அழகு நிலா :சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் (1)

azaku nilaஇன்றைய விமர்சன சூழல்

மலேசியச் சூழலில் சமகாலத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து நான் எனது அபிப்பிராயங்களை அவ்வப்போது  கூறியே வருகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளை மட்டுமே பிடிவாதமாக மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கும் சூழலில், பிறர் படைப்புகள் குறித்து பேசுவதில் பகையைச் சம்பாதித்ததுதான் அதிகம் என்றாலும்  எனக்கு அது முக்கியமான பணியாகவே தெரிகிறது. பொதுவாகவே மலேசியச் சூழலில் சமகாலப் படைப்புக் குறித்த எவ்வித உரையாடலும் நடப்பதில்லை. நூல் வெளியீடுகளில் ‘முகஸ்துதிக்கு’ நாகரீகமான பெயராக நூல் விமர்சனம் என்ற பகுதியை இணைத்துவிடுகிறார்கள்.  யார் மிக அதிகமாக ‘பட்டர்’ பூசுவார்கள் என்று கணக்கெடுப்பெல்லாம் எடுத்து, அதில் அதிகப் புள்ளிகள் பெறுபவரே நூல் விமர்சகராக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சிங்கப்பூரிலும் இதே நிலைதான். மலேசிய சிங்கையில் எழுதப்படும் புனைவுகளை வாசிக்கையில் காணும் தரச்சரிவுக்கு அதை யாரும் வாசிக்காமலும், எதிர்வினையாற்றாமல் இருப்பது முக்கியக் காரணமாகத் தோன்றியது. நேர்மையான விமர்சனங்கள் இல்லாத சூழலில் ஒரு படைப்பாளிக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பதே தெரிவதில்லை. அவர் எழுதியிருப்பது அபூர்வமான ஒரு படைப்பு என்ற நம்பிக்கையைச் சுற்றியுள்ளவர்களின் போலி பாராட்டுகள் நீடிக்க உதவுகிறார்கள்.

தமிழகத்தில் சிற்றிதழ் சூழலை நினைவுக்குக் கொண்டுவரவேண்டியுள்ளது. அக்கால எழுத்தாளர்கள் மத்தியில் இருந்த கடிதத்தொடர்பு, விமர்சனம், இலக்கியத்தின் தீவிரத்தன்மையைக் கூட்டியது. இன்று முகநூல், மின்னஞ்சல் என உடனுக்குடனான பதிவிடும் மூலங்கள் இருந்தாலும் எவ்விதத்திலும் அவை தீவிரமான வாசிப்பையும் விவாதத்தையும் நிகழ்த்துவதில்லை. அப்படியே  நிகழ்ந்தாலும் எதிர்வினையாகத் தனிமனித சாடலிலும் பகை உணர்ச்சியிலும் போய் முடிகிறது. சமகால எழுத்து மேலும் எழுத்தாளர்கள் மேலும் எழுதவருபவர்களுக்கு இருக்கும் கவனமின்மையும், புதிய எழுத்தாளர் மேல் விவாதமே இல்லாத வெறுமையும் தட்டையான படைப்புகளைக் குவிக்கின்றன.

‘இன்று உன்னை நான் பாராட்டினால் நாளை நீ என்னை பாராட்டுவாய்’ என கொடுக்கல் வாங்கலாக மலேசிய விமர்சன சூழல் உருவாகிவிட்ட அதே நேரத்தில் ‘இருக்குற கொஞ்ச நாள்ள ஏன் மத்தவங்களப் பகைச்சிக்கனும்’ என வெள்ளைக்கொடி ஏந்தியபடியே விமர்சிக்க வருபவர்கள் அதிகம். இன்னும் சிலர் புதியப் படைப்பாளிகளைத் தட்டிக்கொடுக்கிறேன் என தட்டி தட்டி தூங்கவே வைத்துவிடுகிறார்கள்.

இந்தச் சூழலில்தான் நான் சிங்கப்பூரின் சமகாலப் படைப்பாளிகள் குறித்து எழுத முனைகிறேன். சிறுகதை என்ற புனைவு வடிவத்தையும் குறைந்த பட்சம் ஒரே ஒரு சிறுகதை தொகுப்பு வெளியிட்டவர்களையும் இந்தத் தொடரில் அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் வாசிப்பில் எனக்கு விருப்பமான சில சிறுகதைகளையும் முன் வைத்துப்பேச விருப்பம் உண்டு. ஒரு சிறுகதையின் தரம் எனது ரசனையில் அடிப்படையில் தீர்மானிக்க முடியாதது என அறிவேன். ஆனால் இதன் மூலமே மௌனம் நிரம்பிய மலேசிய – சிங்கை இலக்கியச் சூழலில் உரையாடல்கள் சாத்தியமாகும் என நம்புகிறேன். அதன் மூலமே ஒரு படைப்பை முன்னெடுக்க இயலும். ஒருவகையில் இது நான் எனக்கு இட்டுக்கொண்ட பணி. உலக இலக்கியமெல்லாம் பேச ஆர்வம் கொண்டிருக்கும் சூழலில் பக்கத்து நாட்டில் தமிழில் எழுதப்படும் இலக்கியங்களை வாசிக்காமல் விவாதிக்காமல் இருக்கும் அபத்தத்தின் கசப்பை தவிர்க்கவே இம்முயற்சி.

இந்த விமர்சனம் எந்தக் கோட்பாட்டு அடிப்படையில் சார்ந்தது இல்லை. தொடர்ச்சியாகச் சிறுகதைகளை வாசிக்கும் ஒரு வாசகனாக மிக கவனமாக தொகுப்புகளை வாசித்து அத்தொகுப்பில் முக்கியமான சிறுகதைகள் என நான் நம்புபவற்றை முன் வைக்கிறேன். அதை ஓர் உரையாடலாக மாற்ற நினைக்கிறேன். ஒருவேளை உரையாடலுக்கு வர விரும்புபவர்கள் அத்தொகுப்பை வாசித்து இணைந்துகொள்வதே அப்படைப்பாளிக்குச் செய்யும் மரியாதை என நினைக்கிறேன்.

***

அழகு நிலா

அழகு நிலாவின் சிறுகதை தொகுப்பு கையில் கிடைத்ததும் முதலில் நான் பார்த்தது பின் அட்டை. தான் சிறந்ததாக நினைக்கும் ஒரு படத்தையே எழுத்தாளர் அதில் பிரசுரிப்பது இயல்பு. அழகு நிலா அந்தப்படத்தில் மரபான மனம் ‘லட்சணம்’ என நம்பும் அத்தனை அம்சங்களுடனும் இருந்தார். அடுத்து முதல் பக்கம். ஓர் எழுத்தாளர் தன்னை தனது எழுத்தின் மூலமும் அதன் முந்தைய முயற்சிகள் மூலம் அடையாளப்படுத்துவதை விரும்புபவன் நான். கல்வித்தகுதி, வேலையில் பதவி, கிடைத்த விருதுகள் போன்றவற்றை ஓர் அடையாளமாக பதிவு செய்வது படைப்பின் மேல் கொண்டுள்ள பலவீனமான அபிப்பிராயங்களை சமன் படுத்தவே என எனக்குத் தோன்றும். அழகு நிலா அதை செய்திருந்தது இன்னும் கொஞ்சம் ஏமாற்றத்தைக் கூட்டியது.

ஆனால் இவையெல்லாம் பொதுவான பழக்கங்கள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள்தான். இவை குறித்தெல்லாம் பொதுவாக கவனம் இல்லாமல் இருக்கலாம். எவ்வித கேள்வி இல்லாமலும் அதை செய்திருக்கலாம். ஆனால், தீவிரமாகப் படைப்பில் ஈடுபட நினைப்பவர்கள்  தங்கள் எழுத்து முயற்சிகள் மூலமே தங்கள் ஆளுமையை உருவாக்குவது ஏற்றது என கருதுகிறேன். அழகு நிலாவின் முதல் முயற்சியான ‘ஆறஞ்சு’ நூலை அவரது உற்சாகமான தேடலுக்காக வாசித்தே தீர வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.

***

ஆறஞ்சு

azaku nila 02இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினான்கு சிறுகதைகள். இவற்றில் ‘ஒற்றைக்கண்’, ‘பங்பங்’, ‘தோன்றாத் துணை’, ‘உறவு மயக்கம்’, ‘வேர்க்கொடி’, ஆகியவை குறித்து பேச வேண்டியதில்லை. முதலில் அவை சிறுகதை இல்லை. ஒரு கருத்தை வலியுறுத்தச் சொல்லப்படும் நன்னெறி கதைகள். கருத்தைச் சுற்றி உருவாக்கப்படும் சம்பவங்கள். அந்தச் சம்பவங்களின் நோக்கம் நன்னெறியை அல்லது தீர்க்கமாக ஒரு கருத்தைச் சொல்வதுதான்.  உதாரணமாக ‘வேர்க்கொடி’ தமிழர்களின் பழக்கங்களில் இருப்பது மூடநம்பிக்கை அல்ல அறிவியல் என சொல்ல வருகிறது. ‘உறவு மயக்கம்’ வீட்டுப்பணிப்பெண்ணை சக மனிதனாக நினைப்பது பற்றி பேசுகிறது. ‘தோன்றாத் துணை’ அந்நிய நாட்டவர்களை பேதம் பார்க்காது பழக வேண்டும் என வழியுறுத்துகிறது. ‘பங் பங்’ பக்கத்து வீட்டில் இருக்க வேண்டிய நட்பு குறித்து சொல்கிறது. ‘ஒற்றைக்கண்’ கோபத்தினால் வரும் கெடுதிகளைச் சித்தரிக்கிறது.

பொதுவாகவே சிறிய கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்ள முயன்றாலே, கதை வாசகனை அதன் மையக்கருத்தைப் புரிந்து கொள்பவனாகவும்  சிறுகதை வாசகனை கதையில் இணைந்து ஆசிரியன் விட்டிருக்கும் மௌனமான இடைவெளிகளைத் தன் கற்பனையால் பூர்த்தி செய்யும் பங்கேற்பாளனாகவும் அறியலாம். அழகு நிலா தனது வாசகனை மையக்கருவை நோக்கியே அழைத்துச்செல்கிறார் என்பது பலவீனம்.

‘பச்சை பெல்ட்’ கதை மிகைஉணர்ச்சியானது. ஓர் உதாரணம் சொல்வதென்றால் சீரியல்களில் ரசிகர்களை அழவைக்க மெனக்கெடும் கசகசப்பான முயற்சி இந்தச் சிறுகதையில் நிகழ்ந்துள்ளது. ‘சுடோக்கு’, ‘ஆறஞ்சு’ ஆகிய இரு சிறுகதைகளும் முழுமையில்லாமல் இருக்கின்றன. குறிப்பாக ‘ஆறஞ்சு’ சமகால கல்விச்சூழலை விமர்சனம் செய்யும் பாங்கில் எழுதப்பட்டிருந்தாலும் அது ஒரு மாணவனின் உளவியலைப் பேசவில்லை. பெரும்பாலும் வசனங்கள் கதைக்கு வெளியே வாசகனை நிறுத்தி விசயத்தைச் சொல்லிவிட்டு தனக்குள் நுழையவிடாமல் அடைத்துவைத்துக்கொள்கிறது. ஒரு மனநெருக்கடி உள்ள மாணவனை அதில் காணவே முடியாமல் மேலோடமாக செல்வது ஏமாற்றம்.

பொதுவாகவே புதிதாகச் சிறுகதை எழுதுபவர்களிடம் உள்ள வழக்கமான தடுமாற்றம்தான் அழகுநிலாவிடமும் உள்ளது. அது வசனங்களைப் பயன்படுத்தும் முறை. வசனங்கள் அந்தக் கதாப்பாத்திரத்தை மீறி பல இடங்களில் ஒலிக்கிறது. அது கதாப்பாத்திரத்தின் குரல் அல்ல; அழகு நிலாவில் குரல். அது கதையின் அமைதியைக் கெடுக்கிறது. வசனங்கள் தேவைப்படாத மௌன வெளிகளிலும் யாராவது கதையில் பேசிக்கொண்டிருப்பது வாசிப்பில் சலிப்பை உண்டாக்குகிறது.

மிக நுட்பமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறுகதையாகப் ‘பெயர்த்தி’யைச் சொல்லலாம். தமிழராகிய தன் அம்மாவை அடையாளம் காட்ட விரும்பாத சீன வம்சாவழி மகன், தனக்குக் குழந்தை தமிழர் தோற்றத்தில் பிறந்ததும் அம்மாவை சமூகத்தின் முன் அடையாளம் காட்டுகிறான். மிக கவனமாக நகர்த்திச்செல்லவேண்டிய கதை இது. அன்புக்குப் பின்னால் இருக்கின்ற சுயநலம் குறித்து துள்ளியமாகப் பேசக்கூடிய கதை. கதாசிரியரின் மிகையான ஆவலால் சொற்களை விரையமாகி தேவையான கூர்மை கிடைக்காமல் சிறுகதை நிறைவு பெற்றுள்ளது. இதேபோல நுட்பமான சித்திரம்தான் ‘அவன் அவள் அவர்கள்’ சிறுகதையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. காரணமே இல்லாமல் கணவன் மனைவிக்குள் உண்டாகும் சிக்கலை பேசும் கதை. சமகாலத்தில் மாபெரும் சிக்கலாகியிருக்கும் சக மனிதன் மீதான கசப்பு. கசப்பைப் பற்றி பேசாமல் அன்றாடம் தொடர்கின்ற வாழ்க்கை என அழகு நிலாவினால் திறம்பட காட்சிகளைச் சித்தரிக்க முடிகிறது. காட்சிகள் மட்டும் கலையாகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அழகு நிலாவின் பலம் கதையைத் தொடங்கும் விதம். அவரது பலவீனம் கதையை முடிக்கும் விதமாக மொத்தத் தொகுப்பையும் வாசிக்கும் போது தோன்றிக்கொண்டே இருந்தது.

அங்கதத்தை அவர் கைவரப்பெற்றுள்ளார். அவரால் மிக எளிதாக ஒரு காட்சியை நகைச்சுவையுடன் சொல்ல முடிகிறது. கொஞ்சம் செறிவு செய்தால் சிறந்த சிறுகதையாக வரும் எல்லா தகுதியையும் ‘சிதறல்கள்’ கொண்டுள்ளது என்றே கருதுகிறேன். நல்ல விறுவிறுப்பான நடை இக்கதையில் உள்ளது ஆச்சரியம். அதற்கேற்ற அங்கதம். ஏன் இந்த நடை மற்ற கதைகளில் இல்லை என மற்ற கதைகளை வாசிக்கும் போது தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.  அழகு நிலாவின் இந்தத் தொகுப்பில் ஆச்சரியப்பட வைத்த சிறுகதை ‘அலையும் முதல் சுடர்’. புராணங்களை மீள் வாசிப்பு செய்வதும் அதில் நுண்ணிய பகுதியை கவனப்படுத்துவதும் அல்லது அதை மீள் வடிவாக்கம் செய்வதும் என பல படைப்பாளிகள் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். மூத்தவன் என்ற பெருமையைத் தவிர தனக்கு வேறொன்றும் இல்லை என புலம்பும் தர்மனுக்கு தனக்கும் மூத்தவன் கர்ணன் எனத்தெரியும் தருணத்தை நோக்கி கதை செல்கிறது. சிறுகதைகளில் வடிவமைதி முக்கியம் என விமர்சகர்கள் சொல்வதுண்டு. ஓர் உணர்ச்சியை சொல்ல முயலாமல் குறைந்த சொற்றொடர்களில் வாசகனிடம் அவ்வுணர்ச்சியைக் கடத்தும் கலையை நான் அவ்வாறு புரிந்துகொள்கிறேன். அழகு நிலா அதற்கான பயிற்சியை வாசிப்பின் மூலமே பெற முடியும். மிகச்சிறந்த சிறுகதையாக வேண்டியவை, சொல்லும் முறையால் வாசகனை கேட்பவனாக மட்டுமே மாற்றுகின்றன.

நாம் சமகாலத்து வாழ்க்கையைத்தான் எழுதுகிறோமா என்றக் கேள்வி எப்போதுமே எனக்கு எழுவதுண்டு. இன்றைய பிரச்னைகளை, இன்றைய வாழ்க்கையில் குவிந்துள்ள பதற்றங்களை, இன்றைய வாழ்க்கையில் பரவியுள்ள அபத்தங்களை எழுத்துகளில் காண்பது அபூர்வமாகவே இருக்கிறது. அழகு நிலா தனது முதல் தொகுப்பில் சமகால வாழ்க்கையின் சிக்கல்களையே கையில் எடுக்கிறார். அதைச் சொல்லும் முறையில் அவருக்கு தடுமாற்றம் இருந்தாலும் இன்றைய வாழ்க்கையை எழுத முனைவதாலேயே அவரைப் பாராட்டலாம். ‘பொழுதின் தனிமை’ என்ற சிறுகதை அதற்குச் சிறந்த உதாரணம். பிறந்து சில ஆண்டுகளிலேயே நவீன சாதனங்களை உபயோகிக்கும் ஒரு தலைமுறை இருக்க, அச்சாதனங்களை இப்போதுதான் அறிமுகப்படுத்திக்கொள்ளும் மூத்தத் தலைமுறையின் உளவியலை இக்கதை பேசுகிறது. இருவேறு தலைமுறைக்கு மத்தியில் வாழும் ஒரு இடைப்பட்ட தலைமுறை அனுபவிக்கும் சிக்கலை சொல்லியுள்ள அழகு நிலாவை பாராட்டத்தான் வேண்டும்.

அழகு நிலாவிடம் எதை கதையாக்க வேண்டும் என்ற தெளிவு உள்ளது. ஆனால் அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. தொடர் வாசிப்பும் தேடலும் மட்டுமே அதை அவருக்குக் கற்றுக்கொடுக்கும். அவருக்கே உரிய எழுத்து நடை இந்தத் தொகுப்பில் ஆங்காங்கு பளிச்சிடுகிறது. அந்தத் தனித்துவம் கெடாமல் இனி எழுதப்போகும் அவரது சிறுகதைக்கு நாம் காத்திருக்கவேண்டும்.

(Visited 593 times, 1 visits today)

One thought on “அழகு நிலா :சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *