11.10.2015ல் வல்லினமும் மை ஸ்கில் அறவாரியமும் இணைந்து ‘மாற்றுக்கல்வி’ எனும் தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து கவிஞர் கலாப்ரியா மற்றும் பேராசிரியர் வீ.அரசு ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கையிலிருந்து பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை எழுத்தாளர் தயாஜி வழிநடத்தினார்.
முதல் அமர்வில் பேராசிரியர்கள் வீ.அரசு மற்றும் எம்.ஏ.நுஃமான் அவர்கள் ‘மாற்றுக்கல்வி’ தொடர்பாக உரையாற்றினர். உலக அளவில் மாற்றுக்கல்விக்கான தேவை எவ்வாறு மாறிவருகிறது என்றும் தமிழகத்தில் அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது என்றும் அவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இன்றையக் கல்விச்சூழல் எவ்வாறு மாணவர்களை துன்புறுத்தக்கூடியதாக மாறிவிட்டது எனப் பகிர்ந்த அவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் அச்சவாலை எதிர்க்கொள்ள வேண்டிய கடப்பாட்டையும் எடுத்துக்கூறினர்.
இரண்டாவது அமர்வில் ம.நவீன் எழுதிய ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நூல் வெளியீடு கண்டது. இந்த நூலை வழக்கறிஞர் பசுபதி வெளியிட கவிஞர் கலாப்ரியா பெற்றுக்கொண்டார். கலாப்ரியா குறித்த அறிமுகத்தை எழுத்தாளர் சண்முகசிவா செய்தார். அவர்களுக்கிடையிலான நட்பில் தொடங்கி கவிஞர் கலாப்ரியாவின் கவிதைகளையும் சிலாகித்துப் பேசினார்.
கவிஞர் கலாப்ரியா ம.நவீன் எழுதிய ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நூல் குறித்து விமர்சனம் செய்தார். தன் வாசிப்புக்கு அந்நூல் எவ்வாறான உணர்வுகளைக் கொடுத்தது என அவர் விவரித்தார். தமிழகத்தில் உள்ள கல்விச்சூழல் குறித்தும் தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.
தனது ஏற்புரையில் ம.நவீன் இந்நூல் எழுதக் காரணியான விடயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒரு படைப்பாளியாகவும் ஓர்
ஆசிரியராகவும் உளவியல் ரீதியாக தான் சந்திக்கும் சிக்கல்களை அரங்கில் வந்த சக ஆசிரியர்களிடம் எடுத்துரைத்தார். மை ஸ்கில் அறவாரியத்திற்கும் சஞ்சை போன்ற இயக்குனர்களுக்கும் வல்லினம் எப்போதும் துணை நிர்க்கும் என்பதை வலியுறுத்திக்கூறினார். இந்த வெளியீட்டில் திரட்டப்பட்ட 5000 ரிங்கிட் மை ஸ்கில்ஸ் அறவாரியத்துக்கு வழங்கப்பட்டது.
மூன்றாவது அங்கத்தில் இயக்குனர் சஞ்சை இயக்கிய ஜகாட் திரைப்படங்களின் சில காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இயக்குனர் சஞ்சை பெருமாள் மற்றும் சிவா பெரியண்ணன் இப்படம் உருவான கதையை வந்திருந்த வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.
கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை எழுத்தாளர் தயாஜி வழிநடத்தினார். சரியாக மூன்று மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிவுற்றது.
மாற்றுக்கல்வி குறித்த தங்களின் வலைபக்கங்கள் உள்ளனவா? உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?