மலேசியா – சிங்கப்பூரின் புனைவு எழுத்துக்கான தளம்
மலேசிய சிங்கப்பூர் சூழலில் பெரும்பாலான சிறுகதைகள் ஞாயிறு நாளிதழ்களில்தான் பிரசுரிக்கப்படுகின்றன. சில சமயங்களில் வானொலியிலும் ஒலிபரப்பப்படுவதுண்டு. இந்த இரு ஊடகங்களுக்கும் பொதுவான சில கட்டுபாடுகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட வாழ்வையும் மொழியையும் மட்டுமே இவ்விரு ஊடகங்களிலும் எழுதும் எழுத்தாளர்கள் கையாள வேண்டும். பொது புத்திக்கும் பொது நீதிக்கும் மாற்றான ஒரு குரல் எப்போதுமே ஆபத்தாகக் கருதப்பட்டு தணிகைச் செய்யப்படவும் முற்றாக நிராகரிக்கப்படவும் செய்கின்றன. போட்டிகளுக்கு அனுப்பப்படும் சிறுகதைகளுக்கும் இந்த நிலைதான். எனவே நீதி நெறிகளை சம்பவங்கள் மூலம் விரிவாக்கும் எழுத்துமுறையே இங்கு இலக்கியமாகிவிட்டது.
இதன் அடிப்படையில் சக எழுத்தாளர்களும் ஒருசூழலை சுருக்கமாகச் சொல்லி, வழக்கமான குணங்களுடன் கட்டமைக்கப்பட்ட கதைமாந்தர்களை உருவாக்கி, அவர்களை ஒட்டி நிகழ்ச்சிகளை ஓடவிட்டு, உச்சமாக ஒரு மையக்கருத்தை திருப்பமாக்கி வாசகனை அதிர்ச்சி அடையவைத்துவிட்டதாக நம்பும் எழுத்துமுறையைப் பிடிவாதமாகப் பின்பற்றி வருகின்றனர். இவற்றை இலக்கியமென நம்பி வாசிக்கும் இளம் படைப்பாளிகள் அதுபோலவே போலி செய்து, பிரசுரமானவற்றைத் தொகுத்து நூலாக்கிவிடுகின்றனர்.
குறிப்பமைதி – கூற்றமைதி
பொதுவாக ஒரு சிறுகதை தொகுப்பை வாசிக்கும்போது தொடர்ந்து வாசிக்கலாமா வேண்டாமா என எனக்கு வழி செய்வது குறிப்பமைதி. சிறுகதையில் கதாசிரியர், தான் சொல்லவருவதை நேரடியாகச் சொல்லாமல் உணர்த்தவிளைவாரேயானால் எனக்கு அத்தொகுப்பை வாசிப்பது உவப்பானதே. நல்ல சிறுகதைகள் வாசகனுக்கு எப்போதுமே இடம் கொடுப்பவை. அதில் உள்ள இடைவெளியில் வாசகன் தன் வாழ்வையும் அனுபவத்தையும் இட்டு நிரப்புகிறான். அது போன்ற ஒரு கதையை வாசித்தப்பின் அடுத்தக்கதைக்குப் போவது அவ்வளவு எளிதல்ல. அது நம்முடைய கதையாகிவிடுகிறது. கதை முடியும் இடத்திலிருந்து இன்னொரு கதை வாசகன் மனதில் உருவாகிறது.
ஒரு சிறுகதையை வாசிக்கும்போது மொழியடக்கத்தை அது எந்த அளவுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதைப்பொருத்தே அந்த ஆசிரியருக்கு கதை சொல்லும் கலை கைவரப்பெற்றுள்ளதா இல்லையா என்பதைச் சொல்லிவிடலாம். சட்டென நினைவுக்கு இரண்டு நாவல்கள் வருகின்றன. ஒன்று கோ.முனியாண்டியின் ‘இராமனின் நிறங்கள்‘. மற்றது ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி‘. முன்னது செம்பனை வரலாற்றை பின்புலமாகக் கொண்ட காதல் கதை. பின்னது வீரப்பன் தேடலில் வன்முறைக்குட்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களின் அவலம். இரண்டு நாவல்களில் மனித வதையைச் சொல்லும் ‘சோளகர் தொட்டி’நாவலில் கூச்சல் குறைவாகவும் காதல் நாவலான ‘இராமனின் நிறங்கள்’ நாவலில் கூச்சல் அதிகமும் இருக்கும். சொல்லப்பட்ட விடயங்கள் இரண்டு நாவல்களிலுமே வரலாறு சார்ந்தது என்றாலும் கூற்றமைதியால் ‘சோளகர் தொட்டி’ வாசிப்புக்கு உரியதாக உள்ளது.
மூன்றாவது கை
ஒரு சிறுகதை தொகுப்பு குறைந்தபட்சம் வாசிப்புக்கு உரியதாக மாற இவ்விரு அம்சங்கள் எனக்கு முக்கியமாகப் படுகின்றன. ஷாநவாஸ் அவர்களின் ‘மூன்றாவது கை’ சிறுகதை தொகுப்பை ஒரே நாளில் வாசித்து முடிக்கவும் இந்த இரு அம்சங்கள் ஒரு சில கதைகளில் அடங்கியிருந்ததே அடிப்படைக் காரணம்.
ஷாநவாஸ் நல்ல கதைச் சொல்லி என்பதில் சந்தேகமும் இல்லை. அடங்கிய குரலில் அவரால் சுவாரசியமாக வாசகனை உள்ளே இழுத்துச்செல்ல முடிகிறது. ஆனால் கதையைச் சுவாரியமாகச் சொல்வதால் மட்டும் அது நல்ல கதையாகிவிடுவதில்லை. ஷாநவாஸின் சில சிறுகதைகளில் ஜனரஞ்சக எழுத்துமுறைக்கான தாக்கங்களைக் காணமுடிகிறது. ‘காகித சிற்பம், மூன்றாவது கை, வேர்ச்சொல், நிஜங்கள், பேசா மொழி’ ஆகிய மூன்று சிறுகதைகளும் பொதுவான தன்மை மனிதத்தின் மீதான நம்பிக்கை. தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்கள் பின்னர் அப்படியானவர்கள் அல்ல எனச்சொல்லும் பார்வை. பெரும்பாலான எழுத்தாளர்கள் மனிதம் இன்னும் உயிர்த்துள்ளது என மீண்டும் மீண்டும் எழுத முயல்கின்றன. ஷாநவாஸும் அதை எழுத முயன்றுள்ளார். ஆனால் இந்த ஐந்து கதைகளிலும் அதைப் பட்டவர்த்தனமாக வாசகனிடம் சொல்ல முயல்கிறார். ‘நிஜங்கள், காகித சிற்பம்’ கதைகளில் அது அதிகமும் நாடகத்தன்மையாக உள்ளது. ‘பேசா மொழி’ தனியாக நேரம் எடுத்து சொல்ல வரும் கருத்தை வலியுறுத்துகிறது. வாசகனுக்கான இடைவெளி இல்லாமல் ‘மனிதர்கள் நாம் நினைப்பது போல அவ்வளவு கெட்டவர்கள் இல்லை’ என சொல்லிவிடுவது இந்த ஐந்து சிறுகதைகளையும் பலவீனமாக்கிவிடுகிறது.
சிறுகதையின் உடல் ஒன்றுதான். அதாவது அதன் மையமும் மையத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உருவாகும் சம்பவங்களும் ஒன்றை நோக்கியே பயணிக்கின்றன. ‘மூன்றாவது கை’ தொகுப்பில் ‘அழைப்பு, இடைவெளி’ ஆகிய இரு சிறுகதைகளும் மையத்தைவிட்டு எழுதப்பட்டவையாய் உள்ளன. தேவையற்ற சம்பவங்கள் சுமையாகிவிட்டச் சூழலில் முடிவுகளும் பலவீனமாக உள்ளன.
‘தோடம் பழம்’ போன்ற சிறுகதைகளை ஷாநவாஸ் எழுதுவது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி போன்ற நீதியை வலியுறுத்த சிறுகதை போன்ற புனைவு வடிவங்களின் நோக்கமாக இருக்க முடியாது. மரபிலக்கியம் ஏற்கனவே சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுகின்ற கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் போக்கு கொண்டவை. சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் ஒரு முக்கியமான வடிவம். புத்திலக்கியம் பழைய நம்பிக்கைகளை மறுபரிசீலனைசெய்கிறது. பொது நியாயங்களை ஆராய்கிறது. இன்னொரு தரப்பின் நியாயத்தையும் பார்வைக்குக் கொண்டுவருகிறது. இக்கதை ஒரு மரபிலக்கியத்தின் தொடர்ச்சியாகவே என்னால் வாசிக்க முடிந்தது. வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சொல்வதற்கு சிறுகதை சிறந்த வடிவம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
ஷாநவாஸ் இதைப் புரியாதவர் இல்லை என்பதை நிரூபிக்க வேறு சில கதைகள் உள்ளன.
‘நீ சிரித்தால்’, வெறுமையும் துக்கமும் குரல்வளையை அழுத்திப்பிடிக்க வேறு வழியில்லாமல் வாழ்வைத் தொடர்ந்தே ஆக வேண்டும் என சிங்கப்பூர் வீதிகளில் சிரித்துக்கொண்டு உலாவும் தமிழகத்திலிருந்து வேலை நிமித்தமாக வந்த இளைஞர்களின் ஒட்டுமொத்த சொல்லாத கசப்பு கவிந்துள்ள கதை. ‘ஸ்கைப்’ போன்ற அதிநவீன தொடர்பு மென்பொருள்கள் வந்தப்பின்பும் அன்பின் தேடல் அவற்றைக் கடந்து வேறெங்கோ ஜீவித்துள்ளதை கச்சிதமான முடிவின் மூலம் உணர்த்த விளைந்துள்ளார்.
‘சாட்சி’ என்ற சிறுகதையையும் மிக நுட்பமாகவே எழுதியுள்ளார். அடையாள அட்டை உள்ள ஒருவர் தன் கண்முன்னே நடந்த விபத்தைப் பார்த்தும் அவ்வாறு பார்க்கவில்லை என மறுக்க, விபத்து நடந்த நிமிடம் முதல் சீனக்கிழவியின் அருகில் இருப்பவள் அவளது பேத்தியல்ல சீனாவிலிருந்து வந்த வேலை செய்யும் பெண் என திருப்பத்தை ஏற்படுத்துகிறார். இந்த பாணி, சிறுகதை எழுத தொடங்கும் புதிதில் பலரும் பயன்படுத்துவதுதான். வெளிப்படையாக கதையில் இருக்கும் திருப்பத்தைச் சந்தித்ததுமே வாசகன் வியப்பு கொள்வான். மொத்தக் கதையையையும் அந்த முடிவின் அடிப்படையில் மீள்வாசிப்பு செய்து வியப்பான். சுஜாதாவின் பெரும்பாலான சிறுகதைகள் இவ்வாறானவைதான்.
‘கறிவேப்பில்லை’ மற்றும் ‘அனுமானம்’ ஆகியவை இந்தத்தொகுப்பில் முக்கியமான சிறுகதையாக என் வாசிப்பில் தோன்றுகிறது. சிங்கப்பூரில் தேர்ந்தெடுத்தக் கதைகளைத் தொகுத்தால் இவ்விரு சிறுகதைகளும் இடம்பெற எல்லா வாய்ப்பும் உண்டு.
கறிவேப்பில்லை செடி தனது குடும்பத்துடன் எவ்வளவு இணக்கமானது என்பது தொடங்கி வீட்டுக்கு வந்த மருமகள் கறிவேப்பில்லைக்குப் பதிலாக செம்பருத்தி செடி நட விரும்புவது வரை விறுவிறுப்பான கதையோட்டமும் நகைச்சுவையுமாக கதைச்சொல்லியின் மூலம் நகர்கிறது. பின்னர் கறிவேப்பில்லையும் செம்பருத்தியும் இரு வெவ்வேறு மனங்களின் படிமங்களாக மாறும்போதும் மாமியாரும் மருமகளும் தத்தம் அடையாளங்களைத் தக்க வைக்க முயல்வதுமாக விரிவாக பேச எல்லா தளங்களையும் வாசகனுக்குத் திறந்துவைக்கிறார் ஷாநவாஸ்.
‘அனுமானம்’ இன்று ஒவ்வொரு முதியவரும் சந்திக்கும் அந்நியமாதல் மனநிலையை நுட்பமாக விளக்குகிறது. அந்நியமாகிப்போகும் தன் நிலையை தக்க வைக்க வீட்டைவிட்டு போவதும் பின்னர் அவ்வாறு செய்ய முடியாமல் தவிப்பதுமாக நகரில் இருக்கின்ற வயதானவர்களின் ஏக்கம் நிறைந்த பார்வையை ஷாநவாஸ் இக்கதையில் பதிவு செய்கிறார். எல்லா அவமானங்களையும் விழுங்கிவிட்டு மீண்டும் வாழ்ந்து தொலைவதற்கான எத்தனிக்கும் இருண்ட முகங்களை பதிவு செய்வதுதான் இந்தக்க்காலக்கட்டத்து இலக்கியங்கள் முழுவதும் வியாபித்துள்ளது. நமது வீட்டில் முதியவர்கள் யாராக இருக்கிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்ப வேண்டிய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இன்றைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
ஷாநவாஸ்
ஷாநவாஸிடம் அருமையான கதை சொல்லும் உத்தி இருக்கிறது. ஆம்! அவர் கதை சொல்லிதான். அவரது கதைகள் ஒன்று நேரடியாக ஆசிரியராலும் அல்லது கதாப்பாத்திரத்தால் சொல்லப்படுகிறது. சித்தரிப்புகள் முழுக்க இவ்வாறு சொல்லப்படுகையில் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. எழுத்தாளராலும் மிக எளிதாக ஒன்றைச் சொல்லிச்செல்ல முடிகிறது. பெரும்பாலும் புறவயமாகவே கதைகளைச் சொல்லிச்செல்லும் அவரது எழுத்துகளில் சித்தரிப்புகள் மிக நுட்பமாகவே கையாளப்படுகின்றன. வழக்கமாக எழுத்தாளர்களிடம் ஒன்றை தெளிவாக்கிவிட வேண்டும் என்ற தவிப்பு மட்டுமே அவரது சிறுகதைகள் முழுமையான கலைவடிவத்தை அடைய தடை. அதை மிக விரைவாகவே ஷாநவாஸ் கலைந்துவிடுவார் என ‘அனுமானம்’ மற்றும் ‘கறிவேப்பில்லை’ சொல்லிவைக்கின்றன.
மொழியடக்கம் x கூச்சல் என்று எதை சொல்கிறீர்கள்?
சில கதைகள் சம்பவங்களின் கோர்வையாக நீண்டு இருந்தாலும் கதையின் முடிவில் ஏதோ ஓர் இடுக்கில் புதையுண்டு மீள முடியாத துயரத்துக்கு ஆளாக நேரிடுகிறது. சிலவை சர்வ கச்சிதமான மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்ற முடிவதில்லை. எதன் அடிப்படையில் மொழியடக்கம் கையாளப்படவேண்டியுள்ளது.