2020இன் இறுதியில்…

Road_2020_to_2021இவ்வாண்டின் இறுதி இதழ் இது. வல்லினத்தின் 126ஆவது இதழ். சமகால நாவல்களின் சிறப்பிதழாக வெளிவருவது அதன் கூடுதல் சிறப்பு.

இணையம் வழி இலக்கிய இதழை வழி நடத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் உள்ளன.

முதலாவது, படைப்பாளர்களின் மனநிலை சார்ந்தது. ‘இணைய இதழ்தானே…’ எனும் எளிமைப்படுத்திக்கொள்ளும் மனப்போக்கு. அடுத்ததாக இதழாசிரியர்களின் மனநிலை. கிடைத்ததை கொண்டு நிரப்பி வெளியிட்டால் போதுமென  இதழை முன்னெடுக்கும் அவசரம்.

2009இல் வல்லினம் இணைய இதழாகத் தொடங்கிய காலம் முதல் இந்த இரு சிக்கலும் வல்லினத்தில் இருந்தன. அது மெல்ல மீளத்தொடங்கியது 2019இல் இருமாத இதழாக உருவானப்பின்தான். 2020இல் அதன் ஆரோக்கியமான மாற்றங்களைக் காண முடிவதில் மகிழ்ச்சி.

முதலாவது, படைப்புகளை கவனம் எடுத்துத் தேர்வு செய்யவும் அதனைச் செப்பனிட்டுப் பிரசுரிக்கவும் அவகாசம் கிடைக்கிறது. இரண்டாவது, படைப்பாளர்களுக்குத் தரமான படைப்புகளை வழங்கப் போதுமான அவகாசம் கிடைக்கிறது. மூன்றாவது, அடுத்த இதழ் வெளிவரும் வரை வாசகர்கள்களுக்கும் படைப்புகளை நிதானமாக வாசிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இவ்வருடம் இதுவரை வெளிவந்த ஐந்து இதழ்களையும் வாசித்தவர் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு வல்லினம் ஆரோக்கியமான பாதையில் பயணிப்பதை உணர முடிந்தது. மிக அதிகமாக 37,054 வாசகர்கள் நுழைவும் மிகக்குறைவாக 17,560 வாசகர்கள் நுழைவும் வெவ்வேறு மாதங்களில் பதிவாகியுள்ளன. கணினி கொடுத்துள்ள இந்தக் கணக்கெடுப்பு ‘கிளிக்ஸ்’ சார்ந்தது என வல்லினம் குழு அறியும். ஆனால் அதிக பட்சம் 8000 – 10000 ‘கிளிக்ஸ்’ வந்துகொண்டிருந்த ஓர் இதழுக்கு இந்த எண்ணிக்கை மாற்றம் நிகழ்ந்தது படைப்பின் தரத்தினால் என்றே முடிவுக்கு வர முடிகிறது. எனில், இவ்வெண்ணிக்கையின் 20% வாசகர்கள் தொடர்ந்து வந்தாலே அது உற்சாகம் கொடுக்கக் கூடிய எண்ணிக்கையே.

வாசிப்பு அருகிவிட்டதாகச் சொல்லப்படும் இக்காலக்கட்டதில் நீளமான, சிக்கலான மொழி கொண்ட, அறிவார்த்தமான விவாதங்கள் அடங்கிய ஓர் இதழ் தொடர்ந்து வாசகர்களால் கவனிக்கப்படுவதும், பின்னூட்டங்களால் உரையாடல்களை உருவாக்குவதும் இணைய இலக்கிய சூழலின் மேல் நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதிலும் தரமான படைப்புகளைத் தேடிச்செல்லும் வாசகர்கள் எப்போதும் உள்ளனர் என்பது புலனாகிறது.

இந்த மகிழ்ச்சியுடன் இம்முறை சமகால நாவல் சிறப்பிதழைப் பதிவேற்றியுள்ளோம். இவை கடந்த இரு ஆண்டுகளில் கவனம் பெற்ற நாவல்கள் ஆகும். மேலும் கவனப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நாவல்கள் இருந்தால் அது குறித்தும் அடுத்தடுத்த இதழ்களில் உரையாடலாம்.

இவ்வேளையில் 2021இன் முதல் இதழ் சிறுகதை சிறப்பிதழாக வருவது உற்சாகமான தொடக்கமாக இருக்கும் எனக் கருதுகிறோம். உங்கள் சிறுகதைகளை வல்லினத்துக்கு அனுப்புங்கள். 2021ஐ சிறுகதைகளுடன் வரவேற்போம். இணைந்திருங்கள். நன்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...