“எனது பெருங்கோபமும் பேரழுகையும் எனக்குள் இருக்கும் கவிஞனிடமிருந்துதான் எழுகின்றன.”

naveen pixகேள்வி : சிறுகதையில் இருந்துதான் உங்கள் இலக்கியப் பயணம் தொடங்கியதாக அறிகிறேன். ஆனால் உங்களின் ஆறாவது நூலாகத்தான் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது, காரணம் என்ன?

ம.நவீன் : எனது சிறுகதைகள் குறித்த எவ்வித உயர்ந்த மதிப்பீடும் எனக்கு இல்லாதது ஒரு காரணம் என்றால் அவ்வுணர்வு ஏற்பட நான் தேடித்தேடி வாசித்த நல்ல சிறுகதைகள் மற்றுமொரு காரணம். இயல்பாகவே நமக்குள் இருக்கும் வாசகமனம் எப்போதுமே நம் படைப்புகளில் நுழைந்து ஒப்பீடு செய்வது இயல்பு. அவ்வொப்பீடு சிறு தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நம்பும் நல்ல வாசகர்கள் நமது படைப்பு குறித்து ஆக்ககரமான கருத்துகளைக் கூறி ஊக்கம் தருகையில் அத்தயக்கம் மெல்ல அகல்கிறது. அவ்வாறான ஊக்கம் எழுத்தாளர் இமையம் வழி கிடைத்தது.

கேள்வி : உங்களின் பெரும்பாலான சிறுகதைகளில் சிறுவர் கதாப்பாத்திரம் வரக் காரணம் என்ன?

ம.நவீன் : எனக்கு மிக விரிந்த வாழ்க்கை அனுபவம் இல்லை. ஓரளவு அடர்ந்த அனுபவத்துடன் நான் வாழ்ந்ததாகக் கருதுவது சிறுவனாக இருந்தபோதுதான். தடைகள் இல்லாமல் வீட்டைச் சூழ்ந்திருந்த காடுகளைச் சுற்றிய அனுபவம் எனக்குண்டு. கம்பமும் தோட்டமும் சிறுநகரமும் மாறிமாறி எனக்குக் கொடுத்த வாழ்க்கை அனுபவங்களே சிறுகதைகளாக வருகின்றன. நான் அதில் சிறுவனாகவே இருக்கிறேன். நீங்கள் சிறுகதையில் காணும் சிறுவனுக்குள் நிச்சயமாக நான் சில சதவிகிதமாவது இருக்கிறேன்.

கேள்வி : உங்கள் சிறுகதைகளில் வரும் மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் உங்களுக்குமான உறவுநிலை என்ன?

ம.நவீன் : பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் நான் எனது சிறுவயதில் பார்த்து பழகிய மனிதர்கள். ஓலம்மா, கொய்த்தியோ மணியம், ஓலை, பிளாக்காயன் என அனைவருமே நான் தொட்டுப்பழகியவர்கள். இன்னும் சொல்வதானால் ஒலி சிறுகதையில் வரும் அனைத்துச் சம்பவங்களும் நான் பிறந்த லுனாஸ் என்ற சிற்றூரில் இன்றும் பேசப்படும் கசப்பான வரலாறு.  முழுக்கவே புனைவாக சில கதாபாத்திரங்களை உருவாக்க முயன்றதுண்டு. எனக்கு அந்தத் தொழில்நுட்பம் இன்னும் கைவரவில்லை என்றே நினைக்கிறேன்.

கேள்வி : உங்கள் சிறுகதை வளர்ச்சிக்கு துணை நின்றவர்கள் குறித்து கூறுங்கள்?

ம.நவீன் : என்னை அடையாளம் கண்டவர் எம்.ஏ.இளஞ்செல்வன். எனக்குத் தொடர்ந்து ஆர்வம் கொடுத்தவர் கோ.புண்ணியவான். என் இலக்கை மாற்றி அமைத்தவர் மா.சண்முகசிவா. எப்படிப்பட்ட ஆளுமைகள் பாருங்கள்! உண்மையில் வேறு யாருக்கும் இப்படியான அருகாமை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அதேபோல ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா, இமையம் போன்றவர்களின் விமர்சனமும் ஊக்குவிப்பும் எப்போதுமே என்னைத் தளராமல் பாதுகாத்தது, மாற்றுச்சிந்தனைக்கும் கலை நுட்பத்திற்கும் வழிகாட்டியது.

கேள்வி :  தொடர்ந்து சமூகம் சார்ந்தும் கல்வி சார்ந்தும் பல நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டு வருகின்றீர்கள், இதற்கிடையில் உங்களால் உங்களின் படைப்பு மனதை தக்கவைக்க முடிவது எவ்வாறு சாத்தியமாகிறது?

ம.நவீன் : செயல்படும் அடிப்படை நோக்கம்தான் காரணம் என நினைக்கிறேன். நான் நல்ல கலை இலக்கியங்களை சமூகத்தின் முன் அடையாளம் காட்ட நினைக்கிறேன். இந்தப்பணி எனக்கு உவப்பானது. அவ்வாறு நல்ல கலை இலக்கியங்களை முன்னெடுக்கும்போது என்னிடமிருந்து எழும் ஆக்கங்களையும் இணைத்தே முன் வைக்கிறேன். அதேசமயம் இளம் தலைமுறைக்குப் படைப்பிலக்கியத்தில் ஆர்வம் ஏற்படவும் கற்பனையாற்றல் வளரவும் ‘யாழ்’ எனும் பதிப்பகம் மூலம் நண்பர்களுடன் இணைந்து செயல்படுகிறேன். இவை எல்லாமே அடிப்படையில் ஒரு காரணத்தில் இருந்தே முளைக்கின்றன. மலேசியச் சூழலில் காலி இடங்கள் அதிகம். அதிலும் பலவற்றில் போலியானவர்களே நிரம்பி வழிகிறார்கள். நான் போலிகளைத் துடைத்துவிட்டு அந்த இடத்தில் நல்ல கலைஞர்களை முன்வைக்க நினைக்கிறேன். வருங்கால வாசகர்களை உருவாக்குகிறேன். பெரியார் சொல்வதுபோல, வேறு யாரும் இதைச் செய்யாததால் நான் செய்கிறேன். எனவே நான் எழுதுவது உட்பட நான் இயங்கும் அனைத்து துறைகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டதுதான்.

கேள்வி : பத்தி கட்டுரை போன்ற உரைநடை சார்ந்து இயங்கிகொண்டிருக்கும் நீங்கள் சிறுகதை என்ற மற்றுமொரு உரைநடை வடிவத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

ம.நவீன்: கட்டுரை நெருங்கமுடியாத உணர்வு நிலையையும் பத்திகள் அடையமுடியாத உணர்வின் இடைவெளியையும் சிறுகதைகள் நிரப்புவதால்.

கேள்வி : பதிப்பாசிரியர், இதழாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், பத்தி எழுத்தாளர் இதில் உங்களுக்கான அடையாளமாக எதை சொல்லுவீர்கள்?

ம.நவீன் : நான் எப்போதுமே கவிஞன்தான். நான் அப்படித்தான் சிந்திக்கிறேன். அத்தனை உணர்ச்சி நிலையில் இருக்கிறேன். எனது பெருங்கோபமும் பேரழுகையும் எனக்குள் இருக்கும் கவிஞனிடமிருந்துதான் எழுகின்றன. ஒருவரி எழுதாத காலக்கட்டத்திலும்கூட கவிஞனாகவே வாழ்கிறேன்.

கேள்வி : தேசிய அளவில் நடந்த நாவல் போட்டியில் பரிசு பெற்றவரான நீங்கள் அதனை இன்னும் புத்தக வடிவமாக்காததற்கு காரணம் என்ன?

ம.நவீன் : நான் தொடக்கத்தில் சொன்னதுபோல நமது வாசக மனமே ஒருபடைப்பின் தரத்தைத் தீர்மானிக்கிறது. அந்த நாவல் போட்டிக்கு நடுவர்களாக இருந்த பிரபஞ்சன் மற்றும் திலீப் குமாரோடு உரையாடிய அந்தச் சூழலிலேயே என் வாசிப்பு மனநிலை  தீவிரம் அடைந்தது. தொடர்ச்சியாகப் பல நாவல்களை வாசித்ததில் என் நாவலின் தரம் என்ன என்று உணர்ந்தேன். ஒரே வருடத்தில் என் நாவல் எனக்கு சாதரணமாகத் தோன்றியது. நான் என் படைப்புகளை மலேசிய நாவல் முயற்சிகளுடன் மட்டும் ஒப்பிட்டுப்பார்த்து அதை நூலாக்க விரும்பவில்லை. ஆனால் இப்போது புதிய நாவல் முயற்சியில் உள்ளேன்.

கேள்வி : உங்களுக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரை மட்டும் சொல்ல முடியுமா?

ம.நவீன் : ஷோபா சக்தி

கேள்வி : மலேசியாவில் உள்ள பிற இலக்கிய இயக்கங்களோடு நீங்கள் விலகியே இருக்க என்ன காரணம்?

ம.நவீன் : எந்தஒரு முயற்சியும் பகட்டுக்காகவும் ஆணவத்திற்குத் தீனி போடுவதற்காகவும் இருக்கக்கூடாது என்பதில் எனக்குப் பிடிவாதம் உண்டு. மேடையில் ஆளாளுக்கு மாலை போட்டுக்கொள்வதாலும் பாராட்டிக்கொள்வதாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை. நான் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வேர்வரை சென்று அதில் உள்ள கசடுகளை அகற்ற நினைக்கிறேன். கலை என்பது அதிகாரத்துக்கு எதிர்ப்பாகச் செயல்பட வேண்டும் என நம்புகிறேன். இங்குள்ள பெரும்பாலான இயக்கங்கள் அதிகாரத்தின் தோளில் கைபோட்டுதான் பயணிப்பேன் என முடிவு செய்திருப்பவை, நான் அதற்கு எதிர்ப்புக்கூற முடியாது. ஆனால் விலகி இருக்கலாம்.

கேள்வி : மலேசியப் படைப்புகளைத் தமிழ்நாட்டுப் படைப்புகளோடு ஒப்பிடுவது எந்த அளவுக்குச் சரி?

ம.நவீன் : இதைப் பலரும் பல காலமாகப் பேசி வருகிறார்கள். எந்த நாட்டுப் படைப்பையும் பிற நாடுகளோடு ஒப்பிட வேண்டியதில்லைதான். ஆனால் உலகில் உள்ள ஆக்கங்களில் மீண்டும் மீண்டும் பேசி சிலாகிக்கப்படும் கலை வடிவத்தில் உள்ளதா என்பதே முக்கியம். சீ.முத்துசாமியின் படைப்பையோ, அ.ரெங்கசாமியின் படைப்பையோ அல்லது மஹாத்மனின் படைப்பையோ தமிழகத்தோடு யாரும் ஒப்பிட்டுப் பேசவில்லை. அது இந்த நிலத்தின் சூழலில் எழுந்த முக்கிய ஆக்கங்களாக பலராலும் பாராட்டப்படுகிறது. எனவே அவை தமிழகம் உள்ளிட்ட பல நாடுகளிலும் கவனம் பெறுகின்றன. இங்கு கலை வடிவம் குறித்து அக்கறை இல்லாதவர்களும் வாசிப்பு முயற்சி இல்லாதவர்களும் தங்களின் மொண்ணையான படைப்புக்கு தாங்களே வக்காலத்து வாங்க தமிழகப் படைப்போடு ஒப்பிட வேண்டாம் என்பது எரிச்சலை மூட்டுகிறது. தமிழகப் படைப்போடு ஒப்பிடுதல் என்பது மொழியும் உத்தியையும் மட்டும்  சார்ந்ததல்ல.

சந்திப்பு : ஶ்ரீதர்ரங்கராஜ்

(Visited 180 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *