லதா சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள் (5)

லதா

லதா

தமிழகத்தில் ஒருமாதம் தங்கியிருந்த காலம் எனக்கு முக்கியமானது. அக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வதில் முழு ஈடுபாடு காட்டினேன். அழைத்துச்செல்லும் நண்பர்களிடம் வைத்த கட்டளை ஒன்றுதான். தமிழகத்தில் சராசரி பக்தன் ஒருவன் எவ்வகையில் மூலஸ்தானத்தை அடைய அவகாசம் எடுக்கிறானோ அந்த வழிதான் எனக்கு வேண்டும் என்றேன். மலேசியாவிலிருந்து தமிழகக் கோயில்களுக்குச் செல்பவர்கள் ‘எக்ஸ்பிரஸ் பாதை’ என தனியாக ஒதுக்கப்பட்ட பாதைகளில் கூடுதலான கட்டணம் செலுத்தி வழிபட்ட சிறப்புகளையெல்லாம் வாயில் எச்சில் ஒழுகச் சொல்வதைக் கேட்டுள்ளேன். நான் செல்வது கடவுளை அறிய அல்ல; அங்குள்ள மனிதர்களை அறிய  என்பதில் கவனமாகவே இருந்தேன். வழிபாட்டின் இறுதி இடமாக திருப்பதிக்கும் சென்று யாரோ கால்மட்டில் படுத்துக்கிடந்து மலேசியா வந்து சேர்ந்தேன்.

இந்தப் பயணத்தில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் மட்டும் என்னை பெரிதும் பாதித்தது. அவ்வளவு பிரமாண்டமான கோயிலில் யானை ஒன்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது. தமிழகத்தில் யானைகள் பிச்சை எடுக்கும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அந்த ஒரு மாதத்தில் அங்கு மட்டுமே அக்காட்சியைக் காண முடிந்தது. நான் முதலில் யானையைப் பார்த்ததும் வியந்தேன். அவ்வளவு பெரிய யானையை மலேசியாவில் மிருகக்காட்சியகத்தில் காண்பதே அரிது. அது வழங்கப்படும் சில்லரைகளுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருந்தது. என்னால் அக்காட்சியைப் பார்க்க முடியவில்லை. அது யானை. காட்டை மிரட்டும் யானை. தனது எல்லா கம்பீரமும் இன்னும் அதன் தேகத்தில் படர்ந்திருந்தது. ஆனால் அது பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது. சென்னைக்குத் திரும்பியபோது எழுத்தாளர் யுவன் சந்திரசேகரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மலேசிய இலக்கியம் குறித்து பேச்சு வந்தது. மலேசிய இலக்கியம் பெரும்பாலும் மீனாட்சியம்மன் கோயில் யானை போல உள்ளது என்றேன் வேடிக்கையாக.

பலவீனமான இலக்கிய முயற்சிகளை வாசிக்கும்போது இன்றும் அக்காட்சியை அவ்வப்போது நினைத்துக்கொள்வதுண்டு. மீனாட்சியம்மன் கோயில் யானைபோல அத்தனை வீரியத்தையும் இழந்து எளிய ஒன்றைச் சொல்ல மெனக்கெட்டுக்கொண்டிருக்கும் எழுத்துக்குவியலைத்தான் பலரும் இலக்கியம் படைப்பாகச் சொல்வதாகத் தோன்றும். ஏற்கெனவே பத்திரிகைகளில் வந்த செய்திகளின் சம்பவங்களை அல்லது எல்லோரும் பேசும் பரபரப்பான ஒன்றை இலக்கியமாக மாற்ற மெனக்கெடும் போக்கு மலேசிய சிங்கைச் சூழலில் பெரும் அலுப்பைக் கொடுக்கிறது.

லதாவின் சிறுகதை தொகுப்பான ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ தொகுப்பைப் படித்தபோது ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ சிறுகதை எனக்கு மீண்டும் மீனாட்சியம்மன் கோயில் யானை பரிதாபமாகப் பிச்சை வாங்கும் காட்சியை நினைவூட்டியது. மிகச் செறிவாக மொழியைக் கையாளும் லதா பலவீனமான ஒரு கருத்தைச் சொல்லும் முறைக்கு உபயோகித்துள்ளார் என்றே தோன்றியது. கூடுதலான பிரச்சார தொணி இத்தொகுப்புக்குச் சம்பந்தம் இல்லாத சிறுகதையாக அந்நியப்பட்டுள்ளது. 2200ஆம் ஆண்டில் நடப்பதாக சொல்லப்படும் கதையில், மொழி அழிந்துவிட்டதை தவிர வேறு எந்தப் புதுமை அடையாளமோ கால மாற்றத்தின் சுவடுகளோ இல்லை. எதிர்காலத்தில் நடப்பதாகக் கதையை உருவாக்கும் போது அதற்கேற்ற மிகையான கற்பனை தேவைப்படுகிறது. 2200 மொழி அழிந்துவிடும் என்ற பதற்ற உணர்வை தவிர இக்கதை வேறு எதற்குமே கவனம் செலுத்தவில்லை.

லதாவின் கதைகளைப் படிக்கும்போது இரு விடயங்கள் தடையாகவே இருந்தது. ஒன்றாவது நான் 2005 – 2015 வரையிலான தொகுப்புகளை வாசிக்கவே முதலில் முடிவெடுத்திருந்தேன். இத்தொகுப்பு 2007ல் பதிப்பிக்கப்பட்டு. அவ்வகையில் இத்தொகுப்பைத் தேர்ந்தெடுத்தது சரி. ஆனால் இதில் உள்ள கதைகள் அனைத்துமே 90களின் இறுதியில் எழுதப்பட்டவை. ஆனாலும் தொகுக்கப்பட்ட ஆண்டை கவனத்தில் கொண்டே அவரது கதைகளை அணுகினேன். மற்றது, அவரது அண்மைய கால சிறுகதைகள் ஏற்படுத்திய மிரட்சி. தமிழில் மிகச்சிறந்த கதைகளை எழுதக்கூடியவராவே அக்கதைகள் சான்றாக இருந்தன. அந்த மனநிலையுடன் இக்கதைகளை அணுகுவது குழப்பும் என்பதால் நான் இத்தொகுப்பை மட்டுமே வைத்து உரையாடுவதென முடிவு செய்தேன்.

லதாவின் பலம் கதை சொல்லும் உத்திதான். பொதுவாக சுஜாதா போன்ற எழுத்தாளர்களிடமிருந்து பெறப்படும் கதை சொல்லும் உத்தியான தொடக்கம்/ முடிவு/ அதில் நிச்சயம் இருக்க வேண்டிய திருப்பம் என எது குறித்தும் கவலை இல்லாமல் உரையாடல்கள் மூலமாகவும் மன உணர்வுகள் மூலமாகவும் கதையைச் சொல்லிச் செல்கிறார். இவரை தாராளமாக நவீன இலக்கியத்தில் அழகியலை அறிந்த படைப்பாளி எனச்சொல்லலாம். அந்த அளவில் அவரது மொழியின் தன்மை உள்ளது. ஆனால் ‘அடையாளம்’ மற்றும் ‘வீடு‘ ஆகிய சிறுகதைகள் தொடங்கியவுடன் கதையைச் சொல்லிவிடுகின்றன. அடுத்து வருவதெல்லாம் சம்பவங்கள். அதாவது முதல் பகுதியில் சொல்லப்பட்ட கதையை நியாயப்படுத்தி நீட்டிக்கும் சம்பவங்கள். அவற்றைச் சொல்லும் முறை சுவாரசியமாக இருந்தாலும் சுவாரசியம் மட்டுமே சிறுகதையாவதில்லை.

நான் என் ஆத்தாவை (பாட்டி) நினைத்துக்கொள்கிறேன். என் பாட்டி அதிகம் பேசாதவர். ஆனால் நல்ல கதைசொல்லி. பல்வேறு கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அதில் வரும் கதாபாத்திரங்கள் போல நடித்தெல்லாம் காட்டுவார். என் பக்கத்து வீட்டுப்பாட்டியான ஓலம்மா வாரம் தோறும் சனிக்கிழமை எங்கள் வீட்டுக்குப் படம் பார்க்க வருவார். ஆஸ்ட்ரோ இல்லாத அந்தக்காலத்தில் வாரம் ஒருமுறைதான் தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் ஓடும். ஓலம்மா பல்வேறு ஊர் கதைகளை வீட்டு வாசலில் அமர்ந்து அவிழ்த்துவிடுவார். அவை அவ்வளவு சுவாரசியமானவை. கம்பத்தில் யார் யார் வீட்டில் என்னென்ன நடந்தது என விலாவரியாகத் தெரியும். ஆனால் அவையெல்லாம் ஒருமுறைக்குமேல் சொல்லிக் கேட்க முடியாதவை. காரணம் அவை ஒரு மைய நிகழ்வை ஒட்டி விரித்துக்கூறப்படும் சம்பவங்கள் மட்டுமே. ஆனால் ஆத்தா கூறும் கதைகள் எப்போதுமே சோர்வழிக்காதவை. அவை சம்பவங்களைத் தொகுத்து ஓர் உச்சத்தை நோக்கிச் செல்பவை. அதன் மூலம் புதிய அனுபவத்தைக் கொடுப்பவை.

ஒருநாட்டில் தன் அடையாளம் கேள்விக்குள்ளாவதன் மனநிலையும் வீடு என்ற உறவு இழப்பதன் உளவியலையும் சொல்லும் லதாவின் கதைகள் அழகியலற்ற சம்பவங்களாக மட்டுமே தேங்கி விடுகின்றன. இதுபோல சம்பவங்கள் மூலம் ஓர் உணர்ச்சியைக் கிளறி மேலிழுத்து வரும் எழுத்துமுறை அசாத்தியமானதுதான். கதையை வாசித்து முடித்தவுடன் ஒரு வாழ்வை தரிசித்த அனுபவம் கிடைக்கும். மிகச்சரியாகச் சொல்வதானால் நமக்குள் புதைந்துகிடந்த வாழ்வின் முக்கியமான பகுதிகளை நமது நினைவுக்கு அவை மீண்டும் அறிமுகம் செய்கின்றன. சில சமயங்களில் நாம் கண்டே இராத ஒரு நிலத்தை எப்போதோ பார்த்தது போன்றதான உணர்வுகளை உந்தச்செய்பவை. ஜெயமோகனின் பல சிறுகதைகளில் இவ்வம்சத்தை உணர்ந்ததுண்டு. சட்டென ஆயிரங்கால் மண்டபம் நினைவுக்கு வருகிறது. லதாவின் அலிசா சிறுகதை முக்கியமானதாகக் கருதப்படவும் அதுவே காரணம்.

லதாவிடம் ‘இதுவரை’ என்ற ஜனரஞ்சகமான ஒரு கதையும் வெளிபட்டுள்ளது. எளிய திடுக்கிடல் மட்டுமே இக்கதை செய்யும் பணி. கறாராகச் சொல்வதென்றால் ஜனரஞ்சகமான சிறுகதையாகவும் இது திருப்தி கொடுக்கவில்லை.

இவர் கதைகளில் அதிகம் உரையாடல்கள் இடம் பெறுகின்றன. சில சமயம் அந்த உரையாடல்களே கதையில் இடைவெளியும் இல்லாமல் செய்கின்றன. ‘மழை – அப்பா’ , ‘முகாந்திரம்‘ ஆகிய கதைகள் மிக நுணுக்கமாக மனித மனங்களின் சூட்சுமத்தைப் பேசக்கூடிய தளத்தில் உள்ளவை. ஆனால் உரையாடல்களால் அவை ஆழம் செல்லாமல் மிதக்கின்றன. உறவுகளின் தீர்மானிக்க இயலாத கசப்புகள் உரையாடல்கள் மூலம் வெளிப்படுவதில்லை. அவை அகம் நோக்கியவை. ‘முகாந்திரம்’ சிறுகதையை வாசித்தவுடன் எனக்கு மாண்டோவின் சிறுகதைகள் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. மத வேறுபாடுகளால் நண்பர்களுக்கிடையில் உருவாகும் விரிசலை மிக நுணுக்கமாக எழுதப்பட்ட அவரது கதைகள் நமக்கு எப்போதுமே நல்ல பயிற்சியாக இருக்கும். மாண்டோ மிக அடங்கிய மொழியில் அந்த மன உணர்வுகளைச் சொல்லியிருப்பார். ஒருவகையில் இத்தொகுப்பில் ‘முகாந்திரம்’ அலுப்பூட்டும் சிறுகதையாகவே எனக்கு வாசிக்கும்போது தோன்றியது. ‘மழை – அப்பா’ உணர்வுகளைக் கூற வந்து இயலாமல் தேங்கிவிடுகிறது. லதா மீண்டும் மீண்டும் சொற்கள் மூலம் சம்பவங்கள் மூலம் உணர்வலைகளை ஏற்படுத்த முயல்வது புரிந்தாலும் அதில் அவர் தோல்வியே அடைகிறார். அல்லது மொத்த வெற்றியையும் ‘அலிசா’வில் பெறுகிறார்.

‘நான் கொலை செய்யும் பெண்கள்’சிறுகதை தொகுப்பை நான் 2008 லேயே வாசித்துள்ளேன். அப்போது மிக பிரமிப்பாக இருந்த ‘படுகளம்’ மறுவாசிப்பில் பெரும் சோர்வையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. கதை ஒரு இடத்தில் முடிந்தபின்பும் மேலும் இருபக்கங்கள் தொடர்வது அதற்குக் காரணமாக இருக்கலாம். மிகச்சரியாகச் செறிவாக்கினால் சிங்கப்பூரில் எழுதப்பட்ட நல்ல கதைகளில் ‘படுகளம்’ ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கதையில் உள்ள காட்சியமைப்பு அதன் கொதிக்கும் தணலுக்கு ஏற்ற சூழலை வாசகர் மனதிலும் ஏற்றுகிறது மொழி. லதாவிடம் இதுவரை எந்தக் கதையிலுமே வெளிபடாத தகதகக்கும் மொழி அது. ஆனால் சண்பகவள்ளி உக்கிரம் கொள்ளும்போது கதை முடிவுராமல் எனக்குள் எழுந்த அத்தனை ஜீவாலையும் அடங்கியபின்னரே கதை முடிகிறது. ஆறி சாம்பலான தீக்குளியில் கால்வைத்து நடப்பதுபோல ஒரே நேரத்தில் உணர்வெழுச்சியையும் ஏமாற்றத்தையும் இக்கதை முடிவு கொடுத்துவிடுகிறது.

‘நான் கொலை செய்யும் பெண்கள்’ தொகுப்பில் மூன்று கதைகள் என்னை அதிகம் கவர்ந்தன.

நாளை ஒரு விடுதலை : கதை முழுவதும் வீட்டுப்பணிப்பெண்ணாக இருப்பவள் விரும்பாத அத்தனையும் அவள் மேல் பணிச்சுமைகளாக ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் பொதுபுத்தியால் ஒரு பெண்ணுக்கு நேர்கிற கொடுமையாக சொல்லப்படும் பாலியல் தொந்தரவால் அவள் இன்புறுகிறாள். இத்தனைச் சிக்கல்களுக்கும் பின் அவளுக்கு அது வேண்டுமானதாகவும் உள்ளது. ஒரு செய்தியும் சிறுகதையும் இவ்விடமே வித்தியாசப்படுகிறது. செய்தி நல்லவர் கெட்டவர் என்ற இருநிலைகளில் பேசுகிறது. சிறுகதை மானிட உளவியலில் அவ்வாறான இரட்டை நிலைகள் இல்லாததை வெளிப்படுத்துகிறது. ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்ற சு.வேணுகோபாலின் சிறுகதையை மீண்டும் ஒருதரம் இக்கதையை வாசித்தபின் படித்தேன். மனித உடலின் அடிப்படை இச்சைகளை மையப்படுத்தி இன்னும் எத்தனை ஆயிரம் கதைகள் வேண்டுமானாலும் பிறக்கும் என்றே தோன்றியது.

பயணம் : ஒரு சிறுகதை எப்படி தன் கருத்தைச் சொல்லாமல் வாசகனை உணர வைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டான சிறுகதை. சிங்கை போன்ற நகரத்தில் எல்லா அன்பு, உறவுகளையும் மீறி பணம் எப்படி தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்கிறது என்பதை லதா இக்கதையில் சொல்லியுள்ளார். நகுலனின் ‘ராமச்சந்திரன்’ கவிதை சொல்லும் போலி விசாரிப்புகளை லதா இக்கதையில் மிக நேர்த்தியாக எந்த இடத்திலும் அதன் ரகசியத்தை வெளிப்படுத்தாமல் எழுதியுள்ளார்.

அறை : நல்ல இலக்கியம் எது எனக்கேட்டால் அதற்கு திட்டவட்டமான கட்டமைப்பு இல்லை. ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் அதுநாள் வரை தன் வாழ்க்கைப் போக்கு தனக்குக் கொடுத்த அனுபவங்களில் அவன் கவனிக்காமல் விட்ட ஒரு உண்மை மீண்டும் கண்முன் வரும்போது அடையும் நெகிழ்ச்சியை அதன் பதிலாகக்கொள்ளலாம். ‘அறை’ சிறுகதை அவ்வாறானது. ஒருவகையில் இந்தத் தொகுப்பில் மிகச்சிறந்த சிறுகதையாக எனக்கு ‘அறை’தான் தோன்றுகிறது. இதன் கதையைச் சொல்வதைவிட வாசகர்கள் வாசிப்பது அவசியம் என கருதுகிறேன்.

சிறுகதைக்கு திட்டவட்டமான வடிவிலக்கணம் என ஒன்றில்லை. எந்தக் கலைக்கும் அப்படி இருப்பதில்லைதான். ஆனால் அது ஏற்கெனவே பிரபலமான ஊடகங்கள் தங்கள் பேசும் பொருளாகவும் விவாதப் பொருளாகவும் கொண்டுள்ளதை மீள் உருவாக்கம் செய்தால் அதன் தேவை என்னவென்ற அடிப்படைக் கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பிப் பார்க்க வேண்டியுள்ளது. லதா அந்த விடயத்தில் தெளிவாகவே இருக்கிறார். பெரும்பாலான சிறுகதைகளில் நுணுக்கமான விடயங்களே கையாளப்பட்டுள்ளன. பலவீனமான உரையாடல்கள் மூலமாகவும் விரிவான சம்பவங்கள் மூலமாகவும் அவை முழுமை அடையாமல் ஆகிவிடுகின்றன. ஆனால் அரசமரம் , அலிசா போன்ற கதைகளால் அவரது இன்றைய கதை சொல்லும் முறை மாறியுள்ளது. அதை முழுமையாக அறிய அடுத்த தொகுப்பு வரும்வரைதான் காத்திருக்க வேண்டியுள்ளது.

(Visited 723 times, 1 visits today)

One thought on “லதா சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள் (5)

  1. நல்லது நவீன் உங்கள் விமர்சனம் நன்றாக வந்திருக்கிறது. இச்சிறுகதை தொகுப்பை நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்து பின் நானும் உங்களுக்கு எழுதி அனுப்புகின்றேன். நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *