சிங்கப்பூர் இலக்கியப் பயணம்: பதிவு

20151106_213344

நின்றுவிட்ட இரயில்

ஆறு வருடத்திற்குப் பின் மீண்டும் சிங்கப்பூர். முழுக்க இலக்கியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பயணம். என்னுடன் அ.பாண்டியன் அவர் மனைவி, தயாஜி மற்றும் விஜயலட்சுமி உடன் வந்தனர்.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சிங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில் நான்கு மொழிக்குமான கருத்தரங்குகள் நடக்கும். 24 வருடங்களுக்கு முன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் ரெ.கார்த்திகேசு கலந்துகொண்டுள்ளார். அதற்கும் முன்பு இராஜகுமாரன் 80களில் கலந்துகொண்டுள்ளார்.  அதற்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் அழைக்கப்படுவது இரண்டு மாமாங்கத்திற்குப் பின் நிகழ்ந்துள்ளது. நான் மலேசியாவைப் பிரதிநிதித்து நான்கு பேர் கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தேன். இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி தருவதாகப் பதில் வந்ததும் பாண்டியனை அணுகினேன். பாண்டியன் மலாய் இலக்கியம் குறித்து ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருப்பது அதற்கு முக்கிய காரணம்.

இரயில் பயணம்

தண்டவாளத்தில்...

தண்டவாளத்தில்…

பயணம் இரயிலில் நிகழ்ந்தது. புறப்படும் நேரம் மதியம் மூன்று என நானாக ஊகித்திருந்தேன். டிக்கெட் எடுத்துவிட்ட நிலையில் அந்தத் தவறான நேரம் எப்படி மூளைக்குள் நுழைந்தது என இப்போதுவரை குழப்பமாக உள்ளது. திடீரென 1.30க்கு இரயில் எனத் தெரிந்ததும் பரபரப்பாகிவிட்டேன். ஆனால் இரயில் ஒரு மணி நேரம் தாமதம். புறப்பட மதியம் மூன்றாகிவிட்டது. எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் அவ்வளவு சீக்கிரம் எனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை என தயாஜியிடம் சொல்லி வைத்தேன்.

என்னைச் சலிப்படைய வைப்பது அத்தனை எளிதல்ல. நான் தனியாக இருந்தாலும் என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பல சங்கதிகளைக் கைவசம் வைத்துள்ளேன். வரிகள் சிக்காத 500 பாடல்களாவது தெரியும் எனக்கு.  இதில் நண்பர்கள் உடன் இருப்பது உற்சாகமானது. இடையில் இரயிலில் ஏற்பட்ட கோளாறினால் மேலும் ஒருமணி நேரம் தாமதமானபோது இரயிலும் தண்டவாளமும் முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஒருவழியாக சிங்கப்பூரை அடைந்தபோது  தங்கும் விடுதியில் சேர்க்கும் வாகன ஓட்டிதான் கழுத்தறுத்துவிட்டார்.  பாதை தெரியாவிட்டாலும் எல்லாம் தெரியும் தோரணையில் அந்தப் பகுதியையே ஐந்து ஆறுமுறை சுற்றிச்சுற்றி வந்தார். எரிச்சலாக இருந்தது. ஒருவழியாக மெத்தையில் சரிந்தபோது நள்ளிரவைக் கடந்துவிட்டது.

10621_14082014510021379868Stamford சாலையில் அமைந்துள்ளது swissotel. 5 நட்சத்திர விடுதிதான். எல்லாம் சிங்கப்பூர் அரசாங்க ஏற்பாடு. மேலிருந்து பார்த்தால் எப்போதும் யாராவது நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். தயாஜி அவர்களை அதி உற்சாகமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். குளிப்பவர்களுக்கு மேலிருந்து தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்பதில் கவனம் இல்லை. மேலே இருப்பவர்கள் அனைவரையும் கடவுளுக்கு ஒப்பானவர்களாக அவர்கள் நினைத்திருக்கலாம். மேலிருந்து பார்க்கும்போது மனித உடல்கள் புள்ளிகளாகி அர்த்தம் இல்லாமல்தான் போகின்றன. மனம் மேலே மேலே செல்லும்போது உடல் அர்த்தமிழப்பதை எண்ணிக்கொண்டேன்.

கருத்தரங்கம்

மறுநாள் (7.11.2015) தி ஆர்ட்ஸ் ஹவுஸில் இலக்கியம் வழி தேசிய அடையாளத்தை12208510_1079165185429892_2598615582148814320_n உருவாக்குவது குறித்து கருத்தரங்கில் பேசினோம். இந்த அமர்வில் என்னுடன் கவிஞர் நெப்போலியன், அ.பாண்டியன், நாடகக் கலைஞர் செல்வா ஆகியோர் பேசினர். நடுவராக டாக்டர் சித்தார்த்தன் இருந்தார். வ.கீதா மலேசியாவில் இருந்தபோது என்னைச் சிங்கையில் சந்திக்க வேண்டிய நபராக டாக்டர் சித்தார்த்தனைக் குறிப்பிட்டார். அவருடன் விரிவாகப் பேச முடியாவிட்டாலும் அதற்கான அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

20151107_235747கருத்தரங்கில் மிகச்சரியாக இருபது பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். ஒருவருக்கு 20 டாலர் என கட்டணம் விதிக்கப்படுகிறது. தரமான கூட்டம். டாக்டர் ஶ்ரீலட்சுமி, அருண் மகிழ்நன், கமலா தேவி அரவிந்தன், அழகுநிலா, லதா, பூச்சோங் எம். சேகர், தமிழாசிரியர் மீனாட்சி சபாபதி, சாந்தன் என இன்னும் பலர் சூழ்ந்த சிறிய குழுவாக இருந்தாலும் உரையாடலுக்கான தரமான குழு.

20151107_235704

லதாவுடன்

விரிவாகப் பேச வேண்டிய தலைப்பை எனக்கு ஏற்புடையதாக மாற்றிக்கொண்டேன்.  ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ வெளியீட்டுக்குப் பின் அடுத்த பத்து நாள்களில் நடந்து முடிந்த கலை இலக்கிய விழா, ஈப்போவில் ‘இலக்கியமும் அரசியலும்’ கலந்துரையாடல் என கொஞ்சம் சோர்ந்திருந்தேன். பேச்சில் தடுமாற்றம் இருக்கக்கூடாது என்ற முன்னேற்பாடாக பேச வேண்டிய கட்டுரையை முழுமையாகவே தயாரித்திருந்தேன்.  கடந்த பத்தாண்டுகளில் இளம் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளில்  உள்ள அந்நியமாதல் மனநிலை எவ்வாறு மலேசியாவின் இன்றைய தேசிய அடையாளமாகி வருகிறது என பேசினேன்.  மற்ற மூவரும் சிறப்பாகவே பேசினர். பாண்டியன் எப்போதும் போல சமநிலையான தொணியில் அர்த்தம் பட பேசினார். நெப்போலியன் தேசிய அடையாளம் எவ்வாறான இலக்கியத்தில் இருந்து உருவாக வேண்டும் எனப் பேசியது கவர்ந்தது.

கமலாதேவி அரவிந்தனுடன்

கமலாதேவி அரவிந்தனுடன்

பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எவ்வித புரிதலும் இல்லாமல் மொண்ணைத்தனமான கேள்விகள் கேட்கப்படுவது இயல்பு. அந்தப் பணியைப் பாலுமணிமாறன் செவ்வனே செய்தார். பொதுவாக நான் எவ்வித கருத்துருவாக்கமும் இல்லாதவர்களிடம்கூட பேசுவதில் ஆர்வம் காட்டுவேன். அவ்வாறான உரையாடல்கள்கூட சில சமயம் நமக்குள் புதிய சிந்தனைகளையும் புதிய கேள்விகளையும் எழுப்பும். ஆனால், எவ்வித சிந்தனைத்தளமும் இல்லாமல் காலையில் பத்திரிகையைத் திறந்தவுடன் தட்டுப்படும் செய்திக்கு கருத்துச்சொல்லிப் போகும் கந்தசாமிகளிடம் பேசுவது குடைச்சல். ஒன்று அவர்களுக்கு எது குறித்தும் ஆழமான சிந்தனை இருக்காது. இரண்டு அதை சமாளிக்க அபத்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு தங்களை நிரூபிக்க நினைப்பார்கள். இது போன்றவர்களிடம் உரையாடுவது நேரத்திற்குக் கேடு என்பதால் பொதுவாகவே விலகி இருப்பேன். நாம் மேற்கோள் காட்டும் எது குறித்தும் புரிதல் இல்லாமல் மீண்டும் மீண்டும் வேறொன்றைப் பேசுவார்கள். அது என்னை அலுப்படைய வைக்கும். ஆனாலும் பொது அரங்குகளில் இதுபோன்றவர்களின் குரல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே பாலுமணிமாறனின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். முதல்நாள் இரவில் பார்த்த வாகன ஓட்டி நினைவுக்கு வந்தார்.

பூச்சோங் சேகருடன்...

  பூச்சோங் சேகருடன்…

அரங்கு முடிந்ததும் பூச்சோங் எம்.சேகரைச் சந்தித்தேன். முகநூலில் பேசியது. அதே அன்புடன் தழுவிக்கொண்டார். அவரது ‘நீ என் நிலா’ சிறுகதை நூலை முன்பு வாசித்ததுண்டு. கமலா தேவி அரவிந்தன் அவர்களும் நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை அக்கறையுடன் பேசிக்கொண்டிருந்தார். அவரை ஒரு சிறுகதை ஆசிரியராக மட்டுமே என்னால் உள்வாங்க முடிகிறது. ‘நிகழ்கலையில் நான்’ என்ற அனுபவ நூலில் மிகையான உணர்ச்சி மேலோங்கி இருப்பதால் வாசிப்பதில் சிக்கல் உண்டு. ஆனால் அவரது சில சிறுகதைகள் கவனப்படுத்தப்பட வேண்டியவை.  கச்சிதமானவை. அருண் மகிழ்நன் அவர்களுடன் மதிய உணவுக்குச் சென்றோம்.

மின் நூல்கள்

20151107_235642

அருண் மகிழ்நன்

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 1965ஆம் ஆண்டுக்கும் அதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களை மின்னிலக்கமாக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டது குறித்து பேசினார். சிங்கப்பூரில் தமிழில் தான் இந்த முயற்சி முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை முன்னெடுத்தவர் அருண் மகிழ்நன். (http://eresources.nlb.gov.sg/printheritage/browse/Tamil_Digital_Heritage_Collection.aspx) தற்போது சிங்கப்பூரில் அறிவிப்புப் பலகைகள், வெளியீடுகள், விளம்பரங்களில் வெளிவரும் அனைத்துத் தமிழ் வாசகங்களையும் ஆவணப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் இதனைச் செய்வதாக அவர் குறிப்பிட்டார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு பொதுத் தளங்களில பயன்படுத்தப்படும் தமிழை ஆவணப்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டம். தமிழ் சாராத துறையில் பணியாற்றும் திரு. அருண் தமிழ் அமைப்புகள் எதற்கும் தலைவர் அல்ல. எனினும் தமிழ் கலை, இலக்கியம் தொடர்பான பெரு முயற்சிகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.

சிங்கை மலேசியச் சூழலில் தமிழர்கள் சிறுபான்மையினர். அவ்வாறான சூழலில் சமரசமற்ற முழு தீவிரத்துடன் இயங்குவதும் அனைவரையும் அனைத்துச்செல்வதும் இருவேறு முனை. நான் முதல் தரப்பு. பொதுவில் என்னுடன் நட்புள்ளதைக் கூற கூச்சப்படும், தங்கள் அரங்குகளுக்கு அழைக்கச் சங்கடப்படும், தங்கள் அமைப்புகளில் உரையாற்ற அழைக்க தவிர்க்கும்  நண்பர்கள் எனக்குள்ளனர். இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிய இந்தப் 12 ஆண்டுகளில் இதுவரை இரு நூல்களை மட்டுமே விமர்சனம் செய்ய அழைக்கப்பட்டுள்ளேன். என்னை அழைப்பதில் உள்ள சிக்கல் அவர்களுக்குத் தெரியும். தேளை எடுத்து வேட்டியில் விட்டுக்கொள்ள யாருக்குத்தான் விருப்பம் இருக்கும். ஆனால் அந்தக் கறார் தன்மைதான் இலக்கியம் குறித்த முன்னெடுப்புகளுக்கு பொதுப் பரப்பில் நம்பிக்கையை விதைக்கிறது. அது மட்டுமே உண்மையை விரும்பும் இளைஞர்களை உள்ளிழுக்கிறது.

அதேபோல பல்வேறு சமயங்களில் நோக்கம் பிசகாத அரவணைக்கும் ஆளுமைகளாலும் புதிய முயற்சிகளை உருவாக்க முடியும். அருண் மகிழ்நன் அவ்வாறான மற்றுமொரு தரப்பு. அவரால் அதுபோன்ற புதிய முயற்சிகளை உருவாக்க முடியும் என்று தோன்றியது. சிங்கப்பூரில் கடந்த 50 ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் தமிழ் நூல்களை மின்னிலக்கமாக்கும் பணிக்கு 150க்கும் அதிகமான ஆசிரியர்களைத் திரட்ட முடிந்தது இந்த எண்ணம் எழ காரணமாக இருக்கலாம்.

இன்று மின் நூல்கள் தமிழில் அதிகம் வரத்தொடங்கியுள்ளன. ஆங்கிலத்தில் மின்நூல்கள் நல்ல விலையில் விற்கப்பட்டு எழுத்தாளர்களுக்கு ராயல்டியும் கிடைக்கிறது. இன்று தமிழ் இலக்கியம் குறிப்பிட்ட நாட்டின் எல்லைகளைக் கடந்துள்ள நிலையில் இம்முயற்சியில் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை ராயல்ட்டியாகக் கொடுத்தால் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் சமகாலத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் நூல்களை மின்நூல்களாக மாற்றுவதைவிட கிடைப்பதற்கு அறிய நூல்களை அவ்வாறு செய்திருந்தால் வரலாற்றில் கவனிக்கத்தக்க இடம் அவ்வுழைப்புக்குக் கிடைத்திருக்கும் எனத் தோன்றியது. சிங்கப்பூர் உருவான நாளிலிருந்து ஐம்பது ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துசெய்வது ஒருவிதத்தில் அரசாங்கம் ஆதரிக்கும் ஒரு செயல்திட்டம். சிங்கப்பூர் உருவானதை அடையாளப்படுத்தும் ஒரு துணை முயற்சி. இந்த முயற்சியை கிடைப்பதற்கு அறிய இதழ்கள், நூல்கள் மூலம் முழுமைப்பெருவதாக மாற்றுவதே அந்த மொழியில் இயங்குபவர்கள்  செய்ய வேண்டிய நகர்ச்சி.

ஒரு முயற்சி ஏன் செய்யப்படுகிறது என்பது முக்கியமான கேள்வி. அம்முயற்சி வரலாற்றில் என்னவாக இடம் பிடிக்கிறது எனவும் யோசிக்க வேண்டியுள்ளது. சிறுபான்மை சமூகத்தில் இந்தக்கவனம் எப்போதுமே இருக்க வேண்டியுள்ளது.  ஆனால் இதுபோன்ற அறிய முயற்சிகளில் உடனடியான முழுமையை எதிர்பார்ப்பதும் சிக்கல்தான். மேலும் ஒருநாட்டின் சூழலையும் ஒரு செயலின் பின்னணியையும் அறியாமல் கருத்துக்கூறுவது அபத்தம் என்பதால் இதுபோன்ற முயற்சியை மலேசியாவில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என மட்டும் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

சிங்கப்பூர் சூழலில் அடுத்த தலைமுறை உருவாக சிந்தனைக்கான மையங்கள் உருவாக வேண்டும் என என் கருத்தைக் கூறினேன். அருண் மகிழ்நன் டாக்டர் சித்தார்த்தனை அவ்வாறான தலைமுறையை உருவாக்கக்கூடிய ஆளுமை என்றார். நாடகக் கலைஞர் மௌனகுரு அவர்களின் மகனான சித்தார்த்தன் அமைதியாகச் சிரித்துக்கொண்டிருந்தார்.

விஜயலட்சுமியிடன் ‘நூலகம்’ அகப்பக்கம் (www.noolaham.org) குறித்து பலமுறை பேசியதுண்டு. இலங்கை நூல்களின் பாதுகாப்பு மையமாக இருக்கும் அதுபோன்ற ஒரு தளத்தை நூலகரான அவர் உருவாக்குவது குறித்தான தேவையை அவரும் உணர்ந்தே வைத்திருந்தார். இந்த உரையாடல் அவருக்குப் பயனாக இருந்தது. மேலும் மலேசியாவில் அது போன்ற முயற்சிகள் நடந்தால் எப்படி எழுத்தாளர்களின் உரிமையையும் வரலாற்றின் தேவையையும் ஒருங்கே பாதுகாப்பது என வழிநெடுகிலும் பேசிக்கொண்டிருந்தார். தங்கள் நூலகத்தைப் போரில் இழந்த ஈழ எழுத்தாளர்களுக்கு இது போன்ற மின் நூல் சேமிப்பு வேறொரு மனநிலையையும் முழுக்கவே அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் உருவாகியிருக்கும் சிங்கப்பூர் மின் நூல் சேமிப்புத் தளம் சிங்கை எழுத்தாளர்களுக்கு வேறொரு மனநிலையையும் கொடுப்பது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். இவ்விரு அனுபவங்களையும் கொண்டு கவனமாக மலேசியாவில் அதை உருவாக்கும் தேவை ஒரு வரைபடம் போல தோன்றிக்கொண்டிருந்தது.

வாசகர் வட்டம்

மதியம் வாசகர் வட்டத்துடனான நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்க இல்லத்தில் நிகழ்ச்சி. டாக்டர் ஶ்ரீலட்சுமிதான் எங்களை வழியனுப்பவும் அழைத்துச்செல்லவும் என சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அவரை ஐந்து ஆண்டுகளாக அறிவேன். மாறாத அன்பு கொண்டவர். ஒரு திறன்மிக்க கல்வியாளரின் தன்மைகளை பலமுறை அவரிடம் கண்டதுண்டு. தீவிரமான வாசகர்.  சரியான நேரத்தில் நாங்கள் சேர்ந்திருந்தோம். நண்பர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். ஷாநாவாஸ் அணைத்துக்கொண்டார். ஆறு வருடங்களுக்கு முன் பார்த்தது. ஆச்சரியமாக எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அங்கு இருந்தார். நிகழ்வை அறிந்து வந்ததாகக் கூறினார். இராம கண்ணபிரான் அவர்கள்தான் மும்முரமாக இயங்கினார். பலவருடம் கழித்தே அவரைப் பார்க்கிறேன். இடைவெளி தெரியவில்லை. நேற்று பேசியதுபோல இருந்தது. மனதுக்கு நெருக்கமானவர்களிடம் பலமுறை இத்தகையச் சூழலை அனுபவித்ததுண்டு. கால இடைவெளி என்பது சட்டென ஒரு புகை போல பறந்து மறைந்தேவிடும்.

12204810_10203895672986748_1365376602_nஏறக்குறைய 15 பேர் வந்திருந்தனர். இரண்டு நாள்களில் தீபாவளி. காலையிலும் மாலையிலும் அவ்வளவு பேர் வந்ததே ஆச்சரியமாக இருந்தது. நூல்கள் விரிவாக விமர்சிக்கப்பட்டன. சித்ரா ரமேஷ் அவர்களின் வாசிப்பின் விசாலம் அவ்வப்போது அவர் பேச்சில் வெளிபட்டுக்கொண்டே இருந்தது. இராம கண்ணபிரான் அவர்கள் வழக்கம்போல நேர்த்தியாக எழுதி தெளிவாக வாசித்தார். எம்.கே.குமாரின் பேச்சை அப்போதுதான் முதன்முதலாகக் கேட்டேன். சிரித்துக்கொண்டே பேசினார். பொதுவாக அவ்வாறான சிரிப்பைத் தீவிரத்தின் மேல் பூசி வைக்கும் தற்காலிக ஒப்பனையாக நான் உபயோகிப்பதுண்டு. குமார் குறித்து தெரியவில்லை. இன்னும் பேச வேண்டிய மனிதர் என்று மட்டும் தோன்றியது.  ஷாநாவாஸ் நூலை ஒட்டி இல்லாமல் பொதுவான தனது வாசிப்பு மனநிலையில் தயாஜியின் எழுத்தை அணுகிய விதம் குறித்து பேசினார். நாங்களும் எங்கள் கருத்துகளைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டோம். plagiarism குறித்த சில விவாதங்கள் எழுந்தன. உற்சாகமாக இருந்தது.

நூல்களை விற்பதில் எனக்குச் சங்கடம் இருந்தது. நான் இந்தச் சந்திப்பை சித்ரா ரமேஷ் அவர்களிடம் ஏற்பாடு செய்யச் சொன்ன காரணம் உறவுகளை வலுப்படுத்தவே. அதன் மூலம் புதிய முன்னெடுப்புகளை உருவாக்க நினைத்தேன். பொருளியல் சிந்தனை எப்போதும் இதுபோன்ற நெருக்கத்திற்குத் தடை. ஏற்கனவே பலரும் நூலை வெளியிட்டு சம்பாதிக்கும் நோக்கத்தில்தான் சிங்கை செல்கின்றனர். எனவே என் நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தேன். எனக்கு நூல்கள் சென்று சேர்ந்தால் போதுமானது.

இரு நிகழ்ச்சிகளிலும் நான் அழகுநிலாவைச் சந்தித்தேன். அவரது ஆறஞ்சு சிறுகதை தொகுப்பை முன்னமே கேட்டிருந்தேன். உற்சாகமானவர். அவர் தொகுப்பு குறித்து விரிவாக எழுதவேண்டும்.

நிகழ்ச்சி முடிந்து நண்பர் ஷானாவாஸ் உணவுக்கடைக்குச் சென்றோம். தொடர் பேச்சுகள். எனக்கு உள்ளுக்குள் குற்றஉணர்ச்சி அழுத்திக்கொண்டே இருந்தது. இத்தனை ஆண்டுகளாக சிங்கை எழுத்தாளர்களைக் கவனப்படுத்துவதிலும் அவர்களுடன் உரையாடுவதிலும் மெத்தனமாகியிருந்தததை நண்பர்களிடம் சொல்லி நொந்துகொண்டேன். அடுத்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியவாதிகளை மலேசியாவுக்கு அழைப்பது குறித்து பேச்சுகள் எழுந்தன. பாண்டியன் அன்று மாலையே மலேசியா புறப்பட்டார். நானும் தயாஜியும் Geylang சென்றோம்.

Geylang

geylandஅது சிங்கப்பூரின் சிவப்பு விளக்குப் பகுதி. டாக்சி ஓட்டியிடம் சொன்னபோது ஒருமாதிரியாகப் பார்த்தார். இறங்கி வீதியில் நடந்தோம். ஆங்காங்கு வாடிக்கையாளர்களுக்கு தரகர்கள் காத்திருந்தனர். அகலமான வீதி. மலேசியாவின் சௌக்கிட் போல அருவருப்பான வாடை எங்குமே இல்லை. நான் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள இருண்ட பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். ஜோக் ஜகார்த்தாவில் அவ்வாறான இடமே இல்லை என வழிகாட்டிக்கூறியவுடன் பயணமே சுவாரசியம் இல்லாமல் போனது.

ஒரு நாட்டை முழுமையாக அறிய அதன் இருண்ட பகுதிகளுக்கும் செல்வதுதான் வழி. ஃபிரான்ஸில் ஷோபாசக்தியிடம் கற்ற பாடம் அது. சிங்கப்பூர் என்ற தேசத்தின் இருண்ட பகுதி மிகப் பரபரப்பாகவே இருந்தது. இடையில் தனியாக ஒரு பங்களா இருந்தது. தமிழ்ப்படங்களில் அதுபோன்ற பங்களாவுக்குள் நுழைந்தால் வண்ணக்கோலங்களில் நங்கைகள் ஆடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் நுழைந்தபோது ஒரு சீனப்பெண் தூங்கி வழிந்த முகத்துடன் என்ன என்பதுபோல பார்த்தாள். ஒன்றுமில்லை என்றுவிட்டு அகன்றோம். அதிகம் வெளிநாட்டினர் குழுமியிருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் முனைப்பாக இருந்தனர். சிலர் பெண்களிடம் விலையை பேரம் பேசி கெஞ்சுவதைப் பார்க்க முடிந்தது. நள்ளிரவைத்தாண்டி அறைக்கு வந்து சேர்ந்தோம்.

சிங்கப்பூர் தேசிய நூலகம்

IMG-20151108-WA0003

தி ஆர்ட்ஸ் ஹவுஸ்

மறுநாள் திட்டமிட்டபடி தேசிய நூலகத்திற்குச் சென்றோம். விஜயலட்சுமியும் தயாஜியும் அதைப் பார்வையிட வேண்டும் என நான் விரும்பினேன். புஷ்பலதா அவர்கள் விடுமுறையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி இருந்தார். நூலகம் முழுக்கவும் சுற்றிக்காட்டினார். விரிவாக விளக்கினார்.  மீண்டும் தி ஆர்ட்ஸ் ஹவுஸ் சென்றோம். எனது நூலையும் பாண்டியன் நூலையும் விற்பனைக்கு வைத்திருந்தனர். கணிசமான நூல்கள் விற்றிருந்தன. மதியம் சிராங்கூன் சாலையில் நடந்தோம். தீபாவளி பரபரப்பு எங்கும் இருந்தது. கிள்ளான், பிரிக் பில்ட் சாலைகளைவிட நீளமானது சிராங்கூன் சாலை. சட்டென தமிழகத்தில் நுழைந்தது போல உணர்வு.

இரவு 10.30 மணிக்கு இரயில். சீக்கிரமாகவே புறப்பட்டோம். இரயிலில் தூங்கியபடி செல்லும் வகையில் மெத்தை இருக்கை. மேல் தளத்தில் ஏறி படுத்தேன். ஆறஞ்சு சிறுகதை நூலை எடுத்துப் புரட்டினேன். சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களால் மட்டுமே உருவாக வேண்டும் என்ற வரட்டுப் பிடிவாதமெல்லாம் தேவையில்லை என்றே தோன்றியது. கலை இலக்கியம் என்ற தளத்தில் இயங்குபவர்களை இணைப்பதன் மூலமும் தொடர்ச்சியான உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலமே அடுத்தடுத்த நகர்ச்சியை ஏற்படுத்த முடியும் எனத்தோன்றியது. மிக விரைவில் அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும்.

(Visited 573 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *