கண்ணீரைப் பின்தொடர்தல்

சில நாள்களுக்கு முன் ஓர் அழைப்பு. சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் இருந்து மன்சூர் என்பவர் பேசினார். தன்னைத் தூக்குத் தண்டனைக் கைதி என அறிமுகம் செய்துக்கொண்டார். மின்னல் பண்பலையில் ‘வல்லினம்’ குறித்து இடம்பெற்ற எனது நேர்காணலை செவிமடுத்தப்பின் எண்களைக் குறிப்பெடுத்து அழைத்திருந்தார். ‘வல்லினத்தின் திட்டவட்டமான தூரம் என எதுவும் இல்லை; அது மாற்றுச்சிந்தனை கொண்ட இளைஞர்களை உருவாக்க செயல்படுகிறது. புகழுக்கும் பணத்துக்குமான குறிக்கோளை அடைந்தவுடன் துடிப்பாக உருவாக்கப்படும் பல செயல்வடிவங்கள் தீர்ந்துபோய்விடுகின்றன. வல்லினத்தில் அது இல்லை’, என்று நான் பேசியதைக் கோடிட்டவர் “என்னைச் சந்திக்க முடியுமா?” என்றார்.

எனக்கு எப்போதும் யாரையும் சந்திப்பதில் சிக்கல் இருந்ததில்லை. அதுவும் மன்சூர் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர் என்பதும் சிறையில் இருந்த ஐந்தாண்டுகளில் ஆறு நாவல்களை எழுதி பிரசுரிக்காமல் வைத்திருப்பதாகவும் தெரியவரவே விரைவில் சந்திப்பதாகக் கூறி இன்று (6.12.2015) பயணமானேன்.

காலையில் சிறைச்சாலைக்குச் சென்றவுடன் அதன் வாயிலிலேயே உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டது. நான் முறையான கடிதம் எதுவும் கொண்டுபோயிருக்கவில்லை. எல்லா ஏற்பாடுகளையும் மன்சூரே செய்து அனுமதி வாங்கியிருப்பதாகக் கூறியிருந்தார். அதிகாரிகள் யாரிடமும் அழைத்துக்கேட்கக்கூட நுழைவாயிலில் காவல் பணியில் இருந்தவர்கள் தயாராக இல்லை. முடியவே முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். வேறு வழித்தெரியாமல் மீண்டும் காரை நெடுஞ்சாலையில் விட்டப்பின் மன்சூர் அழைத்தார். குரலில் பதற்றம். என்னை மீண்டும் வரும்படியும் தான் உள்ளே ஒரு போராட்டமே நடத்திக்கொண்டிருப்பதாகவும் கூறினார். கொஞ்சம் குழப்பத்துடன் மீண்டும் காரை சிம்பாங் ரெங்காம் நோக்கி விட்டபோது எந்தத்தடையும் இல்லாமல் கார் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டது.

உண்மையில் மன்சூர் முறையாகவே அனைத்தையும் செய்திருக்கிறார். முறையான மீள்பார்வை இல்லாமல் என் வருகை நிராகரிக்கப்பட்டிருந்தது. நான் மன்சூரைப் பார்க்க ஆவலாக இருந்தேன். மடிக்கணினி உள்ளிட்ட அத்தனை பொருள்களையும் ஒரு லாக்கரில் பூட்டிவிட்டு உள்ளே அழைத்துச்சென்றனர். கொஞ்ச நேரத்தில் மன்சூரை கை விலங்கிட்டு அழைத்து வந்தனர். எங்கள் இருவருக்கும் இடையில் கண்ணாடி தடுப்பு. முகம் பார்க்கலாம். கண்ணாடியைத்தாண்டி குரலின் நிழலை மட்டும் கேட்கலாம். அங்கிருக்கும் தொலைப்பேசியின் மூலதான் பேசிக்கொள்ள வேண்டும். மன்சூர் தூக்குக்கைதி என்பதால் அவரது இடது கையில் விலங்கு அங்கிருக்கும் தூணில் பிணைக்கப்பட்டது. கண்முன் இருக்கும் ஒருவரிடம் தொலைப்பேசியில் பேசும் அனுபவம் தொடங்கியது.

“ரொம்ப சிரமப்படுத்திட்டேன். இங்க இப்படிதான். நான் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சும் ஏன் விடலன்னு கோபம். முஸ்லிமை பார்க்க முஸ்லிம்தான் வரணுமா என்ன? ஏன் எனக்கு வேறு மதத்தில் நண்பர்கள் இருக்கக்கூடாதா?”.

“எப்படி சிறையில் …”

“மலேசியான்னா என்னான்னே எனக்குத் தெரியாது. நான் நல்லா பிஸ்னஸ் செஞ்சிக்கிட்டிருந்தேன். அடிக்கடி சிங்கப்பூர் வந்திருக்கேன். ஆனால் கொஞ்சம் வியாபாரம் நொடிச்சப்ப மலேசியாவுல போய் வேலை செய்யலாமுன்னு தோணுச்சி. வரும்போது ஒருவர் ஒரு பேக்கைக் கொடுத்து மலேசியாவில சேர்த்துடச் சொன்னாரு. நான் நல்ல விவரமான ஆளுதான். ஒன்னுக்கு ரெண்டுதரம் முழுக்க பேக்க சோதிச்சேன். எல்லா சாதாரண பொருள்கள்தான்.”

“பின்ன எப்படி…”

“பேக்கு கொடுத்தவன் திறமைய உண்மையா பாராட்டனும். பேக்கோட அடியில ஒரு பகுதிய உருவாக்கி அதுல விஷம் போன்ற ஒரு திரவத்தைக் கடத்த முயன்றிருக்கிறான். எனக்கு விசயம் தெரியாம நானும் எந்தத் தடையும் இல்லாம மலேசியாவுக்குள்ள நுழைஞ்சி பேக்கையும் கை மாத்திட்டேன். ஆனா அதுக்குப் பிறகுதான் போலிஸ் என்னைப் பிடிச்சது. தூக்கு தண்டனையும் கொடுத்தது.”

“என்னை ஏன் பார்க்க நினைச்சீங்க…”

“நான் முன்ன குமுதத்துல சின்ன சின்ன கதைகள் எழுதியிருக்கேன். ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார் என பலரையும் படிச்சிருக்கேன். எனக்கு முன்னவே எழுதும் ஆசை இருக்கு. ஒரு முறை சிங்கப்பூர் வானொலியில கமலாதேவி அரவிந்தன் பேசினாங்க. அவங்களுக்கும் அழைச்சி பேசியிருக்கேன். அவங்க அப்பவே உங்கக்கிட்ட பேசச் சொன்னாங்க. அப்புறம் பத்திரிகையில வல்லினத்துல வந்த சிறுகதையால ஏற்பட்ட பிரச்சனைகள பார்த்தேன்.”

“உங்க வரைக்கும் அது தெரிஞ்சிருக்கே”

“இங்க நாளிதழ் மட்டும் படிக்கக் கிடைக்கும். தயாஜி எனக்கு பிடிச்சமான அறிவிப்பாளர். மண்டையில நல்ல விசயம் இருக்கு அவருக்கு. அவர் கதையால பிரச்சனையினு தெரிஞ்சப்ப ரொம்ப கோவம் ஆயிடுச்சி.  இலக்கியத்துல இதெல்லாம் சாதாரணம். தமிழகத்துல உள்ள கோயில்கள பார்த்திருப்பீங்க. மகாபலிபுரம் பார்த்திருக்கீங்கதானே”

“அது வேற ஒரு காரணத்துக்காக ஊடகங்கள் செய்த அரசியல். அதை விடுங்க. உங்க நாவல் பத்தி சொல்லுங்க.”

“இதுவரைக்கு ஆறு நாவல் எழுதியிருக்கேன். எல்லாமே தமிழ்நாட்டு வாழ்க்கைதான். எனக்கு மலேசியாவை தெரியாது. மலேசிய ஜெயிலையும் இங்குள்ள கோர்ட்டையும் தெரியும். வந்ததும் பிடிபட்டேன். மலாய் கத்துக்கிட்டேன். என் நாவலை நூலாக்கனும். அதுக்கு என் எழுத்துப்படிவங்கள் ஒரு சரியான ஆளோட கையில போகனுமுன்னு நினைச்சேன். ஏன்னா இங்க எப்ப என்னா நடக்குமுன்னு தெரியாது பாருங்க. நான் மேல் முறையீடு செஞ்சிருக்கேன். லோயருக்குக் கட்ட பணம் இல்லை. அதான் தீடீருனு தூக்குல போட்டுட்டாங்கனா ஒன்னும் பதிவு இல்லாம போயிடும் பாருங்க…”

“நான் படிச்சிப்பார்க்கிறேன்”

“படிச்சிப்பாருங்க. இங்க உள்ளுக்கு ஒரு ஏழு எட்டு தமிழவங்க படிச்சிப்பார்த்து ரொம்ப பாராட்டினாங்க. ஆனா அதை பெருசா எடுத்துக்க முடியாதுல்ல. ஒரு ஹாஸ்பிட்டலுக்கு யாருக்காவது உடம்புக்கு முடியலன்னு நாமதான் பதறி போய் இருப்போம். ஆனால் நர்ஸ் ‘அப்படி உக்காருங்க சார்’ன்னு சாதாரணமா சொல்லிட்டு போயிடும். அவங்களுக்கு அந்தச்சூழல் பழக்கமானது. இங்க உள்ள கைதிகளுக்கு அதுமாதிரி என் கதைகள் புதுசா இருக்கலாம். ஏன்னா வேற படிச்சதில்லை பாருங்க. ஆனால் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அது என்னமாதிரியான பாதிப்பக் கொடுக்குது என்பத வச்சிதான் இனி நான் எப்படி எழுதனுமுன்னு முடிவு செய்யனும். நீங்க எல்லாம் மரணத்தைப் பார்த்துப்பழகின நர்ஸ் மாதிரி. சும்மா சொற்கள்ள ஏமாத்த முடியாது பாருங்க.”

“நான் படிச்சிப்பார்க்கிறேன்”

“படிங்க அடுத்தவாரம் அழைச்சி உங்க கருத்தைக் கேட்கவா?”

“வேண்டாம். ஒரு மாதம் கொடுங்க. நான் கொஞ்சம் வேலைகளில் மாட்டியிருக்கேன். உங்களைப் பார்க்கதான் நேற்று இரவே இங்க வந்து தங்கிட்டேன்.”

“நான் பொதுவா இங்க யார்கிட்டயும் வம்பெல்லாம் வச்சிக்கிறதில்ல. அதனாலதான் கேட்டதும் காகிதம் பேனேவெல்லாம் கிடைக்குது. அதுக்கெல்லாம் இங்க தடை. நாம ஒழுங்கா இருந்தா நாம கேட்டத செய்வாங்க. இத்தனை வருஷத்துல இன்னிக்குதான் உங்களை உள்ள விடலனு கலாட்டா பண்ணிட்டேன். உங்கள உள்ள விடுற வரைக்கும் நான் ஜெயிலுக்குள்ள போக மாட்டேன்னு அடம் பிடிச்சேன். அடிச்சாலும் பரவாலன்னு நின்னப்பதான் மேலதிகாரி வெளியே அடிச்சி பேசினாரு. எல்லாத்துக்கும் போராடனும். ஒருவேளை இரக்கத்தினால்கூட விட்டுக்கொடுத்திருக்கலாம். என் தேதி அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ… நான் எல்லாத்துக்கும் தயாராதான் இருக்கேன். ஆனால் எப்படியும் அடுத்தவருஷம் விடுதலையாயிடுவேன் பார்த்துக்குங்க…”

“மனைவி, குழந்தைகள் எப்படி?”

“அவங்கல்லாம் கிராமத்துல உள்ளவங்க.  இங்கெல்லாம் வந்து பார்க்க அவங்களுக்குச் சிரமம். விபரம் பத்தாது பாருங்க. என்னைக்காப்பாத்த லாயர் பீஸுக்கே எல்லா நகைகளையும் நிலத்தையும் மனைவி வித்துட்டா. எப்படியும் என்னை மீட்க நினைக்கிறா…”

“எந்த அளவுல அது சாத்தியம்?”

“லாயர் 6000 ரிங்கிட் கேட்குறார். நான் 1500 ரிங்கிட் கட்டியிருக்கேன். பணம் தேடனும். இந்தத் தீர்ப்புல எனக்கு திருப்தி இல்லன்னு சொல்லனும். அது லாயர் மூலம் சொல்ல அந்தப்பணம். ஏதோ பி.ஏ. படிச்சிருக்குறதுனால கொஞ்சம் பேசி போராட முடியுது. எவ்வளவு காலமுன்னு தெரியல.”

“நான் ஏதும் செய்யனுமா?”

“ஏதும் வாங்கி கொடுத்துட்டு போறிங்களா? உங்களால எவ்வளோ செலவு செய்ய முடியும்?”

“இப்போதைக்கு நூறு வெள்ளி”

“இந்தப்பட்டியல்ல சில பொருள்களுக்கு டிக் பண்ணி தரேன். அதுக்கான பணத்தை நீங்க கட்டிட்டா ரெண்டு நாள்ள என்கிட்ட சேர்த்துடுவாங்க.”

“சரி”

“இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கு. நான் எலக்டிரிகல் எஞ்சினியரிங் படிச்சவன். ஆனா இப்ப 9 மாதம் சுங்கை பூலோ ஜெயில்ல,  2 வருஷம் காஜாங் ஜெயிலு அதோட 2 வருஷம் இங்க இருக்கேன். என் எழுத்து நூலாகனும். நான் இப்ப எழுதுறது மூலமா என் வாழ்க்கைய திரும்ப திரும்ப நினைச்சி பார்க்கிறேன். அப்ப சாதாரணமா தெரிஞ்ச விசயமெல்லாம் இப்ப எவ்வளவு முக்கியமா தெரியுது எழுத்துல. எப்படியும் அத பதிவாக்கனும்”

“நான் வாசிக்கிறேன்”

“வாசிச்சி நல்லா விமர்சனம் செய்ங்க. விமர்சனம் இல்லாம எப்படி நல்ல இலக்கியம் வளரும். நல்லா இல்லன்னா நல்லா இல்லன்னு சொல்லுங்க. எது நல்லா இல்லன்னு சொல்லுங்க திருத்திக்கிறேன்.”

“நீங்க எழுதுன கதைகள் ஒரு பக்கம் இருக்க நான் உங்கக்கிட்ட நீங்க தமிழகத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து இங்க வந்து மாட்டிக்கிட்ட கதை வரைக்கும் எழுதி வாங்க நினைக்கிறேன்.”

“உடனே எழுதுறேன். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் எத்தனைப் பக்கம்?”

“அதெல்லாம் தேவையில்ல. உங்கள் கதைய எழுதுங்க. பக்கம் அத்தியாயம் பற்றி மறந்துடுங்க”

“ஆர்வமா இருக்கு. உடனே இன்னைக்கு எழுத ஆரம்பிக்கிறேன். அப்புறம் அந்த லிஸ்டுல நோட்டுப்புத்தகம் 10 கேட்டிருக்கேன். காசு கீசு கூட வந்தா மத்த பொருளுங்கள குறைச்சிடுங்க. நோட்டுப்புத்தகத்தைக் குறைச்சிடாதீங்க. எனக்கு அதான் உயிர். முன்ன ஒரு அதிகாரி எனக்கு ஏ4 தாள்கள் கொடுப்பார். இப்ப அவர் மாறி போயிட்டார். நான்தான் வாங்கியாகனும்”

“சரி…”

“அதிகாரி வந்துட்டார்… சரி கிழம்புறேன். பார்த்துப்போங்க. கவனமா கார ஓட்டுங்க… கதைகள படிச்சிட்டு என்ன விமர்சனம் பண்ணுவீங்களோன்னு ஒரே பதற்றமா இருக்கு. “

ஆறு நாவல்களையும் வாங்கிக்கொண்டு மீண்டும் கோலாலம்பூர் பயணம். இடைவெளியில் அந்த நாவல்கள் கனக்கவே காரை மலாக்காவில் போட்டுவிட்டு இதை எழுதுகிறேன். திரும்பி காருக்குள் செல்லும்போது கனம் குறைந்திருக்குமா என்பது தெரியவில்லை.

(Visited 420 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *