சிங்கப்பூர் எழுத்தாளர் விழா ஒரு பதிவு

sing 01சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சிங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில் நான்கு மொழிக்குமான கருத்தரங்குகள் நடக்கும். 24 வருடங்களுக்கு முன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் ரெ.கார்த்திகேசு கலந்துகொண்டுள்ளார். அதற்கும் முன்பு இராஜகுமாரன் 80களில் கலந்துகொண்டுள்ளார்.  அதற்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் அழைக்கப்படுவது இரண்டு மாமாங்கத்திற்குப் பின் நிகழ்ந்துள்ளது. நான் மலேசியாவைப் பிரதிநிதித்து நான்கு பேர் கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தேன். இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி தருவதாகப் பதில் வந்ததும் பாண்டியனை அணுகினேன். பாண்டியன் மலாய் இலக்கியம் குறித்து ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருப்பது அதற்கு முக்கிய காரணம்.

கருத்தரங்கம்

மறுநாள் (7.11.2015) தி ஆர்ட்ஸ் ஹவுஸில் இலக்கியம் வழி தேசிய அடையாளத்தை உருவாக்குவது குறித்து கருத்தரங்கில்sing 02 பேசினோம். இந்த அமர்வில் என்னுடன் கவிஞர் நெப்போலியன், அ.பாண்டியன், நாடகக் கலைஞர் செல்வா ஆகியோர் பேசினர். நடுவராக டாக்டர் சித்தார்த்தன் இருந்தார். வ.கீதா மலேசியாவில் இருந்தபோது என்னைச் சிங்கையில் சந்திக்க வேண்டிய நபராக டாக்டர் சித்தார்த்தனைக் குறிப்பிட்டார். அவருடன் விரிவாகப் பேச முடியாவிட்டாலும் அதற்கான அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

கருத்தரங்கில் மிகச்சரியாக இருபது பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். ஒருவருக்கு 20 டாலர் என கட்டணம் விதிக்கப்படுகிறது. தரமான கூட்டம். டாக்டர் ஶ்ரீலட்சுமி, அருண் மகிழ்நன், கமலா தேவி அரவிந்தன், அழகுநிலா, லதா, பூச்சோங் எம். சேகர், தமிழாசிரியர் மீனாட்சி சபாபதி, சாந்தன் என இன்னும் பலர் சூழ்ந்த சிறிய குழுவாக இருந்தாலும் உரையாடலுக்கான தரமான குழு.

விரிவாகப் பேச வேண்டிய தலைப்பை எனக்கு ஏற்புடையதாக மாற்றிக்கொண்டேன்.  பேச்சில் தடுமாற்றம் இருக்கக்கூடாது என்ற முன்னேற்பாடாகப் பேச வேண்டிய கட்டுரையை முழுமையாகவே தயாரித்திருந்தேன்.  கடந்த பத்தாண்டுகளில் இளம் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளில்  உள்ள அந்நியமாதல் மனநிலை எவ்வாறு மலேசியாவின் இன்றைய தேசிய அடையாளமாகி வருகிறது என பேசினேன்.  அதாவது அடையாளமற்றிருப்பதே ஒரு தேசிய அடையாளமாக இன்றைய இளம் எழுத்தாளர்களிடம் எவ்வாறு வெளிப்படுகிறது என்ற அடிப்படையில் என் பேச்சு இருந்தது. மற்ற மூவரும் சிறப்பாகவே பேசினர். பாண்டியன் எப்போதும் போல சமநிலையான தொணியில் அர்த்தம் பட பேசினார். நெப்போலியன் தேசிய அடையாளம் எவ்வாறான இலக்கியத்தில் இருந்து உருவாக வேண்டும் எனப் பேசியது கவர்ந்தது.

வாசகர் வட்டம்

மதியம் வாசகர் வட்டத்துடனான நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்க இல்லத்தில் நிகழ்ச்சி. ஏறக்குறையsing 03 15 பேர் வந்திருந்தனர். இரண்டு நாள்களில் தீபாவளி. காலையிலும் மாலையிலும் அவ்வளவு பேர் வந்ததே ஆச்சரியமாக இருந்தது. நூல்கள் விரிவாக விமர்சிக்கப்பட்டன. சித்ரா ரமேஷ் அவர்களின் வாசிப்பின் விசாலம் அவ்வப்போது அவர் பேச்சில் வெளிபட்டுக்கொண்டே இருந்தது. இராம கண்ணபிரான் அவர்கள் வழக்கம்போல நேர்த்தியாக எழுதி தெளிவாக வாசித்தார். எம்.கே.குமாரின் பேச்சை அப்போதுதான் முதன்முதலாகக் கேட்டேன். சிரித்துக்கொண்டே பேசினார். பொதுவாக அவ்வாறான சிரிப்பைத் தீவிரத்தின் மேல் பூசி வைக்கும் தற்காலிக ஒப்பனையாக நான் உபயோகிப்பதுண்டு. குமார் குறித்து தெரியவில்லை. இன்னும் பேச வேண்டிய மனிதர் என்று மட்டும் தோன்றியது.  ஷாநாவாஸ் நூலை ஒட்டி இல்லாமல் பொதுவான தனது வாசிப்பு மனநிலையில் தயாஜியின் எழுத்தை அணுகிய விதம் குறித்து பேசினார். நாங்களும் எங்கள் கருத்துகளைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டோம். plagiarism குறித்த சில விவாதங்கள் எழுந்தன. உற்சாகமாக இருந்தது.

நூல்களை விற்பதில் எங்களுக்குச் சங்கடம் இருந்தது. நாங்கள் இந்தச் சந்திப்பை சித்ரா ரமேஷ் அவர்களிடம் ஏற்பாடு செய்யச் சொன்ன காரணம் உறவுகளை வலுப்படுத்தவே. அதன் மூலம் புதிய முன்னெடுப்புகளை உருவாக்க நினைத்தோம். பொருளியல் சிந்தனை எப்போதும் இதுபோன்ற நெருக்கத்திற்குத் தடை. ஏற்கனவே பலரும் நூலை வெளியிட்டு சம்பாதிக்கும் நோக்கத்தில்தான் சிங்கை செல்கின்றனர். எனவே எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தோம்.

இறுதியாக

சிங்கப்பூர் எழுத்துகள் குறித்து தொடர்ச்சியான உரையாடல்கள் தேவைப்படுகிறது. மலேசியா போல அங்கும் நூல்கள் பிரசுரமாவதில் சுணக்கம் இல்லாவிட்டாலும் நல்ல படைப்புகள் முன்னெடுக்கப்படுவதில் விமர்சனப்போக்கு செயலிழந்துள்ளதாகவே தோன்றுகிறது. அதுபோன்ற முயற்சிகள் மலேசியாவில் தொடங்கப்படும் போதே புதிய அறிமுகங்களும் உறவுகளும் சாத்தியமாகும் எனத்தோன்றியது.

சிங்கப்பூரின் இரு சிறுகதை தொகுப்புகள் குறித்த விமர்சனம்:

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...