வு மீதான அழகுணர்வு, இயற்கையுடனான ஒத்திசைவு அத்தனையும் அவ்வாறே மறைந்து போயிருக்கிறது. அதிலிருந்து திமிறும் மரயானை எனும் படிமமே இந்நாவல் முழுமைக்குமான படிமமாக எஞ்சுகிறது.

3 comments for “மரயானை: எஞ்சும் படிமம்

  1. ஜனகரன்
    November 1, 2020 at 12:13 pm

    எழுத்தாளர் அரவின் குமார் அவர்களுக்கு. மரயானை நாவலுக்கு விருது கிடைத்தபோது அதை தேடி வாசித்தவர்களில் நானும் ஒருவன். என்ன சொல்ல… ஏமாற்றமே மிஞ்சியது. அவர் சிங்கப்பூர் வரலாற்றை எழுதவோ தனக்கு சிங்கப்பூரை பற்றிய நுணுக்கமான பல தகவல்கள் தெரியும் என பறைச்சாற்றவோ நாவலை கையில் எடுத்திருக்க வேண்டாம்.

  2. மிதுனன்
    November 2, 2020 at 1:04 am

    ஜனகரன், கட்டுரையை சரியாக வாசிக்கவும். அந்த நாவலுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. மெரிட் பரிசைதான் வென்றது. ஆனால் அந்த உண்மையை சொல்ல யாருக்கும் திரணி இல்லை. நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. வாசித்தப்பின் சொல்கிறேன் கருத்தை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...