தமிழ் நாவலுலகில் நிகழ்ந்த அதிசயம் – ‘எங் கதெ’

imayam_2494415fஅபூர்வமாகத்தான் நம்மை ஒரு படைப்பு நிலைகுலையவைக்கும். அப்படி அண்மையில் என்னை ஆட்டிப்படைத்த ஒரு படைப்பு இமையம் எழுதிய – ‘எங் கதெ’ நாவல். அது ஓயாமல் என்னை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான  “கமலா” என்கிற 28 வயது கணவனை இழந்தப் பெண்ணுக்கும் படித்துவிட்டு வேலை தேடும்  விநாயகம் என்பவருக்குமிடையே ஏற்படும் அன்பு, அதனால் இருவருக்குமிடையே ஏற்படும் உளவியல் – உடலியல் சார்ந்த போராட்டத்தை இந்நெடுங்கதை ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசியிருக்கிறது. வழக்கமாக நடக்கிற, தெரிந்த கதைதான்  என சட்டென இக்கதையைக் கடந்துபோக முடியாது.

விநாயகம் கமலாவின்மீது தீராத ஆசைக்கொண்டு, அவளோடு திருமணம் செய்யாமலேயே வாழத் தொடங்கி, அவள் மேல் பித்து கொண்டு அவளைப்பற்றி சிந்திப்பதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டு தன்னை முற்றும் முழுவதும் இழந்து இறுதியில் அவளைக் கொலை செய்கிற அளவிற்குச் சென்று பின் அதையும் தவிர்த்துவிட்டு செல்கிறான். பிசிறற்ற கதை சொல்லல் இந்நாவலின் ஒவ்வொரு சொல்லையும் நம்மைத் தொடர வைக்கிறது.

“இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல, அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வெளையாட்டுல சேத்துக்க மாட்டேன்னுதான் சொன்னா. சாவுற வெளையாட்டு. இந்த ஆட்டத்தில செகண்ட் ஷோ கெடையாது” என்று விநாயகம் நம்புகிற போதும் எப்போதும் எதற்காகவும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத, அலட்டிக் கொள்ளாத கமலா, புரிந்து கொள்ளவே முடியாத கமலா, விநாயக்தைத் தொடர்ந்து இம்சிக்கிறாள்.

கமலாவுடன் பல ஆண்டுகாலம் உறவிலிருந்து, அவளுக்காகவே தொடர்ந்து அலைந்து திரியக் காத்திருந்தாலும் அவளது உள்ளத்தில் எந்த இடத்தையும் பெற்றுவிட முடியாத விநாயத்தின் தவிப்பு ஒரு தீயாய் நம்மையும் பற்றிக் கொள்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் அவளுக்காகவே வாழ்ந்து, கடைசியில் அவள் இன்னொருவனுடனும் உறவுப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கையில் உடைந்து சுக்குநூறாகிப் போகும் நிலையில் அவனது உணர்வுகள் தீப்பிழம்பாகின்றன. அன்பின் – காதலின் வலி ஆணுக்குமானது என்பதை மிக நுணுக்கமாக இந்நாவல் பேசுகிறது.

வாழ்வின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போகும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகள், மனப்பிறழ்வுகள்பற்றி இந்நாவலில் பேசப்பட்டிருக்கிறது. திருமணம் செய்யாமலே தன்னுடன் வாழும் கமலாவை முழுமையாகச் சொந்தம் கொண்டாட நினைத்து விநாயகம் இது எனக்கான பொருள் என்கிற ரீதியில் செய்யும் செயல்களை அவனிடமிருந்து வெளிப்படும் தீராத காதலாக, வெறுப்பாக, விரோதமாக, கழிவிரக்கமாக இக்கதை பேசுகிறது.

இமையத்தின் முந்தைய கதைகள் பெரும்பாலும் கிராமிய வாழ்வை, அதன் வெளியை பிரதிபலிப்பவை. வெறும் கிராமம் சார்ந்த வெளிகளோடு மட்டும் நின்றுவிடால் அம்மக்களுக்கே உரிய மொழி, அவர்களின் வாழ்வியல் போக்குகள், அவர்களுக்கிடையேயான உறவு-பிணைப்பு, பாசம், கண்ணீர் என கிராமிய மக்களுக்குறிய அகவய அழுத்தங்களை எல்லாம் மிக நுட்பமாக பதிவு செய்தவை.

எங் கதெ நாவல் கிராமத்திற்கும் –நகரத்திற்குமிடையேயான அனைத்து வகையான வேறுபாட்டையும் தெளிவாக காட்டி நிற்கின்றது. கிராமத்தில் இல்லாத தேவைகள் நகர வாழ்விற்கு வரும்போது ஏற்படுகிறது. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கமலா தடம் மாறுவதும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளும் இந்நாவலின் மையமாக இருக்கின்றன. அரசுப்பள்ளி ஆசிரியர்களின்  நாளாந்த பனிச் சூழலையும் அரசு பள்ளிக்கூடங்களின் அவல நிலையையும் மாவட்ட தலைமை கல்வி அலுவலகத்தில் அன்றாடம் பணிக்கிடையே அரங்கேறும் கூத்துகளையும் நம் கண்முன் கொண்டு வருகிறார்.

ஆண்கள் சார்ந்த பணிச்சூழலில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், பொது வெளிகளில் பணிபுரியும் பெண்கள்  மீதான பார்வை என நாளாந்த வாழ்வின் வக்கிரத்தையும் இக்கதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. அதேவேளையில், ஒரு பெண்ணின் தடுமாற்றங்கள் குறித்தும், எதனையும் சுலபத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாத நெஞ்சழுத்தம் குறித்தும் இக்கதை விரிவாகப் பேசுகிறது. கமலாவின் மௌனம்தான் நாவலில் மிகப்பெரிய பலம். வசீகரம். அந்த மௌனம் நாவலின் எந்த இடத்திலும் உடையவில்லை.

இந்த நாவலின் பெரும் பலம் அதனுடைய மொழி. இந்த மொழி நடை தமிழ் நாவல் உலகிற்கு புதியது. அதனுடைய வசீகரத்திலிருந்து யாராலும் எளிதில் விடுபடமுடியாது. திரும்பத்திரும்ப படிக்கத் தூண்டுகிறது.

யாரோ பக்கத்தில் நின்று நம்மோடு மிக நுட்பமாக உரையாடுவது போன்ற ஒரு உணர்வு.

இது ஒரு காதல் கதை. ஒருவகையில் சமூகம் ஏற்காத காதல் கதை. ஆனால் நம் நெஞ்சை உறுக்கும் கதை. சமூகத்திற்கும் நமது பண்பாட்டிற்கும் ஒவ்வாத கதை. உலகிலுள்ள எல்லா ஆண்களுக்கும் எல்லா பெண்களுக்குமான கதை எங் கதெ.

நாவலைப் படிக்க ஆரம்பித்ததும். ஒன்று நாம் விநாயமாகியிருப்போம். அல்லது கமலாவாகியிருப்போம். இந்த கதையும்  ஏதோ ஒரு புள்ளியில் நமது கதையாகியிருக்கும்.

விநாயகத்திற்கு,  கமலா மேல் காதலா அல்லது அதற்கும் மேலான வேறொரு உணர்வா? கமலாவுக்கு  விநாயகத்தின்  மேலுள்ள  பிரியத்தை எப்படி வகைப்படுத்துவது? அன்பு எப்படி கொலைக் கருவியாகிறது?

“கண்ணீருல பொம்பள கண்ணீரு,ஆம்பள கண்ணீருன்னு இருக்கா? வலியில பொம்பள வலி ஆம்பளவலின்னும் இருக்கா? ஆனா ஒலகம் அப்படித்தான் சொல்லுது. தனக்கு வந்தா சோகம்.கவல. துயரம்.அதே மத்தவங்களுக்கு வந்தா வெறும் சும்மா.காத்துப்போல.”

யாரிடம் சொல்ல முடியாத சில துயர்களுக்கு இக்கதை மருந்தாகிறது. அதே போல் ஆண் பெண் உறவு என்பது ஒரு போதும் புனிதமானதாக இருந்ததில்லை என்பதையும் சொல்கிறது.

பேச்சு மொழியிலேயே எழுதப்பட்ட முதல் நாவல் இது. பேச்சு மொழிக்குறிய அத்தனை அழகியல் தன்மைகளையும் அதன் கடைசி எல்லைவரை சென்று இமையம் எழுதியிருக்கிறார். தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக நாவல் இது. நிலப்பிரத்துவ சமூகமான இந்தியாவில் மட்டும்தான் பெண் உடலை ஆண் உடமையாக கருதுகிறான் என்று சொல்ல முடியாது. நிலப்பிரபுத்துவ சமூக மனநிலையிலிருந்து விடுபட்டுவிட்டதாக கூறுகிற நாடுகளிலும் ஆண் தன் உடமையாகவே பெண் உடலைக் கருதுகிறான் என்பதை எங் கதெ சொல்கிறது. பெண் படித்திருக்கலாம். பதவியில் இருக்கலாம். ஆனாலும், மன ரீதியாக, உடல் ரீதியாக ஆணின் உடமையாக்கப்படுகிறாள் என்பதை பட்டவர்த்தனமாக சொன்ன நாவல் எங் கதெ.

தமிழ் நாவலுலகில் தற்காலத்தில் நிகழ்ந்த அதிசயம் – ‘எங் கதெ’. இதை கண்ணீரில்லாமல் படிக்க இயலாது. இக்கதை எப்போதும் நம்மோடு உறவாடிக்கொண்டே இருக்கும். நாவலிலுள்ள ஒவ்வொரு வரியும் மனப்பாடம் செய்ய வைக்கிறது. இந்த நாவலைப்பற்றி சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது. அதில் ஒரு துளிதான் இந்த குறிப்பு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...