அண்மையில் ‘எங் கதெ’ என்ற இமையத்தின் நாவல் குறித்து நண்பர்கள் பலரிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். நாவலின் உள்ளடகத்தில் எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும் என்னை வியக்க வைத்தது அவரது மொழி. மிகக் கடினமான உளவியல் இறுக்கங்களை ஒரு டால்பின் மீன் போல கடலில் சலனத்தை படரவிட்டு தாவித்தாவி கடந்துவிடுகிறார். அது இலக்கியத்திற்குத் தேவையான மொழி.
புனைவிலக்கியத்தில் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஓரளவு எம்.ஏ.நுஃமானின் நூல்களில் கற்றதுண்டு. பெரும்பாலும் இலக்கிய வாசிப்புப் பயிற்சியே அதற்கு உதவுகின்றன. ஒரு படைப்பாளன் சொல்கின்ற மொழியை அப்படியே கிரகித்துதான் வாசகன் அதை உள்வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இலக்கியத்தில் மொழி தனக்கான வேறு சில அர்த்தங்களையும் கொண்டிருக்கும். உதாரணமாக ஓர் அறிவியல் கட்டுரைக்கும் ஓர் இலக்கியப் படைப்புக்குமான மொழியையே வேறுபடுத்திப்பார்க்கலாம்.
தரவுகளைத் தொகுத்தும் பகுத்தும் வரையறைகளை முன்வைக்கும் மொழி அறிவியலது என்றால் பொருள்மயக்கம் வழியாகச் செயல்படுவது இலக்கியத்தின் மொழி. இவை இடம் மாறி பயன்பட்டால் எப்படி இருக்கும் என கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். மாதங்கியின் ‘ஒரு கோடி டாலர்கள்’ சிறுகதை தொகுப்பை வாசித்தபோது அவரது மொழி குறித்தே அதிகம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
மாதங்கியின் சிறுகதைகளை வாசிக்கும்போது தடையாக உள்ளது அவரது மொழிதான். அவர் எதையுமே விரிவாகச் சொல்ல நினைக்கிறார். வாசகனுக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற பதற்றம் அவர் சொல்லும்விதத்தில் எப்போதும் நிறைந்துள்ளது. அவை சலனமற்ற திரைப்படங்களின் காட்சிபோல சிறுகதைகளில் வந்து போகின்றன. உதாரணமாக ஒரு திரைப்படத்தின் காட்சியமைப்பைச் சொல்லலாம். ஒரு பெண், பானையைக் கழுவிக்கொண்டிருக்கும்போது ஒரு காதலன் பின்வந்து கட்டியணைக்கும் காட்சி படமாக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். இந்தக் காட்சியைத் திரையில் கொண்டுவர விரும்பும் ஓர் இயக்குனர் அந்தப் பெண் பானையை எப்படிக் கழுவுகிறாள்; அவள் சுத்தமாகக் கழுவுகிறாளா என நெடுநேரம் காட்டிக்கொண்டிருந்தால் எப்படிப் பார்வையாளனுக்கு எவ்வித சலனமும் இருக்காதோ அதேபோல மாதங்கியின் பல கதைகளில் தேவையற்ற காட்சிகள் வந்து போகின்றன. ஓர் இயக்குனர் அக்காட்சியை எவ்வளவு தத்ரூபமாக அமைத்தேன் என வாதிடலாம். ஆனால் திரைக்கதைக்குத் தேவையில்லையெனில் அத்தனை அற்புதமும் கலைக்குச் சுமைதான். மொழிச்செறிவே ஒரு சிறுகதையைப் படிக்க தூண்டும். மாதங்கியின் கதைகள் அதையே அதிகம் இழந்திருக்கின்றன.
சிறுகதையின் போக்கை அது உருவான காலத்திலிருந்து அறிய, ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவை வாசிப்பதன் மூலமாகவே முயன்றுள்ளேன். வாழ்வில் சட்டென காணும் ஓர் திருப்பத்தை இவர் கதைகள் உருவாக்கித்தந்தன. அதன்பின் குல்ஸாராக இருக்கட்டும் மண்டோவாக இருக்கட்டும் தமிழில் வண்ணநிலவன், வண்ணதாசன் அல்லது பிரபஞ்சனாகவே இருக்கட்டும்; பல எழுத்தாளர்களுக்கும் இது உவப்பான ஓர் வடிவமாகவே இருந்துள்ளது. ஆனால் இலக்கியம் என்பது அப்படி தேங்குவதல்லவே. அதன் வளர்ச்சி அவ்வாறு இறுகிப்போன வடிவத்தை உடைத்துக்கொண்டு வாழ்வின் அர்த்தமின்மைகளையும், இருண்மைகளையும், மனதின் உள்ளடுக்குகளையும் பேசத்தொடங்கியது. ரேமண்ட் கார்வர், மாப்பஸான், ஹெமிங்வே, அல்பேர் காம்யூ எனத்தொடங்கி தமிழில் ஷோபாசக்தி, சு.வேணுகோபால் என இப்படி ஒரு பட்டியல் நீண்டது.
அதே சமயம் இவ்விரு பாணி எழுத்துகளின் ஆழம் அறியாமல் அதன் புற வடிவை மட்டும் கிரகித்துக்கொண்டு அதை ஓர் இலக்கணம் போல பிரயோகித்து சிறுகதை எழுதும் போக்கும் தமிழ்ச்சூழலில் நிலவி வருகிறது. மாதங்கியின் இந்தத் தொகுப்பிலும் அவ்வாறான ஓர் போக்கையே பல கதைகளில் காண முடிகிறது. ‘கண்ணில் காண்பதெல்லாம்’, ‘அந்த மலர்க்கூட்டம்’, ‘எஃப். கெ.லிம்மின் மூன்றாவது கண்’, ‘சாதாரண மனிதன்’ ஆகிய சிறுகதைகளை இந்தப்பட்டியலில் இணைக்கலாம். ஒரு கருத்தைச் சுமந்து திரியும் கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அந்தக் கருத்துக்கு எதிரான ஒரு சூழலைச் சொல்லி முடிக்கும் முறையில் பெரும் சலிப்பான தகவல்களைத் தாங்கி எழுதப்பட்ட கதைகள் இவை.
பொதுவாகவே இயக்குனர் சங்கர் திரைப்படங்கள் எனக்குப் பிடிப்பதில்லை. முதலில் அவற்றில் கலை அம்சம் இல்லை; மற்றது அதில் பிரமாண்டமும் இல்லை. சாலையில் சாயம் அடிப்பதும் பானைக்குப் புடவைக்கட்டுவதும்தான் பிரமாண்டம் என்றால் கலை அம்சத்துடன் பிரமாண்டத்தை இணைக்கும் ஜேம்ஸ் கேமரூன் அல்லது வணிக அம்சத்துடன் பிரமாண்டத்தைக் காட்டும் எஸ்.எஸ். ராஜமெளலியும் நாக்கைப் பிடுங்கி சாக வேண்டும். இலக்கியம் அல்லது திரைப்படம் எனும் கலை வடிவத்தில் கதையின் தேவைக்கேற்ப மிகைக் கற்பனையை உபயோகிக்கலாமே ஒழிய அதை மையப்படுத்தினால் சங்கரின் பாடல் காட்சிகள்போல செயற்கையாக இருக்கும்.
மாதங்கி மிகைக் கற்பனையில் புனைவுகளை எழுத முனைந்துள்ளார். ‘சிங்கப்பூர் 2086’, ‘புரு’, ‘ஓர் உன்னத தினம்’, ‘பயன்பாட்டில் இல்லாத மிதிவண்டி’ ஆகிய சிறுகதைகளை இந்த ரகத்தில் சேர்க்கலாம். அவரிடம் சொல்வதற்கு ஒரு விசயம் உள்ளது. உறவுகளை இழந்துப்போகக்கூடிய வருங்காலம், பூமியின் அவல நிலை, நவீன வாழ்வு என அவரின் சிந்தனையில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் மிகை புனைவுக்குத் தீவிரமான, எல்லைகளை வகுத்துக்கொள்ளாத கற்பனை தேவைப்படுகிறது என்றே நினைக்கிறேன். அந்த மிகை கற்பனை புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்ற நுண்ணிய அவதானிப்பும் சொல்லக்கூடிய ஒவ்வொரு தகவலிலும் செலுத்தவேண்டிய கவனமும் முக்கியமானவை. மாதங்கியின் இந்தச் சிறுகதைகளில் கதையைத் துருத்திக்கொண்டு மிகைக்கற்பனையே மேலே வந்து நிரம்பியுள்ளன. என்னால் அதை சங்கர் பாடல் காட்சி அளவிலேயே ரசிக்கவும் முடிகிறது. ‘ஒரு கோடி டாலர்’ (ஆசிரியர் ஒரு கோடி டாலர்கள் என தலைப்பிட்டுள்ளார். அது தவறான பயன்பாடு.) சிறுகதை மட்டும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.
ஆசிரியர் அதனை மாய யதார்த்த வகை எழுத்தாகக் குறிப்பிடுகிறார். உண்மையில் தமிழில் தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவலை வாசித்து அதன் மூலம் மாய எதார்த்தம் என ஏற்கனவே கோட்பாட்டில் அறிந்தவற்றோடு ஒத்துப்போவதைக் கண்டுள்ளேன். அதனை ஒரு மிகைக் கற்பனையை யதார்த்தவாதத்துக்கு உரிய சித்தரிப்பு முறையில் சொல்வது எனப் புரிந்துகொண்டுள்ளேன். ‘ஒரு கோடி டாலர்’ அப்படி எழுதப்படவில்லை. ஆனால் அது அந்தக்கோட்பாட்டின் கீழ்தான் அமைய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொகுப்பில் உள்ள நல்ல கதைகளில் அதையும் ஒன்றாகக் கூறலாம். முற்றிலும் இரு வேறு புதிய களம்.
‘தொல்படிவங்கள்’, ‘தோழன் குறும்படமும் ஒரு பின்குறிப்பும்’, ‘மர்ஃபி விதி,’ ஆகியவற்றை என்னால் சிறுகதைகளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘தொல்படிவங்களில்’ மையம் இல்லை. ‘தோழன் குறும்படமும் ஓர் பின்குறிப்பும்’ சீரியல் பாணியில் அமைந்துள்ளது. ‘மர்ஃபி விதி’ தகவலைச் சொல்லவே மெனக்கெடுகிறது.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் சிறுகதை தொகுப்புகளில் ஒரு நல்ல கதையைக் காண்பதே அரிதாகிவிட்ட சூழலில் மாதங்கியின் ‘ஒரு கோடி டாலர்கள்’ தொகுப்பில் குறிப்பிடத்தக்க முக்கியமான சிறுகதைகள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.
அவன் : இச்சிறுகதை திருப்பத்தையும் அதன் மூலம் வாசகனுக்கு கிடைக்கும் அதிர்ச்சியையும் மூலமாகக் கொண்டதுதான். இன்னும் சொல்லப்போனால் ஒரு அறக்கருத்தைச் சொல்ல எழுதப்பட்டது. இது ஒரு ஜனரஞ்சக சிருகதையும்கூட. ஆனால் அனைத்தையும் தாண்டி அது சொல்லப்பட்ட விதம் மிக சுவாரசியமானது. இன்று ஜனரஞ்சகமாக எழுதுவதாகச் சொல்லி தூங்க வைப்பவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய சிறுகதையாக இதைக் கூறலாம். இந்தச் சிறுகதையில் அவரது மொழியும் மிகக் கச்சிதமாகக் கையாளப்பட்டுள்ளது. இதே பாணியில் சுஜாதாவின் ஒரு சிறுகதையை வாசித்ததுண்டு. அது ஓவியத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும். மாதங்கியின் இக்கதை பெங்குவின்களின் வாழ்வை மையமிடும்போது கூடுதல் சுவாரசியம் ஆகிறது.
விழிப்பு : உறக்கம் வராத ஒருவன் தொடர்ந்து கதைக்கேட்கும் ஒரு குழந்தையின் சப்தங்களுக்கு நடுவில் உறங்குகிறான். நான் இந்தச் சிறுகதையை வாசித்து முடித்தப்பின் ஒரு கவிதை வாசித்ததுபோன்ற நிறைவு. தீர்ப்புகளோ, காரண விளக்கங்களோ இல்லாமல் வாழ்வை வாசகன் அவதானிக்க விஸ்தாரமாக இடம் ஒதுக்கியுள்ள சிறுகதை. கி.ராஜநாராயணன் எழுதியுள்ள ஒரு சிறுகதையின் நினைவு வந்தது. கசகசப்பு நிரம்பிய ஒரு பேருந்துக்குள் குழந்தை ஒன்று நுழைகையில் ஏற்படும் மாற்றத்தை சொல்லும்போது ஏற்பட்ட அதே உணர்வு இக்கதை முடிவிலும் கிடைக்கிறது. குழந்தை என்பது வளர்ந்த ஒருவனை எப்படி குழந்தையாக மாற்றுகிறது என நுட்பமாக எழுதியுள்ளார் எழுத்தாளர். செரிவாக்கினால் எந்த நல்ல தொகுப்பிலும் இணையும் சிறுகதை.
புரை : இத்தொகுப்பில் உள்ள மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறுகதை. மிக எதார்த்தமாக ஒரு நவீன குடும்பத்தையும் அதன் உரையாடல்களையும் கொண்டுவருவதோடு, பெண் என்பவள் குடும்பத்தில் நிபந்தனையின்றி கையாளப்படக்கூடிய பொருளாக எப்படி உருமாறுகிறாள் என சொல்லும் கதை. அத்தனையையும் துடைத்துப்போட்டுவிட்டு ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியோடு உற்சாகமாக வாழ்வை அணுகும் முந்தைய தலைமுறை பெண்களைப் பார்த்து ஆச்சரியப்படவைக்கும் உண்மையை எழுத்தாளர் சிறுகதையாக்கியுள்ளார்.
தீர்வை : உண்மையில் இச்சிறுகதையை மூன்று நான்கு முறை வாசித்தேன். அலுப்பான மொழிநடையால் நிராகரித்துவிட முடியாதபடி கதைக்குள் புகுந்துள்ள உணர்வுகள் இத்தொகுப்பில் இக்கதையில் மட்டுமே உள்ளது.
மாதங்கியின் இந்தத் தொகுப்பின் பலவீனம் அவரது விலாவாரியான வர்ணனை. அது கதையோடு பொருந்திபோகவில்லை. செகாவோ புதுமைப்பித்தனோ இரண்டு மூன்று பக்கங்களில் எல்லாம் நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளனர். சிற்பியின் ‘நகரம்’ என்ற கதையை எடுத்துக்கொள்வோம். எப்படிப்பட்ட நகரம் காவிரிப்பூம்பட்டினம்? ஆனால் அதன் சூழலை அதன் தோற்றத்தை ஒரே பத்தியில் கண்முன் கொண்டுவருகிறார். இதுதான் மொழி ஆளுமை. தேர்ந்தெடுக்கும் சொற்கள் மூலம் உருவாக்கும் கலை. இதேபோல ‘காஞ்சனை’, ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ எனும் சிறுகதைகளில் அவர் வாசகனுக்கு விடும் இடைவெளியைத்தான் இன்றைய எழுத்தாளர்கள் கற்க வேண்டியுள்ளது.
தேவையற்ற சொற்றொடர்கள் புனைவுக்குச் சுமை. சொற்களைச் சேகரிப்பதுதானே கலை.